Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
Linguist Muthu Shanmugan observes, “In the quest to discover a universal grammatical structure applicable to languages, Noam Chomsky and his theory of transformational grammar stand at the forefront of the field of linguistics in this century. The influence of this theory has not been confined to linguistics alone; it has extended its impact to fields such as psychology, sociology, and philosophy—disciplines that were previously somewhat isolated among language teachers and research scholars”1. We can examine Tolkappiyar’s linguistic ideas through this same comparative lens. Even today, Tolkappiyar’s insights into language, literature, and grammar remain subjects of active research. ‘Tolkappiyam’ in Tamil and Panini’s ‘Ashtadhyayi’ in Sanskrit represent two distinct grammatical traditions. There is no dispute regarding the significance of Sanskrit in the evolution of linguistics, particularly given the extensive research conducted on it by scholars from other lands. Against this backdrop, the primary objective of this article is to analyze the linguistic concepts articulated by Tolkappiyar.
“தொல்காப்பியரின் பார்வையில் மொழியியல் சிந்தனைகள்”
ஆய்வுச் சுருக்கம்
மொழியியல் அறிஞர் முத்துச் சண்முகன் அவர்கள், “மொழிகளுக்குப் பொருத்தமான, பொதுவான இலக்கண அமைப்பைக் காணும் முயற்சியில் இந்த நூற்றாண்டில் மொழியியல் துறையில் முன்னணியில் நிற்பவை சோம்ஸ்கியும் அவருடைய மாற்றிலக்கணக் கோட்பாடும் இக்கோட்பாட்டின் செயற்பாடு மொழியியலோடு மட்டும் நின்றுவிடவில்லை மொழியாசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இவர்களிடையே முடக்கிக்கிடந்த மொழியியல். உளவியல், சமூகவியல், தத்துவவியல் ஆகிய துறைகளை எல்லாம் பாதிக்கத் தொடங்கியது. இதே அணுகுமுறையை நாம் தொல்காப்பியரின் மொழியியல் சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். தற்காலத்திலும் மொழியியல் மற்றும் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் தொல்காப்பியரின் மொழியில், இலக்கிய, இலக்கண சிந்தனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. தமிழில் தொல்காப்பியமும் வடமொழியில் பாணினியின் அஷ்டாத்தியாயியும் இருமரபு சார்ந்த இலக்கண நூல்களாகும். சமக்கிருத மொழியை அந்நிய நாட்டினர் ஆராய்ந்தார்கள், மொழியியல் வளர்ச்சிக்கு அதன் பங்கு முக்கியமானது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. இச்சூழலில் இக்கட்டுரை தொல்காப்பியர் வெளிப்படுத்தும் மொழியியல் சிந்தனைகளை ஆராய்வதை முக்கிய நோக்கமாக்க் கொண்டுள்ளது.
திறவுச் சொற்கள்
மொழியும் மொழி வேறுபாடுகளும்-சூழலுக்கேற்ப மாறும் மொழி – நில அடிப்படையில் மொழி – செய்யாய்-முன்னிலை வினைச்சொல் – கால அடிப்படையில் தோன்றும் வேறுபாடுகள் – சொல் கடன்பெறுதல் – தொல்காப்பியர் கூறும் உலக வழக்கும் செய்யுள் வழக்கும்
முன்னுரை
மொழியியல் ஆய்வுகளில் தமிழர்கள் மிகவும் பெருமையுடன் நினைத்துப் பாரக்க வேண்டிய்யவர்கள் மத்தியில் கால்டுவெல் மிக முக்கியமானவர். தொன்னூல் விளக்கம் என்னும் ஐந்திலக்கண நூலையும் கொடுந்தமிழ், செந்தமிழ் இலக்கணம் இயற்றியவர் வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டன் டைன் ஜோசப்பெஸ்கி (1680 – 1747). மொழிகளை ஒப்பிட்டு ஆராய, இலக்கணம் எழுத வழி உள்ளதை மரபிலக்கண நூலார் அறிந்திருந்தனர். வீரசோழியம், பிரயோகவிவேகம், இலக்கணக் கொத்து என்னும் இலக்கண நூல்கள் வடமொழியையும் தமிழையும் ஒப்பிட்டு ஒற்றுமை, வேற்றுமை அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. இவ்வாய்வில் ம. பிரபாகரன் அவர்கள் எழுதிய வீரசோழிய ஆய்வு மிக முக்கியமானது. தொல்காப்பிய உரையாசிரியர் தெய்வச்சிலையார் “உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் பாடைதோறும் தாம் அறிகுறி இட்டு ஆண்ட துணை அல்லது இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மை உணர்த்தும் என எல்லாப் பாடைக்கும் ஒப்ப முடிந்தோர் இலக்கணம் இன்மையான் என்க”1 இக்கட்டுரை தொல்காப்பியரின் மொழியியல் சிநதனைகளை ஆராய்வதை மைய நோக்கமாக்க் கொண்டுள்ளது,
மொழியும் மொழி வேறுபாடுகளும்
மொழியின் புறத்தோற்றமாகிய ஒலி, ஒலியன் மற்றொலி, உருபு, உருபன், மாற்றுருபு, தொடர் என்பவை மொழிக்கு மொழி மாறுபட்டிருந்தாலும் அவற்றுக்கென்று உலகலாவிய பொதுப் பண்புகள் உள்ளன. அவற்றை இனங்கண்டு மொழியியல் உலக மொழிகளுக்குப் பொது இலக்கணம் காண முற்பட்டது. பேராசிரியர் முத்துச் சண்முகன் அவர்கள், “எல்லா மொழிகளிலும் பெயர், வினை என்ற பாகுபாடு இருப்பது பொருட் பொதுமை மனிதனுடைய ஒலியுறுப்புக்கள் ஒன்று போல் இருப்பதால் ஒலிக் கூறுகளில் பொதுமை இருப்பதில் வியப்பில்லை. சோம்ஸ்கி உருவாக்கிய பொதுமைக் கூறுகளே மொழியியலில் பெரும்புரட்சியை உண்டு பண்ணியது”2 என்னும் கருத்து இங்கு நோக்கத்தக்கது. தொல்காப்பியர் எச்சவியலில் நான்கு சூத்திரங்களில் மொழியின் மாறும் இயல்பினை விவரிக்கிறார்.
“ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகிடன் உடைத்தே.
அவற்றுள்
ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே.
தாவென் கிளவி ஒப்போன் கூற்றே.
கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே”3
மனிதர்களுக்குள் தோனன்றிய ஏற்றத்தாழ்வுகளை மேற்கண்ட நூற்பா பட்டியலிடுகின்றது. ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் உயர்ந்தவர் என்றும் தாழ்ந்தவர் என்றும், சமமானவர்கள் என்றும், செல்வம் படைத்தவர்கள் உயர்ந்தவர்களாகவும், வறுமையில் வாடும் ஏழைகள் தாழ்ந்தவர்களாகவும் கருதியதை இந்நூற்பா விவரிக்கிறது. அதுபோல, நீ, நீங்கள் என்ற இரு முன்னிலைப் பெயர்களில் நீ என்பதைச் சிறுவர்களிடமும், நம்மைவிடத் தாழ்ந்தவர்கள் என்று கருதுகிறவர்களிடமும் பயன்படுத்துகின்றனர். அதே வேளையில் நம்மை விட மேலானவர்களாகக் கருதுவோரிடம் ‘நீங்கள்’ என்ற முன்னிலைப் பெயரையே பயன்படுத்துவர். ஒருவரின் சமூக அந்தஸ்துக்கேற்ப மொழி மாறுபடுவதைத் தொல்காப்பியர் வெளிப்படுத்துகிறார். இத்தகைய சமுதாயப் படிநிலைகளை மொழி பிரதிபலிக்கும் என்ற உண்மையை ஈ, தா, கொடு ஆகிய மூன்று வினைச் சொற்களை வைத்து தொல்காப்பியர் விவரிக்கிறார். ஈ, தா, கொடு ஆகிய மூன்று வினைகளையும் ‘இரவின் கிளவி’ என்று குறிப்பிடுகிறார். இரத்தல் தன்மையை உணர்த்தும் கிளவிகள் இவை. ஒருவன் மற்றொருவனிடம் ஒன்றைக் கேட்டுப் பெறுவதற்கு உரிய சொற்களாகும்.
உயர்ந்தோன் – கொடு
ஒப்போன் – தா
தாழ்ந்தோன் – ஈ
நச்சினார்க்கினியர், இவற்கு ஊண் கொடு (உயர்ந்தோன்- தாழ்ந்தவனிடம்), எனக்குச் சோறு தா (ஒப்போன்- ஒப்போன், பெருமா! எனக்கொரு பிடிசோறீ! (தாழ்ந்தோன்- உயர்ந்தோனிடம்) சமுதாயப் படிநிலைகளுக்கு ஏற்ப மொழி வேறுபடும் என்ற சமுதாய மொழியியல் (sociolinguistics)) கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்ட நூற்பாக்கள் இவை என்று கருதலாம்.
சூழலுக்கேற்ப மாறும் மொழி (Language and context)
நோம் சோம்ஸ்கியின் “Colourless green ideas sleep furiously“ (நிறமற்ற பசிய எண்ணங்கள் சீற்றத்துடன் உறங்குகின்றன) வாக்கியம் பெரும்பான்மையான மொழியியல் அறிஞர்களால் உதாரணமான எடுத்தாளப்படும். பிழையின்றி அமைந்தாலும் பொருளற்றதாக இருப்பின் அதனைத் தவிர்த்து விடவேண்டும். இக்கோட்பாட்டைத் டு தொல்காப்பியரும் பேசுகின்றார். தொல்காப்பியர், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”4 என்பார். பொருள் குறிப்பதை மெய்ப்பொருள் குறிப்பவை (முயல்,கோடு;யாமை, மயிர், கம்பலம்) எனவும் பொய்ப்பொருள் குறிப்பவை (முயற்கோடு, யாமை மயிர்க் கம்பலம்) எனவும் குறிப்பர். முயற்கோடு உண்டு என்னும் வாக்கியம் எழுவாய் – பயனிலை இயைபுடன் தவறின்றி இருந்தாலும் இல்லாத பொருளை உண்டு எனக் கூறுவதால் தவறுடைய வாக்கியம். முயற்கோடு இன்று என்றே வாக்கியம் அமைய வேண்டும் எனத் தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர்”5 குறிப்பிடுகின்றார். இவ்வாறு வருவதை வழூஉ என மரபிலக்கணம் குறிப்பிடும். திணைவழூஉ: அது வந்தான்; பால்வழு: அவள் வந்தான்; இடவழூஉ: உண்டேன்நீ; காலவழூஉ: செத்தானைச் சாம் என்றல்; மரபு வழூஉ; யானை மேய்ப்பானை இடையன் என்றல்”6
திருமண வீட்டில் நல்ல விஷயங்களைப் பேசுவதும் மங்கலமாகப் பேசுவதும் பொருத்தமானவை. மங்கலமான சூழ்நிலையில் அமங்கலமாகப் பேசுவது வருத்தத்தை ஏற்படுத்தும். பல்வேறு சமூகச் சூழல்களையும் (social context and situations)) அறிந்து மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற சமுதாய மொழியியல் கோட்பாட்டைத் தொல்காப்பியர் நன்கு அறிந்திருந்தார். தொல் காப்பியர் தரும் இரு நூற்பாக்கள்:
‘அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்”7
‘மறைக்கும் காலை மரீஇயது ஓராஅல்”8
நல்லோர் அவைக்கண் கூறத்தகாத சொற்கள் உள்ளன. அத்தகைய இடக்கர்ச் சொற்களை மறைத்துத் தகுதியுடைய சொற்களால் கூற வேண்டும். நீண்ட காலமாக மருவி வழங்கிவரும் அச்சொற்களை நீக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். “(நல்லோர்) அவை என்ற ஒரு சமூகச் சூழலையே தொல்காப்பியர் சுட்டியுள்ளார். வேறு சூழல்களைச் சுட்டவில்லை. இதனால் வேறு சமூகச் சூழல்கள் இல்லை என்று பொருள் இல்லை. கூறியதைக் கொண்டு கூறாததைப் புரிந்து கொள்ளுதல் போல நல்லோர் அவை” என்றது மொழி பயன்படுத்தப்படும் சமூகச் சூழல்களைக் குறித்து நின்றது.
சொற்களைவிட வாக்கியம் நெகிழ்வுத் தன்மை உடையது. அவன் வந்தான் – வந்தான் அவன் என மாற்றியும் வழங்கலாம். நோம் சோம்ஸ்கியின் மாற்றுவிதி இதற்குப் பயன்படும். ஆனால் பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர் போன்றவற்றை இவ்வாறு மாற்ற முடியாது; எழுவாய் – பயனிலை இயைந்தே வரும். வாக்கியத்தில் தொடரும் சொற்களுக்கு இடையே இயைபு இருக்கும். இவற்றை விளக்க மொழியியல் அண்மை உறுப்புப் பகுப்பு நிலை (IC.Analysis) எனக் குறிப்பிடும். தொல்காப்பிய உரையாசிரியர் சேனாவரையர் வாக்கியங்களில் சொற்கள் அண்மை உறுப்பாக வரும் முறையை, தொடர் மொழியாவது அவாய் நிலையானும் தகுதியானும் அண்மை நிலையானும் இயைந்து பொருள் விளக்கும் தனிமொழி ஈட்டம்9 எனக் குறிப்பிடுகின்றார். அவாய் நிலை (செங்கால்நாரை), தகுதி (தீச்சுடும்; நீர்குளிரும்), அண்மை நிலை (உணவை உண்டான்).
நில அடிப்படையில் மொழி (Language and Geography)
17ஆம் நூற்றாண்டில் இலக்கணக் கொத்து என்னும் சொல்லிலக்கண நூலை எழுதிய சாமிநாததேசிகர் தமிழில் ஐந்து எழுத்துகள் மட்டுமே உள்ளன; வடமொழியே தமிழுக்குத் தாய்மொழி, வடமொழி இன்றித் தமிழால் இயங்க முடியாது என்னும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பேசினாலும் மொழியியல் கூறும் புதைநிலை அமைப்பு (Deep Sbuctisve) புறநிலை அமைப்பு (Surface Structure) என்னும் தொடரியல் கோட்பாட்டை முன்பே கூறியுள்ளார். எச்சம் என்று ஒன்று இல்லைஞ். விகாரமுற்று10. படித்த பெண் என்னும் பெயரெச்சத் தொடர் ஒரு புறநிலைத் தொடர். இதன் புதைநிலை வடிவம் பெண் படித்தாள். இந்த அளவோடு அமைப்பு மொழியியல் நின்றுவிடும். நில அடிப்படையில் மொழியில் காணப்படும் வேறுபாடுகளை ஆய்வு செய்கின்ற இயல் கிளை மொழியியல் (Dialectology) எனப்படும். சமகாலத்தில் மொழியில் காணப்படுகின்ற வேறுபாடுகளைக் கண்டறிந்து விவரிப்பது கிளைமொழியியலின் முக்கிய நோக்கமாகும். கிளை மொழிகளைக் கண்டறிய மொழியியல் அறிஞர்கள் மொழி பாகு பாட்டுக்கோடு (isogloss) என்ற கருத்தினை வலியுறுத்துவர். தொல்காப்பியர் நில அடிப்படையில் நிலவு கின்ற மொழி வேறுபாடுகளை ஒரு நூற்பாவின் வழி விளக்கியுள்ளார். இச்சூத்திரமும் எச்சவியலில் காணப்படுகின்றது.
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச் சொற்கிளவி” 11
செந்தமிழ் வழங்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த நாடுகள் பன்னிரண்டு. அவ்அந் நாடுகளில் வாழும் மக்களுக்கு மட்டுமே பொருள் விளங்குமாறு வழங்கும் சொற்கள் திசைச் சொற்களாகும். திசைச் சொல் என்ற வழக்கு கிளைமொழிகளைக் குறிப்பாக வட்டாரக் கிளைமொழிகளைக் குறிக்கின்றது12. கிளைமொழி கிளைமொழி பொதுப் பொருள்வடிவம்
-
தென்பாண்டி நாடுபெற்றம், ஆ, எருமை
-
குட்டநாடு தள்ளை, ஞெள்ளை தாய்
-
குடநாடுஅச்சன்தந்தை
-
கட்கா நாடுகையர்வஞ்சர்
-
சீதநாடு எலுவன், இகுளை, ஏடா, தோழிதந்துவை தம்மாமி
-
பூழிநாடுஞமலி, பாழி நாய், சிறுகுளம்
-
அருவாநாடுசெறு வயல், செய்
-
அருவாநாடுகேணி சிறுகுளம்
-
அருவாவடதலை நாடுகுட்டைகுறுணி (அளவு)
-
அருவாள்வடதலை நாடுஎகினம் புளி
-
வேணாடு கிழார் தோட்டம்
-
பாண்டிநாடுசெய் செறு
-
மலாடுஇகுளை தோழி
-
புனல்நாடுஆய்தாய் 13.
தொல்காப்பியர் பன்னிரண்டு வட்டார வழக்குகளைக் குறிப்பிட்டுள்ளார். அவ்வட்டார வழக்குகளுக்கு மொழி பாகுபாட்டு கோடுகளை வகுக்கும் முயற்சியாக உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டுகள் தந்துள்ளனர். ஒலியனியல், உருபனியல் நிலையில் வழங்கும் வேறுபாடுகள் சுட்டப்பட வில்லை. சொல் நிலையில் வழங்கும் தனிக்கூறுகள் மட்டுமே தெரியவருகின்றன. மொழி வட்டார நிலையில் வேறுபடும் தன்மையுடையது என்ற உண்மையைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார். உச்சரிப்பு வேறுபாடு பொருள் வேறுபாட்டைத் தோற்றுவிக்கவில்லை. எனவே உழற்சி என்று இதனையும் கூறுவர். மொழியில் உழற்சி காணப்படும். இதனைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
“குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல்” 14
“குறைத்தன ஆயினும் நிறைப்பெயர் இயல”15
ஒரு சொல்லுக்குத் தலை, இடை, கடை என மூன்று இடம் உண்டு. அம்மூன்றனுள் ஒன்றை எவ்விடத்துக் குறைக்க வேண்டுமோ, அவ்விடத்தை அறிந்து குறைத்துச் சொல்லுதல் வேண்டும்.
தாமரை-மரை (முதற்குறை)
ஓந்தி-ஓதி (இடைக்குறை)
நீலம்-நீல் (கடைக்குறை)
அவ்வாறு குறைக்கப்பட்ட பெயர்கள் முறையே தாமரை, ஓந்தி, நீலம் என்னும் முழுப் பெயர்ப் பொருளைத் தந்தன. பந்தல்-பந்தர், புத்தி-புந்தி போன்ற சொற்களையும் (போலி) கருதிப் பார்க்கலாம்.
செய்யாய்-முன்னிலை வினைச்சொல்
செய்யாய், உண்ணாய், கிடவாய், தாராய் போன்ற வினைச் சொற்கள் முன்னிலை வினை முற்றுக்களாகும். இச்சொற்களிலுள்ள- ஆய் என்னும் விகுதி கெட்டு செய், உண், கிட, தா என்னும் சொற்களாய் நின்று ஏவற் பொருளை உணர்த்தலும் உண்டு. இவற்றையும் உழற்சி வேறுபாடு என்று கூறலாம்.
செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
செய்என் கிளவி ஆகிடன் உடைத்தே” 16
கால அடிப்படையில் தோன்றும் வேறுபாடுகள் (Historical changes)
மொழி காலப்போக்கில் மாறும் தன்மை உடையது. இத்தகைய மாற்றங்கள் சொற்களில் ஏற்படலாம். ஒலியன், உருபன் அமைப்பில் தோன்றலாம். தொடர் அமைப்பிலும் பொருள் அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படலாம். கழகம் என்ற சொல்லுக்குப் பழைய பொருள் சூதாடுகின்ற இடம் என்பது. தற்போது கழகம் என்பது ஓர் அமைப்பைக் குறிக்கின்றது. நாற்றம் என்ற சொல் வாசனையைக் குறித்து தற்போது ‘தீயவாசனை’யைக் குறிக்கிறது. காலந்தோறும் மொழியில் தோன்றும் மாற்றங்களை ஏற்றுக் கொள்க என்று தொல் காப்பியர் குறிப்பிடுகிறார்.
“கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” 17
அவ்வக் காலத்திற்கு ஏற்ப சொற்கள் புதிதாகத் தோன்றி வழக்கிற்கு வரும். அப்பொருத்தமான சொற்களை நீக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். தொல்காப்பியர் காலத்தில் சகரத்தை மொழி முதலாகக் கொண்ட சொற்கள் இல்லை. ஆயினும் பின்னர்த் தோன்றிய சம்பு, சட்டி, சண்டை, சமர் என்பவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றைப் போலப் பழங்காலத்தில் வழங்கி இப்போது வழங்காதவற்றை நீக்கிவிடவேண்டும். அவை அழான், புழான் போன்றவை. இச்சூத்திரத்தின் வாயிலாகக் காலப்போக்கில் மொழியில் மாற்றங்கள் தோற்றம் என்ற உண்மையைக் கூறியுள்ளார். வரலாற்று ரீதியாக மொழியை ஆய்வதற்கு அடிப்படையாக இந்நூற்பா விளங்குகிறது.
சொல் கடன்பெறுதல்
காலந்தோறும் மொழி மாறும் தன்மை கொண்டது. இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணம் மொழித் தொடர்பு (language contact). ஒரு மொழி பிற மொழியோடு தொடர்பு கொள்வதை மொழித் தொடர்பு எனலாம். மொழித் தொடர்பின் காரண மாகப் பிறமொழிச் சொற்கள் அம்மொழியில் புகுந்துவிடும். இதனைக் கடன்பெறுதல் (linguistic borrowing) என்று மொழியியலார் கூறுவர். கடன் தரும் மொழியை donor language என்பர். கடன் பெறுதல் எல்லா மொழிகளிலும் இயல்பாக நடைபெறுகின்ற ஒரு மொழிச் செயல்பாடு. கடன் வாங்கிய மொழி அச்சொற்களைத் திருப்பித் தர வேண்டிய அவசியமில்லை. கடன்தரும் மொழியும் அச்சொல்லை இழந்து விடுவதுமில்லை. பொது வாக மொழிகள் தேவை காரணமாகவும், மதிப்பின் காரணமாகவும் கடன் சொற்களைப் பெற்றுக் கையாள்கின்றன. சொற்களை எல்லையற்று, அளவுக் கதிகமாகக் கடன் பெறுவதால் கடன்பெறும் மொழியில் மாற்றங்கள் தோன்றும். ஒலியமைப் பிலும், சொல்லமைப்பிலும் மாற்றங்கள் தோன்றலாம்.
தமிழ் மொழியில் ஸ், ஷ், ஹ், ஜ், க்ஷ் ஆகிய ஐந்து ஒலியன்களும் உபரி ஒலியன்கள் என்பர். இவ்வொலியன்கள் தமிழ் மொழிக்குரியவை அல்ல. இவ்உபரி ஒலியன்கள் தமிழில் வழங்கக் காரணம் என்ன? வடமொழி, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களைக் கையாள்வதால்தான். இத்தகைய மொழித் திட்டமிடுதல் குறித்தும் தொல்காப்பியர் எச்சவியலில் குறிப்பிடுகிறார்.
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” 18
வடசொல்லாகிய சொல் வடவெழுத்துக் களின் நீங்கி இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தான் இயன்ற சொல்லாம். இங்குத் தொல் காப்பியர் வட சொற்களுக்கே விதி வகுத்திருப் பினும் வடமொழி தவிர வேறெந்த மொழியாக இருப்பினும் அச்சொற்களையும் தமிழ் மொழியின் ஒலிச் சீர்மைக்கேற்ப மாற்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கொள்ள வேண்டும்.
தொல்காப்பியர் கூறும் உலக வழக்கும் செய்யுள் வழக்கும்
தொல்காப்பியர் உலக வழக்கு, இலக்கிய வழக்கு ஆகிய இரண்டின் அடிப்படையில் இலக்கணம் கூறுவதாகப் பனம்பாரனார் கூறுகிறார். தொல் காப்பியரும் தம் இலக்கணத்தில் உலக வழக்கை வழங்கில் மருங்கு 19 என்றும், இலக்கிய வழக்கைச் செய்யுள் வழக்கு என்றும் கூறுமிடங்கள் பல20 . “அவர் உலக வழக்கு என்பது, உலகிலுள்ள தரமான பேச்சுவழக்கு-உயர்ந்தவர் வழக்கு- பிழையற்ற நல்ல வழக்காறு ஆகும். கொச்சை மொழி, குறுமொழி, சிதைவுற்ற வழக்கு, பிழைபட்டவை ஆகியவற்றை அவர் உலக வழக்கு என ஏற்கவில்லை.
“செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
மெய்பெறக் கிளந்த கிளவி எல்லாம்
பல்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது
சொல்வரைந்து அறியப் பிரித்தனர் காட்டல்” 21
தொல்காப்பியர் எச்சவியலில் பல்வேறு மொழி வேறுபாடுகளை (language variations) விவரிக்கிறார். நில அடிப்படையில் மொழி வேறு படுதல்; சமுதாயப் படிநிலைகளின் அடிப் படையில் மொழி வேறுபடுதல்; நடையியல் அடிப் படையில் மொழி வேறுபடுதல் ஆகியவற்றை விவரிக்கிறார்.
முடிவுரை
தொல்காப்பியர் தனது மொழியியல் சிந்தனைகளை இடம், காலம், சொற்கலப்பு எனப் பல்வேறு படிநிலைகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்கிறார். சோம்ஸ்கி போன்ற தற்கால மொழியியல் அறிஞர்களோடு தொல்காப்பியரின் மொழியியல் சிந்தனைகளை ஆராய்கிறபோது தொல்காப்பியரின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான மொழியியல் அறிவைப் புரிந்து கொள்ள முடியும்.
அடிக்குறிப்புகள்
1.தொல்காப்பியம், சொல்லதிகாரம், 151
2.முத்துச் சண்முகம், மாற்றிலக்கணம் மாற்றிலக்கணம். ப.2
3.தொல்காப்பியம், எச்சவியல்,
4.தொல்காப்பியம், சொல்லதிகாரம், 152
5.மேலது, 157
6.மேலது, 11
7.தொல்காப்பியம், சொல்லதிகாரம் 442
8.மேலது, 443
9.மேலது,.1
10.சுவாமிநாதர் தேசிகர், இலக்கணக் கொத்து.84
11.தொல்காப்பியம், சொல்லதிகாரம் 400
12.சீனிவாசவர்மா, 1977: 103
13.சீனுவாசவர்மா, 1977: 107-108
14.தொல்காப்பியம், சொல்லதிகாரம் 453
15.மேலது, 454
16.மேலது 450
17.மேலது 452
18.தொல்காப்பியம், எச்சவியல், 40
19.தொல்காப்பியம், எச்சவியல் 22
20.தொல்காப்பியம், சொல்லதிகாரம், 946
21.மேலது, 463
பார்வை நூல்கள்
1.அகத்தியலிங்கம், ச., தமிழ்மொழி அமைப்பியல், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம் (2001).
2.சீனிவாசவர்மா, கோ., கிளைமொழியியல், அனைத் திந்தியத் தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலைநகர், (1977).
3.சீனிவாசவர்மா, கோ., இருமொழியம், அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலைநகர், (1977).
4.தமிழண்ணல், தொல்காப்பியர், சாகித்ய அகாடெமி வெளியீடு, புதுதில்லி (2009).
5.தொல்காப்பியம் இளம்பூரணம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (1923).
6.தொல்காப்பியம்-சொல்லதிகாரம் மூலமும் உரையும், கதிர் பதிப்பகம், திருவையாறு, (2011).
7.தொல்காப்பியம்- நச்சினார்க்கினியம், கழக வெளியீடு (1952).
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்.ச.சரவணத்தாய்,
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.61.
தொல்காப்பியரின் பார்வையில் மொழியியல் சிந்தனைகள் PDF


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

