Wednesday, September 16, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home சிறுகதைகள் குடும்பச்சிறுகதைகள் புழுதி|சிறுகதை|முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்

புழுதி|சிறுகதை|முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்

புழுதி -சிறுகதை
       பள்ளிக்குப் பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் தனியார் வேன் ஒன்று சாலையைக் கடந்து சென்றது. அதன் சக்கரங்கள் கிளப்பிய செம்மண் புழுதி, காற்றில் சுழன்று சாலையோர வீடுகளின் வாசல்களை நோக்கிப் படர்ந்தது. அந்த வேகத்துக்குச் சற்றும் குறையாமல் ஒரு ஸ்கூட்டர் வந்து வெள்ளையம்மாளின் வீட்டு முன்வாசலில் சடக்கென்று நின்றது. ஸ்கூட்டரிலிருந்து இறங்கிய பார்கவியின் முகம் வியர்வையாலும் பதற்றத்தாலும் கசங்கியிருந்தது. பின்னால் அமர்ந்திருந்த மூன்று வயது மகனை அவசரமாக இறக்கிவிட்டாள்.
     “அம்மா… இன்னைக்கு எனக்கு மீட்டிங் இருக்கு. பெரியவளுக்கு அப்பாவிடம் சாப்பாடு கொடுத்துவிடு. எனக்கு இரவு ஏழு மணி கூட ஆகலாம். முடிஞ்சதும் வந்து இவனைக் கூட்டிக்கிட்டுப் போறேன்.” ஒரு கணம்கூட நிற்காமல்,
          “போய்ட்டு வரேன்!” என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டரில் ஏறினாள். வண்டி சாலையில் பறந்தது. வெள்ளையம்மாள் மகள் சென்ற திசையைப் பார்த்தபடியே நின்றாள்.
         “பாவம்… எவ்வளவு ஓட்டம்!” அருகில் நின்றிருந்த எதிர்வீட்டு ராசாத்தி பெருமூச்சுவிட்டாள்.
          “என்ன வெள்ளையம்மா இது? உன் மகள் தினமும் இவ்வளவு தூரம் வந்து பையனை இங்கே விட்டுட்டுப் போறா. பெரியவளை வேற பள்ளிக்கு அனுப்புறா. வேலைக்குப் போறா. ரெண்டு பக்கமும் ஓட்டமும் அலச்சலுமா இருக்கா! இதைப் பார்க்க எனக்கே கஷ்டமா இருக்கு.”
          வெள்ளையம்மாள் பேரனைத் தூக்கி மடியில் அமர வைத்தாள். அது செவல்காட்டு மண் வாசம் கமழும் கிராமம். வயல்வெளி வரப்புகளின் ஓரமாகச் செல்லும் நீரோடை சலசலவென்று ஓடிக்கொண்டிருந்தது. வேப்பமர இலைகள் காற்றில் உரசும் சத்தமும், தூரத்தில் மாடுகளின் கழுத்து மணியோசையும் சேர்ந்து அந்த ஊருக்கே உரிய அமைதியை உருவாக்கியிருந்தன.
   அந்த அமைதிக்குள் வெள்ளையம்மாளும் முத்துச்சாமியும் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்தனர்.
     “இதைவிட நீயும் மாமாவும் அவள்கூடவே போய் இருந்திருக்கக் கூடாதா?” என்றாள் ராசாத்தி. “அவளுக்கு எவ்வளவு பெரிய ஒத்தாசையா இருக்கும்!” வெள்ளையம்மாள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
          “நீ சொல்றது சரிதான் ராசாத்தி. ஆனா… நாங்க அப்படி போய் இருந்ததுல வந்த கஷ்டத்தைத்தான் இப்போ நிவர்த்தி செஞ்சுட்டு இருக்கோம்.” வேப்பமரத்தடியில் கட்டிலில் அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்த முத்துச்சாமி, அதை மடித்து வைத்துவிட்டு அவர்களிடம் வந்தார். அவரைப் பார்த்ததும் பேரன் குதூகலித்தான். வெள்ளையம்மாள் ஊட்டிய பழத்துண்டை வாயில் வைத்திருந்தவன், அதைத் தன் பிஞ்சு விரல்களால் மெதுவாக எடுத்து முத்துச்சாமியின் வாயருகே நீட்டினான்.
          “தாத்தா… ஊஊ!” முத்துச்சாமியின் முகம் மலர்ந்தது.
    “ஆஹா! என் பேரன் ஊட்டுற பழமா? இது ரொம்ப ருசியா இருக்குமே!”என்று சொல்லி அந்தப் பழத்துண்டை வாங்கிச் சுவைத்தார்.
          “ம்ம்ம்… சூப்பர்!” பேரன் சிரித்தான். ராசாத்தியும் புன்னகைத்தாள்.
          “பாரு வெள்ளையம்மா. பேரனுக்காக இவ்வளவு பாசம். அப்புறம் ஏன் தனியா இருக்கணும்னு சொல்றீங்க?” முத்துச்சாமி மெதுவாகச் சிரித்தார்.
          “தனியா இருக்கறது பாசம் இல்லாம இருக்கறதுக்காக இல்ல ராசாத்தி.”
அவர் சற்று நேரம் நின்று,
   “நாங்க பிள்ளைகளோட சேர்ந்து இருந்தப்போ, வாழ்க்கையே எங்களுக்குத் தெரியாம மாறிப்போச்சு. காலையில எழுந்தவுடனே அவங்க வீட்டுப் பணிதான். பேரப்பிள்ளைகளைக் கவனிப்பது, சமைப்பது, வீட்டைப் பார்த்துக்கொள்வது… ஆரம்பத்தில பாசமா இருந்தது. நாளாக நாளாக அது கடமையா மாறிடுச்சு.” வெள்ளையம்மாள் மெதுவாகத் தொடர்ந்தாள்.
    “நாங்க ஏதாவது நம்ம விருப்பத்துக்கு செஞ்சா, ‘அப்படிச் செய்யாதீங்க’ன்னு சொல்லுவாங்க. பேரப்பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்தா, ‘அதிகமா செல்லம் கொடுக்காதீங்க’ன்னு சொல்லுவாங்க. உடம்பு கொஞ்சம் முடியாமப் போனா… நாமே நமக்குப் பாரமா தோண ஆரம்பிச்சுடும்.”  அவள் பெருமூச்சுவிட்டாள்.
    “அதான், நாங்க தனியா வந்துட்டோம்.” ராசாத்தி அவர்களைப் பார்த்தாள்.
 “அப்படியென்றால் இப்போ பார்கவியின் பையனைப் பார்த்துக்கொடுக்கிறீங்க. ரவிக்கு சாப்பாடு கட்டிக் கொடுக்கிறீங்க. இதுவும் அதே கடமைதானே?” முத்துச்சாமி சிரித்தார்.
“ஆமாம். ஆனா இப்போ ஒரு வித்தியாசம் இருக்கு.”
“என்ன?”
   “இப்போ நாங்க யாரோட வீட்டிலும் வசிக்கல. எங்க வீட்டுலதான் இருக்கோம். எங்க நேரம் எங்களுடையது. ஆனா, பிள்ளைகளுக்கு உதவி தேவைப்படும்போது மட்டும் ஓடிப்போறோம். அதில எங்களுக்கு மனக்கசப்பு இல்ல.” அந்த நேரத்தில் வாசலில் பைக் சத்தம் கேட்டது. ரவிதான். அலுவலகத்திற்குக் கிளம்பும் அவசரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு,
          “அம்மா! சாப்பாடு ரெடியா? ரெண்டு டிபன் பாக்ஸ் கட்டிட்டீங்களா? சீக்கிரம் குடுங்க!” என்றான். வெள்ளையம்மாள் உடனே உள்ளே சென்று இரண்டு பைகளுடன் வந்தாள்.
          “இதோ…” ரவி அவற்றை வாங்கிக்கொண்டான். ராசாத்தி சிரித்தபடி,
          “என்ன ரவி? உன் மனைவி சமைக்க மாட்டாளாக்கும்?” என்றாள். ரவி சற்றும் நிற்காமல்,
          “அத்தை… அவளுக்குக் காலையிலேயே வேலை. நேரமே கிடையாது. இப்ப எனக்கும் நேரமில்லை. போறேன்!” என்று பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். அவன் சென்றதும் ராசாத்தி வெள்ளையம்மாளை நோக்கிப் பார்த்தாள்.
          “பார்த்தியா? உன் மகள் பையனை விட்டுட்டுப் போறா. மகன் சாப்பாட்டை வாங்கிட்டுப் போறான். அப்புறம் மாமா சைக்கிள்ல அவங்க பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடத்துக்குச் சாப்பாடு எடுத்துட்டுப் போறாரு. இதெல்லாம் இருந்தும் நீங்க ‘சுதந்திரம்’ன்னு பேசுறீங்களே?” முத்துச்சாமி சிரித்தார்.
  “சுதந்திரம் என்றால் பாசத்தைத் தூக்கி எறிவதா?” ராசாத்தி அமைதியானாள்.
    “எங்க பிள்ளைகள் எங்களைத் தேவைப்படுறாங்க. அதே நேரம் எங்களுக்கும் அவங்க தேவைப்படுறாங்க. இரண்டையும் எப்படி பிரிக்க முடியும்?” அந்தச் சொற்களுக்குப் பிறகு சிறிது நேரம் அமைதி நிலவியது. அப்போது வெள்ளையம்மாள் திடீரென்று,
          “ராசாத்தி… ஒரு விஷயம் சொல்றேன். அதுக்கப்புறம் நீயே சொல்லு நாங்க ஏன் இப்படி ஓடுறோம்னு.” என்றாள்.
          “என்ன?” “போன வாரம் ரவியோட பையனுக்குப் பள்ளிக்கூடத்துல ‘குடும்ப மரம்’ வரையச் சொல்லியிருக்காங்க.”
          “அப்புறம்?”  “அவன் வீட்டுல இருந்து வரைஞ்சுட்டுப் போயிருக்கான். அப்போ டீச்சர் அவனைப் பார்த்து, ‘இதுல உன் அம்மா, அப்பா, நீ எல்லாம் இருக்கீங்க. தினமும் உனக்குச் சாப்பாடு எடுத்துட்டு வர்றாரே உன் தாத்தா… அவரையும் பாட்டியையும் ஏன் வரையல?’ன்னு கேட்டிருக்காங்க.” முத்துச்சாமியின் முகத்தில் புன்னகை தோன்றியது.
          “அதுக்கு அவன் என்ன சொன்னான்னு தெரியுமா?” ராசாத்தி தலையசைத்தாள்.
 “‘தாத்தாவும் பாட்டியும்தான் இந்த மரத்துக்கு வேர்கள்’ன்னு சொல்லியிருக்கான்.” ராசாத்தியின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. வெள்ளையம்மாள் தொடர்ந்தாள்.
          “டீச்சர் ஏன் அப்படின்னு கேட்டிருக்காங்க.”
“அதுக்கு அவன்…” அவளது குரல் தழுதழுத்தது.
          “‘வேர்கள் கண்ணுக்குத் தெரியாது. ஆனா வேர்கள் இல்லன்னா மரம் இருக்காது’ன்னு சொல்லியிருக்கான்.” முத்துச்சாமி தலையைக் குனிந்தார். சில நொடிகள் யாருமே பேசவில்லை. பின்னர் அவர் மெதுவாகச் சொன்னார்.
    “அந்த ஒரு வார்த்தை போதும் ராசாத்தி. நாங்க எவ்வளவு தூரம் போனாலும், இந்தப் பிள்ளைகளோட வாழ்க்கைக்குள்ள நாங்க ஏற்கனவே வேரா பதிஞ்சுட்டோம்.”
     வெள்ளையம்மாளின் கண்கள் கலங்கின. மடியில் இருந்த பேரனின் தலைமுடியை மெதுவாக வருடினாள். “பெத்த பிள்ளைகள் எங்களைப் பாரமா நினைச்சாலும் பரவாயில்லை. இந்தக் குழந்தைகள் எங்களைத் தேவைப்படுறாங்கன்னு நினைக்கிற வரைக்கும்… நாங்க எப்படி விலகி நிற்க முடியும்?” அந்த நேரத்தில் ஊருக்குள் புதிதாகப் போடப்பட்டிருந்த தார்ச்சாலையில் ஒரு வண்டி வேகமாகச் சென்றது. சக்கரங்கள் சாலையோரச் செம்மண்ணைக் கிளப்பின. புழுதி காற்றில் சுழன்று வீட்டு வாசலை நோக்கி வந்தது. அதில் ஒரு சிறு துகள் வெள்ளையம்மாளின் கையில் வந்து விழுந்தது. அவள் அதை விரலால் மெதுவாகத் தொட்டாள்.
  “பாரு ராசாத்தி…” அவள் அந்தச் செம்மண் துகளைப் பார்த்துக்கொண்டே சொன்னாள்.
          “இந்தப் புழுதி மாதிரிதான் பாசமும்.” ராசாத்தி அவளைப் பார்த்தாள்.
          “நாம் எவ்வளவு தூரம் விலகிப் போனாலும், காத்துல பறந்து வந்து எங்காவது     ஒரு மூலையில ஒட்டிக்கிடக்கும். ‘இனி யாருக்காகவும் ஓடக்கூடாது’ன்னு முடிவு செய்தாலும், பிள்ளைகளுக்கு ஒரு கஷ்டம்னு தெரிஞ்சா மனசு கேட்காது.” அவள் பேரனை அணைத்துக்கொண்டாள்.
          “இங்க நான் சமைச்சுக்கிட்டு இருந்தாலும், ‘அங்க என் பேரப்பிள்ளைகள் சாப்பிட்டாங்களா?’ன்னு என் மனசு அலைபாயுது. அதை என்னால எப்படி நிறுத்த முடியும்?” முத்துச்சாமி மெதுவாகத் தலையசைத்தார்.
  “நாங்க தனியா இருக்கிறோம். எங்களுக்கான வாழ்க்கையை வாழ்கிறோம். ஆனா பாசத்தில மட்டும் தனியா இருக்க முடியல.” அவர் பேரனின் கையைப் பிடித்தார்.
     “இந்தக் குழந்தைகள் எங்க வாழ்க்கைக்குக் கடமையை மட்டும் கொண்டு வரல. அர்த்தத்தையும் கொண்டு வந்திருக்காங்க.” ராசாத்தி நீண்ட நேரம் அவர்களைப் பார்த்தாள்.
          “என்னவோ… உங்க மனசைப் புரிஞ்சுக்க யாராலும் முடியாது போங்க.” என்று கூறியவள் மெதுவாகத் திரும்பி நடந்தாள். சில அடிகள் சென்றதும், மீண்டும் சாலையைப் பார்த்தாள். சற்றுமுன் வண்டி கிளப்பிய புழுதி இப்போது அடங்கியிருந்தது. ஆனால் காற்றில் அதன் வாசம் இன்னும் இருந்தது. புரிந்தும் புரியாதவளாய் மெல்லிய புன்னகையுடன் தன் வீடு நோக்கி நடந்தாள் ராசாத்தி.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்,
 உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
எஸ்டிஎன்பி மகளிர் வைணவக் கல்லாரி,
குரோம்பேட்டை,  சென்னை 44.

புழுதி|சிறுகதை PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »