Abstract
Thinai, the ecological-cultural land classification that underlies classical Sangam poetics, organizes Tamil landscape into five zones kurinji (hills), mullai (forest-pasture), marutham (agricultural plains), neithal (coastal-marine), and palai (arid wasteland) each correlated with a distinct mode of life, occupation, and presiding deity. This paper synthesizes two lines of enquiry into how the post-Sangam epic Silappathikaram inherits and redeploys this framework. First, it examines the theoretical architecture of thinai as codified by Tholkappiyam and shows how the epic’s tripartite narrative movement across Puhar, Madurai, and Vanchi is itself organized along thinai lines, with agam (interior/emotive) conventions of landscape recurring at the level of kaviya (epic) structure. Second, it maps the five thinai deities named or implied in the epic Murugan for kurinji, Mayon/Thirumal for mullai, Indiran for marutham, Varunan for neithal, and Kotravai for palai – tracing the textual evidence for each across specific cantos (kurinjikkuravai, ஆய்ச்சியர் குரவை, இந்திரவிழவூரெடுத்த காதை, கானல் வரி, and வேட்டுவ வரி). The study further notes the layering of Jain religious motifs by Ilango Adigal onto this older deity-based framework, arguing that Silappathikaram functions as a crucial literary bridge that preserves and transmits the Sangam-period thinai-deity correspondence into the classical epic tradition, while simultaneously accommodating the poet’s own religious affiliation. The paper concludes that a thinai-based reading of Silappathikaram offers a unified way of understanding its geography, its narrative sequencing, and its religious symbolism as facets of one underlying cultural logic.
Keywords: Silappathikaram, Thinai, Sangam literature, Tholkappiyam, Kurinji, Mullai, Marutham, Neithal, Palai, Murugan, Thirumal, Indiran, Varunan, Kotravai, Tamil epic, land classification, agam poetics
“சிலப்பதிகாரத்தில் திணைக்கோட்பாடும் ஐந்திணைத் தெய்வங்களும்”
முன்னுரை
தமிழர் பண்பாட்டு வரலாற்றில் நிலம் என்பது வெறும் புவியியல் அமைப்பு மட்டுமன்று; அது மனிதனின் வாழ்க்கை முறையையும், பொருளாதாரத் தொழிலையும், உணர்வு நிலையையும், வழிபாட்டு முறையையும் தீர்மானிக்கும் அடிப்படை ஆகும். சங்க இலக்கியக் காலத்திலேயே இறை வழிபாடு தோற்றம் பெற்றுவிட்டதாக அறியமுடிகிறது. அதற்கு முன்பாக பண்டைய தமிழர்கள் முதலில் இயற்கையை வழிபட்டனர்; அதன் பின்னர் தோற்றம் பெற்றதே தெய்வ வழிபாடாகும். தமிழ் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்து வாழ்ந்து வந்த சங்கத் தமிழர், நிலங்களுக்குரிய தெய்வ வழிபாட்டையும் உடன் கொண்டிருந்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவை ஐந்திணை எனவும், அன்பின் அகத்திணை எனவும் அழைக்கப்பெற்று அமைகிறது; பொதுவாக இவ்வைந்திணையின் கடவுளர் முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை எனவரிசைப்படுத்தப்படுகிறது.
தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கு முதன்மை நல்குகிறது. குடிமக்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு படைக்கப்பட்ட இக்காப்பியம் சேர, சோழ, பாண்டிய நாட்டின் நாட்டுவளம், நகர்வளம் போன்றவற்றை விளக்குகிறது. ஒரு நாட்டின் தன்மையானது அந்நாட்டில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையதாகும். அவ்வகையில் சிலப்பதிகாரத்தை திணைக்கோட்பாட்டு நோக்கில் அணுகும்போது, ஐந்திணையையும் அதன் தெய்வங்களையும் இணைத்துக் காணும் ஒரு முழுமையான பார்வை கிடைக்கிறது. இக்கட்டுரை அத்தகைய இரட்டைப் பார்வையை திணைக்கோட்பாட்டு அமைப்பையும், திணை தெய்வ வழிபாட்டையும் ஒருங்கிணைத்து முன்வைக்கிறது.
திணை – சொற்பொருள் விளக்கம்
திணை என்ற சொல் தமிழ்மொழியில் பல பொருள்களில் வழங்கி வருகிறது. முதன்முதலில் திணை என்ற சொல் நிலத்தையே சுட்டியிருக்கக்கூடும். இவ்வாறே முதலில் அவ்விடத்தில் தோன்றிய மக்களின் குடியிருப்புகளையும், குடிமைகளையும் குறிக்கலாயிற்று. ‘திணை’ என்ற சொல் காலத்திற்கு ஏற்ப பொருள் மாற்றமடைந்து வந்தது. நிலத்தைக் குறித்த திணை என்ற சொல் பின்னர் அந்நிலத்தில் வாழ்ந்த மக்களின் ஒழுக்கங்களைச் சுட்டுவதாய் அமைந்தது. இவ்வாறு நிலம், வீடு, குலம், குடிமை, குடி, ஒழுக்கம் போன்ற பல பொருள்களில் ‘திணை’ என்ற சொல் வழக்கப்பட்டு வந்ததை அறியலாம்.
தொல்காப்பியர் ஐந்திணைக்குரிய பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என வரையறை செய்கிறார். நிலமும் பொழுதும் முதற்பொருள் எனவும், தெய்வம் முதலான வேறொவ்வொரு பொருளொடு வருபவை கருப்பொருள் எனவும் உரிப்பொருள் என்பது ஐந்திணைக்குரிய ஒழுக்கமாகவும் அமைகின்றது. கருப்பொருளை வரிசைப்படுத்தும்போது தொல்காப்பியர் தெய்வத்தை முதன்மைப்படுத்தி அமைக்கிறார்:
“தெய்வம் உணாவே மாமரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியோடு தொகை இ
அவ்வகைப் பிறவும் கருவென மொழிப” (தொல். பொருள். அகம். 4)
என்ற நூற்பாவின் வழியறிய முடிகின்றது. மேலும்,
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” (தொல். பொருள். அகத். 5)
என்று தொல்காப்பியனார் ஐந்திணை நிலங்களுக்கும் அவற்றுக்குரிய தெய்வங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பினை நேரடியாகவே பதிவு செய்கிறார். இந்த மரபை அடியொற்றியே சிலப்பதிகாரமும் தன் காவியத் தளத்தில் திணை-தெய்வ உறவை வெளிப்படுத்துகிறது.
சிலப்பதிகாரத்தில் திணைக் கோட்பாடு
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலங்களின் தன்மைகளும், வாழ்க்கை முறைகளும் ஒருங்கே சிலம்பில் சொல்லப் பெறுகின்றன. ஐந்து நிலங்களும் அவற்றின் தன்மைகளும் இடம் பெறுகின்றன. புகார் காண்டத்தில் வரும் நாடுகாண் காதையில் மருத நிலத்தையும் மருத நில மக்களையும் பற்றி கூறுகிறது. கானல் வரி காதை நெய்தல் நிலத்தையும், நெய்தல் இன மக்களையும் பற்றிக் கூறுகிறது. மதுரை காண்டத்தில் இடம்பெறும் வேட்டுவரி பாலை நில தெய்வத்தையும் பாலை நில மக்களையும் பற்றிக் கூறுகிறது. ஆய்ச்சியர் குரவை முல்லை நிலத்தையும் முல்லை நில மக்களையும் பற்றிக் கூறுகிறது. வஞ்சிக் காண்டத்தில் உள்ள குன்றக் குரவை குறிஞ்சி நிலத்தையும் குறவர் இனத்தையும் கூறுகிறது. இவ்வாறே சிலப்பதிகாரத்தில் ஐந்திணைகளும் இடம் பெறுகின்றன.
முதற்பொருள்
குழுக்களாக வாழ்ந்த மனிதக் குலம் தஞ்சம் புகும் பகுதி ஒவ்வொன்றும் அவர்கள் வாழ்ந்த, வளர்ந்த பகுதிகளாகும். எனவே, ஒரு மனிதனின் வாழும் சூழலும், வாழ்க்கை முறையையும் நிர்ணயிப்பது அவன் வாழ்ந்த பகுதியேயாகும். தொல்காப்பியர் முதற்பொருள் பற்றி,
“முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” (தொல். பொருள். 4)
என்கிறார். நிலமும் பொழுதும் முதற்பொருளாகச் சுட்டுவதன் நிலப்பின்னணியில் காலம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தட்பவெப்பநிலை நிலத்தின் சூழல்களை மாற்றும் திறன் வாய்ந்தது. எனவே, நிலத்தைக் காலத்தோடு இயைத்துக் கூறுவது இலக்கிய மரபாகும். நிலத்தைப் புனையும் போது பருவமும் உடனியைந்து நிற்கும்; ஒன்றைவிட்டு ஒன்றைத் தனியே புனைவது இயலாது. இதனை நன்குணர்ந்த தமிழ்ச் சான்றோர் நிலத்தையும் பொழுதையும் முதற்பொருள் என்று கூறினர். இதனடிப்படையில் சிலப்பதிகாரத்தில் ஐந்திணை முதற்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்திணை நிலங்களும் அவற்றின் தெய்வங்களும்
குறிஞ்சி நிலமும் முருக வழிபாடும்
மலையும், மலையைச் சார்ந்த பகுதியும் குறிஞ்சி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. தமிழினத்தின் தனித் தெய்வமாகவும் குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகவும் முருகன் போற்றப்படுகின்றான். வஞ்சிக் காண்டத்தின் குன்றக்குறவையுள் மிகச் சிறப்பாக அடிகளார் சிறப்பிக்கின்றார். கண்ணகியின் பெலத்தை சேர மன்னனிடம் குன்றக் குறவர்கள் குறிப்பிட்டு குரவைக் கூத்தாடுகின்றனர். வள்ளிக்கூத்து, வேலன் வெறியாடல், குரவைக்கூத்து, ஆனை ஓட்டிய செய்திகள், கிரவுஞ்ச மாலை போன்ற பல செய்திகள் இக்காதையில் இடம் பெற்றுள்ளன. செவ்வேள், வேலன் என்ற பெயர்கள் முருகனைக் குறிக்கின்றன. கோவலனது அழகுக்கு முருகனது அழகை இணையாகக் கூறுமிடத்து, இளங்கோவடிகள்,
“கண்டேத்துஞ் செவ்வேளொன்று இசை போக்கிக் காதலாள்
கொண்டேத்தும் கிழமையான கோவலன்” (. 38-39)
என்கிறார். கண்ணகியை புகழுமிடத்து அவளின் கண்கள் முருகனின் வேல் இரண்டு கூறான கண்கள் ஆனதோ என்னும்வாறு காட்டி ஆசிரியர் கூறுகிறார். மேலும் குன்றக்குறவையில், ‘தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே’ என்று கண்ணகியைப் பார்த்துப் புகழ்ந்து பாடும்படியாக விழா எடுக்கும் நிலை காட்டப்படுகிறது; செங்குட்டுவன் மலைவளம் காணச் சென்றபோது நிகழ்ந்த செய்திகளாகக் குறவர்களின் குன்றக் குரவையும் கொடிச்சியர் பாடலும் எழுப்பும் ஒலியும் புலியுடன் போரிடும் யானையின் பிறிற்றொலியும், புனத்தின்கண் புள்ளோட்டியோர் என்னும் ஒலிகளாலும் மலைநிரம்பி இருக்கின்றது எனச் சொல்லப்படுகிறது. குட்டுவனுக்குக் குறவர் தந்த பொருட்களாக மலையில் கிடைக்கும் அனைத்து வகையான நறுமணப் பொருள்களும், விலங்குகளும் குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு குறிஞ்சி நில வாழ்வு சொல்லப்படுகிறது.
முல்லை நிலமும் மாயோன்/ திருமால் வழிபாடும்
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமாக அமைகிறது. முல்லை நிலத்திற்கு மேய்ச்சல் தொழில் சிறப்புற்றிருந்தது. முல்லை நிலமாகிய காட்டு நிலத்தின் வழி இயல்பு காதை மற்றும் வேட்டுவ வரியில் சொல்லப்பட்ட போதும் முல்லை நிலத்திற்கே தொடர்ந்தான காதை மற்றும் வேட்டுவ வரியில் அய்ச்சியர் குரவை ஆய்ச்சியர் வாழ்வியலை காட்டுகிறது:
“கொல்லை அம்சாரல் கருந்தொழுத்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேய் அவன்வாயில்
முல்லைஅம் தீங்குழல் கேளாமோ தோழி” (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை 26)
என்று ஆநிரை மேய்க்கும் முல்லை நில வாழ்க்கை சிலம்பில் சொல்லப்படுகிறது. முல்லை நிலத்தில் உள்ள ஆயர்களின் குலதெய்வம் திருமால் ஆவார். முல்லை நில வருணனை என்பதைவிட முல்லை நில ஆய்ச்சியர்களின் வாழ்க்கை தான் ஆநிரைகளின் பொருட்டு, குரவை கூடி ஆய மாயவனை வழிபடுதல் என்பதாகவே பெறுகிறது. காட்டில் ஆநிரைகளை மேய்த்து வாழும் ஆயர்களின் செயற்பாடுகள் ஆய்ச்சியர் குரவையில் விரிவாகச் சொல்லப்படுகின்றன.
மருத நிலத்தில் இந்திர வழிபாடு
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதநிலமாகும். வளமையுடன் செழுமையும் மருத நிலப் பண்பாகும். மரு நில தெய்வம் இந்திரன். இந்திரன் பற்றிய செய்திகள் பல காதைகளில் இருப்பினும் இந்திர விழாவூர் எடுத்தக் காதை சிறப்பு பெறுகிறது. இந்திரனுக்கு அரசனே விழா எடுத்த செய்தியும் இக்காதை வழி அறியமுடிகிறது. இந்திரவிழாவில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் அரச குமாரர்கள் போன்றோர் தேர், குதிரைகளில் வந்து அவனை வாழ்த்திக் காவிரி நிரைப் பொற்குடங்களில் கொணர்ந்து இந்திரனுக்கு நீராட்டுதல் பகுதிகளும் புகார் நகரின் மருவூர்ப்பாக்கம் எனும் இருபெரும் பட்டினப்பாக்கம் எனும் இந்திரவிழா நாளில் மெருகுடன் விளங்கியதையும் இக்காதை காட்டுகிறது. வெண் கொற்றக் குடையின் கீழ் விளங்கும் வேள்விகள் நடைபெற்றன என்பதனை,
“மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்”
(இந்திர விழாவூரெடுத்தக் காதை 173)
என்ற வரி இந்திரனுக்கு விழா எடுத்ததையும், இந்திர வழிபாடு பற்றியும் தெளிய முடிகின்றது. இந்திரன் மிகவும் போற்றப்பட்ட தெய்வமாகவும், கடவுளர்களுக்கெல்லாம் தலைவனாகவும் விண்ணவர் கோமான், தேவன் மகன், அமரர் தலைவன் என்று பல்வேறு இடங்களில் அடிகளார் உயர்த்தியே பேசுகிறார்.
நெய்தல் நிலக் கடவுள் – வருணன்
தொல்காப்பியத்தில் நெய்தல் நிலத்திற்கு வருணன் தெய்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வருணன் மழைக்குத் தெய்வமாக அமைகிறார். நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த இடமாக அமைகிறது. இந்நிலத்தில் வருணன் கடவுளாகவும் போற்றப்படுகின்றான். சிலப்பதிகாரக் கானல் வரிப் பாடல்களில் “மாக்கடல் தெய்வம்” என வருணன் போற்றப்படுகின்றான். வருண பூதம் பற்றிய செய்திகளையும் பல இடங்களில் தருகிறது:
“ கடற்நெய்வம் காட்டிக் காட்டி” (கானல் வரி.5)
மாக்கடற் தெய்வரின் மலரடி வணங்குவம் (கானல் வரி.51-4)
என்னும் அடிகளில் நெய்தல் நிலத் தெய்வத்தை அடிகளார் குறிப்பிடுகின்றனர். வருணன் மழைக்கு தெய்வம் என்பதால் குறிப்பிட்ட நிலத்திற்கு மட்டுமின்றி அனைத்து நிலத்தவருக்கும் குறிப்பிட்ட நிலத்திற்கு மட்டுமின்றி அனைத்து நிலத்தவரும் போற்றும் தெய்வமாகவும் விளங்குகிறார்.
பாலை நிலத் தெய்வம் – கொற்றவை
பாலை நிலத்திற்கென தனிக் கடவுளைத் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை எனினும், சிலப்பதிகாரம் கொற்றவையை பாலை நிலத் தெய்வமாக குறிப்பிடுகிறது. வேட்டுவரியில் கொற்றவை வழிபாடு பற்றி இளங்கோவடிகள் கூறுகிறார். கொற்றவையின் கோயில் மதுரைக்கு வரும் வழியில் கீழ்திசையிலும், மதுரையை விட்டுப் போகும் வழியில் மேற்றிசையிலும் இருந்தன என்பதை சிலம்பு வழி அறியமுடிகிறது. எவ்வாறு இருப்பினும் பாலை நிலத் தெய்வமாகவே கொற்றவை வழிபாடு அமைகிறது. கிளி, பறவை, மயில், பருந்து, காணங்கோழி போன்றவற்றை கையில் கொடுத்து பின்னர், சுண்ணப்பொடி சந்தனமும், எள்ளுருண்டையும் நினைச்சோறும் படையலாகப் படைத்து பறையொளி முழங்க வேட்டுவர் கொற்றவைக்குப் பூசை செய்து விழா கொண்டாடினர் என்பதை அறியலாம்.
சிலம்பில் ஐவகை நில கடவுளர்கள்
சமய நல்லிணக்கத்தை இளங்கோவடிகள் கையாண்டுள்ளார். சமண சமயத்தைச் சார்ந்த இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகார காப்பியமும் சமண சமயத்தைச் சார்ந்து, சமயப் பொதுவடைமையையும் ஒற்றுமையையும் காப்பியத்தில் அடிகளார் வலியுறுத்தியுள்ளார். இந்து, சமணம், பௌத்தம் ஆகிய சமயக் கருத்துக்களை காப்பியத்தின் வழி காணமுடிகிறது. சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாக சிலப்பதிகாரம் அமைவதால் அகம் புறம் சார்ந்த செய்திகள் இடம்பெறுகின்றன. அகப்பொருளின் நிலம் சார்ந்த தெய்வங்களை காப்பியத்தில் எடுத்துக்காட்டியுள்ளார். இவ்வாறு பழைய திணை- தெய்வ மரபையும் தன் காலத்திய சமண மத நோக்கையும் ஒரு சேர இயைத்துக் கொண்டு செல்கிறார் இளங்கோவடிகள்.
முடிவுரை
தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரம் திணைக்கோட்பாட்டு நோக்கில் காணும் போது, தொடர்நிலைச் செய்யுள் காப்பியத் தன்மையில் வாழ்வில் பெரும்பரப்பைப் பற்றி பேசும் இலக்கியமாக உள்ளது. அந்த வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைக் கூறுகளும் சிலப்பதிகாரத்தில் இணைந்துக் காணப்படுகின்றன. ஐந்திணை மரபு சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து சிலப்பதிகாரத்திலும் மிகுந்து காணப்படுவதை இதன் மூலம் அறியலாம். ஐந்திணை தெய்வங்கள் பற்றி சிலப்பதிகாரம் குறிப்பிடுவது மட்டுமல்லாமல், மற்ற தெய்வங்களையும் குறிப்பிடுகிறது. சமயப் பொதுமை நோக்குடையவர் என்னும் தமிழ் மக்கள் தங்கள் நிலத்திற்கு ஏற்ற கடவுளை வணங்கி வாழ்க்கையை வளமுடன் நடத்தினர் என்பது இக்கட்டுரை வாயிலாக அறியமுடிகிறது. மொத்தமாகக் கூறின், சிலப்பதிகாரத்தின் புவியியல் அமைப்பு, அதன் காவிய அமைப்பு (புகார்-மதுரை-வஞ்சி), மற்றும் அதன் சமய அடையாளம் ஆகிய மூன்றும் ஒரே திணைக் கோட்பாட்டு தர்க்கத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகளாகவே காணப்படுகின்றன.
References / துணைநூற்பட்டியல்
1.Sivaa, V. “A Study on Thinai Concept in Silappathikaram.” LFS – Literary Findings, ISSN 2278-2311, 01 June 2019, pp. 29-31.
2.Sivaa, V. “Cultural Elements in Tamil Epic Literature.” Pannaattuk Karuthharangam – Tamil Ilakkiyathil Panpaattup Pathivugal, 21 January 2017, ISBN 978-1-941505-59-5, pp. 162-164.
3.Ilango Adigal. Silappathikaram.
4.Tholkappiyar. Tholkappiyam, Porula
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
வே. சிவா
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ் உயராய்வுத் துறை,
வி. இ.டி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி,
திண்டல், ஈரோடு- 638 012.





