திடீர்மாப்பிள்ளை|சிறுகதை|அ.சுகந்தி அன்னத்தாய்

திடீர் மாப்பிள்ளை- சிறுகதை-அ. சுகந்தி அன்னத்தாய்
      சங்கரன்கோவில் இரயில்வே பீடர் ரோட்டில் அமைந்திருந்த அந்தத் திருமண மண்டபத்தின் பிரம்மாண்டமான வாசனை, ஏசி காற்றின் குளிர்ச்சியோடு கலந்து ஒருவிதமான செயற்கை மணத்தை பரப்பிக் கொண்டிருந்தது. பன்னீர் தெளிப்பதும், சந்தனம் பூசுவதும் கூட அங்கே ஒரு சடங்காக அல்லாமல், ஒரு கடமையாகத் தெரிந்தது.
சுமதி அங்கே முதல் வரிசையில் அமர்ந்திருந்தாள். மேடையில் அவள் மாமியாரின் தம்பி வீட்டிற்கு மருமகளாகப் போகும் அந்தப் பெண் – இந்திரா மதினியின் மகள் – ஒரு தேவதையைப் போல அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பின்னால் நின்று, அந்தத் தோழி பெண் செய்துகொண்டிருந்த சிறு சிறு உதவிகள் சுமதியின் கண்களைத் தாண்டி, அவளது நினைவுகளைச் சுழற்றி அடித்தன.
கண்களை மூடினாள். அந்த ஏசி குளிர்ச்சி மறைந்து, செம்மண் புழுதி பறக்கும் அடைக்கலாபுரத்தின் வெப்பம் அவளது மேனியில் உரசுவதை உணர முடிந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு…

“சுமதி… சீக்கிரம் வாம்மா, எல்லாரும் கிளம்பிட்டாங்க!” – அம்மாவின் குரலில் ஒரு படபடப்பு இருந்தது.

தேவர்குளத்திலிருந்து அடைக்கலாபுரத்திற்குப் வேணி பஸ்சில் பயணம். ஏழு அல்லது எட்டு வயதுச் சிறுமிக்கு அது ஒரு பெரும் உலகப்போர் போலத் தெரிந்தது. அந்தப் பயணம் எதற்காக?  என்ன விஷேசம்? எதற்காக எல்லாரும் பட்டுச் சேலை உடுத்தி, நகைகளை அள்ளிப் போட்டிருக்கிறார்கள்? எந்தக் கேள்விக்கும் விடை தெரியாது. அவளுக்குத் தெரிந்ததெல்லாம், அம்மா அவளுக்காக அந்த வருடம் வாங்கித் தந்திருந்த ‘காப்பி நிறத்தில் மஞ்சள் புட்டா போட்ட பாவாடையும், மஞ்சள்  சட்டையும்’ தான் அவளது உலகம்.

அடைக்கலாபுரம் விலக்கில் இறங்கியபோது, சாலை அவளை மிரட்டியது. ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். இப்போது இருப்பதைப் போலத் தார்ச் சாலைகள் இல்லை. காலில் செருப்பு இருந்தாலும், அதை  கைகளில் பிடித்துக்கொண்டு நடப்பதே அந்த கிராமத்துச் சிறுமிகளுக்குப் பெருமை.

“அம்மா… யாருக்குக் கல்யாணம்?” – சுமதி கேட்டாள்.

“கல்யாணம் இல்ல. நம்ம முத்தாபரணம் பாட்டியின் மகன் ஆசிர் மாமா மகள் இந்திராவுக்குச் சடங்கு.” என அம்மா விரிவா சொன்னது அவளுக்குப் புரியவில்லை. ஆசிர் மாமா யார்? இந்திரா யார்? சடங்குனா என்ன? மனதில் எழுந்த கேள்விகளைப் புறம் தள்ளி, சாலையோர தரிசு நிலங்களில் மேய்ந்து கொண்டிருந்த கறுப்பு நிற வெள்ளாடுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே அம்மாவைப் பின்தொடர்ந்து விஷேச வீட்டை அடைந்தாள் சுமதி.

முற்றத்தில் போடப்பட்டிருந்த அந்தப் பந்தல், தென்னங்கீற்றுகளின் வாசத்தோடு சுமதியை வரவேற்றது. அந்த வயதில் அதுவரை ஒரு திருமண மண்டபமும் பார்த்தது இல்லை.

‘ககர’ ‘வகரங்களைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத அந்த மழலைப் பருவத்தில் ஒருமுறை பால்காய்சுற வீட்டிற்கு அம்மாவுடன் சென்று விட்டுத் திரும்பும்போது, பாலத்தில் அமர்ந்திருந்த வக்கீல் தர்மா சித்தப்பாவும்,  சந்திரன் சித்தப்பாவும் எங்க போய்விட்டு வர்ற? என்று கேட்க, ‘ட(க)ல்யாண வீட்டிற்கு’ என்றும், “என்ன சாப்பிட்ட?” என்று கேட்டதற்கு ‘டு(கூ)ட்டாஞ்சோறும் டா(வா)ழைக்காக் டூ(கூ)ட்டும் என்று கூற, அதிலிருந்து அவர்கள் இவளைப் பார்க்கும்போதெல்லாம் அதைச் சொல்லி கிண்டல் செய்வதும் தொடர்ந்தது.

இன்று அந்தப்பந்தல் அவளுக்குக் கண்ணாமூச்சி விளையாடக் கிடைத்த ஒரு மிகப்பெரிய களமாகவே தெரிந்தது.

பந்தலின் ஒரு மூலையில், மஞ்சள் நீர் குளியல் முடிந்து, ஈரத்தலையோடு ஒரு பெண் அமர்ந்திருந்தார். அந்தப் பெண் தான் இந்திரா மதினி என்பது கூட அப்போது சுமதிக்குத் தெரியாது. அவரைச் சுற்றிப் பெரியவர்கள் கூடிப் பேசியவாறு அவரை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென மேளச் சத்தம் ஊரையே கூட்டியது. ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது.

“எல்லாம் சரிதான். சடங்கு நேரம் ஆகுது. துணை மாப்பிள்ளைக்கு என்ன பண்றது?” – கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

பெரியவர்கள் எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அங்கே விளையாடிக்கொண்டிருந்த சுமதியைப் பார்த்த அடைக்கலாபுரம் பாப்பா சித்தி அவளது கையைப் பிடித்து அழைத்து வந்தார்.

“ஏன் யோசிக்கிறீங்க? இதோ தூத்துக்குடி பாப்பா மகள் நிக்கிறாளே… இவ அத்தை மக முறைததானே. இவளே துணை மாப்பிள்ளையா நிக்கட்டும். முறைக்கு முறையும் ஆச்சு… பாசத்துக்குப் பாசமும் ஆச்சு!” என்றார்.

எதுவும் தெரியாமல் சுமதி திகைத்து நின்றாள். கூடியிருந்தோர் அவளது காப்பி நிறப் பாவாடையையும் மஞ்சள் நிற சட்டையையும் சரி செய்தனர். ஒரு துண்டை எடுத்து அவளது தலையில் விறைப்பாகக் கட்டினர்.

“இப்பப் பாரு… மாப்பிள்ளை அம்சமா இருக்கான்!” – யாரோ சொல்ல, சுமதிக்குப் பயமும் சிரிப்பும் ஒருசேர வந்தது.

தான் ஒரு பெண் என்பதும், தனக்குக் கட்டப்பட்டிருப்பது ஆண் தலைப்பாகை என்பதும் தெரியாத அந்தப் பால்ய வயதில், அவள் அந்தப் பெண்ணிற்கு (மதினிக்கு) அருகில் ‘துணை மாப்பிள்ளையாய்’ வந்து நின்றாள்.

“என்ன சுமதி.. யோசனையில இருக்க? வா மாப்பிள்ளை வீட்டுச் சார்பா நீயும் சீர் வரிசை வைக்கணும்!” இந்திரா மதினியின் அதே குரல். சுமதி கண்களைத் திறந்தாள்.

காலம் எவ்வளவு விசித்திரமானது! முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் யாருக்குத் துணை மாப்பிள்ளையாய் நின்றாளோ, அவருடைய மகளையே இன்று தன் மாமியாரின் தம்பி வீட்டு மருமகளாக வரவேற்க, மாப்பிள்ளை வீட்டார் சார்பாகத் தயாராக நின்றாள். அன்று ஒரு சடங்கிற்காகக் கட்டிய தலைப்பாகை, இன்று இரு குடும்பங்களின் கௌரவமான பந்தமாக மாறியிருந்தது.

சுமதி எழுந்து மேடையை நோக்கி நடந்தாள். அந்தச் செம்மண் வாசனை இன்னும் அவளது மூச்சில் கலந்திருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது.

அடைக்கலாபுரத்தின் அந்தப் பழைய வீட்டின் முற்றத்தில் போடப்பட்டிருந்த பந்தல், ஒரு தனி உலகமாகவே காட்சியளித்தது. வெயிலின் தகிப்பைத் தடுத்து, தென்னங்கீற்றுகள் தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த குளிர்ச்சியைத் தரையில் பரப்பிக் கொண்டிருந்தன. சுமதிக்கு அப்போது தெரியாது, தான் அணிந்திருந்த அந்த மஞஞ்ச புட்டாப் போட்ட காப்பி கலர் பாவாடைக்கும், அந்தத் திடீர் தலைப்பாகைக்கும் இடையே ஏதோ ஒரு விசித்திரமான பொருத்தம் இருப்பதை.

“இங்க பாரு சுமதி, அசைக்காம அப்படியே நில்லு…” என்று சொல்லி, இரத்தினமணி அத்தை அவளது இடுப்பில் ஒரு துண்டை விறைப்பாகக் கட்டினார். காலையில் விளையாடும்போது கலைந்திருந்த அவளது தலைமுடியைச் சரி செய்து, அதன் மேல் ஒரு வெள்ளைத் துண்டை மடித்துக் கம்பீரமாகத் தோளில் இட்டனர்.
பெண்ணாய் வந்து, பிஞ்சுப் பருவத்தில் ஆண் வேடம் பூண்ட அந்தச் சிறுமிக்கு அது ஒரு வேடிக்கை விளையாட்டாகவே இருந்தது. அவள் எதற்காக அங்கே நிற்கிறாள்? அந்தப் பெண்ணிற்கு (மதினிக்கு) அவள் ஏன் துணையாக இருக்க வேண்டும்? – இந்தத் தர்க்கங்கள் எதற்கும் அவளிடம் விடை இல்லை. ஆனால், எல்லாரும் அவளை ‘மாப்பிள்ளை’ என்று அழைத்தபோது, அவளது சின்னஞ்சிறு இதயத்தில் ஒரு புதிய பெருமிதம் கிளைவிட்டது.

மேளச் சத்தம் திடீரென வேகம் எடுத்தது. சடங்குப் பெண்ணான அந்தப் பெண்ணை (இந்திரா மதினி) எங்கோ அழைத்துச் சென்றனர். சுமதியை அவருக்கு அருகிலேயே நடக்கச் செய்தனர்.

“ஊர்வலம் கிளம்புது… எல்லாரும் வாங்க!” – ஒரு குரல் கட்டளையிட, ஊரே திரண்டது.

அடைக்கலாபுரத்தின் தெருக்களில் அந்த ஊர்வலம் மெல்ல நகரத் தொடங்கியது. முன்னால் மேளம் அதிர, பின்னால் பெண்கள் குலவையிட, அந்தச் சிறுமி தலைப்பாகையுடன் கம்பீரமாக நடந்து வந்தாள். வழியோரம் நின்றவர்கள் எல்லாம், “யாருப்பா இந்தத் துணை மாப்பிள்ளை? பொண்ணு கணக்கா அழகா இருக்கே!” என்று பேசிக்கொண்டது அவளது காதுகளில் தேனாகப் பாய்ந்தது.
ஊர்வலம் ஊரின் பொதுக் கிணற்றை அடைந்தது. அது வெறும் கிணறு அல்ல; அந்த ஊரின் ஜீவநாடி. அங்கேதான் அந்த முக்கியமான சடங்கு நடந்தது. கிணற்றில் நீர் இறைத்து, ஒரு பித்தளைக் குடத்தில் அந்த நீரை நிறைத்து பெண்ணின் இடுப்பில் ஏற்றினர்.
அந்தப் பிஞ்சுக் கால்களுக்கு அந்தக் கிணறும் வீடும் ஒரு பெரிய தூரமாகத் தெரிந்தது. ஆனால், தான் ஒரு ‘மாப்பிள்ளை’ என்ற அந்தப் பொறுப்புணர்வு, அவளது மெல்லிய கால்களுக்கு ஒரு அசாத்திய பலத்தைத் தந்தது. குடத்தைச் சுமந்து வந்த அந்தப் பெண்ணுடன் அவள் பந்தலை நோக்கித் திரும்பிய அந்த நடை, ஒரு வீரப் பயணம் போலவே அவளுக்குத் தோன்றியது.
மீண்டும் பந்தலை அடைந்தபோது, அங்கே வரிசையாக மக்கள் மொய் எழுதக் காத்திருந்தனர். சடங்குப் பெண்ணிற்கு அன்பளிப்பு வழங்கியவர்கள், அருகில் நின்றிருந்த இந்த ‘குட்டி மாப்பிள்ளை’யையும் கவனிக்கத் தவறவில்லை.

“இந்தாடா மாப்பிள்ளை… உனக்கு ஒரு அஞ்சு ரூபாய்!” – என்று சொல்லி எபநேசர் தாத்தா அவளது கையில் ஒரு சுருங்கிய ஐந்துரூபாய் தாளைத் திணித்தார்.
அடுத்தடுத்து ஐந்து ரூபாய்களும், பத்து ரூபாய்களும் அவளது கைகளில் சேரத் தொடங்கின. காலையிலிருந்து ஓடியாடி விளையாடிய களைப்பெல்லாம் அந்தப் பணத்தாள்களைப் பார்த்தவுடன் மாயமாய் மறைந்து போனது. அந்த எட்டு வயதுச் சிறுமிக்கு, அந்தத் தலைப்பாகை கௌரவத்தையும், அந்த மொய்ப் பணம் ஒரு பெரிய விடுதலையையும் தந்தது போல உணர்ந்தாள்.
அந்தத் தருணத்தில் அவள் ஒரு அத்தை மகள் என்பதோ, சடங்கு என்பது ஒரு உறவு முறையின் அடையாளம் என்பதோ அவளுக்குத் தெரியாது. அவளுக்குத் தெரிந்ததெல்லாம், தான் ஒரு ‘மகுடம் சூடிய இளவரசன்’ என்பது மட்டும்தான்.
திடிரென ஒலித்த கொட்டி மேளம் சுமதியின் சிந்தனையைக் களைக்க, மேடையில் இப்போது மணமகன் இந்திரா மதினியின் மகளான மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் அந்த உன்னதத் தருணம் நிகழ்ந்து கொட்டிருந்தது. சுமதி  பழைய நினைவுகளிலிருந்து மீண்டு, மணப்பெண் ரம்யாவின் முகத்தைப் பார்த்தாள்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் யாருக்குத் துணையாக நின்று நிறைகுடம் சுமந்தாளோ, அந்தப் பெண்ணின் வாரிசு இன்று சுமதியின் புகுந்த வீட்டு உறவின் குடும்பத்துள் நிறைகுடமாக நுழையப் போகிறாள்.

“மதினி…” – சுமதி மெல்ல இந்திரா மதினியின் கைகளைப் பற்றினாள்.

“அன்னைக்கு உறவுகள் எனக்குக் கொடுத்த அந்த அஞ்சு பத்து ரூபாய் மொய்ப்பணத்தை விட, இன்னைக்கு நீங்க உங்க மகளையே எங்க குடும்பத்திற்குக் கொடுத்திருக்கிறதுதான் மதினி எனக்குப் பெரிய மொய்!” – சுமதியின் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுத்தது.
இந்திரா மதினி அவளைப் பார்த்துப் புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் முப்பது ஆண்டு காலப் பாசம் முழுமையாக உறைந்திருந்தது.
திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது. சுமதியின் வீடு அன்று களைகட்டியிருந்தது. புதுமணத் தம்பதிகளான இந்திரா மதினியின் மகளையும், தன் மாமியாரின் தம்பி மகனையும் விருந்திற்கு அழைத்திருந்தாள் சுமதி.
வீடு முழுவதும் மல்லிகைப் பூக்களின் மணமும், சமையலறையிலிருந்து வந்த நெய் மணமும் கமிழ்ந்து கொண்டிருந்தன. விருந்து முடிந்து எல்லாரும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மாமியாரும் தம்பியும் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருக்க, சுமதி மெல்லத் தன் மருமகளை (மதினியின் மகளை) அருகே அழைத்தாள்.

“வாம்மா… இங்கே வந்து உட்கார்,” என்று சோபாவில் தன் அருகில் அமர வைத்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு புதிய இடத்திற்கு வந்த தயக்கமும், அதே சமயம் சுமதியின் மீதான மரியாதையும் கலந்திருந்தது.

“உங்க அம்மா கிட்ட பேசினியா? எல்லாரும் சவுக்கியமா?” என்று நலன் விசாரித்த சுமதி, “நான் ஏற்கனவே உனக்குச் சொந்தம் தெரியுமா?” என்று கூறி சிரிக்க,

“ஆமாம் மதினி. அம்மா சொல்லியிருக்காங்க” என்றவள் உரிமையுடன், “நீங்க சமைச்ச வத்தக்குழம்பு இன்னும் நாவிலேயே நிக்குது. உங்க கைமணமே தனி தான் மதினி!” என்று  சொல்ல, சுமதி அவளைக் குறும்பாகப் பார்த்தாள்.

“இரு இரு… என்னது ‘மதினி’யா? உனக்கு நான் அத்தை முறையாக்கும்! உங்க அம்மா இந்திராவுக்கு நான் அத்தை மக முறைங்கிறதை மறந்துட்டியா?” என்றாள் உரிமையுடன்.
ரம்யா வழிந்து கொண்டே, “இல்ல மதினி… அவர் (தன் கணவர்) உங்களை அக்கானு கூப்பிடுறாரே, அதான் நான் மதினினு கூப்பிட்டேன்” என்றாள்.

“அது சரி. தம்பி பொண்டாட்டிங்கிற முறையில என்னை நீ மதினின்னு கூப்பிடலாம், ஆனா ரத்த சொந்தத்துல நான் உனக்கு அத்தை! திவாகர் எனக்குத் தம்பி, அதனால அவன் என்னை அக்கானு கூப்பிடுறான். ஆனா உனக்கு நான் அத்தை முறை” என்று உறுதியுடன் கூறியவள், “அதுமட்டும் இல்ல…ரம்யா! அதைவிட ஒரு பெரிய ரகசியம் இருக்கு. ‘அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பன்’னு ஒரு பழமொழி சொல்லுவாங்க தெரியுமா? அன்னைக்கு உங்க அம்மா சடங்குக்கு மீசை முளைக்காத மாப்பிள்ளையா நான் தான் நின்னேன்!” என்றாள் சுமதி.

சுற்றி அமர்ந்திருந்த மாமியாரும் தம்பியும் ஆச்சரியத்துடன் பார்க்க, சுமதி முப்பது  வருஷத்து ரகசியத்தைப் பொட்டலம் பிரித்தாள்.

“முப்பது வருஷம் முன்னாடி அடைக்கலாபுரத்துல உங்க அம்மாவுக்குச் சடங்கு நடந்தப்ப, துணை மாப்பிள்ளையா நிக்க ஆள் இல்லை. அப்போ எட்டு வயசுச் சிறுமியா அங்க விளையாடிக்கிட்டு இருந்த எனக்குத் தலைப்பாகையைக் கட்டி, ஒரு மாலையைப் போட்டு உங்க அம்மா பக்கத்துல உட்கார வச்சிட்டாங்க. அன்னைக்கு உங்க அம்மாவுக்கு நான் தான் ‘திடீர் மாப்பிள்ளை’! அந்த முறையில பார்த்தா, நான் உனக்குச் சித்தப்பா முறை கூட வரும் போலிருக்கே!” என்றாள் சிரித்துக்கொண்டே.

இதைக் கேட்டதும் அந்த அறையே சிரிப்பால் அதிர்ந்தது. ரம்யாவின் கணவன் அவளைப் பார்த்து, “பார்த்தியா… நான் உன்னைக் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே எங்க அக்கா உங்க அம்மாவைக் கல்யாணம் பண்ணிட்டாங்க!” என்று கேலி செய்ய, ரம்யா வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

“நிஜமாவா அத்தை? உங்ககிட்ட இவ்வளவு பெரிய கதை இருக்கா? அம்மா இதைச் சொல்லவே இல்லையே!” என்று வியந்தாள் ரம்யா.

”ஆமாம்மா… அன்னைக்கு அந்தச் செம்மண் பாதையில நான் கௌரவமா நடந்து வந்ததும், உங்க அம்மா நிறைகுடம் சுமந்தப்ப துணையா நடந்ததும் இப்போ நினைச்சாலும் நேத்து நடந்தது போல இருக்கு. அன்னைக்கு உங்க அம்மாவுக்குத் துணையா நின்ன அந்தச் சிறுமிதான், இன்னைக்கு உனக்குத் துணையா இந்த குடும்பத்தில இருக்கேன். உங்க அம்மாவுக்குத் துணை மாப்பிள்ளையா நின்றதற்கு எனக்கு அஞ்சு, பத்து என மொய்ப்பணம் கொடுத்தாங்க. ஆனா, இன்னைக்கு உன்னை  எங்க குடும்பத்துக்கு மருமகளா அனுப்பி, அதைவிடப் பெரிய பொக்கிஷத்தைத் தந்துட்டாங்க,” என்று சுமதி நெகிழ்ச்சியுடன் முடித்தாள்.
அப்போதுதான் அந்தப் பெண்ணுக்குப் புரிந்தது, தன் புகுந்த வீட்டில் தான் ஒரு அந்நியப் பெண் அல்ல; முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சடங்கின் மூலம் பிணைக்கப்பட்ட அதே குடும்பத்தின் ஆணிவேர் என்பது. சுமதியின் தோளில் தலை சாய்த்துக்கொண்ட மருமகள் ரம்யாவின் முகம், ஒரு நிறைகுடமாகப் பொலிந்தது.

காலம் தன் போக்கில் பத்தாண்டுகளை உருட்டித் தள்ளியிருந்தது. அந்தப் பழைய அடைக்கலாபுரத்துச் செம்மண் வாசனை சுமதியின் எழுத்துகளில் இப்போது ஒரு தீராத நதியாக ஓடிக்கொண்டிருந்தது.
சமீபத்தில், திருநெல்வேலியில் நடைபெற்ற ராஜ் மாமாவின் மகள் அமுதா மதினி வீட்டுத் திருமண விழாவில் சுமதி கலந்து கொள்ள சென்ற போது, மண்டபம் முழுவதும் உறவினர்களின் கூட்டம், மேளச் சத்தம், இடைவிடாத பேச்சுக்கள் என கலகலப்பாக இருந்தது. அந்த நெரிசலுக்கு நடுவே, சுமதி தன் கையில் ஒரு புதிய புத்தகப் பொட்டலத்தைச் சுமந்து கொண்டு இந்திரா மதினியைத் தேடினாள்.
மதினி ஒரு மூலையில் அமர்ந்து உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சுமதியைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு பிரகாசம் கூடியது.

“வா சுமதி.. இப்போதெல்லாம் உன்னைப் பார்க்கிறது அபூர்வமாப் போச்சு. பெரிய எழுத்தாளர் ஆயிட்டே. உன் படைப்புகள் ஒன்றொன்றும் பழைய நம்ம ஊரையும், உறவையும் நினைவூட்டுது!” என்று உரிமையுடன் வரவேற்றார்.

சுமதி தான் கொண்டு வந்திருந்த தன் புதிய சிறுகதைத் தொகுப்பான ‘சுருள் வீச்சு’ புத்தகத்தை அவரிடம் நீட்டினாள். “இது உங்களுக்காக மதினி… இப்போதான் அச்சாகி வந்திருக்கு. முதல் சில பிரதிகள்ல ஒண்ணு உங்களுக்குக் கொடுக்கணும்னு தான் எடுத்துட்டு வந்தேன்.” என்றாள்.
மதினி அந்தப் புத்தகத்தை ஆசையாக வாங்கிக் கொண்டார். அட்டையில் இருந்த ஓவியத்தையும், சுமதியின் பெயரையும் மெல்லத் தடவிப் பார்த்தவர், சட்டென்று ஒரு ரகசியக் குரலில் கேட்டார்.

“எல்லாம் சரி… ஆனா ‘நம்ம கதை’ இதுல இருக்கா?” என்று ஆர்வமாகக் கேட்டார்.

சுமதி சிரித்துக்கொண்டே, “இல்லை மதினி… அதுக்கான கரு இன்னும் மனசுக்குள்ளேயே இருக்கு. அதை ஒரு தனிப் படைப்பாவே கொண்டு வரணும்னு நினைக்கிறேன். சீக்கிரம் வந்துடும்!” என்றாள்.

அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த விஜயன் மாமா மகள் அகிலா மதினி ஆர்வமாக, “அது என்ன விசேஷமான கதை?” என்று கேட்க,
”அது எங்களுக்குள் ஒரு ரகசியம்” என்றார் சிரித்தவாறு இந்திரா மதினி.

“உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல அப்படி என்ன ரகசியம்? எங்களுக்கும் சொல்லுங்களேன்!” என்று ஆர்வ மிகுதியில் கேட்டார் அகிலா.

இந்திரா மதினி ‘சுருள் வீச்சு’ புத்தகத்தைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு கலகலவென்று சிரித்தார்.
”அதை இப்போ சொல்ல முடியாது… அந்த ரகசியம் கதையான பின்னாடி நீயே படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க!” என்று கூறி அந்த ரகசியத்தை ரகசியமாகவே காத்தார்.

அந்தப் பரபரப்பான திருமண மண்டபத்தில், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்துச் சடங்கில் எதேச்சையாகக் கட்டப்பட்ட அந்தத் தலைப்பாகை, ஒரு புத்தகத்தின் வடிவில் இருவருக்கும் இடையே ஒரு பாசப் பாலமாக நின்றது. மதினியின் அந்த வசீகரப் புன்னகையும், “நம்ம கதை” என்று அவர் கேட்ட அந்த உரிமையும் சுமதிக்குள் ஒரு புதிய உத்வேகத்தைத் தந்தது.
அந்தப் பழைய நினைவுகளின் ஈரத்தோடும், மதினிக்குக் கொடுத்த வாக்குறுதியின் கனத்தோடும், அன்று இரவு தன் மேசை விளக்கின் ஒளியில் சுமதி ஒரு புதிய காகிதத்தை நிமிர்த்தினாள். தீராத அன்பின் சாட்சியாக, ‘திடீர் மாப்பிள்ளை’ என்று தலைப்பிட்டு அந்தக் கதையை எழுதத் தொடங்கியிருந்தாள் சுமதி.

சிறுகதையின் ஆசிரியர்

அ. சுகந்தி அன்னத்தாய்,

தமிழ்த்துறை
உதவிப் பேராசிரியர்,

ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட்  மகளிர் வைணவக் கல்லூரி,

குரோம்பேட்டை, சென்னை. 44.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here