Monday, August 3, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் Silappathikaram – Kamba Ramayanam: Identifying Literary Parallels (Part – Two)|Dr. G.Mangaiyarkkarasi

Silappathikaram – Kamba Ramayanam: Identifying Literary Parallels (Part – Two)|Dr. G.Mangaiyarkkarasi

சிலப்பதிகாரம் -கம்பராமாயணம் இலக்கிய ஒப்புமை காண்டல்
Abstract
        Silappadikaram, one of the five great epics, was composed by Ilango Adigal in the 2nd century AD. It is a text that narrates the life of Kovalan and Kannagi. It comprises three chapters (Kandams)—Puhar Kandam, Madurai Kandam, and Vanji Kandam—and contains 30 cantos (Kathais).  Its core themes (Paavigam) dictate that righteousness becomes the death deity for rulers who deviate from justice, the noble shall praise a chaste woman of exemplary character, and destiny will relentlessly pursue and manifest itself. References to the Ramayana are also mentioned in Silappadikaram. In the 12th century AD, Kaviraja Kamban, adhering to a sublime poetic style, wrote the ‘Ramavataram’ (popularly known as Kambaramayanam) to extol the greatness of the supreme hero, Rama. It holds the distinction of having 6 chapters (Kandams), 123 sections (Padalams), and 10,500 verses. Its core moral theme is that righteousness will triumph and vice will fail. Although ambaramayanam is an adaptation of Valmiki’s Ramayana, Kamban’s poetic brilliance surpasses the original text in many places. Several concepts mentioned in Silappadikaram are also found in Kambaramayanam. Following the method of literary comparison, this essay explores the instances where the concepts of Silappadikaram and Kambaramayanam align with each other.
Key Words
Silappathikaram, Kamba Ramayanam, Similarities, Ideas, Identifying Literary Parallels

சிலப்பதிகாரம் -கம்பராமாயணம் இலக்கிய ஒப்புமை காண்டல்  (பகுதி – இரண்டு)

 ஆய்வுச்சுருக்கம்
    ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றினார். கோவலன், கண்ணகி வாழ்க்கையைக் கூறும் நூல். புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற மூன்று காண்டங்களையும், 30 காதைகளையும் உடையது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற பாவிகத்தை உடையது. சிலம்பில் இராமாயணச் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. கவிச்சக்கரவர்த்தி கம்பர் நடையில் நின்று உயர் நாயகன் இராமனின் பெருமை கூறும் நூலான இராம அவதாரத்தை கிபி 12ஆம் நூற்றாண்டில் எழுதினார். 6 காண்டங்களையும், 123 படலங்களையும், 10,500 பாடல்களையும் கொண்ட சிறப்பு உடையது. அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதே இதன் பாவிகமாகும். வால்மீகி இராமாயணத்தின் வழிநூலே கம்பராமாயணம் என்றாலும், கம்பர் நூலில் பல இடங்களில் மூல நூலையே மிஞ்சும் அளவிற்கு சிறப்பாகப் பாடியுள்ளார். சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் கம்பராமாயணத்திலும் காணப்படுகின்றன. இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற முறைப்படி சிலப்பதிகாரம், கம்பராமாயணம் கருத்துக்கள் ஒன்று போல் காணப்படும் இடங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
திறவுச்சொற்கள்
சிலப்பதிகாரம், கம்பராமாயணம், ஒற்றுமைகள், கருத்துக்கள், இலக்கிய ஒப்புமைக் காண்டல்
முன்னுரை
      சிலப்பதிகாரத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் இடையே ஒப்புமை காண்பது, இலக்கியத் திறனாய்வுக்கு ஒரு வழியாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர் தம் நூலில் மூலநூலையே மிஞ்சியிருக்கிறார். சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களைக் கம்பராமாயணத்தில் காணமுடிகிறது.சிலப்பதிகாரம், கம்பராமாயணம் ஆகிய இரு இலக்கியங்களிலும் ஒரே செய்திகள் எவ்வாறு கூறப்பட்டுள்ளன என்று ஒப்புமை கூறப்பட்டுள்ளதை இலக்கிய ஒப்புமை காண்டல் என்பர். சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் எந்தெந்த இடங்களில் எல்லாம் ஒப்புமை பெற்றுள்ளன என்பதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
இரண்டு நூல்களிலும் காணப்படும் இலக்கிய ஒப்புமைகள்
கொடி அசைதல்,போர்க்களத்தில் அஞ்சி ஓடுதல், உருவெளித்தோற்றம், பூளைப் பூ, அடைக்கலம் அளித்தல், சோதிடம் குறித்தப் பதிவுகள், முரசறைந்து திருமணச் செய்தி கூறுதல், சூளுரை, அரவாணிகள், தானம் ,காவிரி, கள்,பறவைகள்,சடங்கு பெயர்சூட்டல், ஆகியவை இந்த இரு நூல்களிலும் கூறப்பட்டுள்ளன.
கொடி அசைதல்
சிலப்பதிகாரத்தில் கோவலனும், கண்ணகியும் கவுந்தியடிகளுடன் மதுரை மாநகரை அடைந்தனர். வானவர் உறையும் மதுரை  நகரை வலம் வந்தால் மிகவும் நன்மையுண்டாகும் என்று கருதி, அலைதற்கரிய காவல் காடு சூழ்ந்த அகழியைச் சுற்றிச் சென்றனர். அப்போது அகழியில் மலர்ந்துள்ள குவளை மலரும், அல்லி மலரும், தாமரை மலரும் ஆகிய இவை கண்ணகிக்கும், கோவலனுக்கும் நிகழப்போகும் துன்பத்தை முன்னரே அறிந்து கொண்டனபோல வண்டுகள் தம்மிடம் இருந்து பாடும் ஒலியே அழுகை ஒலி போல் விளங்க கண்ணீரைச் சொறிந்தன. கால்கள் நடுங்கின. பகைவரை வென்றதற்கு அறிகுறியாக மதிலின் மீது கட்டப்பட்டுள்ள கொடிகள் கோவலன் கண்ணகியைப் பார்த்து, இந்த நகருக்கு நீங்கள் வர வேண்டாம் என்று தன் கையால் மரித்து காட்டுவன போல அசைந்து பறந்து கொண்டிருந்தன என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.
 “தையலும் கணவனும் தனித்து உறு துயரம்
ஐயமின்றி அறிந்தன போலப்
பண்நீர் வண்டு பரிந்தினைந்து ஏங்கிக்
கண்நீர் கொண்டு காலுற நடுங்கப்
போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட”   
                                                     (புறஞ்சேரி இருத்த காதை 186 – 190)
     கம்பராமாயணத்தில் காற்றில் கொடிகள் அசைவது இயற்கையான  நிகழ்ச்சி. ஆனால் கவிஞர் காவலில் சிறந்த மிதிலை நகரம், நான் செய்த தவத்தினால் லட்சுமி குற்றமற்ற தாமரை மலரைப் பிரிந்து இங்கு அவதரித்து இருக்கிறாள் என்று கூறி, செந்தாமரை போன்ற விழிகள் பெற்ற இராமனைச் சிறந்த அழகிய கொடிகள் என்னும் கைகளை உயிரைத் தூக்கி அசைத்துக் காட்டி விரைவாக இங்கே வா என்று அழைப்பது போல இருந்தது.
 “மை அறு மலரின் நீங்கியான் செய் மாதவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழு மணிக்கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வா என்றுஅழைப்பது போன்றது அம்மா”
                                                (மிதிலைக் காட்சிப் படலம் 486)
என்று வருவதால் இப்பாடல் தற்குறிப்பேற்ற அணியில் அமைந்துள்ளது.
கொடிகள் அசைவது என்பது இயற்கையானது. ஆனால் சிலம்பில் கொடிகள் அவர்களை வராதீர்கள் என்று கூறியதாகவும், கம்பராமாயணத்தில் இராமனை  விரைவாக வருக என அழைத்தது போலவும் பாடப்பட்டுள்ளது.
போர்க்களத்தில் அஞ்சி ஓடுவதை நகைச்சுவையாகக் கூறுதல்
      சிலம்பில் சேரன் செங்குட்டுவனின் வடநாட்டு போரில் தோற்ற பகைவர்கள் பல்வேறு விதமான மாறுவேடம் கொண்டு தப்பி ஓடினர். முனிவர்கள் போல் ஜடை முடி தாங்கியும், காவி உடுத்தியும், நெற்றியிலும், உடம்பிலும் திருநீறு பூசியும், சமண மத துறவியும் போல் மணையும், மயில் தோகையும் தத்தம் கைகளில் எடுத்துக்கொண்டும் வாழ்த்திப் பாடும் பாணர் போலவும், கூத்தர் போலவும், தோளிலும் சுமந்தும் மாறுவேடம் கொண்டு பல இடங்களுக்கு ஓடி மறைந்து விட்டனர்.
 “சடையினர் உடையினர் சாம்பல் பூச்சினர்
பீடிகைப் பீலிப் பெரும் நோன்பாளர்
பாடு பாணியர் பல்லியத் தோளினர்
ஆடு கூத்த ராகி எங்கணும்
ஏந்து வான் ஒழியத் தாம் துறை போகிய
வீச்சைக்கோலத்து வேண்டுவயின் படர்தர”  (கால்கோட்காதை – 225 – 230)
        கம்பராமாயணத்தில் திரிசரன், இராமன் அம்பினால் இறந்ததைக் கண்ட படையில் உள்ள வீரர்கள் அஞ்சி ஓடினர். சிலர் அம்பால் புண்பட்டு துளை போடப்பட்டுள்ள யானைகளின் வயிற்றினுள் புகுந்து மறைந்து கொண்டனர். உள்ளே புகும்முன் ஆடும் தலையற்ற முண்டங்களை நோக்கி நண்பர்களே, யாங்கள் மறையும் இடத்தைக் காட்டிக் கொடுக்காதீர்கள் என்று வேண்டிப் புகுந்தனர்.
 “மண்டி ஓடினர் சிலர் நெடுங் கட கரி வயிற்றில்
புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார்
தொண்டை நீங்கிய கவந்தத்தைத் துணைவ நீ எம்மைக்
கண்டிலன் எனப் புகல் என கை தலைக் கொள்வார்”  
                                                                              (கரன்வதைப்படலம் 499)
உருவெளித் தோற்றம்
      உருவெளித் தோற்றம் என்பதற்கு இடைவிடா நினைப்பினால், எதிரில் உள்ளது போல் தோன்றும் போலித் தோற்றம் என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி பொருள் தருகின்றது. உருவெளித் தோற்றம் என்பதனை மன நினைவின்படி ஒருவருக்கு கட்புலனாகும் தோற்றத்தை மனதில் வேறு நினைவுள்ள பிறர் காண இயலாது. உள்ளத்தில் ஊன்றியுள்ள நினைவே உருவெளியில் உருப்பெற்று தோற்றமளிப்பது. ஆதலால், அவரவர் நினைவில் உள்ளதே அவரவருக்கு உருவெளித் தோற்றமாகக் காட்சி வழங்கும் என்றும் குறிப்பிடுவர்.
சிலம்பில் உருவெளித்தோற்றம்
      கோவலன் இறந்து கிடப்பதைக் கண்ட கண்ணகி தன் கணவனுடைய மார்பைத் தன் மார்போடு பொருந்தும் வண்ணம் தழுவிக் கொண்டாள்.அவன் உயிர்ப் பெற்று எழுந்து நின்று கண்ணகியை நோக்கி, ‘முழுமதி போன்ற முகம் இப்படி வாடி விட்டதே’ என்று கூறி, அவள் கண்ணீரைக் கையால் துடைத்தான்.கண்ணகி புலம்பி அழுது நிலத்தில் விழுந்து, தன் காதலனுடைய தொழத்தக்க திருவடிகளை தனது வளையல் அணிந்த இரு கைகளாலும் பற்றிக் கொண்டாள்.பழுதற்ற உடலை விட்டு நீங்கி எழுந்தவன் ‘ எழுதிய அழகிய மலர் போன்ற மை தீட்டிய கண்களையுடையவளே நீ இங்கு இருப்பாயாக’ எனக் கூறி பல தேவர் கூட்டத்துள் ஒருவனாய் விண்ணிலம் அடைந்தான்.இறந்தப் பின் அவனுடைய உருவெளித் தோற்றம் கண்டாள்.
 “பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்
எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான்”
                                                                                       (ஊர்சூழ்வரி 66-67)
       கம்பராமாயணத்தில் இராமனின் உரு வெளித் தோற்றம் கன்னி மாடத்தில் நின்றிருந்த சீதை வீதி வழியேச் செல்லும் இராமனைக் கண்டு தன் உள்ளத்தில் காதல் கொண்டாள். என் மனதில் பதிந்தவை அவனுடைய மார்பும், தாமரைத் தாள்களும் என்னும் இவை அல்ல. ஆண் யானையைப் போல நடந்து சென்ற நடை அழகே என் மனதில் நிலைத்துள்ளது. அவன் யார் என்று ஆராய்ந்து கூறினால், அவருடைய தாமரை போன்ற கண்கள் இமைப்பதால், அவன் தேவலோகத்தில் உள்ளவன் அல்லன். வில்லை உடையவன். பூணூலைப் பூண்டவன். ஓர் இளவரசனாகவே இருத்தல் வேண்டும். என்னுடன் பிறந்த நல்லவையான பெண்மைக் குணங்களையும், மன உறுதியையும் ஆகிய கட்டமைந்த எந்திரங்கள் சுழன்று திரியும் எனது கன்னித் தன்மை என்னும் பெரிய மதிலை அழித்த அக்குமரனை, இன்னொரு முறைக் கண்ணால் கண்டு அனுபவித்தப் பின், உயிர்ப் போவதானாலும் உடன்படுகிறேன். அவனை மீண்டும் காண முடியுமா? என்னும் இவற்றையும், இவைப் போன்றவற்றையும் சீதை கூறிய போது, இராமனின் உருவெளித் தோற்றம் கண்டாள். அதனால் அவன் இங்கே நின்றான் என்றாள், இங்கிருந்து நீங்கினான் என்றாள். சீதையின் விரும்பிய மனதிலேயே மிகுந்த காதல் வேட்கையால் ஒன்றன்று, பலவற்றையும் நினைத்து உருகினாள்.
“என்று இவை இனையன விளம்பும் வந்து எதிர்
நின்றனன் அவன் எனும் நீங்கினான் எனும்
கன்றிய மனத்து உறு காம வேட்கையால்
ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே”  
                                                                   (மிதிலைக் காட்சிப் படலம் 544)
      இவை எல்லாம் இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் நடைபெறுவதற்கு முந்தைய நிகழ்ச்சிகளாகும்.
பூளைப்பூ
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் கனாத்திறம் உரைத்தக் காதையில் பூளைப் பூ குறித்துக் கூறப்பட்டுள்ளது.
“அறுகு சிறுபூளை நெல்லொடு தூயஉய்ச் சென்று”
                                                (கனாத்திறம் உரைத்த காதை 43)
  என்று அறுகம்புல், சிறு பூளைப்பூ, நெல் ஆகியவற்றைத் தூவி சாத்தன்கோவிலில் வணங்கியது குறித்து அறியமுடிகிறது. கம்பராமாயணத்தில் இராமன், இராவணனிடம் பேசுதல் முதல் நாள் போரில் இராவணன் தோற்றுவிட, இராமன் அவனுக்கு உயிர்ப் பிச்சை அளித்தான். மூன்று உலகங்களையும் ஆள்பவனே, உனக்குத் துணையாக அமைந்த படைகள் எல்லாம், காற்றில் மோதப்பட்ட பூளைப் பூப் போலானதைக் கண்டாய் அன்றோ. எனவே நீ இப்பொழுது போர்ப் புரிய இயலாதவன் ஆகின்றாய். ஆதலால், இன்று அரண்மனைக்குச் சென்று, நாளைக்குப் படையுடன் போருக்கு வருவாயாக என்று மிக்க இளமையுள்ள பாக்கு மரத்தின் மீது வாளை மீன் துள்ளிப் பாயும் நீர் வளம் கொண்ட கோசல நாட்டிற்கு உரியவனும், கருணையுடையவனுமான இராமன் கூறினான்.
“ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை யாயின கண்டனை இன்று போய் போர்க்கு
நாளை வா என நல்கினான் நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்”
                                         (முதற் போர்புரி படலம் 1212)
          ’மாருத மறைந்த பூளையாயன கண்டனை” என்று தோற்ற பின் இராமன் வாயால் கேட்டும் நிலைக்கு உரியவனாகின்றான்.
அடைக்கலம் அளித்தல்
             தன்னை அடைக்கலமாக அடைந்தவர்களைக் காப்பதே தலைசிறந்த அறமாகும். அடைக்கலம் அடைந்தவரை தன்னுயிர் தந்தும் காத்தல் வேண்டும். அடைக்கலம் பெற்றவராலேயே, அடைக்கலம் தந்தவர்க்கு துன்பம் ஏற்பட்டாலும், அது அடைக்கலம் தந்தவர்க்குப் புகழேயாகும். எனவே யார் வந்து அடைக்கலம் வேண்டினாலும் அடைக்கலம் தரவேண்டும். சிலப்பதிகாரத்தில் மதுரை ஊர்ப் புறத்திற்குச் சென்றபோது கவுந்தியடிகள் மாதரியைக் கண்டார். அவள், கவுந்தியடிகளின் திருவடிகளை வணங்கினாள். முதியவள். குற்றமற்றவள். பண்புடையவள். அவளிடம் கண்ணகியை அடைக்கலமாகத் தருவதில் குற்றம் ஒன்றும் இல்லை என்று கவுந்தியடிகள் எண்ணினார். அவளிடம் மாதரி கேட்பாயாக, இப்பெண்ணின் கணவனுடைய தந்தையின் பெயரை கேட்ட அளவில் அவன் குலத்தைச் சார்ந்தவர் பெறற்கரிய பொருளைப் பெற்றவர் போலத் தமது விருந்தினராக எதிர்கொண்டு அழைத்து  கண்ணகியுடன் அவள் கணவனையும் தமது காவல்மிக்க இல்லத்தில் தங்கச் செய்வர். அங்ஙனம் அச்செல்வம் உடையோர் இல்லத்தின்கண் செல்லும் வரை  உன்னிடம் இவளை அடைக்கலமாக அளிக்கிறேன் என்றார்.
 “மாதிரி கேள் இம்மடந்தை தன் கணவன்
தாதையைக் கேட்கில் தன் குலவாணர்
அரும் பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடம் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்
உடைப்பெருஞ்செல்வர் மனைப் புகு மளவும்
இக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்”  (அடைக்கலக்காதை 125-130)
               கம்பராமாயணத்தில் வீடணன் தன் அமைச்சர்களுடன் இராமன் இருக்கும் இடம் வந்து, அவனிடம் தன்னை அடைக்கலப்படுத்த வேண்டினான். அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் வீடணனுக்கு அடைக்கலம் கொடுக்கலாமா என்று கேட்டபின், தன் கருத்தாக அடைக்கலம் தரலாம் என்று இராமன் கூறி வீடணனுக்கு அடைக்கலம் அளித்தான்.
வீடணன் அடைக்கலம் பெற்றதை அறிதல்
          இராமனின் ஆணைப்படி சுக்ரீவன், வீடணனிடம் சென்று (தன்னை ஏற்பானோ, மாட்டானோ என்று கவலை கொண்டிருந்த மனமுடைய) “இராமன் உனக்கு அடைக்கலம் தந்தான். அப்பெருமானின் திருவடியை வணங்க விரைந்து வருவாயாக என்றான்.
 “வழுவல் இல் அபயம் உன்பால் வழங்கினன் அவன் பொற்பாதம்
தொழுதியால் விரைவின் என்று கதிரவன் சிறுவன் சொன்னான்”
                                                             (வீடணன் அடைக்கலப் படலம் 426)
சிலம்பில் அடைக்கலக்காதை என்ற தலைப்பிலும், கம்பராமாயணத்தில் வீடணன் அடைக்கலப்படலம் என்ற தலைப்பிலும் பாடப்பட்டுள்ளது.
சோதிடம் குறித்தப் பதிவுகள்
        சிலப்பதிகாரத்தில் கட்டுரைக் காதையில் மதுரையை எரி உண்ணுவதற்கு முன்பே ஆடித் திங்கள் தேய்பிறை பருவத்தில் கார்த்திகை மீனம் அஷ்டமி திதியும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமையில் மதுரை எரியுண்ணப்படும் அரசும் கேடுரும் என்பது அறிவிக்கப்பட்டிருந்ததாம்.
 “ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல் சேர் குட்டத்து அஷ்டமி 
வெள்ளிவாரத் தொள்ளெரி யுண்ண” (கட்டுரை காதை 132-135)
          நீர்ப்படைக் காதையில் சேரன் செங்குட்டுவன் ஒரு நாள் கங்கை கரையில் மாலை வேளையில் விண்ணில் பிறை தோன்றியதைக் கண்டான். உடனே ஜோதிடனை அழைத்து கேட்டபோது, வஞ்சி நீங்கி 32 திங்கள் ஆகிறது என்று கூறினான். கோவலன், கண்ணகியின் திருமணம் நல்ல நாள் பார்த்து செய்யப்பட்டது. வானில் செல்லும் சந்திரன், ரோகிணியைச் சாரும் நல்ல நாளில் அது நடைபெற்றது.
” வானூர் மதியம் சகடு இணைய வானத்து” (மங்கலவாழ்த்துப்பாடல் 50)
கம்பராமாயணத்தில் தசரதன், இராமனுக்கு முடி சூட்ட எண்ணியதை அமைச்சரவையில் பேசி அவர்களின் முடிவையும் அறிந்து கொண்டான். பின் அரசவையை விட்டு குற்றமற்ற நாளுடன் ஒரு மங்கள நேரத்தையும் பார்ப்பதற்காக ஜோதிட நூலை அறிந்தவர்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு மலையைப் போன்ற மற்றொரு மண்டபத்துக்குச் சென்றான்.
 “உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான்” (மந்திரப் படலம் 85)
அஸ்வமேத யாகம், புத்திர காமேஷ்டியாகம் செய்ய, இராமன், சீதை திருமணம் நடைபெற, பெயர் சூட்டு விழா, உபநயன விழா, முடி சூட்டு விழா என்று ஒவ்வொரு சடங்கின் போதும் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வின்போதும் ஜோதிடரிடம் கேட்டு நல்ல நாள் பார்த்து சடங்குகள் செய்யப்பட்டன.
திருமணச் செய்தியை முரசறைந்துஅறிவித்தனர்
           சிலப்பதிகாரத்தில் கோவலனும், கண்ணகியும் திருமணம் செய்து கொள்ளும் நாளில் பெற்றோர் திருமண நாளை தீர்மானித்தவுடன் யானை மீது சென்ற மகளிர் மணச் செய்தியை நகர் உள்ளோருக்கு முரசறைந்து அறிவித்தனர்.
“முரசியம்பின முருடதிர்ந்தன முறை எழுந்தன பனிலம் வெண்குடை”
                                                 (மங்கலவாழ்த்துப்பாடல் 46 – 47)
        கம்பராமாயணத்தில் இராமன் வில்லை வளைத்து, வெற்றி பெற்ற செய்தியைத், தூதர்கள் வந்து சொல்லக் கேட்ட தசரதன், மகிழ்ந்தான். இராமனுக்குத் திருமணம் நடைபெற இருக்கின்ற செய்தியை, ஊர் மக்களுக்கு முரசறைந்து சொல்லுவாயாக என்று ஆணையிட்டான். அதன்படியே வள்ளுவனும் தசரதனது ஆணையை, முரசறைந்து அறிவித்தார். (எழுச்சிப்படலம் 687, 688). மிதிலையில் இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் நாளை நடைபெற இருப்பதால், அதன் பொருட்டு மலர்களாலும், இந்த அழகான நகரத்தை மேலும் அழகு படுத்துங்கள் என்று ஜனகன் ஆணையிட்டான். அந்த ஆணையை ஏற்று, முரசை ஒலிக்கச் செய்து, வள்ளுவன் அறிவித்தான்.
 “மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக
தேன் அமர் குழலாள்தன் திருமணவினை நாளை
பூ நறு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று
ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான்“  
                                                                                          (கடிமணப்படலம் 1125)
           இவ்வாறு தசரதனும், ஜனகனும் திருமணச் செய்தியை நகர மக்களுக்கு முரசறைந்து அறிவித்ததை அறியமுடிகிறது.
சூளுரை
        சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் சூளுரை செய்ததைக் குறிப்பிடுகிறது. பத்தினி தெய்வமான கண்ணகிக்குச் சிலை அமைக்க சேரன் செங்குட்டுவன் விரும்பினான். சேரன் செங்குட்டுவன் சிலை அமைத்தற்குரிய கல்லைக் கொணர, வட திசைக்குப் புறப்பட்டான் எனும் செய்தி எங்கும் பறையறைந்து தெரிவிக்கப்பட்டது. பெருமையுடன் விளங்கும் வெண்கொற்றக் குடையையுடைய சேரன் ஆற்றல்மிக்க சேனைத் தலைவருக்கெல்லாம் கூறுவானானான். “இமயமலையினின்றும் இங்கு வந்த முனிவர்கள் இப்பொழுது அறிவித்த பொருந்தாத வாழ்க்கையினுடைய வடபுல வேந்தர்களின் பழிச்சொல் எம்மிடத்தில் கிடைப்பதாயின், அது சோழ, பாண்டியர் எம்மை இகழ்வதற்கு இடமாகிவிடும் ஆதலின், வடநாட்டில் உள்ள அரசர்களின் முடித்தலை மீது பத்தினிக் கடவுளுக்கு உருவம் எழுதுவதற்குரிய கல்லை ஏற்றுக்கொண்டு வருவேன் அவ்வாறன்றி எனது வெற்றி வாள் வறிதே மீண்டு வருமாயின், நெருங்கிய வீரக்கழல் அணிந்த கொடிய போர்க்கோலத்தோடே சென்று பகைவர்களை அச்சத்தால் நடுங்கச் செய்யாமல், பயன் மிகுந்த நாட்டில் உள்ள குடிமக்களை நடுங்கச் செய்யும் கொடுங்கோலன் என குடிபழி தூற்றும் இழித்தகைமை உடையவன் ஆவேன் என்று வஞ்சினம் கூறினான்.
“நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்குஅஃது
எம்பால் வேந்தர்க் கிகழ்ச்சியும் தரூஉம்
வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக்
கடவு ளெழுதவோர் கல்கொண் டல்லது
வறிது மீளுமென் வாய்வா ளாகில்
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பில்
குடிநடுக் குறூஉம் கோலே னாகென
ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும்”  (கால்கோட்காதை 11-20)
    இவ்வாறு சேரன்செங்குட்டுவன் வஞ்சினம் கூறினான். கம்பராமாயணத்தில் இராமன்  வஞ்சினம் கூறியது கூறப்பட்டுள்ளது. அறம் வலுவாத நெருங்கினரான முனிவர்களின் பெருமையை மறந்த அந்த அரக்கர்களின் வலிமையை அழிக்காமல் இருப்பதைவிட, நான் இறந்து போவதே மேல் என்று இராமன் சூளுரைக்கின்றான். நான் பிறந்ததன் பயனே உங்களுக்கு நன்மை செய்வதை விட, வேறு எந்த பேறு என்னை சேரப்போகிறது என்று இராமன் கூறுகிறான்.
“அறம் தவா நெறி அந்தணனர் தன்மையை
மறந்த புல்லர் வலி தொலையேன் எனின்
இறந்து போகினும் நன்று, இது அல்லது
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? ” (அகத்தியப்படலம்134)
அரவாணிகள்
சிலம்பில் அரவாணிகள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.மதுராபதி தெய்வம் குறித்துக் கூறும் போதும், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் எடுக்கச் சென்று கங்கை ஆற்றில் நீராடச் சென்ற போதும், சேரமாதேவி வேண்மாளின் அந்தப்புரத்தில் காவலர்களாக திருநங்கையர் இருந்தனர் என்று கூறும் போதும் ஆகிய மூன்று இடங்களிலும் அரவாணிகள் குறித்த பதிவுகள் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன
 “கூனும் குறளும் கொண்டன ஒருசார்
வண்ணமும் சுண்ணமும் மலர்ப் பூம் பிணையலும்
பெண்ணணிப் பேடியர் ஏந்தினர் ஒருசார்”  (நடுகற்காதை 58-60)
          என்று கூறியுள்ளது. கம்பராமாயணத்தில் கவந்தன், பண்டைய உருப் பெற்று விண்ணில் செல்லும்போது, தனக்கு சாப விமோசனம் தந்த இராமனைப் போற்றிப் புகழ்கிறான். உலகத்தில் காண்கின்றவர்களும், காணப்படுகின்ற பொருள்களுக்கும் இருப்பிடமாகி, எல்லாப் பொருள்களிடமும், பற்றுக் கொள்கின்றவனைப் போல நிற்கிறாய். ஆனால் அவற்றின் நன்மை, தீமைகளை நீ பெறுவது இல்லை. மிகுந்துள்ள திறமையால், பிரளய காலத்தில், இந்த உலகங்கள் அழிந்துவிடாதபடி உன் வயிற்றிலே அடக்கி வைத்து, மீண்டும் வெளிப்படுத்துகின்றாய். நீ ஆண்பாலோ?,பெண்பாலோ இரண்டும் அல்லாத அலியோ? அல்லது வேறு எந்த வகையையாவது சேர்ந்தவனோ?என்கிறான்.
“காண்பாருக்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி
 பூண்பாய்போல் நிற்றியால் யாது ஒன்றும் பூணாதாய்
 மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்
ஆண்பாலோ பெண்பாலோ அப்பாலோ எப்பாலோ”
                                                                     (கவந்தன் படலம் பா 1168)
   இறைவன் அலியாய் இருக்கின்றான் என்று குறிப்பிடுகிறது.                                                    
 தானம்
          சிலப்பதிகாரத்தில், குடும்பத்தில் எவரும் இல்லை என்ற நிலையில் துறவை மேற்கொள்ளும் ஒருவர், தன்னிடம் உள்ள செல்வங்களைத் தானமாகக் கொடுத்து விடுவர். பொருட்களைத் தானம் செய்த பிறகே, துறவை மேற்கொள்வர். கோவலன் இறந்த செய்தியை அறிந்த கோவலனின் தந்தையும், கண்ணகியின் தந்தையும் துறவினை மேற்கொள்ள எண்ணினர்.
 “கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி
மாபெருந்  தானமா? வான் பொருளீத் தாங்கு“  (நீர்ப்படைக்காதை 90-91)
 “அண்ணலம் பெருத்தவத்து ஆசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்துறங் கொள்ளவும்“  (நீர்ப்படைக்காதை 99-100)
மாதவியும், மணிமேகலையும் துறவு மேற்கொண்ட போது தானம் செய்தனர்.
 “கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும் “  (நீர்ப்படைக்காதை 107-108)
கம்பராமாயணத்தில் இராவணனுக்கு ஆலோசனை வழங்கியும், எந்த பயனும் இல்லாததை உணர்ந்த இந்திரஜித், வானவர் தன்னிடம் அடைக்கலமாகக் கொடுத்தப் போர்க் கருவிகளைக் கையாளும் வித்தைகளையும், பிறவற்றையும் தேர் மேல் எடுத்துக்கொண்டு விரும்பினவர்களுக்கெல்லாம் ’யாத்திரா தானம்’ செய்து விட்டு, தன்னுடன் வீரர்கள் வரவேண்டாம், மன்னனைக் காத்திடுங்கள் என்று கூறி இராவணனைக் கடைக்கண்ணால் நோக்கி, இரு கண்களினின்றும் கண்ணீர் சிந்த, போர்க்களம் சென்றான்.
 “கொடைத்தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தான் கொடியோன் தன்னைக் கடைக்கண்ணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழப் போனான்“  (இந்திரசித் வதைப்படலம் 3070)
சடங்கு
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை, பல்வேறு வகையான சடங்குகளைப் பின்பற்றுகின்றான். நம்பிக்கை அடிப்படையில், தலைமுறை தலைமுறையாகச் செய்யப்படும் செயல்கள், ’சடங்கு’ எனப்படும். ஆசையினாலும், அச்சத்தினாலும் உருப்பெறும் பழக்கவழக்கங்கள், நாளடைவில் மக்களின் வாழ்க்கைக்கேற்ப சடங்குகளாக மாற்றப்படும்.
பெயர் சூட்டல்
     சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மகளுக்கு அவனுடைய குலதெய்வத்தின் பெயரான மணிமேகலை என்று பெயர் சூட்டியதைக் கூறுகிறது. அந்தப் பெயர் சூட்டு விழாவிற்கு ஆயிரம் கணிகையர் வந்திருந்தனர் என்று சிலம்பு கூறுகிறது. கம்பராமாயணத்தில் தசரதனின் மனைவியர்களான கோசலை, கைகேயி, சுமத்திரைக்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர். குலகுரு வசிஷ்டரே குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினார். கஜேந்திரன் எனும் யானையின் காலை, முதலைக் கடித்த போது, ’ஆதிமூலமே’ என்று அழைக்க, அக்கணத்திலேயே அங்கு வந்து அதனைக் காத்த உண்மைப் பொருளான திருமாலுக்கு, வசிஷ்டன் `இராமன்’ என்னும் திருப்பெயர் சூட்டினார்.
“விராவி அளித்தருள் மெய்ப்பொருளுக்கே
இராமன் எனப் பெயர் ஈந்தனன் அன்றே ”   (திருஅவதாரப்படலம் 297)
முடிவுரை
      சிலப்பதிகாரம், கம்பராமாயணம் ஆகிய இரு நூல்களிலும் கொடி அசைதல்,போர்க்களத்தில் அஞ்சி ஓடுதல், உருவெளித்தோற்றம்,பூளைப் பூ, அடைக்கலம் அளித்தல், சோதிடம் குறித்தப் பதிவுகள், முரசறைந்துதிருமணச் செய்தி கூறுதல், சூளுரை, அரவாணிகள், சடங்கு பெயர்சூட்டல், ஆகியவை இந்த இரு நூல்களிலும் கூறப்பட்டுள்ளன என்பதை இலக்கிய ஒப்புமை காண்டல் மூலம்  இக்கட்டுரையின் வழி நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி   1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
2.ஸ்ரீ. சந்திரன். ஜெ.சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், தமிழ்   நிலையம், சென்னை, 2012.
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.மங்கையர்க்கரசி,
உதவிப்பேராசிரியர்,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II),
மீனம்பாக்கம், சென்னை 600061.

 

சிலப்பதிகாரம் -கம்பராமாயணம் இலக்கிய ஒப்புமை காண்டல்  (பகுதி – இரண்டு) PDF

ஆசிரியரன் பிறக்கட்டுரைகளைப் பார்க்க:  Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »