Saturday, October 3, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் Reconstructing Chakkiliyars History Through Inscriptions|P. Govindasamy

Reconstructing Chakkiliyars History Through Inscriptions|P. Govindasamy

கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் வழி சக்கிலியர் வரலாறு ஒரு மறுபார்வை
Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
 Abstract
           The history of the Chakkiliyar community in Tamil Nadu has generally been explained through the migration of Telugu- and Kannada-speaking groups from the Andhra and Karnataka regions during the Vijayanagara period. Such an interpretation, however, requires critical reassessment in the light of epigraphic and documentary evidence from earlier periods. This study attempts to reconstruct and reinterpret the history of the Chakkiliyar through inscriptions, hero stones, copper-plate grants, literary sources, lexicons, and ethnographic materials. Particular attention is given to the occurrence of terms such as Chakkiliyan, Parambar, Semmar, Uraikaarar, and Tholin Thunnar, which are associated with leather-related occupations and social groups in different historical contexts.
        A significant piece of evidence comes from the Rishipeshvarar Temple at Sengam, where an inscription dated to the eighteenth regnal year of Rajendra Chola I, corresponding approximately to CE 1030, refers to a place or locality as “Chakkiliyan Kundil.” Another inscription from the same temple complex mentions Chakkiliyar, while a later Chola-period inscription associates them with leather footwear and temple-related activities. These references predate the Vijayanagara period by several centuries and therefore call for a reconsideration of the assumption that the Chakkiliyar first entered Tamil Nadu only during the Vijayanagara period. Copper-plate records from Kongu Nadu and other parts of Tamil Nadu further reveal the presence of occupational and social designations such as Madari, Pagadai, and Thotti, thereby providing additional evidence for examining the historical presence and social organisation of communities associated with leather work and related occupations. The study argues that the historical identity of the Chakkiliyar cannot be adequately explained through a single migration narrative or through contemporary linguistic affiliation alone. The presence of Telugu and Kannada elements in their speech should be examined alongside Tamil linguistic features, occupational traditions, settlement patterns, land relations, and historical interactions with other communities. By bringing together epigraphic, literary, documentary, ethnographic, and sociolinguistic evidence, this paper seeks to move beyond simplified notions of migration and to provide a more nuanced reconstruction of the historical trajectory of the Chakkiliyar in Tamil Nadu. Thus, it highlights the importance of primary sources in reassessing the social history of communities whose histories have often remained marginal in conventional historical narratives.

“கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் வழி சக்கிலியர் வரலாறு: ஒரு மறுபார்வை”

ஆய்வுச்சுருக்கம்
   தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சக்கிலியர்களின் இனக்குழு வரலாறு என்பது பொதுவாக விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஆந்திரம் மற்றும் கர்நாடகப் பகுதிகளிலிருந்து தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் குழுக்கள் புலம்பெயர்ந்து வந்ததன் விளைவாக உருவானதாகப் பெரும்பாலான அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், பண்டைய காலக் கல்வெட்டுகள் மற்றும் செப்பேட்டுச் சான்றுகளின் அடிப்படையில் இக்குடிப்பெயர்வு குறித்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளது. கல்வெட்டுகள், நடுகற்கள், செப்புப்பட்டயங்கள், இலக்கியச் சான்றுகள், நிகண்டுகள் மற்றும் மானிடவியல் தரவுகளின் துணையுடன் சக்கிலியர்களின் வரலாற்றை மறுகட்டமைத்து, அதற்குப் புதிய விளக்கத்தை அளிப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். சங்க இலக்கியங்களில் தோல் சார்ந்த தொழில்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சமூகக் குழுக்களைக் குறிக்கும் சக்கிலியர், பரம்பர், செம்மார், உறைகாரர், தோலின் துன்னர் போன்ற சொற்கள் இடம்பெறுவதால், அவற்றின் வரலாற்றுப் பொருண்மைக்கு இவ்வாய்வில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  சக்கிலியர்களுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க கல்வெட்டுச் சான்று செங்கம் ரிஷிபேஸ்வரர் கோயிலிலிருந்து கிடைத்துள்ளது. முதலாம் ராஜேந்திர சோழனின் 18-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் (ஏறத்தாழ கி.பி.1030) இக்கல்வெட்டு, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை “சக்கிலியன் குண்டில்” எனக் குறிப்பிடுகிறது. மேலும், இதே கோயில் வளாகத்தைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டிலும் சக்கிலியர்களைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, இவர்களைத் தோல் செருப்பு தயாரித்தல் மற்றும் கோயில் சார்ந்த பணிகளுடன் தொடர்புபடுத்துகிறது. விஜயநகரக் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இச்சான்றுகள், சக்கிலியர்கள் விஜயநகரக் காலத்தில்தான் முதன்முதலாகத் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தனர் என்ற கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. மேலும், கொங்கு நாடு மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கிடைத்த செப்புப்பட்டயங்களில் மாதாரி, பகடை, தோட்டி போன்ற தொழிற்குடிகள் மற்றும் இனக்குழுவின் உட்பிரிவுகளைக் குறிக்கும் பெயர்கள் காணப்படுகின்றன. இவை தோல் தொழில் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தொழில்களைக் கொண்ட சமூகங்களின் வரலாற்று இருப்பையும், அவற்றின் இனக்குழு அமைப்பையும் ஆராய்வதற்கான கூடுதல் சான்றுகளாக அமைகின்றன. சக்கிலியர்களின் வரலாற்று அடையாளத்தை ஓர் ஒற்றைப் புலம்பெயர்வு கதையாடலின் மூலமாகவோ அல்லது அவர்களின் தற்கால மொழியியல் தொடர்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டோ முழுமையாக விளக்க முடியாது என்பது இவ்வாய்வின் மையக் கருத்தாகும். அவர்களின் பேச்சுமொழியில் காணப்படும் தெலுங்கு மற்றும் கன்னடக் கூறுகள், தமிழ் மொழியியல் கூறுகள், தொழில்சார் மரபுகள், குடியிருப்பு முறைகள், நில உறவுகள் மற்றும் பிற சமூகங்களுடனான வரலாற்றுத் தொடர்புகள் ஆகியவை ஒருங்கிணைந்த நிலையில் ஆராயப்பட வேண்டும். கல்வெட்டு, இலக்கியம், ஆவணங்கள், மானிடவியல் மற்றும் இனக்குழு மொழியியல் ஆகிய பல்வேறு வகையான சான்றுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், புலம்பெயர்வு குறித்த எளிமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களைக் கடந்து, தமிழ்நாட்டில் சக்கிலியர்களின் வரலாற்றுப் போக்கை நுட்பமான முறையில் மறுகட்டமைக்க இவ்வாய்வு முயல்கிறது. இதன்மூலம், வழக்கமான வரலாற்று விவரிப்புகளில் பெரும்பாலும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட சமூகங்களின் இனவரலாற்றை மறுமதிப்பீடு செய்வதில் முதன்மைச் சான்றுகளின் முக்கியத்துவத்தை இவ்வாய்வு வலியுறுத்துகிறது.
திறவுச் சொற்கள்
    சக்கிலியர், பறம்பர், செம்மார், மாதாரி, பகடை, தோட்டி, கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள், செங்கம், கே.கே.பிள்ளை, பாவாணர்….
முன்னுரை
        தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் தொல்குடிகளில் ஓர் இனக்குழுவினராகக் கருதப்படும் சக்கிலியர், தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளையும் பேசி வருகின்றனர். பொதுவாக, விசயநகரப் பேரரசின் காலத்தில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் போன்ற பகுதிகளிலிருந்து தூய்மைப் பணி, செருப்புத் தைத்தல், இறந்துபோன ஆதரவற்ற உடல்களை அகற்றுதல், வேளாண் நிலங்களுக்குத் தேவையான நீரைத் தோல்பறிகள் மூலம் கிணற்றிலிருந்து இறைத்தல் போன்ற பணிகளைச் செய்வதற்காகச் சக்கிலியர் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாகக் கே.கே.பிள்ளை, நா.வானமாமலை, கே.ரங்காச்சாரி, க.ரத்னம், பாவாணர் போன்றோர் பதிவு செய்துள்ளனர். அதேபோல், எட்கர் தர்ஸ்டன் எழுதிய தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்னும் ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்த க.ரத்னம், immigrant என்னும் ஆங்கிலச் சொல்லுக்குப் பொருள் கூறும்போது, எங்கும் காணப்படாத வந்தேறிகள் என்னும் சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளார். இச்சொல்லைப் பயன்படுத்தி அழைக்கும் வழக்கம் தற்போதைய அரசியல் மற்றும் சமூக உரையாடல்களிலும் காணப்படுகிறது. தொழிற்குடிகள் மேலோர் – கீழோர், உயர்ந்தோர் – தாழ்ந்தோர், இருப்போர் -இல்லாதோர் எனப் பல்வேறு சமூகப் பிரிவுகளால் பாகுபடுத்தப்பட்டுள்ளனர். அதுபோலவே, இன்றைய தமிழகச் சமூக உரையாடல்களில் திராவிடர் – ஆரியர், தமிழர் – தமிழர் அல்லாதோர் போன்ற இருமைப் பாகுபாடுகளும் முன்வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு இனக்குழுவினரும் தங்களைத் தமிழகத்தின் தொல்குடிகள் என நிறுவ வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில், வருவோர் போவோர் அனைவரையும் “வந்தேறிகள்” என்னும் வசைச்சொல்லுக்குள் அடக்கும் நிலை காணப்படுகிறது. அவ்வகையில், சக்கிலியர் (அருந்ததியர்) என்னும் இனக்குழுவினரும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர்களின் வரலாற்றைக் கல்வெட்டுகளின் வழி மீட்டெடுக்கும் முயற்சியாக, கல்வெட்டுகள், நடுகற்கள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் சான்றுகளின் அடிப்படையில் இவர்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சக்கிலியர்
      “சக்கிலியர்” என்னும் சொல் தமிழ்ச்சொல் அல்ல என்றும், அது சமஸ்கிருதம் அல்லது பாலி மொழியிலிருந்து வந்த சொல் என்றும் பல்வேறு அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், இக்கருத்துகள் வரலாற்றுத் தரவுகளுடன் முழுமையாகப் பொருந்துகின்றனவா என்பது ஆராயத்தக்கதாகும். “கல்வெட்டுச் சொற்களின் பொருட்புல அடைவு” (கி.மு. 300 முதல் கி.பி. 1300 வரை) என்னும் அகராதியில் “சக்கிலியர்” [சக்கிலியன் – தோல் தொழில் செய்பவர். கல்வெட்டுச் சொற்களின் பொருட்புல அடைவு, ப.413.] என்னும் சொல் தமிழ்ச்சொல்லாகவே பொருள் கூறப்பட்டுள்ளது. சகர வரிசை எழுத்துகளில் தொடங்கும் பிறமொழிச் சொற்கள் தமிழில் மிகுதியாகக் காணப்படுவதால், சகர வரிசை எழுத்தில் தொடங்கும் சொற்கள் பிறமொழிச் சொற்களாக இருக்கலாம் என்ற ஐயம் முதலில் எழுவது இயல்பாகும். ஆனால், தமிழ்ச்சொற்களும் சகர வரிசை எழுத்துகளில் தொடங்குகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. இதற்குச் சான்றாகச் சந்தன், சடிகன், சாம்பன், சிலை, சிறை, செப்பு போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். அவ்வகையில், “சக்கிலி” என்னும் சொல்லும் தமிழ்ச்சொல்லாக இருக்கிறது.
         தமிழகம் முழுவதும் தோல் தொழிலில் ஈடுபட்டுவரும் சக்கிலியர், மாதாரி, பகடை, தோட்டி, செம்மார், அருந்ததியர் ஆகிய பெயர்களால் குறிப்பிடப்படும் இனக்குழுவினர், தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியான கொங்கு மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலும், பிற மாவட்டங்களில் கணிசமான அளவிலும் வாழ்ந்து வருகின்றனர். சங்க இலக்கியங்களில் “சக்கிலியர்” என்னும் சொல் நேரடியாகத் தோல் தொழில் செய்பவர்களைக் குறிக்கும் வகையில் காணப்படவில்லை. ஆனால், சிறுகாரோடன், உறைகாரர், தோலின் துன்னர், பறம்பர், செம்மார் போன்ற வேறு பெயர்கள் காணப்படுகின்றன. இவற்றுள் “பறம்பர்”, “செம்மார்” ஆகிய சொற்கள் உரையாசிரியர்களின் காலத்தில் வழக்கில் இருந்த பெயர்களாகக் கருதப்படுகின்றன. இச்சொற்களுக்கு உரையாசிரியர்கள் “செம்மார்”, “சக்கிலியர்” போன்ற பொருள்களையும் வழங்கியுள்ளனர்.
தோலின் துன்னர்
      சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையில் “தோலின் துன்னர்” என்னும் சொல்லை இளங்கோவடிகள் பயன்படுத்தியுள்ளார். பொது ஆண்டுக்குப் பின் பத்தாம் நூற்றாண்டில் உரையெழுதிய அரும்பதவுரைகாரர், இதற்கு “செம்மார்” [சிலப்பதிகாரம், இந்திரவிழவூரெடுத்த காதை, வரி.22] எனப் பொருள் கூறுகின்றார். அதேபோல், பொது ஆண்டுக்குப் பின் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் உரையெழுதும்போது, “உறைகாரும் பறம்பரும்” [மேலது] எனப் பொருள் கூறியுள்ளார். இதன்மூலம், உரையாசிரியர்களின் காலத்தில் தோல் வேலைகளில் ஈடுபட்டிருந்த இனக்குழுவினரைக் குறிக்க “உறைகார்”, “செம்மார்”, “பறம்பர்” போன்ற பெயர்கள் வழக்கில் இருந்தன என்பது விளங்குகிறது.
        மணிமேகலை கச்சிமாநகர் புக்கக் காதையில் “தோலின் துன்னர்” என்னும் சொல்லையே சீத்தலைச் சாத்தனாரும் பயன்படுத்தியுள்ளார். இக்காப்பியத்தில் பௌத்தச் சமயத் தொடர்புடைய பல பாலி மொழிச்சொற்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலுக்கு உரை எழுதி, 1898-ஆம் ஆண்டு உ.வே.சாமிநாதையர் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். அவ்வுரையில் “தோலின் துன்னர்” என்பதற்கு “உறைகாரும் பறம்பர் முதலாயினரும்” [மணிமேகலை, கச்சிமாநகர்ப்புக்கக் காதை, வரி.39] என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், காப்பியங்களின் காலத்திலும் அதற்குப் பிந்தைய உரையாசிரியர்களின் காலத்திலும் தோல் தொழிலுடன் தொடர்புடைய இனக்குழுக்களைக் குறிக்க உறைகாரர், பறம்பர், செம்மார் போன்ற பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
      பறம்பர் அல்லது பறம்பன் என்போர் தோல் பதனிடுதல், சுண்ணாம்புக்கல் சுடுதல், செருப்புத் தைத்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட தமிழர் குடியினர் எனப் பாவாணர் பதிவு செய்கிறார். அவரது “ஒப்பியன் மொழிநூல் – திராவிடம், தமிழ்” (1940) என்னும் நூலில், “தமிழ்நாட்டில் இப்போதுள்ள சக்கிலியர் தெலுங்கராதலின், விசயநகரப் பேரரசின் காலத்தில் அல்லது அதற்குச் சற்றுமுன்பு தெலுங்கு நாட்டினின்று தமிழ்நாட்டிற்கு வந்தவராவர். அவர்கள் வருமுன்பு, அவர் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர் பறம்பர் (செம்மார்) என்னும் தமிழ் வகுப்பார்” என்று பதிவு செய்துள்ளார். மேலும், சக்கிலியர் பறம்பர் தொழிலை மேற்கொண்ட பின்னர், செம்மார் பிற தொழிலை மேற்கொண்டதாகவும், சக்கிலியருக்குச் “செம்மான்” என்னும் தமிழ்ப்பெயரும் “சக்கிலி” என்னும் தெலுங்குப் பெயரும் வழங்கி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், “தமிழர் வரலாறு” (1949) என்னும் நூலில், பறம்பன் என்போர் திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் தோல் வேலை, சுண்ணாம்புக்கல் சுடுதல், செருப்புத் தைத்தல் போன்ற தொழில்களைச் செய்த தமிழ்க்குலத்தினர் எனக் குறிப்பிட்டுள்ளார். அதே இடத்தில் “செம்மான் (சருமன்)” என்பது வடமொழிச் சொல் என்றும் பொருள் கூறியுள்ளார். இங்குச் “சக்கிலியர்” என்னும் சொல்லைத் தமிழ்ச்சொல்லாக அவர் பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ இவ்விரு நூல்களுக்கும் இடையில் முப்பது ஆண்டுகள் மட்டுமே இடைவெளி இருந்தாலும், பறம்பர் மேற்கொண்ட தொழிலைச் சக்கிலியர் பின்னர் மேற்கொண்டனர் என்ற கருத்தை முதன்முதலில் மொழிநூல் அடிப்படையில் முன்வைத்தவர்களில் பாவாணரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பறம்பர்
       கல்வெட்டுகளில் “பறம்பர்”, “பரம்பர்” போன்ற சொற்கள் பயின்று வந்துள்ளன. இவை முறையே “தோல் தொழில் செய்பவர்” என்றும் “மேட்டு நிலம்” என்றும் பொருள்படும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொது ஆண்டுக்குப் பின் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில்,
“…கொல்லனும் வண்ணானும் ஈழவனும் பறம்பனும்
பறையனும் ஒரோகுடி இருப்பது…”
          என்னும் தொடர் [கல்வெட்டுச் சொற்களின் பொருட்புல அடைவு, ப.416] காணப்படுகிறது. இதில் கொல்லன், வண்ணான், ஈழவன் (கள் இறக்குபவர்), பறம்பன், பறையன் ஆகியோர் ஒரே குடியினராகக் குறிப்பிடப்படுகின்றனர். இதன் மூலம் பறம்பன் என்னும் பெயர் தமிழ்ச் சமூகத்தில் வழக்கில் இருந்தது என்பதை அறிய முடிகிறது. அதுமட்டுமின்றி, “பரம்பர்” என்போர் மேட்டு நிலத்தில் உழுதொழில் செய்த குடியினராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கல்வெட்டுகளில் சக்கிலியர்
          “சக்கிலியர்” என்னும் பெயருடன் நமக்குக் கிடைக்கும் முக்கியமான தொடக்ககாலக் கல்வெட்டுச் சான்றுகளில் ஒன்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ரிஷிபேஸ்வரர் கோயில் கருவறையின் தெற்குச்சுவரில் காணப்படுகிறது. தமிழ் மற்றும் கிரந்த எழுத்துகள் கலந்த நிலையில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு, முதலாம் இராசேந்திர சோழனின் பதினெட்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. அதாவது, பொது ஆண்டுக்குப் பின் 1030-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்த செங்கம் ரிஷிபேஸ்வரர் கோயிலுக்கு நிலம் வாங்கப்பட்டபோது, அந்நிலத்தின் நான்கு திசைகளிலும் எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் வடக்குத்திசை எல்லையாக “சக்கிலியன் குண்டில்” என்னும் தொடர் காணப்படுகிறது. இது, சக்கிலியரின் குடியிருப்பு அல்லது அவர்களுடன் தொடர்புடைய மேட்டு நிலப்பகுதியைக் குறிக்கக்கூடியதாகும்.
“….வடக்கில் நாலடியில் கீழைவரவையில் கீழ்வரம்புக்கு
வடக்கு மெல்பார்க் கெல்லை வடக்கில் நாலாடியில்
வடவரம்புக்கும் சக்கிலியன் குண்டிலு(க்)கும் பெருநான் கெல்லை
ருத்தத்தில் நாறுக் காலுக்கு(க்) கிழக்கும்…”
          மேற்கண்ட [South Indian Inscriptions, Vol.VIII, p.36] கல்வெட்டுத் தொடரில் இடம்பெறும் செய்திகளின் அடிப்படையில், “சக்கிலியர்” என்னும் பெயருடையோர் அப்பகுதியில் நிலம் மற்றும் குடியிருப்புடன் தொடர்புடையவர்களாக இருந்திருக்கலாம் என்பதை அறியமுடிகிறது. வேளாண் நிலத்தின் எல்லையை வரையறுக்கும் போது, அருகிலிருந்த நிலம் அல்லது குடியிருப்புப் பகுதியைக் குறிக்கும் வகையில் “சக்கிலியன் குண்டில்” குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சான்று, சக்கிலியர் தமிழ்நாட்டில் விசயநகரப் பேரரசின் காலத்தில்தான் முதன்முதலாகக் குடியேறினர் என்ற கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, பொது ஆண்டுக்குப் பின் 1030-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டிலேயே “சக்கிலியன்” என்னும் பெயர் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அதே செங்கம் ரிஷிபேஸ்வரர் கோயிலின் வடக்குச் சுவரில் காணப்படும் மற்றொரு கல்வெட்டில்,
“…பிள்ளையார் ஸ்ரீ பாதம்விட்டு ஓடிப்பொநொமாகில்
எங்கள் மிணாட்டிமரை(ச்) சக்கிலியர்க்கு(க்)
கொடுத்து(ப்) பாத்திருப்தொமாவொம் இவ்விருவொம்…”
          என்று [மேலது, ப.46] இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டில், குறிப்பிட்ட நபர்கள் தாங்கள் அளித்த உறுதியை மீறினால், தங்களது மனைவியரை அங்கிருந்த சக்கிலியரிடம் ஒப்படைப்பதற்குச் சமமாகும் என்ற கருத்து வெளிப்படுகிறது. இவ்வாறு சக்கிலியர் பற்றிய பெயர்க்குறிப்பு இடம்பெறுவது, அக்காலச் சமூக அமைப்பில் அவர்கள் தனித்த இனக்குழுவாக அடையாளம் பெற்றிருந்தனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதேவேளை, இத்தொடர் அக்காலச் சமூகத்தில் நிலவிய சாதி அடிப்படையிலான உயர்வு × தாழ்வு மனப்பான்மையையும் பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளது.  மேலும், அதே செங்கம் ரிஷிபேஸ்வரர் கோயிலின் வடக்குச் சுவரின் நடுப்பகுதியில் காணப்படும் மூன்றாம் இராசேந்திர சோழனின் பொது ஆண்டுக்குப் பின் 1258-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில், இரண்டு கரைகளிலும் இருந்த பல்வேறு சமூகக் குழுக்களான பிள்ளை முதலிகள், மலையாள முதலிகள், செட்டிகள், வாணிகர், கணக்கர், கைக்கோளர், சிவப்பிராமணர் போன்றோர் குறிப்பிடப்படுகின்றனர். பின்னர் அந்நாட்டிலிருந்த பன்னிரண்டு பணிமக்களையும் குறிப்பிடும்போது, பாணர், பறையர், பறைமுதலிகள், செக்கிலியர், இருளர் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குழுக்களும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.“….பன்னிரண்டு பணிமக்களு முள்ளிட்ட(ப்) பெரும்வேடரும் பாணரும் பறையரும் பறை முதலிகளும் செசக்கிலியரும் இருளரு முள்ளிட்ட அனைத்துச் சாதிகளு(ம்) அந்தணன் தலையாக அரிப்பன் கடையாக…” [South Indian Inscriptions, Vol.VII, p.68] என்னும் இக்கல்வெட்டில் “சக்கிலியர்” என்னும் சொல் “செக்கிலியர்” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுப் பொறிப்புகளில் எழுத்துப் பிழைகள் ஏற்படுவது இயல்பானதாகும். எனவே, இங்கு இடம்பெறும் “செக்கிலியர்” என்பது “சக்கிலியர்” இனக்குழுவைக் குறிக்கும் பெயராகும்.
     “தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்” என்னும் நூலில் கே.கே.பிள்ளை அவர்கள் மேற்கண்ட கல்வெட்டுத் தொடரை மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால், குறிப்பிட்ட பதிப்பில் “செக்கிலியரும்” என்னும் பெயர்ச்சொல் இடம்பெறவில்லை என்று இக்கட்டுரை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இவ்விடத்தில் கல்வெட்டின் முழுமையான வாசகத்தைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மாநிலக் கருத்தரங்கில் (2023), முனைவர் ஆ.துளசேந்திரன் எழுதிய “சோழர் காலக் கல்வெட்டுகளில் காணப்படும் அரசியல் உடன்படிக்கைகள் குறித்த – ஒரு முன்னோட்டம்” என்னும் ஆய்வுக்கட்டுரையிலும் இக்கல்வெட்டு தொடர்பான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரையின் ஆசிரியர் சுட்டிக்காட்டுவது போல, கல்வெட்டின் மூல வாசகத்தில் இடம்பெறும் சமூகக்குழுக்களின் பெயர்களை முழுமையாகப் பதிவு செய்வது வரலாற்று ஆய்வில் முக்கியமானதாகும். கே.கே.பிள்ளை அவர்களின் மேற்கோளில்,“…பன்னிரண்டு பணிமக்களு முள்ளிட்ட(ப்) பெரும் வேடரும் பாணரும் பறையரும் இருளரும் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளும், அந்தணன் தலையாக அரிப்பன் கடையாக அனைத்துச் சாதிகளும்…” [கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மறுபதிப்பு, சூன் 2025, ப.323] என்று காணப்படுகிறது. இவ்விடத்தில், கல்வெட்டின் முழுமையான வாசகத்தையும் பதிப்பிக்கப்பட்ட வாசகத்தையும் ஒப்பிட்டு ஆராய்வது அவசியமாகிறது. குறிப்பாக, சமூக வரலாற்றை எழுதும்போது குறிப்பிட்ட இனக்குழுக்களின் பெயர்கள் விடுபடாமல் பதிவு செய்யப்படுவது வரலாற்று ஆய்வின் அடிப்படைத் தேவையாகும்.
         மேலும், அதே செங்கம் ரிஷிபேஸ்வரர் கோயிலின் இடப்புறக் கோபுர நுழைவாயிலுக்கு அருகில் காணப்படும் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டில், ஏறத்தாழ பொது ஆண்டுக்குப் பின் 1202-ஆம் ஆண்டில் திருவண்ணாமலை நாயனாருக்குச் செய்யப்பட்ட தானதர்மங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில், சக்கிலியருக்குச் சிறப்புத் தரிசனம் காட்டியதோடு, அழகிய ஒரு சோடி தோலால் செய்யப்பட்ட திருவடிநிலையும் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. “…. திருவண்ணாமலை உடைய நாயநார்த்) திருக்கொயிலில் திருமஞ்சனம் பண்ணு(க்) கையாளும் திருநூந்தாவிளக்கு) (32) பசு விடுகையாலும் ஐந்தலை மணி யிடுகையாலும் சக்கிலிக்கு(த்) தெரிசனம் காட்டி(த்) தொலாலெ செய்த(த்) திருவடிநிலைக்கு…” [South Indian Inscriptions, Vol-VIII, p.68] மேற்கண்ட கல்வெட்டுத் தொடரின் அடிப்படையில், சக்கிலியர் செருப்புத் தைத்தல் அல்லது தோல் தொழிலுடன் தொடர்புடையவர்களாக இருந்திருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. அதேவேளை, பிற கல்வெட்டுகளில் நிலம் மற்றும் வேளாண் செயல்பாடுகளுடன் அவர்களுக்கு இருந்த தொடர்பையும் ஆராய முடிகிறது.
செப்பேடுகளில் சக்கிலியர்
   தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்துள்ள செப்பேடுகளில், சக்கிலியர்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மாதாரி, பகடை, தோட்டி, செம்மார் போன்ற பெயர்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. அவ்வகையில், கொங்கு நாட்டின் பேரூர்ப் பகுதியில் கல்லணை கட்டியதில் சக்கிலியர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக இருந்ததாகப் பேரூர்ப் பட்டயம் பதிவு செய்கிறது. அப்பட்டயத்தில், “தொட்டிய சக்கிலியர், மதுரைச் சக்கிலியர், அனுப்பச் சக்கிலியர், கானக்காட்டுச் சக்கிலியர்” என நான்கு உட்பிரிவுகள் குறிப்பிடப்படுகின்றன. “….ஒன்னப்ப(க்) கவுண்டர் கோனியம்மன் கோயிலுக்கு மாதாறிகளைக் கூட்டிக் கொண்டு போயி மாதாரிகள் கயியெழுத்து விபறம். யெற்றபகடை, யெண்டபகடை, மயப்பகடை, வீரபகடை, பாழியபகடை, பகடிகத்திப்பகடை, வட்டிகபகடை, மல்லிகபகடை, பூவுலுபகடை, சிந்துரம்பகடை, கள்பகடை, கவுரிபகடை, கருசிபகடை, வன்னகரியபகடை, அண்ணவிபகடை, குலியபகடை, குஞ்சலிபகடை, ஒரைகாறபகடை, தொக்குளிபகடை, சீரங்கபகடை 24 லு நாட்டு மாதாரிகள் அனவோரு ஒன்னப்ப கவுண்டருக்கு அடிப்பித்துக் குடுத்த செம்புபட்டையம்.” [கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,1991,ப.284] மேற்கண்ட பட்டயத்தில் குறிப்பிடப்படும் இருபத்து நான்கு கொங்கு நாட்டுப் பிரிவுகளில் இடம்பெற்ற பகடைகள், மாதாரிகள் ஆகியோரின் பங்களிப்பு, பேரூர் அணைக் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இப்பட்டயம் ஏறத்தாழ 1499-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், கொங்கு நாட்டுச் செப்பேடுகளான முகுந்தநல்லூர்ப் பட்டயம், திருவாச்சிச் செப்பேடு, நல்லூர்க் கிரையப்பட்டையம், பருத்திப்பள்ளிச் செப்பேடு, காடையூர் பட்டயம் ஆகியவற்றில் “தோட்டி” என்னும் பெயருடையோர் முக்கியச் சாட்சிகளாகப் பல இடங்களில் கையொப்பமிட்டுள்ள ஆவணங்களும் காணப்படுகின்றன. அதேபோல், இராமநாதபுரம் மாவட்டத்தின் பனையங்கால் செப்பேடு, தெஞ்சியேந்தல் செப்பேடு, திருச்செந்தூர் தென்பாண்டி நாட்டுச் சாத்தூர்ச் செப்பேடு, கரூர் தென்னிலைச் செப்பேடு, விசயமங்கலம் செங்குந்தர் வெற்றிப்பட்டயம், பவானி காலிங்கராயன் அணைப்பட்டயம், திருப்பத்தூர்க் கம்மாளர் செப்பேடு ஆகிய ஆவணங்களிலும் சக்கிலியர் தொடர்பான பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன.
விசயநகர ஆட்சி மற்றும் சக்கிலியர்
     “தமிழகத்தில் விஜயநகர ஆட்சி” என்னும் நூலில் பேராசிரியர் அ.சிங்காரவேல், விசயநகரக் காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், தெலுங்கு மற்றும் கன்னடப் பகுதிகளிலிருந்து பெருமளவிலான மக்கள் தமிழகத்திற்கு வந்து குடியேறியதாகவும் குறிப்பிடுகிறார். இக்கருத்து தமிழகத்தின் பல சமூகக் குழுக்களின் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவக்கூடியதாக இருந்தாலும், இதனைச் சக்கிலியர் இனக்குழுவின் வரலாற்றிற்குப் பொதுவான முடிவாகப் பயன்படுத்துவதற்கு முன், கல்வெட்டு மற்றும் செப்பேட்டு ஆதாரங்களைத் தனித்தனியாக ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள செங்கம் ரிஷிபேஸ்வரர் கோயில் கல்வெட்டுகளில் பொது ஆண்டுக்குப் பின் 1030-ஆம் ஆண்டிலேயே “சக்கிலியன்” என்ற பெயர் காணப்படுகிறது. இது, விசயநகரப் பேரரசின் தமிழக ஆட்சிக்காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகும். எனவே, சக்கிலியர் முழுமையாக விசயநகரக் காலத்தில் ஆந்திரம், கர்நாடகம் அல்லது தெலுங்கானா பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த குடியேற்றக் குழுவினர் என்ற பொதுவான கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதேவேளை, சக்கிலியர் சமூகத்தினரிடையே தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் பயன்பாடு காணப்படுவது மறுக்க முடியாத சமூகமொழியியல் உண்மையாகும். வரலாற்றில் ஆட்சியாளர்கள், நிலவுடைமையாளர்கள், தொழில் சூழல்கள், அண்டை சமூகங்கள் ஆகியவற்றுடனான தொடர்பு காரணமாகப் பல மொழிகள் கற்றுக்கொள்ளப்பட்டு இருக்கலாம். எனவே, ஒரு சமூகத்தின் தற்போதைய மொழிப் பயன்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அதன் தொன்மையான குடியேற்ற வரலாற்றைத் தீர்மானிப்பது கவனத்துடன் அணுகப்பட வேண்டியதாகும். சக்கிலியர் பேச்சுவழக்கில் தெலுங்கு மற்றும் கன்னடச் சொற்கள் காணப்பட்டாலும், அவற்றில் கணிசமான அளவு தமிழ் இலக்கிய மற்றும் பேச்சுவழக்குச் சொற்களும் காணப்படுகின்றன. எனவே, மொழி, தொழில், நிலவுடைமை, கல்வெட்டு, செப்பேடு, வாய்மொழி மரபு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்தே இவர்களின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
முடிவுரை
          கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் வழியாகக் கட்டமைக்கப்படும் சக்கிலியர் வரலாறு, தமிழகத்தின் சமூக வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது. தொல்லியல் சான்றுகளைப் போலவே, இவ்வாவணங்களிலும் சக்கிலியரின் பல்வேறு உட்பிரிவுகளின் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றுடன் இலக்கியச் சான்றுகளும் அகராதிகளும் துணை ஆதாரங்களாக அமைகின்றன. சங்க இலக்கியங்களில் குறிப்பிட்ட இனக்குழுக்களுக்கு நேரடியாக இன்றைய சாதிப் பெயர்களின் அடிப்படையில் பெயர்கள் வழங்கப்படவில்லை. அவ்வகையில், சக்கிலியருடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் சிறுகாரோடன், உறைகாரர், தோலின் துன்னர், செம்மார், பறம்பர் போன்ற பெயர்கள் தொழில் சார்ந்த அடையாளங்களாகக் காணப்படுகின்றன. சங்ககாலம் முதல் பிற்காலச் சோழர் காலம் வரையிலும் தோல் தொழிலுடன் தொடர்புடைய சமூகக் குழுக்கள் இருந்ததற்கான இலக்கிய மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, செங்கம் ரிஷிபேஸ்வரர் கோயில் கல்வெட்டுகளில் பொது ஆண்டுக்குப் பின் 1030-ஆம் ஆண்டிலேயே “சக்கிலியன்” என்னும் பெயர் காணப்படுவது முக்கியமான வரலாற்றுச் சான்றாகும். மேலும், பிற்காலச் சோழர் காலக் கல்வெட்டுகளில் சக்கிலியர் தோல் தொழில் மற்றும் செருப்புத் தயாரிப்புடன் தொடர்புபடுத்தப் படுகின்றனர். அதேவேளை, நிலம், குடியிருப்பு, வேளாண்மை, தொழில், கோயில் மற்றும் சமூக அமைப்பு ஆகியவற்றுடன் சக்கிலியருக்கிருந்த தொடர்பையும் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் வழியாக ஆராய முடிகிறது. இதன்மூலம், சக்கிலியர் வரலாற்றை ஒரே ஒரு குடியேற்றக் கோட்பாட்டின் அடிப்படையில் மட்டும் புரிந்துகொள்ள முடியாது என்பது தெளிவாகிறது. எனவே, சக்கிலியர் வரலாற்றை மீட்டுருவாக்கும்போது கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள், அகராதிகள், இனவரைவியல் தரவுகள், வாய்மொழி மரபுகள் மற்றும் சமூக மொழியியல் சான்றுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆராய்வது அவசியமாகிறது. குறிப்பாக, “வந்தேறிகள்” என்ற ஒற்றை அடையாளத்திற்குள் இவர்களின் நீண்டகாலச் சமூக வரலாற்றை அடக்கிவிடாமல், கிடைக்கக்கூடிய முதன்மைச் சான்றுகளின் அடிப்படையில் அவர்களின் வரலாற்றை மறுபரிசீலனை செய்வது இன்றியமையாததாகும்.
துணை நூற்பட்டியல்
1.தர்ஸ்டன், எட்கர். க. ரத்னம் (மொழிபெயர்ப்பு). தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 2. தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், மறுபதிப்பு, சனவரி 2017.
2.தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 7. தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், முதற்பதிப்பு, செப்டம்பர் 2005.
3.சுப்பிரமணியன், பா.ரா. & ப. சண்முகம் (பதிப்பாசிரியர்கள்). கல்வெட்டுச் சொற்களின் பொருட்புல அடைவு (கி.மு. 300 முதல் கி.பி. 1300 வரை). சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், முதற்பதிப்பு, 2023.
4.பிள்ளை, கே.கே. தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 21ஆம் பதிப்பு, சூன் 2025.
5.சிங்காரவேல், அ. தமிழகத்தில் விஜயநகர ஆட்சி. தஞ்சாவூர்: சரசுவதி மகால் நூலகம், முதற்பதிப்பு, 2007.
6.சீனிவாசன், ச. தமிழக அருந்ததியர் வரலாறும் வாழ்வும். புதுதில்லி: பாலாஜி இன்டர்நேஷனல் பதிப்பகம், முதற்பதிப்பு, 2021.
7.மதிவண்ணன், ம. சக்கிலியர் வரலாறு. சென்னை: கறுப்புப் பிரதிகள், முதற்பதிப்பு, செப்டம்பர் 2023.
8.ராஜன், கா. & இரா. சிவானந்தம் (பதிப்பாசிரியர்கள்). அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு – ஆய்வுக் கட்டுரைகள். சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, முதற்பதிப்பு, 2023.
9.கோவிந்தசாமி, பெ. பர்கூர் மலை: தொல்லியலும் இனவரைவியலும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., முதற்பதிப்பு, 2026.
Iniyavaikatral peer reviewedஆய்வாளர்
பெ. கோவிந்தசாமி
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
சென்னைக் கிறித்தவக் கல்லூரி
கிழக்குத் தாம்பரம், சென்னை – 600 059.

 

ஆய்வு நெறியாளர்
முனைவர் சி. முத்துகந்தன்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
சென்னைக் கிறித்தவக் கல்லூரி
கிழக்குத் தாம்பரம், சென்னை – 600 059.

கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் வழி சக்கிலியர் வரலாறு: ஒரு மறுபார்வை PDF

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »