The Seasonal Management of the Ancient Tamils|Dr. K.Chitra

பழந்தமிழரின் பருவகால மேலாண்மைச் சிந்தனைகள்
Abstract
     Through  Sangam literature, we gain insight into how the ancient Tamils ​​confronted changing seasons and the specific strategies they adopted within their daily lives to adapt to these seasonal shifts. Land and time are defined as the primary foundational elements of human existence. Lands are classified into five distinct types, while the ever-changing seasons are categorized into six. In Sangam literature, terms such as Archiram, Munpani, Pinpani, Ilavenil, Kuzhavi Venil, Sevvi Venil, Kodai, Kaar, and Koothir are employed to designate these various seasons. The Kaar season specifically denotes the monsoon period, characterized by continuous rainfall. Sangam literature reveals a tradition of associating the timely and unfailing occurrence of seasonal rains with the presence of good governance. Among the vocabulary related to rain, terms such as Thuvalai and Aarpeyal are particularly noteworthy; Thuvalai refers to a light drizzle, while Aarpeyal signifies heavy, torrential rain. Through Sangam texts, we learn that the rainy season was perceived and recorded as a symbol of lush greenery, a tangible benefit of good governance, the very seed of agriculture, and a cherished time for the expression of love between a hero and a heroine. These texts also indicate that specific sections of homes—such as the Venilpalli (summer quarters) and Koothirpalli (winter quarters)—were constructed and designated to suit the distinct requirements of the summer and rainy seasons. This architectural practice serves as a testament to the ecological awareness and seasonal management expertise possessed by the Tamils ​​of that era. Furthermore, the literature highlights that the winter season was broadly divided into two distinct phases: Munpani (early winter) and Pinpani (late winter). Poets of the era vividly illustrate the severity of the cold during this season—characterized by the scattering of tiny dewdrops—noting that the intensity of the frost was so extreme that even lotus blossoms would wither and perish. A verse from the Kurunthogai anthology reveals that, during the winter months, it was customary for people to bathe in warm water. Finally, terms such as Vemmai, Uruppam, Veyil, and Theral are utilized in the literature to describe and evoke the various aspects of the summer season. The following passage illustrates the usage of gooseberries during the summer season. Sangam literature vividly portrays the hardships faced by living beings—including animals—as they contend with the heat, amidst water bodies that have dried up during the summer months. It is evident that the challenges of the summer season were a reality in ancient Tamil  as well.

“பழந்தமிழரின் பருவகால மேலாண்மைச் சிந்தனைகள்”

ஆய்வுச்சுருக்கம்
        பழந்தமிழர் மாறும் பருவ காலங்களை பழந்தமிழர் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதையும் தம் வாழ்வியலில் அவர்கள் மேற்கொண்ட  பருவ காலங்களுக்கான  திட்டமிடல்கள்  குறித்த பதிவுகளையும் சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது.  மனித வாழ்வின் அடிப்படை ஆதாரங்களில் நிலமும் பொழுதும் முதன்மையாக வரையறுக்கப்பட்டுள்ளது.  நிலங்கள் ஐந்து வகையாகவும் மாறி வரும்  காலங்கள் ஆறு வகையாகவும் வகுக்கப்பட்டுள்ளது.சங்க இலக்கியங்களில் இப்பருவ காலங்களைப் பதிவு செய்யும் சொற்களாக அற்சிரம், முன்பனி, பின்பனி, இளவேனில், குழவி வேனில், செவ்வி வேனில், கோடை, கார், கூதிர் ஆகிய சொற்கள் வழங்குகின்றன. கார்காலம் என்பது தொடர்ச்சியாக மழை தரும்  பருவமழைக் காலத்தைக் குறிக்கும். பருவ காலங்களில் தவறாது மழை பொழிவதை நல்லாட்சியுடன் தொடர்புபடுத்திப் பாடும் வழக்கத்தை சங்க இலக்கியங்களில் காணமுடிகின்றது.மழை சாரந்த சொற்களாக துவலை,  ஆர்பெயல் உள்ளிட்டவை இங்கு குறிப்பிடத்தக்கன. துவலை என்பது சிறு தூறலையும்  ஆர்பெயல் என்பது மிகுதியான மழையையும் குறித்து வழங்குகின்றது. மழைக்காலம்   என்பது  பசுமையின் அடையாளமாகவும் நல்லாட்சியின் பலனாகவும் வேளாண்மைக்கு வித்தாகவும் தலைவன் தலைவியன் அன்புக்குரிய காலமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதை சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது. வெயில்காலம், மழைக்காலம் ஆகிய பருவகாலங்களுக்கு ஏற்ற வகையில் வீட்டின் பகுதிகள் (வேனிற்பள்ளி, கூதிர்ப்பள்ளி) அமைக்கப்பட்டிருந்தன என்பதை இதன்வழி அறியமுடிகிறது.  இது அக்காலத்தழிழர் தம் சூழலியல் அறிவையும் பருவ கால மேலாண்மையையும் எடுத்துக்காட்டுகிறது. பனிக்காலம் முன்பனி, பின்பனி என இரண்டு பகுதிகளாக அமைந்ததை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சிறு சிறு துளிகளாக பனித்துளி சிதறும் கடுமையான குளிர்காலத்தில் தாமரை மலரும் கரிந்து போகும் அளவிற்கு பனியின் கொடுமை இருந்ததை புலவர் எடுத்துக்காட்டுகின்றார். குளிர்காலங்களில் வெண்ணீர் எடுக்கும் பழக்கம் இருந்தமையைக் குறுந்தொகை்ப பாடல் எடுத்துக்காட்டுகின்றது.வெயில்காலத்தோடு தொடர்புடைய சொற்களாக வெம்மை, உருப்பம், வெயில், தெறல் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோடை காலத்தில் நெல்லிக்காய் பயன்பாடு இருந்தமையைக் கீழ்க்காணும் தொடர் எடுத்துக்காட்டுகின்றது. வேனிற்காலங்களில் நீர் வற்றிய நீர்நிலைகள் வெப்பத்தை எதிர்கொள்ளும் விலங்குகள் முதலான உயிரினங்களின் துயரம் யாவும் சங்க இலக்கியங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பழந்தமிழகத்திலும் வேனிற்கால சவால்கள் இருந்தமை  புலனாகிறது.

முன்னுரை
 
     பழந்தமிழர் சுழலும் காலங்களை பெரும்பொழுது என்றும் சிறு பொழுது என்றும்  இருநிலைகளில் எதிர்கொண்டனர்.  பெரும்பொழுதுகள்  கால நிலை மாற்றங்களுடன்  கூடியது. சிறுபொழுதுகள் ஒரு நாளில் எதிர்கொள்ளும் 24 மணிநேரங்களின் சிறுபகுதிகள்.  சங்க இலக்கியங்களின் வழி மாறும் பருவ காலங்களை பழந்தமிழர் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதையும் தம் வாழ்வியலில் அவர்கள் மேற்கொண்ட  பருவ காலங்களுக்கான  திட்டமிடல்கள் குறித்த பதிவுகளையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

வாழ்வின்  முதற்பொருள்
         
       மனித வாழ்வின் அடிப்படை ஆதாரங்களில் நிலமும் பொழுதும் முதன்மையாக வரையறுக்கப்பட்டுள்ளது.  நிலங்கள் ஐந்து வகையாகவும் மாறி வரும்  காலங்கள் ஆறு வகையாகவும் வகுக்கப்பட்டுள்ளது. தமிழர் நிலப்பிரிவுகளான  முல்லைகுறிஞ்சிமருதம்நெய்தல்,  பாலை  இவற்றுக்கு உரிய பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பதிவுசெய்கின்றது.  குறிஞ்சி நிலத்துக்குக் கூதிர் காலமும்; முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; முன்பனிக் காலமும்; மருதத்துக்கு எல்லாப் பருவகாலங்களும், நெய்தலுக்கு முன்பனிக் காலமும்;   பாலை நிலத்துக்கு இளவேனில், முதுவேனில் ஆகிய காலங்களும் உரியவை. அனைத்து நிலங்களிலும் அனைத்து பருவங்களும் மாறி மாறி வரும் என்றாலும் ஒரு நிலத்துக்கு  சிறப்புக்குரிய காலமாக இப்பருவ காலங்கள் விளங்குகின்றன. ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய பருவ காலங்களே ஓர் ஆண்டின் ஆறு பெரும்பொழுதுகளாக  வரையறுக்கப்பட்டுள்ளன.

தமிழர்வகுத்த பருவங்கள்
        நாள்காட்டிகள் நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் இவை பயன்பாட்டில் இல்லாத பழங்காலத்தில் மாறும் பருவ நிலைகளை மிக நுட்பமாகக் கண்காணித்து பருவகாலங்களை ஆறு வகையாகப் பழந்தமிழர் வகுத்திருந்தனர்.

பெரும்பொழுதுகள்
கார்காலம் (ஆவணி – புரட்டாசி)

கூதிர்காலம் (ஐப்பசி – கார்த்திகை)

முன்பனிக்காலம் (மார்கழி – தை)

பின்பனிக்காலம் (மாசி – பங்குனி)

இளவேனிற்காலம் (சித்திரை – வைகாசி)

முதுவேனிற்காலம் (ஆனி – ஆடி)
         
மேலும் ஒரு நாளின் பொழுதுகளை சிறுபொழுதுகள் என வரையறுத்து ஆறு வகையாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவையாவன.,

வைகறை (அதிகாலை நேரம்)

விடியல்

நண்பகல்

மாலை

எற்பாடு  (சூரியன் மறையும் நேரம்)

யாமம் (நள்ளிரவு)

      சங்க இலக்கியங்களில் இப்பருவ காலங்களைப் பதிவு செய்யும் சொற்களாக அற்சிரம், முன்பனி, பின்பனி, இளவேனில், குழவி வேனில், செவ்வி வேனில், கோடை, கார், கூதிர் ஆகிய சொற்கள் வழங்குகின்றன. இக்காலங்களை தமிழர்கள் எவ்வாறு மேலாண்மை செய்தனர் இப்பருவ காலத்திற்கு ஏற்றாறு எங்ஙனம் தங்களது வாழ்வியலை வகுத்துக்கொண்டனர் என்பதை சங்க இலக்கியப்பதிவுகள் சில  எடுத்துக்காட்டுகின்றன. தற்காலத்தில் பருவகாலங்களை எதிர்கொள்தல் மிகவும் சவாலானதாக உள்ள சூழலில் பழந்தமிழரின் வாழ்வியல் முறைகள் நோக்கத்தக்கனவாக உள்ளன.

கார்கால மேலாண்மை       
     கார்காலம் என்பது தொடர்ச்சியாக மழை தரும்  பருவமழைக் காலத்தைக் குறிக்கும். மழைக்காலத்தில் பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள்  பெரும் சவாலாக உள்ள இக்காலத்தில் பழந்தமிழகத்தின் மழைக்காலம் குறித்த பதிவுகள் சிந்திக்கத் தக்கனவாக உள்ளன.  பருவ காலங்களில் தவறாது மழை பொழிவதை நல்லாட்சியுடன் தொடர்புபடுத்திப் பாடும் வழக்கத்தை சங்க இலக்கியங்களில் காணமுடிகின்றது.
”வானம்  பொழுதொடு சுரப்ப ” (நற்.89)
       பருவ காலங்களில் தவறாது மழை பொழிவதை நல்லாட்சியுடன் தொடர்புபடுத்தி நற்றிணை இலக்கியம்  எடுத்துக்காட்டுகிறது. நல்லாட்சி நடைபெறும் நாட்டில் வானம் பருவம் தவறாது தேவைப்படும் காலத்தில் மழை பெய்யும் என்ற சிந்தனை புலவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் சங்க இலக்கியங்களில் கார் காலம் குறித்த பதிவுகளில் குறிப்பிடத்தக்கனவாகக் கீழ்க்கண்ட தொடர்களைக் குறிப்பிட முடிகின்றது. 

கார்ப் பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்து…(புறம்.120-2)
வேனில் நீங்கக் கார் மழை தலைஇய (ஐங்குறுநூறு 484-1)
         
       இவ்விரு தொடர்களும் பருவகாலத்து மழையைக் குறித்து வழங்குகின்றன. வேனில் காலம் முடிந்து கார்காலத்தில் பொழியும் மழையை உழவர்கள் வேளாண்மைக்குப் பயன்படுத்தியமையை புறநானூற்றுத் தொடர் குறிப்பிடுகிறது. அவ்வகையில் கார் கால மழையின் காரணமாக காடு செழிப்புற்றதை ஐங்குறுநூற்றுப்பாடல் குறிப்பிடுகின்றது. மேலும் மழை சாரந்த சொற்களாக துவலை,  ஆர்பெயல் உள்ளிட்டவை இங்கு குறிப்பிடத்தக்கன. துவலை என்பது சிறு தூறலையும்  ஆர்பெயல் என்பது மிகுதியான மழையையும் குறித்து வழங்குகின்றது. மழைக்காலம்   என்பது  பசுமையின் அடையாளமாகவும் நல்லாட்சியின் பலனாகவும் வேளாண்மைக்கு வித்தாகவும் தலைவன் தலைவியன் அன்புக்குரிய காலமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதை சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது.

குளிர்கால  மேலாண்மை       
       சங்க இலக்கியங்களுள் நெடுநல்வாடை குளிர்கால வருணனை மிகுதியாக இடம்பெறும்  நூலாக விளங்குகின்றது. காடுகள், வேளாண்மை நிலங்கள்  போன்றவை எல்லாம் கட்டிடங்கள் மலிந்த வாழிடங்களாக மாறிவிட்ட இக்காலத்திலும்  பனிக்காலம்  உயிர்களை வாட்டும் நிலை உள்ளது. இந்நிலையில் இயற்கை சூழ்ந்த பழங்காலத்தில் பனிக்காலம் எத்தயைதாக இருந்திருக்கும் என்பதை நெடுநல்வாடை இலக்கியம் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது. 

”மாமேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோள் ஒழியக் கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப்பானாள் ” (நெடு.9-12)
       குன்றும் குளிரும் அளவிற்கான பனிக்காலத்தில் மாடுகள் மேய்ச்சலை மறந்து பறவைகள் மந்திகள், கறவை மாடுகள்  உள்ளிட்ட உயிரினங்கள் குளிரால் நடுங்கித் துன்புற்றதை இவ்வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. கடும் குளிர் இனநிரைகளை மேய்க்கும் கோவலர்கள் நடுங்கும் அளவிற்கு இருந்ததையும் அவர்கள் அதனை நெருப்பால் சமாளித்ததையும் கீழ்க்காணும் வரிகள் எடுத்துக்காட்டுகின்றன.

”மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையு நடுங்க..”(நெடு.7,8)
          ஆடு, மாடு போன்ற இனநிரைகளை மேய்க்கின்ற கோவலர்கள் பனிக்காலத்தில்  கைகளில் நெருப்புக்குச்சிகளைக் கொண்டு பனியை சமாளித்த தன்மையை அறியமுடிகின்றது.

“வேனிற்பள்ளி மேவாது கழிந்து
கூதிர்ப்பள்ளி குறுங்கண் அடைத்து “ (சிலம்பு 4 – 60,61)
         
         என்ற தொடர்களில் கூதிர்ப்பள்ளி குறித்த செய்தி இடம்பெறுகிறது. வேனிற்பள்ளி என்பது வெயில் காலங்களில் பயன்படுத்தப்படும் படுக்கை அறையாகவும் கூதிர்ப்பள்ளி என்பது குளிர்காலத்தில் பயன்படுத்தப்படும் அறையாகவும் இருந்துள்ளது. “இப்பள்ளிகள் மாட அடுக்குகளிலோ அன்றி வீட்டின் பக்கப்பரப்புக் கூட்டுகளிலோ இடம்பெற்றிருக்க வேண்டும்” (முனைவர் கோ. தெய்வநாயகம் – தமிழர் கட்டிடக்கலை-ப.50) வெயில்காலம், மழைக்காலம் ஆகிய பருவகாலங்களுக்கு ஏற்ற வகையில் வீட்டின் பகுதிகள் அமைக்கப்பட்டிருந்தன என்பதை இதன்வழி அறியமுடிகிறது.  இது அக்காலத்தழிழர் தம் சூழலியல் அறிவையும் பருவ கால மேலாண்மையையும் எடுத்துக்காட்டுகிறது.மனையுறை புறாக்கள் தங்கும் மதலைப்பள்ளி (நெடு.50) என்ற குறிப்பும் அக்கால மனிதனின் சூழல் பாதுகாப்பு உணர்வை எடுத்துக்காட்டுகிறது. மேலும் சங்க இலக்கியங்களில் குளிர்காலத்தை எடுத்துக்காட்டும்  தொடர்களாக கீழ்க்காணும் தொடர்களை அறியமுடிகின்றது.

பகன்றை மலரும் கடும்பனி அற்சிரம்  (நற்.86-4)
வாடை தூக்கும் வருபனி அற்சிரம் (அகம்.78-10)
கூதிர் அற்சிரத்து ஊதை (அகம். 183-13)
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை(நற்.89-7)
  மேற்குறிப்பிடப்பட்டுள்ள சங்கஇலக்கியத் தொடர்கள்  பனிக்காலத்தின் கடுமையை நயமாக எடுத்துக்காட்டுகின்றன.  பனிக்காலம் முன்பனி, பின்பனி என இரண்டு பகுதிகளாக அமைந்ததை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனிப்பானாள் – (அகம் 163-8)
       மேற்குறிப்பிட்ட தொடரில் சிறு சிறு துளிகளாக பனித்துளி சிதறும் கடுமையான குளிர்காலத்தில் தாமரை மலரும் கரிந்து போகும் அளவிற்கு பனியின் கொடுமை இருந்ததை புலவர் எடுத்துக்காட்டுகின்றார். குளிர்காலங்களில் வெண்ணீர் எடுக்கும் பழக்கம் இருந்தமையைக் குறுந்தொகை்ப பாடல் எடுத்துக்காட்டுகின்றது.

அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச்செப்பில் பெறீஇயரோ (குறுந்.277)
என்ற தொடர் பாத்திரத்தில் வெண்ணீர் சேமித்து அருந்தும் வழக்கம் பழந்தமிழரிடத்து இருந்தமையை எடுத்துக்காட்டுகின்றது.

வேனிற்கால  மேலாண்மை
      வேனிற்காலம் என்பது இளவேனில் முதுவேனில் என இரண்டு பிரிவுகளாக மிதமான வெப்பகாலம் (மார்ச், ஏப்ரல்) மற்றும் கடும் வெயில் காலத்தைக் (மே) குறிக்கிறது. தமிழ் மாதங்களில் மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்கள் இப்பருவ காலத்திற்கு உரியவை.  வெயில்காலத்தோடு தொடர்புடைய சொற்களாக வெம்மை, உருப்பம், வெயில், தெறல் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சொற்கள் முறையே

முளி முதல் மூழ்கிய வெம்மை(கலித்தொகை 16-15)
ஒண்கதிர் உருப்பம் …(அகநானூறு – 181-8)
வெயில் வீற்றிருந்த சுரம் …(நற்றிணை 84-9)
செஞ்ஞாயிற்றுத் தெறல் …(புறநானூறு 20-8)
குழவி வேனில் விழவு (கலி.35-9)
         
      ஆகிய தொடர்களில் பயின்று வந்துள்ளன. கடுமையான வெப்ப காலத்தை எதிர்கொள்ளும் வழக்கம் பழங்காலத்திலிருந்தமையை இச்சொற்கள் எடுத்துக்காட்டுகின்றன. வெப்பத்தை அளிக்கும் கதிரவனைக் குறிக்கும் சொற்களாக ஞாயிறு, எல், கதிர், கதிரோன் கனலி, சுடர், செங்கதிர்ச்செல்வன், செஞ்ஞாயிறு, திகரி, பகல், பகலோன், பரிதி, அலரி, சுடர் ஆகியவை சங்க இலக்கியங்களில் வழங்குகின்றன.

வாழிடங்கள்
      பழங்கால மக்களின் கட்டடக்கலைத்திறன்களுள் வாழிடங்கள் குறித்த பதிவுகள் குறிப்பிடத்தக்கவை.  இலக்கியங்களில் இல்லம், இல், குரம்பை, குடில், சிற்றில், கோவில், பள்ளி,மனை ஆகிய சொற்கள் வாழிடங்கள் தொடர்பானவையாக அமைகின்றன. வீட்டின் பகுதிகளாக சுவர், விட்டம், கூரை, தூண், கம்பம், கால், மதலை, சாலகம், அட்டில், திண்ணை ,கடை, வாயில், இடைகழி, மாடம், அரமியம், முற்றம் ஆகிய சொற்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்குகின்றன. வெயில்காலம் மழைக்காலம் உள்ளிட்ட பருவ காலங்களை எதிர்கொள்ளும் வகையில் வீட்டின் பகுதிகள் அமைக்கப்பட்டிருந்ததை இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. சான்றாக,

சில்காற்று இசைக்கும் பல் புழை நல் இல் (மதுரைக். -358)
வேனிற்பள்ளி தென்வளி தரும் ..(நெடுநல்.61)
         
 ஆகிய தொடர்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை. வெயில்காலங்களில் வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் காற்று வருவதற்காக சன்னல்கள் மட்டுமின்றி வேனிற்கால படுக்கை அறைப்பகுதி வீடுகளில் அமைக்கப்பட்டிருந்தன என்பதை

“வேனிற்பள்ளி தென்வளி தரூஉம் ..” – நெடு.57
என்ற தொடர் எடுத்துக்காட்டுகிறது.

வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற்பள்ளியேறி – சிலம்பு 8- 17,18)       
     என்ற சிலப்பதிகாரத் தொடரிலும் வேனிற்பள்ளி பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது.

நீர்நிலை மேலாண்மை
     பழந்தமிழர் வாழ்வியலில் நீர்ப்பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. குளம்,அகழ், அசும்பு, அயம், இலஞ்சி, ஏரி, கயம், குட்டம், குண்டு, கேணி, சுனை, குழி, தடம், தடாகம், படு, பழனம், பொய்கை, வாவி, புதவு, மடை, கிணறு, கூவல், கேணி, படு, பத்தல் ஆகிய சொற்கள் பல்வேறு  நீர்நிலைகள் குறித்து வழங்குகின்றன. இவை அக்காலத்து மக்களின் நீர்ப்பாதுகாப்பு மற்றும்  பயன்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. வேனிற்காலங்களில் நீர் வற்றிய நீர்நிலைகள் வெப்பத்தை எதிர்கொள்ளும் விலங்குகள் முதலான உயிரினங்களின் நிலைகள் யாவும் சங்க இலக்கியங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பழந்தமிழகத்திலும் வேனிற்கால சவால்கள் இருந்தமை இதன்வழி புலனாகிறது.

வேனிற் காலத்திற்கு ஏற்ற உணவு முறைகள்
     பருவ கால மேலாண்மையில் பழந்தமிழரின் உணவுமுறைகள் குறிப்பிடத்தக்கன. உணவு முறைகளைச் சுட்டும் சொற்களாக அடிசில், அயினி, அவிழ்,கூழ், கொண்டி, சொன்றி , நாட்சோறு,பதம்,வல்சி,  புற்கை, மிதவை, கூழ், புளிங்கூழ், புளி மிதவை, கஞ்சி ஆகியவை பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. கோடை காலத்தில் நெல்லிக்காய் பயன்பாடு இருந்தமையைக் கீழ்க்காணும் தொடர் எடுத்துக்காட்டுகின்றது.

”கோடை உதிர்த்த…. பசுங்காய்(அகம்.315-11)
      நுங்கின் சாறு, தெங்கின் நீர், கரும்பின் சாறு(தாழை நீர்)  பலாவின் தேறல், கனியுள் சாறு ஆகிய நீர் ஆகாரங்கள் பழந்தமிழர் உணவு வழக்கத்தில் இருந்தமையை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தொகுப்புரை       
       பழந்தமிழர் கார்காலம், கோடை காலம், பனிக்காலம் ஆகிய பருவ காலங்களை எதிர்கொள்ளும் வகையில் தமது வாழ்வியல் முறைகளை வகுத்துக்கொண்டனர் என்பது சங்க இலக்கியங்கள் வழி புலனாகிறது. வாழிடங்கள் பருவ காலத்திற்கு ஏற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தமை புலனாகிறது. உணவுமுறைகள் பருவ காலங்களுக்கு ஏற்ற வகையில் பின்பற்றப்பட்டதை அறியமுடிகிறது. பருவ காலங்களில் உயிர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவற்றை எதிர்கொண்ட விதம் ஆகியவை சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

பார்வை நூல்கள் 
1.முனைவர் கோ. தெய்வநாயகம் – தமிழர் கட்டிடக்கலை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- சென்னை -2002

2.சங்க இலக்கியச் சொல்வளம் – பா.ரா.சுப்பிரமணியன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை,2025

3.இலக்கியமும் சூழலியலும் – முனைவர் யாழ் சு. சந்திரா –மீனாட்சி புத்தக நிலையம் – 2015

4.பத்துப்பாட்டு மூலமும் உரையும் – ச.வே.சுப்பிரமணியன் (ப.ஆ.)  – மெய்யப்பன் பதிப்பகம்-2003
5.தமிழ் இணையக் கல்விக்கழகம் 

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.சித்ரா
உதவிப்பேராசிரியர் (தமிழ்)
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
இராமாபுரம், சென்னை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here