Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
In the aesthetics of the human body, the appearance of the woman has been celebrated mainly in Sangha literature. Every part of the woman’s body, from her head to her feet, has been individually painted with artistic grace and sophistication. Especially the upper parts of the body such as forehead, eye, eyebrow, mouth, ear, hair and lower parts such as shoulder, arm, middle, ankle, thigh, leg and upper body are decorated in painting style. Scholars opine that literature without commentary is like tasteless food. In this way, Professor T.S. As Natarasan mentions in the book “Tamil Aesthetics”, it is worth recalling here that “physical aesthetics in Sangha literature may be the model for sculpture”. “Panpena Paduduwa Patarindu Ogulal” is a time mirror that captures the cultured life of the ancient Tamils. Culture consists of the spheres of human activity and the symbolic systems that give such activities particularity and significance. Bara. b. Sivasubramanian says in his book that ‘the history of the grassroots’, “the culture that permeates the various levels of the entire society can be an expression of power and an expression of slavery.” In this way, the purpose of this research is to study how women’s bodies stand as cultural politics in Palandamili literature, Sangha literature, and how women’s bodies stand as symbols in society.
keywords: First, Eye, Brow, Chest, Algul
“சங்க இலக்கியங்களில் பெண்ணும் பண்பாட்டு அரசியலும் – ஓர் ஆய்வு”
ஆய்வுச்சுருக்கம்
உடலின் தோற்ற அழகியலில் பெண்ணின் தோற்றப்பொலிவே பிரதானமாகச் சங்க இலக்கியங்களில் கொண்டாடப் பெற்றுள்ளது.. சான்றாக, “எழில்மாமேனி” என்றாற் போல் பெண்ணின் ஒட்டுமொத்த உடல் அழகும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. . பெண்ணின் கேசம் முதல் பாதம் வரையிலான உடல் உறுப்புகள் யாவும் தனித்தனியே கலை நயத்துடனும் நுட்பத்துடனும் வருணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெற்றி, கண், புருவம், வாய், காது, கூந்தல் ஆகிய உடலின் மேற்பகுதிகளும், தோள், கை, இடை, அல்குல், தொடை, கால், சீறடி ஆகிய கீழ்ப்பகுதிகளும் ஓவியப் பாங்கில் அழகுறத் தீட்டப்பட்டுள்ளன. வருணனை இல்லாத இலக்கியம் சுவையற்ற உணவினைப் போன்றதாகும் என்பது அறிஞர்களின் கருத்து. அவ்வகையில் பேராசிரியர் தி.சு. நடராசன் “ தமிழ்அழகியல்” என்னும் நூலில் குறிப்பிடுவது போல், “சங்க இலக்கியத்தில் உடல் அழகியல் பின்னாலயே சிற்பக் கலைக்கு முன்மாதிரியாக அமையலாம்” எனச் சுட்டியுள்ளது இங்கு நினைவுக்கூறத்தக்கது.
“பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்” என்று கலித்தொகையும், ‘’பண்ணும் பண்பும் பாடறிந்து ஒழுகல்’ என நற்றிணையும் பண்டைய தமிழரின் பண்பட்ட வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. பண்பாடு என்பது மனித செயற்பாடுகளின் கோலங்கள் மற்றும் அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புகளையும் கொண்டுள்ளது.பேரா.ஆ.சிவசுப்ரமணியன் அவர்கள் ‘அடித்தள மக்கள் வரலாறு’ என்னும் தம் நூலில், “ ஒட்டுமொத்த சமூகத்தின் பல்வேறு நிலைகளிலும் ஊடுருவி நிற்கும் பண்பாடானது அதிகாரத்தின் வெளிப்பாடாகவும், அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவும் அமையும்” என்று கூறுகிறார். இவ்வகையில், பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியத்தில் பெண்ணின் உடல் பண்பாட்டு அரசியல்களாகவும், சமூகத்தில் பெண்ணுடல் எவ்வாறெல்லாம் குறீயிட்டு அடையாளங்களாகவும் நிற்கின்றன என்பதைக் குறித்து ஆய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
திறவுச் சொற்கள்: நுதல், கண், புருவம், மார்பு, அல்குல்
முன்னுரை
சங்க இலக்கியங்கள் தமிழரின் தொன்மையான வாழ்வியல், பண்பாடு, சமூக அமைப்பு, காதல், வீரம், அறம் ஆகியவற்றைப் பதிவு செய்துள்ள செவ்வியல் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவ்விலக்கியங்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறைகளை எடுத்துரைப்பதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் ஆண், பெண் ஆகியோரின் நிலைப்பாடுகளையும் அவர்களின் உடல் சார்ந்த பண்பாட்டு அடையாளங்களையும் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, பெண்களின் உடல் என்பது இயற்கையின் ஓர் அங்கமாக மட்டுமன்றி, சமூகத்தின் எதிர்பார்ப்புகள், மரபுகள், ஒழுக்க நெறிகள், அதிகார உறவுகள் ஆகியவை செயல்படும் பண்பாட்டுக் களமாகவும் விளங்குகின்றன.
சங்க இலக்கியங்களில் பெண்களின் கூந்தல், நுதல், கண்கள், தோள்கள், முலைகள், இடை, நடை போன்ற உடல் உறுப்புகள் பல்வேறு உவமைகள் மற்றும் உருவகங்கள் வழியாகப் பாடப்பட்டுள்ளன. இவ்வருணனைகள் பெண்ணின் அழகை வெளிப்படுத்துவதோடு, அக்காலச் சமூகத்தின் அழகியல் பார்வை, காதல் உணர்வு, பாலின வேறுபாடு, கற்பு சார்ந்த கருத்தாக்கம் ஆகியவற்றையும் பிரதிபலிக்கின்றன. அக இலக்கியங்களில் தலைவியின் உடல் காதல் உணர்வுகளின் வெளிப்பாட்டுக் கருவியாக அமைகிறது. தலைவியின் பசலை, மெலிவு, கண்ணீர், நாணம் போன்ற உடல்சார் வெளிப்பாடுகள் அவளது உள்ளத்து உணர்வுகளையும் சமூகச் சூழலையும் வெளிப்படுத்துகின்றன. அதேவேளையில், பெண்ணுடல் குறித்த பதிவுகளை அழகியல் நோக்கில் மட்டும் அணுகாமல், அவற்றின் பின்னணியில் செயல்படும் பண்பாட்டு அரசியலையும் ஆராய வேண்டியது அவசியமாகிறது. பெண்ணின் உடலைச் சுற்றி உருவாக்கப்பட்ட கற்பு, நாணம், பெண்மை, தாய்மை, குடும்பப் பொறுப்பு போன்ற கருத்தாக்கங்கள் சமூகத்தின் மரபுகளோடும் அதிகார அமைப்புகளோடும் தொடர்புடையவை. இக்கருத்தாக்கங்கள் பெண்களின் வாழ்வியல் வெளி, தனிப்பட்ட விருப்பங்கள், சமூகப் பங்களிப்பு ஆகியவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தின என்பதைச் சங்கப் பாடல்களின் வழியாக அறியலாம்.
தொல்காப்பியத்தில் பெண்ணுடல் பற்றிய பதிவுகள்
மெய்ப்பாடு என்பது உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை மெய்வழியாக வெளிப்படுத்தி நிற்பதை மெய்ப்பாடு என்கிறோம். அந்த வகையில் களவு காலத்தில் பெண்களுக்குரிய மெய்ப்பாடுகளாகத் தொல்காப்பியர் 24 வகைகளைக் கூறுகிறார். அவ்வகையில், வேட்கைக்குரிய மெய்பாடுகளாக,
கூழை விரித்தல், காது ஒன்று களைதல்
ஊழ் அணி தைவரல், உடை பெயர்த்து உடுத்தலொடு,
கெழீஇய நான்கே இரண்டு என மொழிப.
என்றும்,
உள்ளுதலுக்குரிய மெய்பாடுகளாக,
அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல்,
இல்வலி யுறுத்தல், இரு கையும் எடுத்தலொடு
சொல்லிய நான்கே மூன்று என மொழிப
என்றும் சுட்டியுள்ளார் . இந்நூற்பாக்களின் மூலம் பெண்ணின் உடல் உறுப்புகள் குறீயிட்டுப் பொருளாக மட்டுமல்லாமல் , களவு காலத்தில் இருந்த உடல் உறுப்புகள் கற்பு காலத்தில் இருக்க வேண்டுமெனத் தன் உள்ளத்தில் தோன்றக்கூடிய உணர்வுகளை உறுப்புகளின் வழியாக வெளிப்படுத்துகிறாள் . எனவே சமூகத்தில் பெண்ணுடல் பண்பாட்டுக் குறீயிடாகச் செயல்படுகிறது. .
பத்துப்பாட்டு நூல்களில் பெண்ணுடல்
பெரும்பாணாற்றுப்படையில், ஆடு மேய்க்கும் முல்லை நில ஆயர்குலப்பெண்ணைக் கூறும் போது,
“ நாள் மோர் மாறும் நல்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதின்; பணைத்தோள்
அளைவிலை உணவின் கிளை உடன் அருத்தி, (155-156)
பெண்ணின் உடல் உறுப்பு மூலம் அவள் அழகைச் சுட்டுவது மட்டுமல்லாமல், அவள் சமூகத்தின் பின்னணியும் கூறுகிறது. சிறுபாணாற்றுப்படையில் நிலமகளைக் போது,
“ கதுப்பு விரித் தன்ன காழ் அக நுணங்கு அறல்
அயில் உருட்பனணய ஆகி,
என்று வருணிக்கிறார். இப்பாடலின் மூலம் நிலமகளானவள் தன் கருங்கூந்தலில் பூக்களைச் சூடியுள்ளார் என்று வர்ணனை செய்கிறார் நல்லூர் நத்தத்தனார். விறலியைச் சுட்டும் போது கூட, அவளது உடல் உறுப்புகளை வர்ணிக்கிறார். இதன் மூலம் பெண்ணின் உடல் உறுப்புகளை நிலமகளுக்கும் , சமுதாயத்தின் தூய்மை மாந்தர்களாகவும், உயர்ந்த நெறி கொண்டுவர்களாகவும் வர்ணித்துள்ளார்.
எட்டுத்தொகையில் பெண்ணுடல்
பருவ மாற்றத்தை விவரிக்கும் பாடல் குறுந்தொகை – 159-வது பாடலில் ஒரு பெண் குழந்தை , குழந்தை பருவத்திருந்து இளம் பெண்ணாக மாறும் உடலியல் மாற்றங்களை (Puberty) மிக அழகாக விவரிகிறது,
தழையணி அல்குல், நுழைசிறு நுசுப்பின்,
அம்மெல் ஆகத்து, செப்புஇள முலையள்…
உடலமைப்பை மருந்தாக உவமிக்கும் பாடல்: (குறுந்தொகை 71)
தலைவியின் உடலமைப்புத் தோற்றத்தைத் தன் காதலின் பசிக்கும், தன் வாழ்நாளின் சேமிப்பிற்கும் ஒப்பிட்டுத் தலைவன் பாடும் பாடல்,
அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலை,
பெருந்தோள், நுணுகிய நுசுப்பின்…
என்ற பாடலடியில், முன்பெல்லாம், மாந்தளிர் போன்ற நிறமும் (மாமை நிறம்), பேரழகும் கொண்ட இவளது மார்பையும், அல்குல் பகுதியையும் தன் கைகளால் அன்போடு வருடி இன்பம் தந்தான். ஆனால் இன்று, இவளது அழகிய உடல் அவனது தீண்டுதல் இல்லாமல், பிரிவின் துயரத்தால் வாடிக் கொண்டிருக்கிறதே!” என்பதனை,
“அம்ம வாழி தோழி நாம் அழத்
துறந்து விண் படர்ந்தாங்குத் தாமே தங்கி
மாமை கவினிய ஏர்தகை அகலத்து
அல்குல் தைவரல் மன்னோ இவளே” (359)
என்ற பாடலடி சித்தரிக்கிறது, மேலும் நற்றிணையில்,
“அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
இப்பாடலில்,குறிஞ்சி நிலத் தலைவியின் அழகைக் கண்டு வியக்கும் தலைவன், அவளது கண்கள், அல்குல், மற்றும் ஒளிரும் உடல் மேனியை வர்ணிக்கிறான்.சிவந்த வரிகளோடு, குளிர்ச்சி பொருந்திய மை தீட்டிய கண்களைக் கொண்டவள்; பலவகை மலர்களோடு சேர்த்துக் கட்டப்பட்ட அழகிய தழையாடை அசையும் அல்குல் உடையவள். ஒளியுமிழும் நீல நவரத்தினத்தைப் போன்ற பேரழகு வாய்ந்த உடலமைப்பைக் கொண்ட இந்த. மென்மையான பெண், யாருடைய மகளோ? இவள் என் நெஞ்சில் பெரும் காதலைத் தந்து துயரமுறச் செய்கிறாள். தலைவியின் உடலில் படர்ந்துள்ள பசலையின் தீவிரத்தை, அடுப்பில் கொதிக்கும் பாலோடு ஒப்பிட்டுப் பாடுகிறார் புலவர் மிளைக் கந்தனார் என்னும் புலவர். பெண்ணுடல் என்பது வெறும் அழகியல் பொருளாக மட்டுமன்றி, சங்க காலச் சமூகத்தின் விழுமியங்கள், குறியீடுகள் மற்றும் பண்பாட்டுப் பதிவுகளின் களமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இயற்கையோடு இயைந்த பெண்ணுடலின் வர்ணனைகள் அக்காலத் தமிழர்களின் வாழ்வியலையும் அக ஒழுக்கத்தையும் நமக்கு உணர்த்துகின்றன. ஐங்குறுநூற்றில் ஐந்து திணைகளுக்கும் உரிய பின்னணியில் பெண்ணின் உடல் வர்ணிக்கப்படுகிறது.
“அம்ம வாழி, தோழி! காதலர்
இன்னர் ஆகவும் பிரியக் கற்றனர்;
எரி அகைந்தன்ன சுடர் பூங் காந்தள்
முலை அகத்து அணைந்த கேழ் கிளர் ஆகத்து,
அல்குல் தைவரல் அமையாத் தோளே!”
இப்பாடலில் பெண்ணுடல் சார்ந்த சித்தரிப்பு
தலைவன் பிரிந்து சென்றதால் வருந்தும் தலைவியைக் கண்டு, தோழி அவனிடம் உரைப்பதாகவோ அல்லது தோழியிடம் தலைவி தன் நிலைக்கு இரங்குவதாகவோ இப்பாடல் அமைகிறது:
🎯 முலை அகத்து அணைந்த ஆகம் (மார்பு): நெருப்புப் பிழம்பு போலச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் செங்காந்தள் மலர்களை அணிந்தவள் தலைவி. அவளது மார்பகங்களில் அணைந்து கிடந்த தலைவனின் நினைவுகள் அவளை வாட்டுகின்றன.
🎯 அல்குல் தைவரல்: பெண்ணின் உறுப்பு பகுதியை (அல்குல்) தலைவன் தொட்டுப் பாராட்டிய நினைவுகள்.
🎯 அமையாத் தோள்: தலைவனின் பிரிவால், அவனது அணைப்பை ஏந்தி நின்ற தோள்கள் இப்போது அழகிழந்து மெலிந்து, பசலை நிறம் (உடல் நிறம் மாறுதல்) கொள்கின்றன.
சங்க இலக்கியங்களில் பெண்ணின் உடலை வெறும் சரீரமாகப் பார்க்காமல், மாந்தளிர் மற்றும் நறுமண மலர்களோடு ஒப்பிட்டுப் பாடியதற்கு இப்பாடல் சிறந்த சான்றாகும்.
ஒண்தொடி, அசைந்த மென்தோள், பிணைநெகிழ்பு
மாந்தளிர் அன்ன மேனி, தொண்டியூர்
அனிச்ச வான்பூ நாறும், என்
நெஞ்சத்தாளே; எங்ஙனம் மறப்பவே.
புறநானூற்றில் பெண்ணுடல் பண்பாட்டு அரசியல்
சங்க காலப் புறத்திணை மரபில், பெண்ணின் உடல் வீரம், தாய்மை, குலப்பெருமை மற்றும் கற்புநெறி ஆகியவற்றின் அடையாளமாகவே காட்டப்பட்டுள்ளன.
வீரத்தின் விளைநிலமாகத் தாய்மை (உடலின் பெருமை)
சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டு உளனோ? என வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போக்கிய கல்லளை போல,
ஈன்ற வயிறோ இதுவே; தோன்றுவன்
மாதோ, போர்க்களத் தானே!
புறநானூற்றில் பெண்ணின் வயிறு (கருவறை) ஒரு சாதாரண உடல் உறுப்பாகப் பார்க்கப்படாமல், வீரர்களைப் பெற்றெடுக்கும் புனிதமான இடமாக மதிக்கப்பட்டுள்ள இங்குப் பெண்ணின் உடலானது வீரத்தின் பிறப்பிடமாக, சமூகத்திற்கு அரணாக இருக்கும் வீரர்களை உருவாக்கும் உறைவிடமாகக் காட்டப்பட்டுள்ளது. பெண்கள் தம் குழந்தைகளுக்கு ஊட்டும் பால், வெறும் உடல் சார்ந்த உணவு மட்டுமல்ல; அது வீரத்தை வளர்க்கும் அமுதம் ஆகும்.ஒரு தாய், தன் மகன் போர்க்களத்தில் முதுகில் புண்பட்டு (புறப்புண்) இறந்ததாகப் பலர் கூறக் கேட்டுப் பதறுகிறாள். “அவன் போருக்கு அஞ்சி ஓடிப் புறப்புண் பட்டிருந்தால், அவனுக்குப் பாலூட்டிய என் முலைகளை அறுத்து எறிவேன்” என்று சினம் கொள்கிறாள் (புறம் 278). வாளொடு போர்க்களம் சென்று தேடியபோது, அவன் மார்பில் புண்பட்டு (வீரமரணம்) கிடப்பதைக் கண்டு, அவனைப் பெற்றதை விடப் பெருமகிழ்ச்சி அடைகிறாள். இங்குப் பெண்ணின் மார்பகங்கள் (முலை) வீரம் மற்றும் கௌரவத்தின் அடையாளமாக உருவகிக்கப்படுகின்றன.
கைம்மை நோன்பில் ஒடுக்கப்பட்ட பெண்ணுடல்
கணவன் இறந்தபின், பெண்கள் தங்களின் அழகிய கூந்தலைக் கொய்து (சவரம் செய்து), வளையல்களை உடைத்து, அணிகலன்களைத் துறக்க வேண்டும் (புறம் 250, 261). பூக்களைச் சூடாத, நறுமணப் பூச்சுகள் இல்லாத, எளிய உணவை மட்டுமே உண்ணும் ஒரு “ஒடுக்கப்பட்ட உடலாக” கைம்பெண்களின் உடல் மாற்றப்பட்டது. இது அக்காலச் சமூக அமைப்பில் பெண்ணுடலின் மீது திணிக்கப்பட்ட ஒழுக்கக் கட்டுப்பாட்டைக் காட்டுகிறது. கணவன் இறந்த பிறகு, கைம்மை நோன்பு நோற்று உடலை வருத்துவதைக் காட்டிலும், கணவனின் ஈமத்தீயில் தன் உடலையும் மாய்த்துக் கொள்வதைப் பெருமையாகக் கருதினர். பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பாடிய பாடல் (புறம் 246) இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தன்னைத் தீப்பாய வேண்டாம் என்று தடுத்த சான்றோர்களை நோக்கி, “எனக்கு இந்த நெருப்புப் பொய்கை போன்றது” என்று கூறித் தீயில் குதிக்கிறாள். இங்குப் பெண்ணின் உடல் கணவனின் உடலோடு பிரிக்க முடியாத ஒன்றாக, கற்பின் உச்சக்கட்ட அடையாளமாகச் சமூகத்தால் பார்க்கப்பட்டது.
முடிவுரை
சங்க இலக்கியங்களில் பெண்ணுடல் என்பது அழகின் அடையாளமாகவும், காதலின் மொழியாகவும், சமூக ஒழுங்கின் குறியீடாகவும், அதிகார உறவுகள் வெளிப்படும் பண்பாட்டுக் களமாகவும் பன்முகத் தன்மையுடன் திகழ்கிறது.
துணை நின்ற நூல்கள்
1.பக்தவச்ல பாரதி- பண்பாட்டு மானிடவியல்
2.எட்டுத்தொகை – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
3.பத்துப்பாட்டு- புலவர் பி.ரா நடராசன்
4.அடித்தள மக்கள் வரலாறு- ஆ.சிவசுப்ரமணியன்
கட்டுரை
சங்க இலக்கியத்தில் கதுப்புப் பற்றிய பதிவுகள்- ஆய்வேடு- தி.சந்தோஷ் செல்வன்
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
தி. சந்தோஷ்செல்வன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
நா.ம.ச.ச வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி,
நாகமலை.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

