Wednesday, June 3, 2026
Home Blog Page 9

பழமை வரலாற்றைச் சொல்லும் வருசநாடு பாறை ஓவிங்கள்!|மூ.செல்வம்

வருசநாடு பாறை ஓவிங்கள்
       வைகை நதிக் கரையில் மனித குலத்தின் பழமை வரலாற்றைச் சொல்லும் வருசநாடு  பாறை ஓவியம்! பாறை ஓவியங்கள் என்பது மனித குலத்தின் தொன்மையான கலை வெளிப்பாடுகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் பூர்வீக மனிதர்கள் தங்கள் வாழ்வியல் சடங்கு, நம்பிக்கை மற்றும் இயற்கை அனுபவங்களை பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் வழியே வெளிப்படுத்தி உள்ளனர். இந்திய துணை கண்டத்தில், குறிப்பாக தென்னிந்தியாவில் பாறை ஓவியங்கள் தொல்லியல் ஆராய்ச்சிகளில் மிக முக்கிய இடம் பெற்றுள்ளன. அவற்றுள் தமிழகத்தின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள் மனிதவியல், வரலாறு, கலை மற்றும் பண்பாடு ஆகிய துறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கான சான்றுகளை விளங்குகின்றன.
         
          வருசநாடு பாறை ஓவிங்கள்தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் வருசநாடு கிராமத்தின் அருகே உள்ள மொட்டைப் பாறை மலை “கல்புடவு” அத்தகைய தொன்மையான பாறை ஓவிய தளங்களில் ஒன்றாகும். இத்தளத்தில் காணப்படும் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஓவியங்கள் பல அடுக்குகளில் வரையப்பட்டிருப்பதோடு மனிதர்கள் தலைமுறையாக தொடர்ந்து இத்தலத்தைப் பயன்படுத்தியதற்கான சான்றுகளாக திகழ்கின்றன.
 மூல வைகை ஆற்றின் வலக்கரையில் அமைந்துள்ள மொட்டைப் பாறை மலையின் தெற்கு சரிவில் சேகர் என்பவரின் நிலத்திற்கு அருகில் கல்புடவு என்ற சிறிய குகைப் பகுதி உள்ளது. இக்கல் புடவின் கிழக்குப் பக்க பாறை சுவரில், சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஓவியங்கள் இருப்பதை கட்டுரை ஆசிரியர் முதன்முதலாக கண்டறிந்து வெளிப்படுத்தினார்.

சிவப்பு வண்ண ஓவியங்கள்
         
        வருசநாடு பாறை ஓவிங்கள் பாறைச்சுவர் முழுக்க சிவப்பு நிற ஓவியங்கள் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. புல்வெளிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், மலைமுகடுகளைக் குறிக்கும் கோடுகள், செங்குத்தாக வரையப்பட்ட நீளமான கோடுகள், நீள் வட்ட வடிவில் இரண்டு வட்டங்கள்  வட்டத்தின் உள்பகுதிகள் அலை அலையான கோடுகளால் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கின்றன பார்ப்பதற்கு பலாப்பழம் போன்று காட்சி தருகிறது.
ஓவியங்கள் பழங்கால மக்கள்         
       இந்த குகை தளத்தை புனித இடமாகவும் சடங்குகள் செய்யும் இடமாகும் பயன்படுத்தி இருக்கலாம். இங்கு வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் வரலாற்று பதிவாகும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதாகவும் இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

வெள்ளை வண்ண ஓவியங்கள்
         
        சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் மேல் பெருங்கற் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல அடுக்குகளாக வெள்ளை நிறத்தில் ஓவியங்களை வரைந்து உள்ளனர். கை கால்களை விரித்தபடி நிற்கும் மனித உருவங்கள், கோட்டுருவங்களாக வரையப்பட்டிருக்கின்றன. மின்னல் உருவாக்குறியீடு, இனக்குழுக் தலைவனின் உருவம், விலங்குகள், பெரிய மீன், சூரியன், சந்திரன் அடையாளம் தெரியாத இன்னும் பிற உருவங்கள் வரையப்பட்டுள்ளன.
   
வருசநாடு பாறை ஓவிங்கள் மேற்கண்ட ஓவியங்கள் வேட்டைச் சமூகம் என்பதையும் குழுவாக வாழ்ந்தனர் என்பதையும் தெரிவிக்கும்படியாக உள்ளது.  சூரியன், சந்திரன் போன்ற வடிவங்களை வரைந்து இருப்பது அவர்கள் இயற்கையை கடவுளாக கருதி வணங்கினர் என்பதற்கு சான்றாக கூறலாம்.  மீன் உருவம் அவர்களின் உணவில் மீன் முக்கிய பங்காற்றியிருப்பதையும் ஆற்றங்கரை வாழ்வை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதையும் குறிக்கிறது. குழுத் தலைவன் உருவம் தலைமை பங்கினை காட்டுகிறது.
          மொட்டைப்பாறை மலை கல்புடவு பாறை ஓவியங்கள் பழங்கால முதல் வரலாற்று காலம் வரை மனிதர்கள் வாழ்ந்த சமூக பண்பாட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் முக்கிய தொல்லியல் சான்றாகும். இவை பழங்குடிகளின் கலை வெளிப்பாடு,  இயற்கை வழிபாடு மற்றும் சமூக ஒற்றுமையை அறிய உதவுகின்றன. தென்னிந்திய பாறை ஓவிய வரிசையில் புதிதாக கண்டறியப்பட்ட வருசநாடு மொட்டைப்பாறை ஓவியங்களும் தனிச்சிறப்புடன் இடம்பெறும் என்பது உண்மை.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மூ.செல்வம்
முதுகலை ஆசிரியர்,
தொல்லியல் ஆய்வாளர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக்குண்டு, தேனி.

 

Complexities of Relationship in New Poetry|Dr.N.Paramasivam

புதுக்கவிதைகளில் உறவுச்சிக்கல்கள்- முனைவர் நா.பரமசிவம்
ABSTRACT
               
         Literature is created for the purpose of enabling human beings to live a wholesome and meaningful life. Yet, when the question “Do they truly live?” is put forward, it often remains unanswered. This is because the ultimate aim of literature is to strengthen human relationships and thereby enrich the family, the society, the village, and the nation. When we speak of relationships, do people really live in unity of thought and action? In fact, each one defines their own needs, morals, and principles, and stands firm in their own direction. How then can such minds, divided and conflicting, be brought together? What words would persuade them to listen? At such moments, it is literature that comes to our great aid. Literature is the supreme remedy, possessing the power to transform the human mind. Therefore, this essay aims to explore human relationships and the challenges within them through one of the branches of literature—poetry.


புதுக்கவிதைகளில் உறவுச்சிக்கல்கள்

முன்னுரை
         
        சிந்தையோடு கூடிய எழுத்துக்களை உருவாக்கத் தொடங்கிய பின்னர் அறிவு வளர்ச்சி பெருவேகம் கொண்டது. ஊர்ந்து பின்னர் நடந்து சென்ற மனிதன் ஓர் இடத்தில் நின்று நிதானித்துச் சிந்தித்ததன் விளைவே இலக்கியம். தான் மேற்கொண்ட பயணத்திலும் அனுபவித்து வாழ்ந்த இயற்கை மற்றும் காதல் வாழ்வினையும் பிறர் அறியும்படி எழுதத்தொடங்கிய பின்னரே இலக்கியம் புதுவேகம் தொட்டது. அதை இன்னும் சீர்படுத்தி மொழியைச் செழுமைப்படுத்தி இன்பத்தை அறத்தோடு இணைத்த பின்னர் இன்று செவ்வியல் இலக்கியம் எனப் போற்றப்படுகிறது. போற்றப்பட்ட, போற்றப்படுகின்ற இலக்கியங்கள் காலந்தோறும் பாடப்படுகின்ற பாடுபொருள்தான் என்ன? எவற்றை முன்னிருத்தி இன்னும் பாடப்படுகின்றன? காய்ந்த மரத்தினில் பற்றி எரிகின்ற நெருப்பு பெருநெருப்பாக மாறுவதுபோல எழுத்தையும் மொழியையும் பற்றிய இலக்கியங்கள் எப்பொருளை, எக்கருத்தைப் பற்றிக்கொண்டு பெருநெருப்பாக,பேரிலக்கியமாக இலக்கியவானத்துள் வளர்கின்றன? எனும் கேள்விகள் காலந்தோறும் கேட்கப்படுகின்றன.
         
         உலகத்துள் தோன்றிய உயிர்கள் அனைத்தும் உண்டு உயிர்த்து முடிவில் இறப்பில் முடிக்கின்றன. இது மனிதனுக்கும் பொருந்தும். எனினும் ஒரு சிறுவேறுபாடு யாதெனில் உண்டு உயிர்த்து வாழ்கின்ற மனிதன் மடிவதற்கு முன்பு தன்பகுத்தறிவால் உலகை உணர்ந்து உறவுகளை வலுப்படுத்தப் பலவகையான இலக்கியங்களைப் படைத்திட்டான். அவற்றுள் கவிதையே அன்றுமுதல் இன்றுவரை தலையாய இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது. இலக்கியவடிவங்கள் பற்பல இருப்பினும் சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் என்ற அடிப்படையில் தான்கூறவரும் கருத்துக்களைத் தெற்றெனச் சொல்வது கவிதையே. இதன் பாடுபொருள் பல இருப்பினும் உறவுகள் குறித்தான கவிதையே இன்று பேசுபொருளாகப் பெரும்பாலும் உள்ளது. அவற்றுள் உறவுகள்,உறவுச்சிக்கல்கள் குறித்தான செய்திகளைக் கூறுவதாக இக்கட்டுரையின் மையம்  அமைகின்றது.

கலர்வீடியோ
         
         இறப்பென்பது இயல்பானது என்றும் மாறாதது. இதைச் சொல்லுதல் என்பது எளிது. ஆனால் ஒரு இறப்பொன்று நம் இல்லத்தில் நிகழ்ந்துவிடின் தாங்கொணாத் துயரம் அடைவோம். இத்துயரத்தினூடே இழவு வீட்டில் தனக்கு மரியாதையில்லை என்று சண்டையிட்டு மேலும் இழவாக்குவர் சிலர். இச்சண்டைக்குப் பின்புலமாகத் ‘தான்’ என்ற உணர்வுநிலை மட்டுமல்லாது செய்யக்கூடிய இறப்புச் சடங்குமுறைகளில் தனக்கு முன்னுரிமை கொடு;க்கப்படாததன் காரணமே சண்டைக்கு முக்கியக் காரணியாக இருக்கும். அதனால் தன்முனைப்புப் பெருகிய இன்றைய காலத்தில் பணத்தையும் பதவியையும் தேடி புலம்பெயர்தல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. பணிநிமித்தம், நேரில் வர இயலாமைக்கான பயணதூரம் ஆகிய காரணங்களால் சிற்சில நேரங்களில் தனையீன்ற தாய்தந்தையின் இறப்பிற்குக்கூட வரஇயலாமல் போவதைக் கண்கூடாகக் காண்கிறோம். இதனை காலத்தின் வளர்ச்சி மற்றும் மாறுபாடு எனச் சொல்லிச் சமாதானமும் அடைகிறோம். அத்துடன் இன்று வராமையை ஏற்றுக்கொள்ளும் சூழலும் ஏற்பட்டு மனப்பக்குவமும் அடைந்துள்ளது. முன்னர் சொன்ன காலத்தின் வளர்ச்சியின் உச்சமாக இறப்பின் நிகழ்வை நேரலையாகவே காணும் வாய்ப்பையும் இன்றைய வளர்ச்சி கொடுத்துள்ளது. இக்கால மாற்றத்தின் நிகழ்வைக் கவிஞர் தன்கவித் துளியில்,

“விடுமுறை இல்லை
வீடியோ அனுப்புங்கள்
வாரக்கடைசியில் பார்த்து வருத்தப்பட!
வீடியோ கலரில் இருப்பது உத்தமம்
ஏனெனில்
மலையாள மரணம் பார்த்ததில்லை
என் அமெரிக்க நண்பர்கள் யாரும்” (1)
        
        என்று முடிக்கின்றார். கலாச்சார பண்பாட்டு மாறுபாடுகள் ஒவ்வொரு இடத்திற்கும் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் அவரவர்கள் வாழும் மண்ணின் சூழலுக்கேற்ப மாறுபடும். எனவே அப்பண்பாடுகளை அறிந்து கொள்வதில் பிறருக்கு ஆர்வம் இருப்பது இயல்பானதே. ஆனால் சகமனிதர் ஒருவரின் மரணத்தைக்கூட இயல்பாய்; ஏற்றுக்கொள்ளுதலும் இழப்புகள் குறித்தான துயரமின்மையும் இன்றி வண்ணங்களற்ற கருப்பு வெள்ளையாய் இருக்கும் இறப்பின் வீட்டில் மரணநிகழ்வுச் சடங்கு கலராய் இருக்கவேண்டும் என்ற வேண்டுகோளில் மனிதர்கள் தங்களது மனதைத் தொலைத்துக் கண்களை மட்டும் வண்ணங்களால் நிரப்ப விரும்புவது வாழ்வி;ன் எதார்த்தை வேரறுப்பதாய் உள்ளது.

கதவின் மொழி         
         அன்னையர் தினமும் நதிகளி;ன் பெயரும் அன்னை பூமியும் என எல்லாவற்றையும் பெண்ணாகவே பார்ப்பினும் ஆண்களால் ஆளப்படும் இவ்வுலகில் பெண் இரண்டாம் நிலையிலேயே இருக்கின்றாள். ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இவ்வுலகில் ஒருபெண் சுதந்திரத்துடனோ தனித்துச்செயல்படும் திறனோ பெற்றிருப்பின் ஆண்களின் அடக்குமுறை உடனே பாய்ந்து அவளை நிலைகுலையச் செய்யும். இதனால் பெண்ணானவள் தன்குழந்தை, குடும்பம், பெரியோர், சமுதாயம் ஆகியவற்றுக்குக் கட்டுண்டு அமைதியாகிறாள். இந்த அமைதியே அவளின் அடிமைநிலைக்கு முதல்படியாகிறது. இதனால் தன்சொல், செயல் ஆகியன இழந்து மொத்தத்தில் தன்சுயம் என்பதை இழந்து நிற்கின்றதை ‘தூh’; எனும் கவிதை பின்வருமாறு உணர்த்துகின்றது,

வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர்வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒருமுறை
விசேசமாக நடக்கும்
ஆழ்நீருக்குள்
அப்பா முங்கமுங்க
அதிசயங்கள் மேலே வரும்
கொட்டாங்குச்சி கோலி கரண்டி
துருப்பிடித்த கட்டையோடு உள்விழுந்த
ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளிடம்ளர்
சேற்றுக்குள் கிளறி
எடுப்போம் நிறையவே!
‘சேறுடா சேறு’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோசம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படைவென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச்சொட்ட
அப்பா மேலே வருவார்
இன்றுவரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க! (2)
         
      என்ற நா.முத்துக்குமார் கவிதையில் கிணற்றுச் சேறெடுத்தவர் தன் மனதில் உள்ள பெண்ணடிமைச் சேறெடுக்க மறந்தே போனார் என்று கூறியுள்ளார். பெண் என்பவள் பொதுவெளியில் மட்டுமல்ல வீட்டிலும் அவள்குரலை, கருத்தை ஓங்கிஒலிக்கக்கூடாது. அவள் பிறருடைய கருத்தை மட்டுமே முன்மொழிபவளாக விளங்குகிறாள். அவ்வாறு கூறினாலும் குரல்காட்டி முகம் மறைப்பவளாகவே இருக்கவேண்டும் என்பது சமூகத்தில் எழுதப்படாத நீதியாகிறது. காரணம் திருமணம் முடித்தவுடன் பெண் என்பவள் கட்டியவனுக்கும் அவனின் உறவுகளுக்கும் உரிமையாகிறாள் என்ற எண்ணம் பெண்ணைப் பெற்றவர்களுக்கே ஆழமாகப் பதிந்திருக்கும் பொழுது புகுந்த வீட்டில் அவள் அடிமை விலங்கிலிருந்து விடுவிக்கப்படாதவளாகவே இருக்கின்றாள். ஆணுக்கு உறவுகள் உண்டு.பெண்ணுக்கும் உறவுகள் உண்டு. ஆணுக்கு உறவுகள் பிரச்சினைகள் ஆவதில்லை. அவனைச் சிறுமைப்படுத்துவதில்லை. அவன் மதிப்பு,மரியாதைகளை அது நிலைநிறுத்துகின்றன. பெண்ணுக்கோ அவளால் சுமக்க முடியாத பாரமாக எல்லா உறவுகளும் அவளைக் காலகாலமாக அழுத்தி வைத்திருக்கின்றன. எந்த உறவுகளும் அவளைப் பெருமைப்படுத்துவதில்லை. அவளைப் பிணைத்திருக்கும் சங்கிலியாய் உறவுகள் இருக்கின்றன.அவள் உறவுகளுக்காகவே வாழவேண்டும் என்பது விதி. அவ்வுறவு கணவனாகவும் இருக்கலாம்(3)

பாகப்பிரிவினையும் பாசப்பிரிவினையும்
         
         உலகம் தோன்றிய நாள்முதல் மண்ணையும் பெண்ணையும் பெறுவதற்கு இடையறாத போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவ்விரண்டு வளத்தையும் பெறுவதற்கு முதலில் இல்லத்தில் இருந்துதான் தொடங்;குகிறது. குறிப்பாக மண் எனும் நிலத்தைப் பெறுவதற்கு அண்ணன் தம்பியாய் ஒருதாய் வயிற்றுப் பிள்ளையாய் இருந்தவர்கள் பங்காளிகளாக மாறி இவ்விருவரோடு இணைந்த குடும்பத்தினரும் பேசிக்கொள்ளாதபடி பெரும்பிரிவினை ஏற்படுகிறது. இச்சொத்துக்களையும் அதனால் வரக்கூடிய பிரச்சினைகளையும் வைத்தே “ஐந்துவயதில் அண்ணன் தம்பி பத்துவயதில் பங்காளி” என்ற சொலவடையே உருவாகியுள்ளது. ஒருதாய் வயிற்றில் பிறந்து ஒன்றாகவே உண்டு உறங்கியவர்கள் பாகப்பிரிவினையின்போது முன்னர் வாழ்ந்த ஒற்றுமையினை மறந்து வாழ்வின் இறுதிவரை சொத்திற்காகப் பேசாது முரண்பட்டு மடிகின்றனர். இந்த உறவுச்சிக்கலை ‘கறுப்புவெள்ளைக் கல்வெட்டு’ என்ற தலைப்பில் அமைந்த கவிதை பின்வருமாறு பாடுகிறது

கதர்வேட்டி
காமராசர் சட்டையில் தாத்தா
காஞ்சிப்பட்டு
கல்பதித்த அட்டிகையோடு பாட்டி
பூப்போட்ட சேலை
புளியம்பூ இரவிக்கையில்
பெரிய அத்தை
ரெட்டைசடை தாவணி
வாத்துச் சங்கிலியோடு
சின்ன அத்தை
எம்ஜிஆர் மீசை
வலதுகையில் கடிகாரமென
பெரியப்பா
சிவாஜி கர்லிங்
சில்க்சட்டை
பெல்பாட்டம் பேண்ட் சகிதம்
சித்தப்பா
காரைவீட்டில் கல்வெட்டாய் மிளிர்ந்த
கருப்புவெள்ளைப் புகைப்படம்
இப்போதும் இருக்கலாம்
பாகப்பிரிவினையோடு
பந்தப்பிரிவினையும் நிகழ்த்திப்போன
ரத்தத்தின் ரத்தங்களின்
எவர்வீட்டுப் பரணிலாவது (4)
         
          என்ற கவிதையில் தான்வாழ்ந்த நினைவின் சுவடுகள் வெறும் புகைப்படத்தில் சாட்சி சொல்கிறது. நியாபகங்கள் அனைத்தும் தின்றுதீர்த்த நினைவின் மிச்சங்களாய் பரணில் பாய்கொண்டுள்ளது உறவுகள். ஆக சொத்துக்களே சொந்தங்களைப் பிரிக்கச் செய்யும் சக்திவாய்ந்தவையாக உள்ளன. எனவே உறவுச்சிக்கல்கள் நிரந்தனமானவை. விட்டுக்கொடுத்தல், கண்டுகொள்ளப்படாமல் விட்டுவிடுதல் இன்றி உறவுகள் நீடிக்காது (5)

விளிம்பில் சுடரும் உறவுகள்
         
        நம்முடைய நெருங்கிய இரத்தசொந்தங்களை விட அவ்வப்பொழுது நம்இல்லத்திற்கு வரும் உறவினர்களை சற்றுக்கூடுதலாக கவனித்துக்கொள்வோம். உபசரிப்பும் மரியாதையும் சற்றுக்கூடுதலாகவே இருக்கும். நெருங்கிய இரத்தசொந்தங்கள் இந்த உறவினர்களுக்குக் காட்டும் கூடுதல் மரியாதையைக் கண்டு, ஏதாவது ஒருநாள் தானே இவர்கள் வருகின்றனர். ஆகையால் இதிலொன்றும் தவறில்லை என நினைப்பின் நலம். அவ்வாறின்றி இன்று வந்தவர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கின்றனர். நமக்கு அவ்வாறு கொடுக்கவில்லையே ஏன்? எனக் கேள்வி எழுப்பின் இரத்தசொந்தங்களின் பிணைப்பு கேள்விக்குறியாக மாறிவிடும்.
         
        இவ்வாறு மனம் மாறுபாட்டுக்கான சூழல் எது என்ற கேள்விக்கு வித்தான காரணத்தைக் கேட்பின், என்றாவது ஒருநாள் வரும் விருந்தின் உறவுகளை நாம் கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் மனம்மாறுபடுவர். அந்த வருத்தமும் கோபமும் நம்மை அடிக்கடி பார்க்காமையால் நெடுநாள் நீடித்து ஒருநாள் உறவே முறிந்து போவதற்கான காரணியாகிவிடும். இரத்தஉறவுகளின் கோபம் அப்படியல்ல. அவர்களை அடிக்கடி பார்ப்பதனால் கோபதாபங்களைப் பேசித்தீர்த்து இணைந்துகொள்ளலாம். அதிகத்தொடர்பில்லாமல் இருக்கும் உறவுகளிடம் அதிக கவனம் செலுத்தித் தக்கவைப்பதே பெரும்போராட்டம் என்ற அடிப்படையில் அமைந்த கவிதையாகப் பின்வரும் கவிதை அமைந்துள்ளது,

வீட்டிற்கு உள்ளே ஏற்றும்
விளக்குகளைவிட
வெளியே வைக்கும்
விளக்குகள் மீதுதான்
கவனம் அதிகமாக இருக்கிறது.
அறைக்குள்
நிதானமாக எரியும் விளக்குகள் பற்றி
கவலையே இல்லை
வாசலில்காற்றுக்கும் தூறலுக்கும்
சலனமடையும் தீபத்தை
கரம்குவித்துப் பாதுகாப்பதிலேயே
மனம் அழுந்தித் தவிக்கிறது
மனதிற்குள் ஒட்டாமல்
விளிம்பில் சுடர்கின்ற உறவுகளையும்
இப்படித்தான்
போராடித்தக்கவைத்துக்கொள்ள
வேண்டியதாய் இருக்கின்றது
வாழ்வில்! (6)
         
        என்ற கவிதையில் காற்றுக்குச் சலனமடையும் தீபத்தை விளிம்பில் சுடர்கின்ற உறவுகளோடு பொருத்தியுள்ளார் கவிஞர். நாம்செய்யும் செயல்களில் குற்றத்தைக் கண்டுபிடித்து அதன்மூலம் பிரச்சினை செய்து பிரியும் உறவுகளை எவ்வகையிலேனும் தம்மோடு இணைத்துக்கொள்ளத் துடிக்கும் மனம் இக்கவிதையில் வெளிப்பட்டுள்ளது வெள்ளிடைமலை. அவ்வாறு ஏன் போராடி உறவுகளைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்? தக்கவைத்துக் கொள்வதற்கான காரணங்கள் என்ன? என ஆராயும்பொழுது நம்இல்லத்தின் சுகதுக்கங்களில் பெரும்பங்கு எடுத்துக்கொள்வதுடன் சில,பல நாட்கள் தங்கியிருந்து நமக்கு பக்கபலமாக இருப்பர். “நூறு சதவீதம் நன்மையை மட்டுமே கொண்டது என்று எதுவுமேயில்லை. ஒவ்வொன்றும் நேர் எதிரான பக்கங்களையும் கொண்டிருக்கின்றது. ஒன்றைப் பெற வேண்டுமானால் இன்னொன்றை இழக்க வேண்டியிருக்கலாம். ஒருவரிடமிருந்து பயனடைந்து கொள்ள விரும்பினால் அவரது எதிர்மறைப் பண்புகளையும் நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம்.”(7).அதனால்தான் நமக்குக் கேடுகள் நினைக்கும் உறவினர்கள் இருப்பினும் இறுக்கிப்பிடித்துத் தக்கவைத்துக் கொள்ள மனம்விழைகிறது.

அம்மாவின் உலகம்         
          எல்லோருக்கும் அம்மாதான் உலகம். பல துன்பங்களுக்கு இடையில் நமை ஈன்றெடுத்தவள் தாயல்லவா? அவள் இயல்பான கருணையும் அர்ப்பணிப்பும் கொண்டவள். அதனாலேயே அனைவராலும் விரும்பப்படுகிறாள், மதிக்கப்படுகிறாள். இல்லத்தினுடைய ஒப்பற்ற செல்வமாகவும் கருதப்படுவள் தாயே! அதனால்தான் தாயிறந்த இல்லம் ஒளியில்லா இல்லமாகிறது. தந்தையின்றி இருந்தாலும் ஒருகுழந்தை மனரீதியாக நன்றாக வாழ்கிறது. ஆனால் தாயில்லாக் குழந்தை மன,உடல் ரீதியல் நலிவுற்று உணவுக்கும் உணர்வுக்கும் போதாமையான பற்றாக்குறையில் வாழ்கின்றது. எனவேதான் மக்கள் வழக்காறுகளில்கூட ‘தாயில்லாப்பிள்ளை போல’ அமைதியாக இருக்கின்றது என்கின்றனர். ஒரு தாயானவள் இல்லத்தில் இருப்பின் அவளால்தான் அனைத்தும் இயங்குகிறது என நினைப்பாள். இது ஒருவகையில் தன்னைக்குறித்தான உயர்வுமனப்பான்மையின் காரணமாகும். இச்சிந்தனை வயப்பட்ட பெண்கள் இல்லத்தில் உள்ளோர்க்கு, குறிப்பாகத் தன்கணவனிடம் தான், தன்சுயம், சுதந்திரம் என அனைத்தையும் தொலைத்தது தெரியாமல் பெருமை பேசிக்கொண்டிருப்பர். இதை,

அவளே உலகம் என்று
வாழ்ந்துவிட்டார் அப்பா
என்ற பெருமை
அம்மாவுக்கு
அம்மாவின் உலகத்தையும்
அபகரித்துக் கொண்ட
அப்பாவின் லாவகம்
ஒருபோதும் புரியப்போவதில்லை
அவளுக்கு! (8)
         
           என்ற கவிதையில் தான் அடிமைப்பட்டது தெரியாமல் எப்பொழுதும் தன்னைச்சார்ந்தே வாழ்வதாய் நினைத்து தன்வாழ்வின்  சுதந்திரத்தைத் தொலைத்த பேதை கூறுவதாய் இக்கவிதை அமைந்துள்ளது. உணவுகள் பரிமாறுவதற்கும் துணிகள் துவைத்து உலர்;த்தி மடித்துக் கொடுப்பதற்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பதற்கும் குற்றேவல் செய்வதற்கும் தன்னை வேலைக்காரியாய் நினைத்து வேலைவாங்கியது தெரியாமல் எல்லாவற்றுக்கும் ‘நான்தான் வேண்டும’; என்று அறியாமைப் பெருமையும் அடிமைப் பெருமையும் பேசும் பெண்கள் இவ்வுலகில் உண்டென்பதை இக்கவிதை உணர்த்தியுள்ளது.
         
            எனவே, இங்கு ஆண்பெண் திருமணம் என்பது இருவரும் இணைந்து சமமாக வாழ்வதற்கே. ஆனால் இங்கு வாழ்தல் என்பது யாருக்கானது என்ற கேள்வி எழுகின்றது. திருமணம் என்பது ஆணுக்குப் பணிவிடை செய்வதும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்வதும் என்றாகிறது. திருமணத்திற்கு முன்புவரை தனக்கான உலகம் என்று சுதந்திரமாக வாழ்ந்தவள், திருமண நிகழ்வு முடிந்தவுடன் பிறர்நலம் பேணுதலிலும் எல்லோருக்கும் பணிவிடை செயதலிலுமே தன் விருப்பத்தைத் தொலைத்தவளாக இருக்கிறாள் தன்னை அறியாமலே. இல்வாழ்க்கையின் தன்மையே ஒருவரை சமுதாயத்தில் இனங்காண வைக்கின்றது. மனங்கள் ஒத்துவாழ்வதற்குத் தேவையான குணங்களைச் சுட்டுவதோடு வேண்டாத குணங்களாக, ”நேயமின்மை, இரக்கமின்மை, தன்னை வியத்தல், புறமொழி கூறல், வன்சொல், மறவி, சோம்பியிருத்தல், தன் குடியுயர்வை எண்ணி மகிழ்தல், பணிவுடைமையை மறத்தல், ஒப்பிட்டு நோக்கல்” (தொல்.1220) என்பவற்றையும் தொல்காப்பியர் பட்டியலிடுகிறார் (9).

முடிவுரை         
             இங்கு உறவுச்சிக்கல்கள் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. மனிதத்தன்மைக்கு ஆறறிவு தேவையில்லை. மனதில் கருணையும் உதவக்கூடிய எண்ணமும் இருந்தால் போதுமானது. இதையே பலசமயங்களில் மனிதனைத்தாண்டி விலங்குகள்கூட ஒன்றையொன்று காப்பாற்ற முனைவதில் அறியமுடிகின்றது. ஆனால் உறவுச்சிக்கல் என்பது ஆறறிவுக்கே உரிய நுண்ணிய விரிசல்களையும் மனவேறுபாடுகளையும் கொண்டு விளங்குவது. இது அவரவர்களின் வாழ்ந்த சூழல்களும் கற்ற அனுபவங்களும் ஒவ்வொருவருக்கும் தனித்த கருத்துவேறுபாடுகளை உண்டாக்குகின்றன. இதனால்தான் ஓயாத சண்டைகளும் கலவரங்களும் வன்முறைகளும் ஏற்படுகின்றன. இங்கே உறவுகளுக்கான சிக்கல்கள் எனும்பொழுது ஏமாற்றப்படுவதும் பண்பாட்டின் காரணமாக ஏமாறுவதும் பெண்களே. ஓர்இடத்தில் சொல்லற்றவர்களாக, மற்றொரு இடத்தில் இறப்பின் சடங்குகளே காட்சிப்பொருளாக, வேறொரு இடத்தில் பணமே பாசத்தைத் தீர்மானிப்பனவாக, சிற்சில இடங்களில் உறவுகளைத் தக்கவைக்க மேற்கொள்ளும் போராட்டமாக, பலஇடங்களில் தான் ஏமாற்றப்படுவது தெரியாமல் தன்னுடைய வாழ்வைத் தொலைக்கும் இடமாக என எல்லா இடங்களிலும் அவரவர் செய்வது அவரவர் நியாயமே ‘தான்’ எனும் சிந்தனையே மனிதத்தை நிலைநிறுத்தும் மையப்புள்ளி எது எனத்தெரியாது ஒவ்வொரு இடமாக அது நகர்ந்து கொண்டே இருக்கின்றது. இனியும் நடந்துகொண்டே இருக்கும். காரணம் ‘தான்’ இல்லையெனில் உலகம் நகர்வதற்கும் இலக்கியம் உருவாவதற்கும் காரணி இல்லாது போய்விடும்.

மேற்கோள்
1.அய்யப்ப பணிக்கர் கவிதைகள்.

2.நா.முத்துக்குமார் – கணையாழி.

3.சாகுல் அமீது உமரி, உறவுச்சிக்கல்கள், www.meipporul.in – 26.9.2019, ப.1.

4.கறுப்பு வெள்ளைக் கல்வெட்டு, ஆனந்தவிகடன், சொல்வனம். ப.20

5.சாகுல் அமீது உமரி, உறவுச்சிக்கல்கள், www.meipporul.in – 26.9.2019, ப.1.

6.தி.கலையரசி,ஆனந்தவிகடன், சொல்வனம்.ப.26

7.சாகுல் அமீது உமரி, உறவுச்சிக்கல்கள், www.meipporul.in – 26.9.2019, ப.6.

8.அ.சீனிவாசன் ஆனந்தவிகடன் சொல்வனம் 23.10.2024.

9.சங்கஇலக்கியத்தில் மனிதவள மேம்பாடும் ஆளுமைத்திறனும்,  thamizhiyal.com. 1.8.2020, முனைவர் ஆ.மணவழகன், உதவிப்பேராசிரியர், சமூகவியல்,   கலை(ம)பண்பாட்டுப்புலம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்)

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.பரமசிவம்

தமிழ்இணைப்பேராசிரியர்

விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி

திண்டல், ஈரோடு – 638 012.

 

வாசிப்புத்தளத்தில் செவ்வியல் இலக்கியங்கள்

வாசிப்புத்தளத்தில் செவ்வியல் இலக்கியங்கள்

E-ISSN : 3048 – 5495

(International Faculty Development Program )

நாள் : 06.10.2025 முதல் 12.10.2025 வரை (7 நாள்கள்),  
நேரம் : இரவு 7:00 முதல் 8:00 மணி வரை, 
வழி : Google Meet
அன்புடையீர் வணக்கம்,
     தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்த முக்கிய அடித்தளமாகச் செவ்வியல் இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க காலத்திலிருந்து ஆரம்பித்து, பிற்காலத் தொல்காப்பியம், நாலடியார், திருக்குறள் போன்ற நூல்கள் வரை பரவி நிற்கும் இவ்விலக்கியங்கள் தமிழர் பண்பாடு, சிந்தனை, வாழ்வியல், அரசியல், பொருளாதாரம், காதல், அறம், பொருள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்திக் காட்டுகின்றன. இவை தமிழின் பழமையான இலக்கியச் செல்வங்களாக மட்டுமன்றி, மனித வாழ்வின் நெறிமுறைகளைப் போதிக்கும் ஒளிக்கோபுரங்களாகவும் திகழ்கின்றன. சங்கப் பாடல்கள் இயற்கை, மனித இயல், கலை, சமூக வாழ்வு ஆகியவற்றை நேர்த்தியாகச் சித்தரிக்கின்றன. திருக்குறள் போன்ற நூல்கள் உலகமயமான வாழ்வியலைப் பேசும் அளவிற்கு உயர்ந்துள்ளன. எனவே, செவ்வியல் இலக்கியங்கள் தமிழ் நாகரிக வரலாற்றின் சான்றுகள் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் மனிதர்களின் சிந்தனைக்கும் நெறியுரைக்கும் மரபுக் கல்விக்கோப்புகளாகப் போற்றப்படுகின்றன.
செவ்வியல் இலக்கியங்களின் தன்மை
1.பழமையானவை : கி.மு. 500 முதல் கி.பி. 500 வரை தோன்றிய சங்கப் பாடல்கள் தொன்மையான இலக்கியச் சான்றுகளாகும்.
2.பண்பாட்டு பிரதிபலிப்பு : தமிழரின் இயற்கை, காதல், வீரம், அறம், பொருள் ஆகியவை இயல்பாகக் கூறப்படுகின்றன.
3.வாழ்வியல் ஆவணம் : வேளாண்மை, வாணிபம், அரசியல், போரியல், தத்துவம் ஆகிய அனைத்தும் வெளிப்படுகின்றன.
4.மொழிச்செல்வம் : செவ்வியல் இலக்கியங்கள் தமிழின் இலக்கண அழகையும், சொற்களின் செறிவையும் வெளிப்படுத்துகின்றன.
செவ்வியல் இலக்கியங்களின் சமூகக் கண்ணோட்டம்
செவ்வியல் இலக்கியங்கள் தமிழரின் சமூகச் சூழலை வெளிக்கொணர்கின்றன:
🎯 அரசியல் : சிற்றரசர்கள், பேரரசர்கள், வீரசேனை, போர்முறை ஆகியவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
🎯 பொருளாதாரம் : வாணிபம், கடல் வாணிகம், உழவர் வாழ்க்கை, கைத்தொழில் ஆகியன வெளிப்படுகின்றன.
🎯  வழிபாடு :ஆரம்பத்தில் இயற்கை வழிபாடு, பிற்காலத்தில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் போன்ற சமய மரபுகள் வளர்ச்சி.
🎯 கலை : பாடல், இசை, நடனம் ஆகிய கலைகள் சங்கப்பாடல்களால் சான்றுகளுடன் அறியப்படுகின்றன.
சிறப்புகள்
1.இயற்கைச் சித்திரம் – மலை, காடு, கடல், பாலை நிலம் ஆகியன உயிர்ப்புடன் வர்ணிக்கப்படுகின்றன.
2.மனித இயல்பு – காதல், துக்கம், வீரியம், கருணை போன்ற உணர்ச்சிகள் அழகிய உவமைகளால் வெளிப்படுகின்றன.
3.நெறி, அறம் – நன்னூல்கள் மனித வாழ்வின் உயரிய பண்புகளைச் சொல்கின்றன.
4.பன்னாட்டு அளவில் – திருக்குறள் போன்ற நூல்கள் உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
         “செவ்வியல் இலக்கியங்கள்” என்ற பெரும் செல்வத்தைப் பலவற்றையும் அறியும் வகையில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிகழ உள்ளது. இந்தச் சிந்தனையூட்டும் நிகழ்வில் பேராசிரியப் பெருமக்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

முதல் நாள் : 06.10.2025  (திங்கள் கிழமை)

தலைப்பு : “திருமுருகாற்றுப்படையில் சில புதிய வெளிச்சங்கள்”

நெறியாளர் : முனைவர் வாணி அறிவாளன்

உதவிப்பேராசிரியர், தமிழ்மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

இரண்டாம் நாள் : 07.10.2025  (செவ்வாய்க்கிழமை)

தலைப்பு : “அழகியல் நோக்கில் பொருநராற்றுப்படை”
நெறியாளர் : முனைவர் ஜெ.முத்துச்செல்வன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,  மீனம்பாக்கம்,  சென்னை – 600061.

மூன்றாம் நாள் : 08.10.2025  (புதன்கிழமை)

தலைப்பு : “சிறுபாணன் சென்ற பெருவழி”
நெறியாளர் : முனைவர் சி.சிதம்பரம்
இணைப்பேராசிரியர், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல்.

நான்காம் நாள் : 09.10.2025  (வியாழக்கிழமை)

தலைப்பு : “காலமும் கலைகளும் – நெடுநல்வாடை”
நெறியாளர் : முனைவர் ஈ.யுவராணி
உதவிப்பேராசிரியர், வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர் & டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.

ஐந்தாம் நாள் : 10.10.2025  (வெள்ளிக்கிழமை)

தலைப்பு : “கண்ணனாரும் கவின்மிகு பட்டினமும்”
நெறியாளர் : முனைவர் சு.லட்சுமி
இணைப்பேராசிரியர், ஸ்ரீமதி தேவ் குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி, குரோம்பேட்டை, சென்னை.

ஆறாம் நாள் : 11.10.2025  (சனிக்கிழமை)

தலைப்பு : “மதுரைக்காஞ்சியும் காஞ்சித்திணையும்”
நெறியாளர் : முனைவர் மா.வசந்தகுமாரி
தமிழ்த்துறைத் தலைவர், அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல்.

ஏழாம் நாள் : 12.10.2025  (ஞாயிற்றுக்கிழமை)

தலைப்பு : “பழந்தமிழர் மரபும் மணம் கமழும் குறிஞ்சிப்பாட்டும்”
நெறியாளர் : முனைவர் அ.ஜெயக்குமார்
உதவிப்பேராசிரியர், மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி, நாமக்கல்.

தொடர்பிற்கு,வாசிப்புத்தளத்தில் செவ்வியல் இலக்கியங்கள்
1.முனைவர் க.லெனின், முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல், 70102 70575
2.முனைவர் அ.ஜெயக்குமார், இயக்குநர், இனியவை கற்றல், 99945 07627
3.முனைவர் கை.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர், இனியவை கற்றல், 99949 16977.
 
 
 

 

புதுக்குறள்:ஆசிரியர் மாட்சி|முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்

ஆசிரியர் மாட்சி - புதுக்குறள் - முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்
1.கற்பித்த பொழுதிற் பெரிதுவக்கும் தன்மாணாக்கனைச்   
சிறந்தோன் எனக்கேட்ட ஆசான்.         
       ஒரு ஆசிரியர் தனது மாணவன் தான் கற்றுக்கொடுத்த கல்வியில் சிறந்து விளங்கி, பலராலும் பாராட்டப்படுவதைக் கேட்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைவார். இது ஒரு ஆசிரியருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மனநிறைவு.

2.ஆசான் மாணாக்கனுக்கு ஆற்றும்உதவி கல்வியில்    
முந்தி யிருப்பச் செயல்
         
        ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்குச் செய்யக்கூடிய மிக உயர்ந்த உதவி, அவர்களைக் கல்வியில் சிறந்து விளங்கச் செய்வதுதான். இதுவே ஆசிரியர் தன் மாணவர்களுக்குச் செய்யும் உண்மையான உதவி.

3. மாணாக்கன் ஆசானுக்கு ஆற்றும்நன்றி இவன்ஆசான்   
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.
         
          ஒரு மாணவன் தன் ஆசிரியர் மீது மக்கள் பெருமை கொள்ளும்படி வாழ்ந்து காட்ட வேண்டும். அந்த மாணவனின் திறமையைக் கண்டவர்கள், “இவனைப் போன்ற ஒரு மாணவனை உருவாக்க அந்த ஆசிரியர் என்ன தவம் செய்தாரோ?” என்று கேட்கும் அளவுக்கு மாணவன் சிறந்து விளங்க வேண்டும். அதுவே ஒரு மாணவன் தன் ஆசிரியருக்குச் செய்யக்கூடிய நன்றிக்கடன் ஆகும்..

4.எவ்வறிவுரை ஆசான்வாய்க் கேட்பினும் அவ்வறிவுரை   
கேட்டதும் நடத்தல் பணிவு.         
          ஆசிரியர் சொல்லும் எந்த அறிவுரையையும் முழு மனதுடன் ஏற்று, அதன்படி நடப்பதே மாணவனுக்கு அழகு. ஆசிரியரின் அறிவுரை எதுவாக இருந்தாலும், அதைக் கேட்டு நடப்பதே மாணவனின் சிறந்த பண்பு.

5.எந்நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை    
தம்ஆசான் மறந்த மாணாக்கர்க்கு
         
          ஒருவர் எந்த நன்மையை மறந்தாலும் அதிலிருந்து தப்பித்துவிடலாம். ஆனால், தனக்குக் கல்வி அளித்த ஆசிரியரின் நன்றியை மறந்தவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெற மாட்டார்கள். ஆசிரியரின் உதவியை மறப்பது மிகவும் பெரிய தவறு.

6. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை   
மாணாக்கர் இகழ்தல் பொறுத்தல் தலை
         
         தன்னைத் தோண்டுபவர்களையும் பொறுமையுடன் தாங்கும் நிலத்தைப் போல, சில சமயங்களில் தன்னை இகழும் மாணவர்களையும் ஆசிரியர் பொறுத்துக்கொள்ள வேண்டும். பொறுமையே ஓர் ஆசிரியருக்கு அழகு.

7. கற்றலும் கற்பித்தலும் கேட்டலும் கேட்டற்கு   
விடையளித்தலும் ஆசானுக் கழகு.
         
       ஒரு நல்ல ஆசிரியருக்கு இருக்க வேண்டிய பண்புகள்: எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குக் கற்பிப்பது, மாணவர்களின் கேள்விகளைக் கவனமாகக் கேட்பது, அந்தக் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளிப்பது ஆகியவையே.

8. பேச்சில் இனியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்    
மீக்கூறும் ஆசான் உலகு.         
       இனிய சொற்களைப் பேசி, யாரையும் கடுஞ்சொற்களால் காயப்படுத்தாத ஆசிரியர் உலகத்தால் பெரிதும் போற்றப்படுவார். சிறந்த பேச்சும் மென்மையான அணுகுமுறையும் ஓர் ஆசிரியரின் மாண்பை உயர்த்தும்.

9. அன்பு அறிவாற்றல் பொறை இந்நான்கும்  
உடையான் ஆசானுள் தலை 
         
          அன்பு, அறிவு, ஆற்றல், பொறுமை ஆகிய நான்கு பண்புகளும் ஒருசேரப் பெற்றவரே சிறந்த ஆசிரியர். இந்த நான்கு பண்புகளும் ஒருவரை முழுமையான ஆசானாக உருவாக்குகின்றன.

10. குறைகளைந்து கற்பிக்கும் ஆசான் மாணவர்க்கு      
இறையென்று போற்றப் படும்.         
         மாணவர்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றை நீக்கி, சரியான பாதையில் சென்று கல்வி கற்க வழிகாட்டும் ஆசிரியர், மாணவர்களால் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுவார்.

குறள் ஆசிரியர்
முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய், 
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி,
குரோம்பேட்டை – சென்னை 44.

 

மிட்டாயும் கசந்துப் போனது|கவிதை|மெ.அபிரக்ஷா

மிட்டாயும் கசந்துப் போனது - மெ. அபிரக்ஷா

🍬எனது பிள்ளை பிராயத்தில்


என் அம்மா என்னை அடிக்கடி


மளிகைக் கடைக்கு அனுப்பி 


மளிகை பொருட்களை


வாங்கி வரச் சொல்லுவாள்..!


 

🍬எப்போதாவது எனக்கு 


அதிஷ்டம் இருந்தால்


“சில்லறை இல்ல பாபா “


என்று சொல்லியபடி மிட்டாயை


என்னிடம் நீட்டுவார் கடைக்காரர்..!

🍬இப்போது நான் வளர்ந்து விட்டேன்,


என் பாலிய பருவத்தையும்


கடந்து விட்டேன்,


ஒரு ரூபாய் மிட்டாயும் கூட


இரண்டு ரூபாய் என்றானது,


ஏன், இப்போது –  நான்


வேலைக்கும் கூடச் செல்கிறேன்..!


 

🍬இப்போது எனக்குச் சில்லறைக்குப்


பதில் கடைக்காரர்


மிட்டாயைக் குடுக்கையில்


என் மனம் அந்த சில்லறைக்


காசை பெறுவதற்கே துடிக்கிறது..!

🍬வெறும் மிட்டாய்களுக்கான 


ஆசை சுமந்த நானோ இன்று


குடும்ப பாரத்தைச் சுமக்கின்றேன்..!


 

🍬மிட்டாய் கரைந்த பின்பு 


என் நாக்கில் – அன்று 


குடிகொண்ட வெறுமையே 


இன்று எனது வாழ்க்கையாய்


உருமாறிப் போனது,


மிட்டாயின் சுவையும் கூட


எனக்கு கசப்பாகிப் போனது..!


கவிதையின் ஆசிரியர்


மெ அபிரக்ஷா


II-B.A.Sociology


வி.இ.டி.கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி


திண்டல், ஈரோடு.

 

நகரத்தின் நடுவே அகதியாய்|கவிதை|முனைவர் கு. நாகம்மாள்

நகரத்தின் நடுவே அகதியாய்-கவிதை-முனைவர் கு. நாகம்மாள்

🍁 பூமித்தாயின் மடியில் உறங்கி


விடியலில் எழுந்து


விழிகளை விரித்தால்


பசுமைகள் கவிபாடி


பூக்கள் கையசைத்து


வானம் குடை பிடித்து


பாதைகள் பாய் விரித்து
 

என்னை அழைக்கும்


பின் அணைக்கும்..!


 

🍁 பஞ்சம் ஒன்றுமில்லை
 

மிஞ்சும் உறவுகள் கெஞ்சும்


நெஞ்சம் நிறைய கொஞ்சும்


அஞ்சும் அறுவதும் ஒன்றும்..!


 

🍁 பசியில் வயிற்றைத் தடவ


பானையில் சோறு கொதிக்க


கொஞ்சம் பொறுவென


கொத்தமல்லி இரசத்தோடு


அத்தை வந்து நிற்பாள்..!


 

🍁 கதறும் சத்தம் கேட்டு


அலறும் அக்கம் பக்கத்து உறவுகள்


ஆறுதலாய்ச் சில வார்த்தை


ஏற்றிவிடும் தோணியாய்


எப்பொழுதும் உண்டு..!


 

🍁 ஒன்றிருக்க


ஒன்றில்லாப் பொழுதில்


ஒத்த காசுமில்லாது


ஓடிவந்து தந்திடும்


உன்னத கரங்கள்


உன்னன்பு போதாதா என்றுரைக்கும்..!


 

🍁 குளிக்க ஆறு கிணறு


உல்லாச ஊஞ்சல்


தள்ளப்படாத தனிமை


கொல்லப்படாத அறங்கள்
 

கோயில் கொண்டிருக்கும்..!


 

🍁 வாய்ப்புகள் தேடி வரும்


வஞ்சங்கள் ஓடி மறையும்


குறையில்லா வாழ்க்கை


கூடிவரும் இறையும்


நாடி அருளைத்தரும்..!


 

🍁 ஏறாத மரங்கள் இல்லை


நடவாத பாதைகள் இல்லை


உறங்காத இரவுகள் இல்லை


உறவற்ற உயிர்கள் இல்லை


உடனிருந்தது எல்லாம்


என் கிராமத்துப் பொன்னேட்டில்..!


 

🍁 அத்தனையும் தொலைத்து


அலறலில் விழித்து


அழுகையை மறைத்து


ஆனந்தத்தை ஒழித்து..!


 

🍁 அவசரப் பயணமும்
 

அன்றாடப் பிழைப்பும்‌


ஆதியான உழைப்பும்


அடுத்தடுத்து துரத்த


தொலைந்தே போனேன்


நகரத்தின் நடுவே அகதியாய்..!


கவிதையின் ஆசிரியர்

முனைவர் கு. நாகம்மாள்,


உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,


எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்,


இராமாபுரம் வளாகம்,
சென்னை-89.

 

The Poverty of the Ever-Flowing Vaigai|Dr.D.Sangeetha

வற்றாத வைகையின் வறுமை - முனைவர் த சங்கீதா
Abstract              
        Among the Sangam literature’s celebrated rivers, the Vaigai (Vaiyai) is the lifeline of Madurai. The Kaveri nourished the prosperity of the Chola kingdom, the Tamiraparani enriched the Pandya country, the Palar flowed in the northern direction, the Ponniyar was a branch of the Kaveri, and the Peraru is often mentioned in Sangam works. The Chengan River is also found in many distinguished Sangam verses. The river Aru is also seen in several ancient references
              
          The most frequently mentioned rivers in Sangam literature are the Vaigai, Kaveri, Tamiraparani, Ganga, Yamuna, Palar, Ponniyar, and Peraru. Rivers may originate from springs, lakes, melting snow streams, rainfall, or various other sources. Usually, other rivers join them, and these are called tributaries. The volume of water in a river is the sum of surface flow and the underground water flow unseen to the eye.
              
         From Sangam age poetry to modern times, hardly any poet has failed to sing of rivers. Our forefathers described rivers with the same beauty as they did women, highlighting their charm and significance. Yet today, due to human exploitation and pollution, their condition has become pitiable. The Vaigai, which once gave life to Madurai, enriched it, and brought glory to its name, played a major role in the prosperity of the Pandya land. Like a radiant maiden, she was celebrated for her fertility, expansiveness, and eternal fame. But now, that glory is fading away. Though people have eyes, they turn a blind eye; though they have ears, they refuse to listen. Indifferent, they continue on their way.
              
         The misery of the Vaigai, the sorrow of our rivers, and the future of our coming generations — these are matters we must reflect upon.


“வற்றாத வைகையின் வறுமை”

ஆய்வுச் சுருக்கம்
         
        சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட சிறப்பான ஆறு வைகை (வையை) – மதுரையின் உயிர் நதி.காவிரி – சோழநாட்டின் செழிப்பை அளித்த நதி.தாமிரபரணி – பாண்டிய நாட்டின் வளநதி. பாலாறு – வடக்கு பக்கம் பாய்ந்தது பொன்னியாறு – காவிரி கிளைநதி.பேராறு – சங்கத்தில் பல இடங்களில் வரும்.செங்கண் ஆறு – சிறப்பு வாய்ந்த சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.அறவாறு – பண்டைய குறிப்புகளில் சங்க இலக்கியங்களில் அதிகம் காணப்படும் ஆறுகள்:வைகை, காவிரி, தாமிரபரணி, கங்கை, யமுனை, பாலாறு, பொன்னியாறு, பேராறு ஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, பனியாறுகள் உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். பொதுவாக ஆறுகளுடன் வேறு ஆறுகள் வந்து இணைவது உண்டு. இத்தகைய ஆறுகள் சிற்றாறுகள் அல்லது துணையாறுகள் என அழைக்கப்படுகின்றன. ஆற்றில் கொண்டு செல்லப்படும் நீரின் அளவு. ஆற்றில் மேற்பரப்பில் செல்லும் நீரும், கண்ணுக்குத் தெரியாமல் நிலத்துக்குக் கீழ் செல்லும் நீரும் சேர்ந்தது ஆகும்.. சங்க கால பாடல்கள் முதல் இக்காலம் வரை ஆறுகளைப் பற்றி பாடாத கவிஞர்களே இல்லை. பெண்ணைப் போல ஆற்றையும் அதன் சிறப்புகளையும் எடுத்துக் கூறி உள்ளனர் நமது முன்னோர்கள் ஆனால், அதன் இன்றைய நிலை மனிதர்களால் மாசுபட்டும் அழிக்கப்பட்டும், அபகரிக்கப்பட்டும் வருகிறது.  வைகை நீர் வாழ்வில் மதுரையை செழிக்க வைத்து புகழ் பாட வைத்த சிறப்புகளில் மிகுந்த பங்கு வைகை நதிக்கும் உண்டு. பாண்டி நாட்டு சிறப்பைச்  சொல்லும் பைங்கிளி அவள். அதன் பரப்பும், செழிப்பும் ,வளமையும், மங்காத புகழும் மங்கிக் கொண்டிருக்கும் காலம்  வைகைக்கு வந்துவிட்டது.கண்கள் இருந்தும், பாராமுகமாய், செவிகள் இருந்தும், கேட்கும் மனமின்றி மக்கள் அவரவர்கள் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். வைகையின் அவலமும், நதிகளின் துயரமும், நாளைய எதிர்காலமும் சிந்திப்போம்.

முன்னுரை       
    நதிகளும் ஏரிகளும் குளங்களும் இயற்கை வளங்களுமே மனித சமுதாயத்தை மேன்மைப்படுத்தி மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் எதிர்கால மக்களின் வாழ்வாதாரங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது ஆனால் இன்று ஒவ்வொரு நதிகளும் விதவிதமான கழிவுகளோடும் வண்ணச் சாயங்களோடும் தன் நிலை பிறழ்ந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மனிதன் ஆக்கிரமிப்பாலும் அசத்தப்படுத்துவதாலும் அக்கறையின்மையாலும் அந்நியனாக மாறி நதிகளுக்கு கண்ணீரைப் பரிசாகத தந்து கொண்டிருக்கிறான். நதிகளில் நீராடி. அள்ளிக்  குடித்து அமுதுண்டு வாழ்ந்த காலம் போய் நதிகளில் கால் வைத்தால் நச்சுத்தன்மை நம்மைத்  தாக்கி விடும் என்ற பயத்தில் மனிதன் வாழும் நிலையை உருவாக்கி விட்டான். சங்க காலப் புலவர்கள் காதல, மரம் ,வீரம் ,கல்வி, கேள்வி, ஞானம், பக்தி, ஒழுக்கம் ,பண்பாடு மட்டும் பேசவில்லை எத்தனையோ சான்றோர்களும் கவி பெரும் மக்களும் நதிகளுக்கு  முக்கியத்துவம் கொடுத்து தெய்வமாகவும் புண்ணிய நதியாகவும் ,பாவங்களைப் போக்கும் ஆறாகவும் சங்க
 கால முதல் இக்காலம் வரை பாடி வந்துள்ளார்கள். மனிதனால் இன்று கண்ணீரோடு ஓடிக் கொண்டிருக்கிறது. கங்கை தூய்மையானது காவிரி அசுத்தமானது. வைகை வலுவிழுந்தது. வாழ்க்கையில் குடி  தண்ணீருக்கும் விலையானது. சங்ககாலத்தில் நதிகளுக்கு அளித்த முக்கியத்துவத்தை வைகை நதி பெற்ற சிறப்பையும் இவ்வாய்வு பகுதியில் அழிந்து வரும் இக்காலங்களில் மக்கள் நதிகளைக் காக்க வேண்டும்.நதிதான் அனைத்து உயிர்களின் வாழ்வாதாரம் என்பதை உணர வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும்.

தமிழகத்தில் ஓடும் சில ஆறுகள்        
         தமிழகத்தில் பல சிறிய, பெரிய ஆறுகள் பாய்கின்றன. அவற்றில் சில முக்கிய உயிர்நதிகள் ஆகும். காவிரி நதி தமிழகத்தின் மிகப்பெரிய பாசனநதியாக விளங்குகிறது. இது கர்நாடகத்தில் தோன்றி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளைச் செழிப்பாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வைகை நதி மதுரை மாவட்டத்திற்கு உயிர்நதியாகும்; இது மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி மதுரையை ஊடறுத்து பாய்கிறது. தாமிரபரணி நதி திருநெல்வேலியும் தூத்துக்குடிப் பகுதிகளுக்கு வளம் தருகிறது.மேலும் பாலாறு வடமாநிலங்களிலிருந்து வந்து வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் பாசன வளம் வழங்குகிறது. பென்னாறு வட ஆந்திரா மாநில எல்லையிலிருந்து வந்து வடதமிழகத்தில் பாய்கிறது. வெள்ளாறு, மன்னாறு, பரமனாறு போன்ற ஆறுகள் கிழக்குக் கடலில் கலக்கின்றன. சரபணா ஆறு, சித்தாறு, குந்தாறு போன்ற பல சிறிய ஆறுகளும் கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீர், பாசனம் வழங்குகின்றன.இதற்குப் பிறகு நொய்யல், அமராவதி, மணிமுத்தாறு, நந்தி, வத்தாறு, பச்சை ஆறு, சிருவாணி போன்ற பல துணை ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இவ்வாறு, தமிழகத்தில் பாயும் ஆறுகள் விவசாயம், குடிநீர், மின்சாரம் உற்பத்தி, நீர்த்தேக்கம் போன்றவற்றில் மிகப்பெரும் பங்காற்றுகின்றன.
மணிமேகலையில் வைகை          
        முதல் காண்டம் (காஞ்சி காண்டம்) – காஞ்சிப் புறத்தில் வாழ்ந்த மணிமேகலை தன் தாயார் மாதவியுடன் மதுரைக்கு வருகிறார். அங்கு வைகை ஆற்றின் கரையில் மக்களின் செல்வச் செழிப்பு, வியாபாரம், மன்னன் செல்வம் முதலியவை வர்ணிக்கப்படுகின்றன.

மதுரை நகர வர்ணனை       
         மதுரையைச் சுற்றி ஓடும் வைகை ஆறு குறித்து விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.வைகை கரையில் செழித்து வளர்ந்த வியாபார நகரம்.ஆற்றின் கரையில் வணிகர்களின் அலைச்சல், மக்கள் கூடி வியாபாரம் செய்வது.
மூன்றாம் காண்டம் (அருகாண் காண்டம்) – மதுரையில் மணிமேகலை பிச்சை எடுக்கும் நிகழ்வில் வைகை ஆற்றங்கரையோரக் காட்சிகள் வருகிறது.
அமுதசுரபி நிகழ்வு          
       பசியால் வாடும் மக்களுக்கு உணவு அளிக்க,மணிமேகலை பெற்ற அமுதசுரபி (மந்திரக் கிண்ணம்) முதலில் மதுரையில், வைகை கரையோரத்தில் பிச்சை எடுத்து அனைவருக்கும் உணவளிக்கிறது..

மதுரைக் காஞ்சியில் வைகையின் சிறப்பு
“வைகை விரிந்த பெருநீர் வீழ்ந்து
கடற்கரை கலந்தன போன்றன;
நெய்தல் நுண்ணறிவினோடும்,
மருதம் மகிழ்ந்தன போலவும்,
பசும்புல் கொழித்தன பசும்பொன் சேர்த்தன,
மதுரை நகர் வைகைத் தண் நீரே.” (பா. 153–160) அடிக் (1) மது.காஞ்
       
வைகை பெருநீர் பாய்ந்து கடலில் கலக்கிறது. அதன் நீர் நெய்தலையும் மருதநிலத்தையும் வளமாக்குகிறது. பசும்புல் செழித்து பொன்னின் வளம் போன்றதாக விளங்குகிறது. அக்காலத்தில் பறந்து விரிந்த மக்களுக்குப் பசி இல்லா வாழ்வை வைகை தந்துள்ளதை அறிய முடிகிறது.

“வைகை அணையோடு வயல் மலர்ந்து,
பசும்பொன் துளித்தன பசும்பயிரே;
பாசறை பாடி வண்டுகள் சூழ்ந்து,
மணமிகு மலர்கள் மலர்ந்தனவே. (பா. 221–228) அடிக்(2) மது.காஞ்சி      
      வைகை அணைக்கு அருகே வயல்கள் மலர்ந்தன. பசும் நெற்பயிர் பொன்னின் துளி போலத் திகழ்கிறது. மணமிகு மலர்களில் வண்டுகள் இசை பாடுகின்றன. மலர் போல உள்ள வயல்கள் வறண்ட பாலைவனமாக மாறிக் கொண்டுள்ளது பொன்னிறமான நெற்பயிர்த் துளிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சோலை வளமான மதுரையின் வைகை நதிப் பகுதிகள் இன்று கட்டிடங்களால் உயர்ந்து நிற்கிறது.

“வைகையோடு விரிந்த மருதநிலத்து
உழவர் தொழுது பாடி உழுதனரே;
தண் நீர் பெருகி வற்றாத செழுமையால்
பசுந்தழை விரிந்து பரப்பினவே.” (பா. 301–310) அடிக் (3) மது.காஞ்சி         
      வைகை ஆற்றங்கரையின் மருதநிலத்தில் நீர் செல்லும் பொழுது வைகை கொண்டு வரும் மலர்களும் தாவர இலைகளும் போட்டு உழவர்கள் பாடலோடு உழுதனர். வைகைத் தண்ணீர் எப்போதும் பெருகி குறையாததால் பசுந்தழைகள் பரந்து விரிந்தன. வயல்வெளிகளிலும் செழித்து வளர்ந்தன. மண்ணின் மைந்தர்களான விவசாயிகளும் மனம் மகிழ்ந்து வாழ்ந்தனர். அன்றைய காலத்தில். ஆனால் இன்றோ அனைத்தும் பொய்த்துப் போய் வறண்ட நிலமாக நோய்வாய்ப்பட்டு புரையோடிக் காணப்படுகிறது  மதுரை மண்.

“வைகை வடியும் தண் நீர் சூழ்ந்து,
மதுரை மணிமாடம் விளங்கிய நகர்;
வளம் பெருகிய வளந்தோன்றல் போல
எல்லாம் இணைந்து எழிலுற்றதே.” (பா. 511–518) அடிக்(4) மது.காஞ்         
       வைகை தண்ணீர் சூழ, மணிமாடங்களால் விளங்கியது . ஆனால் இன்று வைகை நதி எல்லாம் மாடுகளும் ஆடுகளும் மனித கழிவுகளும் குப்பைக் கூலங்களும் நிறைந்து வைகையினுடைய பரப்பளவு குறைந்து வறுமையாய் போனால் வைகை அன்னை. மதுரை நகரம் எழிலுறத் திகழ்ந்தது. அது செழித்து வளம் தரும் வளந்தோன்றல் போல இருந்தது  வைகை ஆறு மதுரையின் உயிர்நாடியாகப் படைக்கப்பட்டுள்ளது.உழவுக்கும் வளத்துக்கும் ஆதாரமாக இருந்தது.மதுரை நகர அழகையும் வளத்தையும் வைகை பெருமிதமாக்கியது. மதுரை நகரத்தையும், அதனுடன் இணைந்த வைகை நதியையும் அழகாகப் புகழ்கிறது, மதுரைக்காஞ்சி. ஏடுகளில் மட்டுமே ரசிக்கக் கூடிய நிலையை இன்றைய மனித சமுதாயம் உருவாக்கி விட்டது நதிகளும், குளங்களுக்கும் ,நல்ல நீர் நிலைகளும்  அழிவின் விளிம்பில் உள்ளது.நல்ல நீர் என்பதும் நாம் பருகக்கூடிய தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

“ஆற்றினும் பெரிது மதுரை;

அங்கே வையை பாய்கின்றது;”
         
          அதனால் உழவர் வளம் பெருகி, வணிகரும் செழித்தனர். வைகை பாய்ந்து வந்ததால், மதுரை நிலங்கள் செழித்து, உழவர், வணிகர் அனைவரும் வளம் பெற்றனர் என்கிறது.மதுரைக் காஞ்சி (சிறப்புரை) மதுரைக்கு வைகை நதி உயிராக இருந்தது.நகரின் புறங்களில் வைகை வழியாக மண் வளம் பெற்றதால், அரிசி, பண்டங்கள் மிகுந்தன.வைகையைக் கடந்து வந்த வணிகர்கள் மதுரையைப் புகழ்ந்தனர்.

பதிற்றுப்பத்து
         
        பாண்டியர்களின் தலைநகராக இருந்த மதுரைக்கு வைகை முக்கியம் சில பாடல்களில் வைகை கரையில் பாண்டிய மன்னர்கள் யானை, குதிரைப் படையுடன் விளங்குவர் என வர்ணிக்கிறது.வைகையை அடிப்படையாகக் கொண்டு பாண்டியர் வளம் பெருகுவதாகக் கூறுகிறது.

அகநானூறு & புறநானூறு
         
       பல இடங்களில் “வையை” கரையில் நடந்த போர்கள், விழாக்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அகநானூறு பாடல்களில் காதல் பின்னணியில் வைகை கரையைச் சுட்டி, காதலர்கள் சந்திக்கும் இடமாகக் கூறப்பட்டுள்ளது.
புறநானூற்றில், வைகையைத் தாண்டி வந்த போர்த் தளங்கள், பாண்டியர் வெற்றி விழாக்கள் சொல்லப்படுகிறது.

சிலப்பதிகாரம்    
      சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் வைகை நதி பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் வைகையின் அழகும், நீரின் பெருக்குமும், மதுரையின் வளமும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் வரும் வைகை பற்றிய பாடல் வரிகள்,

சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் (வைகை நதி வர்ணனை)
“வைகையொடு புனல்படர் பாண்டிமதுரை
பூக்கள் தொடுத்து நிறைந்த புலி நகர் எய்தி
நீரில் உலாவிய நெடுங்குழல் யாழ் இசை
காணும் இடமெலாம் இனிதாகும்” சிலம்பு அடிக்(4)
வைகை வழியொடு வரும்பெருங் கணங்கள்
மதுரை மணிமாடம் சூழ்ந்து விரிந்தன
பெருகிய புனலினில் பெண்மணி கூத்தாட
கரையொடு கரையெனக் களிப்புற நின்றன
வைகைத் துறைமுகம் வாழ்விடம் பெற்றனர்
ஆயர்தம் குழுவினர் ஆட்டமாடினர்
மணியொலி முழங்கிய மதுரைத் துறைமுகம்
அணியொடு விளங்கிய அற்புத நகர்”
      வைகை நதியின் பெருக்கால் மதுரை வளமுடன் காட்சியளிக்கிறது. வைகையில் நீராடும் பெண்கள் பாடல் பாடி விளையாடுகின்றனர். நதிக்கரையில் யாழிசை, நடனங்கள், மக்களின் ஆனந்தம் நிறைந்து காணப்படுகிறது. வைகையால் மதுரை “மணிமாட நகரம்” எனப் பெருமைப்படுகிறது. கண்ணகி மதுரையைச் சுட்ட அத்தியாயத்தில், வைகையின் அருகிலுள்ள மதுரை நகரமே எரிந்து சிதைகிறது. வைகை நகரின் அடையாளமாகக் காணப்படுகிறது. தொல்காப்பியம் (செய்யுள் இலக்கணம்) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணையில் மருத நிலம் குறித்துப் பேசும்போது, வைகை நதியின் பாசன வளம், உழவர் வாழ்க்கை முதலியவை எடுத்துரைக்கப்படுகிறது. தவிர வைகை இடம் பெற்றுள்ளன.

மருதநிலத்தின் சிறப்பு ஆறுகள்
        
        ஆற்றின் மூலத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஆறுகள் பொதுவாகக் கடலிலோ அல்லது பெரிய ஏரிகளைப் போன்ற நீர் நிலைகளிலோ கலக்கின்றன. வரண்ட பகுதிகளில் ஆற்று நீர் ஆவியாவதன் மூலம் இவ்வாறான நீர் நிலைகளை அடையு முன்னரே வறண்டு விடுவது உண்டு. சில ஆறுகள் மண்ணுக்கு ஊடாகவோ, ஊடுசெல்லவிடும் பாறைகளூடாகவோ நிலத்துக்குள் உறிஞ்சப்படுவது உண்டு. இது நிலத்தடி நீராகத் தங்கிவிடுகிறது. தொழிற்சாலைகளுக்கும், நீர்ப்பாசனத் தேவைகளுக்கும் பெருமளவில் நீரை எடுப்பதனாலும் அதன் இயற்கையான முடிவிடத்தை அடையும்முன்பே ஆறு வற்றிவிடுவதையும் காணலாம். ஆற்றுக்கு நீரை வழங்கும் பகுதி அல்லது ஆற்றினால் வடியச் செய்யப்படும் நிலப்பகுதி வடிநிலம் அல்லது நீரேந்து பகுதி எனப்படுகின்றது. ஆறுகளுக்கு மலைகளுக்கும் இடையில் அன்று அணைகளை கட்டினார்கள் நம் முன்னோர்கள். மக்கள் பயன்படுத்தும் வாழ்வாதாரமாக நதிகள் இருந்தது. மனிதனின் ஆசைகளால் குளங்களும் ஆறுகளும் வறுமையாகி நிற்கிறது.

சங்க புலவனின் சிறப்பு        
           குறுநிலமன்னர்களையும், அரசர்களையும், புகழ்ந்து வந்தால் பொன் பொருள் கிடைக்கின்ற அக்காலத்தில் அதையும் தாண்டி நற்புலவர்கள் பல நமது நாட்டில் ஓடுகின்ற நதிகளையும், கடல்களையும், இயற்கையையும் பாடல்களில் பதிவு செய்தனர். நதிகளால் ஏற்பட்ட வளமை வாழ்க்கை, பொருளாதார நிலை, சமுதாய மேம்பாடுகள் வாழ்க்கைத்தரம் வாழ்வியல் சூழல் அமைதியாகவும், மகிழ்வாகவும் அமைந்திருந்தது.

வைகையின் வறுமையின் கொடுமை 
 
“வைகை பெருகப் பொழில்கொள் மதுரை”சிலம்பு அடிக்.குறி (5)
(மதுரையின் செழிப்பு வைகையின் நீரால் வளர்ந்தது எனக் கூறுகிறது)
வளமான சந்தை பற்றிய வரிகள்

“வைகைத் துறை வணிகம் வளர்ந்து”
(வைகைத் துறையில் வணிகம் மிகுந்தது)
வளம் குறையாத மதுரை வற்றாத வைகை வளம் குன்றா மதுரை”
(வைகை வற்றாததால் மதுரையின் வளமும் குறையவில்லை)

“வைகையருகின் மகிழ்ந்தோர்தம் விளையாட்டு”
       (வைகை கரையில் மக்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினர்)
 சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில், “வைகை” (அதாவது வைகை ஆறு) பற்றிய தொடர்ச்சி மற்றும் உள்தர்ம உணர்ச்சிகளை எழுத்தாளர்கள் அழகாகக் கேள்விப்பட்டுள்ளனர். குறிப்பாக, புலவர்கள் வர்ணிக்கும் விதத்தில்: கோவலனும் கண்ணகியும் மதுரையை அடைகின்றனர். வையை நதியைக் கடக்க அதனைச் சார்கின்றனர். பூக்கள் நிறைந்த அந்த ஆறு தன் நீரைக் கரந்து செல்கிறது. கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை தன் கண்ணிரை உள்ளடக்கி மறைத்துச் செல்வதைப் போல அதன் நீர் வெள்ளம் மறைந்து கிடக்கிறது.” இதில்:   “பூக்கள் நிறைந்த உயர்ந்த அணை ஊற்று… தன் நீரைக் கரந்து செல்கிறது” — என்று சீரிய அழகுடன் செல்கிறது.,
“கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை” என்று, மனிதன் (கண்ணகி) மற்றும் இயற்கை (வைகை ஆறு) ஒருங்கிணையும் உணர்ச்சியாக வெளிப்படுகிறது.அதன் நீர் “கண்ணிரை” (இரக்கத்தாலும் அன்பாலும்) மறைத்து செல்கிறது என்று எழுத்தாளர் சுட்டிக்காட்டுகிறார் — இது வைகையின் வறுமைக் காட்சியாகும்.இவ்வாறு, மனவியல் முகத்திலிருந்து விவசாய அல்லது இயல்பியலில் அமைந்த “வறுமை” அல்ல;இது உணர்ச்சி சார்ந்த உருவகம், வறுமையும் துயரமும் காட்டும் அழகிய மொழி வடிவமென பொருள் கொள்ளலாம் அன்றைய காலகட்டத்தில் இது பொருந்தும்.ஆனால் இன்றோ இதன் நிலை முற்றிலும் மாறுபட்ட அமைந்துள்ளது..
“கோவலனும் கண்ணகியும் மதுரையை அடைகின்றனர். வையை நதியைக் கடக்க அதனைச் சார்கின்றனர். பூக்கள் நிறைந்த அந்த ஆறு தன் நீரைக் கரந்து செல்கிறது. கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை தன் கண்ணிரை உள்ளடக்கி மறைத்துச் செல்வதைப் போல அதன் நீர் வெள்ளம் மறைந்து கிடக்கிறது. ”சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (புனைவியல் வர்ணனை ஆகும். இலக்கியத் தரம்  சங்க இலக்கியத்தின் அழகிய வடிவமான உணர்ச்சி எடுக்கும் உலக கோணத்தை நிறைவேற்று உள்ளது.

பரிபாடலில் வைகை நதி
      
     பரிபாடலில் வைகை நதியைப் புகழ்ந்து பாடியுள்ள பாடல்கள் சில உள்ளன. வைகையின் அழகையும், அதன் கரையோர வாழ்வையும், செழிப்பையும், சஞ்சாரிகளின் மகிழ்வையும் விவரிக்கின்றன.

“வைகை நீர் பரப்பின்

நளிர்நிறைத் தண் புனல்,

மைகொள் கமழ் தும்பை

மலரொடு படர்ந்தன,

அம்புயம் புனைசேர்

அன்னம் தம் குடியென

தும்பையொடு புணர்ந்து

சூழ்ந்தன கொக்குகள்.” அடிக்குறி.(6)பரி
         
    வைகை நதியின் நீரில் மிகுந்த குளிர்ச்சியுடனும் இனிமையுடனும் ஓடும் தன்மை சொல்லப்படுகிறது.அதன் கரையில் தும்பை மலர்கள் மலர்ந்து மணம்கொடுக்கின்றன.தாமரை மலர்கள் (அம்புயம்) மலர்ந்து நிற்க, அதனுடன் சேர்ந்து அன்னப்பறவைகள் குடியிருந்து விளையாடுகின்றன.தும்பை மலர்களோடு கூடியவாறு, கொக்கு பறவைகளும் அங்கங்கு சூழ்ந்து காணப்படுகின்றன.இதன் மூலம் வைகை நதி ஒரு சாதாரண நதி அல்லாமல், இயற்கையின் அழகை நிரப்பிய செழிப்பின் அடையாளமாகவும், பறவைகளின் வாழ்விடமாகவும், மணமிகு மலர்களின் பூங்காவாகவும் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்ட வைகை நதி இன்று வளமை குன்றி ,தன்னிலை பிறழ்ந்து, அளவில் சுருங்கி, அழகை இழந்து, அவலத்தைச் சுமந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

முடிவுரை
         
         வைகை நதி சங்க காலத்தில் உயிரோடு பாய்ந்து மதுரைக்கு செழிப்பையும் வளத்தையும் அளித்தது. புலவர்கள் பாடல்களில் வைகை இயற்கையின் அழகு, விவசாய வளம், வணிகச் செழிப்பு, மக்களின் ஆனந்தம் எனப் பல்வேறு பரிமாணங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் வைகை “மதுரையின் உயிர்நாடி” எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலையில், மனிதனின் அக்கறையின்மை, மாசுபடுத்தல், ஆக்கிரமிப்பு ஆகிய காரணங்களால் வைகையின் நீர்ப்பெருக்கு குறைந்து, அதன் இயற்கை வளமும், பழம்பெருமையும் சிதைந்து வருகிறது.ஆகவே, நதிகள் என்பது வெறும் நீரோட்டம் அல்ல; அவை மனித வாழ்வின் அடித்தளம், பண்பாட்டு அடையாளம், பசுமையின் மூலாதாரம். வைகை உள்ளிட்ட நதிகளைப் பாதுகாப்பது நம் வருங்கால சந்ததியின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் கடமையாகும். சங்க காலத்தில் புலவர்கள் வைகையைப் புகழ்ந்தது போல, இன்றைய காலத்தில் நாம் அதை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். “வைகை வற்றாதால் மதுரை வளம் வற்றாது” என்ற பழமொழி போல, நதிகளின் வளம் தான் நம் வாழ்வின் வளம் என்பதனை உணர்ந்து செயல்பட வேண்டியது நம் கடமை. எனவே, வைகையும், தமிழகத்தின் பிற நதிகளும் காக்கப்பட்டால் மட்டுமே நமது பண்பாட்டும், சமூக வளர்ச்சியும், எதிர்கால தலைமுறையின் வாழ்வாதாரமும் உறுதி பெறும்.

துணை நூற்பட்டியல்
1.மதுரைக் காஞ்சி, இளங்குமரன், இரா., பதிப்பாளர், புரட்சிக் கவிஞர் மன்றம் : மதுரை, பதிப்பு ஆண்டு, 2014

2.முனைவர் ரா. சீனிவாசன், சிலப்பதிகாரம் மூலமும் திறனாய்வும், அணியகம் 3, செல்லம்மாள் தெரு, செனாய் நகர், சென்னை.

3.முனைவர் இரா. சாரங்கபாணி, பரிபாடல், முல்லை பதிப்பகம் .

4. புலியூர்க் கேசிகன், பரிபாடல், திருமகள் நிலையம், கௌரா பதிப்பகம்.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் த.சங்கீதா
உதவி பேராசிரியர்,
தமிழ்த்துறை,
புனித பீட்டர் உயர்கல்வி மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம் ஆவடி, சென்னை.

 

The Sound of the Twisted Bow by Rama and the Distance it Reached|Dr.G.Mangaiyarkkarasi

இராமன் வளைத்த வில்லும், வில்லின் ஒலி கேட்ட தொலைவும் - முனைவர் க.மங்கையர்க்கரசி
Synopsis
        Rama, an incarnation of Thirumal, was born for Raavana’s demise only. Lord Rama will hold the Godandum (Bow) in his hand. He married Sita by twisting Lord Shiva’s Triyambaka bow, which was imposed as a precondition by King Janaka for the marriage of his lovely daughter Sita. The sound of twisting and breaking of that Divine bow was heard even in the heaven. It was heard even in Ayodhya, where Dasharatha ruled, and even in Mahendra Hill, where Parashurama lived, and even in Sri Lanka, where Ravana ruled. Kambar says that as  Sita  was in the palace of Mithila, she could not hear that sound and she came to know  that Rama had twisted and has broken  that  bow only after it was conveyed by her own  close associate  Neela Malai and the same has been elegantly expressed out in Ramayana by the legendary poet Kambar. Here it is imagined that   Sita did not hear that voice because of her ecstacy of love towards Rama her Life Partner.

Key words: Ram, Seetha, Breaking Sound o the Bow, Enthusiasm of the Divine Beings.


இராமன் வளைத்த வில்லும், வில்லின் ஒலி கேட்ட தொலைவும்

ஆய்வுச் சுருக்கம்
           திருமாலின் அவதாரமான இராமன் பிறப்பெடுத்ததே இராவண வதத்திற்காக தான். இராமன் கையில் எப்போதும் கோதண்டம் இருக்கும். திருமண நிபந்தனையாக ஜனகன் விதித்த சிவனின் திரியம்பகம் வில்லை வளைத்தே சீதையை மணம் புரிந்தார். அவன் வளைத்த வில்லின் ஓசை விண்ணுலகம் வரை கேட்டது. தசரதன் ஆட்சிபுரிந்த அயோத்தி வரை,பரசுராமர் வாழ்ந்து வந்த மகேந்திர மலை வரை, இலங்கை வேந்தன் இராவணன் ஆண்ட இலங்கை வரை கேட்டது என்றும், மிதிலையில் அரண்மனையில் இருந்த சீதைக்குக் கேட்கவில்லை, தோழி நீலமாலை வந்து சொன்ன பிறகுதான், இராமன் வில்லை வளைத்ததையே சீதை அறிந்து கொண்டாள் என்று கம்பர் தம் இராமாயணத்தில் சுவையாகக் கூறி சென்றுள்ளார். தலைவனைப் பற்றிய காதல் நினைவிலேயே இருந்ததால் அவளுக்கு அவ் ஓசை கேட்கவில்லை போலும்.

திறவுச் சொற்கள்: இராமன், சீதை, வில், ஒடித்த போது கேட்ட ஓசை,   தேவர்களின் மகிழ்ச்சி.

முன்னுரை
        இராமன் கையில் வில் (கோதண்டம்) எப்பொழுதும் நீங்கா இடம் பெற்றிருக்கும். வில்லேந்திய இராமனையை நாம் கம்பராமாயணம் முழுவதும் காண்கிறோம். தாடகை வதத்தில் ஆரம்பித்து இராவணவதம் முடிய நாம் கோதண்டராமனையேப் பார்க்கிறோம். ஒரு சொல், ஒரு வில், இரு இல் என்றே வாழ்ந்தவன் நம் கதாநாயகன் இராமன். நூல் முழுவதும் இராமபிரானின் அளவிடமுடியாத வில்லாற்றலை நம் கண்முன் காட்டுகிறார் கம்பர். கிடைத்தற்கரிய, சீதையைப் பெறவேண்டுமானால் சிவதனுசை வளைத்து நாணேற்ற வேண்டும் என்ற நிபந்தனையின்படி, வில்லை வளைத்து நாணேற்றி, திருமகளாம் சீதையை மணந்தான். வில்லின் பெருமையையும்,அதன் வரலாற்றையும், அதைச் சுமந்து வந்த வீரர்களின் எண்ணிக்கையையும், வில்லின் ஒலி எவ்வளவு தொலைவிற்குக் கேட்டது என்பது குறித்தும் கம்பர் தம் இராமாயணத்தில் கூறியுள்ள கருத்துக்களைக் இக்கட்டுரையில் ஆராய்வோம்.

வில்லின் வரலாறு
      வில்லின் வரலாற்றை சதானந்த முனிவர் கூற ஆரம்பித்தார். சிவன், உமாதேவியைத் தந்தையான தக்கன் இகழ்ந்தான் என்பதால், பொறுமை சிறிதுமற்று பொங்கிய சினத்தோடு இந்த வில்லைக் கையில் எடுத்துக்கொண்டு, தக்கன் வேள்வி செய்யும் இடத்துக்குச் சிவன்,  சென்றான். வேள்விக்கு வந்திருந்த தேவர்கள் சிலருடைய பற்களும், கைகளும் சிதறின. அதுவரை அவர்கள் புகுந்திடாத மறைவிடங்களில் எல்லாம் தேவர்கள் ஓடிப் புகுந்தனர். தக்கனது வேள்வி குண்டத்தில் இருந்த அக்னியும் அழிந்தது. பின்பே சிவன் சினம் தணிந்தான். அவர் கையில் இருந்த வில்லைக் கண்ட தேவர்கள் நடுங்கினார்கள். அவர்கள் இன்னும் வாழ வேண்டிய வாழ்நாளைப் பெற்றவர்கள். அதனால் வலிமை பொருந்திய அடிதண்டையும் கட்டமைப்பையும் பெற்ற தனது வில்லை  ஜனகனது குலத்திலே தோன்றிய வாள் கொண்டு உழும் வல்லமை பெற்ற தேவராஜன் என்னும் அரசனிடம் கொடுத்துவிட்டான். இத்தன்மை பெற்ற இவ்வில்லின் வலிமையை நான் எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ என்று சதானந்தர் கூறினார்.(கார்முகப்படலம் 628)

வில்லை வளைத்தவனுக்கே சீதை
 
            அழகுமிக்க சீதையை மணக்க ஜனகன் ஒரு நிபந்தனை விதித்திருந்தார். சிவபெருமான் கைக்கொண்டு போரிட்ட வில்லை வளைத்தவனே சீதையை மணப்பதற்கு உரிமை உடையவன் என்று நாங்கள் உறுதியாக உரைத்தோம் என்ற சதானந்தர் கூறினார். வில்லை 60,000 வீரர்கள் சுமந்து வந்து நில மகளின் முதுகு நெளிந்து போகும் படி கீழே வைத்தனர். இந்த வில்லை எடுத்து வளைக்கப் போகின்றவர் யாரோ என்று கூறி கை நடுக்கம் அடைந்தார். (கார்முகப்படலம் 624) பெண்ணைப் பெற்ற ஜனகர் தன் மகள் சீதைக்குத் திருமணம் செய்ய விரும்பினார். வில்லை வளைத்தவர்க்கே பெண் என்ற நிபந்தனையை விதித்திருந்தார். யாராலும் அந்த வில்லைத் தூக்கக் கூட முடியவில்லை. திருமணமும் தள்ளிப்போனது.
பருவமடைந்த பெண்ணுக்குத் திருமணம் தாமதமானால் அவள் தந்தையின் மனநிலை மிகவும் வருத்தமடையும். சிவதனுசின் வரலாற்றை சதானந்த முனிவர் அவையோர்க்கு சொல்லத் தொடங்குகிறார். இம்முறையாவது சிவதனுசை யாராவது முறித்தால் சீதைக்குத் திருமணம் நடைபெறும். நடைபெற வேண்டுமே என்ற கவலையோடு அந்த சிவதனுசை ஜனகர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் கவனித்த சதானந்த முனிவர், கூறத்தொடங்கினார்.

“போதகம் அனையவன் பொலிவை நோக்கி அவ் 
வேதனை தருகின்ற வில்லை நோக்கித் தன் 
மாதினை நோக்குவான் மணத்தினை நோக்கிய
கோதமன் காதலன் கூறல் மேவினான்” (கார்முகப்படலம் 625)
இராமன் வில்லை வளைத்தல்
       விசுவாமித்திரரின் குறிப்பை உணர்ந்த இராமன் வில்லைப் பார்த்து அதை நோக்கி நடந்தான். சீதை என்பவளுக்குச் சூட்டும் பொருட்டு நீட்டுகின்ற இதழ் விரிந்த மாலை என்று எண்ணும் படி மிக எளிதாக அந்த வில்லை இராமன் கையில் எடுத்தான். அக்காட்சியைக் கண்டவர் தம் இமைகள் அசைவதைத் தடுத்து இமைக்காத விழிகளோடு மேலே நடக்கப் போவதைக் காண காத்திருந்தனர். ஆனாலும் அவர்கள் இராமன் அந்த வில்லின் ஒரு முனையைத் தன் காலின் கீழ் இருக்குமாறு மிதித்துக்கொண்டு, அதன் மற்றொரு முனையை வளைத்ததையும் அதில் நாணினைப் பூட்டியதையும் அச்செயல்கள் நிகழ்ந்த வேகத்தால் காணாதவரானார்கள். அவை நிகழ்ந்த தன்மையை மனதாலும் அவர்கள் அறியவில்லை. முதலில் இராமன் அந்த வில்லை எடுத்ததைக் கண்டார்கள். உடனே அந்த வில் இற்றதை முறிந்ததைக் கேட்டார்கள். அவ்வளவுதான்.

“தடுத்தது இமையாமல் இருந்தவர் தாளில் 
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் 
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் 
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்”  (கார்முகப்படலம் 648)
வில்லோசை கேட்ட தேவர்கள்
      வில் ஒடிந்த பேரோசையால் மூவுலகத்துக்கும் தோன்றிய அச்சம் வில்முறிந்த வல்லோசையைக் கேட்டதை இவர்கள் பிரம்மன் படைத்த பெருமை மிகுந்த அண்ட கோளம் பிளந்துவிட்டது என்று கருதி கவலை அடைந்து, இப்போது நாம் யாரிடம் அடைக்கலம் கேட்டு போவோம் என்று எண்ணி வருந்தினர். தேவர்களின் நிலை இவ்வாறானால் உலகத்து மக்கள் அடைந்த நிலையை வீணாக ஏன் சொல்ல வேண்டும். இந்த பூமியைத் தாங்கிக்கொண்டு, பூமி என்னும் மரத்தின் வேர் போல விளங்கும் ஆதிசேஷன் இடி தன்மையில் விழுந்துவிட்டது என்று நினைத்து பயந்தான். (கார்முகப்படலம் 649)
பகைவருக்கு அச்சமளித்து தனக்கு வெற்றியை அளிக்கும் வேலை உடைய ஜனகன் செய்த புண்ணியம் இன்று பயனளித்து விட்டது என்று எண்ணிய தேவர்கள் பூமழை சொறிந்தார்கள். (கார்முகப்படலம் 650)

வில்லோசை கேட்ட மிதிலை மக்கள்
       மேகங்கள் பொன் மழையைப் பொழிந்தன. உலகைச் சுற்றி பறந்துள்ள கடல்கள் பலவகையான சிறந்த ரத்தினங்களை அள்ளி வீசி ஆரவாரம் செய்தன. சிறந்த முனிவர்களில் குழுக்கள் எல்லாம் நல்வாழ்த்துக்கள் கூறினார்கள். மிதிலை நகரில் ஆரவாரம் மிகுந்திருந்தது. (கார்முகப்படலம் 650, 651)
 விரும்பி அருந்தத் தக்க கள்ளைப் பருகியவர்கள் போல சிவந்து காணப்படும் கரிய மைப்பூசிய கண்களை உடைய மகளிர் தம் மனதிற்கு புண்ணைத் தந்த ஊடல் நீங்கியதால் தன் கணவரைத் தழுவிக்கொண்டனர். வீசும் அலைகளால் பரப்பளவை மேலும் விரியச் செய்யும் கடலிலே வெண்மேகங்கள் தண்ணீரைப் பருகுவது போல வறுமையுடையவர்கள் இவ்வுலகில் குவிந்திருக்கும் ஜனகனது பெருஞ்செல்வதை அவரது ஆணையின்படி வாரி சென்றார்கள்.

மிதிலை நகரத்தார் கூறிய உவகை மொழிகள்
         மிதிலை நகரத்து மக்களில் சிலர் இவன் தசரதன் புதல்வன் என்று கூறுவர். சிலர் செந்தாமரைக் கண்ணனான பெருமாளே இவன் என்று சொல்லுவர். சிலர் இவனது திருமேனி ஒரு கருமேகமே என்று உரைப்பர். சிலர் அத்திருமேனி காயாம்பூ வண்ணத்தையும் ஒத்தது என்று புகழ்வர். சிலர் இவன் மனிதன் அல்லன் என்று உறுதி செய்வர். சிலர் கயல் மீன்கள் வாழும் பாற்கடலில் வாழும் பெருமாளே இவன் என்று ஐயம் இன்றி அறைவர். சிலர் இவனை மானுடன் என்று கூறும் உலகத்தினர் அறியாமை பெற்றவர் என்று கூறுவர். (கார்முகப்படலம் 656)
இராமனின் அழகைக் காண்பதற்கு சீதைக்கு ஆயிரம் கண்கள் வேண்டும். சீதையை ஒவ்வொரு முறைக் காணவும் அதைப்போல இராமனுக்கும் ஆயிரம் கண்கள் வேண்டும். இந்த அழகனின் தம்பியினுடைய அழகையும் பாருங்கள் என்று சிலர் சொல்லுவர். அந்த அழகர்களை பெற்றுள்ள இவ்வுலகம் தவம் பெற்றுள்ளது என்பவர். சிலர் இவ்வுலகில் தோன்றிய அழகர்களான இவ்விருவரையும் நாம் காணுமாறு இந்த மிதிலை நகருக்கு அழைத்து வந்த விசுவாமித்திரனை வணங்குங்கள் என்பார் சிலர். (கார்முகப்படலம் 657)
இவைஎல்லாம் இராமன் வில்லில் நாணேற்றிய ஒலியைக் கேட்டவுடன் மிதிலை மக்கள் அடைந்த மகிழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.

அயோத்தியில் கேட்ட வில்லின் ஒலி
        ஜனகனின் தூதர்கள் திருமண ஓலையை எடுத்துக் கொண்டு சக்கரவர்த்தி தசரதனின் அரண்மனையை அடைந்து ஓலையை வணங்கி வழங்கினர். அதைப் படித்து செய்தியை அறிந்த மன்னன், வெற்றி பெற்ற வேலை உடைய தசரதன் தொகுதியான நீண்ட ஜடை முடியை உடைய சிவபெருமான், தக்கனது வேள்வியை அழித்த போது, ஏழு உலகங்களையும் வெற்றி கொண்ட வலிமையான அந்த வில்லை இராமன் முறித்த போது உண்டான பேரொளி தானா? அன்று இங்கே இடிஒலியாகக் கேட்டது என்று கூறினான்.               

“வெற்றிவேல் மன்னவன் தக்கன் வேள்வியில் 
கற்றை வாறு சடை முடிக் கணிச்சி வானவன் 
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலிகொலாம் இடித்தது ஈங்கு என்றான்” (எழுச்சிப் படலம் 685)       
        மிதிலையில் இராமன் ஒடித்த வில்லின் ஒலியானது அயோத்தியில் கேட்டது என்று தசரதன் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

மகேந்திர மலையில் கேட்ட ஒலி
        பரசுராமர் படலத்தில் திருமணம் முடித்து அயோத்தி செல்லும் வழியில் தசரதனையும், அவருடன் வந்தவர்களின் எதிரில் வந்த பரசுராமர் மறித்தார். நான் வென்ற உலகம் முழுவதையும் காசிப முனிவருக்கு தானமாகத் தந்துவிட்டேன். வெளிப்பகைகளை அடக்கி வென்ற நான், உட்பகைகளை வெல்வதற்காக மகேந்திர மலையில் தங்கி அளவில்லாத பெரிய தவங்களைச் செய்து வந்தேன். நீ சிவன் வில்லை முறித்த ஓசை, அங்கிருந்த என் செவியில் பட, சினம் கொண்டு இங்கு வந்தேன். உனக்கு வலிமை இருக்குமானால், உன்னுடன் நான் போரிடுவேன். முதலில் இந்த திருமாலின் வில்லை வாங்கி வளைத்திடு என்றான் பரசுராமன்.

“உலகமெல்லாம் முனிவதற்கு ஏந்தேன். ஒரு பகை ஒடுங்கிப் போந்தேன் 
அலகு இல் மாதவங்கள் செய்து ஓர் அருவரை இருந்தேன் ஆண்டை 
சிலையை நீ இறுத்த ஓசை செவியுறச் சீறி வந்தேன் 
மலைகுவென் வல்லை ஆகின் வாங்குதி தனுவை என்றான்”(பரசுராமப் படலம் 1242)
         
       மிதிலையில் இராமன் ஒடித்த வில்லின் ஒலியானது மகேந்திர மலையில் கேட்டது என்று பரசுராமன் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இலங்கையில் கேட்ட ஒலி
        நிந்தனைப் படலத்தில் சீதை, இராவணனிடம் கயிலை மலையை நீ எடுத்த போது கால் விரலால் அழுத்தி உன்னை வென்ற சிவபெருமான், திரிபுரங்கள் தீ பற்றி எரியும் பொருட்டு ஒப்பற்ற ஒரு அம்பை செலுத்துவதற்கு வில்லாக இருந்தது மேருமலை. அந்த மேரு மலையாகிய சிவனது வில் என் கணவனின் வலிமையைத் தாங்கும் வல்லமை அற்றதாய் முறிந்து வீழ்ந்த போது எழுந்த பேரொளியினை நீ கேட்கவில்லை போலும். அது என்ன அதிசயம் என்று கேட்கிறாள்.

“குன்று நீ எடுத்த நாள் தன் சேவடிக்கொழுந்தால் உன்னை 
வென்றவன் புரங்கள் வேவத் தனிச்சரம் துரந்த மேரு 
என் துணைக் கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த 
அன்று எழுந்த உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா”  (நிந்தனைப் படலம் 450)
         
        படைக்காட்சிப் படலத்தில் மூலப்பல சேனைகள் இலங்கை வந்து சேர்ந்தன. அவர்களை வரவேற்று நலம் விசாரித்தான் இராவணன். இராம லக்ஷ்மணர்கள் குறித்து  புஷ்கர தீவின் மன்னன் வன்னி வினவிய போது பகைவரின் வலிமையை மாலியவான் எடுத்துக் கூறுகிறான். நீங்கள் இராம லக்ஷ்மணரின் வலிமையினைப் பற்றி இங்கு வந்து கேட்பது ஏன்? இராமனின் அக்னி ஆஸ்திரத்தால் அலை வீசுகின்ற கடல் அங்கு வேகவில்லையா அது இராமனால் ஏற்பட்டது என்பதை நீங்கள் சிறிதும் அறியவில்லையோ, கங்கையில் தலையில் கொண்டுள்ள சிவனது கடுமையான வில்லை சீதையின் பொருட்டு அக்காலத்தில் முறித்ததினால் உண்டான பேரொலி உங்களது செவியில் புகவில்லையோ என்று கேட்டான்.

“இங்கு வந்து நீர் வினாயது? என் எறி திரைப் பரவை
அங்கு வெந்திலதோ சிறிது அறிந்ததும் இலிரோ,
கங்கை சூடி தன் கடுஞ்சிலை ஒடித்த அக்காலம்
உங்கள் வான்செவி புகுந்திலதோ முழங்கு ஓதை”(படைக்காட்சிப் படலம் 3,227)
         
    மிதிலையில் இராமன் ஒடித்த வில்லின் ஒலியானது இலங்கையில் கேட்டது என்று  மாலியவான் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

வில் ஒடித்த செய்தியை நீலமாலை சீதைக்குத் தெரிவித்தல்
         சீதையின் தோழி நீலமாலை மலையை ஒத்த சிவனது வில் முறிந்த செயலை நேரில் கண்டாள். அதை சீதையிடம் சொல்வதற்காக விரைவாக ஓடி வந்தாள் அந்த நீலமாலை. வந்த உடனே வழக்கம் போல சீதையின் திருவடிகளை வணங்கவில்லை. மாறாக ஆரவாரம் செய்தாள். எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவளாக ஆடினாள். பாடினாள். அதைக் கண்ட சீதை அழகு மிக்க தோழியே, உன் மனமகிழ்ச்சியையும், அந்த மகிழ்ச்சி தோன்றியதற்கான காரணமான செய்தியையும் சொல்லுக என்று கேட்டாள். உடனே நீலமாலை செய்தியை வணங்கிச் சொல்ல தொடங்கினாள். யானை, தேர், குதிரை ஆகிய படை கடல்களைப் படைத்தவனும், கல்விக் கடலை உடையவனும் மாரி போல வாரி வழங்கும் நீண்ட கைகளை உடையவராகிய தசரதன் என்னும் பெயரை உடையவன். இந்த உலகம் முழுவதையும் ஒப்பற்ற முறையில் ஆட்சி செய்து வருகிறான். அவனுடைய புதல்வன் மலர் அம்புகளைக் கொண்டு காதல் மயக்கம் உண்டாகும் மன்மதனை விட, சிறந்த அழகைப் பெற்றவன். இவை மராமரங்கள் என்று சொல்லத்தக்க தோள்களை உடையவன். பாம்பணையில் துயிலும் பரந்தாமனோ என்று ஐயுறச் செய்யும் ஆற்றலை உடையவன். அவன் பெயர் இராமன். அவன் தன் தம்பியோடும் போற்றுதலுக்குரிய விசுவாமித்திரோடும் நம் நகருக்கு வந்துள்ளான்.  வலிமை மிகுந்தவனான அந்த இராமன், புனிதராகிய சிவபெருமான் எழுத வில்லை காணும் பொருட்டு வந்துள்ளார் என்று விசுவாமித்திரர் உரைத்தான். உடனே ஜனக மன்னனின் கட்டளையின்படி வில் வந்தது. வில்லை வளைத்து மிக எளிதாக நாண் ஏற்றினான். அதைக் கண்டு விண்ணுலகம் நடுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வில்லின் ஒரு முனையைக் காலின் கீழ் மிதித்து முன்பு தனக்கு பழக்கமான படை கருவி இது என்று கண்டோர் கூறும் படி தன் தோள் வலிமையால் அதை வளைத்துவிட்டான். உடனே தேவர்கள் இராமனைப் புகழ்ந்து பூ மழை சொறிந்தார்கள். அவர்கள் அரசவை நடுக்கம் அடைய அந்த வில் முறிந்து விழுந்தது என்று நீலமாலைக் கூறி முடித்தாள். விசுவாமித்திர முனிவருடன் வந்த மேகம் போன்றவன் என்று கூறிய பிறகு அவன் செந்தாமரை கண்ணனான திருமாலைப் போன்றவன் என்றும், நீலமாலை கூறியதால், நான் காதல் கொண்ட அந்த நம்பியே அவன் என்று துணிந்து அவன் தானோ என்று முதலில் பிறந்த ஐயத்தை அகற்றிக் கொண்டாள். தாமரையை விட்டு தரணிக்கு வந்த திருமகளாகிய சிறப்பு மிக்க சீதை,

“மாத்திரை அளவில் தாள் மடுத்து முன் பயில்
சூத்திரம் இது எனத் தோளின் வாங்கினான்
ஏத்தினர் இமையவர் இழிந்த பூ மழை
வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே” (கார்முகப்படலம் 675)         
     மிதிலையில் இராமன் வில்லை ஒடித்து போது எழுந்த ஓசை, அதே மிதிலையில் அரண்மனையில் இருந்த சீதைக்கு கேட்கவில்லையாம். இராமன் மேல் அவள் கொண்ட காதல் மயக்கத்தில் இருந்ததால் வில் ஓடித்தபோது எழுந்த ஓசை சீதைக்குக் கேட்கவில்லை போலும். தோழி நீலமாலை வந்து சொன்ன பின்புதான் தெரிந்தது என்று கம்பர் நாடகநயம் போலும் குறிப்பிடுகிறார். (காதல் மயக்கத்தில் அவன் நினைவிலேயே இருந்ததால் கேட்காதோ என்னவோ)

முடிவுரை 
         ஜனகனின் அரண்மனை மண்டபத்தில் இருந்த சிவபெருமான் வைத்திருந்த திரியம்பகம் என்ற வில்லை இராமன் எடுத்து வளைத்தான். வில்லும் முறிந்தது. அந்தப் பேரொலியைக் கேட்ட வானத்து தேவர்களும் நடுங்கினர் என்று கூறுகிறார் கம்பர். அப்படியானால் அந்த பேரொலி விண்ணுலகம் வரை கேட்டது என்று ஆகிறது. தூதர் கொண்டு வந்த ஓலையைப் படித்து விவரம் அறிந்த மன்னன் தசரதன் அன்று கேட்ட ஒலி இதுதானோ என்ற போது மிதிலையில் ஒடித்த வில்லோசை அயோத்தி வரை கேட்டது என்பது புலப்படுகிறது. பரசுராமன் மகேந்திரமலையில் தவம் செய்து கொண்டிருந்தபோது வில்லோசை கேட்டதால் தான் நான் இங்கு வந்தேன் என்ற போது, மிதிலையில் ஒடித்த ஓசை மகேந்திரமலை வரை கேட்டது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. அசோகவனத்தில் இருந்த சீதை இராவணனிடம் இராமன் வளைத்த வில்லோசை உனக்கு அன்று கேட்கவில்லையோ (காட்டிற்கு இராமருடன் சீதை வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. அத்தனை வருடங்களுக்கு முன் கேட்கப்பட்ட ஓசை உனக்கு  கேட்கவில்லையோ என்கிறாள்). படைக்காட்சிப் படலத்தில் இராவணனின் பாட்டனார் புஷ்பகர தீவின் மன்னன் வன்னியிடம் சீதையை மணக்கும் பொருட்டாக அன்று இராமன் சிவபெருமானின் வில்லை வளைத்த ஓசை உங்களுக்கு கேட்கவில்லையோ என்று கேட்கிறான். இதிலிருந்து இராமன் வளைத்த வில்லின் ஓசை இலங்கை வரை கேட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதே மிதிலையின் அரண்மனையில் இருந்த சீதைக்கு, இராமன் வில்லை வளைத்த போது எழுந்த பேரொலி குறித்த செய்தியை தோழி நீலமாலை  அவளுக்கு கூறினாள் என்றும், கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.செல்வம்.கோ,கம்பன் புதையல்,   சாரு பதிப்பகம், சென்னை 2016.     

2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், சாரு பதிப்பகம், சென்னை,2016.

4.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி  2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர்

அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II)

மீனம்பாக்கம்,
சென்னை 600061.

 

ஆசிரியர்|முனைவர் இரா.செல்வராணி

ஆசிரியர் - முனைவர் இரா.செல்வராணி

✒️ அன்னையிடம் 


விடைபெற்று காத்திருப்பேன்


வகுப்பறையில் உனக்காக..!


 

✒️உன் முகம் காணும்


ஆவலில் – நீ


வகுப்பில் நுழைந்ததும்


மனம் துள்ளி விளையாடுதே..!


 

✒️அகம் மகிழ்ந்துதான் போவேன்


உன் புடவை நிறத்தாலும்


அழகாலும்


என்னை கவரச் செய்வாய்..!

✒️பேச்சால் சொக்கித்தான் போவேன்


பாடங்களால்,


பண்பாளன் ஆக்குவாய்..!


 

✒️நானும் பக்குவமாகக்


கற்றுக் கொள்வேன்


சிரித்த வார்த்தைகளால்


சிந்திக்க வைத்து விடுவீர்கள்..!


 

✒️மாலையில் நீ கிளம்ப


நான் கலங்குவேன்


இன்னும் சற்று நேரம்


உன்னுடன் இருக்கலாமென்று..!


 

✒️மறுநாள் காத்திருப்பேன்


வகுப்பறையில் உனக்காக


அன்பால் என்னைப்


படியத்தான் வைத்து விடுகிறீர்..!


 

✒️படிப்பிலும் பண்பிலும்


உயர்த்தி மகிழ்வாய்!


உனக்கும் எனக்கும் இருக்கும்


அன்பு விலை மதிப்பற்றது..!


 

✒️உன் தாய்மை உணர்வு


என்னை தலை நிமிர


வைத்து விடுகிறது..!


 

✒️கற்பித்த உன்னால்


பெற்றவளின்


மனம் குளிர்ந்துதான் போகிறது..!

✒️எனக்கோ பெருமை


பல வந்து சேருகிறது..!


கவிதையின் ஆசிரியர்

முனைவர் இரா.செல்வராணி

உதவிப் பேராசிரியர்

தமிழ்த் துறை

ஜெ.எச.ஏ.அகர்சன் கல்லூரி

சென்னை -60

 

முருங்கை கீரையும் அம்புஜம் மாமியும்|ரா. ஷர்மிளா

முருங்கை கீரையும் அம்புஜம் மாமியும் - ரா. ஷர்மிளா
       “டம் டம் டமார்” காலை ஐந்து மணிக்கு ஒரே சத்தம். அம்புஜம் மாமி சமையல் வாசனை தெரு முழுக்க வரும். ஆனால் கொஞ்சம் சவுண்ட் பார்ட்டி. கையும் வாயும் சும்மா இருக்காது. பாத்திரம் எடுத்தா கீழே போடாம வேலை நடக்காது. சுறுசுறுப்பும், ரசனையும் மாமிக்கு ரொம்ப ஜாஸ்தி.
       
       நாராயண சாமி தூங்கி எழுந்தவுடன் மாமி பேச்சு ஒரு கும்மி பாட்டு மாதிரி இருக்கும். ராத்திரி தாலாட்டு பாட்டு கேட்பதும் காலைல கும்மி பாட்டு கேட்பதும் நாராயண ஸ்வாமிக்கு பழக்கமான ஒன்று.
       
      பெருமாளுக்கு காலைல சுப்ரபாதம், இரவு லலிதா சஹஸ்ரநாமம் மாதிரி. நாராயண ஸ்வாமி வீட்டுல காலைல கும்மி இரவு ரம்யமான தாலாட்டு. அந்த இட்லி, கொட்சு, தோசை, குருமா, சப்பாத்தி, பருப்பு எல்லாம் நினைத்தாலே தூக்கம் வரும். அது ருசியா மயக்கமானு யாருக்கும் தெரியாது. தரமான சாப்பாடு சாப்பிட்டால் தூக்கம் தானே வரும். இது அனுபவத்தில் உண்மை. அம்புஜம் மாமி குரல் கேட்டது.
       
     “வந்துட்டியா எனக்கும் உனக்கும் என்ன ஒரு பொருத்தம். நீயும் நானும் இல்லேன்னா சமையல் இல்லை. நான் எத்தனை நேரம் கஷ்டப்படணும் உன்னோட. நான் மனசுல நினைச்ச உடனே வந்துடரியே. காலைல உன் கலர் எவ்வளவு பிரெஷ் சா இருக்கு. உன் பெயர் கேட்டால் எனக்கு என் காலை வேலைகள் நியாபகம் வருது. பிள்ளையார் மாதிரி நீ தான் என் முதல் வேலை. நீ ஏன் இவ்வளவு வேலை குடுக்கறே? சில பேர் வீட்டுல வேலை கம்மி எங்க வீட்டுல உன்னால தான் வேலை ஜாஸ்தி”.
       
        நாராயண ஸ்வாமிக்கு கோவம் வந்தது. தினமும் இப்படி மகன் ரமேஷ்சை வசை பாடி எழுப்புவது தப்பு. அவன் காலை நேரம் இனிமையாக இருக்க வேண்டும். சரியான நேரம் வந்தால் அவளிடம் சொல்லணும்னு நினைத்தார்.  அம்புஜம் மாமி, நாராயண ஸ்வாமிக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் பெயர் ரமேஷ். இரண்டாம் மகன் பெயர் கிரிஷ். ரெண்டு பெரும் ஸ்கூல் படிக்கறாங்க. நாராயண ஸ்வாமி ஆடிட்டர் வேலை பார்ப்பதால் தனி ரூம் ல படுப்பார். ராத்திரி லேட்டா டா படுப்பார். ஆபீஸ் வேலை அதிகமா இருக்கும்.
       
      குழந்தைகள் தனி ரூம்ல படுப்பாங்க. அம்புஜம் மாமி அந்த ஏரியால பேமஸ். அவங்க ஊறுகாய், கருவேப்பிலை போடி, முருங்கை கீரை போடி, பருப்பு போடி செய்து சேல்ஸ் பண்ணுவாங்க. கை மணம் அதிகம்.
நாராயண ஸ்வாமி கிண்டல் அடிப்பார் “நீ பெரிய பிசினஸ் வுமன். உன் பிசினஸ் மைண்ட் சும்மா இருக்காது”.
       
அம்புஜம்: நான் டீச்சர் ட்ரைனிங் எடுத்து டீச்சர் ஆகணும் ன்னு நினைச்சேன். என்ன பண்றது! கடமை வீட்டிலேயே என்னை கட்டி போட்டு விட்டது. சமையல் பிசினஸ் பண்ண எனக்கு ரொம்ப புடிச்சு இருக்குங்க.
       
நாராயண ஸ்வாமி: இந்த கம்ப்யூட்டர் காலத்துலே வேலை பண்றத விட பிசினஸ் பண்றது தான் பெஸ்ட், அம்புஜம். ஊறுகா போட்டு குழந்தைகளை டாக்டர் படிக்க வச்ச பெண் இன்னிக்கு நியூஸ்பேப்பர் ஹெட்லைன்ஸ் ல பார்த்தேன்.
  
அம்புஜம்: பெண்கள் சுயமாக இருப்பது பெரிய விஷயம்.
       
நாராயண ஸ்வாமி: பெண்கள் அறிவால் சாதிப்பது அழகு தான். வள்ளுவர் சொல்லி இருக்கார்: “பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
  பெண்ணே பெருமை உடைத்து”. இதற்கு அர்த்தம், ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.
       
அம்புஜம்: உண்மை தான். ஒரு ஆண் தன் குழந்தைகளை கண்டிப்பாக வளர்ப்பான். பெண் மானமுள்ளவர்களாக வளர்ப்பாள். தாய், தந்தை இருவரும் ஒரு குழந்தைக்கு முக்கியம்.
சரி, சரி நேரம் ஆச்சு நான் குளிக்க போறேன். எனக்கு வேலை இருக்கு.
நாராயண ஸ்வாமி அலுவலக வேலைகளில் மூழ்கி போனார்.
அம்புஜம் சமையல் மற்றும் குழந்தைகள் வேலையில் கவனம் செலுத்தினாள்.
 ரமேஷ், கிரிஷ் இருவரின் ஸ்கூல் பிரண்ட்ஸ் வீட்டுக்கு வந்தார்கள். ரூம்ல ஒரே சத்தம். லேப்டாப் வச்சிட்டு ஹாட்ஸ்டார்ல ஏதோ பார்த்துட்டு இருந்தார்கள்.

ரமேஷ்: கிரிக்கெட் ல ஆல் ரவுண்டர் தான் பெரிய விஷயம்.
கிரிஷ்: எனக்கு பேட்டிங் தான் புடிக்கும்.

ரமேஷ்: எனக்கு ரவீந்திர ஜடேஜா தான் புடிக்கும். அவரு மேட்ச் சூப்பர் ரா இருக்கும்.
கிரிஷ்: பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் எப்படி ஆடினார் இல்ல. அவரு ஒரு சூப்பர் பிளேயர் டா.

கிரிஷ்: இந்தியன் பிளேயர் ரோஹித் ஷர்மாவும் சூப்பர் தான். அவரு மேட்ச் பார்க்க செமயா இருக்கும். எல்லாரும் சந்தோசமாக பேசிக் கொண்டு இருந்தார்கள்.
  நாராயண ஸ்வாமி ஆபீஸ் வேலை ஒரு புறமும் மகன்கள் பேசுவது ஒரு புறமும் கேட்டு கொண்டு இருந்தார். அடுத்த நாள் ஞாயிறு. குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவு. லீவு அன்னிக்கு வெங்காயம் போட்டு சாம்பார், கருவேப்பிலை சட்னி, கீரை கூட்டு, அவியல், பருப்பு உசிலி, உருளை கரி ன்னு நிறைய மெனு இருக்கும். பார்ப்பனர்கள் குடும்பத்தில் சாம்பார், சட்னி, உருளை கரி தான் ஸ்பெஷல் மீல்ஸ்.
நாராயண ஸ்வாமி ஆடிட்டர் வேலை பார்ப்பதால் வெளி ஊருக்கு போவார். ஹோட்டலில் சாப்பிடுவார். வீட்டு சாப்பாடு அவருக்கு ரொம்ப பிடிக்கும். ஹோட்டல் சாப்பாடு வேற வழி இல்லாம சாப்பிடுவார். கஷாயம், லேகியம், சாலட், பழம்ன்னு ஹெல்த்தியா சாப்பிடுவார். ஹோட்டல் சாப்பாடு ஜீரணம் ஆகாது. சத்தும் கம்மியா இருக்கும். வீட்டு சாப்பாடு ருசி அதிகம், சத்தும் அதிகம். சாம்பார், பொரியல், கூட்டு, துவையல் ன்னு நல்லா சாப்பிடுவார்.
       
ரமேஷ், கிரிஷ் காலைல லேட்டா எழுந்துப்பாங்க. எழுந்த உடனே அப்பா வோட கிரிக்கெட் விளையாட்டு, அப்புறம் சாப்பாடு, அம்மா வோட கதை நேரம், பிரண்ட்ஸ் வீடு, பிரண்ட்ஸ் கூட அரட்டைனு ஓடி போய்டும். ஞாயிறு காலை ஐந்து மணி
       
அம்புஜம் மாமி சவுண்ட் குடுக்க ஆரம்பிசுட்டாங்க. கும்மி பாட்டு ஆரம்பிச்சாச்சு. “என்னை பார்த்தால் உனக்கு எப்படி இருக்கு. நான் என்ன வேலைக்காரி ‘யா? உன் ஒருத்தனால மத்த வேலை செய்ய முடியல. இப்படி என்ன ஏன் கஷ்டப்படுத்தறே?”
நாராயண ஸ்வாமிக்கு கோவம் வந்தது. சும்மா குழந்தைகளை கறிச்சு கொட்டறா. அம்மா அப்படினா வேலைக்காரி தான். இதுல என்ன குறைஞ்சி போரா இவ. சும்மா ஏதாவது வாய்க்கு வந்தபடி பேசரா. இன்னைக்கு சொல்லணும். இப்படி பேசாதேன்னு. மனதில் ஒத்திகை பார்த்து விட்டு ரூம் வெளியில் வந்தார் நாராயண ஸ்வாமி.
நாராயண ஸ்வாமி: ஏண்டி அம்புஜம், ஏன் இப்படி சத்தம் போடறே? காலை வேலைல தூங்க விட மாட்டியா?

அம்புஜம்: நீங்க ஏன் என் பேச்சை கேட்கறீங்க. ஏதாவது பா ட்டு போட்டு கேளுங்க.
நாராயண ஸ்வாமி: உன் பாட்டு கேட்டா தான் சுறுசுறுப்பா இருக்கு.

அம்புஜம்: சரி அப்போ கேளுங்க.
நாராயண ஸ்வாமி: நீ ஏன் குழந்தைகளை காலை நேரத்தில் திட்டுறே? காலைல நல்ல வார்த்தை பேசணும்னு உனக்கு உங்க வீட்டுல சொல்லி தரலையா?
அம்புஜம்: அது சரி, நான் என் சொந்த கதை சோக கதை சொன்னா, நீங்க குழந்தைகளை திட்டறேன்னு நினைச்சுட்டீங்களா. நான் இந்த முருங்கை கீரையோட பேசினேன்.

நாராயண ஸ்வாமி: என்ன? கீரையோட பேசினாயா?
அம்புஜம்: ஆமாம் நான் கீரை கூட, பாத்திரம் கூட பேசுவேன். என் வேலை அவங்களோட தானே.

நாராயண ஸ்வாமி: சரி, ஆனால் ஏன் அழகா பிரெஷ் சா இருக்கேனு சொன்னே? ன்னு கேட்டுட்டு சிரித்தார்.

அம்புஜம்: ஆமாம், முருங்கை கீரை பிரெஷ் சா இருந்தா காலைல வாங்கி கூட்டு பண்ணுவேன். இரும்பு சத்து இருக்கு. ரொம்ப நல்லது. கீரை அழகா இருக்கு. ஆனால் வேலை அதிகம் ஆகிடுது. அதான் சொன்னேன்.

நாராயண ஸ்வாமி: ஆமாம், நீ சொல்றதும் சரி தான்.  நாம வேஜிடெரியன் சாப்பாடு சப்படறோம். கீரை சாப்பிட்டா நல்லது.

அம்புஜம்: சுதந்திரம், பாதுகாப்பு இரண்டுல ஏதாவது ஒன்னு தான் வாழ்க்கைல இருக்கும்ன்னு நான் ஒரு நீதி கதை படிச்சேன். அது தான் எனக்கு ஞாபகம் வருது. வேலை செய்யாம சுதந்திரமா இருந்தால் சோம்பேறித்தனமா இருக்கு. வேலை செஞ்சா அலுப்பா இருக்கு. நான் சுதந்திரமா இருக்கறத விட அங்கீகாரத்துடன் இருப்பது தான் பெரிசுன்னு நினைக்கறேன்.

நாராயண ஸ்வாமி: நீ குழந்தைகளை தான் திட்டறேன்னு  நினைச்சு நான் வருத்தப்பட்டேன். உன் அன்பான கண்டிப்பு “மழை சாரல்” மாதிரி. அது கஷ்டமான சுகம் என்றார்.
இவர்கள் பேசுவதை கேட்ட ரமேஷ் தூக்கத்தில் இருந்து எழுந்து ரூம் வெளியில் வந்தான். அப்பா, அம்மா திட்டினால் சிரிப்பு தான் வரும். கோவம் வராது என்றான்.

நாராயண ஸ்வாமி: உண்மை தான். அவள் திட்டும் பொழுது “வஞ்சப்புகழ்ச்சி அணி” உபயோகிப்பாள். சொல்ல வந்ததை அழகும், அன்பும் கலந்து சொல்வாள்.

ரமேஷ்: கரெக்ட்டா சொன்னீங்கப்பா. அம்மா திட்டினால் கோவம் வராது. அப்பா திட்டினால் தான் கோவம் வரும்.

அம்புஜம்: அம்மாவின் கண்டிப்பு ஆர்வத்தையும், அப்பாவின் கண்டிப்பு வேகத்தையம் தரும். அது தான் கடவுளின் படைப்பின் ரகசியம் என்றாள்.

ரமேஷ்: உண்மை தான், அம்மா, என்றான். அம்மாவை கட்டி அணைத்து முத்தம் இட்டான்.

அம்புஜம்: இந்த முருங்கை கீரை ஒரு உண்மை கதையை உருவாக்கிவிட்டது என்றாள் சிரித்துக்கொண்டே.
நாராயண ஸ்வாமி: ஆமாம், “முருங்கை கீரை கதை” நல்ல கதை என்றார். சொந்தக் காரங்க வீட்டுக்கு வந்தா சொல்ல இன்டெரெஸ்ட்டிங்கா ஏதாவது வேணுமே. சும்மா இருந்த வாய்க்கு அவல் நான் குடுத்துட்டேனா? சிரித்து கொண்டே குளிக்க சென்றார் நாராயண ஸ்வாமி.
அம்புஜம் மாமிக்கு சமையல் வேலையும், குடும்ப பேச்சும் தான் சந்தோஷம். அவள் உலகம் அது தான். ஆனால் தன் உலகத்தை அழகாகவும், சுறுசுறுப்பாகவும் அவள் வைத்து கொண்டு இருந்தாள். அதனால் தான் அனைவரும் அவளை விரும்பினார்கள்.

சிறுகதையின் ஆசிரியர்
ரா. ஷர்மிளா,
ஆதம்பாக்கம்.

 

Aadhavan Pataippukalil Kataimantarkalum Katcimoliyum|Dr.S.Balaraman

Abstract
               
         Visual language penetrates and moves the limbs of every viewer in society. The consciousness of our society living in this environment is reflected through the characters of novels. The creators and the characters are deeply involved in the background of the screen by their nature. Therefore, we have been encouraged to talk about psychological theory. The film industry seeks to explain the characters based on this theoretical understanding. The characters who are exposed to the screen are united under general psychology. This article attempts to see the effect of the visual on the characters’ shape and behavior and the creators’ perspective on the characters. One of the characteristics that is inseparable from the activities of the characters in the works is visual language. They actively follow this visual language. The creators reflect the internal and external environmental changes that occur due to the penetration and intense exposure of the screen. Visual language is used as a tool to determine the environment through the actions of the characters in the story and to evaluate the characters through that action. The creators stand as a document to destroy what has been transformed into an inevitable consumer commodity. Visual language has been of great help in building the character of the characters. Visual language is a weapon that the creators have taken to create a specific environment or a specific environment by contrasting the character’s character and good and bad. They give visual language to the characters in a way that suits the central theme and make them travel. Although the screen plays an important role in building the character field and determining the environment, it is fabricated in direct opposition to the screen.

Keyword               
Kataimantarkal, Katcimoli, Aadhavan, My Name is Ramasesh, Paper Flowers, Screen, Cinema, Storytellers, Novel


ஆதவன் படைப்புகளில் கதைமாந்தர்களும் காட்சிமொழியும்
         

     ஆதவனின் ‘என் பெயர் ராமசேசன்’, ‘காகித மலர்கள்’ ஆகிய இரு புதினங்களை முன்வைத்து இக்கட்டுரை பேச முனைந்துள்ளது. “நிஜத்தின் சாயல் உள்ள – ஆனால் நிஜமற்ற – நினைவுகளில் அவன் அடிக்கடி முழ்கிப் போகிறான். பரிட்சைக்குப் படிக்கும் நிர்பந்தத்தினால் அவன் பல மணிநேரம் தணித்து விடப்படுவதுதான் காரணம். வெளியே சுற்றிக்கொண்டு புதிய புதிய காட்சிகளில் தன்னை ஆழ்த்திக்கொள்ள முடிந்தால் நினைவுகள் இப்படித் தொந்தரவு செய்யாது. திடீர் திடீரென்று என்னவெல்லாம் பழைய காட்சிகள் அவன் மனத்தளவிலிருந்து மேலே கிளம்புகின்றன! இவை தன் மனத்திலிருந்ததுகூட அவனுக்கு தெரியாது. அவன் பார்த்திருந்த பல படங்களின் காட்சிகள் சம்மந்த சம்மந்தமில்லாமல் கோணல் மாணலாக நினைவு வருகின்றன. பாலைவனம், கடற்கரைகள்,சோலைகள், பனிமலைகள், அடர்ந்த காடுகள், சமவெளிகள், சூறாவளியில் தத்தளிக்கும் ஒரு கப்பல், குண்டு பட்டு எரிந்தவாறே விழும் விமானம், மூர்க்கமான வேகத்துடன் ஓடி வரும் ஒரு காண்டாமிருகம், பியூகிள் ஒலி குதிரைகளின் மேல் ஆரோகணித்து எதிர்ரெதிர் திசைகளில் இருந்து வேகமாக ஒருவரையொருவர் நெருங்கி போரிடத் தொடங்கும் படைகள், ஓடி வரும்போதே பீரங்கி குண்டு பட்டு சாயும் குதிரைகள், வீரர்கள், வரிசையாக சகதியிலும் மேடுபள்ளங்களிலும் ஊர்ந்து செல்லும் டாங்குகள், குண்டு மலை பொழிந்த வாறே பறந்து செல்லும் விமானங்கள், வலது புறமும் இடது புறமும் கைகளை வீசி சுழ்ற்றி ஓரே சமயத்தில் ஐந்தாறு பேறை வீழ்;த்தி விட்டு ஓட்டல் அறையிலிருந்து ஜன்னல் வழியே குதித்து ஓடும் ஒரு சீக்ரெட் ஏஜென்ட் கிரிச் கிரிச் என்று வளைந்து வளைந்து திரும்பிப் படு வேகமாக ஒன்றையொன்று துரத்திச் செல்லும் கார்கள், எல்லா உடைகளையும் களைத்து விட்டு கட்டிலில் போர்வைக்குள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி காதல் ஹிரோவும், ஹிரோயினும், நீச்சல் உடையணிந்த அழகிகள், நாஜிகாலின் கைதி முகாமிலிருந்து தப்பி ஓடும் அமெரிக்க, பிரிட்டிக்ஷ், பிரென்சு வீரர்கள், அப்படி ஓடும்போது சுடப்பட்டு விழும் ஒருவன் போரில் இறந்த காதலனுக்காக கண்ணீர் விடும் காதலி, குளிக்கும் தொட்டிக்குள் சோப்பு நுரைகளுக்கு மேலாக மார்பகங்களின் தொடக்கம் லேசாக ஆவலைத் தூண்டும் வண்ணம் தெரியும் படி ஒரு அழகி,வால்டஸ் இசைக்கு ஏற்ப  மெல்ல நடனமாடும் பதினெட்டாம் நூற்றாண்டு நாயகியும்; நாயகனும் பாப் இசைக்கு ஏற்ப துரித கதியில் நடனமாடும் இருபதாம் நூற்றாண்டு நாயகனும், நாயகியும், கஃபேயில் உட்கார்ந்து இருக்கும் நாயகனும், நாயகியும், படகில் செல்லும் நீச்சல் அடிக்கும், பணியில் சரிக்கி விளையாடும் திடிர திடிரென்று ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு முத்தமிடும் நாயகனும் நாயகியும், டிக்ஷ்யூ, டிக்ஷ்யூ என்று ஸ்டைலாக சுடும்  ‘வெஸ்டர்ன்’  கதா நாயகர்கள் ஸ்டெஜ் கோச் சிவபிந்தியர்கள், புழுதியைக் கிளப்பி கொண்டும் ஓடும் குதிரைகள் விர் விர் என பாயும் அம்புகள், வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் பாலங்கள், தண்டவாளங்கள், அலங்கோலமாக சரிந்து விழும் ஒரு ரயில் வண்டி, அழும் குழந்தையொன்று, இரத்தம், ஆம்புலன்ஸ், சைரன் ஒலி, ஏர் ரெயிட் க்ஷெல்டர்களை நோக்கி ஓடும் மனிதரர்கள், மது கோப்பையை உயர்;த்தி டேஸ்ட் செய்யும் ஒர் கர்ணல், யுனிபாரம் விசலாமான டைனீங் ஹால், நீண்ட வராந்தாக்கள், எண்ணற்ற படிக்கட்டுகள், அல்கேக்ஷன்நாய், பியானோ வாசிக்கும் ஒருவன், நடனமாடும் மிலிட்டரி ஆபிசர்களும் அவர்களுடைய மனைவியரும் அவசரமாக ஓடிவந்து சலியுட் அடித்து நிற்கும் ஒருவன், மலை சரிவில் இருந்து கீழே கீழே விழுந்து நொறுங்கும் ஒரு ஜீப், அடர்த்தியான பனியில் திறந்த வெளியின் நெருப்பு மூட்டி இறைச்சுடும் குளிர்காயும் மனிதர்கள், விறக்தியுடன் சிரிக்கும் ஒரு தாடிக்காரன்.

          இப்படி எத்தனை எத்தனை காட்சிகள்! பல  மாலை நேரங்களில் பகல் நேரங்களில், காலை நேரங்களில் சினிமா தியேட்டரின் இருட்டுக்குள் அமர்ந்து அவன் பார்த்த காட்சிகள். காலை  ஆட்டம் வெளியே வரும்போது பளிச் என்று வெயில் கண்ணை  கூசும் பரபரப்புடன் வாகனங்களும் மக்களும் விரைந்து கொண்டிருப்பார்கள். மேட்டனி ஆட்டம் முடிந்து வெளியே வரும் போது வெயில் மறைந்து தெரு விளக்குகளும் கடை விளக்குகளும் ஏற்றப்பட்டு ஜே, ஜே என்று இருக்கும். மக்கள் பரபரப்பின்றி நிதானமாக நகர்ந்து கொண்டிருப்பார்கள். மாலை ஆட்;டம் முடிந்து வெளியே வரும் போது சாலையில் வண்டி போக்குவரத்து குறைந்து இருக்கும். சிக்னல் விளக்குகள் அணைந்து இருக்கும். கடைகள் மூடியிருக்கும். மக்கள் நடமாட்டம் அடங்க தொடங்கியிருக்கும். ஆனால் இந்த வெளியுலக சூழ்நிலையில் உடனடியாக தன்னை ஆழ்த்திக் கொள்ள அவனால் முடியாது. அநேகமாக அந்த நாளின் எஞ்சிய பகுதியில் அவன் பார்த்த சினிமாவின் சூழ்நிலையிலேயே தான் அவன் – மனதளவில் – அவன் வாழ்ந்து கொண்டிருப்பான். எனவே அவனைச் சுற்றியுள்ள நிஜங்களை தவறவிடுவான் என்று காகித மலர்கள் பிரதியில் ஆதவன் கூறுகிறார்.

நுகர்வும் காட்சிமொழியும்         
     காட்சிமொழியானது உணர்ச்சிகளில் ஊடுருவுகின்றது. மனமானது போதைகளுக்கு அடிமைபடுவது போல காட்சிக்கும் அடிமையாகுகிறது. போதையை ஏற்றும் அல்லது போதைக்குச் சமானமாகக் காட்சிமொழியைக் காண்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காட்சிமொழிக்கு மனம் வயப்படுதல் என்பது நரம்பியல் செயல் திரிபுகளாகப் பார்க்கப்படுகின்றது. இது நனவிலி மனத்தின் வெளிப்பாட்டு முறையாகவே உள்ளது. காட்சி மொழிகளால் அமுக்கப்பட்டவற்றை நுகர்ந்தவற்றை மீண்டும் மீண்டும் சுய நினைவால் நுகர்ந்து புளகாங்கிதம் அடைகின்றது மனம். இதனால் காட்சி மொழிக்கும் ஆழ்மனதுக்கும் ஊடாடல் வலுப்பெறுகின்றது. காட்சி மொழிப் படைப்பும் அதுசார் செயலிகளும் மோகத்தின் உச்சமாகும். பார்வையாளனை நரம்பியல் செயல் திரிபு கொண்டவனாக விநோதப்படுத்துகின்றது காட்சிமொழி. புறவுலகத் தூண்டுதல்களின் வலிமையினால் மட்டும் தூங்கும் ஒருவன் எழுந்து விடுவதில்லை. அவனை எழுப்ப உளவியல் ரீதியான மனதோடு சம்பந்தப்பட்ட ஒரு சூழல் தேவைப்படுகிறது. தூங்கும் ஒருவனை ஏதோ ஒரு வார்த்தையைச் சொல்லி எழுப்ப முடியாது. ஆனால் அவன் பெயரைச் சொல்லி கூப்பிட்டால் எழுந்து விடுவான். அவனுக்கு மிகவும் பிடித்த சினிமா நடிகையின் பெயரைச் சொன்னாலும் எழுந்து விடலாம். ஏனெனில் அவர் அவள் மனதோடு சம்பந்தப்பட்டவர்கள் என்கிறது உள அலசல். காட்சிகள், கருத்துகள், உணர்ச்சிகள், வசனங்கள், எல்லாம் திரைப்படங்களில் ஒன்றோடொன்று கோர்க்கப்பட்டு வரிசைக்கிரமாக இருப்பதும் அதனை ஆழ்மனம் நினைவு கொள்வதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். விழிப்பு நிலையில் ஏற்படும் ஒரு விருப்பம் ஆழ்மனதில் உள்ள விருப்பத்தோடு ஒன்றுபடும்போது தான் அது விருப்ப நிறைவேற்றக் கனவை உருவாக்கும் என்று ஃராய்ட் கூறுவது கவனத்திற்குரியது.
கனவுக்காட்சியும் காட்சிமொழியும்
         
       ‘கனவு என்பது அமுக்கப்பட்ட விருப்பத்தின் புனைவேட நிறைவேற்றம்’ என்கிறது ஃப்ராய்டியம் கனவுகள் ஒவ்வொன்றும் புதிர்மைப் பண்புள்ளவை. கனவுகளைக் காட்சிப்புதிர் என்றும் கூறுகிறார். கனவு எண்ணங்கள் காட்சிப் படிமங்களாக வெளிப்படும் செயல் கனவு உருவாக்கத்திற்கு சிறப்பு மிக்கது. நனவிலி வேட்கைகள் பாலுணர்ச்சியின் படைப்புகளாகும். அதனால் நனவிலியை ‘வேட்கைகளின் கிடங்காக’ ஃப்ராய்ட் காண்கிறார். இந்த வேட்கைகள் தான் விருப்பங்களை உற்பத்திச் செய்கின்றன. ஆனால் விருப்பங்கள் அமுக்கத்திற்குள்ளாகின்றன. அமுக்கப்பட்ட விருப்பங்கள் தம்மை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்ற ஊக்கப்பாட்டை பெற முயல்கிறது. விருப்பங்களை செயல் வடிவில் வெளிப்படுத்த முடியா விட்டாலும் உருவெளி தோற்றத்தில் வெளிப்படுத்துகின்றது. நனவிலி இச்செயல்பாடுகளே கனவுகாட்சிகளாக மாறுகின்றன.
         
       கனவுகாட்சிகளில் குறியீட்டாக்கம் நனவிலிக் குறியீட்டாக்கத்தின் மறுசொல் என்பர். நனவிலி எண்ணங்களை மாற்றத்தின் வழியாக வெளிப்படுத்துவதால்தான் கனவுக் குறியீட்டாக்கங்கள் நிகழ்கின்றன. நனவிலி எண்ணங்கள் என்று சொல்லப்படுகின்ற கனவு எண்ணங்கள் தம்மை நேரடியாக வெளிப்படுத்த முடியாததால் மற்ற எண்ணங்களை தமக்கு பதிலாக கொண்டு வெளிப்படுகின்றன. கனவு குறியீட்டாக்கத்தின் பதிலீட்டு உருவாக்கம் நிகழ்கின்றது. குறியிடுகள் ஒவ்வொன்றும் நனவிலி மூலகங்களின் நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன. இக்குறியீட்டாக்கத்தின் அமுக்கப்பட்ட பால் உணர்ச்சியும் பால் உறுப்புகளும் முக்கிய பங்காற்றுகின்றன.
         
        ஃப்ராய்டியக் குறியிட்டின்படி சமதளப் பொருட்கள் அனைத்தும் பெண்ணைக் குறிப்பதாகும். கனவுக் காட்சியில் பீரங்கி, ஏவுகணை, உடையில் கோட், துப்பாக்கி, பாலம், அம்பு, விமானம், கப்பல், வாள் போன்றவை வந்தால்  அவை ஆண்குறி குறியீடுகளாகும். மேலும் விலங்குகள் அனைத்தும் ஆண் குறியைக் குறிக்கும். குதிரை சவாரி, நடனம், இசை, பறந்து செல்வதால் கலவிக்கான குறியீடாகும். கப்பல், பெட்டி, சூ, சுரங்கம், கால்வாய், வாய்க்கால், பை, செருப்பு, மோதிரம் போன்றவை பெண் குறியீடுகளாகும். இப்படி கனவு காட்சியில் வரும் குறியீடுகள் எண்ணலடங்காதவை என்று ஃப்ராய்ட் கூறுகிறார்.
         
     ஆதவனின் பிரதியில் கனவு காட்சி, கற்பனைக் காட்சி பதிவுகளில் காட்சிமொழியே பிரதானமாக இடம்பெற்றுள்ளன. இக்காட்சி மொழியில் ஃப்ராய்டின் கனவு காட்சி குறியீடுகளோடு பொருத்தி பார்க்கலாம். காட்சி மொழியில் கனவு காட்சி குறியிடுகளே முழுமையாக நிறைந்துள்ளன. அக்குறியீடுகளே மீண்டும் கனவு காட்சிகளாக வெளிப்பட்டுள்ளன. இங்கு கனவுக்காட்சி குறியீடுகளும், காட்சி மொழிக் கூறுகளும் பின்னிப் பிணைந்து பயனிக்கின்றன என்பது கண்கூடு. அமுக்கப்பட்ட நிறைவேற்றப்படாத கனவு காட்சிகளையும் அதன் குறியீட்டுத்தன்மையும் உற்பத்தி செய்யும் சாதனமாக உள்ளது. காட்சி மொழி, காட்சிமொழியில் வெளிப்படுகின்ற உருப்படிமங்களை உள அறிஞர்கள் நனவிலியில் அமுக்கப்பட்ட விருப்பத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாகப் பார்க்கின்றனர் நனவிலியில் உள்ள பால் உணர்ச்சியின் மறைமுக வெளிப்பாடாகக் காட்சிமொழி வினையாற்றுகின்றது என்கின்றனர். இக்காட்சி மொழியில் ஃப்ராய்டின் கனவுக் காட்சி குறியீட்டாக்கங்கள் கலவை பண்டமாகக் காட்சி படுத்தப்படுகின்றது. நனவிலியே கலவைப் பண்பாக இருப்பதால் நனவிலிக் கூறுகளை மையப்படுத்தி வெளிப்படுகின்ற காட்சி மொழி கூறுகளும் கலவைப் பண்பாகக் தொழிற்படுகின்றன.

ஆதவனும் மாந்தர்களும்
         
        ஆதவன் வாழ்க்கை பயணத்தில் காட்சி மொழியை ஒருசேர இணைந்து வருகின்ற சூழலை அன்றாட நடத்தைகளின் வாயிலாகப் பிரதி பலிக்கிறார். நகரங்களின் காட்சி மொழி தான் பெரும் பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்துள்ளது. வாழ்வில் டாக ஊடுருவி அங்கம் வகித்து இயல்பாக பீடுநடை போடுகின்ற அம்சம் இக்காட்சி மொழியை ஊடிழையாக வைத்து கதா மாந்தரின் இயல்பை பிரகடனப்படுத்த படைப்பில் காட்சி மொழியை முக்கிய பண்டமாக வைத்து பின்னி உள்ளது கவத்திற்குரியது. சமூகத்தில் காட்சி மொழி ஏற்படுத்திய அபரிவிதமான அலைக்கு எவரும் தப்ப முடியாது என்கின்ற எச்சரிக்கையாக இருக்கின்றது. ஒரு மனிதனிடத்து காட்சி மொழியின் பாச்சல் எவ்வளவு கூர்மையாக வினையாற்றுகின்றது என்பதை வெளிக்கொணர்வதாக உள்ளது. திரைத்துறைச் சார்ந்த திரைமறை மற்றும் போதாமையைச் சுட்டிக்காட்டி மனித மனதினை அவர்கள் அறியச்செய்துள்ளார். காட்சி மொழியை வைத்து மனித உளத்தை ஒரு சட்டகத்துக்குள் நிறுத்த இயலும் என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார். மாந்தர்களோடு இழையோடும் காட்சி மொழியின் தாக்கம் படைப்பாளியின் ஆழ் மனதிலும் அது பெற்றுள்ள இடத்தினையும் கண்டறிய வழிவகை செய்கின்றது. கதைக்களத்தில் விரிந்த பரப்பில் காட்சி மொழியின் வினையைப் பதினைந்து இருபது வரிகளில் மிகாமல் பேசுகிறார் ஆதவன். இவரது இப்பிரதியில் காட்சி மொழியும் மாந்தர்களும் கொண்டுள்ள உறவு உரையாடல் இன்னும் பரந்த தன்மை கொண்டுள்ளது. இவர் படைத்த எண் பெயர் ராமசேசன், காகித மலர்கள் ஆகிய இரு பிரதிகளிலும் இத்தன்மை உளரீதியாக அணுகிய பாங்கு மிக நேர்த்தியானது.
         
     தலைநகரினை மையப்படுத்தி புனைந்துள்ளார் ஆதவன். அந்நகர மானிடத்தின் தின பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளவர்களில் மிக முக்கிய ஆளுமைகள் அயல் தேசத்தில் இருந்து வரும் எந்த ஒன்றும் இந்தியாவின் தலை நகரில் தாக்கம் பெற்று ஏனைய பிரதேசத்திற்கும் செல்லும் நவீனத்தை முதலில் உள்வாங்கும் பெரு நகரங்களில் தலைநகர் டெல்லியைச் சேர்க்கலாம். அப்படியானதொரு நகரங்களில் வாழும் மானிடர்களை கதாமாந்தர்களாக வளர்த்துள்ளதில் ஆதவனின் கனவு நுன்மையே தனித்துவமாகின்றது. பெருநகரங்களில் நவீன கலாச்சாரத்தில் நவீன வடிவ காட்சி மொழியால் யதார்த்தமாக உள்ளீழுக்கப்பட்ட மாந்தர்களே அரிதி பெரும்பான்மையாக உள்ளனர். என் பெயர் ராமசேசன் பிரிதியில் முதன்மை மாந்தரின் பார்வையிலேயே கதை பரப்பை முழுவதுமாக நகர்த்தியிருக்கிறார். இம்மாந்தர்களில் தவிர்க்க இயலாத ஒன்று சதா காட்சி மொழி காண்பது என்ற ஒன்று. தனிமையாக அல்ல. தோழர், தோழிகளுடன் நவீனக் காட்சி மொழியைப் புறந்தள்ளுவது இயலாது. ஏனென்றால் அது தொற்றிய நோய் போல பரவி முற்றியுள்ளது. இந்த நோயுடன் தான் வாழ்க்கை கடத்தியாக வேண்டும் என்ற சூழல். நவீன வடிவத்தினை ஒற்றுக்கொண்டு அதன் உள்ளடக்க பிரதிகளையும் பிம்பங்களையும் விமர்சித்து அலட்சியப்படுத்தும் போக்குகளைக் கொண்டவர்களும் எவ்வித விமர்சனமுமின்றி முழுமுற்றாக ஊறுகாய் போல ஊறும் மாந்தர்களும் உள்ளனர்.
         
     முதன்மை பாத்திரத்தின் இயல்பில் பால் பல்வேறு பின்னணிகளைக் கவனப்படுத்த முயற்சித்தாலும் படைப்பிற்கும் படைப்பாளிக்கும் ஆதர்சனம் இம்மாந்தரே மையத்திற்கு நகர்த்திச் சென்று நம்பகத்தன்மையோடு முடிவை நோக்கிப் பயணிக்க வைப்பதில் இம்மாந்தரின் பங்கு அளவிட முடியாது. வாசகர்களுக்கு முதன்மைப் பாத்திரத்தின் வாயிலாகப் படைப்பாளியின் மனதை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. கதைகளைக் சூழலுக்கு பின்னணிக்கு இவர்களின் நோக்கில் சமூக இயங்கியலைப் பதிவாக்க இம்மாந்தரின் குணாம்சம் கவனப்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கம். பிரத்தியோகமாக வெளிப்படுத்துவதும் உண்டு. இக்குணாம்சம் நடத்தைகளின் மூலம் தக்க சூழலில் தீர்மானித்து இயல்பாக்குகின்றனர். சமூக சூழலில் இயங்குபவனைக் காட்சி மொழியோடு ஊடாட்டம் பெற வைத்து அதன் வாயிலாக குணாம்சத்தை சித்தரித்து வெளிக்கொணர்வது ஆதவனின் நுண்ணியத் தன்மை. சுமூக நிகழ்வுகளில் எண்ணற்ற கூறுகள் தாக்கம் பெற்றாலும் காட்சி மொழியின் தாக்கத்தைப் பயன்படுத்தி மாந்தர்களின் குணாம்சத்தினை மதிப்பிடுதலில் ஆதவனுக்கு நிகராக எவரும் இல்லை என்று கூறலாம். காட்சி மொழிக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பரிமாற்றம் ஆரோக்கியமாக நிகழ்ந்துள்ளது. இப்பரிமாற்றம் படைப்பாளிகளை தாக்கிய ஒன்றாக உள்ளது.
         
      முதன்மை மாந்தர், துணை மாந்தருடன் காட்சி மொழிக் காண செல்வதால் தன்னுடன் உள்ளவர்களையும் மதிப்பீடு செய்கிறது. உடன் உள்ளவர்களைச் சுட்டிக்காட்டுவதன் வாயிலாக முதன்மை மாந்தரின் சுயத்தை அறிய முடிகின்றது. இதனால் சுற்றியுள்ள சூழலையும் மக்களையும் கிரகிக்க முடிகின்றது. திரைப்படங்கள் பார்த்தல் என்பதான நிகழ்வில் பிறருடைய அந்தரங்களை அலசி ஆராய முனைகின்றது இம்முதன்மை பாத்திரம்.  இச்சமூக நிகழ்வை மையப்படுத்தி இதில் இணைத்துக் கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயல்கின்றது. காட்சி மொழியில் அனைவரும் ஒன்றிய நிலையில் தான் மட்டும் ஒன்றாத மனோ பாவத்தைக் காட்டுவது அனைத்து செயல்களிலும் காட்சி மொழி தாக்கம் அபரிவிதமாகி மூழ்கித் திளைப்பது என்கிறதான மனோபாவத்தை காட்டுவது ஆதவனின் முதன்மைப் பாத்திரப் பண்பில் பிரவேசிக்கின்றது.

திரை பற்றிய வெளி         
     திரைத்துறையை முதன்மை பாத்திரம் மதிப்பீடு செய்யும் போது நடிப்பதற்கு வாய்ப்புக்கிடைத்தால் இந்த முட்டாள்களை விட நன்றாக நடிப்பேன் என்பதும் இயக்குநர்களை மட்டப்படுத்தி தான் படம் எடுத்தால் இதைவிட நன்றாக எடுக்க முடியும் என்று கூறுவது இம்மாந்தர் திரைத்துறைப்பால் முரண்பாடு கொள்கிறதை வெளிச்சமிடுகின்றது. பிரதி முழுக்க இவ்வபிப்ராயத்தை வெளிப்படுத்திக் கொண்டே செல்லும் இப்பாத்திரம். இப்படியான குணாம்சத்தை ஏற்றியிருக்கிறார் ஆதவன். படைப்பாளி நா.பார்த்தசாரதிக்கு நடிகர் சிவாஜிகணேசனின் நடிப்பின் மீது கடுமையான விமர்சனம் உண்டு. இவரை என்னால் நன்றாக நடிக்க இயலும் என்று சூலுரைத்தார். கணேசனின் சாயலைக் கொண்டவர் சாரதி. சிவாஜியின்  மேல் ஒருவித போட்டியுணர்வுடன் இருந்துள்ளார். இம்மனத் தோற்றத்தின் வெளியாகச் சமுதாய வீதி படைப்பைப் படைத்தார் என்று இலக்கிய விமர்சகர் ராமன் கூறுகிறார். திரைத்துறைக்கு எதிரான மனோபாவத்தில் ஆதவனின் முதன்மைக் கதாமாந்தர் கட்டுமானம் அவதானிக்கத்தக்கது. திரையினருக்கு எதிராக பிறந்த படைப்புபோல மாந்தரையும் எதிராகப் பேச வைத்துள்ளனர்.
         
        ஆதவன் பிரதியின் மையம் முகத்தை மாற்றி மாற்றி நடமாடுபவர்களை அப்பட்டமாக்குவது எவருக்கும் சுய பிம்பம் ஒன்று இல்லை. அனைவருக்கும் நிலையில்லாத மனம் எல்லோருமே சுய வாழ்வில் நடிப்பவர்கள் என்கிற உள ஆய்வை முன்னெடுக்கின்றது. இம்மைய கதையாடலுக்கு மாந்தரின் தேர்ந்த குணாம்சத்தை யதார்த் சூழலை அமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளார். இவற்றிற்குக் காட்சிமொழியையும் அதுசார் சூழலையும் தேர்வு செய்து பொருத்திச் செல்கின்றது. திரைப்படங்கள் மிகைப்புனைவைக் கொண்ட கதையாடல்களைச் சித்திரிக்கின்றன. இக்கதையாடல்கள் யதார்த்தத்திலிருந்து விலகிய ஒன்று. இதில் காட்டும் மாந்தர்களும் அவர்களது நடிப்பும் சமூகத்தோடு ஒத்து போகாதத் தன்மை கொண்டது. திரை என்பதே போலியானது. இக்கருத்தியலைக் கதையின் மைய நீரோட்டத்திற்குப் பயன்படுத்துகிறார். திரை போலியானது போலவே மானிட வாழ்வும் போலியானது. நுடிகர்கள் திரையில் நடிக்கிறார்கள் மனிதர்கள் எதார்த்த வாழ்வில் நடிக்கிறார்கள் என்கிற கருத்தோட்டத்திற்கு வந்தடைகிறார் ஆதவன். திரை என்பதே போலியானது. இக்கருத்தியலை கதையின் மைய நீரோட்டத்திற்கு பயன்படுத்துகிறார்;. திரை போலியானது போலவே மானிட வாழ்வும் போலியானது. நுடிகர்கள் திரையில் நடிக்கிறார்கள் மனிதர்கள் எதார்த்த வாழ்வில் நடிக்கிறார்கள். என்கிற கருத்தோட்டத்திற்கு வந்து சேர ஆதவன் முனைந்துள்ளார். மனித மனத்தை முக பாவனையை திரையோடு ஒப்புமைபடுத்திக் கதாபாத்திரங்களையுமும் கதைக் களத்தையுமும் கட்டுருவாக்கம் செய்துள்ளார் ஆதவன்.
         
      திரைப்படக்காட்சிகளிலே ஒன்றிய மனப்போக்கும் ஒன்றாத மனப்போக்கும் கொண்ட பாத்திரங்கள் உள்ளன. இரு மனநிலை கொண்ட மாந்தர்களை இணைத்து பயணப்பட வைத்துள்ளார். ஒன்றாமல் தப்பித்தலுக்கு முனைகிறது என்பதில் சில கூறுகள் உள்ளடங்கியுள்ளன. தன்னை ஈரக்கின்ற அளவிற்கு இப்படங்களில் அப்படி ஒன்றும் இல்லை. என்னுடைய ரசனைத் தளம், சுவைப்பு சராசரி மானிடத்திலிருந்து வேறானது. என்னை ஏமாற்ற முடியாது. கவர்ச்சியைக் காட்டிப் போலி மயக்குகளை வண்ணப்படுத்திக் காட்டினாலும் அடிமையாகாத மனத்தினைவு வேற மாதிரியான ஆளுமையைக் காட்ட தழைபடுவதற்கு திரைச்சூழல் நன்கு பயன்படுகின்றது. பழைமைக்கும் புதுமைக்கும் இடையே ஊசலாட்டம் கொண்ட இரட்டை மனநிலையில் வாழும் மானிடக் கூட்டத்தின் மத்தியில் அசலை தேடிப்போகும் தேடி அலையுமும் மாந்தராக அடையாளப்புடுத்தும் முயற்சிதான். மெய்யான தேடலுக்கு வழித்தடம் அமைக்க திரையை ஊடிழையாகக் கோர்க்கிறார். இவ்விடத்தில் காட்சிமொழி பற்றி படைப்பாளியிடம் உள்ள புரிதலில் தெளிவு பிறக்கின்றது. கதாமாந்தர்களின் இயல்பிற்கும் பிரதியின் மையச் சரடிற்கும் காட்சி மொழியை ஊடிழையாக்கி சமைத்திருப்பது ஆதவனின் கலைநேர்த்தியை மகத்துமாக்கிக் காட்டும் முகமானாலும் திரைக்கு நேர்மாறான பொருண்மையையும் அழுத்திச் செல்கின்றது.

துணை நின்ற நூல்கள்
1.ஆதவன், என் பெயர் ராமசேசன், சென்னை உயிர்மைப் பதிப்பகம், 2004.

2.ஆதவன், காகித மலர்கள், சென்னை உயிர்மைப் பதிப்பகம், 2007

3.இரவிச்சந்திரன், சிக்மண்ட் ஃராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல், சென்னை அலைகள் வெளியீட்டகம், 2005

4.சீனிச்சாமி. தமிழ் நாவல்களில் உளச்சித்திரிப்பு, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகம், 2004

5.நாகூர் ரூபி, சிக்மண்ட் ஃப்ராய்ட் கனவுகளின் விளக்கம், சென்னை, பாரதி புத்தகாலயம், 2013
6.தமிழ்த் திரைப்பட ஆய்விதழ், 2014 ஜனவரி, ஆகஸ்ட் காட்சிப்பிழை, சென்னை.

Iniyavaikatral peer reviewed ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு.பலராமன்,
தமிழ் உதவிப் பேராசிரியர்,

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்,

இராமாபுரம், சென்னை – 089.

 

அழகான ராட்சசி|கவிதை|முனைவர் த.மகேஸ்வரி

அழகான ராட்சசி - முனைவர் த. மகேஸ்வரி

🧚‍♀️அப்பா


உன் ஆசை மகள்


எழுதுகிறேன்..!


🧚‍♀️ வர்ணனையில் கூட


உனக்குப் பிடிக்காத


வார்த்தைகளைக் கூற மாட்டேன்..!


🧚‍♀️ என்னை தேவதை என்று


மற்றவர் கூறும்போது


மார்தட்டி கூறுவாய்!


அவள் தேவதை இல்லை


என் செல்ல ராட்சசியென்று,


அர்த்தம் புரியவில்லை அன்று..!


🧚‍♀️ புராண இதிகாச கதைகள் கூறும்


பாட்டியிடம் இருந்து விடுவித்து


ஆறு வயதிலேயே


அண்ணாவின் ஆரிய மாயைக்கு


அர்த்தம் சொன்னவர் தாங்கள்..!


🧚‍♀️பட்டுப் பாவாடை அணியவிடாமல்


கால் சட்டையும் பனியனும்


அழகு என்பாய்..!


🧚‍♀️ வாடா போடா என்று


உரையாடும் உன்னிடம்


ஆண்மகன் இல்லை என்ற


ஆதங்கத்தை


ஒருபோதும் கண்டதில்லை..!


🧚‍♀️ அப்பா உன்


மூச்சுக் காற்றுக்கு


முகவரி தொலைந்ததால்


உன்னால் அடைக்கப்பட்ட


நாக்குகள் எல்லாம்


விலங்குடைத்து வீறுகொண்டன..!


🧚‍♀️ பெண்மை இடுகாட்டிற்குச் செல்வது


பெரும் குற்றமென கங்கணம் கட்டும்


சமூகத்தின் மத்தியில்


நான் ஆண்மகனின்


அடையாளத்தை தேடினேன்..!


🧚‍♀️ நீ இல்லை என்று


நிலைகுலைந்து நிற்கும் என்னிடம்


எங்கிருந்து வந்தது


அந்த ஆண்மை!


முந்திக்கொண்ட தீக்கிரையாக்க


அந்த ஒரு நொடி


நான் ராட்சசியானேன்..!


கவிதையின் ஆசிரியர்

முனைவர் த. மகேஸ்வரி

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி,

பெரம்பலூர்

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »