Thursday, October 8, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home திறனாய்வுக் கோட்பாடுகள் சுந்தரிமணியனின் ‘நெற்றிக்கண்’ சிறுகதைத் தொகுப்பு ஒரு பருந்துப்பார்வை

சுந்தரிமணியனின் ‘நெற்றிக்கண்’ சிறுகதைத் தொகுப்பு ஒரு பருந்துப்பார்வை

நெற்றிக்கண்- விமர்சனக் கட்டுரை
       சிறுகதை தமிழுக்குப் புதுவரவு என்றிருந்த காலம் மாறிவிட்டது. சங்க இலக்கியப் பாடல்களில் ஊடுபாவாகக் கற்பனையின் உச்சம் தொடும் சிறுகதைகள் ஒளிந்திருக்கின்றன. “சுனையில் இருக்கும் நீரோ மிகவும் கொஞ்சம். வேட்கை தணிக்க வந்தன ஆண்மானும் பெண்மானும். இருவர்க்குப் போதாத தண்ணீர்.  பெண்மான் குடிக்கட்டும் என எண்ணி, ஆண்மான் சுனைநீரைக் குடிப்பதுபோல் நடிக்கிறது. ஆண்மான் குடிக்கட்டும் எனப் பெண்மான் நீரைக் குடிப்பதுபோல் நடிக்கிறது“ இந்தக் காட்சிக்குச் சொந்தக்காரர் மாறன் பொறையனார். ஐந்திணை ஐம்பது என்ற நூலில் பாலைத் திணையில் வரும் பாடல் இது.
          ”தோழி , தெருவில் நாம் மணலில் சிறுவீடு கட்டி விளையாடும்போது அதைக் காலால் எட்டி உதைத்துச் சிதைப்பானே, ஆமடி… நாம் விளையாடும் வரிப்பந்தை எடுத்துக் கொண்டு ஓடுவானே அவன், நானும் அம்மாவும் வீட்டில் இருக்கும்போது வந்தான். தாகமாக இருக்கிறது ; குடிக்கத் தண்ணீர் தாருங்கள் எனக் கேட்டான். அந்தப் பொன்பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டுபோய்க் கொடுத்துவா ‘என்று அம்மா சொன்னவுடன் நானும் நீர் எடுத்துக்கொண்டு வெளியில் சென்றேன். உடனே அவன் என் வளையணிந்த கையைப் பற்றினான். உடனே ‘அம்மா இவன் என்ன செய்கிறான் பாருங்கள்’ என அலறிவிட்டேன். உடனே அம்மா வந்து என்ன நடந்தது எனக் கேட்டாள். ‘ இவன் நீர் குடிக்கும்போது விக்கினான்‘ என்றேனா, அம்மா என்னைத் திட்டியபடி அவனுக்கு நீவினாள். அப்போது பார் தோழி, அந்தக் கள்வன் மகன்  என்னைக்  கடைக்கண்ணால் கொல்வதுபோல் நோக்கிச் சிரித்தான்” என்ற கதையை நமக்குச் சொல்வது கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் வரும் “சுடர்த் தொடீஇ! கேளாய் “ எனத் தொடங்கும் பாடல்.ஆகும்..
    வள்ளுவரும் திருக்குறளில் இன்பத்துப் பாலில் பொதிந்து வைத்திருக்கும் குட்டிக் கதைகள் ஏராளம். உரைநடை வடிவில்  சிறுகதை    மேனாட்டார் நமக்கு அளித்த கொடை. வ.வே.சு.அய்யரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ , தமிழில் முதல் சிறுகதை என்பது பெரும்பான்மையோரின் கருத்து..” பாரதியின் ‘ஆறில் ஒரு பங்கு‘ கதைதான் தமிழில் முதல் சிறுகதை. பாரதிதான் ‘சிறுகதையின் தந்தை’ என்பார் சி.சு.செல்லப்பா. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கல்கி, எனப் பெரும் படைப்பாளுமைகளால் தமிழ்ச்சிறுகதை உலகம் செழுமையுற்றது.
          வை.மு.கோதைநாயகி அம்மாள், புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாசலம், ஒரே ஒரு கதை எழுதிப் (தமயந்தி கதை) புகழ்பெற்ற மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், கு.ப.இராஜகோபலனின் இளைய சகோதரி கு.ப.சேது அம்மாள் ஆகியோர் ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்‘ என்று மெய்ப்பித்த சிறுகதை ஆசிரியர்கள். இந்த வரிசையில் இடம்பிடிக்கப் புறப்பட்டிருக்கிறார் மதுரையில் இருந்து சுந்தரிமணியன். காற்றுவெளி, தமிழ்நெஞ்சம், முத்தமிழ்நேசன், முத்தமிழ்க் கலசம், ஞானம், வல்லினச் சிறகுகள், ஊடறு எனப் பல இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார்.
           “நெற்றிக்கண்“ சிறுகதைத் தொகைநூல் இவருடைய இரண்டாவது நூல். இவருடைய கதைமாந்தர்கள் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டவர்கள்,  நெருங்கிய   உறவுகளாலேயே கொடுமைப்படுத்தப்பட்டவர்கள், குடிக்கு அடிமையாகி மனைவி மக்களைப் புறக்கணிப்பவர்கள், மருமகள் என்றாலே அடங்கி நடக்க வேண்டியவள் என்று எண்ணி அதிகாரம் செலுத்தும் மாமியார்கள், எல்லோருக்கும் அடங்கி வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து, அனைவருடைய மனமறிந்து  உணவளிப்பவளைச் சாப்பிட்டாயா என்று கேட்கக்கூட மனமில்லாத கணவன்கள் ஆகியோர்.
  ‘எவரெல்லாம் உலகில் துன்பப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார்களோ, அவர்கள் எம் தோழர்கள்’ என்பார் சேகுவேரா. அவ்வகையில் எளிய மனிதர்களுக்காகக் குரல்கொடுக்கும் இவருடைய மானுட நேயத்தையும், படைப்பாற்றலையும் பாராட்டலாம்.   முற்போக்குச் சிந்தனையோடு எதை எழுதுவது? எப்படி எழுதுவது? எவருக்காக எழுதுவது ? என்ற இலக்கோடு இவருடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. படைப்பாளி தனிமனிதன் அல்ல. அவன் \ அவளை வடிவமைப்பது இந்தச் சமூகம். இலக்கியமும் சரி; படைப்பாளியும் சரி ; எல்லாம் இச்சமூகத்தின் விளைச்சல்கள்.
    “சமூகம் எழுத்தாளன் மீது தாக்கத்தை உண்டாக்குகின்றது. எழுத்தாளன் சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றான்“ என்று ஒப்பிலக்கிய அறிஞர் ரெனி வெல்லக் கூறுவது சாலப்பொருத்தமே. கட்டாக்காலி என்ற கதையில் வேலைக்குப் போகும் நேரம் தவிர குடும்பத்தைக் கவனிக்காமல் ஊரைச்சுற்றும் செழியனின் நிலையில் இருக்கும் பலரையும் தாங்கி குடும்பத்திற்காக உருகி ஓய்ந்துபோகும் எத்தனையோ பனிமலர்களை, அவர்கள் படும் துயரங்களை கண்ணில் நீர்வழியப் படைத்திருக்கிறார் ஆசிரியர்.
    கலையும் ஒப்பனைகள் கதையில் வசுந்தரா ஆதித்தன் இணையர்களோடு குடிக்கு அடிமையான ஆறுமுகத்தையும் அவன் மனைவி இலட்சுமியையும் அறிமுகப்படுத்துகிறார். ஆறுமுகம் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான். அதற்குக் காரணம் இலட்சுமியே என்று ஆதித்தன் கூறுகிறான்..‘எதற்கெடுத்தாலும் பெண்ணையே குறை சொல்லும் ஆண்புத்தி’ என வசுந்தரா எதிர்க்குரல் கொடுப்பது ஒட்டுமொத்த பெண்ணினத்தின் குரலாக அல்லவா ஒலிக்கின்றது. கணவன் குடிப்பழக்கத்தோடு வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தான் என்பதை மறைக்கிறாள் இலட்சுமி. இறந்தவரைப் பர்றி யாரும் தப்பாப் பேசக்கூடாது என்று இலட்சுமி கூறுவதில் அவளுடைய நனிநாகரிகம் புரிகின்றது.. ‘தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் / தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற குறளுக்கேற்ற பட்டறிவு விளக்கமாக விளங்குகின்றது கழுவாய் எனும் கதை. சட்டத்துக்கு எதிராகக் கருக்கலைப்புச் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக அமைகின்றது.  
       ஒரு மிகச் சிறிய கருவைக் கொண்ட கதை, என்னை உலுக்கி விட்டது. ‘கனவு’ என்ற அந்தக்கதை மூலம் சுந்தரிமணியன் அவர்கள் சிறந்த கதைசொல்லியாக வடிவெடுத்திருக்கின்றார். நிறைவேறாத ஆசைகளின் வெளிப்பாடுதான் கனவாக வருகின்றது என்பதை அறிவோம். உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டு, “கனவு என்பது படைப்பாளியின் நனவிலி மனத்தின் (unconscious mind) ஒரு வெளிப்பாடு” என்பார்..பள்ளியெழுச்சி பாடாத குறையாகக் கணவனை எழுப்பிவிட்டு, அவன் விரும்பிய உணவைப் படைத்து மகிழ்ந்த வேளை, தன் அம்மா அப்பாவைப் பார்த்துவர வேண்டுகின்றாள் நர்மதா. கணவனும் இசைகிறான். திடீரென்று தன்னைக் கணவன் எட்டி உதைப்பதை உணர்கிறாள்; தூக்கம் கலைந்து எழுகிறாள். தான் கணவனைப் பேணியதும் பெற்றோரைப் பார்த்துவரத் தன்னை அனுப்பியவனுடைய அன்பை வியந்ததும்..எல்லாம் கனவாகப் போனதை எண்ணி மனம் நொறுங்கிப் போகிறாள் நர்மதா. இப்படி எத்தனை நர்மதாக்கள் தீயிலிட்ட புழுக்களாகத் துடித்துக் கொண்டிருக்கிறார்களோ? என நம்மை எண்ணத் தூண்டுகின்றார் ஆசிரியர். இக்கதையில் ஆசிரியர் சொல்லியிருப்பதைவிடச் சொல்லாமல் படிப்பவரின் எதிர்வினைக்காக இடம் அளித்திருப்பதே அதிகம்.
                   மனித மனங்களுக்குள் விளையும் சின்னச் சின்ன உணர்வுகளைப் படம்பிடிப்பதில் வெற்றி கண்டுள்ளார் ஆசிரியர். ’குதிரைச் சம்மட்டி’ என்ற கதையில் ‘பட்டப்படித்து முடித்தவுடனே திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும் அப்பாவின் செயலால் கலங்கிய மகிழினி, அண்ணன் திருமணம் நடக்கப்போகிறது; தன் திருமணம் மூன்றாண்டுகள் கழித்துத்தான் நடக்கும் என்பதறிந்து துள்ளிக்குதித்து மகிழ்கின்றாள்.
                   கெக்கலிப்பு என்ற கதையில்  அடிக்கடி வலிப்பு நோயால் துன்புறும் சிவாவுக்கு, அவன் மரணமே விடுதலை என்பது கொஞ்சம் கசப்பான உண்மைதான். ஏழு பேருக்குச் சமைத்துப் போட்டு, வீட்டு வேலைகளையெல்லாம் தனிஆளாய்ச் செய்தும் மாமியாரிடம் நல்லபெயர் கிடைக்காமல் துயரில் உழலும் இளமதி. கணவன் மாறன் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். எல்லோருக்கும் உணவளிக்கும் இளமதியைச் சாப்பிட்டாயா எனக் கேட்க ஆளில்லை. விடுதலையை எதிர்நோக்கி இருக்கும் கைதிபோல இருந்த இளமதிக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது. பணிநிமித்தம் பக்கத்து ஊருக்குச் சென்று வசிக்கிறாள் மகளோடு. இளமதிக்கு ரெக்கைகட்டிப் பறப்பதுபோல் இருக்கிறது என்று கதையை முடிக்கிறார் சுந்தரிமணியன், அவருக்கே இறக்கை முளைத்த மகிழ்வோடு. இந்தக் கதையை இணையத்தில் இதுவரை 6135பேர் படித்திருக்கிறார்கள் என்பது மிக இனிப்பான செய்தி.
      காதல் பித்து என்ற கதையில் தன்னைவிட உயர்சாதிப் பெண்ணைக் காதலித்த குற்றத்துக்காகக் கதைநாயகன் கதிர் கைது செய்யப்படுகின்றான்; காவலரால் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றான். சிறைமீண்ட பின்பும் அடிபடுகிறான். அவன் மனநோய்க்கு ஆளாகிறான். “காதலிப்பது அவ்வளவு பெரிய குற்றமா?“ எனக் கேட்கிறார் ஆசிரியர். விடை சொல்ல வேண்டியது நம் பொறுப்பு! “புகுந்த வீடென்பது வலிமிகுந்த சுமையாகவே எனக்கு இன்னும் இருக்கிறது“ என்று ‘சுமைகள்’ கதையில் பூர்ணா புலம்புவது ஒட்டு மொத்தப் பெண்ணினத்தின் புலம்பலாக ஒலிக்கின்றது. அலுவலகங்கள் ஒரு சிறிய உலகம். நல்லவர்கள், கெட்டவர்கள், நண்பரைப் போல் நடிப்பவர்கள் எல்லோருடனும் சேர்ந்து பணிபுரிந்தாக வேண்டும். ‘போந்தாக்கோழி’ என்ற கதையில் வரும், மற்றவர்கள் துன்பம் கண்டு இன்புறும் சசிகலா போல் நாட்டில் பலபேர் இருப்பார்கள். அவர்களையும் மன்னிக்கும் சுதா போன்றவர்களும் இந்த மண்ணில் இருப்பது நனிநாகரிகம் எனச் சுட்டுகிறார் ஆசிரியர்.
      எந்த மனிதனும் முழுமையானவன் கிடையாது. நேர்மறை எண்ணங்களும் எதிர்மறை எண்ணங்களும் கலந்த கலவையாகத்தான் பெரும்பான்மையோர் உள்ளனர். ‘வெள்ளந்தி’ கதையில் வரும் பரமேஸ்வரியும் அப்படித்தான். பேருந்துப் பயணங்களில் பெண்கள் படும்பாடு பெரும்பாடு. சில ஓட்டுநர்கள் முதியவர்கள் கைகாட்டினாலும் வண்டியை நிறுத்துவதில்லை. ஆனால் ஓட்டுநரின் நண்பருக்காக நிறுத்தம் இல்லா இடத்தில் வண்டி நிற்கின்றது. ஓட்டுநர் மிக வேகமாகப் பேருந்தை இயக்குகிறார். படியில் பயணம் செய்பவர் கீழே விழுகின்றார். ஒரு பேருந்துப் பயணத்திலேயே இத்தனை விதிமீறல்கள்; பணியாளர்களின் கவனக்குறைவு: நக்கீரர்  பரம்பரையில் வந்த நாம், பேருந்தை அதி வேகமாக இயக்கிய ஓட்டுநரைத் திருத்த முடியவில்லை. எத்தனை பேருடன் போராடுவது? குற்றம் புரிந்தோர்க்காகச் சிவந்து தீயை உமிழ்ந்து கொண்டே இருக்கிறது நம் அறச்சீற்றம் பொங்கும் நெற்றிக்கண்கள்.
        ‘அப்பாவின் குரல்’  –சிறுகதையா ? இல்லை மனதை நெகிழவைக்கும் அழகிய கவிதையா? தெரியவில்லை. இக்கதையைப் படிக்கும் ஒவ்வொருவரும் தத்தம் அப்பாக்களைக் கட்டாயம் நினைவுகூர்வர். தன் தேவைகளை மறந்துவிட்டு, வீட்டுக்கு வந்த தேவதைகளைக் கொண்டாடாத அப்பாக்கள் எங்கேனும் இருக்கிறார்களா? இக் கதையைப் படிக்கும்போது ஒரு குறும்படத்தைப் பார்த்ததுபோல் இருக்கின்றது. சொல்புத்தியும் இல்லை தன்புத்தியும் இல்லை என்று சொல்லத்தக்க இந்தக் கேடுகெட்ட சமூகம், எப்போது பெண்களைத் தோழமையோடு பார்க்கப் போகிறது? எத்தனை நாட்கள் பலியாடுகளாகவே பார்க்கப் போகிறது? விடிவு என்ன என்பதை வாசகர்களிடமே கேட்கிறார் கதையாசிரியர் பலியாடு கதையில்… ‘சுந்தரி மணியன் கதைகளில் இயற்கை வருணனை’ என்ற தலைப்பில் தனி ஆய்வே செய்யலாம்.
எடுத்துக்காட்டுக்குச் சில :
“காற்றில் இருவாச்சி, மைசூர் மல்லிகை நறுமணம் தான் –வைகறை மணம்”.
 “மாலைவெயில்—இளம்மஞ்சள், பொன்நிறம்”.
 “காற்று குளிர்ந்த ஆடையை உடுத்திக் கொண்டு வந்தது.” 
       வகைவகையான கதைமாந்தர்களைப் படைத்த சுந்தரிமணியன், இன்னும் ஆழ்ந்து மக்கள் வாழ்வியலைப் படம்பிடிக்க வேண்டும். ‘கதைசொல்லுவது என்பது ஓர் அனுபவத்தை, அனுபவ வழிப்பட்ட செயலை, அதனை முன்னிறுத்திய உணர்வை, வாய்மொழிப் பட்ட, எழுத்து வழிப்பட்ட ஒரு பனுவல் வடிவமாக ஆக்கித் தருவது—எடுத்துரைப்புச் செய்வது ஆகும்’ என்ற திறனாய்வுச் செம்மல் தி.சு.நடராசன் அவர்களின் கூற்றுக்கேற்ப சுந்தரிமணியன் திகழ்கின்றார். அவர் மேன்மேலும் படைப்புப் பலபடைத்து இலக்கிய உலகுக்கு வளம்சேர்க்க வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
   நூல் திறனாய்வாளர்
 தமிழ்மாமணி பழனி.சோ.முத்துமாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »