Velpari Novel Palm Tree and Jasmine|P.Parameshwari

Velpari Novel Palm Tree and Jasmine - P.Parameshwari
Abstract
         
       He Symbolism of Palm Tree and Jasmine Flower in Su. Venkatesan’s Novel  “Veera Yuga Nayagan Velpari” This article explores the symbolic significance of palm trees and jasmine flowers in Su. Venkatesan’s historical novel “Veera Yuga Nayagan Velpari”, winner of the Sahitya Akademi Award. The novel depicts the story of the legendary king Pari and his struggles against the three crowned kings of ancient Tamil Nadu. Through a close reading of the text, this article argues that the palm tree and jasmine flower serve as powerful symbols of Pari’s character, values, and legacy. The palm tree represents Pari’s strength, resilience, and generosity, while the jasmine flower embodies his love, sacrifice, and devotion. By analyzing the novel’s depiction of these symbols, this article sheds light on the cultural significance of palm trees and jasmine flowers in Tamil literature and tradition.


“வேள்பாரிநாவலில்பனையும் முல்லையும்”

ஆய்வு சுருக்கம்
       
        உலகின் மொழிகளில் தனக்கென பெரும் வரலாற்றுச் சிறப்பை பெற்ற மொழி தமிழ் மொழியாகும்.தமிழ் மொழியின் வரலாற்றை தலைமுறை தலைமுறையாக நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற இலக்கியங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அத்தகைய இலக்கியங்கள் இன்றுவரை எண்ணற்ற வடிவங்களில் தங்களைக் கட்டமைத்துகொண்டுள்ளன.அவ்வகை இலக்கிய படைப்புகளில் ஒன்றே சங்ககால வரலாற்றை மையமாகக் கொண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு .வெங்கடேசன் அவர்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்னும் வரலாற்று நாவலாகும். இந்நாவல் தமிழர்களின் ஈராயிரம் ஆண்டுகால வரலாற்றையும் மக்களின் வாழ்வியலையும் விரிவாக எடுத்துக்கூறுகின்றது. இந்நாவலின் மையக்கருத்து பனைமரம் நாவலில் எவ்வாறு எடுத்துக் கூறப்பட்டுள்ளது என்பதனையும் பாரியின் வரலாற்றில் தனக்கென தனிச்சிறப்பைப் பெற்ற முல்லைக்கொடி நாவலில் படர்ந்துள்ள நிலைப்பற்றியும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முன்னுரை
    
       இக்கட்டுரையில் பனைமரம் அறிவியல் பெயர் Borassus புள்ளினத்தைச் சேர்ந்த தாவரப் பேரினமாகும். சங்க இலக்கியங்களில் இவற்றை போந்தை என்னும் பெயரில் அழைத்துள்ளனர் மற்றும் முல்லைமலர் அறிவியல் பெயர் ஜாஸ்மின். சங்க காலங்களில் முல்லைமலர் நளவம், கொகுடி, செம்முல்லை, மௌவல், குல்லை  என்னும் பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளன. இப்பனைமரம் மற்றும் முல்லைமலர் வேள்பாரி நாவலில் எவ்வாறு கூறப்பட்டுள்ளனர் மேலும் சங்க கால பாடல்களில் இவைகளின் ஆளுமையை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
 
வேள்பாரிநாவலில்  பனை 
         
     வேள்பாரி நாவலில் எழுத்தாளர் பாரியின் புகழை எத்தனைச் சிறப்பித்து கூறுகின்றாரோ அத்தனை முக்கியத்துவத்தைப் பனைமரத்திற்கும் வளங்கி இருக்கின்றார். பனைமரம் என்பது தனது உடலின் அனைத்து பாகங்களையும் பிறருக்கு கொடுத்து பயன் தருகின்றது. அதற்கு இணையாக பாரியின் கொடைத்தன்மையும் கூறப்படுகின்றது. நாவலின் தொடக்கத்தில் புலவர் கபிலர் நீலன் என்னும் வீரனின் உதவியால் பறம்பு நோக்கிய பயணத்தில் பச்சை மலையைக் கடப்பார் .உடல் சோர்வு பெற்ற கபிலரை ஒரு பெரும் பனை மரத்திடம்  அமரச் செய்து நீலன் ஒரு இடம் சென்று திரும்புவான். பின் இருவருக்குமான உரையாடலில் பனைமரம் பற்றி உரையாடப்படுகின்றன. பனைமரம் எங்களின் குல சின்னம் இவை பறம்பு மக்களுக்கு மட்டுமல்ல  எல்லா உயிரினங்களுக்கும் தெரியும் பனைமரத்திடம் ஒப்படைத்து விட்டால் எந்தத் தீங்கும் விளைவது இல்லை பனை அவற்றை காக்கும் என்று கூறினான். மேலும் பனைமரம் என்றும் செங்குத்தாக வானுயர வளரும் தன்மையைக் கொண்டது வளைந்து கொடுக்கும் தன்மை பனைக்கு கிடையாது. இவை எங்கள் பறம்பு மலையின் தன்மையை கொண்டது என பறம்புவின் தன்மையை அழகாக கூறுகின்றான். ஒரு மலையின் மக்களின் தன்மையை மரத்துடன் ஒப்புமைப்படுத்தி நாவலின் தொடக்கத்திலேயே பயனைப் பற்றியும் பறம்பு மக்களின் இயல்பைப் பற்றியும் எழுத்தாளர் எடுத்துரைக்கின்றார். இப்பனை மரத்தின் உயர உடல் அமைப்பை நம்மால் கலித்தொகையில் காணமுடிகிறது.

“வான்உற ஓங்கிய வயங்கு ஒலிர் பனைக்கொடிப்
பால்நிற வண்ணன் போல்பழி தீர்த்த வெள்ளையும்”(கலி. பா. 104)
      
        இப்பாடலில் வானுயர ஓங்கி வளரக்கூடியது பனைமரம் பனைமரக் கொடியைக் கொண்டவன் பலராமன் அவனது பால் வண்ண நிறத்தை ஒத்த காளையும்  ஏறு தழுவுதல் போட்டியில் காளைகளின் தோற்றங்களைத் தோழி தலைவிக்கு கூறுகின்றாள். இதன் வழி பனைமரத்தின் கம்பீரமான தோற்றத்தையும் அவற்றின் சிறப்பை உணர முடிகிறது. நாவலின் மையப் பகுதியில் வேளிருக்கும்  மூவேந்தர்களுக்கும் போருக்கான அமைதி பேச்சு வார்த்தை நடைபெறுகின்றது. பாரியின் பிரதிநிதியாக கபிலர் உள்ளார். மூவேந்தர்கள் சார்பில் முகுந்தன் பேச்சினை தொடங்க மூவேந்தர்களோடு இணங்கி போதல்தான் பாரிக்கு நல்லது எண்ணற்ற சிறுகுடி மன்னர்களைப் போல அவனும் தனது நிலத்தை சிறப்பாக ஆளலாம் என்கிறார் ஆவேசம் கொள்ளும் கபிலர் இல்லையென்றால்? என்று கேள்வி கேட்க “போர்க்களத்தில் அவனது குடலை கழுகுகள் ஏந்திப் பறக்கும் நாள் விரைவில் வரும்” என்றார்கள்  பாரியின் மகளை மூவேந்தர்களில் ஒருவருக்குத் திருமணம் முடித்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் போரில்மாய்வதே பாரியின் வழியென்று நகைத்தனர். கபிலரோ சற்றும் தளராது அவர்களின் ஆணவத்தையே அடியோடு சாய்ப்பது போல “உங்கள் மூவருக்கும் பறம்பின் மலைகள் வேண்டும் அவ்வளவு தானே? “ அனைவரும் யாழினை ஏந்தி பறம்பு மலையேறுங்கள் பாட்டிசைத்து பறம்பு மலையேறியவர்கள் கேட்டு “இல்லை” என பாரி கூறியதே இல்லை “மொத்த பறம்பினையே வழங்கி விடுவான்” என சொற்களை வீசி எறிந்தார்.
           
         கோபம் கொண்ட குலசேகர பாண்டியன் கபிலரிடம்” உமது சொற்கள் பற்றியெரியும் பறம்பினைப் பாட அதிக நாள் இல்லை கபிலரே” என ஆவேசம் கொண்டான்.“ நெருப்பில் எறிந்தாலும் மீண்டும் முளைக்கும் ஆற்றல் கொண்டது பனம்பழம் மட்டும்தான். பனையைக் குலசின்னமாகக் கொணடவன் வேள்பாரி நெருப்பாலும் அழிக்க முடியாத அவனைப் பாடுதல் எந்தமிழுக்கு அழகு என மறுமொழி கூறி கபிலர் அவையைவிட்டு நகர்வதாக கதையை இயற்றியுள்ளார் எழுத்தாளர். நெருப்பில் எறிக்கப்படினும் மீண்டும் முளைக்கும் பனையின் தன்மையை பாரியின் வீரத்துடன் ஒப்புமைப்படுத்தி கூறல் நாவலின் மையமாக பனைமரம் இருப்பதைக் காண முடிகிறது. நாவலின் தொடக்கத்தில் நீலன் பாரி “பனியன் மகன்” என்னும் பெயர் கொண்டதையும் மேலும் பெயராலேயே குல பாடல் உள்ளதை கபிலரிடம் கூறியது போல நாவலின் இறுதியில்

“பனையன் மகனே!பனையன் மகனே!
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே!
திணையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே!- நின்”
         
       என்ற நீண்ட பனையன் மகன் பாடலுடன் நாவல் முடிவு பெறுகிறது. இதன் மூலம் நாவலின் மையமாக தவிர்க்க முடியாத ஒரு குறியீடாக பனைமரம் இருப்பதை நாவல் எடுத்துக்காட்டுகிறது.

சங்க இலக்கியத்தில் பனைமரம்        
        பனைமரம் சங்ககாலம் தொட்டு இன்று வரையனும் தனக்கென ஒரு பெரும் சிறப்பினை பெற்ற மரமாக விளங்குகிறது மேலும் எழுத்து மரபுக்கு அடிப்படையா அமைந்தது. பனை ஓலையை பதப்படுத்தி பாடல்களை எழுதினர் இன்று பெரிதும் அறியப்படும் தமிழர்களின் 2000 ஆண்டுகால வரலாற்றுக்கு சான்றாக விளங்கும் சங்க இலக்கிய பாடல்களுக்கு அடித்தளமாக விளங்கிய பனை ஓலைகள் ஆகும். மூவேந்தர்கள் தங்களை தனித்து அடையாளப்படுத்திக் கொள்ள தனித்தனி மாலையை பயன்படுத்தினர் இவற்றின் சேர மன்னன் தனக்குரிய அடையாளமாக பனம்பூ மாலையை சூடி இருந்த செய்தியை தமிழனின் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்
போந்தை வேம்பே ஆரென வருடம்
மாபெருந்தானை மலைந்த பூவும்”(தொல். பொ. நூ.)
       
       சோழ மன்னனின் அடையாளமாக ஆத்தியும் பாண்டியனுடைய அடையாளமாக வேம்புவும் குறிப்பிடப்படுகின்றன தொல்காப்பியர் பனம்பூவை ஏந்து புகழ் பூந்தை என்று குறிப்பிடுகிறார் அதன் பொருள் உயர்ந்த புகழை உடைய பனம்பூ என்பதாகும் சங்ககாலத்தில் பனைமரம் தமிழர்களிடத்தில் எத்தனை உயர்ந்த சிறப்பினை பெற்றிருந்தன என்பதனை நூற்பா வளி உணர முடிகிறது. மேலும் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் மூவேந்தர்களை அடையாளப்படுத்தும் பாடல்களில் பனைபற்றிய செய்திகளை காண முடிகிறது.

“தோடுஆர் போந்தை தும்பையோடு முடிந்த
வாடா வஞ்சி வானவர் பெருந்தக”  (சிலம்பு. 27) 
         
      இப்பாடல்வழி நீர்ப்படைக் காதையில் செங்குட்டுவன் மாடலானிடம் பாண்டிய மன்னன் இறந்த பின்னர் பாண்டியநாடு என்ன செய்தது என வினவுவதாக அமைகின்றது. இக்காட்சியில் செங்குட்டுவன் தனது தோளில் பனம்பூ மாலையுடன் தும்பை பூமாலையும் அணிந்து கொண்டிருப்பதாக இளங்கோவடிகள் காட்சிப்படுத்தியுள்ளார் இப்பாடல்வழி சேர மன்னர்கள் தங்கள் அடையாளமாக பனம்பூவை பயன்படுத்தியவை உணர முடிகிறது. பாரி பிறருக்கு உதவி புரிந்தமைக்கு நிகராக பனைமரம் கூறப்பட்டுள்ளது. அதனைப் போல பனை மரத்தின் கம்பீரமான தோற்றத்தை பிறரின் சிறப்பு மற்றும் வீரத்திற்கு உவமையாக கூறப்படுபவையும் உள்ளன. அற நூலான திருக்குறளில் பனைமரம் ஒரு அளவீடாக கூறப்பட்டுள்ளமையை காண முடிகிறது.

“திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக்
கொள்வர் பயன்தெரி வார்”(குறள் 104)         
      இக்குறளில் திணை (சிறிய) அளவு பிறருக்கு உதவி செயினும் அவ்வுதவியால் பயனடைந்தவர் அவற்றைப் பனையளவு எண்ணுவர் என பனையின் தோற்றம் கொண்டு அவற்றை ஒரு அளவீடாக கூறப்படுதலை காணலாம்.
 
வேள்பாரியில் முல்லை
       
      வேள்பாரி  நாவலில் முல்லை மலர் பற்றிய செய்திகள் பெருமளவில் இடம்பெறவில்லை என்றாலும் மூவேந்தர்களுக்கு இணையான வீரம் பொருந்திய தலைவனான பிறருக்கு கொடுத்து வள்ளல் என்னும் சிறப்பினை பெற்ற கடை ஏழு வள்ளல்களில் ஒருவன் பாரி அவனின் வரலாற்றில் பெரும் சிறப்பினை பெற்று முன்னிலையில் நிற்பது முல்லை மலராகும்.முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி. பாரியின் வரலாற்றில் எவராலும் அழிக்க முடியாத ஒரு சொற்றொடர் ஆகும். இப்பெரும் சிறப்பு பெற்ற வரலாற்று நிகழ்வினை எழுத்தாளர் தனது நாவலில் வெளிப்படுத்தும் போக்கினை காணலாம். பாரி தனது மனைவி ஆதினியுடன் வனத்திற்குச் சென்று ஒரு இடத்தில் தேரினை நிறுத்தி  செல்கின்றான். மீண்டும் தேரினை அடைந்து மாலை நேர பயணத்திற்கு தேரினை தயார் செய்ய தொடங்குகின்றான் ஆதினி இரு சக்கரங்களில் முல்லைக்கொடிகள் பற்றி கிடப்பதை காண்கின்றாள். பாரியை அழைத்த ஆதினி.” தேரை எடுத்தால் இரு கொடிகளும் அருந்துவிட வாய்ப்புள்ளது இந்த முல்லைக்கொடியை பக்குவமாகப் பின்னோக்கி சுழற்றி வெளியில் எடுத்து விடலாமா? “என கேட்டாள்.பாரி எதுவும் பேசாமல் முல்லை கொடியை பார்த்துக் கொண்டிருந்தான் காற்றில் தேரசைவு கொடுக்க ஆதினி தேரினை அசையாமல் இருக்க கைகளால் பிடித்துக் கொண்டாள் பாரி முல்லைக்கொடியை பிடித்திருந்தான் சற்று நேரத்தில் மீண்டும் காற்று வீறுக்கொண்டே வீசியது ஆதினி பாரியின் கையைப் பற்றி தோல் சாய்ந்தாள். “குகை நமக்கானதாக மாறியது போல தேர் முல்லைக் கானதாக மாறிவிட்டது” என்றான் பாரி.
 முல்லைக் கொடிக்காக தனது தேரினையே கொடுத்த வள்ளல்  சிறப்பினை எழுத்தாளர் தன் நாவலில் இவ்வாறாக காட்சிப்படுத்தியுள்ளார். பாரியின் கைப்பற்றி நடந்த ஆதனி படர்வது குறுமுல்லை ஒரு மலர் மலர்ந்தால் போதும் காடே மனக்கும் என சொல்லிவிட்டு பாரியை பார்த்தாள்.முல்லைமலரின் உருவ அமைப்பு மற்றும் அவை தரும் மனம் பற்றிய செய்திகள் நம்மால்  நற்றினையில்   காண முடிகிறது.

“சிறுவீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன் இளைஞரும் மலர்ந்தனர்
விசும்பு கடப்பன்ன பொலம் படைக்க கவி மா
படு மழைபொழிந்த தண் நறும் புறவில்
நடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப”  (நற்றிணை 361) 
         
         தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் குறித்த காலத்தில் வராது தாமதமாக வருகின்றான் தலைவன் தலைவியின் கோபத்தை எண்ணி வருத்தம் அடைகின்றான் இந்நிலையில் தோழி வாயிலர்களுடன் உலர்ந்து பேசுகின்றாள்.குதிரைகள் பூட்டப்பட்ட பெரும் தேரில் வந்த தலைவன் தலையில் முல்லை மலரை சூடி உள்ளான் அவனுடன் வந்த இளைஞர்களும் முல்லை மலரை சூடி உள்ளனர். மலர்கள் சிறியவையே எனினும் அவை பெரும் மனம் வீசும் மலர்களாக இருப்பதாக தோழி கூறுவனவாக அமைந்துள்ளன. இப்பாடலில் முல்லைமலரின் வடிவ அளவு மற்றும் அவற்றின் மனம் வீசும் தன்மையை நம்மால் அறிய முடிகிறது.

சங்க இலக்கியங்களில் முல்லை
       
     எழுத்தாளர் நாவலில் முல்லை மலர் பற்றிய செய்திகளை சில இடங்களில் இயற்கை அழகை விவரிக்கவும் காதலர்களின் காதல் வாழ்வில் முல்லை மலரின் மனம் படர செய்கின்றார் சங்க கால மக்களின் காதல் வாழ்வில் முல்லைமலர் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன சங்க கால பாடல்களில் முல்லை பூவானது காதல், பிரிவு, காத்திருப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படுகிறது. குறிப்பாக காதலன் பிரிந்த தலைவி அவன் வரும் வழியை முல்லை மலர்களைக் கொண்டு கற்பனை செய்வாள் மேலும் தலைவனின் வருகையை தலைவிக்கு உணர்த்தும் ஒரு பொருளாகவும் முல்லை மலரும் இருந்துள்ளன. மேலும் முல்லைப்பூ தலைவனின் வருகைக்காக காத்திருக்கும் தலைவியின் பொறுமை கற்பு மற்றும் அன்பின் சின்னமாக சிறப்பிக்கப்பட்டுள்ளது தலைவனுக்காக காத்திருக்கும் தலைவியின் துன்பத்திற்கு காரணமாகவும் முல்லை பூ உள்ளன. தன் பகை மன்னனை வீழ்த்த போர் புரியும் மன்னன் தலைவியை பிரிந்து செல்வான் கார்காலத்தில் மீண்டும் வருவதாக பிரிந்த தலைவன் வருகையை எண்ணி வருந்தி பொறுமையுடன் காத்திருக்கும் தன்மையையும் கார் பிறப்பையும் முல்லை மலர் கூறுகின்றது.

முல்லை இல்ல மோடு மலர கல்ல
பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர
கார் தொடங்கின்நே காலை; காதலர்
வெஞ்சின வேந்தன் வியன் பெரும் பாசறை
வென்றி வேட்கையோடு தம்மும் உள்ளார்  ( அகநானூறு 364)
           
           தலைவன் பிரிவால் வருந்தம் கொண்ட தலைவி தன் தோழியிடம் கூறுகின்றாள் முல்லை முதலிய பூக்கள் காட்டில் மலர தொடங்கி விட்டன பெரும் கார்காலம் பூமியை நோக்கி தனது கால்களை பதிவு செய்ய தொடங்கிவிட்டன காட்டின் விலங்குகள் நீர் பருக வேண்டிய சுனை நீர் சுரக்கத் தொடங்கிவிட்டது  தலைவன் என்னை பற்றி வருத்தம் கொள்ளாதே பகைவரை வெற்றி கொள்ள வேண்டிய பாசறையில் இருக்கின்றான் தலைவன் என் அருகில் இல்லாத பொழுது எனைக்கொள்வதற்கென்றே பெரும் முனைப்போடு வருகின்றன. கார்காலத்தை நினைவுபெற செய்யும் இம்முல்லை மலர்களும் பூக்கின்றன நான் என்ன செய்வேன் என தலைவி வருத்தமாக கூறுகின்றாள்.கார்காலப் பிறந்தும் தலைவன் குறித்த நேரத்தில் வரவில்லை என்பதை கூறும் முல்லை மலரின் பிறப்பால் தலைவி அடையும் துன்பத்தை தலைவனின் வருகைக்காக காத்திருக்கும் தலைவியின் நிலையையும் நாம் இப்பாடலில் அறிய முடிகிறது.
          மேலும் தலைவன் தலைவி பிரிவில் இருவரின் துன்ப நிலை அவர்களை கண்டு முல்லை பூக்கள் நகைப்பதாகவும் மேலும் முல்லை பூக்களை சிரிக்கும் பற்களுக்கு உவமையாக புலவர்கள் சங்ககால பாடல்களில் பாடி இருப்பதை காணமுடிகிறது.

கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப்
புலர்ஆ புகுதரூஉம் புல்லென மாலை
முல்லை! வாழியோ, முல்லை!- நீநின்
சிறுவெண்முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல்
தருமோ,மாற்று- இது தமியோர் மாட்டே?  (குறுந்தொகை 162)
         
         நீரோட்டமான நிலை கொண்ட கார்காலத்தில் பசுக்கள் இல்லம் நோக்கி திரும்ப தொடங்கிவிட்டன. என் இனிய மாலைக்காலத்தில் முல்லைப் பூவே நீ மொட்டு மலர்ந்து இருக்கின்ற இப்பொழுது தனியாக இருக்கும் என்னை கண்டு சிரிக்கின்றாயா?இது தகுமா?என முல்லைமலர் தலைவனை சிரிப்பதாகவும் தலைவன் முல்லைமலிரிடம் தன்னை கேலி செய்வது சரியா என கேள்வி கேட்பதாகவும் புலவர் கூறுவதை பாடலில் கானலாம். மேலும் சங்க கால பாடல்கள் பல இடங்களில் தலைவன் தலைவி இருவரும் முல்லை மலர்களுடன் பேசுவது போன்று மேலும் இருவரின் தன்மையை எண்ணி முல்லைமலர் சிரிப்பது போன்று பல இடங்களில் நாம் பாடல்களை காண இயலும் மனிதனின் அகவாழ்வில் பெரும் பங்கினை முல்லை மலர்கள் கொண்டுள்ளன.
 
வழிபாட்டில் முல்லை 
         
       சங்ககால பாடல்களில் காதல் வாழ்வில்  பெரிதும் முல்லை மலரை கையாளும் புலவர்கள் வழிபாட்டிலும் முல்லை மலரை பற்றிய பாடல்கள் இயற்றினர் வழிப்பாட்டிற்கு மலர்கள் என்றும் பெரும் பங்கினை பெற்றுள்ளன அவற்றிலும் சங்க கால பாடல்களின் முல்லை மலர்கள் காதல் வாழ்விற்கு இணையாக வழிபாட்டிலும் ஆளுமை செலுத்தியுள்ளன. மாலை நேர வருகையை உணரும் பெண்கள் தாங்கள் இல்லறம் செழிக்க வேண்டி வீட்டில் விளக்கேற்றி பூக்கள் கொண்டு வழிபடுவர் அவற்றில் முல்லைப் பூக்கள் பெரிதும் பங்கு வகித்தமையை நம்மால் சங்க பாடல்களில் காண முடிகிறது.

“மடவரல் மகளிர்  பிடகைப் பெய்தசெவ்வி அரும்பின்,  பைங்கால் பித்தகத்துஅவ் இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து இரும்பு செய் விளக்கின் ஈரந் தரிக்கொளிஇநெல்லும் மலரும் தூஉம் கைதொழுது                   மல்லல் ஆவணம் மாலை அயர”(நெடுநல் 36-44)
         
          இப்பாடலின் வழி பெண்கள் செம்முல்லை பூக்களை தட்டில் பரப்பி வைத்து அவை மலர்ந்து மனம் வீச செய்ய மாலை நேரம் வருகை அறிந்து கொள்கின்றனர் என்னும் செய்தியை அறிய முடிகிறது. மாலை நேரம் வருகையை உணரும் பெண்கள் வீட்டில் இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் நெய் துவைத்த திரியணை இட்டு விளக்கேற்றி மேலும் மலரும் நெல்லும்தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கி இறைவனை வழிபடுவதை நாம் இப்பாடலில் காணலாம் பெண்கள் வழிபாடு செய்வதிலும் முல்லை மலர்களை சூடி தெய்வத்திற்கு தூவி வழிபாடு செய்த செய்தியையும் நாம் உணரலாம்.

முடிவுரை
      
        பழந்தமிழரின் வாழ்வியலில் ஒன்றான தமிழனின் அடையாளமான முல்லை மற்றும் பனையை எழுத்தாளர் வேள்பாரி நாவலில் கூறியுள்ளார் மனிதனின் அகவாழ்வை குறிக்க முல்லை கொடியையும் பாரின் வீரத்தை பிரதிபலிப்பதாக பனையையும் நாவலில் கூறியுள்ளார். பாரி அழிந்த வரலாற்றின் அடையாளமாக அல்லாமல் எவராலும் என்றும் அழிக்க முடியாத வீரத்தின் அடையாளம் என்பதை உணர்த்தவே நெருப்பில் எறிந்தாலும் மீண்டும் உழைக்கும் பனையை பாரியின் வாழ்க்கை நாவலில் மையை குறியீடாக நூலாசிரியர் கூறியுள்ளார்.
ஆய்வுக்கு
துணை நின்ற நூல்கள்
1.வீரயுக நாயகன் வேள்பாரி சு. வெங்கடேசன் விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை 600 002

2.நற்றிணை மூலமும் விளக்க உரையும் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் உரை பூம்புகார் பதிப்பகம் 127, & பிரகாசம் சாலை சென்னை 600108

3. திருக்குறள் பரிமேலழகர் உரை சாரதா பதிப்பகம் எண் 3 ஸ்ரீ கிருஷ்ணபுரம் தெரு சென்னை 600014

4.கலித்தொகை மூலமும் உரையும் முனைவர் விசுவநாதன் உரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் 41 பி சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்

5.சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும் தொகுதி 11 பேராசிரியர் புலவர் அ மாணிக்கம் எம்.ஏ உரை வர்த்தகமானன் பதிப்பக வெளியீடு சாரதா பிரிண்டர்ஸ் சென்னை 600005

6. சிலப்பதிகாரம் தெளிவுரை ஞா மா மாணிக்கவாசகம் உரை உமா பதிப்பகம் 18 (பழைய எண் 171) பவளக்கார தெரு மண்ணடி, சென்னை-600001

ஆய்வாளர்
Iniyavaikatral_Article_Publishedப. பரமேஸ்வரி
முதுகலைத்தமிழ் இரண்டாமாண்டுத்தமிழ்
ஆய்வு நெறியாளர்
த.காளீஸ்வரி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த் துறை
இராபியம்மாள்  அகமது மெய்தீன் மகளீர் கல்லூரி.
திருவாரூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here