Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
Cinema serves as the preeminent medium for illuminating the marginalized, unspoken, and systematically silenced realities of society through the lens of visual storytelling. Currently, there is a prevailing tendency to dismiss the daily struggles of marginalized communities as mere transient news. Despite the exponential growth of the film industry—spanning global politics, economics, and local entertainment—spaces dedicated to marginalized narratives remain scarce. Only a handful of films manage to penetrate the public consciousness and drive meaningful social or legislative reform.In this context, this paper examines the systemic oppression of the marginalized Irular tribes through Jai Bhim (2021), investigates the power dynamics inherent in the folk art of street theatre (Therukoothu) through Jama (2024), and analyzes the body politics surrounding this art form through Pariyerum Perumal (2018). Furthermore, this study critically interrogates the unaddressed and uncorrected socio-political realities that exist behind the cinematic imagery projected by these films.
Keywords: Marginalized communities, Cinematic imagery, The centralized power of art Body politics, Pariyerum Perumal, Jama, Jai Bhim.
“விளிம்பு நிலையினர் வாழ்வும் கலையும்: திரைப்படங்கள் வெளிக்காட்டும் பிம்பத்தினூடே திருத்தப்படாதவை”
ஆய்வுச்சுருக்கம்
சமூகம் பேச மறுக்கின்ற மறுக்கப்படுகின்ற வெளிச்சம் படாத சூழல்களை நிழற்பதிவில் வெளிச்சமிட்டு காட்டுகின்ற ஆகச் சிறந்த ஊடகம் திரைப்படங்கள். தினந்தோறும் நடக்கின்ற விளிம்பு நிலை மக்களின் போராட்டங்களை செய்தியாக செவிகளோடு கடந்து விடுகின்ற போக்கு தற்போதுள்ளது. உலக அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடங்கி உள்ளூர் பொழுதுபோக்கு வரை அனைத்திலும் அசுர வளர்ச்சி பெற்ற திரைப்படத்துறையில் விளிம்பு நிலையினருக்கான பக்கங்கள் அரிதாகவே உள்ளன. மக்களின் மனங்களில் உள்ளூர்ந்து, சமூகத்திலும் சட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்த உதவுகின்ற படங்கள் திரைப்படச் சந்தைக்கு வெகு சிலவே வரச் செய்கின்றன. அவ்வகையில் விளிம்புநிலை மக்களான இருளர் பழங்குடிகளுக்கு எதிரான ஒடுக்கு முறையை ஜெய் பீம் (2021) வழியும் தெருக்கூத்துக்கலையை மையமிட்ட அதிகாரத்தை ‘ஜமா'(2024) மற்றும் அக்கலையின் மீதான உடல் அரசியலை பரியேறும் பெருமாள்(2018) வழியும் இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது. மேற்கண்ட திரைப்படங்கள் வெளிக்காட்டிய பிம்பத்தினூடே திரையில் திருத்தப்படாத பக்கங்களையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.
திறவுச்சொற்கள்: விளிம்பு நிலையினர், திரை பிம்பங்கள், கலையின் மையமிட்ட அதிகாரம், உடல் அரசியல், பரியேறும் பெருமாள், ஜமா, ஜெய் பீம்.
முன்னுரை
பொருளாதாரம், சமூகப் பண்பாட்டுக் கூறுகள் அடிப்படையில் சமூகத்தின் பிற அங்கத்தினரால் புறந்தள்ளப்படுபவர்கள் விளிம்புநிலை மக்கள் என்கிற பொதுவானப் புரிதல்களை கேள்விக்குட்படுத்தியே திரைப்படங்களில் விளிம்புநிலையினரை கண்டடைந்து கொள்ள வேண்டும். அரசாங்கப் பதிவேடுகளும் இலக்கிய ஏடுகளும் பொதிந்து வைத்துள்ளவற்றையே திரைப்படத்தின் பிம்பங்கள் வெளிக்காட்டுகின்றன என்பதை தற்காலத்தில் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும். இயக்குநர்கள் விளிம்புநிலையினருக்கென அவரவர் காண்பிக்க விரும்புகின்ற தனித்த, ஒளிவில்லைகளை (lens) பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் வெகு நாட்களாக திரைப்பட அரசியலில் விவாதமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சமீபகாலத்தில் வெளியாகி மக்களிடத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திய பரியேறும் பெருமாள் (2018), ஜெய்பீம் (2021), ஜமா(2024) ஆகிய படங்கள் திரையில் பேசியவற்றையும், சமூகத்தில் அவற்றால் உண்டான தாக்கங்களையும் அலசுவதையே இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திரிகோணப் பார்வையில் திரைப்படக்கதைகள்
1.வாழ்வியல்
இருளர் பழங்குடியினருக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற பண்பாட்டு கருத்தியல் மற்றும் செயல்நிலை ஒடுக்குமுறைகளால் நேர்ந்த இழப்புகள், அதற்கு நீதி கேட்டு இருளர் குடிப்பெண் நிகழ்த்திய சட்டப் போராட்டம் இதுவே ஜெய் பீம் திரைப்படத்தின் கதையாகும். திரைக்காட்சி வழியே சமூகத்திலும் சட்டத்திலும் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய படம். இருளர் பழங்குடிகள் மட்டுமல்லாது இப்படத்திற்கு பின்பு ஒட்டுமொத்த பழங்குடியின மக்கள் மீதான மாற்று சிந்தனைகளும் அதன் அதிர்வுகளும் இன்று வரை அவதானிக்கப்பட கூடியவை. காட்சிப்படுத்துதலில் பழங்குடியினர் உணவு, வாழ்விடம், கல்வி, ஆடை, மொழி,தொழில், பாதுகாப்பு என அனைத்து அடிப்படை வசதிகளில் இருந்தும் புறந்தள்ளப்படுவர்களாக உள்ளனர்.உயிர்பிழைத்தலில் இவர்கள் என்னவாக உருவகிக்கப்படுகிறார்கள் என்கிற கேள்விகளை பார்வையாளர்களிடம் பதிய முற்படுகின்றார் இயக்குனர். அக்காட்சிகள் மலையிழந்து, மலை வாழ்விழந்து பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு கொண்டேயிருக்கின்ற தொல் குடிகள் மீதான காவல்துறையின் அத்து மீறல்களை, சிறைக்கொடுமைகளை சோளகர் தொட்டி நாவலில் முன்னமே ச.பாலமுருகன் (2004) வெளிக்காட்டி இருக்கின்றார். இருப்பினும் இன்னும் எழுத்திலும், காட்சியிலும் சொல்லப்படாத பழங்குடியினர் வாழ்வியல் குறித்த செய்திகளும், அறிவிக்கப்படாத அடையாளம் இழப்பை அடைந்து கொண்டிருக்கின்ற அவர்களது கதைகளும் எண்ணில் அடங்காதவை. தனி மனிதனுக்கு சமூக பாதுகாப்பை விட சட்டப் பாதுகாப்பே சிறந்தது என்பதை 1993இல் நிகழ்ந்தேறிய சம்பவம் செங்கேணியின் போராட்டம் வழி 2021 இல் திரைக்கதையாக்கத்தின் வாயிலாக பெரும் மாற்றத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கின்றது.
-
மையமிட்ட கலை அதிகாரம்
இயக்குனர் பாரி இளவழகன் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகி 2024 ஆம் வருடம் வெளியான திரைப்படம் ஜமா தெருக்கூத்து நிகழ்த்துகின்ற குழுவை குறிக்கின்ற சொல்லே ‘ஜமா’. தமிழ்நாட்டின் மிக முக்கியமான தொன்மை சிறப்பு பெற்ற தெருக்கூத்து வட மாவட்டங்களில் மிகுந்த பார்வையாளர்களை கொண்ட நாடக கலையாகும். பின்னாளில் கூத்துக் கலைஞர்களே திரை கலைஞர்களாயினர். எனவே திரைப்படத்தின் தோற்றமே கூத்து வழி தான் என்ற அளவிற்கு தெருகூத்து சிறந்து விளங்கியது. அத்தகைய தெருக்கூத்து நிகழ்த்துகின்ற கிராமப்புற ஜமாக்களில் உள்ள சிக்கலையும் வேடத்தரிப்பில் ஏற்படுகின்ற பேதங்களையும், கலை – அரசியல் – அதிகாரம் என்ற நேர்கோட்டில் எடுத்துக்காட்டி திரையாக்கம் செய்யப்பட்டுள்ளது இப்படம்.
திறமை இருந்தும் அங்கீகரிக்கப்படாத சூழல்.சமூக ஏற்றத்தாழ்வு பொருளாதார அடிப்படையினால் மட்டுமே ஏற்படுவதில்லை. விளிம்பு நிலை சமூகத்திற்கு உள்ளேயும் நிரம்பி இருக்கின்றது. வேடம் தரித்தல் கலை ஆளுமையை மக்களிடத்தில் வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. கலையின் மீதான, அந்த குழுவின் மீதான அதிகாரத்தையும் மையமிட்டு வேடம் தரிக்கப்படுகின்றது என்பதை இப்படம் காட்சியாக்கம் செய்கிறது. பண்ணை அடிமை நிலை, பெண் வேட நடிப்பில் உடலில் மாற்றம் பெற்ற அசைவுகளால் கேலிக்குள்ளாகும் கலைஞனின் திருமணம் என பல்வேறு கோணங்களில் கதை நகர்கின்றது. வேடம் தரிப்பதில் மைய அதிகாரத்தை தக்க வைக்க நினைக்கும் குழுவில் தலைவரிடத்தில் உணர்ச்சிமிக்க கலை நடிப்பால் வென்ற கல்யாணம் என்கிற கதாபாத்திரம் அக்கருத்தியலை கட்டுடைக்க முயற்சிப்பதாக அமைகின்றது.
-
உடல் அரசியல்
இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் 2018 ல் வெளிவந்த மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. பரியன் என்கிற விளிம்பு நிலை மாணவன் மேற்கொள்கிற கல்வி,காதல், சுயமரியாதையிழப்பு, அடக்குமுறை, புறக்கணிப்பு, செல்லப்பிராணி வளர்ப்பு என குறியீட்டு நிலையில் பெரும் அரசியலை பேசிய படமாக கருதப்படுகின்றது. ஆய்விற்காக பரியனின் தந்தை மேற்கொண்ட கலையும் அவரது உடலும் மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. தெருக்கூத்து தமிழினத்தின் முத்தமிழ் வடிவ பெருமையை பெற்றிருந்தாலும் சதிர் ஏற்படுத்திய தாக்கம் தெருக்கூத்திலிருந்து விடுபடவில்லை. பெண்கள் கூத்தாட எந்த சமூகத்திலும் அனுமதிக்கப்படுவதே இல்லை. ஆண்களே பெண் வேடம் அணிந்து நடிப்பதன் தாக்கம் அன்றாட வாழ்விலும் எதிரொலித்தது. பெண் வேடமிட்டு நடிக்கின்ற மிக முக்கியமாக விளிம்பு நிலை கலைஞரின் உடல் மீது நிகழ்த்தப்படுகின்ற துன்புறுத்துதல்கள் அழுத்தமாக பரியேறும் பெருமாள் காட்சிப்படுத்துகின்றது. நெல்லை தங்கராஜ் என்ற கலைஞரைக் கொண்டு அக்காட்சிகள் அமைக்கப்பட்டிருத்தல் நிஜ வாழ்விலும் அப்படி வாழ்கின்ற கலைஞர்கள் மீது புதிய அணுகுமுறையை ஏற்படுத்தியுள்ளது. கலையின் மீதான உடல் அரசியலை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க ஏதுவாக இக்கதை அமைந்துள்ளது.
திரைக்கதைகளால் திருத்தப்பட்டவைகள்
விளிம்பு நிலை மக்கள் பொருளாதாரம், சமூக பண்பாட்டுக் கூறுகளால் மட்டும் சமூகத்தின் பிற அங்கத்தினரால் புறம்தள்ளப்படுபவர்கள் என்கிற மாயை ஜமா படத்தின் மூலம் விலக்கப்படுகிறது. யாராக இருந்தாலும் தன் அதிகாரத்தை பிறர் மீது ஏதாவது ஒரு காரணத்தினால் செலுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அகத்திற்குள்ளும் அச்சமுகத்தின் புறத்திலும் நிகழ்கிறது. புறச் செயல்பாட்டை சாதி, மதம் என்று கட்டமைத்தால் அகத்திலும் ஆண் – பெண், திறமை- திறமையற்றவர், புனிதம் -புனிதமற்றது, அதிகாரம்- அதிகாரமற்றது என்ற உள்கட்டமைப்பும் இழையோடிக் கொண்டிருத்தலை ஜமா ஆணித்தரம்போல் நிலை நிறுத்துகிறது. அதிகாரத்தின் இயக்கம் சுயநலத்தின் நிலைநிறுத்தம் ஆகும். கலை என்பது அதற்கு அப்பாற்பட்ட நிலை என்பதை கல்யாணம் கதாபாத்திரம் திருத்த முயல்கின்றது. தெருக்கூத்தில் மூன்று பாணிகள் இருந்தாலும் அந்தந்த ஊர் வாத்தியாரின் பாணிக்கு தனித்தச்சிறப்புகள் உருவாக்கப்படுகின்றது. கதையைப் பாடி நடிக்கும் விதத்தாலும், அலங்காரத்தாலும் தலைமுறை தலைமுறையாக கட்டமைக்கப்படுதலில் நாட்டுப்புற கலையின் சுதந்திரத்தை, விளிம்புநிலை மக்களின் இரசனையை அதிகார செயல்பாடாக மாற்றப்பட்டு உள்ளது. திறமையே வேடத்தை தீர்மானிக்க வேண்டும் அதிகாரம் அல்ல என்ற சிந்தனை திரைப்படத்திற்கு மட்டுமல்ல விளிம்பு நிலையினர் கலைக்கும் பொருந்தும் என்பது புலன் ஆகிறது. கல்யாணம், பரியேறும் பெருமாள் பரியனின் தந்தை இருவருக்குமான சூழல் பெண் வேடத்தால் மாறிய உடல் மொழியே ஆகும். கல்யாணம் இளம் வயதினன் என்பதால் திருமணத்தில் தாமதம் பெண் தன்மை கொண்டவன் என்ற ஏசல்கலோடு நின்று விடுகிறது. வயதான பரியனின் தந்தையின் உடல் பொது இடத்தில் ஒடுக்கப்படும் எண்ணத்தால் கேலிக்குள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றது. இவை இரண்டும் கலையினால் உண்டானது அல்ல. சமூகம் தீர்மானித்திருக்கிற உடல் அக்கட்டுப்பாட்டில் இருந்து விலகி சுதந்திரப் படுத்தலை ஏற்காததுவே. முகமூடிகளை கழட்டிக்கொண்டு போய் உண்மை சொரூபம் அடைதலே நடிப்பு என்று கூத்துப்பட்டறை நா.முத்துசாமி உரைப்பார். அப்படியானால் கலையை ஏற்கும் உடலின் முழு சுதந்திரத்தை இந்த சமூகம் விரும்பாததே பிரச்சனை. இதன் விழிப்புணர்வு மக்களிடத்தில் கொண்டு சேர்க்கப்பட்டது இக்காரணமே. பெண் உடலை அரங்கத்திற்குள் அனுமதிக்காத நோக்கம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். கலை- உடல்- அதிகாரம் அரசியல் இவை அனைத்தும் அக கட்டமைப்பில் தெளிவு பெறும் பொழுது புற கட்டமைப்பில் நிகழ்கின்ற வாழ்வில் சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடிய வழிகள் அடிப்படைச் சட்டங்களால் கிடைக்க நேரிடுகின்றது. சமூகத்தின் அங்கத்தினர்களை அவர்கள் ஏற்க விரும்புகின்ற சூழலோடு வெளிப்படுத்தி வாழவிடுதலே அடிப்படை உரிமை. இருளர் பழங்குடிகளைப் போல விளிம்புநிலை மக்கள் எவராக இருப்பினும் அவர்களது வாழ்விடம் சூழல் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளை முரண்பாடு இல்லாது வெளிப்படுத்தி வாழ விடுவதில் தான் சமத்துவம் நிறைந்திருக்கிறது.அவர்களது அடையாளங்களை பெறுவதில் (ஜாதி சான்றிதழ் போன்றவை ) எவ்வித ஆதாரங்களையும் திரட்ட முடியாத சூழ்நிலையிலும் (நரிக்குறவர் முதலானார் ) அவர்களின் மீது தவறான அடையாளங்களை திணித்து ஒடுக்கப்படுதலிலிருந்து பாத்துக்கப்பட வேண்டும். என்பதாக கருத்தாக்கங்கள் அரசின் கவனத்தையும் சமூக ஆர்வலர்களின் மத்தியிலும் பரவலாக்கப்பட்டது. இதுவே சமூகத்தில் இப்படங்களின் மிகச்சிறந்த சீர்திருத்தங்கள் ஆகும்.
திருத்தப்படாத பிம்பங்கள்
பழங்குடியினருடைய உணவு உடை, கல்வி, வாழ்விடம் என அனைத்தும் ஆவணப்படுத்தப்படுகின்றன. திரைப்படமாக்கி திருப்பங்கள் சிறிதளவேனும் உண்டாக்கப்படுகின்றன. வணிகரீதியாகவும் அணுகப்படுகின்றன. அவர்களுடைய கலைவாழ்வு என்ற மறுபக்கம் மட்டும் தொடப்படாத எல்லையாக உள்ளது. அரசு வழங்குகின்ற நாட்டுப்புற கலைஞர்களின் நலத்திட்டங்களில் நாடோடி kaalaignargalaiகூட சந்தேகத்துடன் ஏற்கின்ற சூழலே நிலவுகின்றது. பழங்குடிகளுக்கு என்ற ஆடலும் பாடலும் பழங்குடியின மொழி என்பதாலோ அல்லது வணிகமயமாக்கப்படாத நிலையினாலோ பேசும் பொருளாகக் கூட இல்லை. எனவே சோளகர், ஊராளிகள், மலையாளிகள் குறவர்கள், தொம்பர்கள் முதலான தொல்குடி மக்களின் கலை வாழ்வியல் பற்றிய புரிதலும், பதியப்படாத வரலாற்று சிக்கல்களும் திருத்தப்படாத, கண்டுகொள்ளப்படாத பிம்பங்களாக சமூகத்தில் உள்ளன. திரைப்படங்கள் கதைகளை காலம் கடந்து தேடுவதை விடுத்து காலத்தில் மறைந்து போகவிருக்கும் இவர்களையும் காட்சிப்படுத்தி அவர்களது வாழ்வில் நற்தாக்கங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.
முடிவுரை
எதார்த்தமான நடிகர்களும் கதைகளும் நம்பத் தகுந்த காட்சிகளுமே திரைப்படத்தை மேன்மையாக்கும் என்பது கியாரேஸ்தமி போன்ற சிறந்த இயக்குனர்களின் நோக்கு. அவ்வகையில் வணிகமயமாக்கும் நோக்கத்தில் மக்களின் சிக்கலைப் பேசி சமூகத்தில் அதிர்வுகளை உண்டாக்கும் திரைப்படங்களுக்கிடையில் உன்னதமான கலைத்திறன் கொண்டவை ஜெய்பீம், ஜமா, பரியேறும் பெருமாள் முதலான படங்கள். கலை அரசியல் அதிகாரம் போல் இன்னும் விளிம்பு நிலையினரின் முகமறியா பிம்பங்கள் திரையிடப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் முடிவாகும்.
துணைமை சான்றாதாரங்கள்:
1.ஆசிரியர் வந்திருந்தார் – செழியன் – எதிர் வெளியீடு – 2025.
2.உலக சினிமா – செழியன் – சீர்வாசகர் வட்டம் – 2024.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கோ.திலகவதி
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி,
கோவை- 14.






