செயல்பாடுகளே உங்களின் மதிப்பை உயர்த்தும்!

செயல்பாடு உங்கள் மதிப்பை உயர்த்தும்

செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

(தன்னம்பிக்கை கட்டுரை)

     உலகில் உள்ள மனிதர்களைப் பற்றி அறிய வேண்டும் என்றால் அவர்களின் செயல்பாடுகளைக் கவனித்தால் போதும். அவரவர் செயல்பாடுகளின் மூலமாக அவர்களின் மீது மதிப்பு உண்டாகிறதா? அவமதிப்பு ஏற்படுகிறதா? என்பதை கணிக்கலாம்.

          நமது ஊர்களில் சிலர் பேசும்போது கேட்டிருக்கலாம். அவர்கள் வாயைத்திறந்தால் போதும் தவறான சொற்களை மட்டுமே பேசுவார்கள். அவற்றை தவிர மற்ற வார்த்தைகளைப் பேசி பழகாதவர்கள். இவர்களின் பேச்சில் யாரேனும் குறுக்கிட்டால் அவ்வளவுதான், அவர்களின் ஆஸ்தியையே அழித்ததைப் போன்று கோபத்துடன் லபோ திபோ என்று கத்துவார்கள். பாவம் இவர்களுக்கு மதிப்பு என்பது பற்றி ஏதேனும் தெரியுமா? என்றால் ஒன்றும் தெரியாது.

தனித்தன்மையை வெளிப்படுத்துங்கள்

          உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை அந்த பிறவிக்கே உரிய ஆக்க சக்தி என்பது இருக்கும். அவர்கள் அதை உணர்ந்து தன் ஆற்றலை பெருக்கிக்கொண்டால் போதும். தானாகவே மதிப்பு உயரும். சமூகத்தில் மற்றவர்கள் எவ்வாறு இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ன கூறுவார்களோ? என்று எண்ணி உங்களுக்குள்ள ஆற்றலை மாற்றிக் கொள்ளாதீர்கள்.

        இந்த உலகம் இராமனின் சீதையையே ஐயப்பட்டு அக்னியில் குளிக்க வைத்தது. அதனால் அவற்றை பற்றியெல்லாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் ஆழ்மன உந்துதலே செயல்பாடுகளாக வெளிப்படுகின்றன. எனவே மற்றவரின் போற்றுதலுக்காக உங்களின் தனித்தன்மையை மாற்றிக் கொள்ளாதீர். ஆனால் உங்களின் தன்மையால் நன்மதிப்பை பெறுங்கள். அதுவே நிலையான மதிப்பு.

பொறுப்பைச் செயலில் காட்டுங்கள்

       ஒரு தனியார் கம்பெனி ஒன்று இளைஞர்கள் நேர்முகத்தேர்வு ஒன்றுக்கு அழைத்திருந்தது. காலையில் பத்து மணிக்கு வந்து சேர்ந்து விட்டனர். வேலைதேடும் பட்டதாரிகள். அது ஒரு பெரிய பரந்த அறை. அந்த இடத்தில் டேபிள், நாற்காலி, சோபா என்று போடப்பட்டு இருந்தன. அவற்றின் மீது நாளிதழ்கள், வார இதழ்கள் என்று தாருமாறாகக் கிடந்தன. காலண்டர், கடிகாரம் எதுவும் சரியான முறையில் இல்லை. அந்த அறையில் சுமார் நாற்பதுபேர் அமர்ந்திருந்தனர். நேர்முகதேர்வுக்கு ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி அவர்க்கான இடத்தில் அமர்ந்து கொண்டார். ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும், அந்த பெண் எழுந்தார். சிதறிக்கிடந்த இதழ்களை பொறுக்கி எடுத்தார். தேதியைப் பார்த்து வரிசை படுத்தி டேபிள் மீது வைத்தார். நாற்காலிகளை ஒழுங்காக்கினார். சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் ஓடியது. ஆனால் நேரத்தைத் தவறாகக் காட்டியது. அதனை சரிசெய்து அதன்இடத்தில் மாட்டி வைத்தார். காலண்டரில் தாள்கள் கிழிக்கப்படாமலே இருந்தது. அதை கிழித்துத் தூசுதட்டி உரிய இடத்தில் வைத்தார்.

ஒரு ஓரமாகப் பிள்ளையார் படம் ஒன்று இருந்தது, அருகில் விளக்கு திரி ஊதுபத்தி என்று சகிதமும் இருந்தன. விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி ஊதுபத்தி கொழுத்தி வைத்தார். பிள்ளையாரை வணங்கிவிட்டு தன்இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார். அந்த அறையே ஊதுபத்தியின் மணம் கமழ்ந்தது. ஒவ்வொருவராகத் தேர்வுக்கு உள்ளே அழைக்கப்பட்டனர். அவர்களும் உள்ளே செல்லும்போது பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு சென்றனர். இந்தப் பெண்ணையும் நேர்முகத்தேர்வுக்கு பெயர் சொல்லி அழைத்தனர். மற்ற எல்லோருக்கும் ஒரு ஐயம். இந்தப்பெண் இங்கு ஏற்கனவே வேலை பார்க்கவில்லையா? ஆனால் அந்த பெண் வேலைதேடி வந்துள்ளார் என்பதே உண்மை. கவனியுங்கள் மற்றவர்களுக்கு இல்லாத சிந்தனை பொறுப்பு இவருக்கு மட்டும் எப்படி வந்தது? இந்த பெண் செய்தவற்றை கேமரா மூலம் பார்த்துக்கொண்டு இருந்த அந்தக் கம்பெனியின் முதலாளி அப்போதே முடிவு செய்தார். காலி பணியிடம் அந்தப் பெண்ணிற்கு என்று. அவ்வகையான செயல்பாடுகள் மற்றவரின் மத்தியில் அவர்களின் மீதுள்ள கணிப்பை உயர்த்திக்காட்டும். அவர் மற்றவர்களைபோல நமக்கென்ன என்று இருக்கவில்லை. அவற்றை நன்றாக மாற்றவேண்டும் என்று எண்ணினார். அது அவருடைய தனித்தன்மை என்பதை உணருங்கள்.

செயல்கள் மதிப்புமிக்கவை

      படித்த நிகழ்வு ஒன்று. ஒரு கல்லூரியில் அழகான இளமைக்காலத்தில் மாணவர்கள் பறவைகள் போல பாடித்திரிய வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே அவர்கள் வாக்கிடாக்கியில் பாடல்களைக் கேட்டுகொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள். பின்னர் வேறுவேலை பார்ப்பார்கள். ஆனால் ஒரு மாணவன் மட்டும் அந்த வாக்கிடாக்கியைக் காதுகளின் இருந்து அகற்றுவதே இல்லை. எல்லா நேரங்களிலும் மாட்டிக்கொண்டு திரிவான். அதேவேளை தேர்வில் மதிப்பெண்களையும் அதிகமாகப் பெற்றுவிடுவான். இது எவ்வாறு என்று கவனித்தபோதுதான் தெரிந்தது. அவன் கேட்டவை பாடல்கள் அல்ல பாடங்கள். மற்ற மாணவர்கள் சினிமாப்பாடல்களைக் கேட்கும்போது இவன் மட்டும் பாடத்தை ஒருமுறை உறக்க படித்து அதில் பதிவுசெய்து கொண்டு தனக்கு மனதில் பதியும்வரை மீண்டும்மீண்டும் கேட்டுக்கொண்டே இருப்பான். அதனாலேயே அவன் மதிப்பெண்கள் உயர்ந்தன. பேராசிரியர்கள் மத்தியில் இவன் மதிப்பும் உயர்ந்தது.

பெரிய மாற்றம்தரும் சிறிய செயல்

         செய்யும் செயல்கள் மற்றவர்க்கு உதவுமாறு நல்ல நோக்கத்துடன் செய்யுங்கள். எப்போதோ படித்த ஒன்று. ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் பலநூறு மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குப் பேருந்துவசதி கிடையாது. பலமுறை போக்குவரத்து துறைக்கு விண்ணப்பம் அனுப்பி வைத்தனர். என்றாலும் அவர்கள் எந்தஊர், எந்தக் கிராமம் என்று விசாரணை செய்துவிட்டு அப்படியே விட்டு விடுவார்கள். அது அவ்வளவு தான். அந்த ஊர் மக்களும் பலமுறை எழுதிஎழுதி சலித்து விண்ணப்பம் செய்வதையே விட்டு விட்டனர். பேருந்து இனி வரப்போவதில்லை என்று அவர்களே முடிவு செய்து கொண்டனர். அதற்குக் காரணம் அந்தக் கிராமத்தைச் சுற்றி ஒரு மலை கிழக்கு திசையிலிருந்து தொடங்கி தெற்கு மேற்கு திசை வரை மூன்று பக்கமும் மதில்சுவர் போன்று காணப்பட்டது. அந்த ஊருக்கு செல்பவர்கள் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளே சென்றால் மீண்டும் அதே வழியில்தான் திரும்பி வர வேண்டும். மலைக்கு அந்தப்பக்கம் இருவழி சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஊருக்கு எந்தப்பேருந்தும் வராது.

        இவ்வாறு இருக்க அந்தக் கிராமத்திற்கு எந்த வசதியும் கிடையாது. பள்ளிக்கூடம் ஏழு கிலோமீட்டர் செல்ல வேண்டும். மருத்துவ வசதி பத்து கிலோமீட்டர் செல்ல வேண்டும். பால்நிலையம், காவல் நிலையம் என்று எதுவும் கிடையாது. அக்கிராமம் பல தலைமுறைகளாக எந்தவொரு முன்னேற்றத்தையும் பார்க்க வில்லை. கிராமத்தில் ஐம்பது வயது தாண்டிய  நபர் ஒருவர் தினமும் சுத்தியலுடன் உளியையும் எடுத்து கொண்டு தனக்கு மதிய உணவை தயார் செய்து கொண்டு சென்று விடுவார். எங்கு செல்வார்? அந்த மலைக்கு சென்று  பாறையாக உயர்ந்திருக்கும் அதன் அருகில் சென்று அமர்ந்து கொள்வார். உளியை பாறையில் வைத்து சுத்தியலைக் கொண்டு பலமாக அடிப்பார். அடித்து சிறிது சிறிதாக உடைப்பார். மாலை ஐந்து மணி வரை இதே வேலையை சலைக்காமல் செய்வார். இந்த வேலை பல வருடங்களாகத் தொடர்ந்தது. இதைக்கண்ட மற்றவர்கள் கேலி செய்தனர், ஏளனமாக நகைத்தனர். பைத்தியம் என்றனர்.

         இவர் சுமார் பதினைந்து வருடங்களாக அந்த பாறையைக் குடைந்து எடுத்துள்ளார். பின்னர் இவரின் இறுதிக்காலம் நெருங்கும் நிலையில் படுக்கையில் இருந்து கொண்டு “நான் பாறையை உடைத்த இடத்தில் சென்று பாருங்கள்” என்றார். அங்கு சென்று பார்த்தவுடன்தான் தெரிந்தது, அந்த மலைப்பாறை குடையப்பட்டு மறுப்பக்கத்தில் சாலை தெரியுமாறு ஒரு துவாரம் செய்யப்பட்டிருந்தது. ஆகா என்ன ஆச்சர்யம் மக்கள் எல்லோரும் அந்த மலைக்கு சென்று அந்த துவாரத்தைக் குடைந்து மேலும் பெரிதாக்கி தமக்கு சாலை அமைக்க ஒருவழி கிடைத்திருப்பதை உணர்ந்தனர். அந்த மனிதரை பைத்தியம் என்று கேலி செய்தவர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு கைக்கூப்பினர். அந்தப் பெரியவரும், எத்தனையோ ஆண்டுகளாகச் செய்ய இயலாத ஒன்றை தம்சந்ததியினருக்கு செய்து விட்டோம் என்ற மன நிம்மதியுடன் கண்களை மூடினார். இவருடைய சிறிய செயல் கிராமத்தின் தலையெழுத்தை மாற்றியது.

       இவர் மற்றவரைப் போல இல்லாமல் வேறு விதமாக மக்களின் அவலத்தை போக்க வேண்டும் என்று நினைத்து மற்றவர்கள் செய்கிறார்களா? என்று பார்க்கவில்லை தானே முன்வந்து செய்தார். அந்தக்கிராம மக்கள் அவரை தெய்வமாக மதித்தனர். அது அவருடைய தனித்தன்மை.

     எந்தப் பிறவி பலனையும் எதிர்பாராமல் சமுதாயத்திற்கு ஒரு நன்மையைச் செய்யும் நீங்கள் தனித்துவம் கொண்டவர்கள்தான்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here