Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
In this study, inscriptions belonging to the periods of the Kongu Cholas, Kongu Pandyas, Hoysalas and Vijayanagara rulers are considered primary sources and analysed chronologically according to their respective dynasties. The study reveals that the inscriptions contain records of granting tanks as Devadana and Iraiyili (tax-free grants), providing rights to renovate dilapidated tanks, excavating and naming new lakes, and distributing the Melvaram (share of agricultural produce). The Perumanallur inscription explains the system of distributing agricultural produce in proportion to the expenses incurred by those who undertook the renovation of tanks. The requests and consent of the Urars and Uralis also played an important role in decisions concerning tanks. The study establishes that tank maintenance in Kongu Nadu was a collective responsibility shared by four major stakeholders: individual donors, village assemblies, temples and the government.
Keywords: Kongu Nadu, Inscriptions, Tank, Devadana, Kudineenga Devadana, Melvaram, Water Management, Uralis.
“கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் குளம் சார் பதிவுகள்”
ஆய்வுச் சுருக்கம்
கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் கொங்குச் சோழர், கொங்குப் பாண்டியர், போசளர், விசயநகரத்தார் காலக் கல்வெட்டுகள் முதன்மைச் சான்றுகளாகக் கொள்ளப்பட்டு, ஆட்சிகள் வாரியாகப் பகுத்தாயப்பட்டுள்ளன. குளங்களைத் தேவதானமாகவும் இறையிலியாகவும் வழங்குதல், பாழ்பட்ட குளங்களைச் சீரமைக்க உரிமை அளித்தல், புதிய ஏரி வெட்டிப் பெயரிடுதல், மேல்வாரத்தைப் பகிர்தல் ஆகியவை கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன என்பது கண்டறியப்பட்டது. பெருமாநல்லூர்க் கல்வெட்டு, சீரமைப்புச் செலவை ஏற்பவர்களுக்கு விளைச்சலைப் படிப்படியாகப் பங்கிடும் முறையை விளக்குகிறது. ஊரார், ஊராளிகள் ஆகியோரின் வேண்டுகோளும் ஒப்புதலும் குளம் சார் முடிவுகளில் இடம்பெற்றுள்ளது. கொங்குநாட்டில் குளப் பராமரிப்பு என்பது தனிக் கொடையாளர், ஊர்ச்சபை, கோயில், அரசு ஆகிய நான்கு தரப்பினரின் கூட்டுப் பொறுப்பாக இருந்துள்ளது.
திறவுச்சொற்கள்: கொங்கு நாடு, கல்வெட்டு, குளம், தேவதானம், குடிநீங்காத் தேவதானம், மேல்வாரம், நீர்மேலாண்மை, ஊராளிகள்
முன்னுரை
கொங்குநாடு காவிரி, நொய்யல் ஆறுகளின் பாசனத்தைப் பெற்றாலும், பெரும்பகுதி மேட்டு நிலமாகவும் மழை குறைந்த பகுதியாகவே உள்ளது. இத்தகைய நிலத்தில் வேளாண்மை நிலைக்க நீர்நிலைகளின் பராமரிப்பு இன்றியமையாததாக இருந்தது. இதன் விளைவாக, கொங்குப் பகுதிக் கல்வெட்டுகளில் குளம், ஏரி, தூம்பு, கரை போன்றவை குறித்த செய்திகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. நீரைத் தேக்கி மழையை வசப்படுத்திய அரசனைப் புகழும் இலக்கிய மரபும் இதற்கு முன்னோடியாக உள்ளது. கொங்குநாட்டில் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் கி.பி. 13 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கொங்குநாட்டில் விசயநகரத்தார், கொங்குச் சோழர், கொங்குப் பாண்டியர், போசளர் ஆகியோரின் காலப்பகுதியில் குளம் சார் பதிவுகள் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
குளம்
மழைநீர், ஆற்றுநீர் அல்லது நிலத்தடி நீரூற்று ஆகியவற்றின் மூலம் நீர் நிரம்பும் ஒரு தேக்கத்தையே குளம் என்கிறோம். இக்குளத்தில், மழைநீர் சேகரிப்பின் மகத்துவத்தை உணர்ந்த தமிழ் மன்னர்கள் அதற்குரிய செயல்பாடுகளில் மேற்கொண்ட முனைப்பினை,
“இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்து ஆண்ட மன்னவன்”
(ந.மு.வேங்கடசாமி, சிலம்பு, வரி 26–28)
என்ற இலக்கிய வரிகள் உணர்த்துகின்றன.
விசயநகர மன்னர் காலத்தில் குளம் சார் பதிவுகள்
கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் விசயநகர மன்னர்களுள் ஒருவன் மேல்கரை பூந்துறை நாட்டு வெள்ளோட்டிலுள்ள சர்வலிங்கேசுவரர் கோயிலுக்கு, இவ்வூரிலுள்ள சின்னக்குளத்து ஏரிநீர் பாயக்கூடிய நிலம் முழுவதையும் பெரிய ஏரியின் நீர் பாயக்கூடிய நிலம் நாலுமாவையும் கனகபுரத்து குளத்து ஏரியின்கீழ் பாயக்கூடிய நிலம் பத்து மாவையும் குறுக்க குளத்து ஏரியின் கீழ் பாயக்கூடிய நிலம் ஒரு மாவையும் கொடையாக அளித்துள்ளதை,
“வெள்ளோட்டுச்சின்னக்குளத்து ஏரிக்கீழ் நிலம் முழுவதும் பெரிய ஏரிக்கீழ் நிலம் நாலுமாகவும் கனகபுரம் குளத்து ஏரிக்கீழ் நிலம் பத்து மாவும் குருக்க குளத்து ஏரிக்கீழ் நிலம் ஒரு மாவும் மேல் நோக்கிய மரம் கீழ் நோக்கிய கிணறு” (ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி-3, ப.92)
என்ற கல்வெட்டு சான்று பகர்கின்றது. இவ்வரசர் கோயிலின் நலத்திற்காக நன்றாக நீர்ப் பாயக்கூடிய குளம், ஏரியின் கீழ் உள்ள செழிப்பான நிலங்களைக் கொடையளித்துள்ளதை நோக்கும் போது, கொடையை ஏனோ கொடுத்தோம் என்று இல்லாமல் செய்யும் செயல் அறத்தோடு இருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இருந்துள்ளது புலனாகிறது. விசயநகர மன்னர்களில் அச்சுதராயர் கி.பி.1538 இல் கர்நாடக அரசர்களில் உடையார் மரபினைச் சேர்ந்தவர். இவர் இலிங்கண உடையார் பாலசமுத்திரம் என்ற பெயரில் ஒரு குளம் அமைத்து அந்தக் குளத்திலிருந்து நீர்ப் பாயும் நன்செய் நிலத்திலிருந்து பெறக்கூடிய நெல், கமுகு, தென்னை, வெற்றிலை, வாழை போன்றவற்றிலிருந்து வரக்கூடிய வருவாயில் மேல்வாரத்தில் ஒருபாதியை அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலுக்கும், மறுபாதியை அரசுக்கும் அளிக்கும்படி ஆணையிட்டுள்ளதை,
“அந்த சாலிங்க சமுத்திரத்தின் கீழே நீர்பாச்சல் நிலம் உள்ளத்தில் பயர் நஞ்செய் நெல் விளைசசர் கமுகு தென்னை மரம் வெற்றிலை வாழை மற்றும் உண்டான சகல ஆதரயத்தில் அவினாசிலிங்கள் கோயில் பண்டாரத்துக்கு பாதியும் இலிங்கணஉடையார் சிங்காதனுத்துக்கு பாதியுமாக” (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி.1, ப.34)
இக்கல்வெட்டு மூலம் குளத்தை வெட்டிக்கொடுத்து அரசன் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அறியமுடிகின்றன. மேல்வாரத்திலிருந்து வரும் வருவாயை மட்டும் பிரித்துக் கொடுக்க ஆணையிட்டுள்ளார் என்பதைக் காணும்பொழுது கீழ்வாரத்திலிருந்து வரும் வருவாயை நில உரிமையாளர்கள் வைத்துக் கொண்டுள்ளார்கள் என்பதையும் அறியமுடிகின்றன. விக்கிரமசோழனிக் இருபத்திண்டாவது ஆட்சியாண்டில் கி.பி.13ஆம் நூற்றாண்டில் செலக்கரிச்சல் ஊர் மக்கள் வேண்டியதன் பொருட்டு இறைவனுக்கு ஒரு குளமும் அதன் பாசன நிலங்களும் வரி நீக்கி அரசன் தனது அரசானையை வழங்கியுள்ளார். இதனை,
“இவரின் ஊரும் மூராளிகளும் தேவற்கு குடுத்த குளம் வெள்ளலூற்குப் போகிற வழியில் தவசி சேரமாந்தெடுக்க வேணுமெற்று ஊருமூராளிகளும் வந்து நம்மை வேண்டுக் கொண்டமையில்“ (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி-2, ப.125)
என்ற கல்வெட்டுச் சான்று மூலம் அறியமுடிகின்றது. மேலும், அரசர் தானாக முன்வந்து கொடையளிப்பதைத் தாண்டி மக்களின் முறைகளைக்கேட்டு அவற்றைச் சரிசெய்து கொடுக்கும் நிலை உற்றுநோக்கத்தக்கது. இக்கல்வெட்டு முழுமையாகக் கிடைக்கப் பெறாதினால் இறைவனின் பெயர் மற்றும் மற்ற செய்திகளை அறிந்து கொள்ளமுடியவில்லை.
கொங்குச் சோழர்காலத்தில் குளம் சார் பதிவுகள்
வீரராசேந்திரசோழனின் இருபதாவது ஆட்சியாண்டான 1207 இல் வடபரிசாரநாட்டு பழகருவலூரிள்ள வீரராசேந்திர விண்ணகரப் பெருமாள் கோயிலுக்கு அரசர் அமுதுபடி செய்வதற்கும், பல நிவந்தங்கள் செய்வதற்கும், திருவிளக்கு எரிப்பதற்கும், கருவலுள்ள புரோசக் குளம் என்ற குளத்தைக் கொடையாக அளித்துள்ளார். இதனை,
“அமுதுபடிக்கும் பலபடி நிமந்தங்களுக்கும் திருவிளக்குக்கும் குடுத்த குளமாவது கருவலூர் புரோசக் குளம் குடுத்தோம்” (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி.1, ப.93)
இச்சான்றுகள் மூலம் அறியமுடிகின்றது. மேலும், இக்குளத்தின் மூலம் விளையும் விளைச்சல் முழுவதையும் இறையிலியாக இறைவனுக்கு அளிக்கவும் வழிவகை செய்துள்ளார்.
கொங்குப் பாண்டியர் காலத்தில் குளம் சார் பதிவுகள்
வீரபாண்டியனின் இருபத்து மூன்றாவது ஆட்சியாண்டில் பெருமாநல்லூர் சிவாலயத்திற்குக் கிழக்கில் ஒரு குளமும், அதற்கு நீர்ப்பாயும் பள்ளமும், அதன் கரைகளும் நெடுங்காலமாகப் பராமரிப்பு இல்லாமல் சிதைந்து கிடந்தன. இதனைச் சீர்திருத்தி வேளாண்மையை வளர்ப்பதற்காக அரசன் அவ்வூரிலுள்ள எட்டு நபர்களுக்கு அனுமதி அளித்துள்ளார். அவர்கள்,
“ஆதம்பாக்கத்து வரதாஜ பட்டர் மகன் ஸ்ரீராம பட்டற்கும் சூரசாரம்பி திருவெண்காடு பட்டர் மகன் நாராயண பட்டரும் உப்பம்பிரால கோவிந்த பட்டர் மகன் சோலைபிரான் பட்டிற்கும் இவர் தம்பி மகாதேவபட்டற்கும் சூரசாரம்பி திருநட்டமாடிபட்டன் மகன் கெங்காதரபட்டற்கும் சூரசாரம்பி வினாயக பட்டர் மகன் சோதிமாணிக்க பட்டர்க்கும் பெங்சங்கிம சிவதனவாசி பட்டர் மகன் நாராயண பட்டர்க்கும் சிற்றிங்கூர் மலைப்பெருமாள் நாராயண பட்டர் காங்கய நாட்டு முத்தூரில் வியாபாரி மன்றுளாடுவான் சம்பந்தப் பெருமாளுக்கும்” (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி-2, பக்-105.106)
மேற்குறிப்பிட்ட எட்டு நபர்களும் பாழ்பட்டுக் கிடக்கும் குளத்தை செம்மைப்படுத்தகரை, தூம்பு ஆகியவற்றைத் திருத்துவதற்கு உண்டாகும் செலவினைத் தாங்களாகவே ஏற்றுச் செய்ய வேண்டும். அதற்கு ஈடாக இக்குளத்தின் கீழ் உள்ள நீர்ப் பாயும் நிலங்களைத் திருத்திப் பயிர் செய்து கொள்ளலாம். பயிர் செய்த விளைச்சலில் திருத்திய ஆண்டு தொடங்கி, நான்கு ஆண்டுகளுக்கு முதல் விளைச்சளை வரி ஏதுமின்றி, முழுவதையும் அனுபவித்துக் கொள்ளலாம். அதனை அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்கு காற்பங்கு விளைச்சல் இவர்களுக்கும், முக்கால்பங்கு அரசுக்கும் எனப்பங்கீடு செய்ய வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளுக்கு மூன்றில் ஒரு பங்கு இவர்களுக்கும், அரசுக்கு மூன்றில் ஒரு பங்கும் எனப் பங்கீடு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து வரும் அனைத்து ஆண்டுகளில் இவர்களுக்கு ஒரு பங்கும் அரசுக்கு ஒரு பங்கும் (அதாவது ½+1/2) எகப்பங்கீடு செய்ய வேண்டும். இந்நிலத்தில் கமுகு (பாக்கு), தெங்கு (தென்னை) போன்ற மரங்கள் வைத்துப் பயிர் செய்யலாம். இவற்றிக்கு ஆகும் காவற்கூலி, அறைக்கூலி, அடிக்கூலி ஆகிய செலவினங்களை இவர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கமுகு, தென்னை இவற்றை பயிர்செய்ய வரிகள் செலுத்த வேண்டியதில்லை. வற்றலைப்பயில் செய்யப் பயன்படும் கமுகு, இந்தப் பயிர் செய்யும் நிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் காலுக்கு மூன்று விழுக்காட்டுத் தொகையை வைத்துக்கொள்ளலாம். அதேபோல இஞ்சி, மஞ்சள் பயிர் செய்வதில் ஏற்படும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு இவர்களுக்கும் இரு பங்கு அரசுக்கும் வரி செலுத்த வேண்டும். மேலும், நிலங்களை 12 ¼ பகுதி பங்குகளாகப் பிரிக்கப்பட்டு பலருக்கும் வழங்கப்பட்டன. ஒரு பங்குக்கு ஒரு காணி நிலம் என்று அளவீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசர் முறையற்றுக்கிடந்த குளத்தைச் சீர்மை செய்து, அதன் மூலம் மக்களுக்கும் அரசுக்கும் வருமானத்தை ஈட்ட வழிவகை செய்துள்ளார்.
வீரபாண்டியனின் பதினைந்தாவது ஆட்சியாண்டான கி.பி.1280 இல் குறுப்புநாட்டு அரசர் அளித்த செய்தியானது வாகைப்புத்தூர் வடக்கு வாசியிலுள்ள வாகைக்குளம் நீண்ட நாட்களாகப் பாழ்பட்டுக் கிடந்தது. இக்குளத்தை வெட்டி அவற்றிக்கு வீரபாண்டிய பேரேரி என்று பெயரிட்டு இக்களத்தின்கீழ் பாய்கின்ற நிலத்தை இறையிலி தேவதானமாக நாகசுரமுடையார் திருக்காமகோட்தினுடைய நாச்சியாருக்கு அமுதுப்படி, சாத்துப்படி பயன்படுத்திக்கொள்ள அரசர் ஆணையிட்டுள்ளார். இதனை,
“யிக்குளம் வீரபாண்டிய பேரேரி என் (று) வெட்டி யிக்குளமமும் யிக்குளக்கீழ் நிலமும் நீர்ரேறின இடமெல்லாம் யிறையிலி தேவ தானமாக” (ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி-3, ப.36)
என்ற கல்வெட்டு சுட்டுகின்றது. அரசர் பாழ்பட்டுக்கிடந்த குளத்தை ஏரியாக மாற்றியதோடு அவற்றை வேளாண்மைக்குப் பயன்படும் வகையில் விளைநிலமாகவும் மாற்றியுள்ளார். மேலும், இன்று மக்களோ, மன்னர்களோ கொடைகளை அளிக்கும்போது தங்களுடைய பெயரை வைத்துக்கொள்வது போன்று, அன்றும் ஏரியை அமைக்கும்பொழுது அரசர் தன்னுடைய பெயரையே வைத்துக் கொடுத்துள்ளார் என்பதை இக்கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகின்றன.
வீரபாண்டியனின் பதினைந்தாவது ஆட்சியாண்டான கி.பி.1280 இல் பூந்துறைநாட்டு வெள்ளோட்டிலுள்ள ஊர் அதிகாரிகள் சர்வ லிங்கேஸ்வரர்க்கு இவ்வூரிலுள்ள வடக்குவாசல் குளத்தைக் குடிநீங்கா தேவதானமாகக் கொடுத்தனர். மேலும், இக்குளத்தைப் பயன்படுத்திப் பயிர்செய்பவர்கள் அதில் வரும் வருமானத்தை மூன்றில் ஒரு பங்கைக் கோயிலுக்கு அளிக்கும்படி ஒப்புக்கொண்டதை,
“உழுது பயிர் செய்து மூன்றிலொன்று மேல்வாரம் குடுப்போமாகவும் இப்படி சம்மதித்து நீர்வார்த்துக் குடுத்தோம் வெள்ளோட்டு ஊரும் ஊராளிகளுளோமும் எங்கள் மகண்மையுள்ள முதன்மைக்கு முசசூடும் பெறுவோமாகவும்” (ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி-3, ப.93)
என்ற வரிகள் மூலம் அறியமுடிகின்றன.
போசள மன்னர்கள் காலத்தில் குளம் சார் பதிவுகள்
போசள மன்னர்களில் மூன்றாம் வீர வல்லாளனின் ஆட்சியாண்டான கி.பி.1325 இல் தலைநல்லூரிலுள்ள ஊரார்கள் ஒன்றாக இணைந்து இவ்வூரிலுள்ள நக்கீசுரமுடையாருக்கு அமுப்படி, சாத்துப்படி, பூச்சுப்படி, திருப்பணி போன்றவற்றிக்குத் தேவதானமாகக் குளத்தைக் கொடையாக அளித்துள்ளதையும் இக்குளத்தை அழியாமல் காப்பவர்களின் பாதத்தை என் தலையின்மீது வைத்து வணங்குவதாகவும்
“இது காத்தார் பாதம் தலைமேலே“ (ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி -1, ப.69)
என்ற கல்வெட்டு வரி உணர்த்துகின்றது. போசள மன்னர்களின் மூன்றாம் வீரவல்லாளனின் கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வடபரிசாரநாட்டு இடிகரையிலிருக்கும் நாயனார் வில்லிசுரமுடையார்க்கு, இவ்வூரிள்ள ஊர் அதிகாரிகள் செங்காவன் குறமடை என்ற குளத்திலிருந்து கோயில் நிலத்திற்கு நீர்விட ஒப்புக்கொண்டனர் என்பதை,
”வட பரிசார நாட்டு இடகரையிலிந்து மூரோளிகளோம் எங்களூர் நாயினார் வில்ரிசுரமுடையயார்க்கு எங்களுற்கு மேற்கு செங்காவன் குறமடை குளமாய்சி.. கம் பண்ணிக்குடுத்தோம் நீர்விடுவோம்” (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி,1, ப.344)
என்ற வரிகள் மூலம் அறியமுடிகின்றன.
முடிவுரை
பாழ்பட்ட குளங்களைச் சீரமைப்பதிலும் ஆட்சியாளர் கவனம் செலுத்தியுள்ளனர். பெருமாநல்லூரில் செலவை ஏற்றுக் குளத்தைத் திருத்தியவர்களுக்கு, தொடக்கத்தில் வரியற்ற விளைச்சலும் பின்னர்ப் படிப்படியாக உயரும் அரசுப் பங்கும் என வகுக்கப்பட்ட முறை, அரசின் நிர்வாகத் திறனையும் பொருளாதாரச் சிந்தனையையும் காட்டுகிறது. விளைச்சலைப் பகிர்வதில் மேல்வாரம் என்ற முறை பெரிதும் வழங்கியுள்ளது. வெள்ளோட்டுக் கல்வெட்டில் மூன்றில் ஒரு பங்கும், அச்சுதராயர் காலக் கல்வெட்டில் மேல்வாரத்தில் பாதியும் கோயிலுக்கு உரியதாயின. மேல்வாரத்தை மட்டும் பிரித்தளித்ததால், கீழ்வாரம் நில உரிமையாளர்களிடமே இருந்தது என்பதும் புலனாகிறது. ஊரார், ஊராளிகள் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது. செலக்கரிச்சல் ஊரார் வேண்டுகோளின்படி அரசு ஆணையிட்டதும், தலைநல்லூர் ஊரார் குளத்தைத் தாமே தேவதானமாக அளித்ததும், இடிகரை ஊர் அதிகாரிகள் கோயில் நிலத்துக்கு நீர்விட ஒப்புக்கொண்டதும் இதற்குச் சான்றுகள். குளத்தைக் காப்பவரின் பாதத்தைத் தலைமேல் கொள்வதாகக் கூறும் தலைநல்லூர்க் கல்வெட்டு வரி, குளம் காத்தலை அறமாகக் கருதிய சமுதாய உணர்வை வெளிப்படுத்துகிறது. அரசர்கள் குளங்களுக்குத் தம் பெயரிட்டுள்ளதையும் அறியமுடிகின்றது.
பார்வை நூல்கள்
1.ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி-3, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, சென்னை – 08.
2.கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி.1, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, சென்னை – 08.
3.கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி-2, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, சென்னை – 08.
4.கல்வெட்டியலில் வாழ்வியல், மணிவாசகர் பதிப்பகம், 55, லிங்கி தெரு, சென்னை – 01.
5.கோயம்புத்தூர் மாவட்டத் தொல்லியல் கையேடு, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, இரண்டாம் பதிப்பு.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ந.மகாதேவி,
உதவிப்பேராசிரியர்,
விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி,
திண்டல், ஈரோடு – 12.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

