Friday, August 21, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் The Cultural Layers of term ‘Mookkaruppu’|P.Shanmugavadivel

The Cultural Layers of term ‘Mookkaruppu’|P.Shanmugavadivel

மூக்கறுப்பு என்ற சொல்லின் பண்பாட்டு அடுக்குகள்
Abstract
      Certain words in a language transcend their literal meanings to embody the cultural experiences and historical memories of a society. In this context, the term ‘Mookkaruppu’ (literally “nose-cutting”) has evolved from a word denoting the mutilation of a body part into a metaphor signifying humiliation, loss of honor, and social disgrace. This article aims to examine the semantic expansion of this term across the realms of literature, history, and folklore. In the “Kambaramayanam”, the poet Kamban records that not only was Surpanakha’s nose severed, but her ears and breasts were also mutilated; yet, it is noteworthy that only the “cutting of the nose” (Mookkaruppu) has endured as a distinct cultural symbol in the collective memory of this event. This can be attributed to the nose’s association with facial beauty, physical appearance, and individual identity, as well as the link between its mutilation and social sentiments regarding modesty, honor, and shame. These associations are further intertwined with concepts of female facial beauty, ornaments like nose studs, and the aesthetic references to the nose found in film songs.
       Furthermore, the “War of Nose-Cutting” (Mookkaruppu Por) fought between the Madurai Nayak kingdom and the Mysore kingdom during the reign of Thirumalai Nayak adds a historical dimension to the term, with details from the Belur inscription serving as a historical trace of this event. Thus, by traversing literature, history, and linguistic usage, this study reveals how “Mookkaruppu” has transformed from a term describing a specific act into a cultural symbol representing the loss of social honor.

“மூக்கறுப்பு என்ற சொல்லின் பண்பாட்டு அடுக்குகள்”

ஆய்வுச்சுருக்கம்
        ஒரு மொழியில் வழங்கப்படும் சில சொற்கள் தமது நேரடிப் பொருளைக் கடந்து, ஒரு சமூகத்தின் பண்பாட்டு அனுபவங்களையும் வரலாற்று நினைவுகளையும் தாங்கி நிற்கின்றன. அவ்வகையில் “மூக்கறுப்பு” என்பது உடல் உறுப்புச் சிதைவைக் குறிக்கும் சொல்லிலிருந்து அவமானம், மான இழப்பு, சமூக இழிவு ஆகியவற்றைக் குறிக்கும் உருவகச் சொல்லாக விரிந்துள்ளது. இச்சொல்லின் பொருள் விரிவை இலக்கியம், வரலாறு, வழக்காறு ஆகிய தளங்களில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கம்பராமாயணத்தில் சூர்ப்பணகையின் மூக்கு மட்டுமன்றி, காதுகளும் முலைக்கண்களும் அறுக்கப்பட்டதாகக் கம்பர் பதிவு செய்கிறார். எனினும், இந்நிகழ்வின் நினைவில் “மூக்கறுப்பு” மட்டுமே தனித்த பண்பாட்டுக் குறியீடாக நிலைத்திருப்பது கவனத்திற்குரியது. இதற்குக் காரணமாக மூக்கு முக அழகு, உருவம், தனித்த அடையாளம் ஆகியவற்றுடன் கொண்டுள்ள தொடர்பையும், அதன் சிதைவு நாணம், மானம், அவமானம் ஆகிய சமூக உணர்வுகளுடன் இணையும் தன்மையையும் கருதலாம். இதனுடன் பெண்களின் முகஅழகு, மூக்குத்தி போன்ற அணிகலன்கள், திரைப்படப் பாடல்களில் மூக்கின் அழகியல் சுட்டுமுறைகள் ஆகியவையும் இணைகின்றன.
       மேலும், திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை நாயக்க அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே நடைபெற்ற “மூக்கறுப்புப் போர்” இச்சொல்லுக்கு வரலாற்றுப் பரிமாணத்தை வழங்குகிறது. பேளூர் கல்வெட்டு தொடர்பான செய்திகள் இந்நிகழ்வின் நினைவுத் தடமாக அமைகின்றன. இவ்வாறு இலக்கியம், வரலாறு, மொழிவழக்கு ஆகியவற்றின் வழியாகப் பயணிக்கும் “மூக்கறுப்பு”, ஒரு செயலைக் குறிக்கும் சொல்லிலிருந்து சமூகக் கௌரவ இழப்பின் பண்பாட்டுக் குறியீடாக மாறியுள்ளமை இவ்வாய்வின் வழி வெளிப்படுத்தப்படுகிறது.
முக்கியச் சொற்கள்: மூக்கறுப்பு, மூக்கு, அவமானம், சூர்ப்பணகை, கம்பராமாயணம், திருமலை நாயக்கர், மூக்கறுப்புப் போர், பண்பாட்டு நினைவு.
முன்னுரை
        ஒரு சொல்லின் பொருளை அதன் அகராதியில் காணப்படும் பொருளில் மட்டும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. சில சொற்கள் ஒரு சமூகத்தின் நீண்டகால வாழ்வியல் அனுபவங்களையும், மதிப்பீடுகளையும், நினைவுகளையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கின்றன. அவை ஒரு காலத்தின் வாழ்வியலையும், ஒரு சமூகத்தின் மதிப்பீடுகளையும், பழைய நிகழ்வுகளின் நினைவுகளையும் தாங்கி நிற்கின்றன. காலம் மாறும்போது அச்சொல் பயன்படுத்தப்படும் சூழல் மாறினாலும், அதன் அடிப்படை நினைவு வேறு வடிவில் தொடர்கின்றது. அத்தகைய சொற்களில் “மூக்கறுப்பு” என்ற சொல்லும் அடங்கும். இன்று “அவன் மூக்கறுத்துவிட்டான்”, “அவனால் குடும்பத்திற்கே மூக்கறுப்பு ஏற்பட்டது” என்று கூறும்போது, மூக்கை அறுத்தல் என்ற நேரடிப் பொருள் முன்னிலைப்படுவதில்லை. மாறாக, அவமானப்படுத்துதல், மானத்தை வாங்குதல், பிறர் முன்னிலையில் இழிவுபடுத்துதல் போன்ற பொருள்களே வெளிப்படுகின்றன.
       இதிலிருந்து ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. மூக்கு என்ற ஓர் உடல் உறுப்பு எவ்வாறு மானம் மற்றும் அவமானம் ஆகிய சமூக உணர்வுகளின் குறியீடாக மாறியது? இக்கேள்விக்கு விடை காண இலக்கியத்தையும் வரலாற்றையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். சூர்ப்பணகையின் மூக்கறுப்பு இலக்கியத்தில் உடல் சிதைவையும் நாணத்தையும் இணைக்கிறது. திருமலை நாயக்கர் காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மூக்கறுப்புப் போர், அதே உடல் உறுப்பை போரில் அவமானப்படுத்தும் செயலாக முன்வைக்கிறது. இவ்விரண்டிலும் மூக்கறுப்பு என்பது உடலைச் சிதைப்பதைக் கடந்த சமூக அவமானத்தின் குறியீடாக அமைகிறது. அதேபோல், இன்றைய வழக்கில் “மூக்கறுப்பு” என்பது சமூக மதிப்பு குறைதலைக் குறிக்கும் உருவகமாகப் பயன்படுகின்றது. எனவே, இச்சொல்லின் பண்பாட்டு அடுக்குகளை ஆராய்வது என்பது ஒரு சொல் எவ்வாறு உடலிலிருந்து சமூக உணர்விற்குப் பயணித்தது என்பதை ஆராய்வதாகும்.
 “மூக்கறுப்பு” – நேரடிப் பொருளிலிருந்து உருவகப் பொருள் வரை
        மூக்கை அறுத்தல் என்பது உடலின் வெளிப்படையான உறுப்பொன்றைச் சிதைத்தல். ஆனால் மூக்கு முகத்தின் நடுப்பகுதியில் அமைந்திருப்பதால், அதனை இழத்தல் அல்லது சிதைத்தல் உடலின் பிற பகுதிகளில் ஏற்படும் காயங்களைக் காட்டிலும் வெளிப்படையான பாதிப்பையும் மன உளச்சலையும் உண்டாக்குகிறது. ஒருவரின் முகமானது, அவரது அடையாளத்திற்கும் தோற்றத்திற்கும் அடிப்படையாகும். முகத்தில் ஏற்படும் மாற்றம் பிறரின் பார்வையிலும் தனிமனிதரின் தன்னுணர்விலும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கறுப்பு என்பது உடல் காயத்தைக் கடந்து உருவழிவையும் அவமானத்தையும் குறிக்கும் நிலையைப் பெற்றது எனலாம்.
     இரா. இளங்குமரனாரின் தமிழ் வழக்குச்சொல் அகராதியில், “மூக்கறுத்தல்” என்பதற்கு மூக்கை அறுத்தல் என்ற நேரடிப் பொருளுடன் “இழிவுறுத்துதல்” என்ற பொருளும் வழங்கப்படுகிறது. “மூக்கறுப்பு” என்பதற்கு “அவமானம்” எனப் பொருள் தரப்படுகிறது. இதனால் இச்சொல்லின் உருவகப் பொருள் இன்றைய பேச்சுவழக்கிலும் அகராதி மரபிலும் அது நிலைபெற்றுள்ளமை தெளிவாகிறது. இதிலிருந்து ஒரு சொல்லின் பொருள் மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. உடலில் நிகழும் செயல் முதலில் முகத்தில் ஏற்படும் மாற்றத்தைச் சுட்டுகின்றது. பின்னர் அந்த மாற்றம் சமூக அவமானத்துடன் இணைகிறது. இறுதியில், உடல் செயல் இல்லாமலேயே “அவமானம்” என்ற கருத்தைச் சுட்டும் உருவகச் சொல் என்ற நிலையை அடைந்திருக்கிறது.
மூக்கு – முகம் – அழகு –  அடையாளம்
     மனித உடலில் மூக்கு சுவாசத்திற்கும் மணத்தை உணர்வதற்கும் பயன்படும் உறுப்பு ஆகும். ஆனால் பண்பாட்டு நிலையில் அதன் பொருள் அதைக் கடந்தது, முகத்தின் அமைப்பில் அது முக்கிய இடத்தைப் பெறுவதால், ஒருவரின் தோற்றத்துடனும் அடையாளத்துடனும் தொடர்புடையதாக மாறுகிறது. முகம் என்பது ஒருவரை முதலில் அறிய உதவும் உடல் அடையாளமாகும். முகத்தில் ஏற்படும் மாற்றம் அவருடைய வெளிப்புற அடையாளத்தை மாற்றுகிறது. எனவே மூக்கறுப்பு என்பது உடல் உறுப்பை இழத்தல் என்பதுடன் ஒருவரின் முகத் தோற்றத்தையும் மாற்றுகின்ற செயலாகவும் அமைகிறது.
     குறிப்பாகப் பெண்களின் அழகியல் பார்வையில் முகத்திற்கும் அதன் உறுப்புகளுக்கும் தனித்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதை இலக்கியங்களிலும் பண்பாட்டு வழக்கங்களிலும் காணலாம். கண், புருவம், மூக்கு, உதடு, கூந்தல் போன்ற உறுப்புகள் பெண்ணின் முக அழகை எடுத்துரைக்கும் கூறுகளாக உள்ளன. மூக்கணிகள், மூக்குத்தி போன்ற அணிகலன்கள் மூக்கை அழகுபடுத்துவதோடு, பெண்ணின் அலங்காரத்திலும் பண்பாட்டு அடையாளத்திலும் இடம் பெற்றுள்ளன. இதனால் மூக்கு இயற்கையான உடல் உறுப்பாக மட்டுமின்றி, பெண்ணின் முக அழகை வெளிப்படுத்தும் அழகியல் கூறாகவும் திகழ்கிறது.
        இத்தகைய நிலையில் மூக்கு சிதைக்கப்படுதல் என்பது உடலுக்கு ஏற்பட்ட காயத்தோடு விரிந்த பொருளையும் கொண்டதாகிறது. எனவே, மூக்கறுப்பு என்பது உடல் சிதைவு, அடையாள இழப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக அமைகிறது. இவற்றுடன் நாணம் இணையும் போது, அது தனிமனித உணர்வைக் கடந்து சமூக அவமானத்தின் உருவகமாகவும் மாறுகிறது.
சூர்ப்பணகையின் மூக்கறுப்பு – இலக்கியப் பண்பாட்டு அடுக்கு
       “மூக்கறுப்பு” என்ற சொல்லின் பண்பாட்டுப் பொருளை ஆராயும்போது சூர்ப்பணகையின் நிகழ்வு தவிர்க்க முடியாததாகிறது. இராமாயணத்தில் சூர்ப்பணகை இராமனை அணுகுவதும், பின்னர் சீதையுடனான மோதலும், இலக்குவனால் அவளுடைய மூக்கும் காதுகளும் அறுக்கப்படுவதும் முக்கிய நிகழ்வுகளாக அமைகின்றன. தமிழில் கம்பர் இந்நிகழ்வை வெறும் கதைக் கூறாக மட்டுமல்லாமல், உணர்ச்சிச் செறிவுடன் வடிவமைக்கிறார். கம்பர்,
மூக்கும், காதும், வெம் முரண் முலைக் கண்களும், முறையால்
போக்கி, போக்கிய சினத்தொடும், புரி குழல் விட்டான்.”
                                          (கம்பராமாயணம், சூர்ப்பணகைப் படலம், 94:2-3)
         என்று இலக்குவன் சூர்ப்பணகையின் மூக்கு, காதுகள், முலைக்கண்கள் ஆகியவற்றை அறுத்ததாகப் பதிவு செய்திருக்கிறார். ஆனால், இங்கு பல உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டிருந்தாலும், இன்றுவரை நினைவிலும் வழக்கிலும் சூர்ப்பணகையின் மூக்கறுப்பு” என்ற நிகழ்வே நிலைத்திருக்கிறது. இதற்குக் காரணம் மூக்கு முகத்தின் மையத்தில் அமைந்து, அழகு, உருவம், அடையாளம் ஆகியவற்றை ஒருங்கே பிரதிபலிப்பதாக இருப்பதேயாகும். ஆகவே, மூக்கறுப்பு என்பது உடல் காயத்தைக் கடந்து உருவழிவு, நாணம், மான இழப்பு, அவமானம் ஆகியவற்றின் பண்பாட்டுக் குறியீடாகப் பொருள் பெறுகிறது.
      மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மூக்கு பல விலங்குகளின் வாழ்வில் இன்றியமையாத உறுப்பாக விளங்குகிறது. மனிதனைப் போலவே பல விலங்குகளும் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றன. அதனுடன் மணத்தை உணர்ந்து உணவு, நீர், இரை, இனத்தவர் ஆகியவற்றை அடையாளம் காண்கின்றன. குறிப்பாக நாய், யானை, குதிரை போன்ற விலங்குகளின் மணவுணர்வு அவற்றின் வாழ்வியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாய் மணத்தின் வழியாகச் சுற்றுப்புறத்தை அறிகிறது; யானை தும்பிக்கையின் உதவியுடன் சுவாசிப்பதோடு மணத்தையும் உணர்கிறது; குதிரையும் மூக்கின் வழியாகச் சுவாசித்து சுற்றுப்புற மணங்களை உணர்கிறது. இதனால் மூக்கு என்பது சுவாசத்திற்கான உறுப்பாக மட்டுமன்றி, உயிரினம் தன்னைச் சுற்றியுள்ள உலகை உணர்ந்து அதற்கேற்பச் செயல்பட உதவும் முக்கிய உறுப்பாகவும் அமைகிறது.
   குறிப்பாக மனிதனின் உணர்வுகளோடு மூக்கும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளமை பண்பாட்டு பார்வையில் கவனிக்கத்தக்கது. மணம் வழியாக நினைவு, ஈர்ப்பு, வெறுப்பு போன்ற உணர்வுகள் எழுகின்றன. அவை சில நேரங்களில் காமம், கோபம், இன்பம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சி நிலைகளோடும் தொடர்புபடுத்தப்படுகின்றன. தூண்டப்பட்ட உணர்வு செயலை நோக்கி மனிதனை நகர்த்தும் நிலையில், மூக்கு உணர்வைத் தூண்டும் உறுப்பாகக் கற்பிக்கப்படுகிறது. இத்தகைய பண்பாட்டுக் கற்பனையின் பின்னணியில் சூர்ப்பணகையின் நிகழ்வைப் பார்க்கும்போது, அவளுடைய மூக்கறுப்பு வெறும் உடல் தண்டனையாகத் தோன்றவில்லை. அவளது உணர்வு, உருவம், அழகு, அடையாளம் ஆகியவற்றை ஒருசேரத் தாக்கும் குறியீடாகவும் வெளிப்படுகிறது. அந்த வகையில், சினத்தோடு எழுந்த இலக்குவன் சூர்ப்பணகையின் மூக்கை அறுத்த நிகழ்வு, உடல் சிதைவைக் கடந்த ஒரு பண்பாட்டு குறியீட்டுப் பொருளைப் பெறுகிறது. ஆகவே, சூர்ப்பணகையின் மூக்கறுப்பு இலக்கியத்தில் அவமானம், நாணம், வசை ஆகிய கருத்துகளுடன் தொடர்புபடுத்தப்படுவது மறுக்க முடியாதது. எனவே, இந்நிகழ்வு “மூக்கறுப்பு” என்ற சொல்லின் பண்பாட்டுப் பொருளை விளக்கும் முக்கியமான இலக்கியப் பின்னணியாகும்.
மூக்கறுப்பு – நாணம், மானம், அவமானம்
        மூக்கறுப்பு என்ற சொல்லின் பண்பாட்டு அடுக்குகளில் நாணம், மானம், அவமானம் ஆகிய மூன்றுக்கும் முக்கிய இடம் உண்டு. நாணம் என்பது தனிமனிதனின் உள்ளார்ந்த உணர்வு. ஒருவர் தம்மைப் பிறர் எவ்வாறு மதிப்பிடுகின்றனர் என்ற உணர்வு அதனுடன் தொடர்புடையது. மானம் என்பது சமூகத்தில் ஒருவர் பெற்றிருக்கும் மதிப்பு மற்றும் கௌரவத்தைக் குறிக்கிறது. அவமானம் என்பது அந்த மதிப்பில் ஏற்படும் இழிவாக அமைகிறது. முகம் சிதைக்கப்படும்போது இந்த மூன்று நிலைகளும் ஒன்றோடொன்று தொடர்புபடுகின்றன. இதில் வெளிப்புற தோற்றம் மாறுகிறது; தனிமனிதருக்குள் நாண உணர்வு உருவாகிறது; பிறர் பார்வையில் கௌரவம் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதுவே மூக்கறுப்பு என்ற சொல்லுக்கு “அவமானம்” என்ற உருவகப் பொருள் உருவாகும் பண்பாட்டு அடிப்படையாக அமைகின்றது.
      இதன் விரிவான வடிவமே “குடும்பத்திற்கே மூக்கறுப்பு” போன்ற வழக்குகளில் தெரிகிறது. ஒரு தனிமனிதரின் செயலால் அவருடைய குடும்பத்திற்கே இழிவு ஏற்பட்டதாகக் கூறும்போது, மூக்கு என்பது தனிநபரின் உடல் உறுப்பாக இல்லாமல் குடும்பத்தின் சமூக மரியாதையின் குறியீடாக மாறுகிறது. இங்கு ஒரு உடல் உறுப்பு சமூகக் கௌரவத்தின் அடையாளமாக மாறியிருப்பது மொழியின் தனித்துவமான உருவக ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
        குறிப்பாக, உடல் உறுப்பைச் சிதைத்தல் என்பது பல சமூகங்களில் வெவ்வேறு காலங்களில் தண்டனை முறைகளுடன் தொடர்புடையதாக இருந்துள்ளது. உடலில் ஏற்படுத்தப்படும் மாற்றம், குற்றவாளியைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் நோக்கத்தையும் கொண்டிருக்கலாம். மூக்கு போன்ற முகத்தின் வெளிப்படையான உறுப்பைச் சிதைப்பது இவ்வகையில் தனித்த தன்மையுடையது. காயம் மறைந்துவிடாமல் முகத்தில் நிலைத்திருப்பதால், அது ஒரு நிரந்தர அடையாளமாக மாறுகிறது. இதனால் தண்டனை உடலோடு முடிவதில்லை; சமூகப் பார்வையிலும் தொடர்கிறது.
        “மூக்கறுப்பு” என்ற சொல்லின் அவமானப் பொருளைப் புரிந்துகொள்ள இந்தப் பின்னணி உதவுகிறது. ஒருவரின் உடலில் ஏற்படுத்தப்படும் காயம் அவருடைய சமூக அடையாளத்தையே மாற்றும் போது, அந்தச் செயல் “அவமானப்படுத்துதல்” என்ற பொருளைப் பெறுகிறது. ஆகவே, மூக்கறுப்பு என்பது வெறும் வன்முறைச் செயல் அல்ல. குறிப்பிட்ட சூழலில் அது அதிகாரத்தைக் காட்டுதல், எதிரியை இழிவுபடுத்துதல், சமூக மதிப்பைச் சிதைத்தல் போன்ற நோக்கங்களையும் உள்ளடக்கியிருக்கி வைத்திருக்கிறது.
திருமலை நாயக்கர் கால “மூக்கறுப்புப் போர்”
         “மூக்கறுப்பு” என்ற சொல்லின் பண்பாட்டு பரப்பை இலக்கியத்திற்குள் மட்டும் நிறுத்திவிட முடியாது. திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் மதுரை நாயக்க அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே நடைபெற்ற போர், இச்சொல்லுக்கு ஒரு முக்கியமான வரலாற்று அடுக்கை வழங்குகிறது. கி.பி. 1656-ஆம் ஆண்டில் நடைபெற்ற இம்மோதலில், மைசூர் படையினர் எதிரிகளின் மூக்கு மற்றும் மேலுதட்டை அறுத்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. இதனால் இப்போர் பின்னாளில் மூக்கறுப்புப் போர்” என வழங்கப்பட்டது. திருமலை நாயக்கர் உடல்நலக் குறைவால் நேரடியாகப் போரில் ஈடுபட முடியாத நிலையில், இரகுநாத சேதுபதியின் படை உதவியுடன் மைசூர் படையை எதிர்த்ததாகச் செய்திகள் உள்ளன. இந்நிகழ்வில் மூக்கறுப்பு என்பது போரில் வெற்றிபெறுவதற்கான சாதாரண நடவடிக்கையாக அல்லாமல், எதிரியை அவமானப்படுத்தி அச்சுறுத்தும் வன்முறைச் செயலாக வெளிப்படுகிறது. எதிரியின் உயிரைப் பறிப்பதற்குப் பதிலாக, அவனுடைய முகத்தில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்துவது அவமானத்தின் தாக்கத்தை நீடிக்கச் செய்திருக்கலாம்.
      மூக்கறுப்புப் போர் குறித்த விவாதத்தில் சேலம் மாவட்டம் பேளூரில் காணப்படும் கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது. இக்கல்வெட்டு திருமலை நாயக்கர் கால மூக்கறுப்புப் போர் தொடர்பான செய்தியைத் தாங்கியுள்ளதாக சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் அவர்களின் குழுவால் கண்டறியப்பட்டது. அக்கல்வெட்டில்
“திருமலைநாயக்கரின் ஓலை (ஆணைக்கு)ப்படி சின்ன பூபாலரின் மகன் வேங்கடப்ப நாயக்கர் மற்ற பாளையகாரர்களுடன் இணைந்து திருச்சி சென்று மூக்கறுப்பு பேரில் (மீசையுடனே மூக்கறுப்பிச்சார்) பங்கு பெற்றார்.”
       என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. மூக்கு மற்றும் மேலுதடு தொடர்பான இவ்வாசகம், மூக்கறுப்பு சம்பவம் குறித்த உள்ளூர் வரலாற்று நினைவுடன் இக்கல்வெட்டு தொடர்புடையதாகக் கருதப்படுவதற்குக் காரணமாகிறது. ஆகவே, சூர்ப்பணகையின் இலக்கிய நிகழ்விலும் திருமலை நாயக்கர் கால வரலாற்றிலும் மூக்கறுப்பு வெவ்வேறு சூழல்களில் நிகழ்ந்தாலும், இரண்டிலும் உடல் சிதைவும் அவமானமும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகத் தோன்றுகின்றன. இலக்கியத்தில் தனிமனித அவமானத்தின் குறியீடாகத் தோன்றிய மூக்கறுப்பு, வரலாற்றில் எதிரியை இழிவுபடுத்தும் போர் செயலாகவும் பதிவாகியுள்ளது.
மூக்கறுப்பு – மொழியில் நிலைத்த பண்பாட்டு நினைவு
     ஒரு நிகழ்வு காலத்தால் மறைந்துவிடலாம். ஆனால், அதனுடன் தொடர்புடைய சொல் மக்கள் வழக்கில் தொடர்ந்து நிலைத்தால், அந்த நிகழ்வின் நினைவின் ஒரு பகுதி மொழியில் உயிர்வாழ்கிறது. “மூக்கறுப்பு” இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். தொடக்கத்தில் உடல் உறுப்பைச் சிதைத்தலைக் குறித்த இச்சொல், காலப்போக்கில் அவமானம், மான இழப்பு, கௌரவக் குறைவு ஆகிய சமூக உணர்வுகளைச் சுட்டும் உருவகமாக விரிந்துள்ளது. எனவே, ஒரு சொல்லின் பொருள் மாற்றத்தை ஆராய்வது என்பது அதன் மொழியியல் வளர்ச்சியை மட்டும் பார்ப்பதல்ல; அதன் பின்னால் செயல்பட்ட சமூக நினைவையும் பண்பாட்டு அனுபவத்தையும் அறிதலாகும்.
       இன்றைய வழக்கில் “மூக்கறுத்துவிட்டான்”, “அவரால் குடும்பத்திற்கே மூக்கறுப்பு ஏற்பட்டது” போன்ற தொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் மூக்கை அறுத்தல் என்ற நேரடிப் பொருள் செயல்படுவதில்லை. மாறாக, ஒருவரின் செயல் அவருடைய அல்லது அவருடன் தொடர்புடையவர்களின் மானத்தையும் சமூக மதிப்பையும் பாதித்துவிட்டது என்பதே உணர்த்தப்படுகிறது. இதன் வழியாக உடலில் நிகழ்ந்த செயல், சமூக உறவுகளில் ஏற்படும் இழிவின் அடையாளமாக மாற்றம் பெற்றிருப்பதைக் காணலாம்.
       மொழியானது கடந்த காலத்தை முழுமையாகப் பாதுகாப்பதில்லை. ஒரு நிகழ்வின் முழுமையான சூழலும் காரணங்களும் காலப்போக்கில் மறைந்து போகலாம். ஆனால் அதன் மைய உணர்வைச் சுமக்கும் ஒரு சொல் மட்டும் தொடர்ந்து வாழும். “மூக்கறுப்பு” என்ற சொல்லிலும் இதே நிலையைப் பார்க்கலாம். அதன் பின்னணியில் இருந்த உடல் வன்முறையின் முழு வரலாற்றை அறியாதவர்கள்கூட, “மூக்கறுப்பு” என்ற சொல்லைக் கேட்டவுடன் அவமானம் அல்லது மான இழப்பு என்ற பொருளைப் புரிந்துகொள்கின்றனர். இதுவே மொழியின் நினைவாற்றல்.
        ஒரு காலத்தில் நிகழ்ந்ததாகப் பதிவான மூக்கறுப்பு, பின்னாளில் அந்த நிகழ்வை நினைவுகூரும் சொல்லாக அமைகிறது. காலமும் சூழலும் மாறினாலும், சொல் மட்டும் புதிய பொருளோடு வாழ்கிறது. இதனால் மொழி என்பது கடந்த காலத்தைப் பாதுகாக்கும் களஞ்சியமாகவும், கடந்த கால அனுபவங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் சில உணர்வுகளைப் புதிய சூழல்களுக்குள் எடுத்துச் செல்லும் பண்பாட்டு நினைவகமாகவும் செயல்படுகிறது. சூர்ப்பணகையின் நிகழ்வு இப்பொருள் உலகிற்கு இலக்கிய அடித்தளத்தை வழங்குகிறது. திருமலை நாயக்கர் கால மூக்கறுப்புப் போர் வரலாற்று நினைவின் பரிமாணத்தைச் சேர்க்கிறது. அகராதி மரபு “மூக்கறுப்பு” என்பதன் உருவகப் பொருளைச் சொல் நிலையில் பதிவு செய்கிறது. மக்கள் வழக்கு அதனை இன்றைய வாழ்வியலுக்குள் தொடர்ந்து பயன்படுத்துகிறது. இவ்வாறு இலக்கிய நினைவு, வரலாற்று நினைவு, மொழி வழக்கு ஆகிய மூன்றும் ஒரே சொல்லுக்குள் ஒன்றிணைகின்றன.
      எனவே, “மூக்கறுப்பு” என்பது கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டு மறைந்துபோன சொல் அன்று. அதன் நேரடிப் பொருள் பின்னுக்குச் சென்றாலும், அதன் பண்பாட்டு பொருள் இன்றும் உயிரோடு உள்ளது. ஒரு சொல்லின் வெளிப்படையான பொருளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சமூக அனுபவங்களை ஆராயும்போது, மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டுமல்ல என்பதும் புலப்படுகிறது. அது ஒரு சமூகத்தின் மறைந்த அனுபவங்கள், மதிப்பீடுகள், அவமான உணர்வுகள், வரலாற்று நினைவுகள் ஆகியவற்றைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் உயிருள்ள பண்பாட்டு ஆவணமாகிறது.
முடிவுரை
         இவ்வாய்வில் “மூக்கறுப்பு” என்ற சொல்லின் பண்பாட்டு அடுக்குகளை ஆராயும்போது, அது உடல் உறுப்புச் சிதைவைக் குறிக்கும் சொல்லாக மட்டும் நில்லாமல், உருவழிவு, நாணம், மானம், அவமானம், சமூக மதிப்பு ஆகியவற்றைத் தாங்கிய பண்பாட்டுக் குறியீடாக விளங்குவது தெளிவாகிறது. சூர்ப்பணகையின் மூக்கறுப்பு இலக்கியத்தில் உடல் காயத்தையும் மன அவமானத்தையும் இணைக்கிறது. திருமலை நாயக்கர் காலத்து “மூக்கறுப்புப் போர்” இச்சொல்லுக்கு வரலாற்றுப் பரிமாணத்தை வழங்குகிறது. பேளூர் கல்வெட்டு அதன் நினைவுத் தடமாக அமைகிறது. இவற்றுடன் இன்றைய “மூக்கறுத்துவிட்டான்” என்ற வழக்குப் பயன்பாடும் இணைந்து, உடல் சிதைவிலிருந்து சமூக இழிவிற்கான பொருள் மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. ஆக, “மூக்கறுப்பு” என்ற சொல், ஒரு சமூகத்தின் மான உணர்வு, வரலாற்று அனுபவம், இலக்கிய நினைவு ஆகியவற்றைத் தன்னுள் பொதிந்து தலைமுறைகளைக் கடந்து வரும் பண்பாட்டு நினைவுச் சின்னமாகும். அதன் அடுக்குகளைத் திறந்து அணுகுவது, மொழிக்குள் மறைந்திருக்கும் சமூக வரலாற்றை அறியும் வாயிலாக அமைகின்றது.
துணைநூற்பட்டியல்
1.இளங்குமரன். இரா., வழக்குச்சொல் அகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989.
2.கம்பர், கம்பராமாயணம் – ஆரணிய காண்டம், ஆழ்வார் ஆராய்ச்சி நிலையம், சென்னை, 2020.
3.சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு, 17.04.2017 https://aragalurvenkatesan.blogspot.com/2017/04/blog-post.html
4.தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon), சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு, சென்னை, 1980.
5.மாயகிருஷ்ணன், மதுரை திருமலை நாயக்கர் – மைசூர் மன்னர் இடையே நடந்த ‘மூக்கறுப்பு போர்’ பற்றி தெரியுமா? பிபிசி தமிழ்க் கட்டுரை, 11.02.2024. https://www.bbc.com/tamil/articles/cmlgwlp7zpro
6.மானோரஞ்சிதமோனி. சி., தமிழ்நாட்டின் வரலாறு கி.பி.1529 முதல் கி.பி.1801 வரை, டேவ்-பெரில் பப்ளிகேசன்ஸ், திருநெல்வேலி, 2019.
Iniyavaikatral peer reviewed ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
பெ. சண்முகவடிவேல்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை,
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை-600005.

 

மூக்கறுப்பு என்ற சொல்லின் பண்பாட்டு அடுக்குகள் PDF

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »