திருநாவுக்கரசு சுவாமிகள் | அப்பர்

திருநாவுக்கரசர் நாயனார்

திருநாவுக்கரசு சுவாமிகள்


            திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவாரூரில், வேளாளர் மரபில் பிறந்தவர் மருள்நீக்கியார். பின்னாளில் திருநாவுக்கரசராக உயர்ந்தவர் இவரே ஆவார். இவரது தந்தையார் புகழனார். தாய் மாதினியார். தமக்கையின் பெயர் திலகவதியார். திலகவதியாரை, கலிப்பகை நாயனார் என்ற சேனாதி பதிக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் கருதினர். ஆனால் திருமணம் நிகழவிருந்த காலத்தில் கலிப்பகையார் போருக்குச் சென்று இறந்தார்.

இந்நிலையில் புகழனாரும், மாதினியாரும் அடுத்தடுத்து உயிர் நீத்தார்கள். அதனால் மனம் உடைந்த திலகவதியார் தானும் உயிர் துறக்க எண்ணினார். ஆனால் தம்பி மருள்நீக்கியாரைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தால், தன் முடிவை மாற்றிக் கொண்டார் திலகவதியார். இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டே அறவாழ்வு வாழ்ந்து வந்தார். மருள்நீக்கியாரும் தமக்கையைப் போலவே சமுதாயப் பணிகளைச் செய்து வந்தார்.

இந்நாளில் வடநாட்டிலுள்ள பாடலிபுத்திரம் சென்ற மருள்நீக்கியாரை, சமணர்கள் சமண மதத்தில் இணைத்தனர். தருமசேனர் என்ற பெயரையும் சூட்டினர். தன் தம்பி சமண மதத்தைச் சார்ந்துவிட்டதை அறிந்து, சிறந்த சிவபக்தையாக விளங்கிய திலகவதியார், தம் தம்பியாரை சைவ மதத்திற்கு மாற்றும்படி சிவபெருமானை வேண்டினார். அவ்வாறே செய்வதாக இறைவரும் வாக்கருளினார்.

சிவபெருமானது திருவுள்ளத்தால் தருமசேனரின் வயிற்றில் சூலை நோய் வந்தது. அந்நோயைத் தீர்க்க, சமணர்கள் அரும்பாடு பட்டும் அச்சூலை நோய் குணமாகவில்லை. எனவே அவர்கள் அம்முயற்சியைக் கைவிட்டனர்.

தருமசேனருக்கு, தம் தமக்கையின் நினைவு வந்தது. தமக்கைக்குச் செய்தி அனுப்பினார். ஆனால் திலகவதி யாரோ, தான் சமண மடத்திற்கு வரமுடியாது என்று கூறிவிட்டார். எனவே, தருமசேனர் தென்னகம் புறப்பட்டார். திலகவதியாரின் திருவதிகை மடத்தை வந்தடைந்தார்.

திலகவதியார் தம்பி தருமசேனருக்குத் தீட்சை அளித்தார். இருவரும் வீரட்டானேசுவரர் ஆலயம் சென்று தொழுதனர். அங்கு தருமசேனர், ‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்’ என்ற திருப்பதிகத்தைப் பாட, அவரது சூலை நோய் விலகியது.

எம்பெயரில் தீம் பதிகம் பாடியதால் இனி, ‘நாவுக்கரசு’ என்று அழைக்கப் பெறுவாய் என்ற அசரீரியும் எழுந்தது. சிவபெருமான் கருணையை எண்ணி மெய்சிலிர்த்தார் நாவுக்கரசர். பிறகு, இராவணனுக்கு அருள்புரிந்த திருவட்டிறத்தை துதிக்கத் தொடங்கினார். மனம், வாக்கு, காயம் மூன்றாலும் பெருமானைத் தொழுதார். ஆலயங்களில் புதர்களை நீக்கி உழவாரப் பணி செய்தார். தன்னை இறைவனின் அடிமையாகவேக் கருதினார் நாவுக்கரசர்.

அவ்வேளையில், சமண மதத்தை விட்டுவிட்டு, சைவ மதத்திற்கு மாறிவிட்ட நாவுக்கரசர் மீது சமணக் குருக்கள் கோபம் கொண்டனர். சமணத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்த மன்னனிடம், பலவாறு பொய் கூறினர். மன்னன், நாவுக்கரசரை இழுத்து வரும்படிக் கூறினான். நாவுக்கரசரும், ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற பதிகத்தைப் பாடி வந்தார்.

வஞ்சகம் கொண்ட சமணர்கள் மன்னனிடம், நாவுக்கரசை சுண்ணாம்பு சுடும் நீற்றறையில் அடைக்க வேண்டும் என்று கூறினர். மன்னனும் அவ்வாறே கட்டளையிட்டான். நீற்றறைக்குள் தள்ளப்பட்ட நாவுக்கரசர், ‘மாசில் வீணையும்’ என்ற திருக்குறுந்தொகையைப் பாடினார். ஏழு நாட்கள் கழித்துப் பார்க்கையில், எவ்விதத் துன்பமுமின்றி அமர்ந்திருந்த நாவுக்கரசரைக் கண்ட சமணர்கள் திகைத்தனர்.

மன்னரிடம் கூறி நாவுக்கரசருக்கு நஞ்சை ஊட்டச் செய்தனர். நஞ்சும் பலனற்றுப் போனது. பிறகு யானையை விட்டு மிதிக்கக் கூறினர். நாவுக்கரசரோ, ‘யான் வீரட்டநாதன் அடியவன்; அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை’ என்று பாடினார். யானை அவரை வலம் வந்து வணங்கிப் போயிற்று.

மனம் கொதித்த சமண வஞ்சகர்கள், மன்னரிடம் கூறி நாவுக்கரசரின் உடலோடு கல்லைக் கட்டி, கடலில் எறியும்படிச் செய்தனர். ‘கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்று பாடினார் நாவரசர். கல் கடல் மீது மிதந்தது. மெதுவாய் நகர்ந்து திருப்பாதிரிப் புலியூரை அடைந்தது. நாவரசர் அங்குள்ள பெருமானையும் அன்னையையும் பாடி, சிலகாலம் களித்திருந்தார்.

            பிறகு, திருவதிகைக்குத் திரும்பினார். பல திருப்பதிகங்களைப் பாடிப் பரவசம் அடைந்தார். இந்நிலையில் பல்லவ மன்னனும் நாவரசரின் பெருமையை உணர்ந்தான். திருவதிகை வந்து அவரை வணங்கினான். அடியவரானான். மன்னன் திருவதிகையிலே குணபர வீச்சரம் என்னும் சிவாலயம் கட்டினான்.

            நாவுக்கரசர் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார். திருப்பெண்ணாகடத்திலுள்ள திருத்தூங்கானை மாடம் சென்று அங்குள்ள இறைவரிடம், “அடியேன் உடல் சமணத் தொடர்புடையது. இவ்வுடலோடு நான் உயிர் வாழ மாட்டேன். என் உடலில் சூலம் மற்றும் இடப முத்திரை பொறித்து அருள வேண்டும்!” என்று வேண்டி பதிகம் ஒன்றைப் பாடினார். சிவனருளால் சிவகணம் ஒன்று தோன்றி, நாவரசரின் தோளில் சிவ முத்திரைகளைப் பொறித்தது.

            சுவாமிகள் சிவனருளை எண்ணி உருகி நின்றார். பின், தில்லை முதலிய பல திருத்தலங்களுக்குச் சென்று வணங்கினார். தில்லை வீதியில் படுத்து உருண்டபடியே தில்லையைக் கடந்தார். பின் சீர்காழியைச் சென்றடைந்தார்.

சீர்காழியில் உமையன்னையிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்த மூர்த்தி பெருமானைப் பற்றி கேட்டறிந்து, அவரை வழிபட நினைத்தார். சம்பந்தப் பெருமானைச் சந்தித்தார். அவரது திருவடியில் விழுந்து வணங்கினார். அது கண்டு பதறிய சம்பந்தப் பெருமான், ‘அப்பரே!’ என்றழைக்க, ‘அடியேன்’ என்றார் நாவரசர். அந்நாளிலிருந்து நாவுக் கரசரை அப்பர் என்றும் மக்கள் அழைக்கலாயினர்.

நாவரசரும், சம்பந்தப் பெருமானும் திருமடத்தில் பலநாள் தங்கியிருந்து சிவபிரானைப் பாடிக் களித்தனர். இருவரும் பல திருத்தலங்களுக்குச் சென்று இறைவனைப் பாடினர். சம்பந்தர் சீர்காழிக்குத் திரும்ப, நாவரசர் பல திருத்தலங்களுக்குச் சென்று இறைவனை வணங்கி, பின் திங்களூரைச் சென்றடைந்தார். திங்களூரில் தன் பெயரில் அன்னசாலை, தண்ணீர்ப் பந்தல் போன்றவைகள் நடத்தி அரும்பணி செய்துவந்த அப்பூதி அடிகளைப் பற்றி அறிந்து மெய்யுருகினார்.

அப்பூதி அடிகளின் வீட்டில் அமுதுண்ணச் சென்றார். அந்நேரத்தில், பாம்பு தீண்டி இறந்து போன அப்பூதி அடிகளாரின் மூத்தப் புதல்வனது உடலை, சிவாலயத்தின் முன் கொண்டு வைத்து திருப்பதிகம் பாடினார். அவனும் உயிர் பெற்று எழுந்தான்.

பின்னர் திருவாரூர் முதலிய தலங்களுக்குச் சென்று திருப்புகலூர் வந்தடைந்தார். அங்கு முருக நாயனார், சிறுத்தொண்ட நாயனார், நீலநக்க நாயனார், சம்பந்தப் பெருமான் போன்ற அடியார்களைச் சந்தித்து பரவசம் எய்தினார்.

அதன் பிறகு அப்பரும் சம்பந்தரும் திருவீழிமிழலை சென்று அங்குள்ள இறைவரை வழிபட்டனர். அக்காலத்தில் நாட்டில் மழையின்றி பஞ்சம் உண்டாகியிருந்தது. எனவே இறைவர் இருவருக்கும் தினமும் ஆளுக்கொரு படிக்காசு தந்தான். அதைக்கொண்டு இருவரும் பல அடியவர்களுக்கு அமுது படைத்து உதவினர்.

அவ்விருவரும் திருமறைக்காடு என்னும் வேதாரணி யம் சென்றனர். அங்குள்ள திருக்கோயிலின் திருக்கதவு, வேதங்களால் பூசிக்கப்பட்டு அடைக்கப்பட்டுக் கிடந்தது. யாராலும் திறக்க இயலவில்லை. ஆதலால் அதன் அருகில் வேறொரு சிறிய வாசல் அமைத்து, அடியவர்கள் அதன் வழியே சென்று இறைவனை வணங்கி வந்தனர்.

அதைப்பற்றி அறிந்த நாவரசரும், சம்பந்தரும் அத்திருக் கதவை திறந்து மூட எண்ணினர். அப்பர், “பண்ணினேர்… கண்ணினால் உமைக்காண கதவைத் திண்ணமாகத் திறந்தருள் செய்மினே” என்று பாடினார். நெடுங்காலமாகப் பூட்டிக் கிடந்த அக்கதவு திறந்தது. அதன்பிறகு சம்பந்தர் திருப்பதிகம் ஒன்றைப் பாடத் தொடங்கியதுமே, கதவு மீண்டும் மூடிக் கொண்டது. நாள்தோறும் திருக்கதவு திறந்து, மூடவேண்டும் என்பதற்காகவே அவ்விருவரும் அவ்வாறு செய்தனர்.

அன்றிரவு நாவுக்கரசருக்கு மனதில் ஒரு ஏக்கம் பிறந்தது. தான் நெடுநேரம் பதிகம் பாடிய பின்பே இறைவன் கதவைத் திறந்தார். ஆனால் சம்பந்தர் பாடத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கதவை அடைத்துவிட்டாரே! என்பதே அந்த ஏக்கம். அதை நினைத்துக் கொண்டே நாவுக்கரசர் உறங்கினார்.

அப்போது இறைவன் அடியவர் கோலத்தில் வந்து, நாவுக்கரசரை எழுப்பி, ‘திருவாய்மூரில் பதிகத்தைத் தொடர வா!’ என்று கூறிவிட்டு நடந்தார். நாவரசரும் எழுந்து அவர் பின்னால் சென்றார். அவர், அவ்வடியவரை நெருங்க நினைத்தும் அது இயலவில்லை. அவ்வடியவர் இறைவனே என்று உணர்ந்தார் நாவரசர். அவ்வடியவர் நேராகக் கோயில் ஒன்றைக் காட்டி அதனுள் நுழைந்தார். கதவு அடைத்துக் கொண்டது. அந்நேரத்தில் விழித்த சம்பந்தரும் அப்பர் சென்றதை அறிந்து அவர் பின்னால் வந்தார்.

            உடனே நாவுக்கரசர், “இறைவனே! உன் திருவுள்ளத்தை அறியாமல் கதவைத் திறந்த எனக்கு காட்சி அளிக்க மறுக்கலாம். ஆனால் சிறிதுநேரம் பாடியே கதவை அடைத்த சம்பந்தப் பெருமானுக்கு காட்சிதர மறுக்கலாமோ?” என்று வேண்டினார். சிவபெருமான் இருவருக்கும் காட்சி அளித்தார்.

            ஒருமுறை, பாண்டிய மன்னர் நெடுமாறன் சமணர்களின் பிடியில் சிக்கிக் கொண்டு சைவத்தை விலகி நின்றான். அவரைச் சைவத்திற்கு மாற்றும்படி அரசியார் மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் சம்பந்தப் பெருமானிடம் வேண்டிக் கொண்டனர்.

சம்பந்தப் பெருமானும் புறப்பட ஆயத்தமானார். அப்போது நாவுக்கரசர் சம்பந்தரிடம், “சமணர்கள் கொடியவர்கள். எனக்குப் முன்பு பல கொடுமைகள் புரிந்துள்ளனர். எனவே நீர் அவர்களிடம் செல்ல வேண்டாம். இன்று நாள்வேறு நன்றாய் இல்லை” என்றார்.

            அதற்கு சம்பந்தர், “நாளும் கோளும் அடியவர்க்கு இல்லை” என்று கூறிவிட்டு, மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். சமணர்களை வென்று மன்னரை சைவம் தழுவச் செய்தார். ஒருமுறை திருப்பழையாறையிலுள்ள வடதளி என்னும் சிவாலயத்திற்குச் சென்றார் நாவுக்கரசர். அங்கு சமணர்கள் சிவலிங்கத்தை மூடி மறைத்து, அதை சமண விமானமாக மாற்றியிருந்தனர். அதைக் கண்ட நாவரசர், ‘இறைவனைத் தொழாமல் திரும்ப மாட்டேன்’ என்று சபதம் செய்தார். இறைவன் மன்னனின் கனவில் தோன்றி, சமணர்கள் சிவலிங்கத்தை மூடி மறைத்ததைக் கூறினார்.

            உண்மையறிந்த மன்னன் நாவுக்கரசரிடம் வந்து வணங்கினான். திருக்கோயிலைத் திறந்தான். அங்கிருந்த ஆயிரம் கொடிய சமணர்களை யானையால் மிதிக்கச் செய்து கொன்றான். திருப்பழையாறையிலிருந்து
நாவுக்கரசர் பல சிவத்தலங்கள் சென்று வணங்கினார். பதிகங்கள் பாடினார். பின் திருப்பைஞ்ஞீலியை நோக்கிப் புறப்பட்டார். வழியில் பசியாலும் தாகத்தாலும் தவித்தார். அப்போது வழியில் குளம் ஒன்று தென்பட்டது. தாகம் தணித்த சுவாமிகளுக்குப் பசி அடங்கவில்லை.

            அப்போது ஒரு திருநீறணிந்த அந்தணர், நாவரசருக்குத் தன் கையிலிருந்த சோற்றுப் பொதி அளிக்க,நாவுக்கரசர் பசியாறினார். அந்த அந்தணர், தானும் பைஞ்ஞீலிக்குப் போவதாகக் கூறினார். இருவரும் நடந்தார்கள். அவ்வூர் திருக்கோயிலின் அருகில் வந்தவுடன் அவ்வந்தணர் மறைந்தார். இறைவனே அந்தணர் உருவில் வந்துள்ளார் என்று உணர்ந்த அப்பர்சுவாமிகள் மெய்சிலிர்த்தார்.

            பின் தொண்டை நாட்டிலுள்ள பல சிவாலயங்களைத் தரிசித்தவர், திருக்காளத்தி சென்று காளத்திநாதனையும், கண்ணப்பரையும் தொழுதார். தென்கயிலையான திருக்காளத்தியைத் தரிசித்த சுவாமிகள், வடகயிலை நோக்கிப் புறப்பட்டார். வழியில் ஸ்ரீசைலம், மாளவம் போன்ற தலங்களைத் தரிசித்து காசி சென்றடைந்து அங்கும் வணங்கினார்.

            நாவுக்கரசருக்கு வயது முதிர்ந்திருந்ததாலும், நெடும் பயணம் மேற்கொண்டதாலும் அதற்கு மேல் நடக்க இயலாதவராய் விழுந்தார். அப்போது இறைவன் ஒரு பொய்கையை அங்கே உருவாக்கினார். ஒரு முனிவரின் தோற்றம் கொண்டு அப்பரின் முன் வந்து நின்றார்.

அவர் நாவரசரிடம், “இக்கொடிய காட்டிற்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சுவாமிகளும், “திருக் கயிலையைத் தரிசிக்கவே வந்தேன்” என்று பதில் கூறினார்.

            உடனே அம்முனிவர், “கயிலையைத் தரிசிப்பது தேவர்க் கும் கடினமானது. அதனால் நீர் திரும்பிச் செல்லலாம்” என்று கூறினார்.

ஆனால் சுவாமிகளோ, “கயிலையைக் காணாமல் திரும்ப மாட்டேன்!” என்று உறுதியாய்ப் பதிலளித்தார். உடனே முனிவராக வந்த சிவபெருமான், “அடியவரே! இப்பொய்கையில் மூழ்கி எழுந்திருங்கள். நாம் கயிலைக் கோலத்தை திருவையாற்றில் காட்டுவோம்” என்று கூறி மறைந்தார்.

            முனிவராக வந்தவர் இறைவனே என்று உணர்ந்த அப்பர் சுவாமிகள், மெய்ச்சிலிர்த்து கைகூப்பினார். பொய்கையில் மூழ்கினார். திருவையாற்றில் எழுந்தார். அங்குள்ள திருக்கோயிலை திருக்கயிலையாகக் கண்டார். இறைவனின் திருவருளை நினைத்து பல திருத்தாண்ட கங்களைப் பாடினார். அவ்விடத்தில் பலநாட்கள் தங்கியிருந்து சிவப்பணி செய்தார்.

பின் திருப்பூந்துருத்தி வந்த சுவாமிகள், அங்கு வந்த சம்பந்தப் பெருமானைப் பற்றிக் கேட்டறிந்தார். அடியவர் கூட்டத்தைச் சேர்ந்து, அடியவரில் ஒருவராகி சம்பந்தரது பல்லக்கைத் தூக்கிச் சுமந்தார். “அப்பர் எங்கே?” என்று தேடிய சம்பந்தர், சுமை தூக்கியாக இருந்த அப்பரைக் கண்டு வணங்கினார். பின், தான் மதுரையில் சமணர்களை வென்றதையும், மன்னரை சைவத்திற்கு மீட்டதையும் கூறினார்.

            பாண்டி நாட்டின் பெருமையை சம்பந்தர் வாயிலாகக் கேட்டறிந்த அப்பர், பாண்டி நாட்டிற்குச் சென்றார். அரசியாரும், கூன் நிமிர்ந்த மன்னரும், அமைச்சர் குலச்சிறையாரும் சுவாமிகளிடம் வந்து அவரைப் பணிந்தனர். பிறகு தென்னாட்டிலுள்ள சிவத்தலங்களைத் தரிசித்த அப்பர் சுவாமிகள், திருப்புகலூர் வந்து சேர்ந்தார்.

            திருப்புகலூரில் உறைந்தருளும் பெருமானைத் தொழுது, பல தாண்டகங்களையும், விருத்தங்களையும் பாடி அருளினார். பிறகு இறைவனை நினைத்தே சித்தநிலை கொண்டார். அவர் சித்தத்தைக் கலைக்க இறைவர் செய்த சோதனைகளிலும் சுவாமிகள் வென்றார். காணும் பொருளெல்லாம் சிவமென்று இருந்த அப்பர் சுவாமிகள், ஒரு சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளில் சிவனடி சேர்ந்தார்.


கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

16.முருக நாயனார் புராணம்

17.திருநாளைப்போவார் புராணம்

18.திருக்குறிப்புத் தொண்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here