Saturday, August 1, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் ‘Surrender’ from a biblical – Maliyam perspective|Dr. C.S. Arul Prakash

‘Surrender’ from a biblical – Maliyam perspective|Dr. C.S. Arul Prakash

Abstract
          Love, heroism, charity, culture, tamil life styles, etc, are highlighted in Tamil literature. Especially devotional literatures focus on spirituality, morality, and home making. They have given many ideas about the purposes of human life to the people of the world. Among them, this article explains ‘saranagathi’ which is explained in particular by the bible Maliyam.
Key words: God, spiritual, surrender, birth, death, liberation, heavenly life.  

விவிலிய – மாலிய  பார்வையில் ‘சரணாகதி’

ஆய்வுச் சுருக்கம்
          தமிழ் இலக்கியங்களில் காதல், வீரம், ஈகை, பண்பாடு, தமிழர் வாழ்வியல் முறைகள் போன்றவை சிறப்பித்துக் கூறப்படுகின்றன. அதிலும் சிறப்பாக பக்தி இலக்கியங்கள் ஆன்மிகம், அறவாழ்வு, வீடுபேறு, மானிட வாழ்வின் நோக்கங்கள் பற்றிய பல கருத்துகள் உலக மக்களுக்கு அள்ளி வழங்கியுள்ளன. அவற்றில் சிறப்பாக விவிலியமும் மாலியமும் விளக்கும் ‘சரணாகதி’ பற்றி இக்கட்டுரையில் விளக்கம் பெறுகின்றது.
கருவிச் சொற்கள்: இறைவன், பக்தி, சரணடைதல், பிறப்பு, இறப்பு, விடுதலை, வீடுபேறு.
முன்னுரை
          எந்தவொரு சமய நூலும் பொதுவாகக் காணப்படும் இறைக் கோட்பாடுகளையும், மெய்யியல்களையும், வரலாற்றினையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஒவ்வொரு சமய நம்பிக்கையிலும் இறைவனையே சார்ந்து வாழ்வது முக்கியமான அறமாகக் கருதப்படுகின்றது. அத்தகைய பக்திநெறியின் உயர்ந்த நிலையாகக் கொள்ளப்படும் சரணாகதி என்ற அனுபவத்தை விவிலிய மாலிய பார்வையில் சுருங்க இக்கட்டுரையில் விளக்கம் பெறுவதாக அமைகிறது. 
சொல் விளக்கம்
          இறைநிலை எனப்படும் முக்தி நிலையை அடையப் பெரிதும் வலியுறுத்தப்படுவது பக்தி நெறியே ஆகும். இதன் மூலம் இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைப்பதே சரணாகதியில் விளக்கம் பெறுகிறது.  இச்சொல் ‘அடைக்கலம் புகுதல்’, ‘சரணடைதல்’, ‘தஞ்சம் புகுதல்’, ‘ஒப்படைத்தல்’ என்றும் ‘சரணாகதம்’, ‘அடைக்கலம்’1 ‘அடைக்கலம் புகுகை’2 ஆங்கிலத்தில் ‘surrender, taking, shelter, seeking refuge’3 என்னும் பொருள் விளக்கங்கள் கொண்டுள்ளன.    
          ‘என்னைத் தவிர வேறு எதனையும் எண்ணாமல், என்னிலே உறைந்து, என்னையே சார்ந்து வாழ்கிறவனுக்குத் தேவைப்படும் யாவற்றையும் நான் கொடுத்து விடுகிறேன்.’4 இறை நம்பிக்கையின் உச்சபட்ச நிலையாகக் கருதப்படுவது தான் சரணாகதி என்பதாகும். ‘சரணாகதி வழியாக மட்டுமே ஒருவரால் இந்தப் பக்தி மார்க்கத்தின் மூலமாகத் தெளிவை அடைந்திட முடியும்.’5 மேலும் ‘நான்’ என்ற ஒன்று இல்லாமல், தன்னை முழுமையாக இறைவனிடம் இழந்து நிற்கும் நிலையைச் சரணாகதி என்பர். ‘இறைவனே நம்மில் அனைத்தையும் செயல்படுத்தட்டும். அவன் நம்மை எங்கே அழைத்துச் சென்றாலும் சரி, உம் செயலே அனைத்தும் என்று அவனைச் சரணடைதல் மட்டுமே வழி.’6 இந்தச் சொல் விளக்கம் ஒருவர் தன்னை முழுமையாக கடவுளிடம் ஒப்படைத்து அடைக்கலம் புகும் ஒரு உயரிய பக்தி நிலை ஆகும்.
     இது உடல், பொருள், ஆன்மா ஆகிய அனைத்தையும் கடவுளுக்கே முழுமையாக அர்ப்பணிக்கும் ஓர் உன்னதமான நிலை. துன்பங்களிலிருந்து விடுபடவும், கடவுளின் அருளாசிகளைப் பெற உதவும் ஒரு சிறந்த ஆன்மிக வழியாகும்.  
சரணாகதியின் நோக்கங்கள்
          இறைவனிடம் சரணாகதி  அடைவதன் நோக்கமே பிறப்பு – இறப்பு என்ற சங்கிலித் தொடரிலிருந்து விடுதலை பெறுவதாகும்.
  • துன்பங்களிலிருந்து விடுதலை பெறுதல்
  • ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் அடைதல்
  • இறைவனுடன் இரண்டறக் கலத்தல்
          மேற்காணும் மூன்று குறிப்புகளும் சரணாகதியின் முக்கியமான நோக்கங்களை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இதனையே வீடுபேறு அல்லது நிலை வாழ்வு என்று அழைக்கின்றனர்.
விவிலியத்தில் சரணாகதி
          விவிலியம் உலகிலுள்ள பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒப்பற்ற நூல் எனக் கூறுவர். விவிலியம் கிறிஸ்தவ சமயத்தின் அடிநாதமாக இன்று வரை விளங்குகின்றது. கிறிஸ்தவ மார்க்கத்தின் வழிபாட்டு முறைகள், ஆன்மீகப் போதனைகள், சமயச் சட்ட ஒழுங்குகள், வாழ்வியல் நெறிகள், வீடுபேறு ஆகியவற்றுக்கான ஆதார நூலாக  விளங்கி வருகிறது. விவிலிய நூலில் விளக்கம் பெறும் ‘சரணாகதி’ என்பது மனிதர்கள் தங்களுடைய சுய விருப்பங்களைக் கைவிட்டு இறைவனின் விருப்பத்திற்குத் தங்களை முழுமையாக ஒப்படைப்பதைக் குறிக்கிறது. மேலும் இது பக்தி, கீழ்ப்படிதல், பற்றுறுதியின் மூலம் இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஒரு உன்னத செயலாக உள்ளது. துன்பம், துயரம், போராட்டங்களில் இருந்து விடுபட்டு இறைவனிடம் புகலிடம் தேடிச் செல்ல வேண்டி யதன் தேவையை வலியுறுத்துகிறது. இதைக் கீழ்காணும் விவிலிய வாக்கியங்களின் வழி அறியத்  தருகிறது.
ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்.7 சரணாகதியின் முக்கியத்துவத்தை இவ்வாக்கியங்களில் விளக்கம் பெறுகின்றதைக் காணலாம்.
          ‘இயேசு தம் சீடரைப் பார்த்து “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.8
‘தந்தையே உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்’ என்று கூறினார்.9
        ‘சகோதர சகோதரிகளே கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்; கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.‘10
        ‘எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.’11
        ‘முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே. நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்.’12
          மேற்கண்ட விவிலியமறை வாக்கியங்களை அடித்தளமாகக் கொண்டு கிறிஸ்தவக் கவிஞர்கள் பல கீர்த்தனைகளைப் படைத்துள்ளனர். அவைகளில்,
                          ‘பாதம் ஒன்றே வேண்டும்; –  இந்தப்
                           பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்’13
          இறைவனுடைய பாதம் ஒன்று மாத்திரமே போதும் இந்த உலகில் காணப்படும் மற்ற பொருள்கள் எதுவும் எனக்கு வேண்டியதில்லை என்னும் சித்தாந்தத்தை முன் வைக்கிறது.
                            ‘உன்னையன்றி வேறே கெதி
                             ஒருவரில்லையே ஸ்வாமி!’14
          மேற்கண்ட கிறிஸ்தவக் கீர்த்தனைப் பாடலின் வரிகள் மனிதர்கள் கடவுளின் சரண் பற்றி வாழ அழைக்கிறது. மேலும் ஆன்மா மீட்பு பெறத் தடையாக உள்ளவைகளை வேறறுத்து பேரின்ப வாழ்வைப் பெற்றுக் கொள்ள உலையிலிட்ட மெழுகாக தம்மை உருக வைக்க பக்தன் வேண்டுதல் செய்வதை இதன் மூலம் அறியலாம்.
மாலியத்தில் சரணாகதி
          சிவனியமும் மாலியமும் தமிழ்நாட்டில் தோன்றிய சமயங்களாகும். மாலியம் என்பது திருமால் வழிபாட்டைக் குறிக்கும் ஒரு பழமையான தமிழ்ச் சொல் ஆகும். பிற்காலத்தில் வைணவம் என்னும் பெயர்ச் சொல்லில் இது அழைக்கப்படுகிறது. தமிழ்ப் பக்தி இலக்கியங்களில் சிறப்புற்று விளங்குவது சைவசித்தாந்தமும் மாலியமும் ஆகும். மாலியப் பார்வையில் ‘சரணாகதி’ என்பது ஜீவாத்துமாக்கள் (மனிதர்கள்) தம்மைப் படைத்த பரமாத்துமாவான திருமாலிடத்தில் (விஷ்ணு) எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி முழுவதுமாக ஒப்படைத்து அவரே கதி என்று நம்பி வாழ்வதாகும்.
இதில் ‘நான்’ , ‘எனது’ என்னும் அகங்காரத்தை நீக்கி, இறைவனின் அருளால் மட்டுமே மோட்ச வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் முழுமையாகச் சரணடைவதே அதன் முக்கிய அம்சமாகும். இதற்கு ஆண்டான், அடிமை, உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பாகுபாடுகள் கிடையாது என்பதை நாம் சிந்திக்கற்பாலது.
     சரணாகதி தத்துவத்தினை ஆழ்வார்கள் பெரிதும் போற்றி வளர்த்துள்ளனர். இதனை வைணவர்கள் “பிரபத்தி” என்ற சொல்லில் அழைப்பர். எவ்வித பலனையும் எதிர்பாராது முழுவதுமாக கடவுளிடம் தஞ்சம் புகுதலாகும். தனது உடல், செல்வம், ஆன்மா ஆகிய அனைத்தையும் இறைவனுக்கே சொந்தம் என உணர்ந்து ஒப்படைத்தல். பக்தி மார்க்கத்தின் உன்னத நிலை கடவுளின் அருளைப் பெறுவதற்கான எளிய வழிகளில் இது மிக உயர்ந்த பக்தி நிலையாகும்.
               “பற்றே லொன்றுமிலேன்  பாவமேசெய்து பாவியானேன்
                மற்றே லொன்றறியேன் மாயனே!எங்கள் மாதவனே
                கற்றேன் பாய்ந்தொழுகும் கமலச்சுனை வேங்கடவா
                அற்றேன் வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே” 15
           என்று கூறி இறைவனிடம் முற்றிலும் சரணடைந்து தமக்கு அருள்புரியுமாறு மனம் உருகி திருமங்கையாழ்வார் வேண்டுகிறார்.
                       “ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
                       ஆனைக்குநீயருள் செய்தமையால்16
          இவ்வரிகளில் யானைக்கு அருள் புரிந்த திருமால் தம்மையும் அருள் செய்து காக்க வேண்டும் என்று பெரியாழ்வார் கசிந்துருகி பாடுகின்றார். சரணாகதி நிலையில் நின்று உணர்வுப் பூர்வமான அணுகு முறையைக் கொண்டு இறைவன் பெருமை பேசியவர்களுள் ஆண்டாளும் ஒருவராவார் என்பதையும் அறிவோம்.
                         “தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால்
                          சரணில்லை17
          மேற்கண்ட தொடர்களில் குலசேகர ஆழ்வாரும் சரணாகதி நெறியைத் தன்னுடைய பாடல்களில் அமைத்துப் பாடி இந்தப் பாசுரத்தின் மூலம் தன்னுடைய சரணாகதி நிலையை பற்றி விளக்கியுள்ளார்.
          பக்தர் தன்னைவிட மேலானவனான கடவுளிடம் தன்னை ஒப்படைக்கும் நிலையில் சரணாகதி நிலையைப் அடைகின்றனர். இதில் இறை அனுபவ லயிப்பும், உலகியல் சார்ந்து இன்ப துன்ப விடுதலையும் ஏற்படுகிறது. இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைப்பதன் மூலம் ‘நான்’ என்ற ஒன்று இல்லாமல் போகின்றது. புலன்களால் அறியப்படாதவன் இறைவன் சொற்பதம் கடந்து நிற்பவன், தூய அன்பினால் அறியப்படுபவன் அத்தகைய இறைவனை அடையச் சரணாகதி துணை செய்கின்றது.
சரணாகதியின் முக்கிய அம்சங்கள்
          தன்னலத்தை முற்றிலும் துறந்து கடவுளின் விருப்பத்திற்கு ஒவ்வொரு மனிதரும் முழுமையாகக் கட்டுப்பட்டு தங்களையே அர்பணித்து வாழத் தூண்டுகிறது. ஆணவ மலத்தை (பாவத்தை)க் களைந்து இறைனின் திருமுன்னர் தாழ்பணிந்து நடப்பதை முக்கியப்படுத்துகிறது. இறைவன் மீது முழுமையான நம்பிக்கை (பற்றுறுதி) கொண்டு அவர் காட்டும் வழிகளில் எத்தகைய சூழலிலும் விலகாமல் வழி நடக்க அழைக்கிறது. சரணடைதல் என்பது ஒன்றை இழப்பது அல்ல, மாறாகக் கடவுளின் கரங்களில் நம் வாழ்வை ஒப்படைத்து அவரது மெய்மைத் தன்மையை முழுமையாக நம்புவதாகும். இறைவனிடம் சரணாகதி அடையும் போது அவர் நிறைவான ஆசி நலன்களையும், பாதுகாப்பு, பராமரிப்பு, மோட்ச வாழ்வைத் தருவார் என்ற சிந்தனை பிறக்கிறது. 
சரணாகதியை அடையும் வழி
          சரணாகதியை ஒருவர் நேரடியாக அடைய முடியாது. ஆசாரியன்  அல்லது குரு என்னும் வழிகாட்டி இதற்கு அவசியம். அவர் தான் பரிபூரண பிரம்மத்தை அனுபவிப்பதற்கான சாதனை வழிமுறைகளைச் சொல்லித் தர முடியும். இந்தக் கருத்திற்குப் பொருத்தமாக இயேசு பெருமான் “ வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” (யோவா14:6). மேலும் நானே குரு என அவர் கூறியுள்ளதை கருதற்பாலது. அவ்வாறே மாலியமும் சரணாகதியின் ஆறு அங்கங்களைக் கொண்டு உள்ளது. “அனுகூல்ய சங்கல்பம், ப்ராதிகூல்ய வர்ஜனம், கோப்த்ருத்வ வரணம், ஆத்ம நிஷேபம், கார்பண்யம், மகாவிஸ்வாசம் என்பன. இக்கருத்துகளின் வழி சரணாகதியை அடைய இவ்விரு நூல்களும் ஒரே சிந்தனையைத் தருகின்றன.
நிறைவாக
          உலகில் காணப்படும் அனைத்துச் சமயங்களின் கோட்பாடுகளும் மனித குலத்தின் மேன்மையான வாழ்வுக்கு வழிகாட்டுகின்றன. மனிதரது மனதைப் பக்குவப்படுத்துவதே சரணாகதி எனப்படும். உலகப் பற்றுகளிலிருந்து விடுபட சரணாகதி மனிதனுக்குத் துணை செய்கின்றது. மட்டுமல்ல மனப்பக்குவத்தை வேண்டி நிற்கும் அனைவருக்கும் உரியதே சரணாகதி. இது ஒருசமயத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ உரிய கோட்பாடு அல்ல. அனைத்துச் சமயங்களும் ஏற்றுப் பின்பற்றக்கூடிய ஒரு மெய்யியலே சரணாகதி என்பதாகும் என்பதை விவிலிய மாலிய நூல்களிலிருந்து நாம் பெறும் இறைச் சிந்தனை ஆகும். ஆகவே நமது சுய முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டு இறைவனைச் சரணடைதல் ஒன்றே வழி என்ற அறைகூவலை விடுக்கிறது.
அடிக்குறிப்புகள்
1.ந.கதிரைவேற்பிள்ளை எழுதிய தமிழ்மொழி அகராதி, ப.598
2.கழகத் தமிழ் அகராதி, ப.431
3.https//ta.wiktionary.com
4.பகவத் கீதை, ப.9
5.பகவத், தியானத்தை விடு ஞானத்தைப் பெறு, ப.72
6.ஸ்ரீபகவத், அனுஷ்டான ஆன்மீகம், பக். 147-148
7.திருவிவிலியம், பு.ஏ, ப.356
8.மேலது, ப.28
9.மேலது, ப.125
10.மேலது, ப.232
11.மேலது, ப.279
12.மேலது, ப.ஏ, ப.749
13.கிறிஸ்தவக் கீர்த்தனை, ப.133
14.மேலது, ப.253
15.பெரியாழ்வர் திருமொழி. 1036
16.பெரியாழ்வார் திருமொழி. 423
17.பெருமாள் திருமொழி. 688
துணை நின்ற நூல்கள்
1.பகவத் ‘தியானத்தை விடு, ஞானத்தைப் பெறு’ பிரவாகம் பப்ளிகேசன், சேலம்.2013
2.ஸ்ரீபகவத், ‘அனுஷ்டான ஆன்மிகம்’ பிரவாகம் பப்ளிகேசன், சேலம்.
3.த. திருவேங்கட இராமானுஜதாசன், நாலாயிர திவ்விய பிரபந்தம், உமா பதிப்பகம், 2010
4.திருவிவிலியம், TNBCLC, திண்டிவனம்.2022
5.கிறிஸ்தவப் பாமாலை – கீர்த்தனை புத்தெழுச்சிப் பாடல்கள், கிறிஸ்வ இலக்கியச் சங்கம், சென்னை.2023, 39 ஆம் பதிப்பு
Iniyavaikatral peer reviewedஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் C.S. அருள்பிரகாஷ்
1/19, A1, ஓ வி எச்  சாலை, கூடலூர் தாலுகா,
நீலகிரி மாவட்டம் – 643211.

 

 

 

விவிலிய – மாலிய  பார்வையில் ‘சரணாகதி’ PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »