Friday, September 4, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் Tholkappiyar’s Theory (Kolvazhi Udaiya Kootppadum) Of Plural Suffixes And The Grammatical Evolution...

Tholkappiyar’s Theory (Kolvazhi Udaiya Kootppadum) Of Plural Suffixes And The Grammatical Evolution And Modern Usage Of The Suffix –Kal|Dr.T.Tharmalingam

Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
          During the Tolkappiyar era, the suffix kal was utilized exclusively for the Ahriṇai plural. For the Uyarthiṇai plural, suffixes such as ar, aar, ir, eer, or, and maar flourished and featured prominently in Sangam literature. However, Tolkappiyar provided a grammatical exception through the Noorpa: Kolvali udaiya palavai sorke. This rule laid the foundational grammatical framework that eventually allowed the suffix kal to blend naturally with Uyarthiṇai words over time. Commentators like Ilampooranar and Cenavaraiyar did not dismiss these transitions as valu, but rather explained and accepted them as necessities of changing times. In modern Tamil, the suffix ‘-kal’ has become indispensable for distinctly differentiating between masculine and feminine plurals. It is also employed in contemporary usage to denote the honorific singular and to resolve contextual ambiguities in the language. Conversely, appending kal to words that are already inherently plural, such as Avar (he/she – honorific) or Manithar, gives rise to a grammatical flaw known as Double Plural (Irattaip panmai). Nevertheless, traditional shifts that were initially perceived as errors have, over the course of time, attained status and permanence under the concept of Ilakkana Amaithi  In social practices and wedding invitations, traditional errors such as appending the suffix kal after the plural suffix Maar (e.g., writing maamangaḷ or thaimaargaḷ) must be avoided. While these modern innovations may be embraced as Ilakkana Amaithi in colloquial speech, it remains vital to preserve the pure, traditional grammatical forms in written communication.
Key words: The suffix kal. The suffixes ar, aar, ir, eer, oor, and Maar. Words denoting the plural class, grammatical justification, double plural.
“தொல்காப்பியரின் கொள்வழி உடைய கோட்பாடும் ‘கள்’ விகுதியின்
இலக்கணப் பரிணாமமும், இன்றையப் பயன்பாடும்”
ஆய்வுச்சுருக்கம்
        தொல்காப்பியக் காலத்தில் ‘கள்’ விகுதி என்பது அஃறிணைப் பன்மைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.  உயர்திணைப் பன்மைக்கு அர், ஆர், இர், ஈர், ஓர், மார் ஆகிய விகுதிகள் சங்ககால இலக்கியங்களில் சிறந்து விளங்கின. தொல்காப்பியர் “கொள்வழி உடைய பலவறி சொற்கே” என்ற நூற்பா மூலம் விதிவிலக்கு தந்துள்ளார். ‘கள்’ விகுதி காலப்போக்கில் உயர்திணைச் சொற்களோடு இயல்பாக இணைவதற்கான இலக்கணப் பின்னணியை இவ்விதி உருவாக்கியது. இளம்பூரணர், சேனாவரையர் போன்ற உரையாசிரியர்கள் இம்மாற்றங்களை வழுவாகக் கருதாது, காலத்தின் தேவையென ஏற்று விளக்கினர். நவீனத் தமிழில் ஆண்பால், பெண்பால் பன்மைகளைத் தெளிவாகப் பிரித்துணர்த்த ‘கள்’ விகுதி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஒரு நபரை மதிக்கும் ஒருமைப் பன்மைக்கும், மொழியில் ஏற்படும் தெளிவின்மைகளை நீக்கவும் தற்காலத்தில் இவ்விகுதி பயன்படுகிறது. ‘அவர்’, ‘மனிதர்’ போன்ற பன்மைச் சொற்களுடன் மீண்டும் ‘கள்’ சேரும்போது ‘இரட்டைப் பன்மை’ என்ற வழு ஏற்படுகிறது. தொடக்கத்தில் பிழையாகக் கருதப்பட்ட மரபு மாற்றங்கள், காலப்போக்கில் ‘இலக்கண அமைதி’ என்ற தகுதியைப் பெற்று நிலைபெறுகின்றன. சமூக நடைமுறைகளிலும் திருமண அழைப்பிதழ்களிலும் ‘மார்’ விகுதிக்குப் பின் ‘கள்’ சேர்ப்பது போன்ற மரபுப் பிழைகளைத் தவிர்த்தல் வேண்டும்.  பேச்சுவழக்கில் புதிய மாற்றங்களை இலக்கண அமைதியாக ஏற்றாலும், எழுத்து வழக்கில் தூய மரபு வடிவங்களைப் பேணுவது அவசியமாகிறது.
திரவுச்சொற்கள்: கள் விகுதி, அர், ஆர், இர், ஈர், ஓர், மார், பலவறி சொற்கே, இலக்கண அமைதி, இரட்டைப் பன்மை.
முன்னுரை
          உலகச் செம்மொழிகளுள் தமிழ் மொழி, தொன்மை வாய்ந்த இலக்கண வரம்புகளையும், காலத்திற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத் தன்மையையும் ஒருங்கே கொண்டதாகும். ஒரு மொழியின் உயிர்மூச்சாக விளங்குவது அதன் விகுதிக் கோட்பாடுகளாகும். சொற்களின் இறுதியில் இணைந்து திணை, பால், எண் ஆகியவற்றைத் தெளிவுபடுத்தும் விகுதிகள், தமிழ் மொழியின் வாக்கிய அமைப்பிற்குப் பெரும் பலமாக விளங்குகின்றன. தொல்பழங்காலத்தில் அஃறிணைப் பன்மைக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட ‘கள்’ விகுதி, இன்று உயர்திணைச் சொற்களோடும் இயல்பாகக் கலந்து பயின்று வருவதைக் காண்கிறோம். இம்மாற்றம் தற்காலத்தில் திடீரெனத் தோன்றிய ஒன்றன்று. மாறாக, தமிழின் மூத்த இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
          தொல்காப்பியர் பெயரியலில் குறிப்பிடும் கொள்வழி உடைய பலவறி சொற்கே என்ற நூற்பாத் தொடர், தமிழ் மொழிக்கு வழங்கப்பட்ட மிக ஆழமான மொழிசார் அனுமதியாகும்.  இக்கட்டுரை, ‘கள்’ விகுதியின் இலக்கணப் பின்னணி, தொல்காப்பியரின் விதிவிலக்குக் கோட்பாடு, நவீனத் தமிழில் ஏற்பட்டுள்ள மரபு மாற்றங்கள் மற்றும் அவற்றின் இலக்கண அமைதி, தொல்காப்பியரின் இலக்கணக் கோட்பாடுகளையும், கால ஓட்டத்தில் தமிழ் மொழி பெற்றுள்ள பரிணாம வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இலக்கண மரபில் ‘கள்’ விகுதியும் தொல்காப்பியரின் “கொள்வழி உடைய” கோட்பாடும் நவீன மொழிப் பயன்பாடும்  குறித்துத் தக்க சான்றுகளுடன்  ஆராய்கிறது.
தொல்காப்பிய இலக்கண மரபில் திணை, பால்பாகுபாடுகள்
          தமிழில் சொற்கள் அனைத்தும் திணை அடிப்படையிலும், பால் அடிப்படையிலும் பகுக்கப்பட்டுள்ளன என்பதைத் தொல்காப்பியர் சொல்லதிகாரத்தின் முதல் நூற்பாவிலேயே தெளிவுபடுத்துகிறார்.
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமள வுடம்பே” (தொல். சொல். 1)
       மக்கள் என்று சுட்டப்படுபவர் உயர்திணை என்றும், அவர் அல்லாத பிற உயிருள்ள, உயிரற்ற பொருள்கள் அஃறிணை என்றும் பகுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஐம்பால்கள் பகுக்கப்படுகின்றன.
திணை
பால் பாகுபாடு
விகுதித் தன்மை
உயர்திணை
ஆண்பால், பெண்பால், பலர்பால்
மனிதர்களைக் குறிப்பது –  பன்மைக்குத் தனி விகுதிகள் உண்டு.
அஃறிணை
ஒன்றன்பால், பலவன்பால்
மனிதர் அல்லாதன – பன்மைக்குக் ‘கள்’ விகுதி முதன்மையானது.
       பழங்காலத் தமிழில் திணையும் பாலும் விகுதிகளின் மூலமே துல்லியமாக அறியப்பட்டன. உயர்திணைப் பன்மைக்குரிய விகுதிகளும், அஃறிணைப் பன்மைக்குரிய விகுதிகளும் எக்காரணம் கொண்டும் தங்களுக்குள் மயங்கி அல்லது கலந்து வரக்கூடாது என்பது தொடக்ககாலக் கடுமையான விதியாக இருந்தது.
‘கள்’ விகுதியின் மூல இலக்கணமும், அஃறிணைப் பன்மையும்
          தொல்காப்பியர் காலத்தில் ‘கள்’ விகுதி என்பது அஃறிணைப் பன்மைக்கு (பலவன்பால்) மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது. அஃறிணையில் ஒரு பொருளைக் குறிக்க ஒருமை வடிவமும், பல பொருள்களைக் குறிக்கக் ‘கள்’ விகுதி சேர்ந்த வடிவமும் பயன்படுத்தப்பட்டன.
சான்றுகள்:
  1. ஆடு (ஒருமை) – ஆடுகள் (பன்மை)
  2. மாடு (ஒருமை) –  மாடுகள் (பன்மை)
  3. மரம் (ஒருமை) –  மரங்கள் (பன்மை – மகர ஈறு கெட்டு, மெல்லினம் மிகுந்தது
  4. கல் (ஒருமை)   –  கற்கள் (பன்மை – லகரம் றகரமாகத் திரிந்தது)
     தொல்காப்பியர் எழுத்ததிகாரத்திலும், சொல்லதிகாரத்திலும் அஃறிணைப் பன்மைப் புணர்ச்சிக்குரிய விதிகளையே இவற்றுக்கு வகுத்துள்ளார். சங்க இலக்கியங்களில் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் போன்ற அஃறிணைப் பொருள்களைப் பன்மையில் சுட்டும்போது மட்டுமே “இ“ விகுதி பெருமளவில் எடுத்தாளப்பட்டுள்ளது.
உயர்திணைப் பலர்பால் விகுதிகள்: சங்ககால மரபு
          சங்க காலத்திலோ அல்லது அதற்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்திலோ, உயர்திணை மனிதர்களைப் பன்மையில் குறிப்பதற்கு ‘கள்’ விகுதி பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாகப் பலர்பால் விகுதிகள் தனித்துவமாகச் செயல்பட்டன. தொல்காப்பியர் குறிப்பிடும் பலர்பால் விகுதிகள் பின்வருமாறு: தொல்காப்பியர் குறிப்பிடும் பலர்பால் விகுதிகளான அர், ஆர், இர், ஈர், ஓர், மார் ஆகிய ஆறு விகுதிகள் சங்க இலக்கியங்களில் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில்) எவ்வாறு தனித்துவமாகச் செயல்பட்டு, உயர்திணைப் பன்மைப் பொருளை உணர்த்தின என்பதற்கான இலக்கணப் பூர்வமான சங்ககாலச் சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளனன.
1.‘அர்’ விகுதி
பெயர்களின் இறுதியிலும், வினைமுற்றுகளின் இறுதியிலும் இணைந்து பலர்பால் பன்மைப் பொருளைத் தரும் மிக முதன்மையான விகுதி இதுவாகும்.
அ) ஆடவர்: ‘ஆண்’ என்ற சொல்லின் பன்மை வடிவம்.
“விளங்குபொன் முளரி வண்டுசூழ்ந் தவைபோல்
பாடினி பாணியின் ஆடவர் உவப்ப” (புறம். – 29)
 இங்கு ‘ஆண்கள்’ என்று கூறாமல் ‘ஆடவர்’ என்றே பன்மை குறிக்கப்பட்டுள்ளது.
          ஆ)ஒப்பார்: ஒப்புமை உடையவர்கள்.
“தம்மோடு ஒப்பார் இல்”(கலித்-82)
“தம்மோடு ஒப்பார் இல்”  (நற்-242)
        இ) இலக்கிய வினைமுற்றுச் சான்றுகள்:
  • வந்தனர், சென்றனர், உரைத்தனர் – இவற்றுள் ‘அர்’ விகுதி அமைந்து பலரைக் குறித்தது.
“அருள்புரி நெஞ்சினராய் வந்தனர்” (அகம்- 271 மற்றும்  ஐங்கு.-452).
2.‘ஆர்’ விகுதி
          ‘அர்’ விகுதியின் நெடில் வடிவமான இது, சங்க இலக்கியங்களில் மதிப்பிற்கும் பன்மைக்கும் உரிய விகுதியாக எடுத்தாளப்பட்டுள்ளது.
        (அ) சான்றோர்: சங்க காலத்தில் அறிவுடைய பெரியோர்களைக் குறிக்கப்பயன்பட்ட சொல்.
“சான்றோர் மெய்ம்மறை” (பதிற்றுப்பத்து-40)
          ‘சான்றோர்கள்’ என்று ‘கள்’ சேர்க்காமல், ‘ஆர்’ விகுதிப் புணர்ச்சியில் ‘சான்றோர்’ என்றே சங்க இலக்கியம் பயில்கிறது.
        (ஆ) பெரியார்: அறிவிலும் வயதிலும் மூத்தவர்கள்.
“பெரியாரைப் பேணாது ஒழுகல்” (குறுந் / திருக்குறள்)
(இ)வினைமுற்றுச் சான்றுகள்:
  • செய்தார், கூறினார், நின்றார் (செய் + த் + ஆர்).
“பொருள் விழைந்து சென்றார்” (நற்-234).
“பொருள் விளைந்து சென்றார்” (அகம்.-369)
3.‘இர்’ விகுதி
       முன்னிலைப் பன்மையிலும் (உங்களுக்கு முன்னால் இருப்பவர்களைக் குறிக்க), சில பெயர்ச்சொற்களின் இறுதியிலும் இவ்விகுதி சங்க காலத்தில் பயின்று வந்தது.
  • மகளிர்: பெண்களைக் குறிக்கும் ஆகச்சிறந்த சங்ககாலப் பன்மைச் சொல்.
“நெல்அரி மகளிர்பாடி நொடிப் பூவாம்” (ஐங்கு. – 83)
‘பெண்கள்’ என்ற சொல்லுக்கு மாற்றாக ‘மகளிர்’ என்ற சொல்லே பன்மையைத் தந்தது.
  • கேளிர்: உறவினர்கள் / நண்பர்கள்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” (புறம்.- 192)
       ‘கேள்’ என்றால் உறவு. ‘இர்’ சேர்ந்து ‘கேளிர்’ என்ற உடனே ‘உறவினர்கள்’ என்ற பன்மைப் பொருள் கிடைத்துவிடுகிறது.
4.‘ஈர்’ விகுதி
        ‘இர்’ விகுதியின் நெடிலாக வரும் இது, பெரும்பாலும் முன்னிலைப் பன்மை வினைமுற்றுகளிலும், சில பெயர் வடிவங்களிலும் சங்க காலத்தில் ஆளப்பட்டுள்ளது.
  • பெண்டீர்: பெண்களைக் குறிக்கும் மற்றொரு பன்மை வடிவம்.
“அறனிலன்  நல்அணி பெண்டீர்” (புறம்.-246)
பெண் + ஈர் = பெண்டீர் எனப் பன்மையானது.
       முன்னிலை வினைமுற்றுகள்
 (நீர் செய்தீர்கள் என்ற பொருளில்):  சென்றீர், கண்டீர், வந்தீர்
”வேண்டுகுலம் புணர்ந்த காதலொடு ஆற்றாது
கானம் சென்றீர் அல்லீரோ? எனக் கேள்வற்று
யானும் உள்ளிய உள்ளத்தோடு…” (அகம்: 48)
 நீங்கள் காடுகளுக்குச் சென்றீர்கள் அல்லவா? என்ற பன்மைப் பொருள்.
5.‘ஓர்’ விகுதி
வினையாலணையும் பெயர்களிலும், பண்புப் பெயர்களிலும் சங்கப் புலவர்களால் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட விகுதி ‘ஓர்’ ஆகும்.
  • பெரியோர்: உயர்ந்த குணமுடையவர்கள்.
“வேம்பின் பைங்காய் வெண்ணெல் வெஞ்சோற்று
ஏம்பல் உய்ம்மினோடு உவக்கும் நாடன்
பெரியோர் நாடி நட்பின்
கல்வியும் தறுகணும் அறியும் என்ப…” (நற்: 72)
‘பெரியோர்கள்’ என்று இன்று நாம் எழுதுவது மரபன்று, ‘பெரியோர்’ என்பதே சங்ககாலப் பன்மை.
  • இல்லோர்: வறியவர்கள் / இல்லாதவர்கள்.
இல்லோர்க்கு இல்லென்று இயைவது கரத்தல்” (அகம்.-53)
  • ஏனோர்: மற்றவர்கள்.
“அடிஇறந்து வரூஉம் செய்யுள் ஆயின்
ஏனோர் மருங்கினும் எய்தல் உவப்ப
நாலிரண்டு உவமை கூட்டுவர் புலவர்.”
(தொல். பொருள். செய்யுளியல்: 191)
6.‘மார்’ விகுதி
உறவுமுறைச் சொற்களின் இறுதியில் இணைந்து, தற்காலப் ‘கள்’ விகுதி செய்யும் அதே பன்மைப் பணியைத் தூய உயர்திணையில் செய்தது இந்த ‘மார்’ விகுதி.
  • தாய்மார்: ஈன்ற தாயமார்களைக் குறிக்கும் பன்மை.
        “எம்போல்தாய்மார்பலர்கொல்?”(நற். – 378)
‘தாய்மார்கள்’ என்பது பிழை, ‘தாய்மார்’ என்பதே சங்ககாலத் தூய வடிவம்.
  • தோழிமார்: தோழியின் பன்மை வடிவம்.
“ஆயமும் தோழிமாரும் சூழ” (பரிப்.-2)
  • புதல்வப்பேன்மார் / புதல்வமார்: பிள்ளைகள்.
“மன்னர் மன்னிய மறம்புகழ் திவவ
பெற்ற நல்புதல்வமார் கலம்கண்டு மகிழ
வான்றோய் நல்லிசை ஆடுகோட்பாட்டுச் சேரலாதற்கு…”
(பதிற்றுப்பத்து, பதிகம் 6: 5-8)
அர், ஆர், இர், ஈர், ஓர், மார்என்பன பலர்பால் விகுதிகளாகும்.இவற்றைப் பயன்படுத்தி உருவான சங்ககாலச் சொற்களின் வடிவங்கள்:
உயர்திணைப் பன்மை மரபு
விகுதி முறை
சான்றுகள்
அர் / ஆர்
ஆடவர், பெண்டீர்
இர் / ஈர்
மகளிர், கேளிர்
ஓர் / மார்
பெரியோர், தாய்மார்
மரபுச் சான்றுகளின் அட்டவணை:
இன்றைய பொதுவான வழக்கு  (தவறு)
சங்ககால / மரபு வழி வழக்கு
 (சரி)
பயன்படுத்தப்பட்ட
மூல விகுதி
ஆண்கள்
ஆடவர் / ஆடவர்கள்
(ஆடவர் என்பதே பன்மை)
அர்
பெண்கள்
பெண்டீர் / மகளிர்
ஈர் / இர்
அலுவலர்கள்
அலுவலர்
அர்
பெரியோர்களே
பெரியோரே
ஓர்
தாய்மார்கள்
தாய்மார்
மார்
குருமார்கள்
குருமார்
மார்
          மேற்கண்ட அட்டவணையின்படி, ‘ஆடவர்’ என்ற சொல்லிலேயே பன்மைப் பொருள் அடங்கியுள்ளது. அங்கு மீண்டும் ‘கள்’ சேர்த்து ‘ஆடவர்கள்’ என்றோ, ‘ஆண்’ என்ற ஒருமையோடு ‘கள்’ சேர்த்து ‘ஆண்கள்’ என்றோ எழுதுவது மூல இலக்கணப்படி வழுவாகும் (பிழையாகும்).
5.தொல்காப்பியரின்-  ‘கொள்வழி உடைய பலவறி சொற்கே’
          மொழி என்பது தேங்கி நிற்கும் குட்டையல்ல. அது ஓடும் நதியைப் போன்றது. காலப்போக்கில் மக்கள் நாவில் சொற்கள் மருவுவதும், புதிய இலக்கண விதிகள் தோன்றுவதும் இயற்கை என்பதைத் தொல்காப்பியர் நன்குணர்ந்திருந்தார். அதனால் தான், சொற்கள் நிலைமாறி வருவதைக் கட்டுப்படுத்தாமல், அதற்குரிய நுட்பமான விதிவிலக்குகளையும் தந்துள்ளார். சொல்லதிகாரம், பெயரியலில் உயர்திணைப் பன்மைப் பெயர்கள் (பலவறி சொற்கள்) குறித்துக் கூறும் போது பின்வரும் நூற்பாவை அமைக்கிறார்.
“கள் விகுதி அஃறிணைப் பன்மைக்கே உரியது”
என்ற பொதுவிதியைத் தாண்டி,
“கொள்வழி உடைய பலவறி சொற்கே” (தொல்.சொல்.பெயரியல்-10)
‘கொள்வழி உடைய’ என்ற நுட்பமான இத்தொடருக்கு”ஏற்றுக்கொள்ளும் இடங்கள் அல்லது சூழல்கள் சில உண்டு என்று பொருள். அதாவது, அஃறிணைக்குரிய ‘கள்’ விகுதியானது, உயர்திணைப் பன்மைச் சொற்களோடு எல்லா இடங்களிலும் இயல்பாக வந்து ஒட்டிக்கொள்ளாது. ஆனால், சில குறிப்பிட்ட சூழல்களில், பொருளைத் தெளிவுபடுத்தவும், மொழியின் மரபைக் காக்கவும் அது உயர்திணையிலும் ஏற்புடையதாக மாறும் என்ற மொழிசார் அனுமதியைத் தொல்காப்பியர் வழங்கியுள்ளார்.
6.உரையாசிரியர் வழிநூற் விளக்கம்
தொல்காப்பியரின் இந்த நுட்பமான நூற்பாவிற்குப் பின்னாளில் வந்த உரையாசிரியர்களான இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோர் மிகச்சிறந்த விளக்கங்களை அளித்துள்ளனர்.
சேனாவரையர் உரை:
          உயர்திணைப் பெயர்களுள் சில, பன்மை விகுதியாகிய ‘கள்’ என்பதைத் தம்மோடு ஏற்று நடக்கும் இயல்புடையன. அவ்வாறு வரும்போது அவற்றை வழு என்று நீக்காமல், ‘கொள்வழி உடைய’ என்ற விதிவிலக்கின் கீழ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.
இளம்பூரணர் உரை:
          மகன், மகள் போன்ற சொற்கள் பன்மையாக மாறும்போது ‘கள்’ விகுதி பெற்று வருவது சங்க காலத்திலேயே ஆங்காங்கே தொடங்கவிட்டதைச் சுட்டிக்காட்டி, இவை திணை மயக்கம் அல்ல, மொழியின் போக்கிற்குத் தேவையான ஏற்புடைமை என்று விளக்குகிறார்.
7.இன்றைய நவீனத் தமிழில் ‘கள்’ விகுதி
          இன்றைய நவீனத் தமிழில் ‘கள்’ விகுதி உயர்திணையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதற்கான காரணங்களை மூன்று முதன்மைத் தலைப்புகளில் ஆராயலாம்.
7.1 பிரித்துணர்த்தும் தேவை
          மனிதர்களைக் குழுக்களாக அல்லது பால் அடிப்படையில் பிரித்துக் காட்ட வேண்டிய தேவை நவீன சமூகத்தில் எழுந்தது.
  1. மகன் + கள் = மகன்கள்
  2. மகள் + கள் = மகள்கள், அது போல,
  3. தோழன் / தோழி –   தோழர் (பொது) –  தோழன்கள்/தோழிகள்.
  4. காதலன் / காதலி –   காதலர் (பொது) – காதலன்கள் / காதலிகள்.
  5. மாணவன் / மாணவி –   மாணாக்கர் / மாணவர் – மாணவர்கள் /மாணவிகள்.
  6. சிறுவன் / சிறுமி   –   சிறார் (பொது) – சிறுவர்கள் –சிறுமிகள்.
  7. கிழவன் / கிழவி –  முதியோர் (பொது) – கிழவன்கள் / கிழவிகள்
  8. நடிகர் / நடிகை –  கலைஞர் (பொது)         – நடிகர்கள் / நடிகைகள்.
இங்கு ‘மக்கள்’ என்று பொதுப்படையாகக் கூறாமல், ஆண்பால் பன்மையையும் பெண்பால் பன்மையையும் பிரித்துக் காட்ட ‘கள்’ விகுதி கருவியாகப் பயன்பட்டது.
7.2 மதிப்புப் பன்மை அல்லது ஒருமைப் பன்மை
தமிழில் ஒரு நபரை மரியாதையாகக் குறிப்பிடும்போது பன்மை வடிவத்தைப் பயன்படுத்துகிறோம்.
  1. “அவர் வந்தார்” என்று கூறும் போது, அது ஒரு மதிப்பிற்குரிய தனிநபரைக் குறிக்கலாம்.
  2. ஆனால், அவ்விடத்தில் பல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக உணர்த்த ‘கள்’ விகுதி தேவையாகிறது.
  3. அவர் + கள் = அவர்கள் (பல்லோரைக் குறிக்கும் பன்மை)
7.3 தெளிவின்மை நீக்கல்
          ‘அரசன்’ என்பது ஒருமை.’அரசர்’ என்பது தமிழ் இலக்கணப்படி பன்மை. ஆனால், பேச்சுவழக்கில் ஒரு அரசரையே மரியாதையாக ‘அரசர்’ என்று அழைக்கத் தொடங்கியதால், பல அரசர்களைக் குறிக்க‘அரசர்கள்’என்று கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
8.மரபு வழக்கா? நவீன வழக்கா? – சொல்லாராய்ச்சி ஒப்பீடு
          மூல இலக்கணத்தின்படியான சொற்களுக்கும், இன்று நாம் பயின்று வரும் சொற்களுக்கும் இடையே உள்ள புணர்ச்சி மாற்றங்களை பின்வரும் அட்டவணை விளக்குகிறது:
மூலச் சொல் (ஒருமை)
மரபுவழிப் பன்மை
(தொல்காப்பியம்)
நவீனப் பன்மை
(கள் விகுதிசேர்க்கை)
தற்போதைய நிலைப்பாடு
குழந்தை
குழந்தையர்
குழந்தைகள்
நவீன வழக்கில் நிலைபெற்றுவிட்டது.
ஆண்
ஆடவர்
ஆண்கள்
மரபுப்படி ‘ஆடவர்’ என்பதே சிறப்பு.
பெண்
பெண்டீர் / மகளிர்
பெண்கள்
இரு வடிவங்களும் பயன்பாட்டில் உள்ளன.
மனிதன்
மனிதர்
மனிதர்கள்
‘மனிதர்கள்’ என்பது இரட்டைப் பன்மை.
அறிவுடையோன்
அறிவுடையோர்
அறிவுடையோர்கள்
‘அறிவுடையோர்’ என்பதே போதுமானது.
9. சமூகப் பயன்பாட்டில் மரபுப் பிழைகளும் அவற்றின் திருத்தங்களும்
இன்றைய சமூகத்தில், குறிப்பாகத் திருமண அழைப்பிதழ்கள் மற்றும் பொது மேடைகளில் இலக்கண மரபுகள் பெருமளவில் மீறப்படுவதைக் காண முடிகிறது.
  • உறவுமுறைச் சொற்கள் மற்றும் அழைப்பிதழ் மரபுகள்
திருமண அழைப்பிதழ்களில் உறவினர்களைக் குறிப்பிடும்போது ‘கள்’ விகுதியைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்:
தவறான வடிவம்: மாமன்கள், சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், மாமாக்கள்.
சரியான மரபு வடிவம்: மாமன்மார், சித்தப்பாமார், பெரியப்பாமார், மாமாமார்.
‘மார்’ என்ற பலர்பால் விகுதி இருக்கும்போது, அங்கு அஃறிணைக்குரிய ‘கள்’ விகுதியைச் சேர்ப்பது மொழியின் அழகைக் கெடுக்கிறது.ழ்
திருமண அழைப்பிதழ் மொழித் திருத்தம்
தவறு: என் சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள் வருகை தர வேண்டும்.  (அஃறிணைப் பன்மை வழு)சரி : என் சித்தப்பாமார், பெரியப்பாமார் வருகை தர வேண்டும். (உயர்திணைப் பலர்பால் மரபு)9.2 பொதுப் பயன்பாட்டுச் சொற்கள்
  • ஆன்மிக மற்றும் பொதுக் கூட்டங்களில் “குருமார்கள்”, “பெரியோர்களே மற்றும் தாய்மார்களே” என்று அழைப்பதைக் கேட்கிறோம்.
  • ‘குருமார்’ என்ற சொல்லே பன்மைதான். அதோடு ‘கள்’ சேர்த்து‘குருமார்கள்’என்பது பிழை.
  • ‘தாய்மார்’ என்பதே போதுமானது, ‘தாய்மார்களே’என்பது தேவையற்ற விகுதிச் சேர்க்கை.
  • ‘பெரியோர்’ என்பதே பன்மை, அதோடு கள் சேர்த்து‘பெரியோர்கள்’என்று கூறுவது தவிர்க்கப்பட வேண்டும்.   
  • 10.இரட்டைப் பன்மைஎன்னும் மொழியியல் சிக்கல்
   நவீனத் தமிழில் எழுந்துள்ள மிகப்பெரிய மொழியியல் சிக்கல் ‘இரட்டைப் பன்மை’ ஆகும். ஏற்கனவே பன்மைப் பொருளைத் தரும் ஒரு விகுதியோடு, மீண்டும் ஒரு பன்மை விகுதியைச் சேர்ப்பதே இதுவாகும்.உயர்திணைப் பன்மைச் சொல் + அஃறிணைப் பன்மை விகுதி (கள்) = இரட்டைப் பன்மை வழு.
எடுத்துக்காட்டுகள்:
1.அவர் (பன்மை) + கள் = அவர்கள்: ‘அவர்’ என்பதே பலரைக் குறிக்கும் சொல். அதனுடன் ‘கள்’ சேருவது இரட்டைப் பன்மை.
2.மனிதர் (பன்மை) + கள் = மனிதர்கள்: ‘மனிதர்’ என்றாலே பலர். ‘கள்’ தேவையற்றது.
3.ஆசிரியர்கள்: ‘ஆசிரியர்’ என்பது மரியாதைப் பன்மை. அதனுடன் ‘கள்’ சேரும்போது இரட்டைப் பன்மையாகிறது.
இருப்பினும், தற்காலத் தொடர்பியல் மொழியில் ஒருமை-பன்மை மயக்கத்தைத் தீர்க்க இந்த இரட்டைப் பன்மை ஓரளவுக்குத் துணை செய்வதால், இது முழுமையாக நிராகரிக்கப்படுவதில்லை.
11.மொழிப் பரிணாமமும் இலக்கண அமைதிக் கோட்பாடும்
தொல்காப்பியர் காலத்திற்குப் பின் வந்த பவணந்தி முனிவர் தனது நன்னூலில் ஒரு முக்கியமான விதியைத் தருகிறார்:
பழையன கழிதலும் புதியன புகுதலும்”
வழுவல கால வகையி நானே” (நன்னூல், 462)
     கால மாற்றத்தினால் மொழியில் புதிய வடிவங்கள் தோன்றுவது குற்றமல்ல. பழங்கால இலக்கணப்படி தவறாகக் கருதப்பட்ட ஒரு வடிவம், காலப்போக்கில் பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்பட்டு இலக்கியங்களிலும் இடம்பெறும்போது அது இலக்கண அமைதி என்ற தகுதியைப் பெறுகிறது.
     தொல்காப்பியரின் “கொள்வழி உடைய” என்ற சொல்லாடலே இந்த இலக்கண அமைதிக்கு வித்திட்டது எனலாம். தமிழ் மொழி மாற்றங்களை இறுகிய மனதோடு அணுகாமல், நெகிழ்வுத் தன்மையோடு அணுகியதால்தான் அது இன்றும் அழியாத உயிருள்ள மொழியாக, கணினி யுகத்திற்கும் ஈடுகொடுக்கும் மொழியாக விளங்குகிறது.
12.முடிவுரை
        புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூற்றுப்படி, தமிழுக்கும் அமுதென்று பேர்”. அந்த அமுதத் தமிழின் இலக்கணக் கட்டமைப்பானது மிக நுட்பமானது. அஃறிணைக்குரிய ‘கள்’ விகுதி இன்று உயர்திணையில் விரவி வந்துவிட்ட போதிலும், அதனை நாம் பயன்படுத்தும் இடத்தில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். தொல்காப்பியர் அன்று அளித்த “கொள்வழி உடைய” என்ற இலக்கண அனுமதி, நவீனத் தமிழின் வளர்ச்சிக்குக் கிடைத்த பெரும் கொடையாகும். எனினும், மொழியின் தனித்துவ அழகைப் பேணிக் காக்க, இயன்றவரை இலக்கிய நடையிலும், முறையான எழுத்து நடையிலும் “குழந்தையர்” “ஆடவர்” “மகளிர்” சித்தப்பாமார்” போன்ற தூய மரபுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். பேச்சுவழக்கில் ‘கள்’ விகுதியின் வரவை இலக்கண அமைதியாக ஏற்றுக் கொண்டாலும், மரபான இடங்களில் தூய வடிவங்களைப் பயன்படுத்துவதே நாம் நம் மொழிக்குச் செய்யும் பெருமையாகும்.
துணைநூற்பட்டியல்
1.தொல்காப்பியம் (சொல்லதிகாரம்) – இளம்பூரணர் உரை, கழக வெளியீடு.
2.தொல்காப்பியம் (சொல்லதிகாரம்) – சேனாவரையர் உரை, சாரதா பதிப்பகம்.
3.நன்னூல் மூலமும் விருத்தியுரையும் – சண்முகம் பிள்ளை, மு.
4.தற்காலத் தமிழ் மரபு -பேராசிரியர் ச. அகத்தியலிங்கம், மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.மு.ப.: 1970.
5.தமிழ் மொழி வரலாறு – பேரா. சக்திவேல், சு.
6.பதிற்றுப்பத்து – NCBH உரை
7.பரிப்பாடல் – NCBH உரை
8.நற்றிணை – NCBH உரை
9.கலித்தொகை – NCBH உரை
10.அகநானூறு – NCBH உரை
11.புறநானூறு – NCBH உரை
12.ஐங்குறுநூறு – NCBH உரை
13.குறுந்தொகை – NCBH உரை
14.திருக்குறள் – பரிமேழலகர் உரை
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். தி.தர்மலிங்கம்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
காரைக்கால், புதுச்சேரி.
தொல்காப்பியரின் கொள்வழி உடைய கோட்பாடும் ‘கள்’ விகுதியின்
இலக்கணப் பரிணாமமும், இன்றையப் பயன்பாடும் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »