பொருநராற்றுப்படையில் அறநெறிச் சிந்தனைகள் |ஆய்வுக்கட்டுரைகள்|பா.சங்கீதா
முன்னுரை
சமுதாயத்தையும் மனிதனையும் செந்நெறிப்படுத்தும் ஒழுக்க நெறியே அறமாகும். அறம் என்பது எல்லையற்றதும் பரந்து விரிந்ததும் ஆகும். நற்செயல்கள் அனைத்துமே அறத்தின் பாற்படுவனவாகும். உண்மை, வாய்மை, மெய்ம்மை ஆகிய இம்மூன்றும் அறத்திற்கு அடிப்படையாக அமைந்து, நல்வினையை ஏற்படுத்துவதாக அமையும். அந்த வகையில் பொருநராற்றுப்படை காட்டும் ஈகை சார்ந்த அறங்களை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
அறம் – அகராதி விளக்கம்
அறம் என்ற சொல்லுக்கு மதுரை தமிழ்ப்பேரகராதி “தருமம், புண்ணியம், தகுதி, நோன்பு, அறச்சாலை, புனிதம், ஒழுக்கம், இன்சொல், இல்வாழ்க்கை” (ப.எ-170) என்று பல்வேறு பொருள்களைத் தருகிறது.
க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி
“அறம் என்பது தனிமனிதன் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தின் அடிப்படையான நெறிமுறைகளுள் ஒன்று” (ப.எ 81) எனப் பொருள் கூறுகிறது.
அறத்தின் சிறப்பு
“அறம் செய விரும்பு” (ஆத்தி சூடி.பா:1) என்றார் ஒளவையார். திருவள்ளுவரும் முப்பாலுள் அறத்தையே முதன்மையாகக் கொண்டு “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” (குறள்.34) என்று குறிப்பிடுகிறார். ஒழுக்கமே சிறந்த அறம் என்றும், அறத்தான் வருவதே இன்பம் என்று குறிப்பிடுவதையும் பார்க்கலாம். “அறமே அறிவு, அறிவே அறம்” என்கிறார் சாக்கரட்டீசு. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கின் பயனாக அறம் விளங்குவதைக் காணலாம். தனிமனிதன், சமுதாயம், சமயம் ஆகிய எந்நிலையிலும் அறமே முதன்மையிடம் பெறுகிறது. அறத்தின் குறிக்கோள் என்பது மாந்தன் முழுமையடைய வேண்டும் என்பதேயாகும். தமிழர்கள் போரிலும் அறத்தையே பின்பற்றினர் என்பதற்குப் பல்வேறு சான்றுகளும் உள்ளன. மணிமேகலையில்,
“அறமெனப்படுவது யாதெனக் கேட்டின்
மறவாதி துகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்” (மணிமேகலை : 228-230)
என்று குறிப்பிட்டு அறத்தை வலியுறத்துகிறது.
ஆற்றுப்படையில் அறம்
வாழ்வியல் அறங்கள் பல இருந்தாலும், இல்லையென இரந்தோர்க்கு ஈதல் மிகப்பெரிய செல்வமாகக் கருதப்பட்டது. அறநெறி வாழ்தலே சிறப்பான வாழ்வு என்றெண்ணி ஈகைக்குச் சங்ககால அரசர்களும் முன்னுரிமை வழங்கினர். உலகில் அறப்பண்பு வளர வேண்டி வறியவர்களுக்குத் தன்னிடம் உள்ள பொருளை வழங்கும் வள்ளல்களைப் புகழ்ந்து பாடுவதற்காகச் சங்ககாலப் புலவர்கள், பாடாண் திணையில் ஆற்றுப்படை என்னும் துறையை உருவாக்கிக் கொண்டார்கள். ஒரு புலவனிடம் சென்று பெரும்பொருள்களைப் பரிசாகப் பெற்று வந்த பொருநர், பாணர், விறலியர், கூத்தர், புலவர் போன்றோருள் ஒருவர், பரிசில் பெறாதார் ஒருவருக்குத் தாம்பெற்ற பெருவளத்தைக் காட்டி, அதனை வழங்கிய தலைவனிடம் அவர்களைச் செலுத்துவதாக அமைவது ஆற்றுப்படையாகும். இதையே தொல்காப்பியரும்,
“கூத்தரும், பாணரும், பொருநரும் விறலியும்
….. ……. …… ……..
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்” (தொல்.புறம்:36)
என்று குறிப்பிடுகிறார்.
பொருநராற்றுப்படை சிறப்பு
பொருநரை ஆற்றுப்படுத்தியமையால் இது பொருநராற்றுப்படையாகும். ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர், பரணி பாடுநர் என மூவகையாகப் பொருநர்கள் இருந்தாலும், இந்நூலில் வரும் பொருநன் போர்க்களம் பாடும் பொருநனாவான். கரிகாற் பெருவளத்தானின் சிறப்பினைக் கூறும் இந்நூலை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார் ஆவார். இவ்வாற்றுப்படை காலத்தால் முந்தியதால், ஆற்றுப்படை நூல்களுள் முன்னதாக வைக்கப்பட்டுள்ளது.
அறமும் நீதியும்
முதியோர் இருவருக்குள் முரண்பாடு ஏற்பட்டது. அவர்கள் தங்கள் முரண்பாட்டைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியவில்லை; கரிகாலனிடம் வழக்குரைத்து நீதி பெறலாம் என்று நினைத்து அவனிடம் அணுகினர். அவன் இளைஞனாயிருப்பதைக் கண்டனர். அவனால் தங்கள் வழக்கை ஆராய்ந்து உண்மை உரைக்க முடியுமோ என்று ஐயுற்றனர். அவர்கள் ஐயத்தைக் குறிப்பால் உணர்ந்த கரிகாலன் அவர்களுடைய வழக்கை மற்றொரு வயது முதிர்ந்த அறநூல் அறிந்தவரிடம் மாற்றுவதாகக் கூறினான். பின்னர் தானே முதியவனைப் போல நரை முடியும் தாடியுடையவனாய் வந்து உட்கார்ந்து அவர்கள் வழக்கைக் கேட்டான். இருவரும் ஒப்புக் கொள்ளும்படி நீதி வழங்கினான். இந்த நிகழ்ச்சியை,
“முதியோர் அவை புகுபொழுதில் தம்
பகைமுரண் செலவும்” (பொரு. 188)
என்ற அடிகளால் காணமுடிகிறது. அறம் அகத்தையும் அரசு புறத்தையும் துப்புரவு செய்ய எழுந்த இரு நெறிகளாகும். அரசு சட்டங்கள் செயற்பட இயலா நிலையில் அறக்கருத்துக்கள் மனித மனங்களைச் செம்மைப்படுத்துகின்றன என்று அர.சிங்காரவடிவேலன் (சங்க இலக்கிய உவமைகள் ப. 24) கூறுவதன் மூலம் மனித மனங்களைச் செம்மைப்படுத்துவதற்கு அறம் தேவை என்பதை அறியமுடிகிறது. இக்கருத்திற்கேற்ப பொருநராற்றுப்படையில் கரிகாற்சோழன் அறந்தவறாமல் நீதி வழங்குவதில் சிறந்தவன் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார் முடத்தாமக் கண்ணியார்.
பசிப்பிணி நீக்கல்
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். அந்த வகையில் பசிப்பிணி நீங்க, அந்நாளிலும் விழாக்கள் முடிந்ததும் அனைவருக்கும் சோறு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை,
“சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது”( பொரு-2)
என்ற அடிகள் தெளிவுபடுத்துகிறது. மேலும், பொருநனுக்குச் செம்மறியாட்டின் இறைச்சி கலந்த உணவையும், புழுங்கல் அரிசியில் உணவையும் போதும்போதும் என்னும் அளவுக்கு முகம் கோணாமல் பரிமாறியதையும் விழாக்கள் வைத்து மக்களுக்கு உணவு என்னும் அறபண்பினை வழங்கியிருக்கின்றார் என்பதையும் பொருநராற்றுப்படையில் நாம் காணலாம்.
மானம் காக்க ஆடை வழங்குதல்
மானத்தின் பெருமை கூற விழைத்த வள்ளுவர்,
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்திப்பர் மானம் வரின் (திரு. 969)
என்ற குறள் மூலம் அதனை விளக்கியுள்ளார். “உடுக்கை இழந்தவன் கைபோல” என்ற வள்ளுவரின் உவமையும், “ஆள்பாதி ஆடைபாதி” என்ற பழமொழியும் மானம் காக்கும் ஆடையின் அவசியத்தை நமக்குப் புலப்படுத்தும். மிகவும் அழுக்கேறி இற்று நைந்து போன ஆடையுடன் தன்னை நாடி வந்த பொருநனுக்கு, முதலில் மற்றவரோடு ஒப்ப மதிக்கும் சிறந்த ஆடையைக் கரிகாலன் வழங்கினான் என்பதை
ஈரும் பேணு இருந்து இறை கூடி
……. ……… ……………….
அரவுரி அன்ன அறுவை நல்கி (பொரு.79-83)
மேற்கூறிய வரிகள் புலப்படுத்துகிறது.
இருப்பிடம் அளித்தல்
தன்னை நாடி வந்த பொருநர்களுக்கும் அவனைச் சார்ந்தோர்களுக்கும் உணவு, உடை அளித்தது மட்டுமின்றி அவர்கள் தங்குவதற்கு தன்னுடைய அரன்மனையிலேயே இடமும் அளித்திருக்கிறான் கரிகாலன்.இச்செய்தியை,
“……….. ….. மற்று அவன்
திருக்கிளர் கோயில் ஒருசிறைத் தங்கி” (பொரு.89-90)
என்னும் வரிகள் தெளிவுபடுத்துகிறது.
இசையின் மூலம் நல்வழிப்படுத்துதல்
ஆறலைகள்வர்கள் செல்லும் பாலை நிலத்தில் வாசிக்கப்படும் பாலை யாழின் மூலம் வரும் பாடலைக் கேட்டு, தம்கைகளில் உள்ள கொடிய படைக்கலங்களைப் போட்டுவிட்டு அடங்கி நிற்கும் பண்புடையவர்களாக மாறுவர் என்பதை,
“ஆறுஅலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை” (பொரு . 21-22)
என்ற பாடலின் மூலம் அறியலாம். பொருநர்களால் வாசிக்கப்படும் யாழுக்கே தீயவர்களை நல்வழிப்படுத்தும் இயல்பு இருக்கிறது என்றால், அவர்களால் போற்றிப் பாடப்படும் மன்னனுக்கு அறப்பண்பு மிக்கிருப்பதில் வியப்பேதுமில்லை.
கரிகாலனின் ஈகைத் திறன்
பொருநர்கள் ஊருக்குச் செல்ல நினைத்த போது, அவர்களைப் பிரிய மனம் இல்லாத கரிகாலன் பொருநனுக்கும், அவன் குடும்பத்தார்க்கும் எண்ணற்ற கொடைகளை வழங்கி மகிழ்வித்தான். இல்லோரை மேலும் இல்லோராக்கித் தம்முடைய பொருளை மட்டும் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவன் கரிகாலன் என்பதை,
“துடிஅடி என்ன தூங்குநடைக் குழவியொடு
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்க” (பொருந: 125-126)
என்ற அடிகள் காட்டுகிறது. பொருநர்கள் விரும்பிக் கேட்பதற்கு முன்பே அனைத்தையும் கொடுத்தவன் கரிகாலன் என்பதை அறியமுடிகிறது. உண்ண உணவும், உடுக்க உடையும் கொடுத்ததோடு, வாழ்நாள் துயர் நீங்க பொன்னும், மணியும், களிறும், வேழமும் தந்து, அவனுடைய தேரிலேயே பொருநனையும், அவனுடைய குடும்பத்தையும் ஏற்றி, அவர்கள் ஊரில் விடுவான் என்ற செய்தி கரிகாலனின் ஈகைத் திறனை அறிய ஏதுவாகிறது. “இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல், வல்லா நெஞ்சம் வலிப்ப” (அகம்-53) என்று அகநானூறும், “மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணி-11: 95-96) என்று மணிமேகலையும் ஈதலின் சிறப்பினை எடுத்துரைக்கிறது. ‘செல்வத்துப் பயனே ஈதல்” என்ற புறநானூற்று தொடருக்கு ஏற்ப, ஈதலறம் மிக்கவன் கரிகாலன்,
“பாசிவேரின் மாசொடு குறைந்த
……. …………. ………..
‘பெறல் அருங்கலத்தில் பெட்டாங்கு உண்க” (பொருந:153-156)
என்ற அடிகள் கரிகாலனின் விருந்தோம்பல் மாண்பினை எடுத்துரைக்கிறது.
முடிவுரை
‘உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்’ உலக இயல்பு. இத்தகைய இயல்பிற்கு ஏற்ப கரிகாலன் ஒருவருக்கு அடிப்படைத் தேவையான உண்ண உணவும், மானத்தைக் காக்க உடையும், மகிழ்ச்சியாக வாழ பொருளும் கொடுத்து அறம் வளர்த்திருக்கிறான் என்பதை பொருநறாற்றுப்படை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
பார்வை நூல்கள்
1. பரிமணம், அ.மா., (உ.ஆ.)
சங்க இலக்கியங்கள் (தொகுப்பு )
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
அம்பத்தூர், சென்னை – 600 098. முதற்பதிப்பு – 2007.
2.அண்ணாமலை, வெ.,
சங்கஇலக்கியத் தொன்மக் களஞ்சியம், தொகுதி 1,2,
மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதற்பதிப்பு – 2000.
3.சிதம்பரனார்.சாமி.,
எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்,
அறிவுப்பதிப்பகம், சென்னை – 14,
இரண்டாம் பதிப்பு-2008.
4.சுப்பிரமண்யன்,ந.,
சங்ககால வாழ்வியல்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
அம்பத்தூர், சென்னை – 600 098,
முதல் பதிப்பு-1986
5.செல்லப்பன், சு.,
சங்க இலக்கியத்தேன்
அன்றில் பதிப்பகம்,
சென்னை – 600 005, முதற்பதிப்பு – 1996.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
பா.சங்கீதா,
தமிழ்த்துறை,
உதவிப்பேராசிரியர்,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி),
இராசிபுரம்.
தமிழ் இலக்கியத்தில் இயற்பியல் கூறுகள்| முனைவர். S.S. ஜெயபாலகிருஷ்ணன்
முன்னுரை
காலத்தில் மனித சமூகத்தில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றம் காரணமாக உலக மொழிகள் பலவற்றிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வகை மாற்றங்கள் தமிழ் மொழியிலும் புதுமையாக்க மாற்றமும், வளர்ச்சியும் நடைபெற்றது எனலாம். ஒவ்வொருஇலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி என்கிறது. 21ஆம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ் என்பது புறநிலை வளர்ச்சியால் புதிய துறையாக வளர்ந்து வருகிறது. அறிவியல் கலைச்சொற்கள் கட்டிடங்களுக்கு செங்கலபோன்றது ஆகும்.ஆங்கிலத்தில் wisdom, knowledge என்ற இரு சொற்கள் நாம் அறிந்தவை. இவற்றிற்கு நேராக தமிழ்ச் சொற்களை பரிமேலழகர் மெய்யறிவு, கல்வியறிவு என்று இரு சொற்களை பயன்படுத்துகிறார். சில இடங்களில் வேதியியல், ஆங்கில மருத்துவம் மற்றும் பொறியியல் முதலியன பாடங்களைத் தமிழில் கற்பிக்கின்றனர். இதற்குமுன்பே அறிவியல்பற்றியதகவல்களை பண்டைய இலக்கியங்களில் குறிப்பிட்டதையும் இந்த கட்டுரையில் காணலாம்.
இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப அறிவு” (குறள். 355)
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” குறள். 423)
என்ற குறளிலும் தெளிவுபடுத்தி உள்ளார் விருப்பு வெறுப்பற்ற தன்மை உடையது அறிவியல் என்பதைத் தம் சிந்தனையாக வைத்துள்ளார். இயற்பியல் ஒரு பிரிவாக விளங்குவது அறிவியல், அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது தோன்றியது. பின்னர் ஓர் அறிஞர் அணுவை பிளக்க இயலும் என்ற புதிய அணுவியலாகும். முதலில் அணுவை பிளக்க இயலாது என்ற கொள்கை கருத்தை வெளியிட்டார். இக்கொள்கையுடைய தமிழ் சான்றோர்கள்சிலர் இருந்தமை இலக்கியத்தில் நாம் காணலாம்.
சந்திர கிரகணத்தை குறிக்க வந்த புலவர்கள் திங்களைப் பாம்பு விழுங்குவதாகக் குறித்துள்ளனர். அக்காலத்தில் ராகுகேது என்றும் பாம்புகள்சூரியனையும், சந்திரனையும் விழுங்க முயல்வதாக மக்கள் கருதி இருந்தனர். பழங்காலத்தில் மேகம் கடலுக்கு சென்று நீரை முகந்து கொண்டு வானத்தில் ஏறி வந்து மழை பொழிவதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதற்கு சான்றாக,
“முந்நால் திங்கள் நிறைபொறுத்து அசை
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூழ் மகளிர் போல நீர்கொண்டு
விசும்புஇவர் கல்லாது தாங்குது புணரி
செழும்பல் குன்றம் நோக்கி
பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே” ( குறுந்தொகை: 287)
நீரில் அறிவியல்
தமிழர் மரபு படி சனிக்கிழமை நீராடுவது வழக்கம், இதன் பொருள் சனிக்கிழமை மட்டும் நீராடுவது அல்ல. உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கந்தகத் தன்மை சேர்ந்த நீரில் குளி என்பது பொருள்படும். இதன்படி சனிக்கோளில் (கரிக்கோள்) கந்தகத்தன்மை உள்ளதாக அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல கோடி விண்மீன்கள் விண்வெளியில் உள்ளன. இதனைப் பார்த்த தமிழனின் எண்ண ஓட்டம் 27 விண்மீன்களை மட்டும் எடுத்து ஒரு மாதத்தின் 27 நாட்களில் உரையாதி நாளிகை வேறுபாட்டை அறிகிறான். இந்த 27 விண்மீன்களையும் 12 ஆக பிரித்துப் பார்க்கிறான். இந்த விண்மீன் சுற்று பாதையில் வழியாக சூரியன் செல்லும் பாதை அமைகிறது. இதனையே பிற்காலத்தில் 12 வட்டங்களாக ராசி என்ற பெயரிட்டு அழைத்தார்கள்.
“விரிக்கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில் வேம் தலையென கீழிருந்து
தெருவிடை படுத்த மூன்று ஒன்புதிற் றிருக்கையுள்
உருகெழு வெள்ளிவந்த தேற்றியல் சேர” (பரிபாடல் 11.1.4)
ஒளிக்கதிர்கள் எந்த அளவிற்கு பிரகாசம் என்பதையும் சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். ஒளி பற்றிய ஆற்றலை பரிபாடல் கூறும் செய்தி ஒளியை முருகனுடைய ஒளி பொருந்திய சாயலுக்கும் அவன் வேலுக்கும் ஒப்பிட்டுள்ளன.
“வெண்சுடர் செவ்வேல் விரைமயில் மேல் ஞாயிறு”
என்கிற பரிபாடல் இந்த உலகம் நீரால் சூழப்பட்டது. உலகத்தில் ஒரு பகுதி நிலமும் மூன்று பகுதி நீராலும் சூழப்பட்டு உள்ளது என்பதை
“மாநிலம் தோன்றாமை மலிபெயல் தலை
எமநீர் எழில்வானம் இறுதிதரும் பொழுதினான்”
என்கிறது பரிபாடல். அறிவியல் மின்னணுகளுக்குடன் தொடர்புடைய துறையாக உள்ளது எனலாம். மூலக்கூறு என்பது அந்த பொருள்களில் உள்ள அணுக்களை பொறுத்து அமைந்துள்ளது. இதனை,
“தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ” (பரிபாடல் 3-63-64)
என்கிறது இந்தப் பாடல்.
அறிவியல் தமிழில் ஆழிப்பேரலைகள்
உலகத்தில் அழிவு ஒன்று உண்டு அழிந்து மீண்டும் தோன்றும் என்று பழமை நூல்களும் வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன. இயற்கையின் பேரழிவால் உலகம் அழிய வாய்ப்பிருக்கிறது என்றும் இந்த உலகம் அழிந்து மீண்டும் தோன்றும் முறையை பரிபாடல் கூறுகிறது. நிலம் நீராலும், நீர் தீயாலும் (சுனாமி) அதாவது நீருக்குள் நெருப்பு ஏற்பட்டு வெடித்தால் சுனாமி கடலில் ஏற்படுகிறது. காற்று வானத்திலும், வானம் மூலப்பொருள்களிலும் ஒன்றனுள் ஒன்றாக ஒடுங்கும் முறையில் கோள்கள் அழிந்து சிதறுகிறது இதனை,
”தொல்முறை இயற்கையின் மதியொ
———————————————மரபிற்கு
ஆக பசும்பொன் னுலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல (பரி:2,1–4)
மீண்டும் பீடு உயர்வு ஈண்டு அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” (பரி:2,11-12)
என்கிறது பரிபாடல்.
அண்டப் பகுதியில் உண்டை பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன் – திருவாசகம்
இப்பாடல் வானியலை பற்றி சொல்கிறது அண்டம் என்பது நம் பூமி அது உருண்டையானது என்பதை “உண்டைப் பிறக்கும்” என்ற சொற்கள் சொல்கின்றன. முற்கால இலக்கியங்களில் அறிவியல் செய்திகள் உள்ளன என்பதற்கு இது ஒரு உதாரணம்.
“திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணுறுப்பு திழிதரும் வீங்குசெல்ல மண்டிலத்து
முரணமி சிறப்பிய் செல்வனொடு நிலைய
ரோகிணி………………………… (நெடுநல்வாடை-160)
அரசர்கள் தம் மாளிகையின் மேற்கூறையில், இன்று நாம் கோளரங்குகளின் உட்கூறையின் மீது காட்சிகளை காண்பதுபோல, ராசி மண்டலங்களையும், 27 விண்மீன் கூட்டங்களையும், அதனுடே நிலவு சஞ்சரிப்பதையும் ஓவியங்களாக வரைந்து வைத்தனர். இக்காட்சியை (159-163) பாடல்கள் தெரிவிக்கின்றன.
சூரியன்
செவ்வியல் இலக்கியத்தின் சூரியன் உதிப்பதும், மறைவதை பற்றிய வருணங்கள் கீழக்கரை மக்களின் அனுபவமாக பாடப்பட்டுள்ளன.
”முந்நீர் மீமீசைப் பலர் தொழத் தேன்றி
என சூரியன் உதிப்பதையும் (நற்-283-6)
சுடர்கெழு மண்டிலம் மழுங்க ஞாயிறு
குடகடல் சேரும் படகூர் மாலையும்” (அகம் 378)
என காவட்டனாரின் பாடலின் வழி சூரியன் மேலைக் கடலில்மறைவதையும் பாடி டியுள்ள அறிவியல் சார்ந்த கருத்தை நாம் காண்கிறோம்.
சந்திரன்
திங்கள் என்பது நிலவை குறிக்கும் இது பூமியின் துணைக்கோளாகும். திங்களின் தன்மையையும் வெண்மையையும் அழகும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை உள்ளம் மகிழச் செய்யும்.
“முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்” (அகம்-54)
எனத் தலைவி தம் மகனை இளம்பிறையோடு ஒப்பிட்டு கூறியுள்ளார். தலைவியின் நெற்றி பிறை நுதல் என அகநானூற்றில் பாடல் 57, 179ஈ 192, 306, போன்றவற்றின் நெற்றிக்கு உண்மையாகச் சந்திரனை வைத்துப் பாடியுள்ளனர்.
மழை பெய்யும் முறை
மேகம் கடல் நீரை பெற்று மழையாக பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு.
நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்த்தளும்பும் தன்
பொறை தவிர்பு அசைவிட (பரி 6:1-2)
என்ற பரிபாடலில் முகில்கள் கடலின்கண் நீரை முகந்து கொண்டு வந்து ஊழி முடிவின் கண் முழுகுவிக்க முயன்றது போல மழை பெய்தது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. இவை ஆய்வின் வெளிப்பாடுகள் அல்ல அன்றைய தமிழரின் அறிவின் வெளிப்பாடுகள். தமிழரின் இயற்பியல்அறிவும் நம்மை வியக்கவைக்கிறது. அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில் ஊசற்பருவத்தில் அமுதாம்பிகை ஊசலாடும் நிகழ்வினைக் குறிக்கும்போது சிவஞான முனிவர்,
“மகரக் குழைகளும் ஊசலாட
பங்கைய மடமாதர் நோக்கி இருவேம்
ஆட்ட அவ்வுசலில் பாய்ந்திலது
இவ்வுசல் என நனி ஆட்டுதோறும்
நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத்
திங்கள் சாய” (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் – ஊசல் பருவம்)
என்ற அடிகளில் அமுதாம்பிகை ஆடும் ஊசலின் கயிறு நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகிறது என்றும் ஆனால் அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில் தொங்குவதால்விரைவாக ஆடுகிறது என்றும் கூறியுள்ளார். இதனையே கலிலியோ ஊசலின் நீளம் குறித்த தம் ஆய்வில், ஊசலின் நீளம் குறைந்தால் விரைவாக ஆடும் ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும் என்றும் கூறியுள்ளார்.
விண்மீன்கள்
வானில் தோன்றும் மற்றொரு அழகு பொருள் விண்மீன்கள் விண்ணில் மின்னுவதால் விண்மீன்கள் எனப்பட்டன தொலைநோக்கி இல்லாத அக்காலத்த சங்க புலவர் ஒரு சிலர் விண்மீன்களை குறிப்பிட்டு பாடியுள்ளனர்.
”யாமம் கொள்வர் நாட்டிய நளிகடர்
வாகை மீனின் விளங்கித் தோன்றும்” (அகம் – 114-10-11)
என்ற பாடல் வரிகள் மூலம் இரவில் காவல் புரிவோர் மதிலில் ஏற்றிவைத்த விளக்குகள் போல வானத்தே தோன்றும் விண்மீன்கள் இருந்ததை பதிவு செய்துள்ளார்.
வானூர்தி
அன்றைய மனிதன்கண்ட கனவை இன்றைய அறிவியல் முன்னேற்றம் நிஜமாக்கியுள்ளது.
“வலவன் ஏவ வானவுர்தி” (புறம் 27)
எனும் பாடல் அடியில் வானூர்தி என்ற அற்புதமான சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதைப்போலவே சிலப்பதிகாரத்தின் கண்ணகி கோவலனோடு ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய விமான ஊர்தியில் ஏறிச் சென்றதாக ஒரு காட்சி இதனை இளங்கோவடிகள்.
“வாடா மாமலர் மாரி பெய் தாங்கு
அமரர்க் கரசன் தமாவந் தேத்ரக்
கோ நகர் பிழைத்த கோவலன் தன்னோடு
வானூர்தி ஏறினன் மாதோ
கானமலர் புரிகுடில் கண்ணகி தாணென் (சிலம்பு.3:196-200)
என்ற வரிகளில் வாடாதபெரிய மலர்களை மலையாகச் சொறிந்து அமரர்களின் அரசனாக இந்திரனும் வானோடும்வந்து வாழ்ந்த தம் கணவன் கோவலனோடு கண்ணகி தேவ விமானத்தில் ஏறிச் சென்றாள் என்று கூறப்பட்டுள்ளது.
முடிவுரை
‘தமிழ் இலக்கியத்தில் இயற்பியல் சிந்தனைகள் நிறையவே கூறப்பட்டுள்ளது. அதனை வெளிக்கொணர்வதற்கு பல்துறை அறிவு இருந்தால் மட்டுமே தமிழ் இலக்கியத்தில் உள்ள இயற்பியல் பற்றிய கருத்துக்களை கொண்டுவர முடியும். தமிழ் இலக்கியங்களில் உள்ள இயல் அறிவினை வெளிக்கொண்டுவதற்கு நிறைய ஆய்வுகள் செய்தல் வேண்டும் அப்படி செய்தால் தமிழ் இலக்கியங்களை இவ்வுலகம் உணர்ந்து பாராட்டும் என்பதில் ஐய்யமில்லை.
பார்வை நூல்கள்
1. சங்க இலக்கியங்கள்
2. தமிழில் புது நோக்கு, முனைவர் ப.ஜெயகிருஷ்ணன்
3. தமிழ் புதுக்கவிதைகள் அறிவியல், முனைவர் க.முருகேசன்
4.சங்க இலக்கியத்தில் அறிவியல் செய்திகள், முனைவர் ப.ஜெயகிருஷ்ணன்
5.தமிழ்இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள், முனைவர்ப.ஜெயகிருஷ்ணன்
6. சங்க கால இலக்கியத்தில் அறிவியல் தமிழ் சங்கமம்
7. தமிழ் இலக்கியத்தில் அறிவியல் கூறுகள், முனைவர். பு.மு. அன்பு சிவா
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். S.S. ஜெயபாலகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
இயற்பியல் துறை
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி
மதுரை,பசுமலை -04
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் | முனைவர் நா.சாரதாமணி
நேர்மை என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாக நிகழ்ச்சி ஒன்றைக் கூறலாம். பி.எம் நாயரின் நூலில் படித்த செய்தி, அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாகப் பதவி ஏற்று அவருக்கான மாளிகையில் நுழைகிறார். அப்போது அங்கிருந்த வெள்ளை ஆடையும் தலையில் தலைப்பாகையும் அணிந்த ஒருவன் தடாலென அமர்ந்தார். இதனை பார்த்த கலாமிற்கு மனதில் எல்லோரும் எழுந்து நிற்பார்கள்; நின்றால்தானே மரியாதை; ஆனால் இவன் அமர்கிறானே என்று நினைக்கும் வேளையில் அவரின் காலில் இருந்த ஷூவை கழட்டப்போனான். உடனே அவரை தடுத்து என்ன செய்கிறாய் என்று கேட்டார். ஐயா வைஸ்ராய் காலத்திலிருந்து எனக்கு இந்த வேலைதான் என்றான். உடனே, “எனது சூவை எனக்கு கழட்ட தெரியும். இன்றிலிருந்து நீ இந்த வேலைக்கு வேண்டாம் போ” என்றார் கலாம். உடனே அங்கிருந்தவர்கள் இதை பார்த்தவுடன் வந்த முதல்நாளே ஒருவரை வேலையைவிட்டு தூக்கி விட்டாரே என்று நினைத்தனர். இதனால் அவன் தனது நான்கு விரல்களைக் காண்பித்து ஏதோ சொன்னான். அப்போதுதான் தெரிந்தது அந்த மனிதனுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் அவன் அழுகின்றான் என்பதை கண்டவுடன் கலாம் அவர்கள் கூறினார்; பின்னால் இருக்கும் தோட்டத்தில் தண்ணீர் ஊற்றும் வேலையைச் செய் என்று சொன்னார்.
பின்னர் ஐந்து ஆண்டுகள் கடந்தன. கலாம் அவர்கள் தனது 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்து மாளிகையை விட்டு வெளியேறும்போது தன்இரண்டு சூட்கேஸ்களையும் கையில் வைத்துக்கொண்டு தோட்டத்தில் தண்ணீர் தெளித்த அவனை அழைத்து வரச்சொன்னார். அவனிடம் “அன்னைக்கி உன்ன வேலையை விட்டு தூக்கிட்டேன்னு அழுத. இப்போ என்ன வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க” என்று கூறிவிட்டு நீ என்ன செய்கிறாய்? 2 வாலி நீரை கொண்டு வந்து இந்த சூட்கேஸ்களில் தெளி என்றார். வேண்டாம் ஐயா! உள்ள புக்ஸ், பேப்பர்ஸ் இருக்கும் எல்லாம் நனைந்து விடும் என்றான். பரவாயில்லை நீரைத் தெளி என்றார். அந்த வேலையால் தெளிக்கும்போது கலாம் அவர்கள் கூறினார் ஏன் தண்ணீர் தெளிக்கச் சொன்னேன் தெரியுமா? இந்த ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு தூசியைக் கூட நான் எடுத்துச் செல்லவில்லை என்பதை இந்தச்சமூகம் சொல்ல வேண்டும்; அதற்காகத் தெளிக்கச் சொன்னேன் என்றாராம் அந்த மாமனிதர் கலாம்.
இவ்வாறான நேர்மையைத் தருவதே சிறந்த கல்வி. இவ்வகையான கல்வி இன்றைய மனிதர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறதா? கல்வியானது ஒரு மனிதனுக்குப் போராட்டங்களை எதிர்கொள்ளும் துணிவைத் தரவேண்டும். துன்பங்களைக் கண்டவுடன் மற்றவருக்கு இன்னல்களை உருவாக்கும் பேடித்தனத்தை அளிக்கக்கூடாது. ஆயிரம்கோடிபேர் அமர்ந்திருக்கும் அவையில் கம்பீரமாகச் சமூகத்தில் நடத்தப்படும் அவலங்களைச் சுட்டிக்காட்டும் தைரியத்தைத் தரவேண்டும். கண்முன்னே அக்கிரமங்கள் நடந்தாலும் அவற்றை தடுக்கும் வல்லமையை தரவேண்டும். இது எனது தேசம். இங்கு தீங்கு விளைவிக்க ஒருபோதும் அனுமதியேன் என்ற நாட்டுப்பற்றினைத் தரவேண்டும். இதுதான் நேர்மையான கல்வி.
நொடிகளை வென்ற காளமேகம்
காளமேகப்புலவர் தமிழ்ப்புலமையால் நொடிகளை வென்றவர். கடுமையான போட்டிகளில் நேரத்தை வென்றவர். இதனால் அக்காலத்திலேயே புலவர்கள் நொடிக்கும் குறைவான நேரங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது. நீங்கள் எவ்விடம் சென்றாலும் எங்கு வேலை பார்த்தாலும் அவ்விடத்தில் உங்களுக்கான சுவடுகளைப் பதித்துச் செல்லுங்கள். விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் திரும்பும்போது ஐந்து நிமிடங்களுக்கு முன்பே தரைஇறங்கி இருந்தால் கல்பனா சாவ்லா என்ற ஒரு அறிவியல் விஞ்ஞானியை இந்த நாடு இழந்திருக்காது. காலம் என்பது மனிதன் ஒருசெயலைச் செய்து முடிப்பதற்கான ஒரு வாய்ப்பு ஆகும். ஓர் அரசன் பகைவனை வெல்ல ஏற்றகாலத்தை நோக்கி இருப்பான். ஏற்றகாலம் என்பது பகைமன்னனின் உடல்நிலை சரியில்லாதபோது, அவனுடைய படைகள் வேறுநாட்டிற்கு சென்றபோது, நாட்டில் கலகம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதுதெல்லாம் இவ்வாறு அந்தக்காலத்தை எதிர்நோக்கி இருந்து படைகளைத் திரட்டி பகை வெல்லவேண்டும்.
நேர்மையைக் கடைப்பிடிக்க நேரத்தை செலவழியுங்கள்
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். முதலில் நீங்கள் நேர்மையைக் கடைபிடிப்பது பெற்றோரிடமாகும். கருவுற்றகாலத்திலிருந்து ஒரு குழந்தையைப் பாதுகாத்துக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பவர்கள்தான் பெற்றோர்கள். எனவே ஒருபோதும் அவர்களுக்கு துரோகம் இழைத்து விடாதீர்கள். தனக்கென்று எதையுமே எடுத்துக் கொள்ளாமல் பிள்ளைகள் வளரவேண்டும். பிள்ளைகளுக்காக எல்லாம் என்று தியாகம் செய்துவாழும் பெற்றோர்கள் ஆயிரம் ஆயிரம் பேர் நம் மண்ணில் வாழ்கின்றனர். ஆற்றங்கரை ஏரிகள் போன்றவற்றின் கரை பகுதியான மணல் பரப்பில் பார்த்திருப்பீர்கள். சிறுசிறு குவியலாக மணல் காணப்படும். அதனை தள்ளிவிட்டு பார்த்தோமானால் அதில் சிறு துவாரம் இருக்கும். அந்தத் துவாரத்தில் கொஞ்சம் நீரை ஊற்றினால் நண்டு வெளியே வரும். அந்த நண்டு பக்கவாட்டில்தான் நடக்கும். அதன் இனப்பெருக்கம் எவ்வாறு நடைபெறும் என்றால் பெண் நண்டின் வயிற்றில் குஞ்சுகள் இருக்கும். அவை சிறிதுசிறிதாக வளரும்போது அதன்வயிறு ஓரளவே விரிவடையும். அதற்குமேல் உள்ளே இருக்க இயலாமல் குஞ்சுகள் வெளியே வரும். அதாவது தாயின் வயிறு வெடித்து அதிலிருந்து குஞ்சுகள் வெளிவரும். தாய்நண்டு இறந்து விடும். பிள்ளைகளுக்குப் பிறப்பை கொடுத்துவிட்டு தான்இறப்பை தேடிக்கொள்ளும் தாய்நண்டு.
நண்டு போலவே பல பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்கு நல்ல செழிப்பை வழங்கிவிட்டு அவர்கள் வறுமையில் வாழ்வார்கள். அவ்வாறு உங்களுக்காக தமது சந்தோசம், ஆசை, ஆடம்பரம் போன்றவற்றையெல்லாம் மரணிக்கச் செய்யும் உங்கள் பெற்றோர்களுக்கு. துரோகம் இழைக்காமல் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் கூறும் கருத்துக்களை ஏற்று கொள்ளுங்கள். அவர்களின் வார்த்தைகளுக்கு மாறாக செயல்பட வேண்டாம். நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி பெற்றோர்சொல் உங்களை நல்வழிப்படுத்தும் என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
பிள்ளைகளின் நேர்மை
பெற்றோரிடம் நேர்மையாக நடந்து கொள்ளும் பிள்ளைகள் பள்ளியில் ஆசிரியரிடம் நேர்மையாக நடந்து கொள்வார்கள். அவ்வாறு நடந்து கொள்ளும் பிள்ளைகள்தான் தமது இளமைப்பருவத்தில் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் உண்மையுடன் தியாகம் செய்யும் மனநிலையைப் பெறுவார்கள். தன்னை மெழுகாக உருக்கி தன்பிள்ளைகளைச் சுடராக ஒளிரச் செய்யும் பெற்றோர்களுக்கு உண்மையாக இல்லை என்றால் நீங்கள் சரியான மனிதர் இல்லை. இளசுகள் சிலர் பெற்றோர்களை அவமதித்து உங்களுக்கு என்ன தெரியும் என்று கேலி செய்து அவர்களை ஒன்றும் பேசமுடியாமல் வாயடைக்கச் செய்துவிடுவார்கள்.
உங்களுக்கு வயதாகிவிட்டது. எங்கள் காலம் வேறு! உங்கள் காலம் வேறு! அதனால் நீங்கள் பேசாமல் இருங்கள் என்று அதட்டி அமர்த்திவிடுவார்கள். இவ்வாறான பிள்ளைகள்தான் சமுதாயத்தில் யாரையும் மதிக்காமல் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில் வாழத்தெரியாமல் ஊதாரிகளாகவும் போக்கிரிகளாகவும் திரிவார்கள். இவர்களால் அவர் பிறந்த குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் எந்த பயனும் இல்லை. நான் அறிந்த ஒரு பெண்மணி அவருக்கு திருமணமாகி எட்டு மாதங்களில் அவள் கணவர் ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அப்போது அப்பெண்ணின் வயிற்றில் 6 மாதக்குழந்தை வளர்கிறது. அவளின் பெற்றோர் என்ன கூறியும், அக்குழந்தையை வளர்ப்பேன் என்று பிடிவாதமாகப் பெற்றெடுத்து வளர்த்தாள். கூலி வேலைசெய்தாவது நான் வளர்ப்பேன். என் குழந்தை என் வயிற்றில் வந்து சேர்ந்துள்ளது எனவே நான் என் குழந்தைக்காகவே வாழ்வேன் என்று வளர்த்தாள். நன்றாகவே அக்குழந்தையை வளர்த்தாள். நேர்மையைக் கற்றுக்கொடுத்து, உண்மையைச் சொல்லிக் கொடுத்தாள். அதர்மம், தியாகம், கருணை போன்ற நற்பண்புகளைப் பாலுடன் உணவுடன் சேர்த்து ஊட்டி வளர்த்தாள். அந்தக்குழந்தை பள்ளிப்பருவம் முடித்து கல்லூரிக்கு சென்றதும் மிகவும் மகிழ்ந்தாள். மகன் கூறுவதெல்லாம் உண்மை என்று நம்பினாள். அவனுடைய நண்பர்கள் சிறப்பானவர்கள் என்று ஆனந்தப்பட்டாள். அவள் சிறுவயதிலிருந்தே எதை செய்யக்கூடாது என்று சொல்லிச்சொல்லி வளர்த்தாளோ அதனை சாதாரணமாகச் செய்துவிட்டு வந்தான் அந்தத்தாயின் மகன். அதை பார்த்தவுடன் அவள் இறந்து விடவில்லை. அவள் மனம், மூளை இரண்டும் இறந்துவிட்டன. ஆமாம் அவள் பைத்தியம் ஆகி விட்டாள்.
தற்போது தெருத்தெருவாக என்பையன காணும் என்று கூறிக்கொண்டே நடக்கிறாள். இங்கு கவனித்தீர்கள் என்றால் அப்பெண் தன்கணவன் இறந்தவுடன் வேறுதிருமணம் செய்துகொள் என்றுகூறிய பெற்றோரின் வார்த்தைகளை ஏற்று இருக்கலாம். ஆனால் குழந்தைக்காகவே தன்வாழ்வை தியாகம் செய்தாள். அவ்வாறான தாயை புரிந்துகொள்ளாமல் பிள்ளை தவறு செய்தான்.
நண்டு பிள்ளைகளுக்காக வயிறு வெடித்து இறப்பதைப்போல தாயும் தன்நிலை இழந்தாள். உங்களுக்காக காலம் முழுவதும் உழைப்பவர்கள் பெற்றோர்கள்தான். அவர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; அவர்களிடம் உண்மையுடன் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் உயர்வு வந்தால் பெருமைப்படுபவர்கள் அவர்கள்தான். நீங்கள் வாழ்வில் தாழ்ந்தால் வேதனைப்படுபவர்களும் அவர்கள்தான். எனவே பெற்றோர்களின் வாழ்க்கையை பொன்னான காலமாக மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.
காலம் என்பது இறைவன் உங்களின் கண்முன் வைத்த சொர்க்கமான வரமாகும். அந்த வரத்தை கொண்டு நீங்கள் வாழும்போதே வாழ்க்கையைச் சொர்க்கமாக்கிக் கொள்வதும் அல்லது நரகமாக மாற்றிக் கொள்வதும் உங்கள் செயல்களில்தான் உள்ளது. பெற்றோர்களை அழவைக்கும் பிள்ளைகள் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. நேர்மையை பெற்றோரிடம் காட்டுங்கள். உங்களின் முயற்சிகள் அனைத்தும் ஆக்கங்களைப் பெறும் என்பதில் ஐயமில்லை. தன்னையே பிள்ளைகளுக்காகத் தியாகம் செய்யும் பெற்றோர்கள் செய்யும் தவறு என்பிள்ளை தவறு செய்யமாட்டான். என் வார்த்தையைத் தட்ட மாட்டான் என்று சுதந்திரம் அளித்துவிடுவார்கள் என்பதும்தான். ஒன்று கவனத்தில் கொள்ளவேண்டும்; பிள்ளைகளை நம்பலாம். ஆனால் அவர்களின் வயதை நம்ப இயலாது. பெற்றோர்கள் கொடுக்கும் சுதந்திரம் பிள்ளைகளால் தவறாகப் பயன்படுத்தப்படுவதே பெற்றோர்களின் தோல்விக்கு காரணம்.
உங்களை ஆள் ஆக்குவதற்காக தம்வாழ்க்கையைப் பணயம் வைத்த பெற்றவர்களாகச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் இந்த ஜென்மத்துல் பட்ட கடனை இந்த ஜென்மத்திலேயே அடைத்து விடுங்கள். அதுவே மிகவும் நலமாகும்.
கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.
முனைவர் நா.சாரதாமணியின் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்க…
மீதம்|கவிதை|கலையன்பன்
📍 எளிமையில் பூத்த கல்யாணங்கள்
இரத்த சொந்தத்தை மட்டுமே
தக்க வைத்த மரணங்கள்!
📍 அண்ணீயப்பட்டு
அண்ணியபடுத்தி
மறுசீர் செய்து கொண்ட சுத்தம்!
📍 ஆன்மீகத்தின் அடிநாதமும்
அறிவியலின் ஆத்மநாதமும்
அவசியமான காலம் !
📍 எத்தனை கோடி தோல்விகள்
எத்தனை கோடி மரணங்கள்
முளைத்தபடியே மனித முகங்கள்!
📍 ஒரு வருட அலை
இரண்டு வருட ஓயா நிலை
மனிதத்தின் பேரிடராய் குரோணா!
📍 மரணத்தை முடிவு
என்றது யார்?
மனிதத்தின் மூலதனம்!
📍 குரோணா சலித்த மனிதத்தின்
மீதம் தான்
நாங்கள்!!
கவிதையின் ஆசிரியர்
கலையன்பன்
2/743 எம்.எம் நகர்
மூக்காண்ட பள்ளி , ஓசூர்
ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள்
1. அட்டு – எட்டு
2. ஆ – பசு
3.ஈ – கொடு, பறக்கும் பூச்சி
4. உ – சிவன்
5. ஊ – தசை, இறைச்சி
6. ஏ – அம்பு
7. ஐ – ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
8. ஓ – வினா, மதகு (நீர்), தாங்கும் பலகை
9. கா – சோலை, காத்தல்
10. கூ – பூமி, கூவுதல்
11. கை – கரம், உறுப்பு
12. கோ – அரசன், இறைவன், தலைவன்
13. சா – இறப்பு, மரணம், பேய், சாதல்
14. சீ – இகழ்ச்சி, திருமகள்
15. சே – எருது, அழிஞ்சில் மரம்
16. சோ – மதில்
17. தா – கொடு, கேட்பது
18. தீ – நெருப்பு
19. து – கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு,
20. தூ – வெண்மை, தூய்மை
21. தே – நாயகன், தெய்வம்
22. தை – மாதம்
23. நா – நாக்கு
24. நீ – நின்னை
25. நே-அன்பு, நேயம்
26. நை – வருந்து, நைதல்
27.நொ – நொண்டி, துன்பம்
28. நோ – நோவு, வருத்தம்
29. நௌ – மரக்கலம்
30. பா – பாட்டு, நிழல், அழகு
31. பூ – மலர்
32. பே – மேகம், நுரை, அழகு
33 பை – பாம்புப்படம், பசுமை, உறை
34. போ – செல்
35. மா – மாமரம், பெரிய, விலங்கு, குதிரை
36. மீ – ஆகாயம், மேலே, உயரம்
37. மு – மூப்பு
38. மூ – மூன்று
39. மே – மேன்மை, மேல்
40. மை – அஞ்சனம், கண்மை, இருள்
41. மோ – முகர்தல், மோதல்
42. யா – அகலம், மரம்
43. வா – அழைத்தல்
44. வீ – மலர், பறவை, அழகு
45. வை – வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
46. வெள – கௌவுதல், கொள்ளை அடித்தல்
இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சி பற்றி மேலும் பார்க்க…
நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்
தமிழர்களின் இந்து சமயக் கோவில்களில் நவகிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நவகிரகங்களைத் தமிழில் கோள்கள் என்கிறோம். ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கிற ஒன்றாக நவகிரகங்கள் அமைந்துள்ளன. வாழ்க்கையில் ஏற்படும் சுக-துக்கங்கள், ஏற்ற-இறக்கங்கள், தடங்கல்கள்-தடைகள், சிக்கல்கள் -ஆபத்துகள் எனச் சகல நிகழ்வுகளையும் இந்த நவகிரகங்களே தீர்மானிக்கின்றன. ஒருவரது முன்வினைப் பயன்களைப் பொறுத்தே நவகிரகங்கள் அவரவர் வாழ்க்கையில் பின்தொடர்கிறது. நவகிரகங்கள் ஒருவரது வாழ்வில் விதியை தீர்மானிக்கும் காரணியாக விளங்குகிறது. இந்த நவகிரகங்களே நமக்கு வருகின்ற பிரச்னைகளுக்கான தீர்வையும், வழியையும் காட்டுகிறது.
1.சூரியன் (ஞாயிறு)
காசியப முனிவரின் குமாரர்.
ஒளிப்பிழம்பானவர்.
நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி.
நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
மனைவி – சாயா, சரண்யா
திக்கு – கிழக்கு
அதிதேவதை – அக்னி ப்ரத்யதி
தேவதை – ருத்திரன்
தலம் – சூரியனார் கோவில்
நிறம் – சிவப்பு
வாகனம் – ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் – கோதுமை
மலர் – செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் – சிவப்பு
ரத்தினம் – மாணிக்கம்
அன்னம் – கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்
2.சந்திரன் (திங்கள்)
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர்.
வளர்பிறையில் சுபராகவும்,
தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
மனைவி – ரோகிணி
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு
அதிதேவதை – ஜலம் ப்ரத்யதி
தேவதை – கௌரி
தலம் – திருப்பதி
நிறம் – வெள்ளை
வாகனம் – வெள்ளைக் குதிரை
தானியம் – நெல்
மலர் – வெள்ளை அரளி
வஸ்திரம் – வெள்ளாடை
ரத்தினம் – முத்து
அன்னம் – தயிர் சாதம்
3.அங்காரகன் (செவ்வாய்)
இவர் வீரபத்திரர் அம்சம்.
சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர்,
பாவ பலனைக் கொடுக்கும் குரூரர். மேஷம்,
விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
மனைவி – சக்தி தேவி
திக்கு -தெற்கு
அதிதேவதை – நிலமகள் ப்ரத்யதி
தேவதை – க்ஷேத்திரபாலகர்
தலம் – வைத்தீசுவரன் கோவில்
நிறம் – சிவப்பு
வாகனம் – ஆட்டுக்கிடா
தானியம் – துவரை
மலர் – செண்பகப்பூ, சிவப்பு அரளி
வஸ்திரம் – சிவப்பு ஆடை
ரத்தினம் – பவளம்
அன்னம் – துவரம் பருப்பு பொடி சாதம்
4.புதன் (அறிவன்)
இவர் சந்திரனுடைய குமாரர்.
தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
மனைவி – இலா
திக்கு – வட கிழக்கு
அதிதேவதை – விஷ்ணு ப்ரத்யதி
தேவதை – நாராயணன்
தலம் – மதுரை
நிறம் – வெளிர் பச்சை
வாகனம் – குதிரை
தானியம் – பச்சைப் பயறு
மலர் – வெண்காந்தள்
வஸ்திரம் – வெண்ணிற ஆடை
ரத்தினம் – மரகதம்
அன்னம் – பாசிப்பருப்பு பொடி சாதம்
5.குரு (வியாழன்)
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர்.
இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
பூரண சுபர். தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
மனைவி – தாரா
திக்கு – வடக்கு
அதிதேவதை – பிரம்மா ப்ரத்யதி
தேவதை – இந்திரன்
தலம் – திருச்செந்தூர்
நிறம் – மஞ்சள்
வாகனம் – மீனம்
தானியம் – கடலை
வஸ்திரம் – மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் – புஷ்பராகம்
அன்னம் – கடலைப் பொடி சாதம் , சுண்டல்.
6.சுக்கிரன் (வெள்ளி)
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர்.
சுபர். ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதி.
மனைவி – சுகிர்தி மற்றும் உர்ஜஸ்வதி
திக்கு – கிழக்கு
அதிதேவதை – இந்திராணி ப்ரத்யதி
தேவதை – இந்திர மருத்துவன்
தலம் – ஸ்ரீரங்கம்
வாகனம் – முதலை
தானியம் – மொச்சை
மலர் – வெண் தாமரை
வஸ்திரம் – வெள்ளாடை
ரத்தினம் – வைரம்
அன்னம் – மொச்சைப் பொடி சாதம் .
7.சனி
இவர் சூரியனுடைய குமாரர்.
பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர்.
சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
மனைவி – நீலாவதி
திக்கு – மேற்கு
அதிதேவதை – யமன் ப்ரத்யதி
தேவதை – பிரஜாபதி
தலம் – திருநள்ளாறு
நிறம் – கருமை வாகனம் – காகம்
தானியம் – எள்
மலர் – கருங்குவளை, வன்னி
வஸ்திரம் – கருப்பு நிற ஆடை
ரத்தினம் – நீலம்
அன்னம் – எள்ளுப்பொடி சாதம்
8.ராகு
இவர் அசுரத்தலையும், நாக உடலும் உடையவர்.
மிக்க வீரம் உடையவர்.
கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
மனைவி – சிம்ஹி
திக்கு – தென் மேற்கு
அதிதேவதை – பசு ப்ரத்யதி
தேவதை – பாம்பு
தலம் – காளத்தி
நிறம் – கருமை
வாகனம் – நீல சிம்மம்
தானியம் – உளுந்து
மலர் – மந்தாரை
வஸ்திரம் – கருப்பு நிற ஆடை
ரத்தினம் – கோமேதகம்
அன்னம் – உளுத்தம் பருப்புப்பொடி சாதம்
9.கேது
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர்.
சிகி என்றும், செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
மனைவி – சித்திரலேகா
திக்கு – வட மேற்கு
அதிதேவதை – சித்திரகுப்தன் ப்ரத்யதி
தேவதை – பிரமன்
தலம் – காளத்தி
நிறம் – செம்மை
வாகனம் – கழுகு
தானியம் – கொள்ளு
மலர் – செவ்வல்லி
வஸ்திரம் – பல நிற ஆடை
ரத்தினம் – வைடூரியம்
அன்னம் – கொள்ளுப்பொடி சாதம்
நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகள்
🎯காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்.
🎯வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.
🎯தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.
🎯கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.
🎯கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.
🎯வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
🎯தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.
🎯வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.
🎯பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால், வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.
🎯16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.
🎯பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.
🎯அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.
🎯சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.
🎯இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.
🎯வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.
மேற்கண்ட செய்திகள் அனைத்தும் புலனக்குழுவில் வெளிவந்தவைகள்
அடிக்குறிப்புகள் என்றால் என்ன? நோக்கமும் பயனும் யாது?
ஆய்வுரையில் நேரடியாகச் சேர்க்க வாய்ப்பு இல்லாதனவாய் ஆய்வுரைக்குத் தொடர்புடையனவாய்ச் சில செய்திகள் ஆய்வுரையில் இடையிடையே வருவது படிப்போட்டத்தைத் தடைப்படுத்துவதாக அமையும். ஆதலால் அப்படிப்பட்ட செய்திகளை அங்கே சேர்க்காமல் தொடர்புடைய இடத்தில் எண் இட்டுவிட்டு அந்த எண்ணுக்கு உரிய விளக்கமாக வேறு ஒரு இடத்தில் தரப்படும் குறிப்புகளை அடிக்குறிப்புகள் என்கிறோம். இந்த அடிக்குறிப்பைக் குறிப்பு என்றும் சொல்லுவது உண்டு.
அடிக்குறிப்பின் வேறுபெயர்கள்
அடிக்குறிப்பு வழக்கமாக ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் தரப்பட்டிருக்கும். அப்படித் தரப்பட்ட காலத்தில் அதற்கு அடிக்குறிப்பு என்று பெயர் தரப்பட்டது. ஒவ்வொரு இயலுக்கும் இறுதியில் அடிக்குறிப்பை அமைப்பது உண்டு. அப்படி அடிக்குறிப்பு இயலின் இறுதியில் அமைந்த போதும் அடிக்குறிப்பு என்ற பெயரே நிலைத்துவிட்டது. நூலின் இறுதியில் ஒவ்வொரு இயலுக்கும் வரிசையாக அடிக்குறிப்புகளைத் தருவதும் உண்டு. அப்படித் தரும் பொழுது கூட அடிக்குறிப்பு என்ற பழைய பெயரே நிலைத்து விட்டது. அடிக்குறிப்பு என்ற பெயருக்குப் பதிலாக குறிப்பு என்ற சொல்லையும் இறுதிக் குறிப்பு என்ற சொல்லையுங்கூடப் பயன் படுத்துவ துண்டு. அடிக்குறிப்பு என்ற குறியீடே எல்லோருக்கும் தெரிந்த பெரும்பான்மை வழக்காக விளங்கி வருகிறது.
அடிக்குறிப்பின் வகைகள்
மேலே நாம் எடுத்துப் பேசிய அடிக்குறிப்பு இரண்டு வகையில் அமையும். முதலாவது, இங்கே தரப்பட்டுள்ள இந்த மேற்கோள் அல்லது இந்தக் கருத்து இன்ன நூலில் இன்ன பக்கத்தில் அமைந்திருக்கிறது என்ற பாங்கில் தரப்படுகின்ற அடிக்குறிப்பு. இந்த அடிக்குறிப்பைப் பார்வை அடிக்குறிப்பு குறிப்பிடுவார்கள். பார்வை என்று அடிக்குறிப்பு எப்பொழுதும், ‘காண்க, இன்னாரின் இன்ன நூலில் இன்ன ‘பக்கம்’ என்ற வாய்பாட்டில் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட அடிக்குறிப்புகள் யாவும் இன்ன நூலைப் பார்க்க வேண்டும் என்ற போக்கில் அமைந்திருப்பதனால் இதனைப் பார்வை அடிக்குறிப்பு என்று குறிப்பிடுவார்கள். இப்படியில்லாமல் ஆய்வில் பேசப்படுகின்ற செய்திகளுக்கு ஒரு வகையில் தொடர்பானதாகவும் ஆனால் ஆய்வுரையில் அப்படியே தருவதற்கு வாய்ப்பளிக்காததாகவும் சில செய்திகள் அமைவது உண்டு. அப்படிப்பட்ட செய்திகளை அடிக் குறிப்பில் தரும்போது அதைச் செய்தி அடிக்குறிப்பு என்று குறிப்பிடுகிறோம். அத்தகைய செய்திகளை அடிக்குறிப்பு எண்ணிட்டு வேறு ஒரு இடத்தில் அடிக்குறிப்பாகத் தருவதே வழக்கம்.
ஆகவே ஆய்வுரைக்கு அமைகின்ற அடிக் குறிப்புகளில் பார்வை அடிக்குறிப்புகளும் உண்டு, செய்தி அடிக்குறிப்புகளும் உண்டு. கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியம் என்ற இலக்கணத்தில் இந்தச் செய்தி வலியுறுத்தப்படுகிறது என்று ஆய்வுரையில் ஒரு தொடர் அமைவதாக வைத்துக் கொள்வோம். அந்தத் தொடரின் இறுதியில் ஒரு அடிக்குறிப்பு எண் இட்டுத் தொல்காப்பியருடைய காலத்தைப்பற்றிய ஒரு செய்தியைத் தருவதாக வைத்துக் கொள்வோம். அப்படிப் பட்ட அடிக்குறிப்புகளை நாம் செய்தி அடிக்குறிப்பு என்று சொல்லுகிறோம். அந்தச் செய்தி அடிக்குறிப்பில் அமைகின்ற செய்தி பின்வருமாறு அமையும். “தொல்காப்பியருடைய காலத்தைப் பல்வேறு வகையில் பலர் குறிப்பிட முற்பட்டாலும் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்பது எல்லோருக்கும் இசைவான ஒரு கால கட்டமாக அமைவதனால் தொல்காப்பியர் காலத்தை இந்த ஆய்வாளர் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்றே கொண்டு ஆய்வை நிகழ்த்துகிறார்” என்று இந்தப் போக்கில் அடிக்குறிப்பு அமையலாம். இப்படிப்பட்ட அடிக்குறிப்புகளைச் செய்தி அடிக்குறிப்பு என்று குறிப்பிடுகிறோம்.
அடிக்குறிப்பு நோக்கம்
அடிக்குறிப்புகளை நாம் ஏன் தருகிறோம்? இன்றியமையாத சில இடங்களில் நாம் குறிப்பிடுகின்ற செய்திக்கு மூலம் அல்லது சான்று எங்கே இருக்கிறது என்பதை வாசிப்பாளர்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டியது ஆய்வாளரின் கடமையாகும். அப்படிச் சுட்டிக்காட்டும் பொழுதுதான் பார்வை அடிக்குறிப்பு அங்கே வந்து இடம் பெறுகிறது. பார்வை அடிக்குறிப்புகளைத் தருவதன் நோக்கம் நாம் சொல்லுகின்ற செய்திகள் சான்றுகளைக் கொண்ட செய்திகள் சரியான செய்திகள் என்பதை உறுதிப்படுத்துவதுதான். இந்தச் செய்தியை ஆய்வுரையிலேயே தராமல் வேறு இடத்தில் தருவதற்குரிய காரணம் படிப்போட்டம் தடைப்படக் கூடாது என்பதே. செய்தி அடிக்குறிப்பை வேறு இடத்தில் தருவதற்குரிய காரணமும் படிப்போட்டம் தடைப்படக்கூடாது என்பதுதான். அன்றியும் ஒருவகையான இடைப்பிறவரல் போல அந்தச் செய்தி அடிக்குறிப்பு அமைந்திருப்பதனால் அதனை நாம் வேறு இடத்தில் தருகிறோம். அந்த அடிக்குறிப்பைத் தராமலேயே போயிருந்தால் வாசிப்பாளர்களுக்கு ஏற்படுகின்ற ஐயங்களுக்கு அல்லது கேள்விகளுக்கு விடையில்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட ஐயங்களுக்கும் வினாக் களுக்கும் விடை கூறுமுகத்தான் அமைவதுதான் இந்தச் செய்தி அடிக்குறிப்பு என்பது.
அடிக்குறிப்பின் பயன்
இப்படி அடிக்குறிப்புகளை அமைத்துக் கொள்வதனால் படிப்போட்டம் சீராக அமைகிறது: ஆய்வாளன் தன் கருத்துகளுக்குரிய சான்றுகளைத் தெளிவாகத் தர வாய்ப்பு ஏற்படுகிறது. செய்தி அடிக்குறிப்புகளைத் தருவதன் மூலம் வாசிப்பாளர்களுக்கு ஏற்படுகின்ற ஐயங்களுக்கு நாமே முன்னறிந்து ஆங்காங்கே விடை சொல்ல முடிகிறது. இத்தகைய பயன்பாடுகளை மனத்தில் கொண்டுதான் அடிக்குறிப்புக்கு நாம் இடம் தருகிறோம். இந்த அடிக் குறிப்புகள் எப்பொழுதும் ஆய்வுரையில் இடையிடையே இடம் பெறக்கூடாது. அங்கே அடிக் குறிப்புக்குரிய எண்கள் மட்டுமே தரப்படும். அடிக்குறிப்புகள் இயலின் இறுதியில் அல்லது நூலின் இறுதியில் இடம் பெறலாம். அடிக்குறிப்பை அந்தந்தப் பக்கத்தின் அடியிலும் தரலாம். எனினும் இன்று நாம் நடைமுறை வசதிக்கேற்ப இயலின் இறுதியில் அடிக் குறிப்புகளைத் தருவது நல்லது என்று கொள்ளுகிறோம். ஆய்வுரையை எழுதி முடித்த பிறகு தட்டச்சு செய்யும் பொழுதும், தட்டச்சு செய்யப்பெற்ற ஆய்வேட்டைப் பின்பு ஒரு காலத்தில் அச்சுக்குக் கொடுக்கும் பொழுதும் இந்த முறை வசதியாக இருக்கும். அந்தந்தப் பக்கத்தில் அடிக்குறிப்பிட்டால் அது தொல்லையாக முடியும். ஆகவே ஒவ்வொரு இயலின் இறுதியிலும் அந்தந்த இயலுக்குரிய அடிக்குறிப்புகளைத் தருவது வரவேற்கத் தக்கது.
அகச்சுட்டு
ஒரு அடிக்குறிப்புகளைத் தரும்போது சில சூழல்களில் இயலில் ஏழாவது அடிக்குறிப்பு மூன்றாவது அடிக்குறிப்பைப் போலவே இருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் ஏழாவது அடிக்குறிப்பை எழுதும்போது ‘காண்க குறிப்பு – மூன்று’ என்று குறிப்பிட வேண்டும். திரும்பவும் மூன்றாவது அடிக்குறிப்பை அங்கே எழுதத் தேவையில்லை. இப்படி ஒரு நூலில் அல்லது ஒரு இயலில் அகத்தே உள்ள பகுதியைச் சுட்டுகின்ற அடிக்குறிப்புகளை அகச்சுட்டு அடிக்குறிப்பு என்று குறிப்பிடலாம். இப்படி வரும் அகச்சுட்டு அடிக்குறிப்புகளில் நான்காவது அடிக்குறிப்பும் ஐந்தாவது அடிக்குறிப்பும் ஒன்று போல அமைய வேண்டும் என்றால் நான்காவது அடிக்குறிப்பை விளக்கமாக எழுதிவிட்டு ஐந்தாவது அடிக்குறிப்புப் பகுதியில் ‘காண்க மேலது’ என்று எழுதினால் போதும்.
அடிக்குறிப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்
அடிக்குறிப்புகளை எழுதும் போது எதிர்பாராத வகையில் சில சிக்கல்கள் தோன்றக்கூடும். அந்தச் சிக்கல்களுக்கெல்லாம் ஆய்வாளர்தான் இடத்திற்கு ஏற்றபடி தீர்வுகளைக் காண வேண்டும். எடுத்துக்காட்டாக ஒன்றைச சொன்னால் பத்துப்பக்கக் கட்டுரையில் இருநூறுக்கு மேற்பட்ட அடிக்குறிப்புகள் வருகின்றன என்று வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட சூழலில் பத்துப் பக்கக் கட்டுரைக்கு இருநூறுக்கு மேற்பட்ட அடிக்குறிப்புகளை அமைப்பது எந்த விதத்திலும் வரவேற்கத்தக்கது அல்ல. அத்தகைய சூழலில் ஏதாவது ஒரு உத்தியைக் குறைத்தாக வேண்டும். அடிக் குறிப்புக்கு உரிய எண்களை கையாண்டு அந்த அடிக்குறிப்புகளின் எண்ணிக்கையைக் இடும் பொழுது ஒரு தொடர் முற்றுப் பெற்ற நிலையில் அந்த தொடரின் இறுதியில் அடிக்குறிப்பு எண்ணைத் தருதல் வேண்டும். இடையிடையே ஒரே தொடரில் இரண்டு மூன்று இடங்களில் அடிக்குறிப்பு எண்களைத் தருவது வரவேற்கத் தக்கது அல்ல. இத்தகைய சிக்கல்கள் ஏற்படும் பொழுதெல்லாம் ஆய்வாளன் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப விழிப்பாக இருந்து தீர்வுகளைக் காண வேண்டும்.
அடிக்குறிப்பில் எண்களும் அடையாளங்களும்
அடிக்குறிப்பை அமைக்க வேண்டிய நேரத்தில் ஆய்வுரைப் பகுதியில் அடிக்குறிப்புக்குரிய எண்களைத் தருகிறோம். எண்களுக்குப் பதிலாகச் சிலுவைக்குறி, உடுக்குறி போலச் சில அடையாளங்களையும் ஆண்டுகளுக்கு முன்பு வழங்கி வந்தனர். எண்களுக்குப் பதில் அடையாளங்களை இடுவது ஒரு பழைய வழக்கம். இந்த வழக்கம் இப்பொழுது வரவேற்கத் தக்கதாக இல்லை. எண்கள் இடுவதே முறையானது. எளிதானது. எண்களைக் கொடுக்கும் பொழுது ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒன்று, இரண்டு, மூன்று என்று புதிது புதிதாக எண்களைத் தந்து வந்தனர். அப்படித் தருவது தான். இயலின் இறுதியில் அடிக்குறிப்பு அமையுமானால் அந்தந்தப் பக்கத்தில் அடிக்குறிப்பு அமையும் பொழுது எண் இடுதல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட இயலில் ஒரு இயலுக்குரிய எல்லா அடிக்குறிப்புகளுக்கும் தொடர் பதினைந்து அடிக்குறிப்புகள் வருவதாக வைத்துக் கொள்வோம். முதல் பதினைந்து வரை தொடர்ச்சியாக அடிக் குறிப்புக்கு எண்கள் தரவேண்டும். இயலின் இறுதியில் பதினைந்து அடிக்குறிப்புகளையும் விளக்கமாக எழுதவேண்டும்.
சில சிறப்புக் குறிப்புகள்
அடிக்குறிப்புகளை எழுதும்போது ஒரு அடிக்குறிப்பே ஒரு பக்கம் இரண்டு பக்கம் என்று போய்விடக் கூடாது. அப்படி ஒரு அடிக்குறிப்பை மிக நீளமாக நீண்ட நிலையில் எழுதுவது வரவேற்கத்தக்கது அல்ல. பார்வை குறிப்புகளை எழுதும்போது ‘காண்க, இன்னாரின் இன்ன நூல், இன்ன பக்கம்’ என்று எழுதுவது மரபு. என்பதை விட்டுவிட்டு இன்னாரின் இன்ன நூல் இன்ன பக்கம் என்றே பலரும் எழுதுவர். அப்படி எழுதினாலும் அதற்குரிய பொருள் காண்க இன்னாரின் இன்ன நூல் இன்ன பக்கம் என்பதுதான். இப்படிக் காண்க காண்க என்று எழுதுவது சலிப்பூட்டுவதாகத் தோன்றுமானால் மேலும் விளக்கங்களுக்குக் காண்க இன்னாரின், இன்ன நூல், இன்ன பக்கம் என்ற வாய்ப்பாட்டில் பார்வை அடிக்குறிப்பை அமைக்கலாம். வேறு சில இடங்களில் இது பற்றிய முழு விவரங்களுக்குக் காண்க இன்னாரின் இன்ன நூல், இன்ன பக்கம்’ என்ற வாய்ப்பாட்டில் அந்த அடிக்குறிப்பை அமைக்கலாம். இப்படியெல்லாம் அழகியல் நோக்கில் ஆய்வாளன் தேவையான சீர்திருத்தங்களை ஆங்காங்கே ஆய்வுரையில் அமைத்துக் ஆய்வேட்டை உருவாக்கி வழங்கும்போது ஆய்வாளனுக்கு அழகியல் உணர்ச்சியும் வேண்டும். அடிக்குறிப்புகள் ஆய்வாளனுக்கு உதவியாக அழகுபடுத்தவும் கொள்ளலாம். அமைவன: ஆய்வுரையை சிறப்பிக்கவும் செம்மையாக்கவும் அடிக்குறிப்புகள் உதவுகின்றன. அடிக்குறிப்புகள் எல்லா ஆய்வுரைக்கும் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்னும் நியதி ஒன்றும் இல்லை. தேவைப்படாமல் போனால் அது ஒரு பெரிய குறையாக ஒருகால் அடிக்குறிப்பே ஆகிவிடாது. ஆனால் இயல்பாக அடிக்குறிப்புகள் ஆய்வுக்குத் தேவைப்படும்.
கட்டுரையின் ஆசிரியர்
டாக்டர் பொற்கோ
பொன்.கோதண்டராமன்
ஐந்திணைப் பதிப்பகம்
சென்னை – 600 005.
சாகித்திய விருது பெற்ற தமிழ்நூல்கள்
சாகித்திய விருது பெற்ற தமிழ் நூல்கள்
| வ.எண் | ஆண்டு | இலக்கிய வகை | ஆசிரியரின் பெயர் | நூலின் பெயர் |
|---|---|---|---|---|
| 1 | 1955 | கட்டுரைத் தொகுப்பு | ரா. பி. சேதுப்பிள்ளை | தமிழ் இன்பம் |
| 2 | 1956 | புதினம் | கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி) | அலை ஓசை |
| 3 | 1957 | வழங்கப்படவில்லை | ||
| 4 | 1958 | உரைநடை | சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி | சக்கரவர்த்தித் திருமகன் |
| 5 | 1959 | வழங்கப்படவில்லை | ||
| 6 | 1960 | வழங்கப்படவில்லை | ||
| 7 | 1961 | புதினம் | மு. வரதராசன் | அகல் விளக்கு |
| 8 | 1962 | பயண நூல் | சோமு (மீ. ப. சோமசுந்தரம்) | அக்கரைச் சீமையில் |
| 9 | 1963 | புதினம் | அகிலன் | அக்கரைச் சீமையில் |
| 10 | 1964 | வழங்கப்படவில்லை | ||
| 11 | 1965 | வாழ்க்கை வரலாற்று நூல் | பி. ஸ்ரீ. ஆச்சார்யா | ஸ்ரீ ராமானுஜர் |
| 12 | 1966 | வாழ்க்கை வரலாற்று நூல் | ம. பொ. சிவஞானம் | வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு |
| 13 | 1967 | இலக்கியத் திறனாய்வு | கி. வா. ஜகந்நாதன் | வீரர் உலகம் |
| 14 | 1968 | கவிதை | அ. சீனிவாச ராகவன் | வெள்ளைப் பறவை |
| 15 | 1969 | நாடகம் | பாரதிதாசன் | பிசிராந்தையார் |
| 16 | 1970 | சிறுகதைத் தொகுப்பு | கு. அழகிரிசாமி | அன்பளிப்பு |
| 17 | 1971 | புதினம் | நா. பார்த்தசாரதி | சமுதாய வீதி |
| 18 | 1972 | புதினம் | ஜெயகாந்தன் | சில நேரங்களில் சில மனிதர்கள் |
| 19 | 1973 | புதினம் | ராஜம் கிருஷ்ணன் | வேருக்கு நீர் |
| 20 | 1974 | இலக்கியத் திறனாய்வு | க. த. திருநாவுக்கரசு | திருக்குறள் நீதி இலக்கியம் |
| 21 | 1975 | இலக்கியத் திறனாய்வு | இரா. தண்டாயுதம் | தற்காலத் தமிழ் இலக்கியம் |
| 22 | 1976 | வழங்கப்படவில்லை | ||
| 23 | 1977 | புதினம் | இந்திரா பார்த்தசாரதி | குருதிப்புனல் |
| 24 | 1978 | இலக்கியத் திறனாய்வு | வல்லிக்கண்ணன் | புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் |
| 25 | 1979 | சிறுகதைத் தொகுப்பு | தி. ஜானகிராமன் | சக்தி வைத்தியம் |
| 26 | 1980 | புதினம் | கண்ணதாசன் | சேரமான் காதலி |
| 27 | 1981 | இலக்கியத் திறனாய்வு | மா. ராமலிங்கம் | புதிய உரைநடை |
| 28 | 1982 | இலக்கிய வரலாறு | பி. எஸ். ராமையா | மணிக்கொடி காலம் |
| 29 | 1983 | இலக்கியத் திறனாய்வு | தொ. மு. சி. ரகுநாதன் | பாரதி: காலமும் கருத்தும் |
| 30 | 1984 | புதினம் | லட்சுமி (திரிபுரசுந்தரி) | ஒரு காவிரியைப் போல |
| 31 | 1985 | இலக்கியத் திறனாய்வு | அ. ச. ஞானசம்பந்தன் | கம்பன்: புதிய பார்வை |
| 32 | 1986 | இலக்கியத் திறனாய்வு | க. நா. சுப்ரமண்யம் | இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் |
| 33 | 1987 | சிறுகதைத் தொகுப்பு | ஆதவன் சுந்தரம் | முதலில் இரவு வரும் |
| 34 | 1988 | இலக்கியத் திறனாய்வு | வா. செ. குழந்தைசாமி | வாழும் வள்ளுவம் |
| 35 | 1989 | தன்வரலாற்றுக் கட்டுரை | லா. ச. ராமாமிர்தம் | சிந்தாநதி |
| 36 | 1990 | புதினம் | சு. சமுத்திரம் | வேரில் பழுத்த பலா |
| 37 | 1991 | புதினம் | கி. ராஜநாராயணன் | கோபல்லபுரத்து மக்கள் |
| 38 | 1992 | வரலாற்றுப் புதினம் | கோவி. மணிசேகரன் | குற்றாலக் குறிஞ்சி |
| 39 | 1993 | புதினம் | எம். வி. வெங்கட்ராம் | காதுகள் |
| 40 | 1994 | புதினம் | பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்) | புதிய தரிசனங்கள் |
| 41 | 1995 | புதினம் | பிரபஞ்சன் | வானம் வசப்படும் |
| 42 | 1996 | சிறுகதைத் தொகுப்பு | அசோகமித்திரன் | அப்பாவின் சினேகிதர் |
| 43 | 1997 | புதினம் | தோப்பில் முகமது மீரான் | சாய்வு நாற்காலி |
| 44 | 1998 | புதினம் | சா. கந்தசாமி | விசாரணைக் கமிஷன் |
| 45 | 1999 | வசன கவிதைகளின் தொகுப்பு | அப்துல் ரகுமான் | ஆலாபனை |
| 46 | 2000 | விமர்சனம் | தி. க. சிவசங்கரன் | விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் |
| 47 | 2001 | புதினம் | சி. சு. செல்லப்பா | சுதந்திர தாகம் |
| 48 | 2002 | கவிதை நூல் | சிற்பி பாலசுப்ரமணியம் | ஒரு கிராமத்து நதி |
| 49 | 2003 | புதினம் | இரா. வைரமுத்து | கள்ளிக்காட்டு இதிகாசம் |
| 50 | 2004 | கவிதை நூல் | தமிழன்பன் | வணக்கம் வள்ளுவ! |
| 51 | 2005 | புதினம் | கோ. திலகவதி | கல்மரம் |
| 52 | 2006 | கவிதை நூல் | மு. மேத்தா | ஆகாயத்துக்கு அடுத்த வீடு |
| 53 | 2007 | புதினம் | நீல பத்மநாபன் | இலை உதிர் காலம் |
| 54 | 2008 | சிறுகதைத் தொகுப்பு | மேலாண்மை பொன்னுசாமி | மின்சாரப் பூ |
| 55 | 2009 | கவிதை நூல் | புவியரசு | கையொப்பம் |
| 56 | 2010 | சிறுகதைத் தொகுப்பு | நாஞ்சில் நாடன் | சூடிய பூ சூடற்க |
| 57 | 2011 | புதினம் | சு. வெங்கடேசன் | காவல் கோட்டம் |
| 58 | 2012 | புதினம் | டேனியல் செல்வராஜ் | தோல் |
| 59 | 2013 | புதினம் | ஜோ டி குரூஸ் | கொற்கை |
| 60 | 2014 | புதினம் | பூமணி | அஞ்ஞாடி |
| 61 | 2015 | கட்டுரைத் தொகுப்பு | ஆ. மாதவன் | இலக்கியச் சுவடுகள் |
| 62 | 2016 | சிறுகதைத் தொகுப்பு | வண்ணதாசன் | ஒரு சிறு இசை |
| 63 | 2017 | கவிதை நூல் | இன்குலாப் | காந்தள் நாட்கள் |
| 64 | 2018 | புதினம் | எஸ். ராமகிருஷ்ணன் | சஞ்சாரம் |
| 65 | 2019 | புதினம் | சோ. தர்மன் | சூல் |
| 66 | 2020 | புதினம் | இமையம் | செல்லாத பணம் |
| 67 | 2021 | சிறுகதைத் தொகுப்பு | அம்பை | சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை |
| 68 | 2022 | புதினம் | மு. ராஜேந்திரன் | காலா பாணி |
| 69 | 2023 | புதினம் | தேவிபாரதி | நீர்வழிப் படூஉம் |
| 70 | 2024 | மொழிபெயர்ப்பு | கண்ணையன் தட்சிணாமூர்த்தி | தி பிளாக் ஹில் |
உங்கள் தேசத்தில் பிச்சைக்காரர்கள் – முனைவர் நா.சாரதாமணி
நீங்கள் பிறந்துள்ள இந்தத் தேசத்தில் அநேகமான செல்வங்களும் கனிமங்களும் உள்ளன. இது ஒரு தன்னிறைவு பெற்ற சிறப்பான நாடு. அவ்வாறு இருக்கின்றபொழுது ஏன் பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள நாடாக விளங்குகின்றது. இந்த நிலையின்மீது கவனம் செலுத்தி மாற்றுபவர் யார்? உங்கள் வீட்டிலுள்ள நபர்களில் யாரேனும் ஒருவர் உணவு இல்லாமல் பட்டினியாக இருந்தால் உங்களால் அதனை பார்த்தும் பாராதவாறு இருக்க இயலுமா? பசியைப் போக்கும் பொறுப்பு உங்களது அல்லவா!
இதனைப் போலவே இந்தத் தேசமும். இங்கு ஒருவன் பசிக்காக மற்றவரிடம் கையேந்துகின்றான் என்றால் இந்நாட்டில் உள்ள அனைவரும் வெட்கப்பட வேண்டும். அவ்வாறு கையேந்தி பிச்சை கேட்பவரின் உழைப்பை ஆக்கத்தை ஆக்கிரமித்தவர் யார்? குழந்தைகள், இளையவயது உடையவர், வயதானவர் என்று வயதில் பாரபட்சமில்லாமல் பிச்சை எடுக்கின்றனர். உறவினர் அல்லாதவர், உடல் ஊனமுற்றவர், நடக்க இயலாத நோயுற்ற முதியவர் என்று இவர்களுக்கு ஆதரவு தந்து உணவு கொடுத்துப் பாதுகாக்க நமது நாட்டில் இடம் இல்லையா? அல்லது நாடு பஞ்சத்தில் உள்ளதா? சிந்தனை செய்யுங்கள்!
நான் கேட்ட கைபேசியில் செய்தி ஒன்று, ஒரு தாய்க்கு மூன்று பிள்ளைகள். ஏழ்மையான குடும்பம். அந்த ஏழைத்தாய் தான்பட்டினி இருந்து தன்குழந்தைகளை நன்றாக வளர்த்துத் திருமணமும் செய்து கொடுத்தார். வருடங்கள் சென்றன. பேரன் பேத்திகள் என்று வந்து விட்டனர். இந்த ஏழை தாய்க்கும் வயதாகிவிட்டது. அந்த வயதான தாயாரை யார் பார்த்துக்கொள்வது? என்னால் முடியாது. அவள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒவ்வொரு மகளும் போட்டிப்போட அந்தத்தாய் வீட்டை விட்டுத் தெருவுக்கு பிச்சை எடுப்பதற்காக வந்துவிட்டாள்.
நல்லதோர் வீணை
மனிதப்பிறப்பு என்பது நல்ல அழகான வீணையாகும். இந்தப் பூமியில் எத்தனையோ உயிர்கள் பிறப்பெடுத்துள்ளன. ஆனால் நாம் மட்டுமே மனிதனாகத் தோற்றம் பெற்றுள்ளோம். இந்த மனித உடலையும் உயிரையும் கொண்டு ஆயிரமாயிரம் ஆக்கங்களை விளைவிக்கலாம் என்று பாரதியார் கூறியுள்ளார்.
“நல்லதோர் வீணை செய்தே – அதை
நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டிய படிசெல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் – சிவ
சக்தியைப் பாடும் நல்அகம் கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ”
என்று சிவசக்தியைப் பார்த்துக் கேட்கின்றார் பாரதி. இந்த மனிதப்பிறப்பில் நாம் வாழும் சமூகத்தில் யாசிக்கும் நிலையில் மனிதர்களுக்காகச் செய்வன ஆயிரம் உள்ளன. அவர்களுக்காகப் பொருளைப் பெற்றுத்தருவது போன்ற பல கடமைகள் உள்ளன. அவற்றை எல்லாம் விடுத்து இந்த மனிதப்பிறவியை வீணாக்காதீர்! சிந்தனை செய்யுங்கள்!!
தன்உயிரை தானமாக்கி; வேண்டுதல் வைத்த இளைஞர் (உண்மை நிகழ்வு)
இளைஞர் ஒருவர் நன்றாகப் படித்துத் தனக்கு ஒருவேலை வேண்டும் என்று அயராது பாடுபட்டார். இரவுபகல் பாராமல் படித்தார். ஆனால் அவர் படிப்பை முடித்துத் பத்து வருடங்களாக வேலை இல்லாமல் மன வேதனைக்கு உள்ளனார். பின்னர் தனது முப்பத்திரெண்டாவது வயதில் இறைவனிடம் சென்று வேண்டிக்கொண்டார். எனக்கு அரசாங்க வங்கியில் வேலை ஒன்று கிடைத்து விட்டால் என் உயிரையே உனக்கு தருகின்றேன் என்று வேண்டிக்கொண்டார். பின்னர் தேர்வுகள் எழுதி ஆறு மாதத்தில் அவருக்கு மும்பையில் ஒரு வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜர் (உதவி மேலாளர்) பதவி கிடைத்துவிட்டது. மிகவும் மகிழ்ச்சி அடைந்த அந்த இளைஞர் மும்பை சென்று வேலையில் சேர்ந்துவிட்டார். சேர்ந்து பதினைந்து நாட்கள் சென்றன. இறைவனுக்கு கொடுத்த வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நாளும் தோன்றிக்கொண்டே இருந்தது. அதனால், ஓடிவரும் ரயிலின் முன்னே பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அவர் நாகர்கோவிலைச் சார்ந்தவர். இந்தச் செய்தியை வீடியோவாகப் பார்த்தவுடன் மனம் மிகவும் சங்கடப்பட்டது.
ஒரு மேலாளர் பதவி வகிக்கும் தகுதியுடைய ஒருவர் இவ்வாறு செய்து கொள்வது சாதாரண ஒன்றாக எடுத்துக்கொள்ள இயலாது. மனிதர்களுக்கு தகுந்தவேலை கிடைக்கவில்லை என்றால் மனவேதனை இருக்கலாம். ஆனால் மனஅழுத்தம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாமோ என்னவோ! ஒரு இளைஞர் இவ்வாறு நடந்து கொள்வதற்கு அதற்கு காரணங்களாகப் பலவற்றைக் கூறலாம். அவரை வளர்த்த பெற்றோர்கள், கல்வியைக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், முரணாகப் பேசும் உறவினர்கள், சமுதாயம் இவற்றையெல்லாம் கூறலாம். இவை அந்த இளைஞர்களுக்கு வாழ்வில் சவால்களைத் தன்னம்பிக்கையை தரவில்லையா? அல்லது முன்னேறவிடாமல் இளைஞர்களைத் தடுக்கும் சக்தி ஏதேனும் செயல்படுகிறதா? மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு நம் சமுதாயத்தில் இடமில்லையா? யோசியுங்கள்!
தந்தையை தெருவில் விட்ட அவலம்
தான்மேலே ஏறி வருவதற்கு காரணமாக இருந்த ஏணியை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டதைப் போன்ற பல நிகழ்வுகள் சமுதாயத்தில் நடந்து கொண்டிரக்கின்றன. ஒரு குடும்பத்தில் தாய்தந்தைக்கு ஒரு பெண்குழந்தை. அந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கி வெளிநாட்டில் சென்று பணிபுரியும் அளவிற்கு வளர்த்துவிட்டனர். அங்கு சென்றதும் அவள் தானேதிருமணம் செய்துகொண்டாள். ஆண்டுகள் பல கடந்தன. பெற்றோருக்கு இளமைமாறி முதுமையும் வந்தது. அவளின் தாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பணத்தை மட்டும் அனுப்பி வைத்தாள் அந்த அருமை மகள். இறுதிக்கடன்களை முடித்தார் தந்தை. மேலும் பலஆண்டுகள் அவளிடமிருந்து பணமும் போன்கால்கள் மட்டுமே வந்தன. இவ்வாறு சிலவருடங்கள் சென்றன. அந்தத் தந்தையும் தள்ளாட தொடங்கிவிட்டார். அவரால் தனக்கான உணவைத் தானேசெய்து கொள்ள இயலவில்லை. மற்றவரின் உதவி தேவைப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் மகள் குடும்பத்துடன் தன் சொந்தஊருக்கு வந்தாள். தந்தையின் சொந்தத்திற்காக அவள் வரவில்லை. அந்த அழகான வீட்டை விற்றுப்போக வந்தாள். தன் தந்தையைத் தன்னுடன் வந்துவிடுமாறும் இந்த வீட்டை விற்று விடலாம் என்றும் வாதாடினாள். தந்தை மறுப்பு கூறவே, அவரின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாள், இந்த வீடு என் தாத்தாவின் சொத்து. எனக்கே உரிமை என்றாள். இந்த அவலமான நிலை ஏற்பட வளர்ப்பு காரணமா? அல்லது சமுதாயம் காரணமா? சிந்தியுங்கள்!
குழந்தைகளின் ஏழ்மை நிலை
ஆதரவற்ற குழந்தைகளைப் பிச்சைக்காரர்களாக்கும் அவலநிலை வேறு நாடுகளில் உள்ளதோ இல்லையோ? நம் நாட்டில் பல இடங்களில் உள்ளன. ஒருமுறை காலை நேரத்தில் கல்லூரிக்கு செல்லும் அவசரத்தில் இருந்தேன். அப்போது ஒரு சிறுவன் ஓடிவந்து அம்மா பசிக்கிறது ஏதேனும் கொடுங்கள் என்று கையை நீட்டினான். உடனே நான் டிக்கெட் எடுப்பதற்காக வைத்திருந்த சில்லரைகளில் ஒன்றை பார்த்துக் கொண்டே, “தம்பி நீ படிக்கச் செல்ல வில்லையா?” என்றேன். என் அருகில் இருந்த தோழி, “அவனுக்கு பணம் தரவேண்டாம்” என்று கூற, அவன் என்கையைப் பிடித்துக்கொண்டு அழுதான். “என் கையில் மிகக்குறைந்த சில்லறைகளே உள்ளன. இவ்வாறு சென்றால் என்னை அடிப்பார்கள்” என்று கூறி என்கையில் இருந்த ஒரு நாணயத்தைப் பெற்றுக்கொண்டு மின்னலாக ஓடிவிட்டான்.
இன்னொரு சிறுவன் அவ்வாறுதான் சில புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அழுதான். அவன் முகத்தில் அவ்வளவு பயம் கலந்த கவலை ரேகைகள். பின்னர்தான் தோழி கூறினார், இந்தக் குழந்தைகள் பெற்றோர்கள் இல்லாதவர். அவர்களைச் சில சமூகவிரோதிகள் பிடித்துக்கொண்டு மிரட்டி ஊனம் செய்து இவ்வாறு பிச்சை எடுக்க விடுகின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு மக்கள்தரும் சில்லரைகளைத் தலைவன் என்ற ஒருவன் எடுத்துக் கொள்வான். எனவே எப்போதுமே இந்தக் குழந்தைகள் பசியுடன் இருப்பார்கள். பிளாட்பாரத்தில் கொசுக்கடியில் உறங்குவார்கள். இதுதான் இவர்களின் வாழ்க்கை என்று கூறினார்.
ஒரு குழந்தை கையேந்துவது பெற்றோரிடமே!
ஒரு குழந்தை கை ஏந்துவது தன் பெற்றோரிடமும் கடவுளிடமும் தானே! தவிர கண்ணில் பார்த்தவரிடமெல்லாம் சென்று கையேந்துவது எவ்வகையில் நியாயம். எவனோ ஒருவன் வங்கியில் செலுத்தும் பணத்தைக் கடனாகப்பெற்றுப் பல கோடிகளை உல்லாசமாகச் செலவழித்துவிட்டு தான்பெரிய மனிதன் என்று கூறிக்கொண்டே நாடுகளைச் சுற்றும் மனிதர்களும் நமது நாட்டில்தான் வாழ்கிறார்கள். ஒருவேளை உணவுகூட உண்ணாமல் உயிர்வாழும் குழந்தைகளும் நம் நாட்டில்தான் வாழ்கின்றார்கள். என்ன ஒரு அவலநிலை பாருங்கள்! மனிதர்களின் மனதில் சுயநலம் பெருகிவிட்டது தனது குடும்பம், குழந்தை என்ற சுயநலம். அவர்கள் எல்லா சுகங்களும் பெற்று நன்றாக வாழ்ந்தால் போதும் என்று அந்தச் சுயநலமே இதற்கு காரணம்.
சுயநலம் சாதிப்பது என்ன?
சமுதாயத்தில் சுயநலம் நிறைந்த இந்த உலகத்தில் ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலம் என்ன? அவர்களின் மனதில் இந்தத் துன்பத்தில் இருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையை ஊட்டி மீட்டெடுப்பவர் யார்? பசியுடன் பிச்சை எடுக்கும் குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு வீட்டில் சென்று மனதில் ஒருசலனமும் இல்லாமல் வயிறுநிறைய உணவை உண்டுவிட்டு நிம்மதியாக உறங்குகிறோமே! இதைவிட சுயநலத்திற்கு உதாரணம் வேறு உண்டா? இந்நிலையைச் சிறிதாவது மாற்ற முயற்சி எடுத்து இருப்போமா? யோசனையாவது செய்து இருப்போமா? குழந்தைகள் என்பவர்கள் அடுத்து நம்நாட்டை காக்கபோகும் முதுகெலும்புகள். அவர்களை இந்த நிலையில் வைத்திருக்கும் நாம் எதை சாதிப்பதற்காகச் சுயநலத்துடன் வாழ்கிறோம்? வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். எதற்காக என் வாழ்க்கையில் முன்னேற்றம் வரவேண்டும். சமுதாயத்தில் இந்த அவலத்தை நீக்கவேண்டும் என்ற ஒரு தர்மமான குறிக்கோள் இருக்க வேண்டாமா? யோசியுங்கள்!
மனித வாழ்க்கை என்பது யாருக்கும் நிரந்தரமானது அல்ல. உயர்ந்தவன் தாழ்ந்த நிலைக்கு வந்து விடுவான். முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவலாம். எப்போதுமே உங்களின் வேலை, வீடு என்று தங்களின் நலன் கருதியே செயல்படாதீர்கள். உங்களைச் சுற்றி எவ்வளவு துயரங்கள் பசி பட்டினிகள் நிறைந்துள்ளன என்பதை சிறிது பார்வையைப் பரவவிடுங்கள். முடிந்தவரை தேசம் பசிப்பிணி இல்லாத நாடாக மாறவேண்டும் என்று யோசனை செய்து முயலுங்கள். அவ்வாறு முயன்றால் இந்த உலக ஆற்றல்கள் எல்லாம் துணையாக நிற்கும் என்பதை நம்புங்கள்.
கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்
முனைவர் நா.சாரதாமணி அவர்களின் படைப்புகளை மேலும் படிக்க… கிளிக் செய்யவும்














