Thursday, July 23, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் Ritual Practices and Contemporary Transformations in the Worship of the Vediyappan Hero...

Ritual Practices and Contemporary Transformations in the Worship of the Vediyappan Hero Stone (Nadukal) in Melpattu Village, Jawadhu Hills

Ritual Practices and Contemporary Transformations in the Worship of the Vediyappan Hero Stone (Nadukal) in Melpattu Village, Jawadhu Hills
Abstract
       The worship of the Vediyappan hero stone (Nadugal) stands as one of the most important cultural identities of the Malayali tribal people living in the Jawadhu Hills region. Hero stones, which originated as monuments of heroic tradition, have over time evolved into a state of being worshipped as village guardian deities and family deities (Kula Deivangal). Specifically, traditional rituals, sacrificial practices, festival events, and community participation in the Vediyappan worship held in Melpattu village of the Jawadhu Hills have faced various changes due to the passage of time. This paper explores this subject in detail.

“சவ்வாது மலை மேல்பட்டு கிராம வேடியப்பன் நடுகல் வழிபாட்டின் சடங்குகளும் சமகால மாற்றங்களும்”

ஆய்வுச் சுருக்கம்
      சவ்வாது  மலைப்பகுதியில் வாழும் மலையாளிப் பழங்குடி மக்களின் பண்பாட்டு அடையாளங்களில் முக்கியமான ஒன்றாக வேடியப்பன் நடுகல் வழிபாடு விளங்குகிறது. வீர மரபின் நினைவுச் சின்னமாக உருவான நடுகற்கள்,காலப்போக்கில் கிராம காவல் தெய்வங்களாகவும் குலதெய்வங்களாகவும் வணங்கப்படும் நிலையை அடைந்துள்ளன. குறிப்பாக சவ்வாது மலை ,மேல்பட்டு கிராமத்தில் நடைபெறும் வேடியப்பன் வழிபாட்டில்- மரபு சார்ந்த சடங்குகள், பலியிடும் முறை ,திருவிழா நிகழ்வுகள் ,சமூகப் பங்கேற்பு போன்றவை கால மாற்றத்தினால் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன. இதனைப் பற்றி விரிவாக  ஆராய்கிறது இக்கட்டுரை.
முன்னுரை
          தமிழகத்தின் வட மாவட்டங்களான திருப்பத்தூர், திருவண்ணாமலை ,தருமபுரி, கிருஷ்ணகிரி ,வேலூர் போன்ற மாவட்டங்களில் பரவலாக வேடியப்பன் வழிபாடு  நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மலையாக சவ்வாதுமலை இருக்கிறது. இம்மலையில் பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான நடுகலற்கள்மற்றும் கல்வெட்டுகள் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இம்மலையில் வாழும் மலையாளிப் பழங்குடியின மக்கள்  நடுகல்  வழிபாட்டு மரபைக் கொண்டுள்ளனர்.   போரில்  இறந்த மறவனுக்கு விழா எடுத்து வழிபடும் சடங்குகள் உள்ளிட்ட பண்பாட்டு நிலைகளை காலத்தினால் வரும் மாற்றங்களை குறித்து இவ்வாய்வு கட்டுரை அடையாளப்படுத்துகிறது.
இலக்கண,இலக்கியங்கள் காட்டும் நடுகல் வழிபாடு
      தமிழர் பண்பாட்டில் நடுகல் வழிபாடு மிகவும் தொன்மையான மரபாகும். போரில் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகல் நிறுவி, அவர்களைத் தெய்வமாக வணங்கும் வழக்கம் சங்ககாலம் முதலே இருந்ததை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. வீரர்களின் புகழ் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்காக நடுகல் நாட்டி, அதற்கு மலர் சூட்டி, மயிலிறகு அணிவித்து, பலியிட்டு வழிபட்ட செய்திகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்கின்றன.
தொல்காப்பியம்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணர” (தொல். பொருள். 63)
  இறந்துபட்ட வீரர்களின் நினைவாக நடுகல் நடுவதற்குக் கல்லைப் பார்த்தல், பார்த்த கல்லை எடுத்துக் கொண்டு வருதல், அதனை நீரினால் கழுவுதல், பின்னர் அக்கல்லினை நடுதல், வாழ்த்திப் பாடுதல் ஆகிய நடுகல் நாட்டுவதிலுள்ள  செயல்பாடுகள் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
அகநானூறு
நுழைநுதி நெடுவேல் குறும் படை மடிழவர்
முனை ஆத் தந்து முரம்பின் வீழ்ந்த
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து
தோப்பிக் கள்ளொடு துரிஉப் பலி கொடுக்கும்
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ்சுரம்” (அகம்.35)
        இப்பாடலில் பண்டைய தமிழர்கள் போரில் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபட்டமை சுட்டப்படுகிறது.  நடுகற்கள் வழிபாடு, போரில் ஈடுபடும் வீரர்கள் தமக்கு வலிமையைக் கொடுப்பதாக நம்பினர். வழிபாட்டு நிகழ்வில் ஆடு அறுத்துக் குருதிப்பலி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டனர் என்பதையும் இப்பாடல் வழி அறிய முடிகிறது.நடுகல் நட்டு வைத்தல், அதைக் கோயிலாக எழுப்பி அக்கல்லில் அவ்வீரனின் பெயரையும் வீர சாகசங்களையும் எழுதி, கல்லினைத் தெய்வமாக்கி போற்றிவாழ்த்துதல் முதலான செய்திகளை அறிய முடிகிறது.
வேடியப்பன் வழிபாட்டு முறைகள்
       மேல்பட்டு ஸ்ரீ ஐயனார் வேடியப்பன் கோவில் மூன்று விதமான வழிபாட்டு முறையினைக் கொண்டுள்ளது.
🙏 தினசரி வழிபாடு
🙏 சிறப்பு வழிபாடு
🙏 திருவிழா வழிபாடு
தினசரி வழிபாடு
        வேடியப்பன் கோயில்களில் தினசரி வழிபாடு எளிமையான முறையிலும் மரபு வழியிலும் நடைபெறுகிறது. இது ஊர் மக்களின் நம்பிக்கை, பக்தி மற்றும் வாழ்வியல் பண்பாட்டோடு இணைந்துள்ளது.
தினசரி வழிபாட்டின் முக்கிய அம்சங்கள்
    அதிகாலை கோயில் திறக்கப்பட்டு, கோயில் வளாகம் சுத்தம் செய்யப்படுகிறது.வேடியப்பன் சிலை மற்றும் நடுகல்லுக்கு நீராட்டி, மஞ்சள், சந்தனம், குங்குமம் அணிவிக்கப்படுகிறது.மலர் மாலைகள் அணிவித்து, விளக்கு ஏற்றப்படுகிறது.கற்பூரம், சாம்பிராணி காட்டி தீபாராதனை செய்யப்படுகிறது.தேங்காய் , பழங்கள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்றவை படையலாக வைக்கப்படுகின்றன. பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற இறைவனை வழிபட்டு, திருநீறு பெற்றுச் செல்கின்றனர்.மாலை நேரத்திலும் மீண்டும் விளக்கேற்றி எளிய வழிபாடு நடைபெறுகிறது.
சிறப்பு வழிபாடு
          வேடியப்பன் வழிபாட்டில் தினசரி வழிபாட்டைக் காட்டிலும் சிறப்பு வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி மற்றும் ஊர் மரபுப்படி ஊரில் நடக்கும் திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தார் இணைந்து, முதல் மாலையினை வேடியப்பனுக்குத் தந்து வழிபாடு செய்கின்றனர்.சிறப்பு வழிபாட்டின்போது வேடியப்பனுக்கு அபிஷேகம் செய்து, புதிய ஆடை அணிவித்து, மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. தேங்காய், பழங்கள், பொங்கல், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை போன்றவை படையலாகச் செலுத்தப்படுகின்றன. கற்பூர தீபாராதனை, சாம்பிராணி காட்டுதல், மங்கள இசை, பறை இசை போன்றவை வழிபாட்டின் ஒரு பகுதியாக இடம்பெறுகின்றன.
மேல்பட்டு வேடியப்பன் திருவிழா
      சவ்வாதுமலை மேல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள வேடியப்பன் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழா, அப்பகுதி மக்களின் மரபு, பண்பாடு மற்றும் சமய நம்பிக்கையை வெளிப்படுத்தும் முக்கியமான விழாவாகும். திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே காப்புக் கட்டப்பட்டு, கொடியேற்றித்திருவிழா தொடங்கப்படுகிறது.முதல் நாள், ஸ்ரீ மூங்கில் நாச்சியம்மனுக்கு பொங்கல் வைத்துச் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இதன்மூலம் திருவிழா இனிதே நடைபெற வேண்டும் என்பதற்காக அம்மனின் அருள் வேண்டப்படுகிறது.
       இரண்டாம் நாள், வேடியப்பன் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் தொடங்குகின்றன. திருவிழா நாளன்று மதியம் சுமார் மூன்று மணி அளவில், ஊரின் நடுப்பகுதியில் அமைந்துள்ள “தம்பிரான் வீடு” (சாமி வீடு) எனப்படும் இடத்திலிருந்து வேடியப்பனுக்குரிய புனிதப் பொருட்கள் ஊர்வலமாக எடுத்துவரப்படுகின்றன. இவ்வீட்டில் வேடியப்பனுக்குரிய வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், சாமை களம், வேடியப்பன் திருவுருவச்சிலை மற்றும் ஸ்ரீ மூங்கில் நாச்சியம்மன் திருவுருவச்சிலை உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுப் பொருட்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
       வேடியப்பனுக்குரிய நகைகள் மூங்கிலால் செய்யப்பட்ட கூடையில்  அடுக்கி வைக்கப்படுகின்றன. அதன் மேல் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.  மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைப்பதற்காக பொங்கல் பானைகளையும் எடுத்துக்கொண்டு ஊர்வலமாகக்கோயிலுக்கு வருகின்றனர். கோயிலில் வேடியப்பனுக்கு பொங்கல் வைத்து வழிபட்ட பிறகு, அந்தப் பொங்கல் பானைகள் கோயில் வளாகத்திலேயே வைக்கப்படுகின்றன.
        அன்றிரவு வேடியப்பனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஏழு கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்தச் சிறப்பு பூஜையை நடத்துவதற்காக நெல்லிவாசல் நாட்டில் உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்த துக்கன் பூசாரியாக அழைக்கப்படுகிறார். அவர் சவ்வாது மலையில் உள்ள 34 கிராமத் தெய்வங்களையும் பாடல்கள் மூலம் திருவிழாவிற்கு அழைத்து, சிறப்பு பூஜைகளை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து தமிழரின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவமான தெருக்கூத்து இரவு முழுவதும் அரங்கேற்றப்படுகிறது. இவ்வாறு இரண்டாம் நாள் நிகழ்வுகள் நிறைவடைகின்றன.
      மூன்றாம்நாள், அதிகாலையில் வேடியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் மதிய நேரத்தில், ஊர் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வாழை இலையில் பொறி, கடலை, வெல்லம், அவல், அதிரசம், வாழைப்பழம் உள்ளிட்ட படையல் பொருட்களைத் தட்டுகளில் வைத்து வேடியப்பன் கோயிலுக்குக் கொண்டு வந்து வழிபடுகின்றனர்.
         அதன்பிறகு, ஊர் சார்பில் ஒரு ஆடு பலியிடப்படுகிறது. பலியிடப்பட்ட ஆட்டின் இரத்தம் சேகரிக்கப்பட்டடுகிறது. பலியிடுதல் நிறைவடைந்த பின்னர், மக்கள் தாங்கள் வழிபாட்டிற்காகக் கொண்டு வந்த பொங்கல் பானைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
          பின்னர், சேகரித்து வைத்திருந்த ஆட்டு இரத்தத்துடன் சோறு கலந்து ரத்தச் சோறு தயாரிக்கப்படுகிறது. அந்த ரத்தச் சோற்றை ஊரின் எல்லைப் பகுதிகள் மற்றும் நான்கு திசைகளிலும் கொண்டு சென்று, அருகிலுள்ள கிராமத் தெய்வங்களுக்கு படையலாக இடப்படுகிறது. இந்த வழிபாடு, ஊரின் பாதுகாப்பு, வளம் மற்றும் தீயசக்திகள் அண்டாதிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறுகிறது.
        இந்நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர், இரண்டாம்நாள் வேடியப்பனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, மீண்டும் மூங்கிலால் செய்யப்பட்ட கூடையில் அடுக்கி மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. அந்தக் கூடையை எடுத்துக்கொண்டு ஊரின் ஒவ்வொரு தெருவிலும் சென்று பூஜை நடத்தி, இறுதியில் ஊரின் நடுப்பகுதியில் அமைந்துள்ள தம்பிரான் வீடு (சாமி வீடு) கொண்டு வந்து அனைத்து புனிதப் பொருட்களும் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.
  சவ்வாது மலை மேல்பட்டு மக்களின் வீரமரபுவேடியப்பனுக்குரிய இந்த நகைகள் ஆண்டிற்கு ஒரு முறை திருவிழாவின்போது மட்டுமே வெளியே எடுத்துவந்து அணிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்க மரபாகும்.இவ்வாறு மூன்று நாட்கள் நடைபெறும் வேடியப்பன் திருவிழா, சவ்வாது மலை மேல்பட்டு மக்களின் வீரமரபு, நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு, சமூக ஒற்றுமை மற்றும் பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்தும் சிறப்புமிக்க திருவிழாவாக இன்றளவும் மரபுவழியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மரபு வழி திருவிழாவில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள்
      மேல்பட்டு வேடியப்பன் நடுகல் வழிபாடு மரபு வழியாக பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், அண்மைக் காலங்களில் அதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, வேடியப்பன் நடுகலுக்குக் கோயில் கட்டப்பட்டபோது, கோயிலின் முன்பாக நந்தி சிலையும், பெருந்தெய்வ வழிபாட்டில் காணப்படும் விளக்கேற்றத் தூணும் (தீபஸ்தம்பம்) அமைக்கப்பட்டுள்ளன. இவை மரபு வழி நடுகல் வழிபாட்டில் இல்லாத புதிய கூறுகளாகக் கருதப்படுகின்றன.
   சங்க இலக்கியங்களிலும், பிந்தைய இலக்கியங்களிலும், போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு நடுகல் நாட்டி, வெள்ளாட்டைப் பலியிட்டு வழிபடும் மரபு இருந்ததை அறிய முடிகிறது. அதேபோல், மேல்பட்டு கிராம மக்களும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை வேடியப்பன் நடுகலின் முன்பாகவே வெள்ளாட்டைப் பலியிட்டு வழிபடும் மரபைப் பின்பற்றி வந்ததாகக் களஆய்வில் தெரிவித்தனர்.
       ஆனால், தற்போது கோயிலின் முன்பாக நந்தி சிலையும் விளக்கேற்றத் தூணும் அமைக்கப்பட்டுள்ளதால், வேடியப்பனுக்குரிய பலியிடும் நிகழ்வு கோயிலின் அருகிலுள்ள வேட்டைக்காரன் கோயில் முன்பாக நடைபெற்று வருகிறது. மேலும், வேடியப்பன் உருவச் சிலைக்கு அலங்காரம் செய்யும்போது வைணவ மரபில் ஒன்றான  “நாமம்” இடும் நடைமுறையும் அண்மைக் காலங்களில் தோன்றிய மாற்றமாகக் காணப்படுகிறது.
   இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளாகவே ஏற்பட்டவை என்று அவ்வூர் மக்கள் களஆய்வின் போது தெரிவித்தனர். இவற்றின் மூலம், மரபு வழியாக வீரவழிபாட்டின் அடையாளமாக விளங்கிய வேடியப்பன் நடுகல் வழிபாட்டில், பெருந்தெய்வ வழிபாட்டு கூறுகளும் நவீனமயமாக்கலின் தாக்கங்களும் படிப்படியாகக் கலந்துள்ளதை அறிய முடிகிறது. எனவே ,மேல்பட்டு வேடியப்பன் நடுகல் வழிபாடு தனது அடிப்படை மரபைத் தக்கவைத்திருந்தாலும், காலமாற்றத்திற்கேற்ப புதிய சமய மற்றும் பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி மாற்றமடைந்து வருவது இவ்வாய்வின் மூலம் தெளிவாகப் புலப்படுகிறது
முடிவுரை
          தமிழர் பண்பாட்டில் வீரமரணம் அடைந்த மறவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நடுகல் நிறுவி, பின்னர் அவர்களைத் தெய்வங்களாக வணங்கும் மரபு தொன்மையானது. இந்த வீரவழிபாட்டு மரபு, தமிழர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் சமூக நினைவகத்தின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது. சவ்வாது மலை மேல்பட்டு கிராமத்தில் நடைபெறும் வேடியப்பன் திருவிழாவும் இவ்வீரமரபின் தொடர்ச்சியாக இன்றளவும் மக்களால் போற்றப்பட்டு வருகிறது. இருப்பினும், முன்னோர் பின்பற்றிய வழிபாட்டு முறைகளையும், இன்றைய தற்கால வழிபாட்டு முறைகளையும் ஒப்பிட்டு நோக்கும்போது பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை இவ்வாய்வு வெளிப்படுத்துகிறது. கோயில் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், பெருந்தெய்வ வழிபாட்டுக் கூறுகளின் கலப்பு, சடங்கு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், பலியிடும் இடத்தின் மாற்றம், உருவ வழிபாட்டில் ஏற்பட்ட புதிய கூறுகள் போன்றவை காலமாற்றத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன.
        சமூக மாற்றங்கள், மக்களின் வாழ்க்கைமுறை, சமய நம்பிக்கைகள் மற்றும் நவீனமயமாக்கலின் தாக்கம் ஆகியவற்றிற்கு ஏற்ப திருவிழா மற்றும் சடங்கு முறைகளும் இயல்பாக மாற்றமடைந்து வருவதை உணர முடிகிறது. எனினும், இந்த மாற்றங்களுக்கிடையிலும் வேடியப்பன் வழிபாட்டின் அடிப்படை நோக்கமான முன்னோர் நினைவு, வீர மரபு மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவை தொடர்ந்து நிலைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 துணை நூற்பட்டியல்
1.புலியூர்க் கேசிகன் , தொல்காப்பியம் மூலமும் உரையும்,(பொருளதிகாரம்: புறத்திணையியல், 63),அருனு பப்ளிகேஷன், 1961
2.சோமசுந்தரனார்பொ.வே, அகநானூறு தமிழ் உரை பா-35, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை ,1970
3.முனைவர் ரே.கோவிந்தராஜ்- ‘ஜவ்வாது மலையில் தொல் தமிழர்ப் பண்பாடு’ மலர் புக்ஸ், 2023.
தகவலாளர் பட்டியல்
1.முத்து வேடி வயது 39,
மேல்பட்டு ,சவ்வாது மலை.
2.சிவபதி ஆசிரியர், வயது 42,
மேல்பட்டு ,சவ்வாது மலை.
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
வா.நவிஷ்
முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
திருப்பத்தூர் – 635 601.
ஆய்வு நெறியாளர்,
முனைவர் கி .பார்த்திபராஜா ,
தமிழ் ஆய்வுத் துறைத் தலைவர் & ஆய்வு நெறியாளர்,
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
திருப்பத்தூர் – 635 601.

 

சவ்வாது மலை மேல்பட்டு கிராம வேடியப்பன் நடுகல் வழிபாட்டின் சடங்குகளும் சமகால மாற்றங்களும் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »