Sunday, September 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் The Life Values Envisioned in Natrinai|Dr P.Vignesh kumar

The Life Values Envisioned in Natrinai|Dr P.Vignesh kumar

Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
       Natrinai is one of the significant classical Tamil literary works that contributes to our understanding of the history and cultural life of the Tamils. The text reveals that the Tamils derived essential values for life not only from human beings but also from other living beings, including birds and animals. This reflects their harmonious coexistence with nature and their recognition that emotions are not exclusive to human beings but are also experienced by other living creatures, thereby acknowledging and respecting their intrinsic worth. In this context, the present article explores the life values that the Tamils derived from the elephant and the tiger, two of the most powerful animals, as represented in Natrinai. It seeks to demonstrate how the behavioural characteristics and emotional dimensions attributed to these animals served as sources of ethical and life-oriented learning for the Tamils.
Keywords: Life Values, Values, Respect, Elephant, Tiger

“நற்றிணை உணர்த்தும் வாழ்வியல் விழுமியங்கள்”

ஆய்வுச் சுருக்கம்
         தமிழர்களின் வரலாற்றை அறிய உதவும் நூல்களில் ஒன்றாகத் திகழ்வது நற்றிணை. இந்நூல் தமிழர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் விழுமியங்களை மனிதர்களிடமிருந்து மட்டுமல்லாது  பறவைகள் விலங்குகள் போன்ற பிற உயிர்களிடமிருந்தும் கற்றுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது. இதன் வாயிலாகத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்துள்ளனர் என்பதையும், உணர்வு என்பது மனிதர்கள் மட்டுமின்றி பிற உயிரினங்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்து அதற்கும் மதிப்பு கொடுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. அவ்வகையில் மிக வலிமையான விலங்குகளாகத் திகழும் யானை மற்றும் புலியிடமிருந்து எத்தகைய வாழ்வியல் விழுமியங்களைக் கற்றுள்ளனர் என்பதை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
குறிப்புச் சொற்கள் : வாழ்வியல், விழுமியங்கள், மதிப்பு, யானை,புலி
முன்னுரை
         மனித வாழ்வு மாற்றத்திற்குரியது ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு. சங்க இலக்கியத்தில் மனிதர்கள் அல்லாத பிற உயிர்கள் பற்றியச் செய்திகள் காணப்படுகின்றன. மனிதன் வாழ்வியல் விழுமியங்களை பிற உயிர்களிடமிருந்து கற்றுக் கொண்டானா? இல்லை மனிதர்களிடமிருந்து பிற உயிரினங்கள் கற்றுக் கொண்டதா? என்ற வினா எழுதல் இயற்கை.  மனிதன் பிற உயிர்களிடமிருந்து  கற்றிருக்க வேண்டும்.  மனிதர்களிடமிருந்து பிற உயிர்கள் கற்றிருக்க வாய்ப்பில்லை.  விலங்குகளை வேட்டையாடி உணவாக உண்ட மனிதன் விலங்குகள் மற்றும் பிற உயிர்களை நன்கு உற்றுக் கவனித்திருக்க வேண்டும். அவ்வாறு கவனித்ததன் விளைவாக அறம் சார்ந்த விழுமியங்களை மனிதன் கட்டமைத்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது. அவ்வகையில் யானை மற்றும் புலியிடமிருந்து எத்தகைய வாழ்வியல் விழுமியங்களைக் கற்றுள்ளனர் என்பதை நற்றிணையின் வாயிலாக  இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
தன்னைப்பிறர் நிலையில் வைத்துப் பார்த்தல்
       தலைவனும் தலைவியும் அன்பு கொள்கிறார்கள். தலைவன் மீது கொண்ட அன்பின் காரணமாகத் தலைவிக்கு பசலை நோய் ஏற்படுகிறது. தாய் வேலன் வெறியாட்டு நிகழ்த்துகிறாள். இவ்வாறு தனக்குத் தாய் வெறியாட்டு நடத்துவதால் இந்நோய் தணியும் என்றால் இதைக் காட்டிலும் கொடியது வேறொன்றும் இல்லை என்கிறாள் தலைவி. இதனை,
நல் நுதல் பசந்த படர் மலி அருநோய்
அணங்கு என உணரக் கூறி, வேலன் 
சின் இயம் கரங்கப்பாடி                    (நற்றிணை 322,9_11
          என்கிறது. இது தலைவி தலைவன் மீது கொண்ட அதிக அன்பின் வெளிப்பாடாகும். இதையுணராது தாய் செயல்பட்டுள்ளார் என்பது வெளிப்படுகிறது.  தலைவனின் சிறப்பினைப் பற்றிச் சொல்லுமிடத்து மூங்கில் மற்றும் பல்வேறு வகையான செடி, கொடி, மரங்கள் வளர்ந்துள்ள மலை. அம்மலையில் உள்ள புதரில் பெண் புலி பசியுடன் படுத்திருந்தது. அதன் பசியைப் போக்க எண்ணிய ஆண் புலி இரைக்காக அருகிலிருந்த புதரில் பதுங்கியிருந்தது, இத்தகைய நாட்டுக்குத் தலைவன் சொந்தக்காரன் என்பதை,
ஊன் தின் பிணலின் உட்கு பசி களை இயர் 
ஆளியங்கு அரும்புழை ஏற்றி வாள்வரிக்
கடுங்கண் வயப்புலி ஒடுங்கும்   (நற்றிணை 322,5-7)
          என்கிறது. ஒரு குழந்தையின் முகத்தைப் பார்த்தே குழந்தைப் பசியுடன் உள்ளது என்பதையுணர்ந்து குழந்தையின் பசியைப் போக்குபவள் அம்மா. குழந்தைத் தனக்குப் பசி என்றோ உணவு வேண்டுமென்றோ தாயிடம் கேட்க வில்லை, ஆனால் தன் குழந்தைப் பசியில்  உள்ளது என்பதைத் தாய் குழந்தையைப் பார்த்தே தானே உணர்வதைப் போல, பெண் புலி தனக்குப் பசிக்கிறது என்றோ உணவு வேண்டுமென்றோ ஆண் புலியிடம் கேட்கவில்லை, ஆனால் பெண் புலியின் முகத்தைப் பார்த்தே அது பசியில் உள்ளது என்பதையுணர்ந்து அதனைப் போக்க வேண்டும் என்று எண்ணியது என்றால், இது ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வேண்டிய ஒற்றுமையையும், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்பதையும், ஒரு குடும்பத் தலைவன் தனது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துகிறது. 
     ஆண் புலியின் தன்மையைச் சொல்லுமிடத்து வால் போன்ற கோடுகளையும்  கொடிய கண்களையும் உடைய வலிமையான ஆண் புலி என்று கூறுவதன்  வாயிலாக, தன்னுடைய தலைவன் பகைவர்களை எதிர்த்து வெற்றி பெறக்கூடிய வீரன் என்பதும் புலி பசியின்றி இருக்கும் சமயத்தில் தன் எதிரே நிறைய விலங்குகள் கடந்து சென்றாலும் அனைத்தையும் வேட்டையாடுவதில்லை. தன்னுடைய இரையைத்  தேர்வு செய்து வேட்டையாடும் தன்மையுடையது. அதைப்போல  நிறைய ஆண் மக்கள் இருப்பினும் அவர்களையெல்லாம் வேண்டாம் என்று விட்டு விட்டு, தலைவி தனக்கானத் தலைவனைத் தேர்வு செய்துள்ளாள் என்ற தலைவியின் மனநிலை வெளிப்படுகிறது.  ”கொடிய கண்களையுடைய புலி” என்பது புலி புதரில் படுத்திருந்து மிகக்கூர்மையாக கவனித்து விலங்குகளை வேட்டையாடும் தன்மையுடையது. அதைப் போல குடும்பத் தலைவன் தன் குடும்பத்திற்கு என்ன தேவை என்பதையுணர்ந்து நன்கு கவனித்து அதனை நிறைவேற்றுபவராக இருக்க வேண்டும் என்ற பண்பும் வெளிப்படுகிறது.  புலிக்கு இயல்பாகவே மிகக் கூர்மையான பார்வை உண்டு. இரவு நேரமாக இருந்தாலும் பகல் நேரமாக இருந்தாலும் தனது இரையை மிகத் துல்லியமாகத் தாக்கும் தன்மையுடையது. அத்தகைய வலிமை வாய்ந்த புலிக்கு மனிதர்களை விட ஆறு மடங்கு இரவு நேரங்களில் பார்வைத் திறன்  அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்
புலவு நாறு புகர் நுதல் கழுவக் கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு     (அகநானூறு – 272) 
          என்னும் பாடலில் பெரிய தந்தத்தை உடைய யானை புலியுடன்  போரிட்டு வென்றது. சண்டையில் யானையினுடைய நெற்றியில் புண் ஏற்படுகிறது. நெற்றியில் உள்ள புலவு நாற்றம் வீசும் ரத்தத்தினைக்  கழுவ அருகிலிருந்த அருவியை நோக்கிச்  சென்றது. அத்தகைய அச்சம் தரக்கூடிய காட்டு வழியில் தலைவியைப் பார்க்க  தலைவன்  வருகிறான் என்கிறது.  வலிய ஆண் புலி என்னுமிடத்து மனித வாழ்வு என்பது இன்பமும் துன்பமும் நிறைந்தது. இங்கு வலிமை என்பது உடல் வலிமை மற்றும் மன வலிமை இரண்டையும் குறிக்கிறது. குடும்பத்தலைவனுக்கு இவை இரண்டும் முக்கியம். இரண்டில் ஒன்று குறைவாக இருப்பினும் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். பெரும்பாலும் உள்ளம் வலிமையாக இருந்தாலே உடல் வலிமை என்பது தானாக வந்து விடும் என்பது திண்ணம். ஏனென்றால் மனிதனின் எண்ணம் சொல்லாகவும், சொல் செயலாகவும், செயல் பழக்கமாகவும் பழக்கம் வழக்கமாகவும் மாறுகிறது என்கிறது  உளவியல். இவையனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது மனம். மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனை வள்ளுவர்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
ஆகுல நீர பிற   (குறள்.34)
          என்னும் குறள் மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுதான் அறம் என்கிறார். இங்கு  தலைவன் உடல் வலிமை மற்றும் மன வலிமை இரண்டையும் உடையவன் என்பதும் குடும்பப் பாசம் என்பது மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்குகளிடமும் உள்ளது என்பதையும்,  குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையாக இல்லறத்தை நடத்த வேண்டும் என்பதும் வெளிப்படுகிறது. தாய் தன்னுடைய மகளின் பசலை நோயைப் போக்க வேண்டும் என்று எண்ணுகிறாள். பெண் புலியின் பசியைப் போக்க வேண்டும் என்று ஆண் புலி எண்ணியது என்று கூறுவதன் வாயிலாகக் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்பது வெளிப்படுகிறது. அதே சமயத்தில் குடும்பத் தலைவனுக்கான கடமைகள் மற்றும்  பாசத்தையும் உணர முடிகிறது. 
குறிக்கோள் 
        ஒவ்வொரு மனிதனுக்கும் குறிக்கோள் என்பது முக்கியம். குறிக்கோள் எவ்வளவு முக்கியமோ அதை அடைய எடுக்கும் முயற்சியும் முக்கியம். குறிக்கோளை வரையறுத்துக் கொண்டு அதற்காக உழைக்கும் போது இடையிடையே சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டாலும் அதனையெல்லாம் கடந்து ஒருபோதும் மனம் தளராது தொடர்ந்து உழைக்க வேண்டும். அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும்.  விலங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் புலி. விலங்கினங்களின் வலிமையைக் கொண்டு தன்னுடைய இரையைத் தீர்மானிக்கிறது. புலி தான் வேட்டையாடிய விலங்கு தனக்கு இடப்பக்கத்தில் விழுமானால் அந்த விலங்கு வலிமையற்றது என நினைத்து அதை உண்ணாது. மாறாகத் தான் வேட்டையாடிய விலங்கு வலப்பக்கம் விழுமாயின் அதனையே உணவாக உண்ணும். புலி காட்டுப் பன்றியை வேட்டையாடுகிறது அப்பன்றி புலியின் இடப்பக்கம் விழுந்ததால் அதனைப் புலி உண்ணவில்லை, அன்றைய நாள் முழுவதும் உணவிற்கு வேறு விலங்குகளும் அதற்கு கிடைக்கவில்லை, அதனால் அன்றைய நாள் முழுவதும் பசியுடன் இருந்த புலி மறுநாள் யானையை வேட்டையாடி உணவாகத் தின்றது என்கிறது புறநானூறு. அதனை, 
“கடுங்கட் கேழலிடம்பட வீழ்ந்தென
அன்றவணுண்ணா தாகி வழி நாள்
இருங்களிற் றொருத்தல்  நல்வலம் படுக்கும் புலி”   (புறநானூறு.190)
          என்கிறது. தான் பசியுடன் இருந்தாலும் இடப்பக்கம் விழும் விலங்கை உணவாக உண்பதில்லை என்ற உறுதியான உள்ளம் உடையதாகவும்  அவ்வாறு உண்பது தன்னுடைய வீரத்திற்கு இழுக்கு எனக் கருதித் தான் கொண்ட கொள்கையை மாற்றிக் கொள்ளாது இருந்தது புலி. அதனைப் போன்று ஒவ்வொரு மனிதனும் தான் கொண்ட இலக்கை அடையும் வரை அந்த கொள்கையில் இருந்து பின் வாங்காது தொடர்ந்து உழைக்க வேண்டும். அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும். 
வலிமை 
       ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு திறமை உண்டு. எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் சரி உயிரினத்தின் உருவைக் கண்டு அதன் திறமையை எண்ணுதல் தவறு. உருண்டு  ஓடும் மிகப்பெரியத் தேருக்குச் சக்கரத்தில் உள்ள அச்சாணி தான் அதற்குப் பலம்.  இங்கு உருவம் என்பது முக்கியம் கிடையாது திறமையே முக்கியம். உருவத்தில் மிகப்பெரிய விலங்கு யானை. உருவத்தில் மிகச் சிறியதாக உள்ளது புலி. சில சமயங்களில் மிகச் சிறிய விலங்காக இருந்தாலும் புலி தன்னுடைய ஆற்றலைப் பயன்படுத்தி யானையை சில சமயங்களில் வெல்லும்.  ஆற்றல் உடையதாக புலி இருந்தாலும்  தன்னுடைய பலத்தைப் பயன்படுத்தி  சில சமயங்களில் யானை புலியை வெல்லும். இங்கு  உருவத்தில் மிகப்பெரியதாக உள்ள யானையை மிகச் சிறியதாக உள்ள புலி வெற்றி  பெறுதல் என்பது புலியின் மனம் தளராமையையும் அதன் விடாமுயற்சியையும் காட்டுகிறது. யானையை எதிர்த்து புலி சண்டை செய்வதை நற்றிணை,
வயக்களிறு பொருத வாள் வரி யுழுவை
கன்முகைச் சிலம்பின் குழுஉ      (நற்றிணை.255 -01)
          என்னும் வரிகள் வால் போன்ற கோடுகளை உடைய – புலி வலிமைமிக்க யானையை எதிர்த்து சண்டை செய்து வெற்றி பெற்ற பிறகு முழங்கியது என்கிறது.  புலி யானையை வேட்டையாடுகிறது. வேட்டையாடப்பட்ட யானை வலப்பக்கம் விழுந்தது அதனை
 மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த 
வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை
அஞ்சுதக உரறும் ஓசை                  ( நற்றிணை.154 )
          என்னும் வரியில் கருஞ்சினத்தையுடைய புலி கேட்பவர்கள் அஞ்சும் படி முழங்கியது என்கிறது.  வெஞ்சின உழுவை என்பது மிகவும் கோபமான தன்மையை உடைய புலி என்பதைக் குறிக்கிறது. புலி மிகுந்த உடல் வலிமை மிக்க யானையை வெற்றி பெற அதிகப் போராட்டத்தையும் விடாமுயற்சியும் மேற்கொண்டிருக்கும் என்பதும் புலனாகிறது. குறிக்கோளை மனத்தில் இருத்தி உழைக்கும் ஒரு சிலர் சில சமயங்களில் சிறிது இடையூறு ஏற்பட்டாலும் மனம் தளர்வதைப் பார்க்கிறோம். புலி  யானையை வெற்றி பெற எவ்வளவு முயற்சி செய்திருக்க வேண்டும். இது இம்முயற்சி மனிதனும் தனது  குறிக்கோளை அடையும் வரை மனம் தளரக்கூடாது என்பதை உணர்த்துகிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளில் வள்ளுவர் கூர்மையான தந்தத்தையும் உருவத்தில் பெரியதாகவும் உள்ள யானை உருவத்தில் சிறியதாகவும் ஊக்கம் மிகுதியாகவும் உள்ள புலி தாக்கினால் யானை அஞ்சும் என்பதை
“பரியது கூர் கூட்டத்து ஆயினும் யானை
வெறும் புலித்தே குறின்”                                            ( குறள். 599)
          என்னும் குறளில் வெளிப்படுத்தியுள்ளார். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் யானையைப் புலி வெற்றி பெற்றதற்குக் காரணம் புலியின் மன வலிமையாகும்.  ஒரு மனிதனின் வெற்றியைத் தீர்மானிப்பது அவனிடமுள்ள ஊக்கமும் மனம் தளராத பண்பும் ஆகும். மிகுந்த படை பலத்துடன் இருக்கும் ஒருவனிடம் ஊக்கமும் இருக்க வேண்டும்.  படைபலம் இருந்தும் அவனிடம் ஊக்கம்  இல்லையெனில் சிறிய படையை உடைய ஒருவன் ஊக்கத்துடன் செயல்பட்டு மிகப்பெரிய படையை உடையவனையும் வெற்றி பெற முடியும். எனவே வெற்றியைத் தீர்மானிப்பது ஒரு மனிதனிடம் உள்ள படைபலம் மட்டும் கிடையாது அவனிடமுள்ள ஊக்கமாகும். குடும்பத் தலைவனுக்கு இத்தகைய மன வலிமையே அவசியம். மனித வாழ்வு என்பது இன்பமும் துன்பமும் கலந்தது  எனவே எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் தலைவன் தலைவி இருவரும் மனத்தை மட்டும்  தளர விடக்கூடாது. மனம் தளராமையே ஒரு குடும்பத்தை ஆரோக்கியமான பாதையில் கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும்.  
கோபம் 
       கோபம் கொள்ளுதல் மனிதனின் இயல்பு என்றாலும், கோபம் ஆரோக்கியமான குடும்பம் அமைவதற்கு வழி வகுக்காது. கோபத்தில் எடுக்கின்ற முடிவுகள் சரியானதாக இருத்தல் என்பது அரிது. கோபமானது கோபம் கொள்பவருக்கும் தீமை தரும். அவரைச் சுற்றியுள்ள மனிதனுக்கும் தீமையைத் தரும். கோபத்தைக் குறித்து பாரதியார் “பாரதி அறுபத்தாறு” என்னும் கவிதையில்
“கொடும் கோபம் பேரதிர்ச்சி 
சிறிய கோபம் ஆபத்தாம்”          (பாரதி அறுபத்தாறு )
          என்கிறார். தலைவியின் கண்கள் கோபத்தால் சிவந்திருந்தது என்பதை நற்றிணை,
“கொடுங்கேழ் இரம்புறம் நடுங்கத் குத்திப்
புலி வினையாடிய புலவு நாறு வேழத்தின் 
தலை மருப்பு எய்ப்பக் கடைமணி சிவந்தநின் 
          கண்ணே கதவ அல்ல”                           ( நற்றிணை.39 )
          என்னும் வரிகளில் கருமையான நிறக் கோடுகளை உடைய புலியை யானைத் தனது தந்ததால் குத்தியது. குத்திய யானையின் தந்தத்தில் உள்ள சிவந்த குருதியைப் போலத் தலைவியின் கண்கள் கோபத்தால் சிவந்திருந்தது என்கிறது. கோபம்  குடும்பத்தில் உள்ள மனிதர்களிடம் அரிதாக இருத்தலே ஆரோக்கியமான குடும்பத்திற்கு வழிவகுக்கும்.
முடிவுரை
       பண்டைய தமிழர்கள் தங்களைச் சுற்றியிருந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தங்களது வாழ்வைக் கட்டமைத்துக் கொண்டனர். சுற்றுச் சூழலுக்குப் புறம்பான செயல்களைச் செய்யவில்லை. இது மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே இருந்த சரியான புரிதலை வெளிப்படுத்துகிறது. புலி தனது கொள்கையை மாற்றிக் கொள்ளாது இருப்பதைப் போல மனிதர்களும் தான் கொண்ட கொள்கையிலிருந்து மாறாது செயலாற்ற வேண்டும். உருவத்தைக் கண்டு ஏளனம் செய்யாது அவர்களிடம் உள்ளத் திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனிதர்கள் எத்தகையச் சூழல் ஏற்பட்டாலும் வாழ்வியல் விழுமியங்களைப் பின்பற்றி நடத்தலே வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்பதை அறிய முடிகிறது. 
துணைநூல் பட்டியல்
1.நற்றிணை – பாலசுப்பிரமணியன் கு.வெ.(உ.ஆ), நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, நான்காம் பதிப்பு -2011.
2.அகநானூறு – செயபால் இரா (உ.ஆ), நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, நான்காம் பதிப்பு – 2011.
3.புறநானூறு – பாலசுப்பிரமணியன் கு.வெ.(உ.ஆ),விசுவநாதன் அ.(உ.ஆ), ஆரோக்கியசாமி இரா.(உ.ஆ) திலகவதி க.(உ.ஆ) சத்தியநாராயணன் வெ.(உ.ஆ), நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், நாகராசன் வி. (உ.ஆ) சென்னை, நான்காம் பதிப்பு – 2011.
4.பாரதியார் கவிதைகள் – தொகுத்தவர் விருகை பிச்சுமணி, சுதர்ஸன் பதிப்பகம், சென்னை -600 017
5.திருக்குறள் – திருக்குறளார் வீ.முனிசாமி .(உ.ஆ),வானதி பதிப்பகம் சென்னை – 600 017
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்  பா. விக்னேஷ்குமார்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சென்னை – 600 077.

 

 

நற்றிணை உணர்த்தும் வாழ்வியல் விழுமியங்கள் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »