Friday, September 4, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் The Growth and Development of Feminism|Dr.M.Nala

The Growth and Development of Feminism|Dr.M.Nala

Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
          Feminism has evolved through various stages in response to the changing social, political, economic, and cultural conditions of women. The development of feminism reflects the continuous struggle for gender equality, individual freedom, social justice, and equal opportunities. From the early movements that focused on women’s education, property rights, and suffrage to contemporary feminism, the movement has expanded its concerns to include workplace equality, bodily autonomy, representation, intersectionality, and freedom from gender-based discrimination and violence. Each stage of feminist thought has contributed to questioning patriarchal structures and challenging traditional gender roles. This study explores the major stages in the development of feminism, examining their objectives, significant contributions, and changing perspectives. It also highlights how feminist movements have influenced social transformation and empowered women to assert their rights and identities. The study concludes that feminism continues to evolve as a dynamic movement responding to emerging challenges and working towards a more equal and inclusive society.

“பெண்ணியத்தின் வளர்ச்சி நிலை

முன்னுரை
          திராவிட இயக்கம் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களில் பெண்ணுரிமைக்கான போராட்டங்கள் மிக முக்கியமானவை. பெண்களுக்கு ஆண்களைப் போலவே எல்லாவற்றிலும் சம உரிமை வழங்குவதே பெரியாரின் பெண்ணியம். அவர் பெண் விடுதலைக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தவர் பெரியார்.  பல்வேறு கால கட்டங்களில் திராவிட இயக்க தலைவர்கள் பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்திருந்தாலும் அவர்களுக்கான உரிமைகளை நிலை நாட்டுவதிலும் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. ஆட்சிக்கட்டிலில் கருணாநிதி அமருவதற்கு முன்பாகவே அவரது கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் மேடை முழக்கங்களும் பெண்ணுரிமையை பெரிதும் பேசியது. பெண்களின் உரிமையை யாரோ ஒருவர் வாங்கி கொடுத்து விடமுடியாது என்பதுவும் அது அவர்களே அடைய வழி செய்தல் வேண்டும் என்பதிலும் திண்ணமாக இருந்தவர் அவர்.
  பெரியாரின் கருத்துகள் பெண்ணுரிமைக்குப் பாடுபட்ட தலைவர்களிடமிருந்து மாறுபட்டதாக இருந்தது. அவர், சமுதாயத்தில் புரையோடியிருந்த பெண்ணடிமைக் கூறுகளை இனங்கண்டு, பெண்ணடிமை தீர விடிவுச் சிந்தனைகளை வெளியிட்டார். அவர்தம் கொள்கைகள் சமுதாய விடியலுக்கு மட்டுமின்றிப் பெண்ணுலகின் விடியலுக்கும் உறுதுணையாய் நின்றன. தீவிரப் பெண் விடுதலை சிந்தனை, சமூகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகளை ஆழ்ந்து உற்றுநோக்கும்போது, அதன் கூறுகளைப் பின்வருமாறு வகைப்படுத்த முடிகிறது.
  • தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் இழிநிலை
  • பெண்ணுரிமையைத் தளைப்படுத்தும் கூறுகள்
  • பெண்ணுரிமை விடிவுச் சிந்தனைகள்
  • பெரியாரின் பார்வையில் புதுமைப் பெண்
  • பெண்களுக்குப் பெரியார் சேர்த்திட்ட பெருமைகள்
      மனித உரிமை என்பது ஒருவர் கொடுக்க மற்றவர் பெரும் பொருளன்று. உரிமை வேட்கை இயல்பாய்யமைக் கூடியது. இயற்கையின் பெருங்கொடை அது. மனித உரிமையின் அடிப்படையில் சட்டம் அல்லது மரவு இவ்வுரிமையை அனுமதிக்கிறது. சமுதாயத்தில் அவ்வுரிமையைப் பெற இயலாதபோது, போராட்டங்கள் தேவைப்படுகின்றன. பிறர்நலனுக்கு ஊறுவிளைவிக்காத தனிமனித உரிமை சமுதாய விடுதலைக்கு அடிப்படை. உலகின் சரிபாதியாய் விளங்கும் பெண்களுக்கு அடிமைத்தனக் கற்பு, இளவயது திருமணம், கைம்மை, காதல் மறுப்பு, பிள்ளைப்பேறு, சொத்துரிமையின்மை முதலிய கட்டுப்பாடுகள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக நின்றன. இப்பெண்ணடிமைக் கூறுகள் பெண்களின் விடுதலைக்கும் பகுத்தறிவு வளர்ச்சிக்கும் தடையாயின. பகுத்தறிவுச் சுடரொளியால் அடிமைத் தளைகளைத் தகர்த்தெறிந்தவர் பெரியார். அவர் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள் என்னும் நூல் 1934-இல் வெளியானது. இந்நூலில் பெண்ணடிமைக் கூறுகளை இனங்காட்டியதோடு பெண் விடுதலைபெறும் வழிமுறைகளையும் பெரியார் தொகுத்தளித்துள்ளார்.
பெண்ணுரிமை
     பெரியார், பெண்களுக்கான விடுதலையைப் பற்றியும் உரிமைகளைப் பற்றியும் பல இடங்களில் பல எடுத்துக்காட்டுகளுடன் பேசியுள்ளார். பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உருவ பேதம் அவர்களை ஆண்டவனாகவும், அடிமையாகவும் ஆக்கிவிடாது என்று சுட்டிக்காட்டுகிறார். ஆண்களைப் போலவே பெண்களுக்கு அறிவு, வீரம் என்பதெல்லாம் உண்டு. ஒவ்வொரு பெண்ணும் படித்து பின் சுயமாக வேலை பார்க்க வேண்டும். 18 அல்லது 20 வயது ஆன பிறகு தனக்குரியவனைத் தானே தேர்ந்தெத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் அவர். பெண் விடுதலைக்கு ஆண்களைவிட பெண்களே பெரிதும் தடையாக இருக்கின்றார். இதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பெண்களை மிகவும் அடிமைப்படுத்தும் இதிகாச புராணக்கதைகளை அவர்களுக்குக் கற்பிக்கக் கூடாது. இதைப் பற்றி பெரியார் கூறும்போது ‘அரிச்சந்திரன் தான் பட்ட கடனுக்குச் சந்திரமதியை விலைப் பொருளாக விற்றான். அதை, சந்திரமதி மறுத்துப் பேசவில்லை. சீதையின் மேல் சந்தேகப்பட்டு அவளைக் காட்டில், விட்டு வரும்படிச் செய்தான் இராமன். அதற்குச் ‘சீதை நான் போகமாட்டேன்’ என்று மறுப்புக் கூறவில்லை! அர்ச்சுனனை மணந்த திரௌபதை அர்ச்சுனனிடம் ‘என் பெற்றோர்கள் உனக்கு மட்டும்தான் மனைவியாக இருக்கும்படி என்னை உனக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். ஆகவே மற்றவர்களுக்கு உடன்பட மாட்டேன்’ என்று மறுத்துக் கூறவில்லை! இப்படியெல்லாம், பெண்கள் கணவன் சொற்படி நடக்க வேண்டியவர்கள் என்பதை நிலைநாட்டப் புராணங்களில் பத்தினித் தன்மைகளைச் சித்தரிக்கிறார்கள்’ என்கிறார் பெரியார்; இக்கதைகளையெல்லாம் பெண்களுக்குக் கற்பித்து அவர்களை அடிமையாக்கி விடக்கூடாது என்கிறார் சமூகத்தில் காணப்படும் ஆணுக்கு ஒரு நீதியையும், பெண்ணுக்கு ஒரு நீதயையும் மறுத்தளிக்க வேண்டும் என்கிறார்.
        பெரியார், பெண்கள் கட்டாயமாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஒரு அலுவலகத்தில் ஆணும், பெண்ணும் சம எண்ணிக்கையுடன் வேலை செய்ய வேண்டும் என்கிறார். அதாவது வேலை வாய்ப்பில் 50 சதவீதம் பெண்ணுக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்கிறார். பெண்கள் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்ளுவது அநாகரிகம் என்று கூறும் அவர், ஆண்களைப் போலவே பெண்களும் முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்கிறார். நடை உடை சாயல்களில் ஆண்களைப் போலவே பெண்களும் தங்களை மாற்றிக் கொள்வது பெண்ணடிமை ஒழிவதற்குச் சிறந்த வழியாகும். பெண்களும் ஆண்களும் தங்களை வேறுபடுத்திக் காட்டும் உடைகளை விட்டுவிட்டு ஒரே மாதிரியான உடைகளை உடுத்திக்கொள்ள வேண்டும். உடைகளில் ஆண், பெண் வேறுபாடு கூடாது என்பதுபோல பெயர்களிலும் ஆண், பெண் வேறுபாடு கூடாது என்கிறார் பெரியார். இவ்வாறு, மிக நுட்பமாகவும் ஆழமாகவும் பெண் விடுதலை பற்றியும், பெண் சுதந்திரம் பற்றியும் சிந்தித்துள்ளார், பெரியார்.
     சமுதாய சீர்திருத்தங்களைத் தன் வீட்டில் இருந்தே ஆரம்பித்தார். திருமணமாகி ஒரே மாதத்தில் விதவையான தன்னுடைய தங்கையின் 10 வயது மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். அந்நாட்களில் விதவைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது; தலையைக் குனிந்துகொள்ள வேண்டும்; வெள்ளைச் சேலைதான் அணிய வேண்டும்; நகை எதுவும் அணியக் கூடாது. ஒரு விதவை படும் துன்பத்தைக் கண்கூடாகப் பார்த்ததால் விதவை மறுமணத்திற்காக வலிமையாகக் குரல் கொடுத்தவர். பெண்கள் சம உரிமை பெற வேண்டுமென்றால் கல்வியறிவு அடிப்படை என்பதை உணர்ந்து இருந்த பெரியார், ஆண்களைப் போல் பொருளாதார சுதந்திரத்திற்கு வழிவகை செய்வதும் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
 தேவதாசி முறை ஒழிப்பு
      அக்காலத்தில் பக்தியின் பெயரால் பெண்கள் கோயிலில் நடனமாடினர். பெற்றோர்களைப் பெண்களைப் பொட்டுக்கட்டி கோயில்களில் விட்டனர். இதனால் சமுதாயத்தில் தேவதாசி முறை வளர்ந்தது. அப்போது “கும்மி கோலாட்டங்களை மறந்துவிட்டு, ஆண்களைப் போல எல்லா விளையாட்டுகளிலும் பெண்கள் ஈடுபட வேண்டும்; அப்போது தான் அவர்களுக்கும் பலமும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும்” என்றார். மேலும், ஆடம்பரத் திருமணங்களை எதிர்த்த பெரியார் அதற்குப் பதிலாக பணத்தைப் பெண்கள் பெயரில் வங்கியில் முதலீடு செய்யச் சொன்னார். இன இழிவை ஒழிக்கப் பெண்களும் போராட வேண்டும் என்றார். அப்போது மேலவை உறுப்பினராக இருந்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்தார். பெரியார் மற்றும் முத்துலட்சுமி அம்மையார் ஆகியோரின் தொடர் போராட்டத்தால் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
சுயமரியாதைத் திருமணம்
        பெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று அடையாளம் காட்டத் தாலி கட்டப்படுவதை அறவே வெறுத்தார் பெரியார். தாலியை அடிமைச் சின்னமாகக் கருதிய பெரியார், திருமணம் ஆனவர், ஆகாதவர் என்ற வேறுபாட்டைத் தாலி எடுத்துக்காட்டுவதாக இருந்தால் ஆண்களுக்கு உள்ள அடையாளம் என்ன? என்று கேட்டார். எனவே, பெண்களும் ஆண்களுக்குத் தாலி கட்டுவதே நியாயம் என்று வாதிட்டார். ‘கற்புக்கரசி’ போல ‘கற்புக்கரசன்’ என்ற வார்த்தை ஏன் இல்லை?! 1930-ல் விருதுநகரில் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் ஈ.வெ.ரா பேசியபொழுது பெண்கள் சுயமரியாதை பெற சுதந்திர உணர்வு பெறத் தாலி கட்டும் முறை ஒழிந்தாக வேண்டும் என்றார். சுயமரியாதையுள்ள மனிதத் தன்மை அற்றுவிட்டது என்பதற்குத் தாலி கட்டும் பழக்கமே எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றார். ஒரு தந்தைக்குரிய பாசத்துடனும், பொறுப்புடனும் பெண்ணிணத்தின் நன்மைக்காகப் பாடுபட்டதால்தான் “தந்தை பெரியார்” என்று பின்னாட்களில் அவர் அழைக்கப்பட்டார்.
குடும்ப நலத்திட்டம்
      பெரியார் பெண் கல்விக்காகப் பாடுபட்டார். “ஓநாயிடம் ஆடுகள் எப்படி சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியும்?”. அதேபோல ஆண்கள் பெண்களுக்குச் சுதந்திரம் தருவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது என்றார் பெரியார். குடும்பக் கட்டுப்பாடு அவசியம் பற்றி 1928-ம் ஆண்டிலேயே பெரியார் பிரச்சாரம் செய்தார். “பெரியாரின் தீர்க்க தரிசனம் வியப்பளிக்கச் செய்கிறது அல்லவா? கர்ப்ப சூட்சி என்னும் ஒரு நூலினை வெளியிட்டார். அதைத்தான் பிற்காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு, குடும்ப நலத்திட்டம் என்றார்கள்.
பெரியாரின் எதிர்ப்பு நூல் “மதர் இந்தியா”
பெண்ணுரிமை, பெண் விடுதலை குறித்த பெரியாரின் சிந்தனைகளுக்கு 1927-ல் வெளியான சர்ச்சைக்குரிய ஒரு புத்தகம் காரணமாக அமைந்துள்ளது. காந்திக்கும் காங்கிரஸுக்கும் சுத்தமாக பிடிக்காத புத்தகம் அது. அந்தப் புத்தகம் அமெரிக்க பத்திரிக்கையாளரான கேத்ரின் மேயோ எழுதிய “மதர் இந்தியா” எனும் நூல். இந்து சடங்கு சம்பிரதாயங்கள் எப்படியெல்லாம் பெண்களைச் சுரண்டுகின்றன என்பதை இந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்தியிருந்தார் கேத்தரீன் மேயோ. குழந்தைத் திருமணம், பாலியல் நோய்கள், விதவைகள் நடத்தப்படும் விதம் குறித்த புள்ளி விவரங்களுடன் இந்தக் கருத்தை அவர் முன்வைத்தார்.
விதவை மறுமணம்
“வாடாத பூப் போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ?”
       என்ற பாரதிதாசன் வரிகளை நினைவுகூரும் வகையில் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் ‘விதவை மறுமணத்தை’ ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினார். பெண்களின் திருமண வயது 16க்கும் மேற்பட்டிருக்க வேண்டும், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும், ஆரம்பக் கல்வி ஆசிரியர் பணியிடங்களைப் பெண்களுக்கே ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
சாதி ஒழிப்பு
     பல நூற்றாண்டுகளாக ஆணாதிக்கத்தினால் அடிமைகளாக இருந்த, இருக்கின்ற பெண்ணினத்தின் விடுதலைக்காகப் போராடி, பெண்ணினத்தின் விடுதலைப் பாதைக்கு வித்திட்டவர் தந்தை பெரியார்ஈ.வெ.ராமசாமியாக இருந்தவரை நாம் ‘பெரியார்’ என அழைக்கிறோம். பெரியார் எனும் பட்டம் அவருக்கு 1938ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் அவருடைய பெண் விடுதலை கருத்துகளுக்கும், போராட்டங்களுக்குமாக பெண்களால் கொடுக்கப்பட்டது. பெண்கள் மாநாட்டில், பெண்களால் வழங்கப்பட்ட இந்தப் பட்டத்துக்கு நூறு சதவிகிதம் உரித்தானவர் பெரியார் என்றால் அது மிகையாகாது? பெண் கல்விக்குக் குரல் கொடுத்தல், இளம் வயது திருமணங்களுக்கு எதிர்ப்பு, கட்டாயத் திருமணங்களை ஒழித்தல், மறுமணங்களை ஊக்குவித்தல், பெண்களுக்குச் சொத்துரிமை என வாழும் காலமெல்லாம் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கான குரல் கொடுத்தவர் அவர்.
     இந்திய விடுதலைக்கு முன்னரே ‘பெண் விடுதலை’ பற்றிப் பேசியவர் பெரியார். பெரியார் என்றொருவர் இல்லை என்றால், இன்று தமிழ்நாட்டில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை நாம் பெற்றிருக்க முடியாது. ‘பிள்ளை பெறும் இயந்திரமா பெண்கள்’ என ஆணாதிக்கத்தைச் சாட்டையால் அடிக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டவர். உலகமெங்கும் திருக்குறளைக் கொண்டு செல்ல விரும்பியவர் பெரியார். ஆனால், அதற்காக அதில் உள்ள குறையையும் விவாதிக்காமல் அமைதி காக்கவில்லை. உலகப் பொதுமறை எனப்படும் திருக்குறள் நூலே சமத்துவம் பேசவில்லை என்னும் பேருண்மையை பதிவிட்டவர் அவர்.
பெரியாரின் பார்வையில் எது பெண்ணியம்?
     இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண்கள் உணராத உரிமைகளைப் பற்றியும், சுதந்திரம் பற்றியும் பேசுவதே ‘பெரியாரின் பெண்ணியம்’. இச்சமூகத்தில் ஆணுக்குப் பெண் கேள்விக்கிடமின்றி சரி நிகர் என சொல்வதே ‘பெரியாரின் பெண்ணியம்’. பாரதி கண்ட புதுமைப் பெண்ணும் ஒரு வட்டத்துக்குள் அடங்கும் அடிமைதான் எனக் கூறுவதே ‘பெரியாரின் பெண்ணியம்’. பெண்களுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும், செயலையும் தகர்த்தெரியும் தளமே ‘பெரியாரின் பெண்ணியம்’. பெண்களுக்கு ஆண்களைப் போலவே எல்லாவற்றிலும் சம உரிமை வழங்குவதே ‘பெரியாரின் பெண்ணியம்’.
  • பெரியார், பேச்சு, எழுத்து, செயல்பாடு என்ற மூன்று நிலைகளில் பெண் விடுதலைக்குப் பாடுபட்டுள்ளார்.
  • பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்-வரலாறு, சமூகவியல், மானுடவியல், உளவியல், பொருளியல், அரசியல், மதம் இவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன.
  • பெண் விடுதலை என்பது ஆண்கள் கொடுத்துப் பெண்கள் பெறுவது இல்லை. பெண்களே தமக்கான விடுதலையைப் போராடிப் பெற வேண்டும் என்பதே பெரியாரின் கருத்தாகும்.
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமதர்மம், சமஈவு, சமவுடைமை, சம ஆட்சி, சம நோக்கு, சம நுகர்ச்சி, சம அனுபவம் இவை அமைதல் வேண்டும். இச்சமத்துவத்தின் மூலமே மனித சமூகம் உன்னத நிலை அடைய முடியும் என்கிறார் பெரியார்.
  • ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ வழிவகுக்கும் திருமண முறையில் அடிமைத்துவம் போக்கப்பட வேண்டும் என்பதில் அழுத்தமான கருத்துடையவராகப் பெரியார் விளங்கியுள்ளர். அதனால், பெண்களை அடிமைப்படுத்தும் சடங்குகளை விடுத்துப் பெண்களின் சமத்துவத்தை முன்னிறுத்தும் வாழ்க்கைத்துணை ஒப்பந்தம் என்னும் திருமணத்தைத் தம் இயக்கத்தினரிடம் அறிமுகம் செய்து, ஆயிரக்கணக்கான திருமணங்களை அவரே நடத்தியுள்ளார்.
  • திருமணம் என்பது பெண்களின் வாழ்க்கையில் முடிந்த முடிவு அல்ல. அவர்கள், தங்களுக்குத் திருமணம் ஒத்து வராத போது, அதை விலக்கும் உரிமையும் உண்டு என்று பெரியார் எடுத்துரைத்துள்ளார்.
  • பெண் விடுதலைக்கு அடிப்படையானது பெண் கல்வியாகும். பெண்கள் 22 வயதுவரை கல்வி கற்றுத் தொழில் புரிய வேண்டும் என்று பெரியார் வற்புறுத்தியுள்ளார்.
  • தமிழ்நாட்டில், ‘குழந்தைமணத் தடுப்புச் சட்டம்’ கொண்டு வரவும், ‘தேவதாசி ஒழிப்புச்சட்டம்’ கொண்டு வரவும், பெண்களுக்கான ‘சொத்துரிமைச் சட்டம்’ கொண்டு வரவும் பெரியாரின் கொள்கைகளும், போராட்டங்களும் பெரும் துணை நின்றுள்ளன.
  • பெரியாரின் இயக்கப் பணிகளில் ‘விதவை மறுமணம்’, ‘கலப்பு மணம்’ என்பன பெரும் பங்கு வகித்துள்ளன.
  • ‘கற்பு’ என்பது பெண்ணடிமைத்தனத்தை நிலைநாட்ட ஆண்கள் மேற்கொண்ட சுயநல சூழ்ச்சி என்பதை எடுத்துக்காட்டி, அதனடிப்படையில் ‘கற்பு’ என்பது வாழ்க்கைக்குத் தேவையில்லாதது என்று பெரியார் கூறியுள்ளார்.
       பெரியார், தன்வாழ்நாளின் இறுதிவரை பெண்ணுரிமைப் போராளியாக வாழ்ந்தார். அவரால் பெண்ணிய இயக்கப் போராட்டம் வீறுகொண்டு எழுந்தது. அவரின் பணியால் பெண்ணியச் சிந்தனைகளுக்குச் சிறந்த செயல்வடிவம் கிடைத்ததெனில் அது மிகையன்று. பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளால் சமூகத்தில் புதிய பெண் விடுதலைச் சிந்தனைகள் மிளிரிந்தன. நவீனப் பெண்ணுலகம் அச்சிந்தனைகளை வரவேற்றது. புதிய பெண்ணுலகு அப்பாதையில் வீறுநடைபோட்டுச் செல்கிறது.
பெண்ணியம் போற்றிய கலைஞர் கருணாநிதி
கண்ணுக்குள் பாவைபோல்
உருண்டிருக்கும் உள்ளம் – கைம் பெண்ணுக்கு
இருப்பதையும் உணர்ந்திடுவாய்”
          என்று அவர்களின் வலியை உணர்த்தினார். அதோடு வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் அவர்களை விதவை என்ற சொல்லால் அழைக்கும்போது அந்த சொல்லில் கூட பொட்டு இல்லை என கருதி அந்த சொல்லுக்கு மாற்றாக இரு திலகங்கள் வரும் வகையில் கைம்பெண் என்று அழைக்கத் தொடங்கினார். ஆணைப் போலவே பெண்ணுக்கும் அனைத்திலும் சம உரிமை உண்டு என்பதை உணர்த்திய அவர் பெண்களின் மறுமணத்திற்கு பெரிதும் ஆதரவளித்தார் இதற்காக அவர் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன.
          வரதட்சணை நோய்க்கு மருந்திடும் வகையிலும் அதே வேளையில் பெண்கள் குறைந்த பட்ச கல்வியாவது கற்க வேண்டும் என்ற நோக்கிலும் 8- வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டமொன்றை ஏற்படுத்தினார். இதன் மூலம் முதிர்கன்னிகள் என்ற நிலை படிப்படியாக குறைந்தது பொருளாதார சுதந்திரம் பெண் விடுதலையில் முக்கியப் பங்கு என்பதற்காக இவரது ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. சொத்துரிமையில் ஆணுக்கு நிகரான சம பங்குரிமை பெண்களுக்கு உண்டு என்பதை சொத்துரிமைச் சட்டம் மூலம் நிலை நாட்டிய கருணாநிதி உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித ஒதுக்கீடு பெண்களுக்கு என்பதை உறுதி செய்தார். மழையோ, வெயிலோ! பயிர்கள் பாதிக்கப்பட்டால் இனி கவலைப்பட வேண்டாம்! சூப்பர் திட்டத்தை அறிவித்த உ.பி அரசு பெண்ணுக்கான அடையாளமான தாய்மை அடைவதிலும் மகப்பேறு தொடர்பான விசயங்களும் பெண்ணால்தான் முடிவெடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவர் தாய்மை அடைந்த பெண்களுக்கு உதவிட நிதி உதவியும் வழங்கினார். பெண் குழந்தை பிறப்பு முதல் இறுதிக்காலம் வரை சமூகப் பாதுகாப்புடன் வாழ வழிவகை செய்தவர் கலைஞர். மகளிருக்கான இலவச பட்டப்படிப்பு திட்டம் மூலம் பெண் கல்வியை மேம்படுத்தினார். கல்வியை மேம்படச் செய்ததோடு மட்டுமல்லாது அரசுப் பணியில் அவர்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடும் அளித்தார்.
     பெண்கள் முன்னேற்றத்தில் கருணாநிதியின் பங்களிப்பு குறித்து முன்னாள் சட்டபேரவை உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான பாலபாரதி அவர்களிடம் கேட்டபோது, ”பெண்கள் ஆணையதிற்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டு அது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது, பெண்கள் மீதான வன்முறைகளை களைவதற்கும் குறைப்பதற்குமான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.
1.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தனிப் பள்ளிகளும் விடுதிகளும் அரசால் நடத்தப்படுவது போல இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்கு விடுதி வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கருணாநிதியால் நிறைவேற்றப்பட்ட்டு அந்த மாணவிகளுக்காக 5 விடுதிகள் கட்டப்பட்டது இது இஸ்லாமிய மாணவிகள் கல்வி கற்கும் சூழல் எளிதாகியது.
2.அவரது ஆட்சியில்தான் சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர்கள் பேசுவதற்காக கை தூக்கினாலும் சபாநாயகர் கண்டுகொள்வதில்லை என்ற குற்றசாட்டை கூற முடிந்ததுடன் அதற்கான தீர்வையும் பெற முடிந்தது.
3.கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆண்களுக்கு இணையான உரிமையை குடும்பத்திலும் பெண்களால் பெற முடிந்தது.
4.அதோடு திருமண நிதி உதவி திட்டத்தில் நிதியை உயர்த்தி வழங்கியது 3ம் பாலினத்தவருக்கு நல வாரியம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்தது” என்றார்.
5.சட்டப் பாதுகாப்பில் கருணாநிதியின் பங்கு குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி ”பெண்கள் விசயத்தில் வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு என்பதை விட வாழ்க்கைக்கான பாதுகாப்பு என்பதை கொடுத்ததே கருணாநிதிதான்.
6.கல்விக்கான உதவி கிராமப்புற மாணவர்கள், பெண்கள் என்று ஒவ்வொரு படிமமாக அவரது ஆட்சி காலத்தில் விரிவு படுத்தப்பட்டது.
7.பெண்கள் மட்டுமே கல்வி பயிலும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாகவும் பெண்களே இருக்கவேண்டும் என்பதை உறுதிப் படுத்திய அவர் அரசுப் பணியில் 33 % பெண்களுக்கான இட ஒதுக்கீடாக கொண்டுவந்தார். இதன் மூலம் அரசுப் பணியாளர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்தது. இதன் விளைவாக சட்டத்துறையிலும் பெண்களின் பங்கு அதிகரித்தது.
8.இந்தியாவிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும்தான் 12 பெண் நீதிபதிகள் உள்ளனர். இது நம்மை விட கற்றவர்கள் அதிகம் உள்ள கேரளாவிலோ அல்லது பாஜக ஆளும் மாநிலங்களிலோ காண முடியாத ஒன்று.
9.இன்று பெண்கள் குடும்பத்தில் தங்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று உரிமையோடு கேட்பதற்கு காரணமே கருணாநிதிதான். சொத்து குறித்து பேசும் பெண்கள் இன்று சொத்துரிமை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டை குறிப்பிட்டே தங்களது வாதங்களையும் முன் வைக்கின்றனர்.
    கலப்பு திருமணம் செய்யும் தம்பதியரில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரின் பிரிவுக்கான முன்னுரிமை வழங்கப்படுவதை குறிப்பிட்ட அருள்மொழி இவை அனைத்தும்தான் பெண்கள் சமூக மேம்பாட்டுக்கான திட்டங்கள் என்று கூறினார். இந்த அடிப்படை திட்டங்களை கருணாநிதி செய்ததன் விளைவாகவே அடுத்து வந்த ஜெயலலிதாவும் பெண்களுக்கான சில திட்டங்களை செயல்படுத்தினார் என்றார். எதார்த்தத்தில் கருணாநிதியின் பங்கு பெண்கள் முன்னேற்றத்தில் அளப்பிர்கரியது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
குறிப்புகள்
1.பிரேமா, இரா., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1994.
2.தந்தை பெரியார், பெண் ஏன் அடிமையானாள்?
3.முத்துசிதம்பரம், சி. (2017) பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,
4.தந்தை பெரியார், சுயமரியாதைத் திருமணங்கள் ஏன்?
5.கு.இராமாத்தாள், பெரியாரின் பெண்ணிச் சிந்தனைகள்.
6.வே.ஆணைமுத்து (பதி.) மு.கு.நூ.
7.கி.வீரமணி, பெண்ணுரிமை.
8.அரசு மணிமேகலை, ஈ.வெ.ரா. சிந்தனைகளில் பெண்கள்
9.ராஜ் கௌதமன், (2018) பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் மு.நளா,
உதவிப்பேராசிரியர்,
வரலாற்றுத்துறை,
ஸ்ரீ சாராதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
சேலம் – 636 016.

 

பெண்ணியத்தின் வளர்ச்சி நிலை PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »