Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
This study examines the cosmological concepts presented in Kandha Puranam, composed by Kachiyappa Sivachariyar, with particular focus on its conception and structure of the universe. Though primarily regarded as a sacred Tamil epic, the text contains significant descriptions relating to cosmology, spatial dimensions, celestial realms, and the terrestrial world. Using a textual and analytical approach, this study examines Andakosam, the dimensions, extent and boundaries of the universe, the celestial worlds, and the terrestrial realm as represented in the text. The analysis highlights the systematic nature of these cosmological descriptions within the intellectual framework of traditional Tamil thought. Rather than correlating them directly with modern scientific theories, the study interprets them within their textual and cultural context. It thereby establishes Kandha Puranam as a significant source for the study of traditional Tamil cosmological thought and contributes to interdisciplinary research in Tamil literature, philosophy, and traditional knowledge systems.
“கச்சியப்ப சிவாச்சாரியரின் பேரண்டக் கோட்பாடு”
முன்னுரை
மனித உள்ளத்தில் எழும் ’மெய்ப்பொருள்’ தேடலுக்கானத் தெளிவினை அறிவியலாலும் தொழில்நுட்பத்தாலும் வழங்க இயலவில்லை. அறிவியலும் ஆன்மீகமும் ஒருங்கிணையும்பொழுது மெய்ப்பொருள் விளக்கம் மக்களுக்கு கிட்டுவதோடு, அவர்களின் வாழ்க்கையும் மேன்மையுறும். எனவே, ஆன்மீகமும் அறிவியலும் ஒருங்கிணையும் சிந்தனைகள் இக்காலத்தின் தேவையாகின்றன. அவ்வகையில், கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம் தெய்வீகக் காப்பியமாக மட்டுமல்லாது, தத்துவம், அண்டவியல், அளவியல், நிலவியல் போன்ற பல்துறைகளை உள்ளடக்கிய அறிவுக் களஞ்சியமாக விளங்குகிறது. கந்தபுராணம் முருகப்பெருமானின் சிறப்புகளை மட்டும் பேசாமல், அண்டத்தின் ஆதித் தோற்றம், அதன் பரப்பு, உயரம், எல்லைகள், மேலுலக–கீழுலக அமைப்புகள், நிலவுலகத்தின் உட்பகுதிகள் என அனைத்தையும் விரிவாகப் பேசியுள்ளது. எனவே, அவற்றை ஆவணப்படுத்தவும் ஆய்வுப் பொருளாக முன்வைத்து அறிவியல் ஆய்வுகளுக்கு வலுசேர்க்கவும் கச்சியப்ப சிவாச்சாரியரின் பேரண்டக் கோட்பாடு எனும் இவ்வாய்வு முதன்மையாகிறது.
குறிச்சொற்கள்: பேரண்டம் – அண்டகோசம் – யோசனை தூரம் – மேருமலை – கடாகம்
களமும் நோக்கமும்
கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தைக் களமாகக் கொண்ட இக்கட்டுரை, பெருவெளி குறித்த கருத்துகளை முறையாகப் பகுத்து, அதன் இயல்பு, அமைப்பு, ஆகியவற்றை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கருதுகோளும் ஆய்வுமுறையும்
இன்றைய அறிவியல் அடையாளப்படுத்தும் பேரண்டக் கோட்பாடுகள் கந்தபுராணத்தில் இடம்பெற்றுள்ளன என்பது இக்கட்டுரையின் கருதுகோள். விளக்கமுறை ஆய்வின் வழி அவ்வாய்வுக் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.
அண்டகோசம் – விளக்கமும் தோற்றமும்
புவி, கோள்கள், விண்மீன்கள், வான்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பே அண்டம் என்பது அறிவியலார் கூற்று. கோசம் என்பது ’உறை’ எனப் பொருள் தருகிறது. அண்டகோசம் என்பது, கோள்கள், விண்மீன்கள், பிற பொருள்கள் அடங்கிய பெரிய வட்ட வடிவம் ஆகும். (கந்த. பு. 285.) மூலமாம் பகுதி தன்னின் முளைத்திடும் புந்தி (கந்த.பு.2507:1) என்று கச்சியப்பர், அனைத்துக்கும் அடிப்படையான மூலத் தத்துவத்திலிருந்து முதலில் புத்தி தோன்றுகிறது எனத் தெரிவிக்கிறார். அதன்பின் அகங்காரம் உருவாகிறது. அதிலிருந்து ஐந்து புலன்கள் பிறக்கின்றன. பின்னர் ஆகாயம், காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகிய ஐந்துபூதங்களும் வரிசையாக உருவாகின்றன. மண்ணில் ஆயிரம் கோடி அண்டங்கள் தோன்றும் அவை பொன்னிறமானவை. ஒன்றன்மேல் ஒன்றாக இல்லாமல் பரவியிருக்கும் என்ற அண்டத்தின் அமைப்பினை,
அப்பெரும் புவிக்குத் தான்ஓர் ஆயிர கோடி யண்டம்
ஒப்பில வென்ன உண்டால் ஒன்றினுக் கொன்று மேலாச்
செப்புறு நிலைமைத் தன்று தெரிந்திடிற் பரந்து வைகும்
வைப்பென லாகும் அன்ன மற்றவை அம்பொன் வண்ணம். (கந்த.பு.2508)
எனும் பாடல் வழி, அறியமுடிகிறது. இவ்விளக்கம், பிரபஞ்சத் தோற்றம் குறித்த இன்றைய அறிவியல் ஆய்வுகளுக்கான அடிப்படைச் சிந்தனைகளுடன் ஒத்திசைவதை வெளிப்படுத்துகிறது.
பேரண்டம் – அளவு
சிவபெருமான் சூரபத்மனுக்கு வழங்கியுள்ள ஆயிரத்தெட்டு அண்டங்களில் ஒரு அண்டத்தின் இயல்புகளைச் சுக்கிராச்சாரியார் சூரபத்மனுக்கு விளக்கியுள்ளார். அண்டத்தின் அளவினைத் துல்லியமாக கச்சியப்பர் வரையறுத்துள்ளார். ஒரு அண்டத்தின் பரப்பளவும் உயரமும் 100 யோசனை கொண்டது என்பதை,
அந்தயோ சனையின் எல்லை ஐம்பதிற் றிரண்டு கோடி
வந்ததிவ் வண்டத் திற்கும் மாயிரும் பரவை வைப்பும்
முந்திய நிவப்பு மாகும் (கந்த.பு.2512:1-3)
என்கிறார் கச்சியப்பர். இன்றைய காலகட்டத்தில் ’நுண்ணோக்கி’ மற்றும் ’தொலைநோக்கி’ போன்ற நவீன கருவிகள் மூலம் மிகச் சிறியதும் மிகப் பெரிதுமான அளவைகளை துல்லியமாகக் கணக்கிடப்படுகின்றன. ஆயினும், பழங்காலச் சமூகத்தில் எளிய மக்களும் இவ்வகையான அளவியல் அறிவை அறிந்து, அதைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தனர் என்பதற்குக் கந்தபுராணப் பாடல்கள் (2510–2512) வலுவான சான்றுகளாக அமைகின்றன. கந்தபுராணத்தில் அளவுகள் மிகச் சிறிய பரமாணுவிலிருந்து மிகப் பெரும் யோசனை வரை ஒழுங்கான வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை:
இருபத்திநான்கு பரமாணுக்கள் சேர்ந்தது – ஒரு மயிர் நுனி
எட்டு மயிர் நுணி சேர்ந்தது – ஓர் ஈர்
எட்டு ஈர் சேர்ந்த்து – ஒரு பேன்
எட்டு பேன் சேர்ந்தது – ஒரு நெல்
எட்டு நெல் சேர்ந்தது – ஓர் அங்குலம்
இருபத்திநான்கு அங்குலம் சேர்ந்தது – ஓரு முழம்
நான்கு முழம் சேர்ந்தது – ஒரு தனு
இரு தனு சேர்ந்தது – ஒரு தண்டம்
2000 தண்டம் சேர்ந்த்து – ஒரு குரோசம்
நான்கு குரோசம் சேர்ந்தது – ஒரு யோசனை
இவ்வாறு அளவுகள் முறையாகவும் துல்லியமாகவும் வழங்கப்பட்டுள்ளதில் கச்சியப்பரின் ஆராய்ச்சி திறன் புலனாகிறது. அவரின் ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே ஒரு அண்டம் நூறு யோசனை அளவுடையதே என்ற தெளிவான கருத்தை கச்சியப்பர் வழங்கியுள்ளார். மேலும், ஒரு அண்டம் மட்டுமல்லாது, பிற அண்டங்களும் இதே அளவீட்டு ஒழுங்கின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இவை இன்றைய வானியல் ஆய்வுகளுக்கு அடித்தளமிட்டுள்ளன என்பதை, நமது சூரிய குடும்பத்திற்கு வெளியிலும் பல அண்ட அமைப்புகள் உள்ளதை வின் கருவிகள் மூலம் ஆராய்ந்து 6,000-க்கும் மேற்பட்ட புறக்கோள்கள் (exoplanet) இருக்கின்றன என நாசாவின் (NASA) அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
பேரண்டத்தின் பரப்பும் எல்லையும்
பூமியிலிருந்து அண்டத்தின் எல்லையை துல்லியமாக வரையறுக்க முடியாது. எனினும், அறிவியல் கணக்கீடுகளின்படி பூமியிலிருந்து காணக்கூடிய அண்டத்தின் விளிம்பு வரை சுமார் 46.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரம் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனால், கந்தபுராணம் பூமிக்கும் அண்டத்திற்குமான தூரத்தை கணித்துள்ளது. இதனை,
மண்புகழ் மேரு வுக்கு மாதிரம் அவையோ ரெட்டும்
எண்படும் ஐம்பான் கோடி கடாகத்தின் எல்லை யோடும்.(கந்த.பு.2513:3-4)
(கடாகம் என்பது அண்டச் சுவர்) எனும் பாடலடிகள் உணர்த்துகின்றன. மேரு மலையின் சிகரங்கள் (Meru Peak) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. மேருமலையானது பனிபடர்ந்த மூன்று சிகரங்களைக் உடையது. தெற்கில் உள்ள சிகரம் 6660 மீட்டர் உயரமும், நடுவில் உள்ள சிகரம் 6310 மீட்டர் உயரமும், வடக்கில் உள்ள சிகரம் 6450 மீட்டர் உயரமும் கொண்டது என்கிறது ஹிமாலையன் ஆய்விதழ் 58. பேரண்டம் நிலத்திலிருந்து 50 கோடி யோசனை தூரம் உயரமும் 50 கோடி யோசனை தூரம் ஆழமும் உள்ளதோடு, மேரு மலையின் நடுப்பகுதியிலிருந்து, ஒவ்வொரு திசையிலிருந்தும் 50 கோடி யோசனை தூரத்தில் அண்டம் உள்ளது என்பதை சூரபதுமனுக்கு அவனின் ஆசான் சுக்கிராச்சாரியார் தெளிவாக விளக்கியுள்ளதைக் காணமுடிகிறது. சக்கரவாளகிரியைச் சூழ்ந்த பெரும் புறக்கடல் ஒரு கோடியே இருபத்தேழு இலட்சம் யோசனைப் பரப்பாகும். அதனைச் சூழ்ந்துள்ள இருட்பூமியின் பரப்பு 35,19,40000 யோசனை யாகும். அதனைச் சூழ்ந்த அண்டச் சுவரின் கனம் ஒரு கோடி யோசனை ஆகும். ஆகவே, மண்ணுலகின் மொத்த அகலம் நூறு கோடி யோசனை என்பது கச்சியப்பரின் கணிப்பாக உள்ளது.
பேரண்டமும் மேலுலகங்களும்
கந்தபுராணத்தில் உலகங்கள், பூவுலகத்தை மையமாகக் கொண்டு மேல்நோக்கி அடுக்கடுக்காக விரியும் அமைப்பாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. நிலவு, கதிரவன், விண்மீன்கள், கோள்கள் எனத் தொடங்கி, முனிவர் உலகங்கள், துருவர் உலகம், அதன் மேல் உயர்ந்த உலகங்கள் என ஒவ்வொரு நிலையிலும் தூர அளவுகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த அடுக்கமைப்பு, அண்டம் ஒரே தளத்தில் அல்லாமல் பல நிலைகளாக விரிந்து பரந்துள்ளது என்பதை உணர்த்துகிறது.
கந்தபுராணத்தில் உலகங்களின் அடுக்கமைப்பு மற்றும் தூர அளவுகள்
வ.எண் |
உலகம் |
முந்தைய உலகத்திலிருந்துதூரம் (யோசனை) |
1 |
பூவுலகம் |
புவர் உலகம் 15,00,000 |
2 |
புவர் உலகம் |
சுவர் உலகம் 5,00,000 |
3 |
சுவர் உலகம் |
மகலோகம் 2 கோடி |
4 |
மகலோகம் |
சனலோகம் 8 கோடி |
5 |
சனலோகம் |
தவலோகம்12 கோடி |
6 |
தவலோகம் |
சத்தியலோகம்16 கோடி |
7 |
சத்தியலோகம் |
பிரம்மலோகம்3 கோடி |
8 |
பிரம்மலோகம் |
விட்டுணுலோகம்3 கோடி |
9 |
விட்டுணுலோகம் |
சிவலோகம்4 கோடி |
10 |
சிவலோகம் |
அண்டகோள ஓடு1 கோடி |
பேரண்டம் – நிலவுலகம்
பூமியில் உவர்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், தேன்கடல், நன்னீர்க்கடல் எனும் ஏழு கடல்களும் சம்புத்தீவு, சாகத்தீவு, குசைத்தீவு, கிரவுஞ்சத்தீவு, சான்மலித்தீவு, கோமேதகத்தீவு, புட்கரத்தீவு எனும் ஏழு தீவுகளும் உள்ளன என்று கந்தபுராணம் கூறுகிறது. மேலும், இந்த மண்ணுலகத்தைச் சுற்றி, பத்துக் கோடி யோசனை பரப்பளவு கொண்ட பொன்னிலம் சூழ்ந்திருப்பதாகவும், அதன் அப்பால் சக்கரவாள மலை அமைந்துள்ளதாகவும், சூரபதுமனுக்கு சுக்கிராச்சாரியர் விளக்கியதாக கந்தபுராணம் கூறுகிறது.
பரவுமிவ் வுலகில் உப்புப் பால்தயிர் நெய்யே கன்னல்
இரதமா மதுநீ ராகும் எழுகடல் ஏழு தீவும்
வரன்முறை விரவிச் சூழும் மற்றதற் கப்பால் சொன்னத்
தரையது சூழ்ந்து நிற்கும் சக்கர வாளச் சையம். (கந்த.ப.2525)
சம்புத்தீவின் நடுப்பகுதியில் மேருமலை அமைந்துள்ளதாகக் கந்தபுராணம் கூறுகிறது. இந்த மேருமலை, நிலத்துக்கு மேல் எண்பத்திநான்காயிரம் யோசனை உயரமும், நிலத்திற்குக் கீழ் பதினாறாயிரம் யோசனை ஆழமும் கொண்டதாக பரந்து விரிந்துள்ளதாக, சுக்கிராச்சாரியார் சூரபதுமனுக்கு விளக்குகிறார். மேருமலையின் சிகரப் பரப்பளவு முப்பத்திரண்டாயிரம் யோசனையாகவும், அதன் அடிப்பகுதி பதினாறாயிரம் யோசனையாகவும் இருப்பதாகக் கூறப்படுவதுடன், இம்மலை மூன்று அடுக்குகளைக் கொண்ட அமைப்பாக விளங்குகிறது என்பதையும் கந்தபுராணம் தெளிவுபடுத்துகிறது. மேருமலையின்,
🌻 கிழக்கே வெண்ணிறம் கொண்ட மந்தரமலை,
🌻 தெற்கே பொன்னிறம் கொண்ட கந்தமாதனமலை,
🌻 மேற்கே நீலநிறம் கொண்ட விபுலமலை,
🌻 வடக்கே மாதுளைப் பூ நிறம் கொண்ட சுபார்சுவமலை
ஆகிய மலைகள் அமைந்துள்ளன. இம்மலைகளில் முறையே கடம்பு, நாவல், அரசு, ஆல் ஆகிய மரங்கள் வானுயர்ந்து வளர்ந்து நிற்பதாகக் கந்தபுராணம் குறிப்பிடப்படுகிறது. மேலும், மேருமலையின் சாரலில் அருணம், மானசம், அசிதோதம், மாமடு ஆகிய நீர்நிலைகளும், சயித்திரதம், நந்தனம், வைப்பிரசம், திருதாக்கியம் ஆகிய வனங்களும் அமைந்துள்ளன எனக் கூறப்படுவது, அண்டகோசக் காட்சியில் இயற்கை வளங்களின் செழிப்பையும் ஒருங்கிணைந்த அமைப்பையும் வெளிப்படுத்துகிறது. மேலும், வடகடலிலிருந்து சிருங்கமலை வரையில் குருகண்டம், சிருங்கமலையிலிருந்து சுவேதமலை வரையில் இரணியகண்டம் சுவேதமலையிலிருந்து நீலமலை வரையில் இரமியகண்டம் மேருமலையைச் சூழ்ந்த பகுதி இளாவிருதகண்டம் மாலியவான் மலையிலிருந்து கீழ்க்கடல் வரையில் பத்திராசுவ கண்டம் கந்தமாதன மலையிலிருந்து மேல்கடல் வரையில் கேதுமால கண்டம், நிடதமலையிலிருந்து ஏமகூடமலை வரையில் அரி கண்டம், ஏமகூடம் முதல் இமயம் வரையில் கிம்புருட கண்டம், மற்றும் தென் கடலிலிருந்து இமயம் வரையில் பாரத கண்டம் ஆகிய ஒன்பது கண்டங்களும் அமைந்துள்ளன. இக்கண்டங்களில் வாழும் மக்களின் இயல்புகள், வாழ்வியல் ஆகியவற்றையும் கந்தபுராணம் விரிவாகக் காட்சிப்படுத்தியுள்ளமை, அண்ட அமைப்புடன் மனித வாழ்வையும் இணைத்து விளக்கும் அதன் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது.
பேரண்டமும் கீழுலகங்களும்
கந்தபுராணம் பூமிக்குக் கீழ் அமைந்துள்ள அண்ட அமைப்பை விரிவாகவும் ஒழுங்குமுறையுடனும் காட்சிப்படுத்துகிறது. எட்டு திசைகளிலும் அமைந்துள்ள ’எட்டு யானைகளும்’ அவற்றைச் சூழ்ந்துள்ள ’எண்பெரும் பாம்புகளும்’, அவற்றிற்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் ’ஆதிசேடன் எனும் மகாபாம்பும்’, ’எண்பது இலட்சம் யோசனை’ அளவுள்ள பூமியைத் தாங்கிக் கொண்டுள்ளது என்பது கச்சியப்பரின் கூற்றாக உள்ளது. இவ்வாதார அமைப்பிற்குக் கீழ் ஒன்பது இலட்சம் யோசனை பரப்பளவு கொண்ட ஆடகேசுர உருத்திரர் உலகம் அமைந்துள்ளது. அதன் கீழ் மொத்தம் ஏழு பாதாளங்களும் உள்ளன. அவற்றின் மொத்த அளவு அறுபத்துமூன்று இலட்சம் யோசனை ஆகும். பாதாளங்களுக்குக் கீழ் ஒன்பது இலட்சம் யோசனை அளவுடைய கூர்மாண்ட உருத்திரர் உலகம் அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இருபத்தெட்டு கோடி நரகங்கள் உள்ளதாகக் கந்தபுராணம் குறிப்பிடுகிறது; அவற்றின் மொத்தப் பரப்பளவு இருபத்தொன்பது கோடியே பன்னிரண்டு இலட்சம் யோசனையாகும். இவையனைத்திற்கும் கீழே, பத்தாயிரம் யோசனை உயரம் கொண்ட காலாக்கினி உருத்திரர் உலகம் அமைந்துள்ளது. இறுதியாக, பூமியின் கீழ் அடிப்பாகத்தின் எல்லையாக அண்டகோள ஓடு அமைந்துள்ளதை கந்தபுராணம் தெரிவிக்கிறது (கந்த.பு. 2515–2523). இவ்வாறு, பூமிக்குக் கீழான உலகங்களையும் அவற்றின் அளவுகளையும் முறையாக வகைப்படுத்திக் காட்டுவதன்வழி, கந்தபுராணம் அண்டகோசத்தின் முழுமையான அமைப்பை விளக்குகிறது. இது புராணக் கற்பனையாக மட்டும் அல்லாமல், பழந்தமிழர் கொண்டிருந்த அண்டவியல் அறிவின் வெளிப்பாடாகவும் விளங்குகிறது.
முடிவுரை
இக்கட்டுரை, கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்களால் வர்ணிக்கப்படும் அண்டத்தின் தோற்றம், பரப்பு, மேல்–கீழ் உலகங்களின் அமைப்பு, பூவுலகின் மலைகள், கண்டங்கள், கடல்கள் மற்றும் கீழுலகப் பிரிவுகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டியுள்ளது. யோசனை போன்ற மரபு அளவுக்கூறுகள் வழியாக அண்டத்தின் உயரம், அகலம், ஆழம் ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளமை, பழங்கால சமூகத்தின் மேம்பட்ட அளவியல் சிந்தனையைப் புலப்படுத்துகிறது. மேலும், ஆயிரம் கோடி அண்டங்கள் பற்றிய கருத்து, இன்றைய வானியல் அறிவியல் முன்வைக்கும் பிரபஞ்சக் கோட்பாடுகளுடன் ஒப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. இவற்றின் அடிப்படையில் இவ்வாய்வு, கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்களின் அண்டகோசக் காட்சிகளை வெறும் கற்பனையாக அல்லாமல், காலத்தைக் கடந்த அறிவியல் சிந்தனைகளைக் கொண்ட இலக்கிய ஆவணமாக அணுக வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது.
பார்வை நூல்கள்
1.இராமசாமி நாயுடு. கந்தபுராணம் மூலமும் வசனம். முதல் பதிப்பு,பிரஸிடென்ஸி அச்சகம், 1908.
2.இராமலிங்கம், ந. கந்தபுராணம் ஆராய்ச்சி. முதர்பதிப்பு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1988.
3.திருமுருக கிருபாணந்தவாரியார் சுவாமிகள். கந்தபுராணம் (உரைநடை), ஆறாம் பதிப்பு, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 2018.
4.பட்டுசாமி, தி. கந்தபுராணம் வசனம், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம், நவம்பர்1953.
பெரியண்ணன், கோ. கந்தபுராணம் பெரியண்ணன் மூலமும் எளிய உரையும்,பாகம்3, வனிதா பதிப்பகம், 2022.
5.ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார். கந்தபுராணம், kaumaram.com
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ச. மாலதி
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ முத்துக்குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சிக்கராயபுரம், சென்னை- 600069.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

