Tuesday, October 6, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Mankezhu Gnalam|Dr.V.Karunya

Cosmic Tamil Heritage and Earth Wisdom-iniyavaikatral
Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
        The word jnalam (ஞாலம்) has been used to refer to everything from the rotating universe to the earth we live in with a single word. This word has been widely used in ancient Tamil texts. But in modern speech and writing, this word has become rare; in fact, it is one of the words that is disappearing. With the aim of restoring this word and thereby revealing the scientific thinking of ancient Tamils, jnalam (ஞாலம்) has been the subject of this article. The grammatical basics of the first letter of this word, jnagaram (ஞ்), the adjectives given by ancient Tamils ​​to the word jnalam (ஞாலம்), the world (உலகம்) is different, jnalam (ஞாலம்) is different, and the artistic terminology of jnalam (ஞாலம்) are presented in this article with evidence.
Key words
      Ancient Tamil science – Jnālam adjectives – Ulagam is a Tamil word – Ulagam is different, Jnālam is different – ​​Jnālam – hanging – Jnālam is restored.

“மண்கெழு ஞாலம்”

ஆய்வுச் சுருக்கம்
      சுழன்று கொண்டிருக்கும் அண்டவெளி, நாம் வாழும் நிலவெளி என அனைத்தையும் ஒற்றைச் சொல்லால் குறிப்பதற்கு ஞாலம் என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர். பழந்தமிழ் நூல்களில் பெரு வழக்காய் இச்சொல் இருந்துள்ளது. ஆனால் தற்காலப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இச்சொல் அரிதாகிவிட்டது; சொல்லப்போனால் அழிந்துவரும் சொற்களில் ஒன்றாக இருக்கிறது. இச்சொல்லை மீட்டுருவாக்கும் செய்யும் நோக்கிலும், அதன்வழியாகப் பழந்தமிழரின் அறிவியல் எண்ணவோட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கிலும் ஞாலம் என்பது கட்டுரைக்கு உள்ளாகி உள்ளது உள்ளது. இச்சொல்லின் முதல் எழுத்தான ஞகரத்தின் (ஞ்) இலக்கண அடிப்படைகள், ஞாலம் என்ற என்ற சொல்லுக்குப் பழந்தமிழர்கள் கொடுத்த அடைசொற்கள், உலகம் வேறு, ஞாலம் வேறு, ஞாலம் என்னும் கலைச்சொல்லாக்கம் ஆகியன இக்கட்டுரையில் சான்றுகளோடு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்
        பழந்தமிழரின் அறிவியல் – ஞாலம் அடைசொற்கள் – உலகம் என்பது தமிழ்ச்சொல் – உலகம் வேறு, ஞாலம் வேறு –ஞாலம் – தொங்குதல் – ஞாலம் மீட்டுருவாக்கம்.
அறிமுகம்
      தமிழ்மொழிப் பயன்பாட்டில் இருந்து அரிதாகி வரும் எழுத்தாக ஞகரம் (ஞ்) இருக்கிறது. இதனை முதல் எழுத்தாகக் கொண்ட ஞாயிறு என்பதன் பயன்பாட்டில் மட்டுமே இவ்வெழுத்துத் தன்னை தக்கவைத்து வருகிறது. ஞாலம் என்ற பெயரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாளை வட்டத்தில் ஓர் ஊர் அமைந்துள்ளது. தமிழச்சொற்களை மீட்டெடுப்பதில் இத்தகைய ஊர்ப்பெயர்கள் பெருந்துணை நிற்கின்றன. ஞாபகம், ஞானம், ஞானி போன்றன தமிழ்ச் சொற்கள் இல்லை.  இந்த எழுத்தில் தொடங்கும் ஞாலம் என்ற சொல் தமிழரின் ஞாலவியலுக்குச் சான்றாக இருக்கிறது. இதனைப் பாவாணர் உள்ளிட்டோர் எடுத்துக்காட்டி உள்ளதாகத் தெரிவிப்பர். இத்தகைய ஞகரம் என்ற எழுத்தில் தொடங்கும் ஞாலம் என்ற சொல்லின் பழந்தமிழ் இலக்கியப் பதிவுகளைப் பற்றிக் கதையாடுகிறது இக்கட்டுரை.
ஞகரம் பற்றிய அடிப்படை
        தமிழின் உயிர், மெய் ஆகிய இருவகை எழுத்துக்களில் மெய்மெழுத்தைச் சார்ந்தது ஞகரம் (ஞ்). மெய்யெழுத்து நெடுங்கணக்கில் நான்காவது இடத்தில் இருப்பது. சகரத்திற்கு இன எழுத்தாக அமைவது. மெய்யெழுத்தின் மூவினங்களில் ஒன்றான மெல்லினத்தைச் சேர்ந்தது. முதல் நாவும் முதல் அண்ணமும் உறுவதால் வல்லினமான சகரமும் (ச்), அதற்கு இனமான ஞகரமும் (ஞ்) ஒலிக்கும் (நன்னூல் 79) என்று பவணந்தி முனிவர் தெரிவித்துள்ளார்.
பழந்தமிழ் நூல்களில் ஞாலம்
         பாட்டும் தொகையுமான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் ஞாலம் என்ற சொல் ஞாலம் என்ற சொல் 25 இடங்களில் வந்துள்ளது. ஒரே பொருளில் அல்லாமல் பல்வேறு பொருள்களில் ஆளப்பெற்றுள்ளது. இச்சொல்லிற்காக ஆளப்பெற்றுள்ள பொருள்கள் எடுத்து, ஒப்புநோக்கிப் பார்த்துப் புலப்படும் கருத்துக்கள் இக்கட்டுரையின் வழியாக வெளிப்படும்.
உலகம் – தமிழ்ச்சொல்
       ஞாலம் என்ற சொல்லுக்குப் பொதுவாக நாம் அறிந்திருக்கும் பொருள் – உலகம் என்பதாகும். உலகம் என்ற சொல்லிற்கு தமிழ்மொழியாளர்களும், வடமொழியாளர்களும் உரிமைகொண்டாடி வருகின்றனர். உல – உலா – உலவி – உலவு என்று இருப்பதால் இச்சொல் தமிழாக இருப்பதற்கு வாய்ப்பு மிகுதியாகும். மேலும் வடமொழியாளர்கள் லோகம் என்ற சொல்லில் இருந்து உலகம் என்ற சொல் வந்ததாகக் கூறுவர். வடமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துவதற்குப் பவணந்திமுனிவர் வழிகாட்டி உள்ளார். தமிழ்மொழியில் டகர, ணகர, ரகர, லகர, ழகர, ளகர, றகர, னகர வரிசையில் உள்ள எழுத்துக்கள் எதுவும் சொல்லுக்கு முதல் எழுத்தாக வாரா. எனவே இவ்வெழுத்துகளுள் ரகரம், லகரம் ஆகிய வரிசையில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் வடமொழிச் சொற்களுக்கு முன்பாக அகரம், இகரம் அல்லது உகரம் சேர்த்து எழுத வேண்டும் (நன்னூல் 148) என்கிறார். அவ்வாறு பார்த்தால் லோகம் என்ற வடசொல்லுக்கு முன்பாக உ என்ற உயிரெழுத்தைச் சேர்த்தால் உலோகம் என்றுதான் வரவேண்டும். உலகம் என்று வராது. மேலும் உலோகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு உலகத்தைக் குறிக்காத மானி (தனிமம்) என்று வேறொரு பொருள் இருக்கிறது. எனவே உலகம் என்பது தமிழ்ப்படுத்திய வடமொழிச் சொல் அன்று; தமிழாகவே இருக்கும் தமிழ்ச்சொல் ஆகும்.
ஞாலம் வேறு, உலகம் வேறு
        இவ்விடத்தில் ஒரே பொருளுக்கு இருவேறு சொற்கள் (ஞாலம், உலகம்) இருக்க வேண்டிய தேவை என்ன என்ற ஐயம் எழ வேண்டும்.  உண்மையில் இவ்விரு சொற்களும் ஒற்றுமையுடைய வெவ்வேறு பொருள் தருவன ஆகும். உலகம் என்பது, நிலம், கடல், ஆறு, மலை என்று மனிதர்களும், உயிரினங்களும் வாழும் தம் கண்ணுக்குத் தெரிந்த அளவிலும், இதேபோல் கண்தொலைவுக்கும் அப்பாற்பட்டும் இருக்கும் பரந்த நிலப்பரப்பைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தினர். மேலே எடுத்துக்கூறிய நிலவுலகம், கடலுக்கு அடியில் இருக்கும் நீருலகம், நிலவு, கதிரவன், விண்மீன்கள் இருக்கும் வானுலகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கே குறிக்கும் சொல்லாக ஞாலம் என்பதைப் பயன்கொண்டுள்ளனர்.
“ஞாலம் மூன்று அடித்தாய முதல்வற்கு முதுமுறைப்
பாலன்ன மேனியான் அணிபெறத் தைஇய
நீலநீருடை போலத் தகைபெற்ற வெண்திரை
வாலெக்கர் வாய்சூழும் வயங்குநீர்த் தண்சேர்ப்ப” (கலி. 124:1-4)
ஞாலத்திற்குக் கொடுத்துள்ள அடைசொற்கள்
      ஞாலம் என்ற சொல்லுக்கு முன்பு ஒவ்வொரு புலவரும் வெவ்வேறு அடைசொற்களை வழங்கியுள்ளனர். இவ்வடைகளால் ஞாலத்தை, ஞாலத்தின் வழியாக உலக இயற்கையைப் பழந்தமிழர்கள் எவ்வாறு புரிந்திருந்தனர் என்று அறியமுடிகிறது.
அகன்ஞாலம்
        வினையின் தொகுதி காலத்து இயலும் என்று தொல்காப்பியம் (எச்சவியல் 19) சுட்டியுள்ளது. அகன்ஞாலம் என்ற மூவசைச்சீர் காலம் கரந்த பெயரெச்சமாக (நன்னூல் 364) அதாவது வினைத்தொகையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகன்ற ஞாலம், அகல்கின்ற ஞாலம், அகலும் ஞாலம் என்பது இதன் விரிவாக்கமாகும். உலகம் விரிவடையும் இயல்புடையது என்பது அறிவியல் உண்மை. உலகம் விரிவடைந்து வருவதாக இன்றைய அறிவியல் கூறுகின்றது. அகன் ஞாலம் என்ற வினைத்தொகையின் வழியாகப் பழந்தமிழர்கள் ஞாலத்தின் விரிவடையும் இவ்வியல்பை ஈராயியரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர் என்ற சொல்வதற்கில்லை; அவ்வாறு கூறுவது மிகையான கருத்தாய் அமையும். எனில் அகன் ஞாலம் என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது?
       பெரு பரந்த பரப்பைக் குறிக்க அகல் என்று அடை கொடுத்துள்ளனர். மேலும் ஞாலத்தின் இயக்கத்தை (கிழக்கில் தோன்றும் கதிரவன் மேற்கே செல்லுதல், கடலின் ஓயாத அலை, காற்றின் பரவல் போன்ற இயற்கைகளின் இயக்கம்) அகல் (செலவு – பயணம்) என்று குறித்துள்ளனர். அதனால் அகல் ஞாலம் என்பது இயங்கிக் கொண்டிருக்கும் பெரு பரந்த ஞாலம் என்பதாகும். பழந்தமிழ் நூல்களில் அகல் என்பதற்குப் பதிலாக அகன் என்ற கடை எழுத்துப் போலி இடம்பெற்றுள்ளது.
அகன்ஞாலம் விளக்கும்தன் பல்கதிர் வாயாக கலி. 119:1
அகன்ஞாலம் பெரிது வெம்பினும்               புறம். 395:33
காவலர்ப் பழிக்கும் இக்கண் அகன்ஞாலம்    புறம். 35:29
பல்பயம் உதவிய பசுமைதீர் அகல்ஞாலம்      கலி. 29:3
ஆகுபெயராக ஞாலம் – நாடு, நாட்டு மக்கள்
       வேந்தர்கள், மன்னர்கள் ஆளும் நாட்டைக் குறிக்க ஆகுபெயர்ச் சொல்லாக ஞாலம் என்ற என்பதைப் பயன்படுத்தி உள்ளனர். அதேபோல் நாட்டில் உள்ள மக்களைக் குறிக்க ஆகுபெயராக ஞாலம் என்ற சொல்லைப் புலவர்கள் கையாண்டுள்ளனர். அறத்தைப் புரியும் அந்தணர் அறவுரை கேட்டு, பல்யானைச் செல்கெழு குட்டுவன் நடக்கின்றான்; அவன் நாட்டு மக்கள் குட்டுவனின் வழிகாட்டலில் நடக்கின்றனர் என்று பாலைக் கௌதமனார் தெரிவித்துள்ளார்.
அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி
ஞாலம் நின்வழி ஒழுகப் பாடல் சான்று         பதி. 24:9-10
     இதேபோல் நாடு என்ற பொருளில் ஞாலம் என்ற சொல்லை குடபுலவியனார் பயன்படுத்தி உள்ளார். ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி / ஒரு நீ ஆகல் வேண்டினும் – புறம். 18:14-15. உலகத்தில் வள்ளல்கள் மாய்ந்துவிட எனக்கு இரப்போர் யார் இருக்கிறார்கள் என்ற ஒருவர் கேட்க நாலை என்னும் ஊரின் தலைவன் நாகன் இருக்கின்றான் என்று பலரும் தெரிவிப்பதாக வடம நெடுந்தத்தனாரின் பாடல் சொல்கிறது. இவ்விடத்தில் ஞாலம் என்பது நில உலகம் என்ற பொருளில் ஆளப்பெற்றுள்ளது.
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை        புறம். 179:1-2
நில உலகத்தின் தன்மை
     கடவுள் வாழ்த்தைச் சேர்க்காமல் பார்த்தால் மண்திணிந்த நிலனும் (புறநானூறு 2:1) என்பது புறநானூற்றின் தொடக்கமாகும். இவ்விடத்தில் நிலமானது மண் திணிந்தது என்று விளக்கப்பட்டுள்ளது. இதே விளக்கம், இதே அடைமொழி ஞாலத்திற்கும் பல்லிடங்களில் ஆளப்பெற்றுள்ளது. வெறும் மண் என்று பேச்சு வழக்கில் நாம் சொல்லும் அந்த மண்தான் நம்மைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அகழ்வாரைத் தாங்கும் நிலமென்றார் (திருக்குறள் 151) வள்ளுவர்; அகழ்ந்தாலும் இருப்பது மண்தான். இந்த மண் என்பது ஆறு, கடல் போன்ற நீரகங்கள் தவிர்ந்து எங்கும் இடைவெளி இல்லாமல் நிலமெங்கும் நிறைந்துள்ளது. இதனை மண்ணால் செறிந்திருக்கும், மண்ணால் திணிவுற்றிருக்கும் நிலம் என்று பழந்தமிழர் உணர்ந்தனர்; மண் திணிந்து கிடக்கும் மிகப்பரந்த நிலப்பரப்பை ஞாலம் என்றனர். அதனைப் புலமைகளில் வெளிப்படுத்தினர். அத்தகைய வெளிப்பாடாகப் பின்வரும் அடிகள் அமைகின்றன.  
குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
மண் திணி ஞாலம் விளங்க              நற். 153:1-2
மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி
மாரி பொய்க்குவது ஆயினும்
சேரலாதன் பொய்யலன் நசையே       பதி. 18:9-12
       மேலும் இக்கட்டுரைக்குக் கருவும் உருவும் தந்த மண்கெழு ஞாலம் (பதி. 69:12) என்பது இப்பெரு நிலப்பரப்பு மண்ணால் பிணைந்தது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இத்தொடரின் சிறப்பால் பதிற்றுப்பத்தின் 69ஆம் பாடல் மண்கெழு ஞாலம் என்ற பெயரினைப் பெற்றுள்ளது.
ஞாலம் – பழந்தமிழரின் அறிவியல் வெளிப்பாட்டைப் பறைசாற்றும் சொல்லாக்கம்
    மேலே எற்கனவே தெரிவித்துள்ளதுபோல் நிலவுலகம், நீருலகம், விண்ணுலகம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய சொல்லாக ஞாலம் என்ற சொல் ஆளப்பெற்றுள்ளது.
மணிபுரை மாமலை ஞாறிய ஞாலம்            
அணிபோல் பொறுத்தாரும் தாஅம்              பரி. 23:80-81
        பரிபாடலில் மிகைப்பாடலாக இடம்பெற்றுள்ள மேலே உள்ள அடிகளின் பொருள் வருமாறு: நீல மணிகள் போன்று கருநீல நிறம் கொண்ட மலைகள் தோன்றிய ஞாலத்தை, தனக்கு ஓர் அணிகலன்போல் தாங்கியவனும் அவன்தாம் (திருமால்). இங்கு ஞாலம் என்பதற்கு மாமலை ஞாறிய என்ற தொடர் அடையாக இடம்பெற்றுள்ளது. ஞாறி – முளைத்து, ஞாறிய – முளைத்த என்று பொருளாகும். படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை என்ற தொடருக்கு விழுந்த விதை முளைத்து (நாறி) பருத்த அடிமரத்தோடு வளர்ந்த புன்னை என்பது பொருள். நற்றிணைக்கு முதன்முதல் உரை எழுதிய பின்னத்தூர் நாராயண சாமி நாறி என்பதற்கு விளங்கிய என்று பொருள் எழுதியுள்ளார். மலைகள் தோன்றியிருக்கும் ஞாலம் என்று பரிபாடல் தெரிவித்திருப்பது உலகத் தோற்றத்தை அறிய முயன்ற தொடக்கத் தேடலின் வெளிப்பாடாகும்.
ஞாலம் – தொங்கும்
       எந்தவொரு வெளிப்படையான பிடியும் இல்லாமல் நாள்மீன்களும் கோள்மீன்களும் இருந்து கொண்டிருக்கின்றன என்பது வானியல் பற்றிய அறிவியல் உண்மை ஆகும். இந்த உண்மையைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை ஞாலம் என்ற இச்சொல் பறைசாற்றுகிறது. அதாவது ஆய்ந்தறிந்து, அளந்தறிந்து பழந்தமிழர்கள் இவ்வுண்மையை அறிந்திருந்தனர் என்று சொல்வதற்கில்லை. ஆனால் கணித்தறிந்து சொல்லினர். அதனைப் பதிவு செய்தும் வைத்துள்ளனர்.  மேலே நாம் இதுவரை எடுத்துக்காட்டிய ஞாலம் என்று வருமிடங்களைப் படிப்படியாக வைத்துப் பார்த்தால் பின்வருமாறு கொள்ளலாம்: ஆகுபெயராக மக்கள், மக்கள் வாழும் நாடு, நில உலகம், இறுதியாக பள்ளமான நீருலகம், பரப்பான நிலவுலகம், வெளியான வானுலகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்க ஞாலம் என்ற சொல்லை ஆண்டுள்ளனர் என்று பார்த்தோம். எதற்காக ஞாலம் என்ற இச்சொல்லைக் கையாண்டுள்ளனர் என்று பார்க்கும்போது பழந்தமிழரின் அறிவியல் புலப்படுகிறது. கதிரவன் தன் முழு வெப்பத்தையும் நிலத்தின் மீது எறியும்போது, தன் வெப்பத்தால் நிலத்தை எரிப்பதுபோல் சுடும்போது அதன் வடிவத்தை முழுமையாகக் கண்களால் காண இயலுவதில்லை. அதே கதிரவன் அந்திப்பொழுதில் தன் வெப்பத்தை நிலத்தின்மீது குறைத்துக்கொண்டு காட்சி கொடுக்கும்போது வட்ட வடிவிலும், எந்தவொரு பிடியும் இல்லாமலும் இருப்பதாகத் தெரியும். மாலைப்பொழுதில் தோன்றும் முழுநிலவும் இவ்வாறு எந்தவொரு பிடியும் இல்லாமல் இருப்பது தெரியும்.  எட்டுத்திசையிலும் எந்தவொரு பிடியும் இல்லாமல் இருப்பதைக் குறிக்க ஞால் என்ற சொல்லைப் பழந்தமிழ் நூல்கள் பயன்படுத்தி உள்ளன.
நீலமணிக் கடிகை வல்லிகை யாப்பின்கீழ்            
ஞால்இயல் மென்காதின் புல்லிகைச் சாமரை        கலி. 96:10-11
      மெல்லிய காதில் கீழ்நோக்கித் தொங்கும் இயல்புடைய புல்லிகை என்னும் காதணி சாமரையாக என்பதன் மேலே உள்ள அடிகளின் பொருளாகும். இங்கு ஞால் என்ற சொல் தொங்கும் என்ற பொருளில் வெளிப்படையாகப் பயன்பட்டுள்ளது. இந்த ஞால் என்ற சொல் அம் என்னும் பெயராக்க விகுதி பெற்று ஞாலம் என்றாகிறது. எனவே ஞாலம் என்ற சொல் பிடியோடு இருக்கும் தொங்கும் பொருள், எந்தப் பிடிப்பும் இல்லாமல் தொங்கும் பொருள் ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுத்தினர்.  கண்களுக்குப் புலப்படாத ஈர்ப்பு விசை அல்லாமல் வேறு எந்தப் பிடிப்பும் இல்லாமல் நாள்மீன்களும் கோள்மீன்களும் இருக்கின்றன என்று இன்றைய வானியல் அறிவியல் கூறுகின்றது. இந்த இயல்பைச் சுட்டிக் காட்டும் வகையில் நாள்மீன்கள், கோள்மீன்கள் போன்று, அவற்றால் ஆகியதும் அவற்றை உள்ளடக்கியதும் பிடிப்பு இல்லாமல் தொங்கும் நிலையில்தான் இருக்க வேண்டும் என்று கணித்தறிதல் அடிப்படையில் ஞாலம் என்பதை அதற்காகப் பயன்படுத்தினர். பின்வரும் ஞாலம் என்னும் அம்மீற்றுப் பெயராக்கச் சொல் பயன்பாட்டைப் பார்த்தால் பழந்தமிழரின் அறிவியல் கலைச்சொல்லாக்கம் புலப்படும்.
ஏறுதம் கோலஞ்செய் மருப்பினால் தோண்டிய வரிக்குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய்வழீஇ
ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட
மாலை போல் தூங்கும் சினை                           கலி. 106:26-29
       இவ்வடிகளுக்கு மா.இராசமாணிக்கனாரின் பொருள் வருமாறு: எருதுகள் தம் அழகிய கொம்புகளால் குத்திச் சரித்த குடர்களைக் கவ்வி எழுந்த பருந்தின் வாயிலிருந்து வழுக்கிய அக்குடர்கள், ஆலமரக் கிளைகளிலும் கடம்பமரக் கிளைகளிலும் வீழ்ந்து தொங்கி, மரங்களில் கோயில் கொண்டிருக்கும் கடவுளாரை வழிபடச் சூட்டிய மாலை போல் காட்சி தரும். ஞாலம் என்பது நேரடியாகத் தொங்கும் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டுணர்க. பழந்தமிழரின் அறிவியல் கணிப்பிற்கு இதனினும் பறைசாற்றல் வேறு வேண்டியதில்லை என்று கருதலாம்.
முடிவுரை
      பழந்தமிழ் நூல்களில் பயின்றுள்ள ஞாலம் என்ற சொல் நாடு, நாட்டு மக்கள், நிலம், நில உலகம், தொங்குதல் என்று பல்வேறு பொருள்களில் ஆளப்பெற்றுள்ளது. இவற்றுக்கு மேலாக வானத்திற்கு வானம் என்ற பெயரைப் போல், விண்வெளிக்கு விண்வெளி என்ற பெயரைப் போல், கடலுக்குக் கடல் என்ற பெயரைப் போல், நிலத்திற்கு நிலம் என்ற பெயரைப் போல், மலைக்கு மலை என்ற பெயரைப் போல், காற்றுக்குக் காற்று என்ற பெயரைப் போல், பள்ளத்திற்குப் பள்ளம் என்ற பெயரைப் போல், இவை போன்ற அனைத்தையும் உள்ளடக்கி – எந்தவொரு பிடியும் இல்லாமல் இருக்கும் பொருளுக்கு – தொங்கும் என்னும் பொருளை அடிச்சொல்லாக உடைய ஞாலம் என்ற பெயரைத் தந்துள்ளனர் பழந்தமிழர்கள்.
துணைநூல்கள்
1.கலித்தொகை, மா. இராசமாணிக்கனார் (உரை), ஆகஸ்ட் 2011, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை – 600108
2.தொல்காப்பியம் சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, கணேசையர் பதிப்பு, 2007, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600113
3.திருக்குறள் பரிமேலழகர் உரை, பிப்ரவரி 2000, ச. சீனிவாசன் (வெளியீடு) வெற்றியரசி பதிப்பகம், 4 ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை -600088
4.நற்றிணை, பின்னத்தூர் நாராயண சாமி ஐயர் (பதிப்பு – உரை), 1915, சைவ வித்தயாநுபாலன யந்திரசாலை, சென்னை
5.நன்னூல், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
6.பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், உ.வே. சாமிநாதையர் பதிப்பு, 1904, வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை
7.பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும், உ.வே. சாமிநாதையர் பதிப்பு, 1918, கமர்சியல் அச்சுக்கூடம், சென்னை.
8.புறநானூறு மூலமும் உரையும், உ.வே. சாமிநாதையர் பதிப்பு, 2014, உ.வே. சாமிநாதையர் நூலகம், பெசன்ட் நகர், சென்னை – 600090
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
 முனைவர் வா. காருண்யா
உதவிப் பேராசிரியர்
 ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்

 

 

மண்கெழு ஞாலம் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »