வள்ளலார் கூறும் அவாஅறுத்தல்|முனைவர் சி.உமாசாரதா

வள்ளலார் கூறும் அவா அறுத்தல் முனைவர் சி.உமா சாரதா
ABSTRACT
         
       The craving  just made everyone of the common creatures show up. Just to concieve and live on this planet, they dove into many inconveniences by taking up many birth and endured. They bear the wrong doings of the yester years other than the challenges they face while they live. The joy can be acquired just when we change our longings that established to us lead it branches and transform into desires. Just to assuage those material things, men continue to run looking for it and make their lives domination. Vallalar in his thiruvarutpa has broadcast approaches to achieve live the life of immortal vallalar has offered his experiences as tunes.
முனைவர் சி. உமா சாரதாKEY WORDS: Desire, elimination, salvation, eternal, run after desire, dwells on, chariot of desire, denied.
முன்னுரை
 
   அனைத்து உயிர்களின் பிறவிப் போக்கை ஆசை என்னும் விதைதான் முடிவு செய்கிறது என்கின்றன அறநூல்கள். தொடர்ந்து பிறந்து அல்லல்படாது ஒருவன் இருக்கவேண்டுமானால் அவன் அவா அறுத்தல் வேண்டும். இப்பிறவி இத்துடன் முடிந்துவிட வேண்டும். இறந்து விடுதல் வேண்டும். மீண்டும் பிறத்தல் கூடாது என்ற கோட்பாடு மக்களின் பொதுச்சிந்தனையாக உள்ளது. ஒருவனை வீழ்த்திக் கெடுக்க வல்லது ஆசை. ஆசை இல்லாது வாழ்தலே அறவாழ்க்கை ஆகும்.மனிதன் தன் மனம் போனப்போக்கில் ஆசைக்கென சில அளவீடுகளைக் கொண்டுள்ளான்.அளவான ஆசை, நியாயமான ஆசை, பேராசை என இன்னும் பல. சிற்றறிவுக் கொண்டு சிந்திக்கப்படும் இவற்றால் விளைவது துன்பமே என்கின்றனர் நம் முன்னோர்கள்.
               
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனான இறைவனை உணர்ந்து அறியவும் மானுடம் தழைக்கவும் தமிழில் ஞானப்பனுவல்கள்; அதிகமாக உள்ளது. அத்தகு ஞானப்பனுவல்கள் வரிசையில் வள்ளலார் அருளிய திருவருட்பா அறநெறி உணர்த்தும் ஓரு ஞான நூல் ஆகும். ஞானத்தில் உயர்ந்தோரே மக்களில் உயர்ந்தோர் ஆவர் என்ற கூற்றிற்கிணங்க மனிதன் முக்திப்பெற கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் ஒன்றான “அவா அறுத்தல்” பற்றி வள்ளலார் கூறும் பாடல்களை ஈண்டுக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொருள்
               
பேராசை பெரு நட்டம் என்ற பழமொழி ஆகட்டும் ஆசையே துன்பத்திற்க்குக் காரணம் என்ற புத்த மொழி ஆகட்டும் அத்தனைக்கும் ஆசைப்படு, ஆசைப்படு அடைந்துவிடு என்ற நவீனக் குருமார்கள் மொழி ஆகட்டும் இவை எல்லாமே மனித மன எல்லைக்கு உட்பட்டதாக இருந்தாலும் இவற்றின் விளைவுகளைக் காலமே நிர்ணயிக்கும் என்பதே உண்மை ஆகும். ஆசையால் நிகழ்(புகழ்) வாழ்வில் மயங்கி உழன்று பின் இறந்து கர்ம வினையால் பிறவிப்பல எடுத்து அல்லல்பபடுதல் கூடாது என வள்ளலார் அறிவுறுத்திப் பாடியுள்ளார். தமிழில் அறநூல்களும் அதனைத் தொடர்ந்து வந்த பக்தி இலக்கியங்களும் ஆசைக் கொண்ட மனிதன் படும் இன்னல்களை எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. வள்ளலாரின் அருட்பாக்கள் பெண்ணாசைக் கூடாது, உடலை அழகெனப் புரத்தல் தவறு, உணவின் மீது அவா கொள்ளுதல் தவறு, பொருள் பற்று கூடாது, பிறர் பொருளை விரும்புதல் கூடாது, மோகம் தவிர் என அவா அறுத்தலை வலியுறுத்துகின்றன.

வள்ளலார் கூறும் அவா அறுத்தல் 
மனித வாழ்க்கையில் நொடிதோறும் அலைக்கழிக்கும் ஆசை வகைகளை வள்ளலார் எடுத்தோதி அவற்றின் தொடர்பை ஒழிக்க வேண்டுமென்கிறார். அவா மனப்பொறுமையைக் கெடுத்து துன்பம் உண்டாக்கும் என்பதை திருவருட்பா பாடல்கள் எடுத்தியம்புகின்றன. உயர்ந்தோர் சிலர் உய்தல் வேண்டி பூசைக் கடன்களைச் செய்ய யான் ஆசை மிக்குச் சோற்றுக்கடன் முடிக்கின்றேன் என்பதை,

“தலவாழ்க்கையிலே சார்ந்தவர் எல்லாம்தக்கமு போதினும்
தனித்தேசீலமார் புசைக்கடன் முடிக்கின்றார்
சிறியனேன் தவஞ்செய்வான் போலேஞால
மேலவர்க்குக் காட்டிநான் தனித்தேநவிலும்
இந்நாய்வயிற்றுனுக்கேகாலையாதியமுப் போதினும்
சோற்றுக்கடன்முடித் திருந்தனன் எந்தாய்” (திருவருட்பா- அவா அறுத்தல்:3353)

என்கிறார். அதாவது எந்தைப் பெருமானே மண்ணக வாழ்வு மேற்க்கொண்டவர் மூன்று காலத்தும் ஒழுக்கமுடன் பூசைக்கடன்களை முடிக்கின்றனர். ஆனால் நானோ வயிறு நிறைத்தற் பொருட்டு மூன்று பொழுதும் சோறுண்ணும் கடனையே முடிக்கின்றேன் என தன் அவா குறித்து இடித்துக் கூறிக்கொள்கிறார் வள்ளலார். மனிதன் போதும் என்ற சொல்லை உணவு உண்டு வயிறு நிறைந்தவுடன் மட்டுமே சொல்வது வழக்கமாகும். அப்படி அல்லாமல் உணவின் மீது உள்ள அவாவினால் மிக்கு உண்டால் உடல் நலம் கெட்டு அவனுக்கு துன்பமே வந்து சேரும். போதும் என்ற நிறைவை ஒருக்காலும் தராத இயல்பை உடைய ஆசையை ஒருவன் ஒழித்து விடுவானேயானால் அசைக்க முடியாத இயற்க்கை இன்பத்தை அந்நிலையே அவனுக்கு தரும் இதனை வள்ளுவர்,
“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே 
பேரா இயற்க்கை தரும்”  (திருக்குறள்:அவா அறுத்தல்:370
என்கிறார்.

பேராசை நீக்கினால் வீடுபேறு கிட்டும்
                 
உணவின் மேல் உளதாகிய பேராசைக் குற்றத்தை வள்ளலார் கூறுகையில் எந்தை பெருமானே ஒருவனுக்கு உண்ணும் உணவிலே மிக ஆசை உண்டாயின் அவன் மேற்கொள்ளும் நல்ல தவங்கள் யாவும் நீர் பெருகியோடும் ஆற்றில் கரைத்த புளியைப் போல் நில்லாது கெட்டொழியும் என்று நல்லறிஞர் உரைத்த அறிவுரையைச் சிறிதும் கருத்தில் கொள்ளாமல் உன்னை வழிபடாமல்; சுவையமைந்த காரமும் சாரமும் உடைய சோற்றின் மீது பேராசைக் கொண்டேனே யான் என் செய்வேன் என்பதை,

“சோற்றிலேவிருப்பஞ் சூழ்ந்திடில்ஒருவன் துன்னுநல்தவம் எலாஞ்சுரங்கி
ஆற்றிலே கரைத்தபுளிஎனப் போம்என்றறிஞர்கள் உரைத்திடல்சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசாரஞ்சேர்
சாற்றிலே கலந்தசோற்றிலே ஆசைதங்கினேன் என்செய்வேன் எந்தாய்”
                                                                                            (திருவருட்பா- அவா அறுத்தல்; 3354)
எனப் புலம்புகிறார். பேராசை அழிவைத் தரும்
‘தன் ஆசை அம்பாய் உள்புக்குவிடும்’ (பழமொழி-363)
உணவின் மீது கொண்ட பேரவாவினால் வீடுபேறு அடையமுடியாது.
“பற்று எனும் பாசத் தளையும் பல வழியும்,
பற்று அறாது ஓடும் அவாத்தேரும் தெற்றெனப்,
பொய்த்துரை என்னும் புகை இருளம் – இம்மூன்றும்,
வித்து அற வீடும் பிறப்பு”               (திரிகடுகம் – 22)
அதாவது ஆசை என்ற பாச விலங்கும் பல வழிகளிலும் பல பொருள்களிலும் விருப்பம் கொண்டு ஓடும் அவாத்தேரும் பொய் பேசுதலும் நீங்கினால் தான் வீடுபேறு கிட்டும் என்கிறது திரிகடுகம்.

உணவின் மீது அவா அறுத்தல்
               
திருவருட்பாவில் 3353- வது பாடல் முதல் 3365 – வது பாடல்கள் வரை 13 பாடல்கள் உணவின் மீது கொண்ட அவாவினை விளக்கிக் கூறுகிறது.உணவின் மீது பேரவா கொண்டு அளவுக்கு மீறி உணவு உண்டோமேயானால் அது மிகு துன்பத்தை விளைவிக்கும்.உணவின் மீதான ஆசையைக் குறைத்து அளவாக உண்டு உடலைப் பேணி பாதுகாத்தால் உயிர் வாழும் காலமும் நீளும் வாழும் காலத்தில் இன்பம் மட்டுமே கிட்டும். இதனை
‘இன்பம் வெய்யோர்க்குத் துன்பம் எளிது’  (முதுமொழிக்காஞ்சி (8:6)  
என்கிறது. அதுமட்டுமல்லாமல் தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து வயிற்றுத் தீ அளவு அன்றி ஒருவன் உண்ணுவானாயின் அவன் நோய்வாய்ப்படுவான் என்பதை, 
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்,
நோயள வின்றிப் படும்”     (குறள்:மருந்து – 947) 
என்கிறது வள்ளுவம்.
உணவின் மீது உள்ள ஆசையால் கடவுளை மறந்ததாக வள்ளலார் புலம்பி பாடுகிறார். பசியோடு பலர் இருக்கையில் இரக்கமின்றி தான் நெய்யும் தயிரும் விரவிய நெற்சோறு உண்டதை வருந்திப்பாடியுள்ளார். தன் உணவுப் பண்பு நிலைத்து தவ உணர்வு சிதைந்தது இதனால்
‘அடிச்சிறுநாயேன் பேரையே உரைக்கில்
தவம் எலாம்ஓட்டம் பிடிக்கும் என்செய்வேன்’எந்தாய்  (திருவருட்பா – 3357
என்கிறார்.
‘வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க
வாய்ப்புள்ளேன்’ (திருவருட்பா -3358)
எனவும் இயம்புகின்றார். இதனால் சோற்றாசையும் செய்வதறியாமையாகிய குற்றமுடைமை தெரிவித்தவராகவும் விளங்குகின்றார். மேலும் துவையலும் பச்சடிசிலுமாகிய உண்டி வகைகளில் ஆசையுடைய குற்றத்தினையும் (திருவருட்பா – 3360) உண்டலும் மலம் கழித்தலுமே செயலாவது நினைந்து வருந்தியமையும் (திருவருட்பா – 3361) உள்ளே மலமும் ஊனாகிய புலாலும் நிறைந்துள்ளமையால் உடம்பை
‘மலப்புலைக் கூடு’ (திருவருட்பா – 3362)
என்றும் உணவின் ஆசையால்
‘துருப்பிடியிருப்புத் துண்டு போற்கிடந்து தூங்கினேன்’ (திருவருட்பா – 3363)
என பயன்படா நிலையும்
‘எனது முடிக்கடி புனைய முயன்றிலேன்’ (திருவருட்பா -3364)
என சிற்றுண்டி விளைவுற்று அலைந்தமையும் பாடியுள்ளார்.

வீடுபேற்றிற்கான வழி
மனிதன் தன் கர்மவினைகளிலிருந்து விடுபட அவா அறுத்தல் வேண்டும். இறைப்பற்று ஒழிய பிற பற்று கூடாது என சான்றோர் உரைத்ததை நாம் பின்பற்றுதல் அவசியம். நிலையில்லாது சுழல்வது வாழ்க்கை. நிலையாமையே உண்மை,
“என்பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்து விட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லி புலம்பி விட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
உன் பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை யுடையவனே”   (பட்டினத்தார்.பொதுப்பாடல் – 324)
     என்கிறார் பட்டினத்தார். அதே போல் இறைப்பற்று இல்லாமல் உணவின் மீதுக் கொண்ட ஆசையினால் தன்னை வள்ளலார் நாயினுக்கும் அடியேன் எனவும் சிற்றாசைக் கொண்டு அருளாசையை அதாவது இறையருளை பெறமுயற்சியின்றி வீணாகக்கிடந்தேன் எனவும் அழுதுபுலம்பியுள்ளார். உண்டி ஆசை பேரவாவாக இருப்பினும் எனைக்காப்பது இறைவா உன் கடன் என்பதை,

“உண்டியேவிழைந்தேன் எனினும் என்தன்னை உடையவ அடியனேன்
உனையேஅண்டியேஇருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன்அப்பநின்
ஆணைநின் தனக்கேதொண்டுறாதவர் கைச்சோற்றினை விரும்பேன்தூயனே
துணைநினை அல்லால்கண்டிலேன் என்னைக்காப்பதுன்
கடன்காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்”            (திருவருட்பா -3365)
உண்டியே விழுப்பம் என்றாலும் எனது உள்ளம் உனது திருவடியையே நினைந்து தோய்ந்திருந்தது என்றும் முக்காலத்தும் நீயே துணை. எனை காப்பது உன் கடன் என காப்பது உன் கடன் என இயம்புகிறார். இதனால் உண்டியாசை மிக்கோனாயினும் திருவருளாசை இல்லாதவன் அல்லன் என தன் பக்தி மாண்பை எடுத்துரைக்கிறார். சிற்றின்பங்களில் மனம் லயிக்காது பேரின்ப பேறான வீடுபேற்றினை அடைய இறைவனின் திருவருளாசை நமக்கு நிச்சயம் வேண்டும் என்கிறது திருவருட்பா. ஆசைக்கு அடிமைப்படுவதை
“ஆசைக் கடியா னகிலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியா னாவானே – ஆசை 
தனையடிமை கொண்டவனே தப்பாதுலகந்
தனையடிமை கொண்டவனே தான்” (நீதி வெண்பா -12)
என்று ஆசைக்கு அடிமைப்பட்டுக் கிடப்பவன் அனைத்து உலகத்திலும் மிகச்சிறந்த அடிமையாவான் மாறாக ஆசையை தனக்கு அடிமையாக்கி கொண்டவன் உலகத்தையே தன்கீழ் அடிமையாக்கிக் கொண்டவன் ஆவான் என்கிறது நீதி வெண்பா. திருமந்திரத்தில்,
“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே” (திருமந்திரம் – 2615) 
என திருமூலர் பாடியுள்ளார். ஈசனோடு ஆயினும் ஆசை கூடாது என்கிறது திருமந்திரம். அதாவது விடுவது வேட்கையெனில் பெறுவது ஞானமாகிய வீடுபேறாகும் என்கிறது திருமந்திரம். இனி பிறவாதிருக்க இறைவனை மறவாதிருக்க மனிதனுக்கு அவா அறுத்தல் அவசியமாகிறது. மனித உயிர் வீடுபேறு என்னும் ஞானநிலையை அடைய நிலைத்த வழி அவா அறுத்தல் ஆகும்.

நிறைவுரை
               
வள்ளலார் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ பசித்திரு தனித்திரு விழித்திரு என மூன்று மந்திரங்களை உபதேசித்துள்ளார். சுகித்திருக்க உண்ணாமல் உயிர் வாழ உண்டு சிவ சிந்தனையுடன் தனித்திருந்து நீண்ட தூக்கம் ஒழித்து விழித்திருந்து மனிதன் உயர்கதியை அடையவேண்டும். நதிகள் கடலில் கலப்பது போல் மனித ஆத்மா பரமாத்மாவுடன் ஒன்றிணைதல் வேண்டும். மனிதன் தான் வாழும் காலத்தில் சிற்றின்பங்களில் மகிழ்ந்து உழன்று கிடப்பானேயானால் உய்தல் என்பது அவனுக்கில்லையாம். ஆகவே தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் அகத்தே தோன்றும் அவா என்னும் அறியாமை இருளைப் போக்கிட இறைச்சிந்தனை தேவைப்படுகிறது. திருவருட்பாவில் வள்ளலார் குறிப்பிட்டது போல் அவாவினை புறம்தள்ளி அகம் முழவதும் இறைவனை நிறுத்தி வாழ்வாங்கு வாழ்ந்து மரணமில்லாப் பெருவாழ்விற்கான வழியை தேட முயல்வதே மனிதக் குலத்தின் நோக்கமாக அமைய வேண்டும்.

தொகுப்புரை
               
உலகத்து உயிர்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையனவனாகும். நம் மனதில் தோன்றும் எண்ண அலைகளே சூழல்களை உருவாக்கும். மனித மனமானது நொடிக்கு நொடி எண்ணங்களை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. ஆகவே மனதை நன்முறையில் பேணுதல் அவசியமாகிறது. மனதில் ஆசைகள் தோன்றுவது இயல்பே.அவற்றை அடைவதற்கு அறவழியே சிறந்ததாகும். ஆசைகளை வேகமாக நிறைவேற்றும் பொருட்டு தீய வழியை நாடினால் வாழ்வனைத்தும் அல்லல்பட வேண்டியிருக்கும். மனம் கொண்ட பேராசையால் செயல் அனைத்தும் தீய வினைகளையே தோற்றுவிக்கும். அதன் விளைவாக வாழ்வில் நிம்மதி கெடும். வினைப்பயன் தொடர்வதால் மனிதன் இறந்தப்பின்னும் மறுபிறப்பெடுத்து மீண்டும் துன்பமானது தொடர நேரிடும். ஆகவே, வாழும் காலத்தில் தேவையற்ற ஆசைகளைத் தவிர்த்து இறைச்சிந்தனையுடன் அறவழி சென்றால் வள்ளலார் வகுத்த வழியில் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

பார்வை நூல்கள் :
1. முனைவர் ச.வே.சுப்பிரமணியன்(ப.ஆ)- திருவருட்பா- மெய்யப்பன் பதிப்பகம்

2. பரிமேலழகர் உரை – திருக்குறள்- சாரதா பதிப்பகம்

3. புலியூர் கேசிகன் – பழமொழி நானூறு – முல்லை நிலையம்

4. நல்லாதனார் (உரை)- திரிகடுகம் – சாரதா பதிப்பகம்

5. ச.மாணிக்கம் -நீதி நூல்கள் – நர்மதா பதிப்பகம்

6. ஞா.மாணிக்கவாசகன் (வி.உ)- திருமூலர் திருமந்திரம் – உமா பதிப்பகம்

7. அ.மாணிக்கம் – பட்டினத்தார் பாடல்கள் – வர்த்தமானன் பதிப்பகம்.

8.பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்-தமிழ்ச் செல்வம் (தொகுதி – 2)-பழனியப்பா பிரதர்ஸ்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சி.உமா சாரதா,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சேலம் – 05.

Leave a Reply