Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
This study examines the causes of persistent suffering in human life and the ethical solutions presented in Thirukkural. Valluvar identifies several factors that create difficulties, including lack of education, impurity of mind, unsuitable friendship, untruthfulness, harsh speech, improper conduct, and lack of discipline. The study highlights Valluvar’s emphasis on education, mental purity, truthful speech, good friendship, and moral behaviour as essential means of overcoming suffering. His ethical teachings provide practical guidance for individuals to face challenges with wisdom and self-discipline. The study concludes that following Valluvar’s principles can enrich human life, promote moral values, and contribute to a peaceful and harmonious society.
“தீரா இடும்பைத் தரும் – வள்ளுவம் ஆற்றுப்படுத்தும் அறநெறி”
“ எல்லா பொருளும் இதன் பால் உள
இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்
சொல்லால் பரந்த பாவால் என் பயன்?
வள்ளுவனார் சுரந்த பாவையத் துணை”
– மதுரை தமிழ் நாகனார்
முன்னுரை
திருக்குறள் எக்காலத்தையும் வென்று நிற்கும் சான்றாண்மை மிக்க இலக்கியமாகும். உலகம் போற்றிடும் பொதுமறை ஆகும். என்றென்றும் கற்றோரும் கல்லாதோரும் போற்றப்படும் பொக்கிஷமாகும். வான் புகழ் கொண்ட தமிழ்நாடு வள்ளுவனால் அச்சிறப்பு பெற்றதும் போற்றுதல் கூறியதாகும் வணங்குதல் குரியதாகும் வள்ளுவனின் இரண்டு அடி உலகத்தையும் இரண்டடியில் அளந்து விடும் அகம் அமர்ந்தும் முகம் மலர்ந்தும் சிந்தை தெளிந்தும் இவரின் அடிகள் அறம் விதைத்திடுமே மானுட பிறவியின் பெருங்கடலை அறிய செய்திடுமே அனுதினமும் குறள் கற்றால் அகிலம் பேராற்றலாய் மலர்ந்திடுமே !
இத்தகைய சிறப்பு மிகு திருக்குறளில் மானுட வாழ்வில் தீரா துன்பத்தை விளைவிக்கும் காரணிகளை வள்ளுவப் பெருந்தகை அவர்கள் தன் குறளில் பல்வேறு இடங்களில் பதிவு செய்கின்றார். பதிவு செய்வதோடு அதற்கான தீர்வையும் உடனே கூறி விடுவதையும் அறிய முடிகிறது. மானுட வாழ்வு சூழல்களால் பிணையப்பட்டவையாகும். சுற்றமும், சூழலும் இன்றி மனிதன் வாழ்வது அரிது. அத்தகைய முறையில் நோக்கும்போது வாழுகின்ற தருணங்களில் பல்வேறு இன்னல்களும், இடர்களும் நேரிடுகின்றன. அவ்வாறு நேரிடும் தருணங்கள் ஏன் வருகின்றன? எதனால் வருகின்றன? எத்தகைய வினை பயனால் விளைகின்றன? என்பதனை தெளிந்து அறிந்து கொண்டால் நாமும் அத்தகைய சூழல் எதிர்கொள்ளும் போது, விடுபட்டு எதிர்கொள்ளும் திறன் மேம்பட்டு, சிறப்பாக வளர்ந்து வழி வகுக்கும். எனவே தீரா இடும்பைத் தரும் சூழல்களை வள்ளுவர் வழியில் ஆராய்வோம் இக்கட்டுரையில்…
திறவுச்சொல்
ஆற்றுப்படுத்துதல், தீரா, சூழல், இன்முகம், செழுமை, சிதைவு, சலனம், மனத்தூய்மை, எதிர்வினை, நடத்தை, வஞ்சனை, அகிலம்.
இடும்பை விளைவிக்கும் காரணிகள்
வள்ளுவர் ஆராய்ந்து தெளிந்து கூறப்பட்ட தன் சிந்தனைகளில் மானுட வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் இத்தகைய காரணிகள் காரணமாக அமைகின்றன என்கிறார்.
-
கல்வி கற்கா சூழல்களில்.
-
மனத்தூய்மை இல்லா சூழல்களில் .
-
கூடா நட்பில் ஏற்படும் இடர்கள் .
-
வாய்மையின்றி வாழும் இடங்களில் .
-
இனியவை கூறாமல் இன்னா சொல் கூறும் இடத்தில்.
-
அளவறிந்து வாழாதான் வாழ்வில்.
-
ஒழுக்கமின்றி வாழும் சூழலில் .
பல்வேறு குறட்பாக்களில் அறநெறி இல்லா வாழ்வில் ஏற்படும் துன்பங்களை பதிவு செய்திருப்பதை கற்றால் தெளியலாம்.
கல்வி கற்காத சூழல்களில் ஏற்படும் இன்னல்கள்
கண்ணுடையார் என்போர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர் என்ற குறட்பாக்களில் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் உள்ள வேறுபாட்டை பதிவு செய்கின்றார். கண்களைப் பெற்றிருந்தாலும் அக்கண்கள் கல்வி கற்கவில்லை என்றால் அது கண்கள் அல்ல அது வெறும் புண்கள் என்று குறிப்பிடுகின்றார்.கல்லாத தேசம் வறுமை உடையதாகவும் , அறியாமை மிக்கதாகவும் அமையும் என்பது திண்ணமாகும். அறியாமையை போக்கிடும் தீபமாய் தன் சமூகத்தின் இழிவுகளை அறுத்தெறியும் கருவியாய்… ஆயுதமாய்… கல்வி திகழ்கின்றது. கல்வி கற்றவனோடு ஆறு அரசும் பின்னே செல்லும் என்று சங்க இலக்கிய பாடல்கள் அன்றே வலியுறுத்துவதையும் அறியலாம். கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று ஒளவையாரும் கல்வியின் பெருமைகளை பறை சாற்றுகின்றார்.
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி…. (398 ) இப்பிறவியில் தான் கற்ற கல்வி ஏழு பிறவிகளையும் நன்மை பயக்கும் என்கிறார். எனவே எத்தனை பிறவி எடுப்பினும் துன்பத்தை போக்கிடும்.சாண்றாண்மை மிக்க தன்மையை உருவாக்கி தந்திடும். தெளிந்த அறிவும் சிந்தனையாற்றலும் பெருகிடும். எதிர்வினை ஆற்றும் நிலை வரும் போது இயல்பாகவே ஆளுமை மிக்க பேராற்றலை பெருகச் செய்திடும் என்கிறார் வள்ளுவர்.
இன்னா சொல் கூறும் இடங்களில்
பல்வேறு இடங்களில் வள்ளுவர் சொல்லின் பயன் குறித்து பேசுகின்றார். தீய சொற்களால் ஏற்படும் இன்னல் குறித்தும் தீயது குறித்தும் பதிவு செய்கின்றார். மனித வாழ்வில் தான் பேசுகின்ற பேச்சும் வார்த்தையும் மொழி வெளிப்பாடும் எத்தகைய நேர் மற்றும் எதிர்வினையாற்றுகின்றது என்பதை பல்வேறு இடங்களில் ஆராய்கிறார். ஆராய்ந்து பின் நன்மைக்கும் இன்னலுக்கும் தீரா துன்பத்திற்கும் சொல்மொழி எவ்வாறு அமைகிறது என்பதையும் சுட்டிச் காட்டி அதற்கான தீர்வையும் பதிவு செய்கின்றார்.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் …. ( 94 )
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை… ( 96 )
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று… ( 97 )
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்… ( 98 )
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே… (129 )
நாலம் என்னும் நலனுடைமை அநநலம் …. (641 )
ஆக்கமும் கேடும் அதனால் வருவதனால்…. (642 )
கேட்டாற் பிணிக்கும் … (643 ) போன்ற குறட்பாக்களில் சொல்மொழியின் பயன் குறித்தும் மற்றும் தீராஇன்னலை குறித்தும் ஆராய்கின்றார் வள்ளுவர்.
மனத்தூய்மை இல்லா சூழல்களில்
மனித வாழ்வில் மனத்தூய்மை இல்லா நேரங்களிலும் துன்பங்கள் வருவதை அறியலாம்.அனைத்து அறங்களை விட மனத்தூய்மை தான் சிறந்த அறம் என்கிறார். பொறாமை குணம் உடையோருக்கு அதுவே துன்பமாக மலரும் என்பதையும் அறிய மாட்டார்கள்.அவர்களை வீழ்த்த இதை விட வேறு பகையே வெண்டாம் என்கிறார். அதே போல மனதில் பொறாமை குணம் உள்ளவருக்கு சுற்றமும்,குடும்பமும்,உடுக்க உடையும் உண்ண உணவும் இல்லாமல் போகும் என்கிறார். தீய வழியிலும் தள்ளிவிடும் என்கிறார். எனவே மனத்தூய்மை இல்லாதவர்கள் இத்தகைய துன்பங்களுக்கு ஆட்படுவார்கள
அழுக்காற்றின் அல்லவை செய்யார்…. (164 )
அழுக்காறு உடையார்க்கு….. (165 )
அழுகாறு எனஒரு பாவி….. (168 )
ஒழுக்கமின்றி வாழும் சூழலில்
ஒழுக்கத்தின் மேன்மையை வள்ளுவரை விட மற்ற உலக நீதி நூல்கள் எதுவும் இத்தகைய ஆழமான சிந்தனைகளைப் பதிவு செய்திருக்கவில்லை . ஒழுக்கத்தை உயிரை விட ஒரு படி மேலாகவே பதிவு செய்கின்றார்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும் (131 )
இன்றைய காலத்தில் ஒழுக்கத்திற்கு கொடுக்கப்படும் மதிப்பு குறைந்து வருவதை கவலையளிக்கிறது. இதனால் எற்படும் இன்னல்கள் சொல்லி மாளாது.எங்கும் நோக்கினும் பண்பற்ற அறமற்ற செயல்பாடுகள் நடந்தேறி வண்ணம் இருப்பதை அறியலாம்.ஊடகங்கள் அவ்வப்போது பதிவு செய்து வருவதையும் அறிய முடிகிறது. ஒழுக்கம் என்ற சொல்லே இன்றைய இளைஞர்களுக்கு வேண்டாத கசப்பான சொல்லாகவே உள்ளது.
வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை இன்பங்களையும் அனுபவித்து விடவேண்டும் என துடிதுடிப்பும் அதற்கான முயல்வதும் தான் அதிகம் காணப்படுவதை அறிய முடிகிறது. அன்று நம் முன்னோர்கள் மதிப்பளித்த மதிப்புகள் அறங்கள் இன்று மதிப்பிழந்து அழிந்து கொண்டு உள்ளதையும் அறிய முடிகிறது. பகட்டும் பம்மாத்தும் பரிதவிப்பு சலனமும் நிறைந்து இருப்பதை அறிய முடிகிறது. நல்லொழுக்கம் நல்வாழ்விற்கு வழி வகுக்கும்.தீயொழுக்கம் தீய வாழ்விற்கு வழிவகுக்கும்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும் ( 138 )
கூடா நட்பில் ஏற்படும் இன்னல்கள்
திருக்குறளில் வள்ளுவர் நட்பைப் பற்றி பல்வேறு இடங்களில் ஆராய்ந்து தெளிந்து பதிவு செய்துள்ளார். நட்பு , நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் நட்பு குறித்து வள்ளுவர் மிக ஆழமாக பதிவு செய்கின்றார். வெறும் வார்த்தையால் இன்முகத்தோடு பழகுவதை விட நட்புக்கொள்வதை விட உள்ள பழகுவதே உண்மையான நட்பு. ஆனால் நட்பெனப்படுவது உண்மை மனதோடு வஞ்சனையற்று தூய்மையான உள்ளத்தோடு நட்பு கொள்வதே நட்பாகும்.
ஆனால் .. இன்று பல்வேறு தீய காரணிகளால் நட்பு மலர்வதை அறியமுடிகிறது. அதனால் பல்வேறு தீரா இன்னல்களும் சாபக்கேடுகளுமெற்படுவதை காண முடிகிரது. கைபேசி மற்றும் சினிமா போன்ற நவீன ஊடக நட்சுக்களும் இளைய சமுதாயதை அடியோடு சீரழிப்பதைக் கண்டால் கண்ணீர் பெருகிடும்.நெஞ்ச்சம் பதைபதைத்திடும். கூடா நட்பில் விபத்துக்களும் அகால மரணங்களும்பெருகி வருகின்றன.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்.
என்கிறது வள்ளுவம். ஆராயாமல் ஒருவரை நட்பாக ஏற்றுக் கொள்வதும், நம்பிய நட்பை சந்தேகக் கண்ணோடு ஆராய்ந்து கொண்டே இருப்பதும் நமக்கு தீராத துன்பத்தைதான் தரும் என்கிறார். தீய நட்பு பெறும் துன்பத்தில் ஆழ்த்தி விடும் என்றும் மிக அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வதையும் கற்றால் தெளியலாம்.
நிறைவாக
எனவே, திருக்குறளில் பல்வேறு குறட்பாக்களில் பல்வேறு காரணிகளை முன்வைத்து, மனித வாழ்வில் வாழும் போது எற்படும் இன்னல்களுக்கு , தீர்வாக …மிக அழுத்தமாக அற சிந்தனைகளை பதிவு செய்கின்றார். கடைபிடிக்க வேண்டிய அறநெறிகளை மிக அழுத்தமாகவும் பதிவு செய்கின்றார். நம் வினைகளால் எற்படும் துன்பத்தை விட நம் நடத்தையால் , ஒழுக்கத்தால் , பேச்சால் ,உள்ளாத்தால் , நட்பால்.. நம் வாழும் முறையால் எற்படும் துன்பங்கள் ஏராளம்… ஏராளம். கையால் திருக்குறள் வழி நின்று நம் வழ்வை செழுமையாக்கிகொள்வோம். மானுட சமூகம் இன்னலிருந்து விடுபட வள்ளுவம் ஆற்றுபடுத்தும் அறநெறி ஏராளம் ஏராளம். பண்பாட்டுச் சிதைவும் பாழ்ப்பட்ட வாழ்வும் நிறைந்த தற்காலச் சூழலில் – வள்ளுவம் கற்போம் வளமுடன் வாழ்வோம்.
பார்வை நூல்கள்
-
திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு. வரதராசனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18 .
-
திருக்குறள் களஞ்சியம், பேராசிரியர் அரங்க ராமலிங்கம் ,வர்த்தமான் பதிப்பகம், சென்னை.
-
திருக்குறள், புலவர் வீ. சிவஞானம், விஜயா பதிப்பகம், கோவை
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ப. மோகன் ,
உதவி பேராசிரியர்,
தமிழ் துறை,
ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி,
கோவை 641 008.





