Saturday, September 19, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் Kannan in Sangam Literature|Dr.V.Kalaiyarasi

Kannan in Sangam Literature|Dr.V.Kalaiyarasi

சங்க இலங்கியங்களில் கண்ணன்
Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
       Sangam literature portrays various aspects of life, such as people’s lifestyles, valor, love, occupations, and trade. Notably, it also contains accounts regarding the Divine – specifically the greatness of the deity and the significance of His incarnations. References to Thirumal (Mayon) appear in Tholkappiyam, the most ancient treatise on Tamil grammar. Furthermore, the incarnations and glory of Thirumal are extensively celebrated in the Pattupattu and Ettuthogai collectively known as Sangam literature. This research paper aims to illustrate how information regarding Thirumal is presented within these Sangam literary works.

“சங்க இலங்கியங்களில் கண்ணன்”

ஆய்வு சுருக்கம்
    சங்க இலக்கியங்கள் மக்களுடைய வாழ்க்ககைமுறை, வீரம், காதல், தொழில், வணிகம் போன்று பல செய்திகளை எடுத்துரைக்கின்றன. இதில் குறிப்பாக இறைவனைப் பற்றியும் இறைனுடைய பெருமைகள் அவனுடைய அவதராச் சிறப்புகள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் திருமால் (மாயோன்) பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியமான பாட்டும், தொகையும் எனச் சொல்லப்படுகின்ற பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் திருமாலின் அவதாரம் புகழ் போன்றவை மிகுதியாக பேசப்பட்டுள்ளன. அத்தகைய திருமால் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக இவ்வாய்வு கட்டுரை அமைந்துள்ளது.
முன்னுரை
          உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழி. கல்தோன்றி மண் தோன்றிய மூத்த குடி என்ற புற இலக்கண நூல்களில் கூறப்பட்டதைக் கொண்டு தமிழின் பழமையை அறியாலம். பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழ் மொழியை வளர்த்தனர். முதற்சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் என்ற இறையனாரின் களவியல் உரைமூலம் சங்கங்கள் பற்றிய செய்திகளை அறிய முடிகிறது. சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப் பிரித்து மக்களின் வாழ்க்கை முறை, வீரம், காதல், அறம் போன்றவற்றை மட்டுமல்லால் இறை பக்தியையும், வேந்தனைப் பற்றியும், இயற்கையை வர்ணித்தும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழர் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்துள்ளனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன. அந்நிலத்திற்குரிய தெய்வம், தொழில் ஆகியவையும் காணப்படுகின்றன. இவற்றில் முல்லை நிலக்கடவுளான திருமால் (மாயோன்) பற்றிய குறிப்புகள் தொல்காப்பியம் முதல் பத்துப்பாட்டுஇ எட்டுத்தொகை ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன. தமிழின் மிகத் தொன்மையான நூலான தொல்காப்பியத்தில் திருமாலினைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
மாயோன் மேய காடுறை யுலகமும்  (தொல் – பொருள் – அகத்திணை)
          என்ற அடிகளில் முல்லை நிலக் கடவுளான திருமால் (மாயோன்) குறிப்பிடப்பட்டுள்ளார். “மாயோன்” – என்ற சொல்லுக்கு கரிய நிறத்தை உடையவன் என்று பொருள்படுகிறது.
மாயோன் மேய மண்பெருஞ் சிறப்பிற்
நாவா விழப்புகழ் பூவை நிலையும்
          என்ற நூற்பா புறத்திணையில் அமைந்த பூவைநிலை துறையை குறிப்பிடுகிறது. பூவைநிறை என்பது நாடு காக்கும் மன்னனை சிறப்பித்து பாடுவது. மாயோன் – முதல்வன் – மன்னன் – மூத்த குடிமகன் என்பதால் மன்னனை மாயோனுடன் ஒப்பீட்டுக் குறிப்பிட்டுள்ளார். கண்ணனை தெய்வமாகக் கொண்டு அவனைக் குழந்தையாக பாவித்தல்இ தெய்வக் குழந்கையாகிய கண்ணனிடம் ஆயர்குலப் பெண்கள் காதல் கொண்டதையும் இலக்கியங்கள் கூறப்பட்டுள்ளன.
சங்க இலக்கியத்தில் திருமால்
          சங்க இலக்கிய நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகையில் திருமால் பற்றிய செய்திகள் மிகுதியாக கூறப்பட்டுள்ளன. காவிரிப்பூம்பட்டினத்துப் புலவர் காரிக் கண்ணார் மன்னனை மாயோனுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளார்.
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன”….
புறநானூற்றில் திருமால், இராமன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
அணங்குடை யவுணர் கணங்கொண்டொளித்தெனச்
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது”….. 174 – புறம்
          என்ற பாடலில் அசுரர்கள் சூரியனை (ஞாயிற்றினை) மறைத்தனர். சூரியனை காணாது இருள் உலகத்தாரின் கண்களை மறைத்தது. உலகில் உள்ள மக்களின் துன்பத்தினை தீர்க்கும்பொருட்டு வலிமையுடைய திருமால் (கண்ணன்) சூரியனை மீட்டு ஆகாத்தில் நிறுத்தினார் என்று குறிப்படப்பட்டுள்ளது. மற்றொன்று புறநானூற்றுப் பாடலில் இரமாயண நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.
கருந்தெற விராமனுடன் புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வெனவிய ஞான்றை
          என்ற பாடல் வரிகளில் சோழ மன்னன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊண்பொதி நகங்குடையோர் என்ற புலவர் பாடும்போது மன்னன் பரிசளித்த அணிகலன்களைத் தம் சுற்றத்தார் எடுத்து எதை எவ்வாறு எங்கு அணிவது என்று தெரியாமல் தடுமாறிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தன் வெற்றியை உணர்த்துவதற்காக பல போர்களில் சங்க முழக்கம் செய்த கிருஷ்ணனை பாரதம் மற்றும் புராணங்கள் சிறப்பு பேசுகின்றன.
வள்ளுருன் நேமியான் வாய்வைத்த வளைபோலத்
தௌளிதின் விளங்கும் கரி நெற்றிக் காரிகலி, முல்லைக்கலி –5
          பாரதப் போரின் தொடக்கத்திலும் முடிவிலும் சங்கு முழக்கம் செய்து பார்த்தசாரதியாய் கோலம் கொண்ட கண்ணனை ஆழ்வார்களும் சிறப்புடன் பாடியுள்ளனர். கம்சனால் ஏவப்பட்ட அசுரன் கேசி என்பவன் குதிரை முகமுடைய இந்த அசுரனின் வாயைப் பிளந்து கொண்ற கண்ணனின் வீரத்தைப் புராணங்கள் பேசுகின்றன. இந்த வீரச் செயலை முல்லைக்கலி மற்றும் பரிபாடலில் பேசப்பட்டுள்ளன.
மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய்புகுத் திட்டுப் புடைத்த ஞான்றின்னன்
கொல் மாயோன்”……                  (முல்லைக் கலி – 3)
என்று முல்லைக் கலியிலும்,
கூந்தல் என்னும் பெயரோடு கூந்தல்
எரிசினங் டிகான்றோய்”   – பரி – 3
          என்ற பரிபாடலிலும் மாயோன் குதிரை முகமுடைய அசுரனைக் கொன்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் சங்கப் பாடல்களில் கிருஷ்ணன் என்று குறிப்பிடாமல் ‘மாயோன்’, ‘மால்’ என்ற பெயர்களே இடம் பெற்றுள்ளன. சங்க காலத்தில் மாயோன் வேறு, திருமால் வேறு, கண்ணன் வேறு என்ற எண்ணம் ஏற்படாமல் மூன்றும் ஒன்றே என்ற நிலையில் மக்கள் மாயோனைக் கண்டனர். மாயோனின் நிறம் கறுப்பு. மாயோனின் நிறமான கரிய நிறத்தை கருமை கலந்த நீல நிறத்தைக் காயாம்பூ நீலம் கலந்த கடல் வண்ணன் நீருண்ட மேகத்தின் நிறம், தாமரை இலையின் நிறம் போன்று பல உவமைகளை மாயோனின் கரிய நிறத்திற்கு உவமையாகாக்  கூறியுள்ளனர். நம்மாழ்வாரும் தம்முடைய திருவாய்மொழியில்,
காயாமலர் வண்ணன்
பேபார் முலையுண்ட வாயான் மாதவனே”…
          காயாமலர் வண்ணன் என்று மாயோனை குறிப்பிட்டுள்ளார். முல்லை நிலத்தில் வாழும் பெண்கள் கற்பின் அடையாளமாக முல்லை மலர்களுக்குப் பதில் காயாம்பூவைச் சூடிக் கொள்கின்றனர். பசுக்களுக்குத் துன்பம் உண்டாகுமாறு இந்திரன் பெய்வித்த மழையினின்றும் காப்பாற்ற திருமேனி காயாம்பூ நிறத்தை ஒத்திருந்தது. அம்மலர்களை மகளிர் சூடிக் கொள்வதால் கண்ணனை நினைப்பூட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்போரும் குவலயாபீடம் என்ற யானையைக் கொன்ற செயலும்
          கம்சன் தன் அரண்மனை மல்லர்களைக் கொண்டு கிருஷ்ணனைக் கொல்லத் திட்டமிட்டான். இதனால் மற்போர் போட்டி ஒன்று ஏற்படுத்தி கிருஷ்ண பலதேவனாக மதுராவிற்கு வரவழைத்தான். மற்போர் நிகழும் முன்பு அரண்மனை யானையை கிருஷ்ணன் மீது ஏவினான். யானையை அடக்கிய பின்பு கம்சனின் நண்பர்களான மல்லர்களையும் மற்போரில் வென்றான். இதனை,
மல்லை மறஞ்சாய்ந்த மலர்த் தண்டா ரகலத்தோன்
ஒல்லாதாருடன்ரோட வுருவத்துட னெறிதலிற்
கொல்யானை யணி நுத லழுத்திய ஆழிபோற்”    –கலிஇ நெய்தல் –17
          என்ற அடிகளில் சக்கரப்படை எறிந்து யானையைக் கொன்றான் என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மதுரைக் காஞ்யில் அவுணனை அழித்த செயல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நன்னாள்”  –மதுரைக்காஞ்சி –59
          திருமால் (மாயோன்) அவுணனை அழித்தது ஓண நன்னாள் என கூறப்பட்டுள்ளது. முல்லைப்பாட்டில் கண்ணன் குன்றம் எடுத்து நிலையையும் விளாமரம் உருவில் நின்ற அசுரனை அழித்த செய்தியும் குறிப்பிட்டுள்ளன. இச்செய்கள் ஆய்ர்பாடியில் வளர்ந்த பொழுது கண்ணன் நிகழ்த்திய திருவிளையாடல்களும் ஒன்றாக கூறப்பட்டுள்ளன.
பரிபாடலில் கண்ணன் (மாயோன்) பற்றிய குறிப்புகள் 
          கிறித்து பிறந்த இரண்டு நூற்றாண்டுகளில் பரிபாடல் தோன்றி இருக்க வேண்டுமென்று தமிழறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். பரிபாடலில் திருமாலின் வராக நரசிம்ம அவதாரம் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. கடுவன் இளவெயிiனார் பாடலில் இறைவனின் நால்வகை வெளிப்பாடுகளான வாசுதேவன், சங்கருடணன், பிரத்யுதேன், அநிருத்தன் ஆகிய பெயர்கள் தமிழ் வடிவில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
செங்கட்காரி கருங்கண் வெள்ளை
பொன்கட் பச்சை பைங்கள் மாஅல்    – பரி – 3
        என்ற அடிகளில் செங்கட்காரி – வாசுதேவனையும், கருங்கண் வெள்ளை – வெள்ளை – பலராமனையும், பொன்கட் பச்சை – பிரத்யும்நனையும், பைங்கண்மாஅல் – அநிருத்தனையும் குறிப்பதாகக் கூறியுள்ளார். இந்நால்வரும் உறவினர்கள். இவர்கள் விருஷ்ணி குலத்தைச் சார்ந்தவர்கள். இவ்வினத்தில் கண்ணனுடைய பிள்ளையான சாம்பனை இணைத்து இப்பஞ்சவீரர்களைத் தம் குலத்துத் தலைவர்களாகக் கொண்டு வழிபட்டும் வந்தனர். தமிழகத்தில் குறிப்பாக பல்லவர் காலத்தில் இப்பஞ்ச வீரர் வழிபாடு மேலோங்கி இருந்ததை சென்னை பார்த்தசாரதி கோயில் மற்றும் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோயில் ஆகிய இரண்டையும் சான்றாகக் காட்டுவர். இறைவனின் ஐவகை நிலங்களைப் பற்றிய குறிப்பும் பரிபாடலில் உள்ளன. பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை ஆகிய ஐவகை நிலைகளைப் பரிபாடல் அடிகள் எடுத்துரைக்கின்றன. விஷ்ணு, நாராயணன், கிருஷ்ணன் ஆகிய உருவங்கள் இணைந்து பேசப்படுகின்றன. கண்ணனுடன் பிறந்தவனாக கண்ணனின் மூத்த சகோதரனாகப் பலராமன் கருதப்பட்டு வருகிறான். பலராமனைத் தெய்வமாகப் பண்டைத் தமிழ் மக்கள் போற்றி வந்தனர். குறிப்பாக கண்ணனையும் பலராமனையும் இரு பெருந்தெய்வமாகக் கருதி வந்தனர். மேலும் வலிமையுடையவனாக இருப்பதால் பலராமன் என்ற பெயர் ஏற்பட்டது எனப் பாகவதப் புராணம் கூறுகிறது. இதே கருத்தினை நற்றிணையில்,
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி”     –நற்றிணை –32
என்று குறிப்பிடுவதில் ‘வாலியோன்’ என்பது பலராமனைக் குறிக்கிறது.
சங்கம் மருவிய நூல்களில் கண்ணன்
          பதிணென்கீழ்கணக்கு நூல்களான திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஐந்திணை ஐம்பது ஆகிய நூல்களிலும் கண்ணனைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.
படியை மடியகத்திட்டான் அடியினால்
முக்காற் கடஞ்தான் முழுநில மக்காலத்து
ஆய்பலி தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை யழித்த மகன்”                              –நான்மணி –2
          என்ற பாடலில் மூன்றடிகளால் உலகத்தை அளந்ததும் இந்திரணின் சூழ்ச்சியால் பெய்த பெருமழையினின்று மக்களைக் காப்பாற்ற கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்ததும் பாணாசுரனுடைய கோட்டையை அழித்ததுமான செயல்களை ஆசிரியர் ஒரே பாடலில் குறிப்பிட்டுகிறார். இதன் மூலம் சங்கப் புலவர்களும் கண்ணன் மீது பற்றுக் கொண்டிருந்தனர் என்பது புலனாகிறது.
முடிவுரை
     பண்டைய தமிழர்களின் உயிர்நாடியாக இருப்பது சமயம் இறைவழிபாடு என்பது தமிழர் தம் வாழ்வுடன் இணைந்த ஒன்றாக கருதப்பட்டது. பழமையான நூல்களான தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கிய நூல்களான பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய நூல்களின் மூலம் தமிழர்களின் வீரம், காதல், இறைவழிபாடு, வாழ்க்கை முறை போன்றவற்றை அறிய முடிகிறது. இதன் மூலம் சங்க காலத்திற்கு முன்பே திருமால் வழிபாடு மக்களிடம் பரவி உள்ளதை அறிய முடிகிறது. ஆயர்கள் தங்களின் வழிபடு தெய்வமாக் திருமால் (மாயோன்) வழிப்பட்ட செய்தியை பல்வேறு சான்றுகள் மூலம் அறிகின்றோம்.
பார்வை நூல்கள்
1.தமிழ் இலக்கியங்களில் வைணவம் – இந்திரா பார்த்தசாரதி
2.தமிழ்ப் பண்பாடு – முனைவர் க.த. திருநாவுக்கரசு
3.தமிழகப் பண்பாடு – அ.கா.பெருமாள்.
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் வ. கலையரசி
உதவிப் பேராசிரியர்,
பதிப்புத் துறை,
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம் , ஆந்திரா –517426.

 

 

சங்க இலங்கியங்களில் கண்ணன் pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »