Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
Literature holds a unique place in Tamil society, and devotion is one of its key themes. Within the realm of devotional literature, the “ Panniru Thirumurai ” (Saivite) and the “Nalayira Divya Prabandham” (Vaishnavite) stand as the primary texts. Among the “Panniru Thirumurai”, the “Devaram” hymns were composed by the trio Thirugnanasambandar, Thirunavukkarasar, and Sundarar. These hymns are structured compositions sung with musical precision, adhering to specific “Pann” (melodic mode) systems. This article examines the tradition of “Devaram” hymns within the context of Tamil Pann music, specifically exploring the structural arrangement of these melodic modes and their classification.
“மூவர் தேவாரப் பதிகங்களில் பண்களும் பண்ணிசை மரபும்”
ஆய்வுச்சுருக்கம்
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை இலக்கியங்களுக்கு என்று தனி இடம் ஒன்று உண்டு. இலக்கியங்களின் பொருண்மைகளுள் பக்தியும் ஒன்றாகும். பக்தி இலக்கியங்களில் சைவ, வைணவ சமயங்களின் முதன்மை இலக்கியங்களாக பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவை திகழ்கின்றன. பன்னிரு திருமுறைகளுள் தேவாரப் பதிகங்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் அருளப்பட்டன. தேவாரம் பதிக அமைப்பில் இசை நுணுக்கங்களுடன் பாடப்பட்ட பனுவல்கள் ஆகும். தேவாரப் பதிகங்கள் பண்ணிசை முறைமைகளுடன் அருளப்பட்டவை. தமிழ்ப் பண்ணிசையில் தேவாரப் பதிகங்களின் மரபை பற்றியும் பண்கள் அமைந்துள்ள முறைமைகள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை பற்றி ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.
திறவுச் சொற்கள் : சைவம் ,திருமுறை,இலக்கியம்,தேவாரம், பண்கள்,இசை
முன்னுரை
மொழிகளில் சிறந்த தமிழ்மொழியாகும். தமிழ்மொழி முத்தமிழாக இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என பகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இசைத்தமிழ் மக்களோடு மிகுந்த தொடர்பை உடையது. இசைத் தமிழ் மரபானது சங்க காலம் தொட்டு சமகாலம் வரை மக்களோடு இயைந்து வருகிறது. அவற்றில் பண்ணிசை மரபில் தேவார மூவர் பதிகங்களைப் பாடி இறைவனைப் பாடியதோடு மக்களிடையே இசைத்தமிழை மக்களிடையே கொண்டு சென்றதில் பங்காற்றினர். தேவார மூவரில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் சமகாலத்தில் வாழந்து பல இசைப்பண்களில் பதிகங்களைப் பாடினர். இவர்களைத் தொடர்ந்து வந்த சுந்தரரும் இதனை சிறப்பு நிலைக்குக் கொண்டு சென்றதில் பங்கு வகிக்கிறார்.
“பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி” திரு.நா தே 6.55.6
அவை இசைத்தமிழின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியது எனலாம். பக்தி இலக்கிய வரலாற்றில் பன்னிரு திருமுறைகள் பாடிய நாயன்மார்களின் பணி அளப்பரியது. குறிப்பாக தேவார மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் பதிகங்களில் அமைந்துள்ள பதிகங்கள் பற்றியும் பாடப்பட்ட பண்களைக் குறித்தும் பண்ணிசை நுட்பங்களையும் குறித்த நிலையில் இவ்வாய்வுக் ஆய்வுக்கட்டுரை அமைகிறது.
பண்ணிசை மரபும் பண்களின் அமைப்பும்
தமிழ்மொழியின் இசை மரபில் பண்கள் தனி இடம் பெற்று விளங்குகிறது. பண் என்ற சொல் பண்ணுதல் என்ற தொழிற்பெயரில் இருந்து மருவி வந்துள்ளது. பண் என்பது சங்க காலத்துக்குப் முன் யாழ் என அழைக்கப்பட்டது. சிலப்பதிகார காலத்தில் அவை மருவி பாலை என்றும் அழைக்கப்பட்டன. யாழ் எனும் இசைக்கருவியைக் கொண்டே பண்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சிலப்பதிகாரம் குறிப்பிடும் பண்கள்
சிலப்பதிகாரம் ஐவகை நிலங்களுக்கு உரிய பண்கள் குறித்துக் கூறுகிறது. குறிஞ்சி – குறிஞ்சி பாணி/பண், முல்லை – முல்லை பாணி/பண், பாலை – பாலை பாணி /கொன்றைப் பண், மருதம் – ஆம்பல் பண், நெய்தல் – கானல் பாணி / நெய்தல் பண்
பண்ணிசை மரபின் தொடர்ச்சி
சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து பக்தி இலக்கிய காலமான கிபி நான்காம் நூற்றாண்டுக்கு பின் காரைக்கால் அம்மையார் காலத்தில் தொடங்கிய பண்ணிசை தேவார மூவர் காலத்தில் பொற்காலத்தை எட்டியது. திருஞானசம்பந்தர் பத்தொன்பது பண்களிலும் திருநாவுக்கரசர் பத்து பண்களிலும் சுந்தரர் பதினாறு பண்களிலும் பதிகங்களைப் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்கள் கம்பீர உணர்வு மிக்கதாக அமைந்திருக்கும். திருநாவுக்கரசர் பதிகங்கள் மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கும். சுந்தரர் தேவாரம் மனதிற்கு எதார்த்தமான இதமான நிலையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.பண்கள் குறித்து பின்னால் எழுந்த இலக்கியங்களும் தகவல்களைக் கூறுகின்றன. பண்களின் அமைப்பை பொறுத்தவரை கட்டளைகளாக அமைந்துள்ளன. கருநாடக இசையில் ஏழு சுரங்கள் இருப்பது போல் தமிழ் பண்ணிசை மரபில் ஏழு வகை உறுப்புகள் அமைந்துள்ளன. இவை குறித்து யாழ் நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இளி, விளரி, தாரம், குரல், துத்தம் கைக்கிளை உழை இதையே கருநாடக இசை உறுப்புகள் ஷட்ஜம் ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடுகிறது.
பண், இசை குறித்து தேவாரத்தில் உள்ள குறிப்புகள்
திருஞானசம்பந்தர் தேவாரத்தில் பல இடங்களில் இசை குறித்தும் பண்கள் குறித்தும் குறிப்புகள் காணப்படுகின்றன.பண்ணும் அவற்றின் பதங்கள் ஏழு என்று குறிப்பிடுகிறார்.
“ பண்ணும்பத மேழும்பல வோசைத்தமி ழவையும்”-திருஞான.தே 1.11.4
மற்றுமொரு பதிகத்தில்
“வந்தணைந் தின்னிசை பாடுவார்பால் மன்னினார்”-திருஞான.தே 1.8.5
மேலும் சம்பந்தர் தனது பதிகங்களில் யாழ், வீணை, முழவு, மொந்தை போன்ற இசைக்கருவிகள் குறித்தும் குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் தேவாரத்திலும் பண்கள் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன.
“முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்” – திருநா.தே 6.23.9
“ பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம் ” – திருநா.தே 6.15.1
சுந்தரர் குறிப்பிடுகையில்
“ பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினில் சுவையொப்பாய்” – சுந்.தே 7.29.6
“ ஏழிசையாய் இசைப்பயனாய் ” – சுந்.தே 7.5110
என்று தேவார மூவரும் தனது பதிகங்கள் தோறும் இசை குறித்தும் பண்கள் குறித்தும் குறிப்பிடுகின்றனர்.
மூவர் தேவாரத்தில் அமைந்துள்ள பண்கள்
நட்டபாடை, நட்டராகம், தக்கராகம், செவ்வழி, கொல்லி, கொல்லி கௌவாணம், பழந்தக்கராகம், புறநீர்மை, குறிஞ்சி, பஞ்சமம், காந்தாரம், வியாழக்குறிஞ்சி, அந்தாளிக் குறிஞ்சி, செந்துருத்தி, பழம்பஞ்சுரம், தக்கேசி, மேகராகக் குறிஞ்சி, இந்தளம், பியந்தைக் காந்தாரம், காந்தார பஞ்சமம், சீகாமரம், கௌசிகம், சாதாரி ஆகியனவாகும். இவ்வாறாக மூவர் தேவாரத்தில் இருபத்து மூன்று பண்கள் அமைந்துள்ளதை அறியலாம்.
தேவாரப் பதிகங்களின் பாடுபொருள்
பொதுவாக தேவாரப் பதிகங்களின் பாடுபொருள் இறைவனைப் பற்றியே அமைந்திருக்கும். இறைவனைக் குறிப்பிடும்போது வடிவம், அருட்தன்மை, அணிந்த ஆடை மற்றும் அணிகலன்கள், திருவடி போன்றவற்றை பாடுபொருள்களாக கொண்டு பாடப்பட்டிருக்கும். சில பதிகங்களில் இறைவன் செய்த அருட்செயல்கள் குறித்து தேவார மூவர் குறிப்பிடுவர். இந்த பாடுபொருள் மூவருக்கும் வேறுபடும். ஏனெனில் திருஞானசம்பந்தர் இறைவனின் அருட்தன்மையைப் பற்றிக் கூறும் போது, திருநாவுக்கரசர் தனது வாழ்வின் அனுபவங்களை வெளிப்படுத்துவார். சுந்தரர் அருள் அனுபவங்கள் மற்றும் இறைத் தன்மை இரண்டையும் தனது பதிகங்களில் பாடியிருப்பார்.
திருஞானசம்பந்தர் தேவார பதிக அமைப்பு
திருஞானசம்பந்தர் தனது தேவாரப் பதிகங்களில் பத்தொன்பது பண்களில் பாடியுள்ளதை உமாபதி சிவத்தின் திருமுறை கண்ட புராணத்தின் மூலம் அறியலாம். இதனை யாழ் நூலின் மூலம் விபுலானந்த அடிகள் தெளிவுபடுத்துகிறார். மேலும் திருமுறைகளை கண்டெடுத்து தொகுத்தப் பின்னர் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த பாடினியார் ஒருவர் மூலமாக பண் முறையினை பதிகங்களுக்கு அமைத்து பதிகங்களைத் தொகுத்தனர் என்பர். திருஞானசம்பந்தர் பதிகங்களில் பண்கள் அவரது காலத்திலேயே இருந்திருக்கலாம் என்றொரு கருத்தும் உள்ளது. ஏனெனில் திருஞானசம்பந்தர் தான் பதிகங்களை பாடும்போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் உடன் யாழ் மீட்டிச் செல்வார் என்பர். அவ்வாறாக அவர் தருமபுரத்தில் பாடிய பதிகம் யாழினுக்கு அடங்காத திருப்பதிகம் இதன் பண்ணாக யாழ்முரி என்னும் பண் அமைந்துள்ளது.
“மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்…..
….குயில் பயில் தருமபுரம் பதியே” திருஞான.தே 1.127.1
காரைக்கால் அம்மையார் அருளிய பதிகங்கள் நட்டபாடை பண்ணில் மட்டுமே அமைந்திருக்கும். இதன் மூலம் தேவார மூவர் காலத்திற்கு முன்பே பண்ணிசை பாடல்கள் வழங்கப்பெற்றுள்ளன என்பதை அறிய முடிகிறது. நட்டபாடை பண்ணில் தொடங்கி அந்தாளிக் குறிஞ்சி பண்ணில் முடிவதாக திருஞானசம்பந்தர் பதிகங்கள் அமைந்துள்ளன. நட்டபாடை, கொல்லி, தக்கராகம், குறிஞ்சி, தக்கேசி, நட்டராகம், பழந்தக்கராகம், அந்தாளிக்குறிஞ்சி, சாதாரி, செவ்வழி, கௌசிகம் வியாழக்குறிஞ்சி, மேகராகக்குறிஞ்சி, காந்தாரம், காந்தார பஞ்சமம், பஞ்சமம், யாழ்முரி, பியந்தைக்காந்தாரம், புறநீர்மை, இந்தளம், சீகாமரம் ஆகியவை இவரது பதிகங்களில் அமைந்துள்ள பண்கள் ஆகும். மேலும் இவரது பதிகங்களில் பண்களின் கட்டளைகள் சற்று கடினமாகவே அமைந்துள்ளதை யாழ் நூல் மூலம் அறியலாம். இவர் பாடிய கொல்லி பண்ணிற்கும் திருநாவுக்கரசர் பாடிய கொல்லி பண்ணிற்கும் வேறுபாடு உள்ளதை நாம் காண முடியும்.
திருநாவுக்கரசர் தேவார பதிக அமைப்பு
திருநாவுக்கரசர் பதிகங்களைப் பொறுத்தவரை மூன்று திருமுறைகளாகப் பகுப்பட்டுள்ளது. மூன்று திருமுறைகளும் முறையே திருநேரிசை, திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் எனப் பெயர் பெற்றுள்ளதைக் காண முடிகிறது. நான்காம் திருமுறையில் உள்ள குறிப்பிட்ட பதிகங்கள் மட்டுமே பண் அமைப்பில் அமைந்துள்ளன. நான்காம் திருமுறையில் ஏனைய பதிகங்கள் நேரிசை என்ற பதிக அமைப்பிலும், ஐந்தாம் திருமுறை குறுந்தொகை எனும் பதிக அமைப்பிலும், ஆறாம் திருமுறை தாண்டகம் எனும் பதிக அமைப்பிலும் பாடப்பட்டுள்ளன.
“பண்ணின் ஓசை பழத்தினில் இன்சுவை ” – திருநா.தே 5.47.7
என்று நாவுக்கரசர் பதிகம் ஒன்றில் குறிப்பிடுவதைக் காண முடியும் கூற்றாயினவாறு எனத் தொடங்கும் முதல் பதிகம் கொல்லிப் பண்ணில் பாடப்பட்ட பதிகம் ஆகும். கொல்லி, சீகாமரம், காந்தாரம், காந்தாரப் பஞ்சமம், பியந்தை காந்தாரம், சாதாரி, பழந்தக்கராகம், குறிஞ்சி ஆகிய பண்களில் பதிகங்களை பாடியுள்ளார். மேலும் இவரது பதிகங்கள் ஒருவித மனதாக்கங்கள் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். கொல்லி பண்ணில் தொடங்கி திருத்தாண்டகத்தில் முடிகிறது. திருநாவுக்கரசர் பதிகங்களைப் பொறுத்துவரை கடினமாக இல்லாவிட்டாலும் ஒரு வித இரக்க உணர்வு ஏற்படுத்துவதாகவும், இறைவனை இறைஞ்சு பாடும் வகையிலும் பாடப்பட்டிருக்கும். இவரது பதிகங்கள் திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் பதிகங்களில் இருந்து வேறுபட்டு இருப்பதையும் காண முடியும்.
சுந்தரர் தேவார பதிக அமைப்பு
சுந்தரர் தேவார பதிகங்கள் திருப்பாட்டு என்ற பெயரிலே பாடப்பட்டு ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சுந்தரர் பதிகங்களில் நமக்கு நூறு பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. சுந்தரரின் நூறு பதிகங்களில் பதினாறு பண்களில் பாடியுள்ளார். சுந்தரர் பாடிய முதல் பதிகத்திற்கு இறைவனே அடிஎடுத்து கொடுத்தார் என பெரியபுராணம் கூறுகிறது. பித்தா பிறைசூடி எனத் தொடங்கும் முதல் பதிகம் இந்தளம் பண்ணில் தொடங்கி பஞ்சமம் பண்ணில் முடிவதாக பதிகங்கள் அமைந்துள்ளன. இந்தளம், நட்டராகம், கொல்லி, தக்கராகம், கொல்லிக் கௌவானம், பழம்பஞ்சுரம், தக்கேசி, காந்தாரம், காந்தார பஞ்சமம், நட்டபாடை, புறநீர்மை, சீகாமரம், குறிஞ்சி, செந்துருத்தி, கௌசிகம், பஞ்சமம் ஆகிய பண்களில் சுந்தரரின் பதிகங்கள் அமைந்துள்ளது. இவரது பதிகங்கள் முற்றிலும் தனித்துவம் பெற்றுள்ளதை பாடல்களின் மூலம் அறிய முடியும். இறைவனின் தோழராக அறியப்பட்ட சுந்தரர் தனது பதிகங்களில் தோழமையை வெளிப்படுத்துவதையும் காண முடியும். சான்றாக திருவாரூர் பதிகத்தில்
“ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே ” – சுந்.தே 7.95.1
என்று இறைவனை உரிமையில் ஏசுதலை காண முடியும்.
தேவார பண்ணிசை மரபில் ஒதுவார்களும் இசை அறிஞர்களும்
தேவார பண்ணிசையை மூவர் காலத்திற்கு பின் மக்களிடையே கொண்டு சென்று சேர்த்ததில் ஓதுவார்களின் பங்கு அளப்பரியது என்றே கூற வேண்டும். ஏனெனில் தேவாரப் பதிகங்ககளை வாய்வழியாக பாடி தேவார இசைமரபைத் தொடர்ந்த ஓதுவார்கள் அது சோழர் காலத்தில் தொடர்ந்ததிலும் முக்கிய பங்காற்றினர். தேவார மூவர் காலத்திற்கு பிறகு முன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு சோழர் காலத்தில் தான் தேவார பதிகங்கள் நமக்கு கிடைத்தன. கரையான் அரித்தது போக மீதமுள்ள பதிகங்கள் சோழனின் முயற்சியால் நம்பியாண்டார் நம்பியின் உதவியுடன் மீட்கப்பட்டு தொகுப்பட்டன. நம்பியாண்டார் நம்பி தொகுத்த பின்னரே திருமுறைகள் என்ற பெயர் வழங்கல் ஆயிற்று. தேவாரம் என்ற பெயரை இரட்டைப் புலவர்கள் தங்களது ஏகாம்பரநாதர் உலாவில் முதன் முதலில் குறிப்பிடுகின்றனர்.
“ மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும்
தேவாரஞ் செய்த திருப்பாட்டும் ” ப.திரு வரலாறு பக்க எண் 25
12ம் நூற்றாண்டில் பெரிய புராணத்தில் தேவார பண்ணிசை பற்றி நேரடியாக குறிக்கப்படாவிடினும் சில இடங்களில் திருஞானசம்பந்தர் புராணத்திலும், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் புராணங்களில் மற்றும் ஆனாய நாயனார் புராணத்திலும் இசைக் குறிப்புகள் காணப்படுகின்றன. 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரங்க தேவர் என்பார் தேவார பண்ணிசையைப் பற்றி தனது சங்கீத நூலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். சிற்றிலக்கியங்களிலும் சில இடங்களில் தேவாரத் திருப்பதிகங்கள் பற்றியும் இசை பற்றியும் கூறப்பட்டுள்ளதை காண முடியும்.
விஜயநகர பேரரசின் வருகைக்குப்பின் கருநாடக இசை வடிவம் பெற்று எழுச்சி அடைய தொடங்கியது அதனால் தமிழ்ப் பண்ணிசை சற்றே குறைய தொடங்கியது. மீண்டும் அதனை நல்ல நிலைக்கு கொண்டு சென்றதில் யாழ் நூல் எழுதிய விபுலானந்த அடிகள் மற்றும் கருணாமிர்த சாகரம் எழுதிய ஆபிரகாம் பண்டிதர் ஆகிய இருவரின் பங்கு முக்கியமானது. யாழ் நூலில் விபுலானந்த அடிகள் தேவார இயல் என்றொரு இயலினை எழுதி தேவார பண்ணிசை பற்றிய அடிப்படைகள் குறித்து தெளிவாக விளக்கியிருப்பார். ஆபிரகாம் பண்டிதர் பண்களுக்கு உரிய ராகங்களை வகைமைப்படுத்தி அது பாடப்படும் பொழுது உள்ளிட்டவற்றை விளக்கிக் கூறியிருப்பார். இவர்கள் மட்டுமன்றி க.வெள்ளைவாரணர், வீ.கா.ப சுந்தரம் போன்றோரும் தமிழ்ப்பண்ணிசை பற்றிய குறிப்புகளை தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். வீ.கா.ப சுந்தரம் தமிழ் இசைக்கென தனியாக தமிழிசைக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கினார்.
முடிவுரை
தமிழ் இலக்கியங்களில் பக்தி இலக்கியங்கள் சிறப்பு பெற்று விளங்குகின்றன. தேவாரப் பதிகங்கள் இறை வழிபாட்டை மட்டுமன்றி இசைக்கூறுகளை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. தேவார மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பதிகங்களில் பக்தி எனும் பொருண்மை மட்டுமன்றி இலக்கிய நயம், பதிகச் சிறப்பு, இறைவடிவம், சமுதாய சிக்கல்கள் என அனைத்தும் நிறைந்துள்ளதைக் காண முடியும். எனினும் இசையும் தனி அங்கம் வகிப்பதைப் பதிகங்களின் மூலம் அறியலாம். பண்ணிசை தொல்காப்பியர் காலத்தில் தொடங்கி சிலப்பதிகார காலத்தில் எழுச்சி பெற்று தேவார மூவர் காலத்தில் வளர்ச்சியடைந்ததை காண முடிகிறது. தேவாரப் பதிகங்கள் இசைத் தமிழின் ஓர் பகுதியாக அதன் வளர்ச்சியில் இடம்பெறுகிறது. பண்ணிசை மக்களின் வாழ்வில் இயைந்து போற்றப்பட்டது. பக்தி என்பது இறைநெறியை அடைவதே ஆகும். இறைநெறியை பண்களின் மூலம் பாடி பக்திபணியினை மேற்கொண்டனர். பக்திக்கு முன்னுதாரணமாக தேவார மூவர் திகழ்ந்துள்ளனர் என்பதை மூவரின் பதிகப் பாடல்கள் வழி அறிய முயல்வதையும் பண்ணிசை மற்றும் பண்ணிசை மரபு வளர்ச்சியடைந்ததை விளக்கும் வகையிலும் கட்டுரை அமைந்துள்ளது.
பயன்பட்ட நூல்கள்
🌻பன்னிரு திருமுறைகள், மூலமும் உரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை – 600 017, 2017
🌻பன்னிரு திருமுறை வரலாறு, க. வெள்ளைவாரனர், சாரதா பதிப்பகம், சென்னை – 600 014, 2016
🌻தேவாரத் திருப்பதிகங்கள், நா. மகாலிங்கம்(பதிப்பாசிரியர்), இராமானந்த அடிகளார் அறக்கட்டளை, கோயம்புத்தூர் – 641 049, 2011
🌻தமிழிசை வரலாறு, நா. மம்மது, நாதன் பதிப்பகம், சென்னை – 600 093, 2022
🌻தமிழிசை இயக்கம், இரா. இளங்குமரன், பரிசல் புத்தக நிலையம், சென்னை – 600 106, 2023
🌻பக்தி இலக்கியத்தில் சமுதாய பார்வை, தா. ஈசுவரபிள்ளை, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 005, 2000
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ர.சி.அபிஷேக் குமார்
முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்)
தமிழ்த்துறை
பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641014
ஆய்வு நெறியாளர் :
இரா. விஜயகுமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை(சுயநிதிப் பிரிவு)
பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641014.


முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்)

