Tuesday, November 3, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் பொதுக்கட்டுரைகள் வேறுபாடு எங்கே?|கட்டுரை|கனிஷ்கா.சே

வேறுபாடு எங்கே?|கட்டுரை|கனிஷ்கா.சே

    ஒவ்வொரு நாளும் நான் படிப்பதற்காகச் செல்லும்போதும், படித்து முடித்துத் திரும்பும்போதும் சாலையோரங்களில் பல மனிதர்களைப் பார்க்கிறேன். வயது முதிர்ந்தவர்கள், உழைக்கும் வயதிலேயே வறுமையால் வாடுபவர்கள், சிறு குழந்தைகளைத் தங்களுடன் வைத்துக்கொண்டு சாலையோரங்களில் சிறு சிறு பொருட்களை விற்றுப் பிழைப்பவர்கள் எனப் பலரைப் பார்த்திருக்கிறேன். இன்றும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நாளையும் பார்க்க நேரிடலாம். ஆனால், அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் ஏதோ ஒரு வகையில் வலிக்கிறது. இனியும் இத்தகைய காட்சிகளைக் காண வேண்டிய நிலை வரக்கூடாது என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் அங்கே இருக்கக்கூடாது என்பதற்காக அல்ல; எந்த மனிதரும் இப்படிப்பட்ட துயரமான வாழ்க்கையை வாழ வேண்டிய நிலை இருக்கக்கூடாது என்பதற்காக.
          ஒருநாள், பேருந்தில் யாருமற்ற ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தேன். பேருந்தை இயக்க வேண்டிய ஓட்டுநரும் வரவில்லை; நடத்துநரும் வரவில்லை. பேருந்து புறப்படுவதற்காகக் காத்திருந்த அந்தச் சில நிமிடங்களில் என் மனம் பல கேள்விகளால் நிறைந்தது. ஏன் சில மனிதர்கள் வறுமையில் வாழ்கிறார்கள்? ஏன் அவர்களுக்குச் சில நேரங்களில் மற்றவர்களின் மதிப்பும் மரியாதையும் கிடைப்பதில்லை? ஒருவர் ஏழையாக இருப்பதால் அவருடைய மதிப்பு குறைந்துவிடுமா? இந்தக் கேள்விகள் என் மனத்தில் எழுவதற்குக் காரணம், அதற்கு முன்னர் நான் சந்தித்த ஒரு நிகழ்வுதான்.
          வீதியோரம் முதிய மூதாட்டி ஒருவர் செல்வோரிடம் பொருள் கேட்டு நின்றுகொண்டிருந்தார். அப்போது மகிழுந்தில் வந்த ஒருவர் இறங்கினார். அவரிடம் வசதி இருக்கும் என்று எண்ணி அந்த மூதாட்டி அவரிடம் கையேந்தி உதவி கோரினார். ஆனால், அவரோ சிறிதும் மதிக்காமல், தன் காலால் அந்த மூதாட்டி வைத்திருந்த தட்டைச் சற்று தள்ளிவிட்டுச் சென்றார். அதைக் கண்ட எனக்கு மனம் மிகவும் வேதனைப்பட்டது. பொருள் இல்லை என்றால் தர இயலாது என்று சொல்லியிருக்கலாம்; மாறாக, அவரை மரியாதையின்றி, ஏளனம் செய்யும் வகையில் அவ்வாறு நடந்து கொண்டது என் உள்ளத்திற்கு மிகுந்த துயரத்தை அளித்தது. நான் அவரைக் கடந்து செல்ல முயன்றபோது, அவர் திடீரென என் காலைப் பிடித்துக்கொண்டார்.
    “அம்மா, எனக்குப் பசிக்கிறது. சாப்பிடுவதற்குக் கையில் பணம் இல்லைம்மா,” என்று அவர் என்னிடம் கேட்டார்.
   அந்த வார்த்தைகளைக் கேட்டதும் என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. என்ன செய்வதென்று ஒரு கணம் புரியவில்லை. என்னிடம் இருந்த பணத்தை நினைத்துப் பார்த்தேன். அப்போது என்னிடம் இருந்தது ஐம்பது ரூபாய் மட்டுமே. அந்தப் பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றேன். அந்த ஐம்பது ரூபாய் எனக்கு அப்போது பெரிய தொகையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பசியால் வாடிக்கொண்டிருந்த அந்தப் பாட்டிக்கு அது ஒரு வேளை உணவாக இருந்திருக்கலாம். என்னிடம் இன்னும் பணம் இருந்திருந்தால், என் மனம் விரும்பிய அளவிற்கு அவருக்கு உதவியிருப்பேன். நான் ஏன் இவ்வாறு சிந்திக்கிறேன் என்று எனக்குள்ளேயே பல கேள்விகளை திடீரென்று என் மனத்தில் ஒரு கேள்வி தோன்றியது.
      “என்னைச் சுற்றி எத்தனையோ மனிதர்கள் சாலையில் நடந்து செல்கிறார்கள். அவர்களைக் காணும்போது மட்டும் ஏன் எனக்குள் இவ்வளவு இரக்க உணர்வு எழுகிறது? ஏன் அவர்கள் மீது எனக்குப் பரிதாபம் தோன்றுகிறது? ஏன் அவர்களின் நிலையைக் கண்டு என் மனம் வலிக்கிறது? ஏன் என் கண்கள் கலங்குகின்றன?” என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன். அவ்வாறு சிந்தித்துப் பார்த்தபோது, என்னுள் இரக்க உணர்வு அதிகமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால், அந்த இரக்க உணர்வைத் தாண்டி என் மனத்தில் இன்னொரு சிந்தனையும் தோன்றியது. அதுதான் வேறுபாடு என்னும் ஒன்றைப் பற்றிய சிந்தனை.உண்மையில், மனிதர்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகள் என் கண்களுக்குத் தெரியாமல் மறைந்துபோய்விட்டனவோ என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில், நான் பார்க்கும் ஒவ்வொரு மனிதரும் என்னைப் போன்ற ஒரு மனிதராகத்தான் தெரிகிறார்கள். இந்த இடத்தில், என் மனத்திற்குள்ளேயே ஒரு கற்பனைக் கதையை உருவாக்கிச் சிந்தித்துப் பார்க்கிறேன். ஒரு பக்கம் ஒரு பணக்காரன் இருக்கிறான். இன்னொரு பக்கம் ஒரு ஏழை இருக்கிறான். அந்தப் பணக்காரனிடம் பெயர், புகழ், பதவி, காசு, பணம், பங்களா, கார், வீடு, சொத்து என்று அனைத்தும் இருக்கின்றன. இந்த உலகம் மதிப்பதாகக் கருதும் அத்தனை செல்வங்களும் அவனிடம் நிறைந்திருக்கின்றன. ஆனால், இவை அனைத்தும் இருந்தும் அவனிடம் நிம்மதி மட்டும் இல்லை. தன்னிடம் இருக்கும் சொத்துகளை யாராவது பறித்துக்கொள்வார்களோ என்ற பயம் அவனைத் துரத்துகிறது. மறுபுறம், அந்த ஏழையைப் பார்க்கிறேன். அவனிடம் காசு, பணம், பெயர், புகழ், பதவி, பங்களா, கார், வீடு, சொத்து என்று எதுவுமே இல்லை. சில நேரங்களில் சாலையோரமே அவனுடைய வாழ்விடமாக இருக்கிறது. அன்றாடம் கிடைப்பதை வைத்து உணவருந்துகிறான். அன்று கிடைத்த உணவு அவனுக்கு அன்றைய பசியைப் போக்குகிறது. தனக்குக் கிடைத்ததைக் கொண்டு வாழ்கிறான். தன்னிடம் இல்லாதவற்றைப் பற்றிய கவலைகளைவிட, தன்னிடம் இருப்பவற்றைக் கொண்டு வாழும் மனநிறைவு அவனிடம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அவனுடைய நாளைய வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது என்பது அவனுக்கே தெரியாமல் இருக்கலாம். இருந்தாலும், அவனிடம் இருக்கும் சிறிய மகிழ்ச்சிகளைக்கூட அவனால் அனுபவிக்க முடிகிறது. இப்போது நான் ஒரு கருத்தை எண்ணிப் பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், ஏழையும் பணக்காரனும் ஒன்றுதான். ஏனென்றால், ஒரு பணக்காரன் பிறக்கும்போது தன்னுடைய செல்வத்தையும் சொத்துகளையும் சுமந்து கொண்டு பிறப்பதில்லை. அதேபோல், ஓர் ஏழையும் பிறக்கும்போது தன்னுடைய வறுமையைச் சுமந்து கொண்டு பிறப்பதில்லை.அதேபோல்தான் இறப்பிலும்! ஒரு பணக்காரன் இறக்கும்போது தன்னுடைய கார், வீடு, மாளிகை, சொத்து, செல்வம் என எதையும் தன்னுடன் எடுத்துச் செல்வதில்லை. அதேபோல், ஓர் ஏழையும் இறக்கும்போது தன்னுடைய வறுமையைத் தன்னுடன் எடுத்துச் செல்வதில்லை.
    என்னைப் பொறுத்தவரையில், ஒருவர் பிறக்கும்போது பணக்காரராகவோ ஏழையாகவோ இருக்கலாம். ஆனால், இறக்கும்போது இருவருமே ஒன்றுதான். ஏனென்றால், ஓர் ஏழையிடம் விட்டுச் செல்வதற்கு அதிகமான சொத்துகள் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், அவன் தன்னுடன் எடுத்துச் செல்ல வேண்டிய வறுமையும் இல்லை. அதேவேளையில், ஒரு பணக்காரன் பிறக்கும்போது எதையும் தன்னுடன் கொண்டு வரவில்லை; ஆனால், இறக்கும்போது தான் சேர்த்த அனைத்தையும் இவ்வுலகிலேயே விட்டுச் செல்கிறான்.அப்படிப் பார்க்கும்போது, வாழ்நாள் முழுவதும் செல்வத்தைச் சேர்த்த பணக்காரன், இறுதியில் அனைத்தையும் இழந்து வெறுங்கையுடன் செல்கிறான் அதேப் போல, இழப்பதற்கு எதுவுமில்லாத ஏழையும் வெறுங்கையுடன்தான் செல்கிறான். இப்பொழுது, என் படைப்பின் தலைப்பை ஆணித்தரமாக முன்வைக்கிறேன் — “வேறுபாடு எங்கே? வேறுபாடு எங்கே சென்றது?”
          பணக்காரனோ ஏழையோ, எவன் ஒருவனும் ஒரு நாள் இறந்த பிறகு அவனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது எரிக்கப்பட வேண்டும். மண்ணில் புதைக்கப்பட்டால் மண்ணோடு மக்கிப் போவான்; எரிக்கப்பட்டால் சாம்பலாகிப் புகையோடு புகையாகக் கரைந்துவான். அவ்வாறு இருக்கையில், பணக்காரனைப் புதைத்துவிட்டு ஏழையை எரிக்க வேண்டும் என்றோ, அல்லது பணக்காரனை எரித்துவிட்டு ஏழையைப் புதைக்க வேண்டும் என்றோ ஏதேனும் சட்டம் உள்ளதா? ஏனெனில், என்னதான் மனிதன் வாழ்ந்தாலும், இந்த உலகத்தை விட்டு உயிர் பிரிந்துவிட்டால், இந்த உலகத்தில் எஞ்சியிருப்பது மக்கும் குப்பையும் எரிந்த சாம்பலும் மட்டுமே என்றாகிவிடுகிறது. நான் அந்தப் பேருந்தில் அமர்ந்திருந்தபொழுது, என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து கொண்ட சிந்தனை என்னவென்றால், வாழ்க்கையில் எத்தகைய சூழலிலும் எனக்குப் பொருட்செல்வமும், அதிகாரமும், புகழும் கிட்டியபோதிலும், என்னைவிட வறுமையில் வாடுபவர்களைக் கண்டு நான் ஒருபோதும் ஏளனம் செய்ய மாட்டேன் என்பதாகும். அவர்களையும் என்னைப்போன்ற சக மனிதர்களாகவே கருதுவேன். என் நெஞ்சில் இத்தகைய வினாவை எழுப்பியதற்காக எனது மனதிற்கு நானே நன்றி கூறிக்கொண்டேன். நாம் இந்த பூமியிலிருந்து உடன் எடுத்துச் செல்வதற்கு ஒரு பிடி மண்ணும் இல்லை; எரிந்த சாம்பலாகிப் புகையாகிப் போவதற்கு ஒரு துளி மேகமும் இல்லை.வறுமையில் வாழ்பவர்களைக் காணும்போது அவர்களைக் கடந்து செல்வதற்கு முன், அவர்களுடைய வாழ்க்கையை ஒரு கணம் எண்ணிப் பார்ப்போம்.மனிதர்களைப் பிரித்துப் பார்க்கும் உலகமாக இல்லாமல், மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் உலகமாக இந்த உலகம் மாறாதா? அந்த நாள் வருமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த நாள் வர வேண்டும் என்ற ஆசை மட்டும் என் மனத்தில் இன்றும் இருக்கிறது.
ஆசிரியர்
கனிஷ்கா.சே
32, கோகுலம் காலனி,
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் -642 652.

வேறுபாடு எங்கே? PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »