Sangakala Kalaignarum Vallalkalin Uravu Nilaiyum|Dr.R.Vijayakumar

சங்க கால கலைஞரும் வள்ளல்களின் உறவுநிலையும்
Abstract         
        Human beings are social by nature and tend to live together as a community. This collective way of life has led them to develop various practical systems and structures. For the sake of living, institutions such as family, politics, art, religion, and other social organizations were established. In this context, poets, patrons, artists, kings, chieftains, rulers, and the common people all occupied their respective roles.This article discusses artists and patrons, the arts associated with them, including dance and ritual practices, the artistic communities of the Sangam period, musical instruments of that time, how artists expressed their artistic skills, the different names by which artists were known, and also the impoverished living conditions of many artists.


“சங்க கால கலைஞரும் வள்ளல்களின் உறவுநிலையும்”

ஆய்வுச் சுருக்கம்       
        மனிதன் சமுதாயமாகக் கூடி வாழும் தன்மையுடையவன். அக்கூட்டு வாழ்க்கை அவன்பால் பல்வேறு நடைமுறை ஒழுங்குகளை வளர்க்கிறது. வாழ்க்கைக்காகவே குடும்பம், அரசியல், கலை, சமயம், இன்ன பிறச் சமூக நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் புலவர், புரவலர், கலைஞர், வேந்தர், குறுநிலத் தலைவர், மன்னர், மக்கள் இவ்வாறான நிலையில் கலைஞரும் வள்ளல்கள் அவர்களோடு இணைந்த கலை, கூத்துச் சடங்குகள் பற்றியும் சங்ககால கலை குடும்பங்கள் பற்றியும்  சங்ககால இசைக்கருவிகள், கலைஞர்கள் எவ்வாறு கலைநுட்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கலைஞர்கள் எவ்வாறான பெயர்களில் அழைக்கப்பட்டார்கள் என்பனவற்றையும் கலைஞர்களின் வாழ்வியல் வறுமை நிலையையும் இக்கட்டுரை எடுத்துரைக்கின்றன.

முன்னுரை
        உலகில் வாழும் பழம்பெருமை வாய்ந்த மக்கள் இனங்களில் தமிழினமும் ஒன்று. பன்னெடுங்காலத்துக்கு முன்பே செழிப்புமிக்க நாகரீகத்தைப் படைத்து இன்றும் உலகிற்குணர்த்தி நிற்கும் சான்றுகளாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்கப்பாடல்கள் ஏட்டுச்சுவடிகளிலிருந்து நூலாக்கம் செய்த செய்தியைப் பண்டைத் தமிழிலக்கிய வரலாற்றிலும், தமிழ்நாட்டு வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். ஓரினத்தின் பண்பாட்டு வளர்ச்சி அதன் எண்ணச் செழிப்பை  அளவுகோலாகக் கொண்டு மதிப்பிடப்படும். அச்செழிப்பே பல்வேறு வாழ்க்கைக் கூறுகளையும் உருவாக்கிப் போற்ற உதவுகின்றது. இலக்கியத்தின் பொருள் வாழ்க்கையேயாகும். ஒழுங்குகளின் செழுமையே வாழ்க்கை நெறியன காண முடிகிறது.
         
        சமுதாயம் என்பது ஒழுங்கற்ற கூட்டம் அன்று. நெறிமுறைக்குட்பட்டு, ஒருவரோடு ஒருவர், ஒரு குழுவோடு மற்ற குழு ஒருநிலைரோடு இன்னொரு நிலையினர் உறவு கொள்வதாலேயே சமூகம் உருவாக்கப்படுகின்றன. நீடித்த வாழ்க்கைக்காகவே குடும்பம், அரசியல், கலை, சமயம், இன்ன பிற சமூக நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. இத்தகைய சிறப்பான சங்க இலக்கிய மாந்தர்களின் வாழ்க்கை வரலாறு மிக நீண்ட  வாழ்வியல் கருவூலமாகத் திகழ்கின்றது. அவ்வகையில் தலைமக்கள்-பணிமக்கள், புலவர்-புரவலர், கலைஞர்-புரவலர், வேந்தர்-குறுநிலத்தலைவர், மன்னர்-மறவர், பெற்றோர்-மக்கள், காதலன், காதலி, கணவன்-மனைவி இவ்வாறு நீண்ட நிலையில் உறவுகள் சங்க கால வாழ்வில் இருந்துள்ளதைக் காணமுடிகிறது.

மனித  வாழ்வியலோடு இணைந்த கலை 
         
      கலை என்பது மனித சமுதாயத்தின் மிகப்பெரிய  ஒரு அங்கமாகும். மனித வாழ்க்கையினை அழகூட்டுவதும், அவனைப் பெருமைப்படுத்துவதும், தொழிலாக அமைவதும், பண்பாட்டின் அடையாளமாகவும் இக்கலை திகழ்கின்றது. ”பண்டைத் தமிழர் வாழ்வின் நிகழ்ச்சிகளோடும் இசையும் கூத்தும் நெருங்கி உறவாடின. இதை இன்பமூட்டும் கருவேலாக மட்டுமின்றி, மந்திரா ஆற்றல் வாய்ந்தவன் ஆகவும் மதிக்கப்பட்டன. இசையும் கூத்துமாகிய இன்பக்கலைகள் பண்டைத் திணை வாழ்க்கையில் பெற்றிருந்த சிறப்பிடத்தினைத் தெய்வம் உணவு முதலான அடிப்படையான கருப்பொருள்களோடு  யாழும் பறையும் இணைத்துக் கூறப்பட்டிருப்பது கொண்டு உணரலாம்” (தொல்பொருள். இளம்-20) என இளம்பூரனார் உரையிலிருந்து அறியலாம்.

தொன்மை   

   பண்டையகாலமக்கள் வளம்பெருகவேண்டி பல்வேறுவகையான கூத்துக்களையும், சடங்குளையும்  நிகழ்த்தியுள்ளனர். இவற்றில் கூத்துத் தனிச்சிறப்பு பெற்றுள்ளதைக் காணலாம். பண்டைத் தமிழர்கள் நாட்டில் வளம் சிறக்க வேண்டி ஒரு வகையான கூத்தையாடினர். அதற்கு வள்ளிக்கூத்தாகப் பெயர் வழங்கிற்று தொண்டைமான் இளந்திரையன் நாட்டில் இக்கூத்தாடப்பட்டது. வள்ளிக்கூத்தினை மக்கள் உரிய காலத்தில் நிகழ்த்தி முருகனின் பெருமை பாடியுள்ளனர் என்பதை உரிய சான்றுகளுடன் காண முடிகின்றது .

“கார்மலர்க் குறிஞ்சி சூடிக்கடம்பின்
சீர்மிகு நெடுவெட் பேணித் தழுஉப்பிணையூ
மன்று துரு நின்ற குரவை ” (மதுரை, 613-615)
         
       என்னும் இலக்கியப் பகுதி தெய்வ வழிபாட்டோடு இசையும் ஆடலும் குடியிருந்த உறவிற்குச் சான்றாகும். மலை வாழ்நராகிய குறவரும் கடல் வாழ்நராகிய பரதவரும் ஆண்களும் பெண்களுமாகக் கூடிநின்று ஆடியும் பாடியும் இன்பமாக வாழ்ந்தமை பற்றிய சான்றுகளைக் காண முடிகின்றது. பகைப்புலத்தே சென்று அவர்களின் ஆநிரைகளைக் கவர்ந்து வந்த மறவர்கள் தன் வெற்றி கொண்டாடும் பொழுது மடிவாய்த் தன்னுமை நடுவன் நிலைப்பத் தம் தோலை உயர்த்தி ஆடினர் எனப் பெருபாணாற்றுப்படை கூறுகின்றது. இவ்வாறு பண்டைத் தமிழர் வாழ்க்கையில் இசையும் கூத்தும் ஒன்றரைக் கலந்திருந்ததை கலையை நிகழ்த்துவோருக்கும் கலையை ரசிப்போருக்கும் உள்ள உறவு நிலை மேம்பட்டு விளங்கியுள்ளதை தக்க சான்றிதழ் மூலம் அறிய முடிகின்றது. 

சங்க கால கலை குடும்பங்கள் 
         
      சங்கச் சமூகத்தின் ஒரு புறத்தை இத்தகு நிலைமை காணப்பட்டாலும் இன்னொரு புறத்தே கலையைத் தன் குடும்பத் தொழிலாகக் கொண்ட மாந்தரையும், அவர்கள் படைக்கும் கலையை நுகரும் வாய்ப்பு பெற்ற மாந்தரையும் காண முடிகின்றது. நாகரிக வளர்ச்சியின் ஒரு கூறாக அமைவது   வேலைப் பிரிவினையாகும்.   ஒவ்வொரு வாழ்வியல் துறையிலும் சிறப்பு தேர்ச்சியுடையோர் தோன்றி, அங்ஙனம் தனிப் பிரிவினராகப் போற்றப்பட்டுள்ளனர். தச்சர், குயவர், கொல்லர் முதலான தொழில் பிரிவினர் இவ்வேலைப் பிரிவினையின் அடிப்படையில் தோன்றியுள்ளனர். இவ்வாறு கலைகளையே தம் வாழ்க்கைக்கு கருவியாகக் கொண்ட  கலைஞர்களும் உருவாகினர் எனத் தெரிகின்றது. சங்கச் சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவின என்பதும் பெருஞ்செல்வர்கள் உருவாகியிருந்தனரென்பதும் முன்னர்க் கூறப்பட்டன. அத்தகைய செல்வர்கள் ஆடலைக்கண்டும், பாடலைக் கேட்டும் திளைத்தனர். திருவிழாக்களிலும், மன்னர்தம் மகளிருக்கையிலும்  கலைஞர்கள் தம் கலையைப் படைக்க மாந்தர் துய்க்கும் நிலையைச் சங்க விலக்கியம் விரிவாகப் பேசி உள்ளது. இவ்வாறு பண்டைத் தமிழ் மக்கள்  கலைகளை நிகழ்த்தியும் ஆடியும் பாடியும் மகிழ்ந்துள்ளனர். அதே நிலையில் கலைஞர்கள் நிகழ்த்தும் கலையினை மக்கள் விரும்பி ரசித்துள்ளனர் என்றும் சான்றுகள் மூலம் அறிய முடிகின்றது.
         
          சங்ககாலத்தில் பல்வகையான இசைக்கருவிகள் வழக்கில் இருந்தன. அவற்றுள் குழல், தூம்பு, கோடு, வயிர், யாழ், முழவு, முரசு, துடி, தண்ணுமை, பறை, பாண்டில், பதலை, தட்டை, கிணை, எல்லரி, ஆகுளி என்பவை சிலவாகும். கலைஞர்கள் இக்கருவிகளைக் கலப்பையிலிட்டுக் காவிச்செல்வது வழக்கமாகவிருந்தது. இக்கருவிகளிற் சிறப்பு பயிற்சி உடையோர் இருந்தனர். கலைஞர்கள் அவரவரும் கையாண்ட கருவியின் அடிப்படையில் பெயர் பெற்றனர் எனத் தெரிகின்றது. கிணைவன், வயிரியர், துடியர், பறையர் என்னும் பெயர்கள் அத்தகையனவாகும். சங்க இலக்கியங்களிற் கலைஞர்கள்  கூத்தர், பொருநர், கிணைவன், கிணை மகள், ஆடு மகள், விறலி, பாடினி, கண்ணுளர், வயிரியர், கோடியர் என பல பெயர்களாற் குறிக்கப்பட்டுள்ளனர். கலைக்குடும்ப பெண்களுக்குரிய  பெயர்களில் பாடினி என்பது  பாடல் என்பதற்கு இணையான பெண்பாற்சொல்லாகும்.  தொல்காப்பியத்தில் பாட்டியென்றும் வழங்கப்படுகின்றது.  கிணையென்னும் பறையை கொட்டிப் பாடுதலின் கிணைமகள்
எனப்பட்டாள். விறல் என்னும் சொல் வெற்றியைக் குறிக்கும் சொல்லாகும். மன்னரின் வெற்றியை புகழ்ந்து பாடுவது இவரியல்பாதலின் விரலி என்னும் பெயர் அமைந்தது. 
         
        பாணர்என்னும் சொல் இசை என்னும் பொருள் கொண்டதாகும். யாழிசை வல்ல கலைஞர்கள் பாணர் எனப்பட்டனர். இவர்கள் சீறியாழையும், பேரியாழையும்  பயன்படுத்தினர். எனினும் சீறி யாழ்ப்பாணர் என்று சுட்டுவது போல பேரியாழ்ப் பாணன் என சுட்டப்படவில்லை. பேரியாழையாண்டோர் சிறப்பானது என்றும் வழங்கப்பட்டனர் என்று கருதுவாருளர். பெரும்பாணாற்றுப்படை, சிறுப்பானாற்றுப்படை யென்னும் பாடல் பெயர்கள் இக்கருத்தினைத் தோற்றுவித்தல் கூடும். ஆனால் இப்பெயர்கள் அவ்வப் பாட்டின் அடியளவினால் ஏற்பட்டனவென்றே தெகின்றது. பெருமையும் சிறுமையும் குறித்த அடைகள் யாழைத் தழுவுமேயன்றிப் பானை தழுவா வென்றுணர்தல் வேண்டும்.  வயிரியர், கோடியர், கண்ணுலர் என்ற சுட்டப்படுவார் யாவரும்  கூத்துக் கலைஞர்கள் என்பது உரையாசிரியர்கள் கருத்தாகும். பொருநர் என்பாரையும் கூத்தரென்றே பலரும் கருதியுள்ளனர். மேற்கூறிய சான்றுகளால் கூத்தர்களை பற்றியும்  தலைவர்களைப் பற்றியும்  உரையாசிரியர் உரையின் வழி பல்வேறு கருத்துக்களை நாம் அறிய முடிகிறது.

கலைஞரின் வறுமை          
     சங்கப் புலவர் பெருமக்கள் கலைஞர்களின் வாழ்க்கையை நேரில் கண்டு பழகியோராதலின்,அவர்களுடைய இயல்புகள் படவற்றையும் நன்கு வெளிப்படுத்தியுள்ளனர். கொடிய வறுமை கலைஞர்களின் இயல்பான நிலைமையாகக் காணப்படுகின்றது. பன்னாளும் உணவின்றி வாடிய பாணன் ஊன் வற்றித் தோலுரிக்கப்பட்ட  உடும்பு போல் விலா எலும்புகள் புடைத்தெழுமாறு காட்சியளித்தான். தன் கலையை நொந்து கொண்டான். பாணர் குடியினரின் வறுமைக்கு கொடிய நஞ்சுடைய நாகப்பாம்பு உவமை கூறப்பட்டுள்ளது.

ஆடு பசிவுழந்த  இரும்பே ரொக்கல் (புறம்.382:14-15)

தொல்பசியுழந்த பழங்கண் (பொருந.61)

இலம் பாடுழந்தவென் இரும்பே ரொக்கல் (பதி.12:15)

ஈர்ங்கை மறந்தவென் இரும்பே ரொக்கல் (புறம்.378:13)

மெய்யது இரவல ரின்மையின் பசியே (புறம்.69:3-5)

பசி தினத்திரங்கிய கசிவுடைய யாக்கை (23.புறம்.160:4)

இவ்வாறாகக் கலைஞர்கள் வறுமையுற்று இருந்தார்கள் என்பதை சங்கப் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

முடிவுரை
    சங்க கால மக்கள் இனக்குழு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள் என்பதை சங்க இலக்கியம் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அவற்றில் கலைஞர்கள் கூத்தர்கள், பாடினியர்போன்ற கலைஞரோடு வாழ்வியலோடு தொடர்புடைய கலை நிகழ்வுகள் கலைஞர்களுக்குரிய பெயர்கள் சமூகத்தில் அவர்கள் பெற்றுள்ள இடம் தொழிலாகவும், தங்கள் அடையாளமாகவும் அவற்றினை செம்மாந்த நிலையில் உணர்ந்து அறவழிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள் என்பதை கட்டுரை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
பயன்பட்ட நூல்கள்
1.தொல்காப்பியம்-பொருளதிகாரம், இளம்பூணர் உரை VI-1974

2.சங்க இலக்கியம் இரு பகுதிகள்-எஸ் வையாபுரி பிள்ளை பதிப்பு, பாரிநிலையம், சென்னை,II 1967

3.புறநானூறு-பழைய உரை உ.வே. சாமிநாதையர் பதிப்பு, சென்னை,VI 1963.

4.பதிற்றுப்பத்து-பழைய உரை, உ.வே சாமிநாதையர் பதிப்பு VI 1957

5. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்-அ. தட்சிணாமூர்த்தி  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்.,சென்னை 2016.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் இரா. விஜயகுமார் 
உதவிப் பேராசிரியர் 
தமிழ்த்துறை
பூ சா கோ கலை அறிவியல் கல்லூரி 
கோயம்புத்தூர் -641014.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here