Abstract
The Tolkappiyam and Sangam literature were the mirrors that reflected the life of the ancient Tamils. They divided the land into five parts and the time into two parts, namely, the great time and the small time. The theme, Tolkappiyar has formulated. He has mentioned food in the next position to God in the subject matter. The reason for this is that food is essential for humans. It can be seen that rice occupied the primary place in the diet of the ancient Tamils, while cereals occupied a secondary place. Apart from these dietary patterns, the food varied according to each region. Such food styles can be seen as a manifestation of the maturity of Tamil taste, advanced civilization, medical knowledge, and health consciousness. It can be seen from literature that the ancient Tamils had a strong habit of eating meat and eating nuts. This article is about examining such food systems.
திறவுச்சொற்கள்
சமைத்து உணவு முறை, அரிசி உணவு,தானிய உணவு, வேட்டுவர்களின் உணவு முறை, ஊன்சோறு, இறைச்சியின் வகைகள், திரவ உணவுகள், புளிப்பு, இனிப்பு உணவு வகைகள்.
“சங்க கால மக்களின் உணவு முறைகள்”
முன்னுரை
பழந்தமிழர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாக விளங்கியது தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் ஆகும். நிலத்தினை ஐந்தாகவும், பொழுதினை பெரும்பொழுது ,சிறுபொழுது என இரண்டாகவும் பிரித்துள்ளனர். கருப்பொருளை,
“தெய்வம் உணாவே மா மரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப” (தொல்:964)
என்று தொல்காப்பியர் வகுத்துள்ளார்.கருப்பொருளில் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் உணவைக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு காரணம் மனிதனுக்கு உணவு அவசியமான ஒன்றாகும். அத்தகைய உணவு முறைகளை ஆராய்வது குறித்து இக்கட்டுரை அமைகின்றது.
சமைத்து உணவு முறை
உலகில் முதன் முதலில் உணவை நாகரிகமாகச் சமைத்து உண்டவன் தமிழனே என்றும், முதன் முதலில் குழம்பு காய்ச்சப் பெற்றது தமிழகத்திலேயே என்றும் ஞா.தேவநேயப்பாவணர் கூறுகிறார். பழந்தமிழர்களிடம் நில வேறுபாட்டிற்கேற்ப உணவு முறையும் மாறியிருந்தது. ‘ஐவனம்’ என்னும் மலை அரிசி, தினை, மூங்கில் அரிசி முதலியன குறிஞ்சி நில மக்களின் உணவாக அமைந்திருந்தன. முல்லை நில மக்கள் தினைச்சோற்றையும் பாலையும் உணவாகக் கொண்டிருந்தனர். ஐவகை நிலத்தில் உள்ளவர்கள் அரிசி உணவோடு மரக்கறியை உண்பதோடு புலால் உணவையும் உட்கொண்டனர். புலால் உணவோடு கள்ளும் சேர்த்து உண்டனர் என்று அறிய முடிகிறது. இயல்பாக அமைந்த ஐந்து நில மக்களின் வாழ்வில் கள்ளும் புலால் உணவும் இடம்பெற்றிருப்பதை இலக்கியங்கள் வழி அறியலாம்.
அரிசி உணவு
பழந்தமிழர்கள் உணவில் அரிசியே முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது. அவை காடைக் கண்ணியரிசி, குதிரைவாலியரிசி, சாமையரிசி, தினையரிசி, வரகரிசி, புல்லரிசி என ஆறு வகையாகப் பிரித்தனர். அந்த ஆறு வகை அரிசியும் நெல்லிலிருந்து பெறப்படும் அரிசிக்கு ஈடாகப் போற்றப்படவில்லை. நெல்லின் வகைகளைக் குறிக்கும் வேறு பெயர்களை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். அவை வரி, செஞ்சாலி, செந்நெல், சொல், இயவை, ஐவனம், அகம் என்று பல பெயர்களாக நெல் பிரிக்கப்பட்டுள்ளது. நெல்லை வேகவைத்துக் குற்றி அதிலிருந்து எடுக்கப்படும் அரிசியைத் தமிழர் ‘புழுங்கல் அரிசி’ என்றனர். நன்கு குற்றப்பட்டு உமியும் தவிடும் நீக்கப்பட்ட அரிசியைக் ‘குத்தலரிசி’ என்றனர். நன்கு சுத்தம் செய்யப்படாத அரிசியைக் ‘கொழியலரிசி‘ என்றனர். தமிழர் புழுங்கல் அரிசியையே விரும்பி உண்டு இருக்கிறார்கள் புழுங்கல் அரிசி உடல் சூட்டைத் தணிக்கும் இயல்புடையது. அதனால் தமிழர்கள் உணவில் புழுங்கல் அரிசியே பெரிதும் இடம்பெற்றுள்ளது. அரிசியைப் பருப்பு வகைகளோடு கலந்து ‘பொங்கல்’ செய்தனர். ‘அரிசி அடைகள்’ மற்றும் அரிசியை ஊறவைத்து அரைத்துத் தோசையாக்கி உண்டிருக்கிறார்கள் எனலாம்.
தானிய உணவு
அரிசிக்கு அடுத்தபடியாக தமிழர்கள் தங்கள் உணவில் தானிய வகைகளுக்கு இடம் தந்தனர். அவர்கள் உணவில் வரகு, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானியங்கள் இடம் பெற்றிருந்தன. இந்தத் தானியங்களைக் கொண்டு கஞ்சியும் கூழும் களியும் செய்து தமிழர்கள் உண்டனர். எள், உளுந்து போன்ற தானிய வகைகளைப் பயன்படுத்தித் திண்பண்டங்கள் செய்துள்ளனர். பழந்தமிழர்கள் தானிய வகைகளுள் நெல்லரிசி உணவையே தலைசிறந்ததாகக் கருதினர். தூய வெள்ளையாய் அரிசி தீட்டப்பட்டதைப் பின்வரும் பாடல் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
“இருங்காழ் உலக்கை இரும்பு முகந்தேய்த்த
அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு” (சிறுபாண் :193.4)
காலை, நண்பகல், மாலை என மூன்று நேரங்களிலும் பண்டைய தமிழர்கள் அரிசி உணவு உண்டு வந்தனர். காலை உணவும் நண்பகல் உணவும் உழவர்க்கும், கூலியாளர்களுக்கும் பழஞ்சோறும் பழங்கறியும் ஊறுகாயும் ஆகும். புதுக்கறியாயின் நெருப்பில் வாட்டியதும் துவையலுமாக இருக்கும். இரவு உணவே புதுச்சமையலாகக் கொள்ளப்பட்டது.
“மென்புலத்து வயால் உழவர்
வன்புலத்துப் பகடுவிட்டுக்
குறுமுயலின் குழைச்சூட்டொடு
நெடுவாளைப் பல் உவியல்
பழஞ் சோற்றுப் புகஅருந்தி“(புறம் :532)
உழவர்கள் மங்கல நாளும், விழா மற்றும் விருந்து நாட்களைத் தவிர பிற நாட்களில் நெல்லரிசிச் சோறு உண்பதில்லை. வரவு, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு முதலிய தானியங்களையே பகல் உணவாக உண்டனர் என்று புறநானூறு சுட்டுகின்றது.
வேட்டுவர்களின் உணவு முறை
காடுகளிலிருந்து கிடைக்கும் காயும், கனியும், கிழங்கும் நிறைந்து காணப்படுவது வேட்டுவர்களின் குடியிருப்புகளாகும். அவர்கள் கூத்தர்களுக்கு நெய்யில் பொரித்த பன்றித் தசையோடு, வேகவைத்த தினைச்சோறும் உண்ணக் கொடுத்தனர் என்று கீழ்வரும் பாடல் சுட்டுகின்றது.
“ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொடு
வேய்ப்பெயல் விளையுள் தேக்கள் தேறல்
அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்
வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
அகமலி உவகை ஆர்வமொடு அளைஇ
மகமுறை தடுப்ப மனைதொறும் பெருகுவிர்“ (மலைபடு:170-185)
மலையிலே விளைகின்ற பொருள்களான தேன், தினை, கனி, ஊன்கறி இவை தவிர, மூங்கில் குழாயினுள் ஊற்றி நீண்ட நாள் புளிக்க வைத்த கள்ளையும், அருவி நீர் அடித்துக் கொண்டு வந்த பலாக்கொட்டைகளையும் மாவாக்கி புளியம்பழத்துடன் மோர் கூட்டி மூங்கில் அரிசியும் கடமான் கறியையும் உடும்பின் கொழுத்த தசையையும் உண்ணக் கொடுத்தனர் என்று மலைபடுகடாமில் உள்ள பாடல் வரிகள் சுட்டுகின்றன.
ஊன்சோறு
ஊன்சோறு அல்லது புலவு பண்டைய காலத்தில் தமிழகத்திலேயே தோன்றியிருந்தது என்பதனைச் சங்க கால பாடல்கள் மூலம் அறியலாம்.
“ மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டுஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும்” (புறநானூறு: 113)
“ புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
ஊன்சோற் றமலை பாண்கடும்பு அருந்தும்” (புறநானூறு: 33)
“ அமிழ்தன மரபின் ஊன்றுவை யடிசில்”( புறநானூறு: 360)
என வரும் பாடல் வரிகள் மூலம் ஊன்சோறு பற்றி அறியலாம்.
இறைச்சியின் வகைகள்
மருதநில மக்கள் வெண்ணெல் சோற்றைக் கோழி இறைச்சியின் வற்றலோடு உண்ணும் வழக்கம் கொண்டிருந்தனர் என்பதனை,
“ தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வலசி
மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவீர்”( பெரும்பாண் :253- 256)
என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது. பசி அறியாத வளம் வாய்ந்த பெரிய ஊரில் உழவர்தம் முயற்சியாலான வெண்மையான சோற்றைக் கோழிப் பொறியலோடு உண்டதைப் பெரும்பாணாற்றுப்படை தெளிவுபடுத்துகிறது. இறைச்சியின் வகைகளில் உடும்பின் இறைச்சியே தலை சிறந்ததாகக் கொண்டனர்.
“ உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்“( புறநானூறு: 325)
என்ற வரிகள் மூலம் உடும்பின் இறைச்சியை வீரர்கள் நெருப்பிலிட்டு வாட்டி உண்டதையும் மேலும் ஆட்டில் வெள்ளாட்டுக் கடாவையே பண்டைய தமிழர்கள் விரும்பி உண்டதனை (புறநானூறு: 33, 13, 262, 365, 366) என்ற பாடல் வரிகளின் மூலம் அறியமுடிகின்றது.
திரவ உணவுகள்
அரசரும், மறவரும், பாணரும், பொருநரும், புலவர் சிலரும், உழவரும், குடிப்பு வகைகளுள் கள்ளையே சிறந்ததாகக் கொண்டனர். இது இயற்கைக் கள், செயற்கைக் கள் என இரு வகைகளாகும். மேலும், மேல் நாட்டிலிருந்து புட்டிகளில் வந்த மதுவையும் பருகினர் என்பதை,
“யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல்”( புறநானூறு: 56)
என்ற பாடல் வரி உணர்த்துகின்றது. மேலும், கள்ளினைப் பக்குவப்படுத்திக் கலங்களிலும் மூங்கில் குழாய்களிலும் இட்டு மூடிப் பலநாள் மண்ணில் புதைத்து வைத்த கள்ளின் கடுமைக்கு தேள் கொட்டும, பாம்புக் கடியும் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. இதனை புறம் :120,392, அகம்: 348 என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம்.
புளிப்பு,இனிப்பு உணவு வகைகள்
கடுகு,கறிவேப்பிலை முதலியன தூவி ஆவின் நெய்யில் தாளிப்பதனை இலக்கிய வழக்கில்’குய்‘,’குய்யுடை அடிசில்’ ( புறம் :127) என இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறுசுவை உணவைச் சமைத்து உண்டனர். அறுசுவைகளில் தமிழர்களுக்குச் சிறந்தவை இனிப்பும் புளிப்பும் ஆகும். இதை, வெப்பநாட்டின் இயல்பாகக் கொள்ளப்பட்டது எனலாம்.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது, உடீஇ,
தான் துடிந்து அட்ட தீம்புளிப் பாகர்“(குறும்: 164)
“பாலிற் பெய்தவும் பாகில் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி”( புறம்: 381)
என்ற பாடல் வரிகளின் மூலம் சங்ககால தமிழர்கள் புளிக் குழம்பு வைத்து உண்டதையும், பால் கலந்த வெல்லப்பாகு கொண்டு செய்த தின்பண்டங்களையும் இனிமையென விரும்பி உண்டதையும் அறிய முடிகின்றது.
முடிவுரை
பழந்தமிழர்கள் உணவு வகைகளுள் நெல்லே முதன்மையிடத்தைப் பெற்றிருந்ததையும், தானிய வகை உணவுகள் துணைமை இடத்தைப் பெற்றிருந்ததையும் காணமுடிகின்றது. இவ்வுணவு முறைகளைத் தவிர ஒவ்வொரு நிலத்திற்கு ஏற்றவாறு உணவுகள் வேறுபட்டன. இத்தகைய உணவு முறைகள் தமிழரின் சுவை முதிர்ச்சியையும், தலைசிறந்த நாகரிகத்தையும், மருத்துவ அறிவையும், உடல்நல உணர்ச்சியையும் ஒருங்கே காட்டுவனாக அமைந்துள்ள தன்மையை உணரலாம். பழந்தமிழரிடம் புலால் உணவு உண்ணும் வழக்கமும், கள் உண்ணும் வழக்கமும் மிகுந்திருந்ததை இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது.
பயன்பட்ட நூல்கள்
1.இளம்பூரணனார் (உ . ஆ ) – 2005, தொல்காப்பியம் பொருளதிகாரம் ,சாரதா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை.
2.சோமசுந்தரனார்,பொ.வே.(உ.ஆ) _ 1961 , குறுந்தொகை , கழக வெளியீடு, சென்னை
3.செயபால்இரா – 2004, அகநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி.லிட்), சென்னை.
4.புறநானூறு – 1947, துரைசாமிப்பிள்ளை ஒளவை சு (உ. ஆ), கழக வெளியீடு, சென்னை .
5.சாமிநாதையர் உ. வே(தொ.ஆ) – 1986, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சாவூர்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்சி. இராமாமிர்தம்
தமிழ் உதவிப்பேராசிரியர்
மொழி, பண்பாடு மற்றும் சமுதாயம் – துறை
அறிவியல் மற்றும் மனிதநேயவியல் புலம்
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்
இராமாபுரம், சென்னை – 89.




ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

