நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள் | தன்னம்பிக்கை கட்டுரை

நம்பிக்கையுடன்-நடந்து-கொள்ளுங்கள்

நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

          உலகில் வெற்றி பெறுவது சாதனை படைப்பது போன்றவை தனி ஒரு மனிதரால் செய்ய இயலாது. உதாரணமாக “ஒரு மாணவன் பனிரெண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடம். டிவி சேனல்கள் மிக கம்பீரமாகச் செய்திகளைப் பரப்பும். இந்தச் சாதனைக்குக் காரணம் அந்த மாணவன் மட்டுமே அல்ல. அவன் படித்த பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், பாட ஆசிரியர்கள், அவன் பிறந்த ஊர் சூழல், அவனது பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என்று ஒரு கூட்டமே உள்ளது. எனவே வெற்றி என்பது என் உழைப்பால் மட்டுமே கிடைத்தது என்று ஒருவர் கூறினால் அது உண்மையாகாது. வெற்றி பெற நினைப்பவர் தன்னை சுற்றி இருப்பவர்களின் நேசத்தையும் பாசத்தையும் பெற வேண்டும். அதற்காக அவர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும். மற்றவர்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே சாதனை படைக்க முடியும்.

நேசத்திற்கு நடிப்பு வேண்டாம்

        மனமானது  ஆணவம், அதிகாரம், பொறாமை, வஞ்சம் போன்ற  தீயவழியில் இழுத்துச் செல்கின்ற இவ்வகை குணங்களை விடுத்து நேர்மை, உண்மை, நட்பு, நன்மை, நேசம், அன்பு, பாசம், பெருந்தன்மை போன்ற நற்குணங்களை மட்டுமே பெற்றிருக்க வேண்டும். நேர்மையான குணங்களைப் பெறுவது எளிதல்ல. வாழ்வில் பல துன்பங்களைச் சந்தித்திருந்தால் மட்டுமே அது சாத்தியம். அவ்வாறு நற்குணங்களைப் பெற்றுள்ள நீங்கள் மற்றவரிடம் நேசமுடன் நடந்துகொள்ள வேண்டும். இனிமையாகப் பேச வேண்டும். சிலர் மற்றவருடன் இனிமையாகப் பேசுவார்கள், ஆனால் வேற்று மனிதரிடம் அவர்களைப் பழித்துப் பேசுவார்கள். தெளிவாகக் கூறவேண்டுமென்றால் மற்றவரிடம் நேசம் கொள்வதைப்போல நடிப்பார்கள். ஒன்றை கவனியுங்கள். நடிப்பு என்பது சினிமாவிற்கு ஒத்து வருமே தவிர வாழ்கைக்கு அது ஆகாது. நடிப்பும் நீண்ட நாட்களுக்கு நிகழ்த்த முடியாது. உண்மை வெளிப்படும்போது மதிப்பே போய்விடும். மற்றவரின் மனம் நோகாமல் பேச வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஒரு வழியைக் கையாளுங்கள். மற்றவர்களால் உங்களுக்கு கோபம் வருகிறது. அவர்களைத் திட்டவேண்டும் போல இருக்கிறது என்றால் நீங்கள் அவரை பேச நினைக்கும் சொற்களை மற்றவர்கள் உங்கள் மீது பிரயோகித்தால் உங்கள் மனம் எவ்வாறெல்லாம் துன்பமடையும் என்று நினைத்து பாருங்கள். அப்போது மற்றவர்களைக் கடுமையாக பேச தோன்றாது. இதை எப்போதும் கைக்கொண்டால் பிறகு நீங்கள் கடுமையாகப் பேசமாட்டீர்கள் என்றால் இனிமையாக மட்டுமே பேசுவீர்கள்.

      மற்றவருடன் எந்தவித நடிப்பும் இல்லாமல் நேசமுடன் பேச தேர்ந்து விட்டால் நீங்கள் தான் வெற்றியாளர்.

நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

         இங்கு பேச்சின் மூலம் பலர் சாதனை புரிந்துள்ளனர். மற்றவரின் ஒத்துழைப்பை பெறுங்கள். சிலரிடம் நேசமுடன் பேசும்போது அவர்கள் உங்கள் மீது சில நம்பிக்கைகளை வைத்துவிடுவார்கள் அதற்கு துரோகம் செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கேட்கும் சிலவற்றையாவது செய்துதர வேண்டும். உங்களுடன் பழகும் சிலர் மனதில் இருப்பதை வெளிப்படையாகக் கூறாமல் நீங்களே புரிந்து கொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் அவ்வாறான நபர்களிடம் சிறிது கவனமாக இருக்க வேண்டும். ஒன்று அவர்களுக்கு என்ன தேவை என்பதை குறிப்பாகவோ, மற்றவர் மூலமாக அறிந்து கொண்டு செய்துவிட வேண்டும். இல்லையென்றால் நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக மனதில் நினைத்துக் கொண்டு கோபத்தை சேர்த்து வெறுப்பை உருவாக்கி உங்கள் மீது உங்களை சூழ்ந்துள்ள மற்றவர்களை பகைகொள்ளுமாறு செய்து உங்களுக்கு எதிராகச் செயல்களை செய்வதற்குத் திட்டங்கள் பலவற்றைத் தீட்டிக்கொள்வர். அதனால் கவனமாக இருக்க வேண்டும். மற்றவருடன் பேசும் போது அவர்களின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். கடுமையான சொற்களைத் தவிர்த்துவிட்டு, உயர்வான சொற்களைப் பயன்படுத்துங்கள்.

துன்பத்தை  மாற்றும் சொற்கள்

        சொற்களைப் பயன்படுத்துவது ஓரு கலை. சிற்பியானவன் உளியைக் கொண்டு சிலையைச் செதுக்குவது போன்றது. சொற்களைக் கையாலும்விதம் உன்னதமானது. படித்த வரலாற்று செய்தி ஒன்று. ஒருமுறை மைசூரை ஆண்ட அரசர் தன்னைவிட சிறிய நாடுகள் மீது போர்தொடுத்துக் கைப்பற்றினார். போர் செய்ய இயலாத குறுநில மன்னர்கள் கப்பம் செலுத்தினர். அவருக்கு வரி செலுத்தாமல் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டை பெண் அரசியார் ஒருவர் ஆட்சி செய்தார். அரசர் கப்பம் கட்டவேண்டும் இல்லையென்றால் என்னுடன் போர்தொடுக்க வேண்டுமென்று எழுதி அந்த நாட்டின்மீது போர் தொடுப்பதாக ஓலை ஒன்றை அனுப்பி வைத்தார். அதற்கு அந்த அரசியார் பதில் ஒன்று எழுதுகிறாள். “அரசே பணிவான வணக்கங்கள். நீங்கள் விடுத்த ஓலையை பார்த்தேன். அரசே! நீங்கள் பெரிய போர்ப்படை வைத்திருப்பவர். ஆனால் என்னுடையது சிறிய நிலப்பரப்பு. எனவே தங்களுக்குக் கப்பம் கட்ட இயலாது. நான் இவ்வாறு கூறுவதால் நீங்கள் கோபம் கொண்டு படையெடுத்து வாருங்கள். அதைப்பற்றி எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. உங்களுக்கே அவமானம் வந்து சேரும். ஏனென்றால் தாங்கள் என்மீது போர்செய்து வெற்றிபெற்று விட்டீர்கள் என்றால் உலகில் உள்ள அரசர்கள், சிற்றரசர்கள், மக்கள் என்று அனைவரும் இவர் ஒரு பெண்ணுடன் போர்செய்து வெற்றி பெற்றுள்ளார். இது ஒரு வெற்றியா? என்று கேலியாகப் பேசுவார்கள். அவ்வாறில்லாமல் தாங்கள் என்னிடம் மோதி தோல்வியை அடைந்துவிட்டால் போயும்போயும் ஒரு பெண்ணுடன் தோற்றுவிட்டானே இந்த அரசன் என்று தங்களை மிகவும் இழிவாகப் பேசுவார்கள். ஆகவே நீங்கள் என்மீது போர் தொடுத்து வந்தால் ஒரு மாமன்னருடன் மோதுகிறேன் என்ற பெருமை என்னை வந்து சேரும். நான் வெற்றி தோல்வி எதைப்பெற்றாலும் பெருமையே ஆகும். ஆனால் தாங்கள் என்னுடன் மோதி வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் சிறுமை தங்களுக்கே என்பதை நான் தெரிவிக்கின்றேன். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட பின்னராவது என்மீது போர் தொடுப்பதைத் தவிர்த்து விடுவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் போரை தவிர்த்து விடுவீர்கள். ஏனென்றால் தாங்கள் எதையும் சிந்தித்தே செய்வீர்கள் என்பதை நான் முன்னரே அறிந்துள்ளேன். மாமன்னர்க்கு வணக்கம்” என்று எழுதி முடித்துவிட்டு ஓலையை தூதுவன் மூலம் அனுப்பி வைத்தாள். அந்த அரசியாருக்கு போர் தவிர்க்கப்பட்டது. கப்பமும் கட்டவில்லை.

       இவ்விடம் அந்தச் சொற்களை எத்தனை சீராக, தந்திரமாகப் அப்பெண் கையாண்டுள்ளார் என்பதை கவனியுங்கள். போரை தவிர்த்தால் மட்டுமே நீங்கள் சிந்தித்து செயலாற்றுபவர் என்று எழுதி அரசரை வேறு வழியில்லாமல் போரைத் தவிர்ப்பதே முடிவு என்ற நிர்ப்பந்தத்திற்கு கொண்டு வந்துவிட்டாள். இதுதான் சொற்களைக் கையாளும் விதம் ஆகும்.

ஆபத்தை உண்டாக்கும் சில சொற்கள்

        வெறுமனே ஒருவருடன் உரையாடாமல் சொற்களைக் கவனமாக கையாளுங்கள். சிலப்பதிகாரம் காப்பியத்தைக் கேள்விப்பட்டு இருக்கலாம். கண்ணகியின் கால்சிலம்பு கோவலன் கையில் பார்த்தவுடனே கள்ளத்தனம் செய்த கொல்லன் கோவலனை கள்வன் என்று கூறுகின்றான். உண்மை அறியாத பாண்டிய மன்னன் “கள்வனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க” என்று கூறிவிடுகிறான். அதாவது “சிலம்பு கொண்டு அக்கள்வனைக் கொணர்க” என்று கூறப்போய் “கள்வனைக் கொன்று” என்று பாண்டிய மன்னன் விசாரணை செய்யாமலேயே தீர்ப்பை வழங்கிவிடுகிறான். கோவலன் கொல்லப்பட்ட செய்தி கண்ணகியை எட்டுகிறது. அவள் தன் கால்சிலம்பை எடுத்துக்கொண்டு பாண்டியனுடன் வழக்காட வருகிறாள். கண்ணகியைக் கண்ட மன்னன் “யாரையோ! நீ மடக்கொடியோய்?” என்று வினவ” தேரா மன்னா செப்புவது உடையேன்” என்று தொடங்குகிறாள். அதாவது தெளிவில்லாத சரியாகத் தீர்ப்பு வழங்காத மன்னா என்று பொருள். இவ்வாறு சொற்களைக் கையாளுவது என்பது ஒரு கலை. அது வெற்றி அடையும் உங்களுக்கு மிகவும் அவசியம்.

ஆறடி மனிதனையும் பெட்டிப்பாம்பாய் அடங்கச் செய்வது நாக்குதான். அந்த நாவை அடக்கி சொற்களைச் சரியாகக் கையாண்டால் நீங்கள்தான் மிகவும் சிறப்பானவர்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.
 

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

Leave a Reply