கழிவறையின் கதவு

கழிவறையின் கதவு

வகை : சிறுகதை

    “அம்மா பேஸ்ட் பிரஷ், சோப்பு ஷாம்பு துண்டெல்லாம் எடுத்து வச்சிட்டியா…” என்றான் கதிர். “எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஆமாம்! நீ ஏன் இப்படி குட்டிப் போட்ட பூனையாட்டம் குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருக்க. ஒரு இடத்துல போயி உட்காருடா” என்றாள் கதிரின் அம்மா ரஞ்சிதம். அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு ஷோபாவில் அமர்ந்தான் கதிர். அவனின் கையில் இருந்த ஈரம் அம்மா ரஞ்சிதத்தின் உள்ளங்கையை நனைத்தது. மகனின் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டாள். அவன் தலைமுடிக்குள் தனது ஐந்து விரல்களையும் சீப்பு போல செலுத்தி கோதினாள். “உனக்கு என்னடா பயம். நான் அப்பா எல்லோரும் இருக்கோமல்ல” என்றாள்.

“நான் சென்னைக்கு இன்டர்வியூக்குப் போய்த்தான் ஆகனுமா? இங்கயே.. உங்க கூடயே ஏதாவது வேல பாத்திட்டு இருந்திர்ரனே”

“இப்பத்தான் முதல்ல இன்டர்வியூக்குப் போற.. நீ பாஸ் பண்ணனும். வேலைக்குப் போகணும். அப்பறம் பாத்துக்கலாம். இப்படி ஒவ்வொரு இன்டர்வியூக்கா போயி பழக்கப்பட்டாதான் உனக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். இந்த உலகம் ரொம்ப பெருசுடா. நீ நாலு இடத்துக்குப் போனாதான் நாலு மக்கள பாக்க முடியும்”

போதும்மா.. என்று கையெடுத்துக் கும்பிட்டான். அவனின் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு கொட்டி “ஒழுங்கா இன்டர்வியூக்குப் போயி வேலைக்கு போற வழியப் பாரு” என்று சொல்லிவிட்டு சமயலறைக்குள் புகுந்தாள் ரஞ்சிதம்.  ரெங்கநாதன் ரஞ்சிதாவிற்கு ஒரே மகன் கதிர். இன்ஜினியரிங் முடித்து விட்டான். பிறந்ததிலிருந்து அம்மா அப்பாவை பிரிந்தது இல்லை. அதிலும் படிப்புக்கூட காலை சென்று மாலை வீடு திரும்பும்படியாக உள்ள கல்லூரிலேயே சேர்த்துப் படிக்கவைத்தார்கள். அம்மா அப்பாவுக்கு ரொம்ப செல்லம். மகனை நாலு சுவத்துக்குள்ளே அடைத்து வைத்திருப்பது ரெங்கநாதனுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளையை எப்படியாவது வெளியுலகத்திற்குப் பழக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் அர்த்தம் புரியும் என்று நினைத்தார். எப்படியாவது அவனை சென்னைக்கு வேலைக்கு அனுப்பி விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மகனின் சர்ட்டிபிகேட் அனைத்தும் பையில் எடுத்து வைத்து விட்டார். மூஞ்சை தொங்கப்போட்டு உட்காந்திருக்கும் மகனின் பக்கத்தில் வந்து உட்காந்தார். அன்போடு அவனின் தோளில் கையைப் போட்டார்.

“என்ன கதிர் ஒரு மாதிரியா இருக்க?” என்றார் ரெங்கநாதன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா” என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக்கொண்டான் கதிர். ஆனாலும் மகனை ரெங்கநாதன் விடுவதாக இல்லை. அவன் கேட்காமலே இன்டர்வியூவில் எப்படியெல்லாம் நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.

“பஸ்சுல ஏறினவுடனே முன்னால பின்னால பக்கத்துல ஒருமுறை சுத்திப்பாரு. யாராவது திருடனுங்க மாதிரி இருக்காங்களான்னு. அப்படி உனக்கு டவுட்டா இருந்துச்சுன்னா டிரைவர் சீட்டுக்குப் நேர்ரெதிர் சீட்டுல போய் உட்காந்துக்கு. அதான் உனக்கு சேப். பஸ்சுக்குத் தேவையான பணத்தை மட்டும் சட்டை மேல் சோப்பில் எடுத்து வைச்சுக்கோ. அடிக்கடி பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸ்ஸ எடுத்து எடுத்துப் பாக்காதே. பேக்கை மடிமீது வச்சு உன்னோட கையை பேக்குல இருக்குற தோள்ல மாட்டுற நாடாவுக்குள் உள்ளவிட்டு பிடிச்சுக்கோ. பஸ்சு கொஞ்ச தூரம் போன பின்னாடி உனக்கு சேப்புன்னு தெரிஞ்ச பிறகு தூங்கு. நீ தூங்கனாலும் உன்னோட உடம்பை யாராவது தொட்டாலோ, சத்தமிட்டாலோ உடனே எழுந்திருச்சிக்கோ. விடியற்காலை மூணு முப்பதுகெல்லாம் தாம்பரம் போயிடும். வாட்ச்ல மூணு மணிக்கு அலாரம் வச்சிட்டு சரியா எழுந்திக்கோ. அப்பவே ராஜன் மாமாவுக்கும் போன் செஞ்சு பஸ்ஸ்டாண்ட்க்கு வரச்சொல்லிரு. வீட்டுக்குப் போனவுடனே கொஞ்சநெரம் நல்லா தூங்கு. காலையில எழுந்திருச்சி தலைக்கு குளி.  சாண்டல் கலர் பேண்ட் எடுத்து வச்சிருக்கன். அத போட்டுக்கு.. அதுக்கு மேட்சா டார்க் புல்லெண்ட் சர்ட் எடுத்து அயன் பண்ணி வச்சிருக்கேன். அத டக்இன் பண்ணிக்கு”

“என்னங்க..என்னங்க..” சமையறையிலிருந்து ரெங்கநாதனை ரஞ்சிதம் அழைத்தாள். மனைவியின் பதிலுக்கு எழுந்து போனவன் என்ன நினைத்தானோ! மீண்டும் கதிரின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

“சொல்ல மறந்துட்டன். குளிக்கிறதுக்கு முன்னாடி தலைக்கு கொஞ்சம் வௌக்கெண்ணெய வச்சுக்கோ. அளவா சாப்பிட்டுக்கோ. கொஞ்சமா தண்ணீர் குடி. தண்ணீர் அதிகமா குடிச்சின்னா ரெஸ்ட்ரூம் அடிக்கடி போய்ட்டே இருப்ப. அதுமட்டுமல்லாம பயத்துல கைக்கால் எல்லாம் வியர்க்கும்” என்று சொல்லிக்கொண்டே போனார் ரெங்கநாதன். அதற்குள் சமையல்கட்டிலிருந்த வெளியே வந்திருந்தாள் ரஞ்சிதம்.

“என்னங்க.. நான் கூப்பிட்டுட்டே இருக்கேன். இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க. போதுங்க அவனை தனியா விடுங்க. அவனே ரொம்ப பயந்துபோய் இருக்கான். இதுல நீங்க வேற.” என்றாள். நிறைய அறிவுறுத்தலுக்குப் பின் கதிர் தயாராக இருந்தான்.

சேலம் பஸ் ஸ்டாண்டில்  கதிரை சென்னை பேருந்தில் டிரைவருக்கு எதிர் சீட்டில் உட்கார வைத்தார் ரெங்கநாதன். பஸ் எடுக்கும்வரை ஜன்னல் வழியாக மகனிடம் உரையாடிக்கொண்டிருந்தார். கதிரின் பக்கத்தில் வயதான முதியவர் ஒருவர் வந்து உட்காந்தார். வெள்ளை வேட்டி சட்டையும் நரைத்த முடியும் கண்ணாடியும் அவர் அணிந்திருந்தார். இருவரும் பரஸ்பரம் சிரித்துக்கொண்டார்கள். ஒருவழியாக பஸ் சேலத்தை தாண்டியது. கண்டக்டர் அனைத்து சீட்டுகளையும் கொடுத்து லைட்டை அணைத்து அவரது சீட்டில் போய் உட்காந்தார். பஸ் ஆத்தூரை தாண்டியதும் கதிர் கண்ணயர்ந்தான். பஸ்ஸில் மெல்லியதாக பழைய பாடல்கள் இசைத்துக்கொண்டிருந்தது. கதிரின் தூக்கத்தில் கூட நாளைய இண்டர்வியூ பற்றிய கனவே வந்தது. அவ்வவ்போது முழித்து ஜன்னலை திறந்து எந்த ஊர்? என்று பார்த்துக்கொண்டான். மீண்டும் உறங்க தயாரானான். இப்போது பஸ் கள்ளக்குறிச்சியைத் தாண்டியிருந்தது. அடிவயிறு ஏதோ வலிக்கின்ற மாதிரி உணர்வு. காலையில் சாப்பிட்ட சிக்கனும் மட்டன் வறுவலும் வேலையைக் காட்ட ஆரமித்திருந்தது.  சாப்பிட்ட அனைத்தும் கரைந்து வெளியே வர துடித்துக்கொண்டிருந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் வீட்டில் செய்த சிக்கனையும் மட்டனையும் ஒருபிடி பிடித்தான். கதிருக்கு அப்போது தெரியவில்லை. இப்படியெல்லாம் நடக்குமென்று. முடிந்தவரை தன்னை அடக்கிக்கொண்டான். ஜன்னலை திறந்து காற்றை முகத்தில் வாங்கிக்கொண்டான். ஏதோ இப்போது கொஞ்சம் வயிறு லேசானதாய் போன்று இருந்தது.

“தம்பி.. காத்து ரொம்ப அடிக்குது. ஜன்னலை கொஞ்சம் மூடுறியா” என்றார் பக்கத்தில் இருந்த பெரியவர்.  கதிருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வேறுவழியில்லாமல் கதவை மூடினான். மீண்டும் வயிறு ராகம் பாட ஆரமித்தது. எப்போது வேண்டுமானாலும் வயிற்றில் உள்ள கழிவு வெளியேற முண்டியடித்துக்கொண்டிருந்தது. அவ்வவ்போது ஜன்னல் வழியாக அடுத்த பஸ்ஸ்டாப் எப்போது வருமென்று பார்த்துக்கொண்டான்.  பேருந்து உளுந்தூர்பேட்டை பஸ்ஸ்டாண்ட்டினுள் போகாமல் வெளியே நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு மின்னல் வேகத்தில் பறக்கத்தொடங்கியது. “இங்க நிறுத்தியிருந்தா டிரைவர்கிட்ட சொல்லிட்டு பாத்ரூம் போய்ட்டு வந்திருக்கலாம். இப்படி ஆச்சே! கடவுளே என்ன காப்பாத்துப்பா! பஸ்சுல ஏதாவது ஆச்சுன்னா நாத்தம் அடிச்சு எல்லாரும் என்னயே பாப்பாங்களே! ரொம்ப அவமானமா போயிடுமே! ஐயோ இந்த வயிறு வேற கேட்க மாட்டங்குதே…” அடிவயிற்றில் கையை வைத்துக்கொண்டு மனதிற்குள்ளே ஏதோதோ நினைத்துக்கொண்டான்.

“தம்பி என்னாச்சுப்பா ஒருமாதிரியா இருக்க?” என்றார் அந்தப் பெரியவர்.

“ஒன்னுமில்ல” என்ற ஒற்றைப் பதிலோடு நிறுத்திக்கொண்டான் கதிர்.

“சென்னைக்கு எதுக்குப் போற? சொந்தகாரங்க வீட்டுக்கா இல்லை வேலைக்குப் போறியா?” என்றார்

“இன்டர்வியூக்குப் போறேன்”

“என்ன கம்பெனி? உள்நாட்டு கம்பெனியா வெளிநாட்டு கம்பெனியா? சம்பளம் எவ்வளவு தருவாங்க?”

“இன்டர்வியூக்குப் போனாதான் தெரியும். கம்பெனி பத்தி அவ்வளவா எனக்கு தெரியல”

“என்னாப்பா நீ! வேலைக்குப் போற கம்பெனி பத்தி முழுசும் தெரிஞ்சு வச்சுக்க வேணாமா? அப்பதான அவுங்க கேட்குற கேள்விக்குச் சரியா பதில் சொல்ல முடியும்”

பெரியவரின் கேள்விக்கு எந்தவொரு பதிலையும் தராமால் முகத்தை மட்டும் அவருக்கு காட்டினான். அவன் இருந்த அச்சமயத்தில் அம்முகம் சிரிப்பைக் காட்டியதோ இல்லை கோபத்தைக் காட்டியதோ தெரியவில்லை. ஆனால் பெரியவரே ஏதோ புரிந்தவர் போல கதிரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“தம்பி வாந்தி வரமாதிரி இருக்கா. என்கிட்ட ஒரு பிளாஸ்டிக் பை இருக்கு. உனக்கு தரேன். நீ வாந்தி எடுத்துட்டு வெளிய தூக்கிப் போட்டுடு” என்றார். அவனுக்குத்தானே தெரியும் என்ன பிரச்சனையென்று. எப்படி சொல்வது? என்று திருதிருவென்று முழித்தான் கதிர். அவனால் இப்பொழுது ஒன்றுமே செய்ய முடியவில்லை.  பின்பக்க இரண்டு தொடைகளையும் இறுக்கி மூச்சை இழுத்து கீழ் வயிற்றை மேல்வயிற்றோடு சேர்த்து பிடித்துக்கொண்டான். கதிரால் அதிகநேரம் தம்கட்ட முடியவில்லை. முகமெல்லாம் வேர்த்து வியர்த்தது. வயிற்றில் உள்ள குடலே வெளியே வந்துவிடும் போலிருந்தது. நினைக்ககூடாததை எல்லாம்நினைத்தான். மூச்சை இழுத்து இழுத்து வயிற்றை தம்கட்டி மயக்கமே வருவதுபோல் ஆனது. இதற்குமேல் பொறுக்கமாட்டாதவனாய் என்ன ஆனாலும் பரவாயில்லை டிரைவரிடம் சொல்லி வண்டியை ஓரங்கட்டச் சொல்ல வேண்டியதுதான் என்று பெரியவரைத் தள்ளிக்கொண்டு டிரைவர் பக்கத்தில் போய் நின்றான் கதிர். இப்பொழுது பஸ் விழுப்புரம் பஸ்ஸாண்டிற்குள் சென்றது. கதிருக்கு அப்பாடா என்றிருந்தது. பெரியவரிடம், “ஐயா.. நான் வந்திடுறேன். கொஞ்சம் பாத்துக்குங்கோ” என்று சொல்லிவிட்டு பஸ் நின்றவுடன் அவசர அவசரமாக பாத்ரூமிற்குள் ஓடினான்.

அந்த பாத்ரூமில் அனைத்து கதவுகளும் மூடியிருக்க. கடைசில இருக்குற ஒரு ரூம் கதவு மட்டும் தொறந்திருந்தது. மூடியிருந்த கதவுக்கு நேரே ஒருஒரு ஆளாய் நின்றிருந்தார்கள். திறந்திறந்த கதவுக்கு நேராய் யாருமில்லை. வேர்த்து விருவிருத்துப் போன அவசரத்தில் நேராகப் போய் கடைசிக்கதவைத் திறந்தான் கதிர். உள்ளே ஒர் ஆள் உட்காந்திருந்தார்.

“கதவை மூடிட்டு போப்பா..” என்றார் உள்ளே இருந்தவர். கதவைச்சாத்தி விட்டு வெளியே காத்திருந்தான். ரொம்ப நேரம் வயிற்றுக்கழிவை அடக்கி வச்சிருந்ததனால அவனுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. தலை சுற்றியது. நெஞ்சு படபடத்தது. அப்போது உள்ளே இருந்தவர் வெளியே வந்தார். டக்கென்று உள்ளே ஓடி கதவின் லாக்கைப் போட்டுவிட்டு காலை விரித்து அமர்ந்தான். வயிற்றில் உள்ள அனைத்தும் கீழே தள்ளியது. கொஞ்சகொஞ்சமாய் வந்து கொண்டே இருந்தது. உடபெல்லாம் வியர்வை. பனியன் சட்டையெல்லாம் நனைந்து போயிருந்தது. உடம்பு வளைந்து தலைகுனிந்து போயிருந்ததனால் லேசான மயக்கமும் மூச்சும் வாங்கியது. கொஞ்சநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான். வயிற்றில் இருந்து முழுச்சுமையையும் இறக்கி வைத்தார்போன்று இருந்தது கதிருக்கு. சரியாக பேண்ட் ஜிப்பை மாட்டிக்கொண்டு கதவைத் திறக்க முயன்றான். அப்பொழுதுதான் கதவின் லாக்கை கவனித்தான். கதவில் இருக்கக்கூடிய லாக்கில் கைப்பிடி உடைந்திருந்தது. கதிர், உள்ளே போன அவசரத்தில் வெளியே நீட்டிக்கொண்டிருந்த லாக்கை உள்ளே தள்ளியவுடன் அருக்காலில் உள்ள லாக்கில் புகுந்து கொண்டது. இப்போது அருக்காலில் உள்ள லாக் வெளியே வந்தால்தான் கதவை திறக்க முடியும். ஆனால் லாக்கில் உள்ள கைப்பிடி உடைந்து போயிருப்பதனால் அருக்காலில் உள்ள பிடியை வெளியே தள்ள முடியவில்லை.

அதுவரை ஏதோ கழிவறையில் இருக்கின்றோம் என்றுதான் நினைத்திருந்தவன் கதவு திறக்க முடியாமல் போனாதால் மனம் பதறியது. குப்பென்று முகமெல்லாம் வியர்த்தது.  சின்ன பெட்டிக்குள் அடைபட்டு கிடந்த பிணம்போல் ஆனான். மூன்றடி அளவே உள்ள அந்த அறையில் கைக்கால் நீட்டுவதற்கே ரொம்ப கஷ்டமாயிருந்தது. தூண்டில் மாட்டிய மீனாய் அகப்பட்டுக்கொண்டான். இதயம் வேகமாகத் துடித்தது. லாக்கை வெளியே தள்ள முயற்சியில் தோற்றுப்போனான்.  கதவை எட்டி உதைத்தான். கோபம் தலைக்கு ஏறியது. நிதானத்தை இழந்தான். கதவுக்குப் பின்னால் பேச்சு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

“அண்ணா நான் உள்ள மாட்டிக்கிட்டேன். கதவு லாக் ஆகிடுச்சு. என்னை யாராவது காப்பாத்துங்க.. அண்ணா… அண்ணா..” பலம் வந்த மட்டும் கத்தினான். மூச்சை அடக்கி வயிற்றுக்கழிவை தேக்கி வைத்திருந்ததாலும் கதவு அடைப்பட்டு கிடக்கின்ற பயத்தினாலும் அப்படியே கழிவறையில் மயங்கி விழுந்தான். அதற்குள் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த பெரியவர் கதிரை தேடியபடி உள்ளே நுழைந்திருந்தார். கதிரின் சத்தம் கேட்டு அந்த கடைசி கழிவறையின் கதவுப்பக்கம் சென்றார்.

“தம்பி.. தம்பி.. என்னாச்சு வெளிய வா..” என்றார் பெரியவர். உள்ளேயிருந்து எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை.

“கதவு லாக் ஆகிடுச்சு. என்னை யாராவது காப்பாத்துங்க.. அண்ணா…ன்னு உள்ளயிருந்து சத்தம் மட்டும் கேட்டுச்சு ஐயா” என்று பகத்தில் இருந்த ஒருவன் சொன்னான். பெரியவருக்கு ஓரளவிற்கு என்ன நடந்திருக்கும் என்று புரிய ஆரமித்திருந்தது. மேலும் அவர் காலம் தாமதிக்கவில்லை. “தம்பி என்ன பண்ற.. கதவ தொற… தம்பி” கதவை வேகமாகத் தட்டிக்கொண்டே இருந்தார்.

“ஹலோ.. என்ன உங்கப்பன் வூட்டு கதவா.. இப்படி தட்டிக்கிட்டே இருக்க. ஒடஞ்ச நீயா காசு தருவ. நீ மாட்டுக்கும் எனக்கென்னான்னு போயிடுவ. நான்தான தண்டம் கட்டணும்” என்று சொல்லிக்கொண்டே வெளியே உட்காந்திருந்த கழிவறையின் காண்டிராக்டர் உள்ளே நுழைந்தார்.

“உள்ள ஒரு பையன் மாட்டிக்கிட்டான். கதவு லாக்காகிடுச்சு” என்று பதற்றத்துடனே சொன்னார் பெரியவர்.

“அதுக்கு நா என்ன பன்றது. அவனெல்லாம் செத்துரல்லாம் மாட்டான்” என்று எகத்தாளமாய் பதில் சொன்னார்.

“அந்த பையனுக்கு ஏதாவது ஆச்சுன்னா கொலை கேசுல உள்ள போயிடுவ பாத்துக்க” என்றது அங்கிருந்த ஒரு குரல். அவ்வாறு கேட்டதும் கண்டிப்பாகக் காண்டிராக்டர் ஆடித்தான் போய்விட்டார். அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஓராமாய் போய் நின்று கொண்டார்.

“கதவ ஒடைச்சிடலாம். உள்ள இருக்கிற பையன் எந்த நிலமையில இருக்கான்னு தெரியல” என்றது இன்னொரு குரல். பேச்சு சத்தமும் கதவை தட்டுகிற சத்தமும் லேசாய் காதில் விழுந்தது அவனுக்கு கேட்டது. கண்ணை முழித்து எழுந்திருக்க முயற்சி செய்கிறான். ஆனால் அவனால் கொஞ்சம் கூட அசையக்கூட முடியவில்லை. அவனுடைய முயற்சி மேலும்மேலும் தோல்வியே சந்தித்தான்.

அம்மாவை நினைத்தான். கொஞ்ச நேரம் மௌனமாய் எதையும் சிந்திக்காமல் மனதை ஒருநிலைப்படுத்தினான். கொஞ்சகொஞ்சமாய் மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டான். டக்கென்று ஒரே மூச்சாய் எழுந்தான். வாளியில் இருந்த தண்ணீரை முகத்தில் தெளித்துக்கொண்டான்.

“தம்பி.. தம்பி… என்னாச்சு கதவ தொறப்பா” என்று வெளியே கூப்பிடும் சத்தம் கேட்டது கதிருக்கு.

கதவின் லாக்கையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். தனது பாக்கெட்டில் இருந்த பேனாவின் மூடியை கழட்டி விட்டு அருக்காலில் உள்ள லாக் ஓட்டையின் வழியாக பேனாவின் முனையை அழுத்தினான். லாக்கானது அருக்காலை விட்டு கதவுக்குச் சென்றது. கழிவறையின் கதவும் திறந்தது. கதவுக்கு முன்னால் பெரியவர் நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பின்னாலே ஒரு கூட்டமே நின்றது. பெரியவரும் கதிரும் வேகமாக பஸ்சுக்கு ஓடினார்கள். கதிர் போகும்போது ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டான். பஸ் ஸ்டார்ட் செய்து தயாராக இருந்தது. கண்டக்டர் வெளியே இருந்தபடி எங்களை முறைத்துக் கொண்டே விசிலை வேகமாக ஊதினார். பஸ் நகர்ந்தது. ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டேன். பெரியவர் என்னைப் பார்த்தார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. தண்ணீரை தொண்டைக் குழியில் இறக்கினேன். அந்தத் தண்ணீர் என் அடிவயிற்றை நிரப்பியது. குளிர்ந்த காற்று. ஜில்லென்ற தண்ணீர். ஏதோ செத்துப்பிழைத்து வந்தது போல் இருந்தது கதிருக்கு. பஸ் விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது.

சிறுகதையின் ஆசிரியர் 

முனைவர் க.லெனின்

mail : iniyavaikatral@gmail.com 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here