Monday, July 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home திறனாய்வுக் கோட்பாடுகள் எழுத்தாளர் கவிஜியின் ‘கௌசிகாவைக் காணவில்லை’ -ஒரு விமர்சனப்பார்வை

எழுத்தாளர் கவிஜியின் ‘கௌசிகாவைக் காணவில்லை’ -ஒரு விமர்சனப்பார்வை

எழுத்தாளர் கவிஜியின் ‘கௌசிகாவைக் காணவில்லை’ -ஒரு விமர்சனப்பார்வை
      எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகத்திறமைகள் பெற்றவர் கவிஜி அவர்கள். கவிதை, சிறுகதை, கட்டுரை, உலகசினிமா என பன்முகப் பரிமாணங்களில் தனது எழுத்துப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 25 நூல்கள் வெளியிட்டுள்ளார். அவற்றில் இந்நூல் 16ஆவது நூலாக வெளிவந்தது. தனித்துவமான இடத்தைப் பிடிக்கும் படைப்புகள் இவருடையது. இவரது கட்டுரைகள் மிகச் சிறப்பானவை. சாதரண மொழிநடையில் அமையாது கவித்துவமான நடையைக் கொண்ட கட்டுரைகள் இவருக்கானது. தான் எடுத்துக் கொண்ட பொருண்மையில் இருந்து நீங்காது, ஒழுங்கமைவுடன் கூடிய கட்டமைப்பைக் கொண்டு நம்  கருத்தை, சிந்தையை நிறைக்கிறது.
      பாகீரதியின் பேரன் என்ற முதல் கட்டுரையில் பாரதி குறித்து கட்டுரை வரைந்துள்ளார். இதில் பாரதியைப் பற்றிய இவரது ஆழ்ந்த வாசிப்புத் திறன் பளிச்சிடுகிறது. பாரதியின் வாழ்க்கையைப் படித்தாலே உண்மையில் அவரின் மேல் பற்றுக்கொண்டவர்களுக்குக் கண்களில் கண்ணீர் ததும்பும். உன்னதமான மகாகவிஞன் அவன். அவரைப் பற்றி, “சிறுபிள்ளை ஒருவனைத் தன்னிலிருந்து மெல்ல வெளியிலெடுத்துத் தன் மடியில் தானே அமரும் வித்தை காட்டும் பாரதியின் குஷி” என்று வேறுபாடு காணாத குழந்தை உள்ளம் பாரதிக்கானது என்பதை நயமான வார்த்தைகளால் வர்ணம் பூசுகிறார். இவர் கவிஞர் என்பதால் கட்டுரையிலும் மாய்மாலம் செய்கிறார். பாரதி தனது காலத்தில் ஒரு கவிஞனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பட்ட பாட்டை அவரது வாழ்க்கை நமக்குத் தெளிவுபடுத்தும். இதனை,
         “அன்றைய காலத்தில் பாரதி என்ற ஒற்றைமரம் தன் வேர் பிடிக்க என்ன பாடு பட்டிருக்கும் என்று புரிகிறோம்” என்று நவில்கிறார். உண்மையில் பாரதி அவரது காலத்தில் தனது பாடல்களை நூலாக்கம் செய்ய விரும்பி, பட்ட துன்பங்கள்  எண்ணிலடங்காதவை. பாரதி அவரது காலத்திற்குப் பின்னரே போற்றப்பட்டார். உலகக் கவிஞர்களுக்குப் பாரதி எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை என்பதையும் இக்கட்டுரையில் இயம்புகிறார். பாகீரதியின் பேரன் என தலைப்பிட்டிருப்பது பாரதியின் பாட்டியின் பெயர் பாகீரதி. எனவே பாகீரதியின் பேரன் என யாருக்கும் தெரியாத பாரதியின் வரலாறுகளை ஆய்ந்து பெயரிட்டிருப்பது சாலச்சிறந்தது.
      இரண்டாவது கட்டுரை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களது கவிதையைப் பற்றியதாக ‘ஒரு கவளம் சோறும் ஒரு கவிதையும்’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. அவரது கவிதையின் ஆழங்களில் முழுகி முத்தெடுக்கும் வித்தையை மிக எளிதாகச் செய்கிறார் ஆசிரியர்.
“ஒன்பது ஓட்டைகள்
உள்ளதோர் வாளியைச் சுமக்கிறாய்!
எத்தனை நிரப்பினாய் எல்லாம் ஒழுகியதே!
இருக்கும் வாளியிலோர் திருத்தம் செய்திடுவாய்
பத்தாம் ஓட்டையாய் நீ பக்குவம் பெற்றால்
தீர்வுன் பக்கத்திலே”
        இந்தக் கவிதைக்கு ஆசிரியர் அளிக்கும் விளக்கம் ஆழமானது. “இப்படி ஒரு கவிதை. இரண்டாம் முறை படிக்கையில் மனம் நிறைந்தது. முகத்தில் தேஜஸ் கூடியது. எத்தனை ஆழமான உணர்வுக் கடத்தல். நுட்பமான பொருள் செய்தல். இந்த உடல் ஒன்பது ஓட்டைகளால் ஆனது. அதில் எத்தனை நிரப்பினாலும் நாள்தோறும் ஒழுகும் வாழ்வின் போதாமையைக் கொண்டிருக்கிறது என்று புரிய வருகையில்… உடலை வாளியாக்குகிறார். அதில் பத்தாவது ஓட்டை ஒன்றைச் செய். அது பக்குவம் என்ற மெய்ப்பொருள் கொண்டிருக்கட்டும் என்கிறார். பிறகு எல்லாவற்றுக்கும் தீர்வு உன்னிடமே என்கிறார்” என்று தமிழன்பன் அவர்களின் கவிதையின் நுட்பங்களைப் படித்திடும் வேகம் நம்மை இரசிக்கவைக்கிறது. உண்மையில் வாழ்க்கையின் தத்துவத்தைக் கூறும் தமிழன்பன் ஐயாவின் கவிதைநயமும் கவிஜியின் தனிச்சுவையும் அலாதியானது. இறுதியில் இக்கவிதைகளைப் படித்து நிம்மதி கிடைத்ததாகவும் கடைசியில் தனக்குள் கவிதை பிறந்ததாகவும் ஆசிரியர் முடிக்கிறார்.
       மூன்றாவது கட்டுரையான ‘லெஜண்ட் ப்ரூஸ் லீ’ உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலை வீரரும் நடிகருமான புரூஸ்லீயின் வாழ்க்கையைப் புரட்டிப்பார்க்கிறது. “தன்னைத்தானே செதுக்கி ஒரு நாயகன் உருவான கதையே ப்ரூஸ் எனும் பதமாய் வரலாற்றில் தனைப் பதிந்துகொண்டது. சீனன் என்றாலே மதிப்புக் குறைவாகப் பார்க்கும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தாங்கள் எதிலும் குறைந்தவர்கள் இல்லை என்று காட்டுவதற்கு… தன் உடலையே ஆயுதமாக்கினார் புரூஸ்” என்ற வரிகள் மூலம் உலக மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட நாயகனின் புகழையும் உயிர்த்தியாகத்தையும் கண்முன் நிறுத்துகிறார்.
        நான்காவது கட்டுரையான ‘கௌசிகாவைக் காணவில்லை’ கட்டுரையில் பவானி ஆற்றுக்கும் நொய்யல் ஆற்றுக்கும் இடையில் ஓடும் கௌசிகா என்ற நதியைப் பற்றிய வரலாறுகளைத் தொல்லியல் ஆய்வாளர்கள் அளவுக்கு அலசி ஆராய்கிறார். அந்த நதியைப் பற்றிய மக்களின் கதைகள், அந்த நதி காணமல் போனதற்கான வழித்தடங்களையும் ஆய்கிறார். மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப ஆறுகளையும் குளங்களையும் தொலைத்ததுபோல் ஒரு நதியைப் போக்கியுள்ளனர் என்பது வருந்தத்தக்க வரலாறுதான். நமது நீர்நிலைகளை எல்லாம் நம் சுயநலத்துக்காகத் தொலைத்து இயற்கைத் தாயைக் கொலை செய்கிறோம் என்ற வேதனை இந்தக் கட்டுரையை வாசித்ததும் நமக்குள் எழுகின்றது.
      பின் நவீனத்துவம் என்ற இவரது கட்டுரை நவீனத்துவத்துக்கும் பின் நவீனத்துவத்துக்கும் இருப்பதான வேறுபாட்டை விளக்குவதோடு பின் நவீனத்துவத்தின் சிறப்புகளையெல்லாம் சுவைத்து மகிழ்ந்து நெகிழ்கிறது. நவீனத்துவம் மானுட விடுதலையைப் பேசுவதையும் பின் நவீனத்துவம் அதனை விமர்சனரீதியில் அணுகுவதையும் விளக்குகிறார் ஆசிரியர். “நவீனத்துவம் கீழே இருப்பவனை உதாசீனப்படுத்துகிறது. அது அறிவாளிகளின் கையில் உலகத்தை கொடுத்துவிட்டு கொஞ்சம் அறிவு கம்மியாக இருப்பவனை உலகை தூக்கி சுமக்க செய்கிறது. அதைத்தான் கேள்வி கேட்கிறது பின்நவீனத்துவம். இயலாதவனுக்கும் இல்லாதவனுக்கும் சேர்ந்துதான் உலகம் சுற்றுகிறது என்று தனது தனித்த குரலை தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கிறது” என்ற வரிகள் பின்நவீனத்துவம் குறித்த தெளிவான பார்வையை நமக்குள் தருகிறது.
          சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் என்ற ஆறாவது கட்டுரை தமிழ் இலக்கியத்துக்குள் புதுமைப்பித்தன் வரவில் தொடங்கி அவரது கதைகளின் தனித்துவத்தின் ஆழங்களையெல்லாம் தன் வார்த்தைக் கிணற்றால் தூர் வாருகிறார். தோண்டத் தோண்ட வருபவையெல்லாம் புதுமைப்பித்தனின் வர்ணஜாலங்கள்தான். ஓரிடத்தில், “வசனத்தின் வழியே கதை நகர்த்தும் யுக்தியில்… சொலவடைகளும்… சொந்த நடைகளும்…தமிழின் சந்த நடைகளும்…பத்தி பத்தியாய் பாத்தி கட்டி நிற்பதைப் படிக்க படிக்க இன்னும் படிக்கத் தூண்டும் பக்கங்களாகின்றன. சிறுபிள்ளை கையில் வகைவகையான இனிப்புகளைக் கொடுத்தால் அது எப்படி திணருமோ… எதை முதலில் தின்பது என்று திக்குமுக்காடுமோ…அப்படித்தான் புதுமைப்பித்தனின் கதைகளைப் பற்றி பேசுவது என்பது. எல்லாமே சுவைதான்…புதுமைப்பித்தன் ஒரு நூலகம். தன் கதைகளின் வழியே அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கும் காலம்…அது முழுக்க முழுக்க புதுமைப்பித்தன் காலம்” என்ற ஆசிரியரின் வரிகள் புதுமைப்பித்தனைக் கொண்டாடுகின்றன. அவரது சொல்லாடல்கள், கதையில் கடவுளின் வருகையைக் கூறுவது, செல்லம்மா கதையில் மனைவியின் இறப்பை ஏற்றுக்கொள்ளும் எளிய மனிதனின் நிலை என அவரது கதைகள் வித்தியாசமான பார்வையை முன்வைப்பதைப் பட்டியலிடுகின்றார்.
          கவிஞர் புவியரசு பற்றிய கட்டுரையில் ஒரு நிகழ்ச்சியில் அவரைக் கண்டு வியந்த தருணங்களையெல்லாம் விரிவாகப் படைத்துள்ளார். வானம்பாடி காலத்திலிருந்து கானம் பாடித்திரிந்த அவரின் அனுபவங்களைத் தனது கவிதையால் சொல்லி,
“மொழிபெயர்ப்புக்கு அவர்
மொழி உயிர்ப்புக்கும் அவர்
மொழியை தவிக்க விடாதவர்
மொழியில் தகிப்பை விடாதவர்”
          என்று முடிக்கின்றார். புவியரசு அவர்களின் பணிகளின் சிறப்பை அறிய இந்தக் கட்டுரை ஊன்றகோலாகின்றது. இவரது எட்டாவது கட்டுரையாக வரும் டால்ஸ்டாயின் அன்னாகரினீனா நாவலின் பக்கங்கள் அன்னாவின் வாழ்க்கையை மறுவாசிப்புச் செய்கின்றன. அன்னாவின் பாத்திரப்படைப்பு தன் மீது கழிவிரக்கமும் சுயபச்சாதாபமும் கொள்ளும் ஒரு பெண்ணின் நிலையை உளவியல் ரீதியில் அணுகிப் பார்த்துள்ளார் ஆசிரியர் கவிஜி. யானை பற்றிய அடுத்த கட்டுரை யானையைப் பற்றிய புரிதலையும் யானையை வைத்துப் பிச்சையெடுப்பது கூடாது என்ற சிந்தனையையும் விதைக்கின்றது. கிறிஸ்டிக்காவுக்குச் சிறகு முளைத்துவிட்டது என்ற கட்டுரை தனது அக்கா கிறிஸ்டிக்காவின் கவிதைகளையும் நினைவுகளையும் மரணத்தையும் அசைபோடுகின்றது. நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் கட்டுரையில் நகுலனின் எழுத்துகளை விட அவரைப் பற்றிய எழுத்துகள்தான் அதிகம் என அவர் புகழ் சேர்க்கின்றார். இவர் நகுலனைப் பற்றிக் கூறுவதில்,‘எனது மயக்கங்கள் எல்லாம் முயங்கித் தவிக்கும் பாலைவனத்தில் நகுலனின் வரிகளாகிச் சிதறுவதில் புது வெள்ளை மணல்துளிகள்’ என்ற வரிகள் அவர்மீது கவிஜி கொண்ட காதலைத் தெரிவிக்கின்றது.
          ஆவணங்களின் நாயகன் என்ற கட்டுரை ஜெயபால் என்ற காணொளிக் கலைஞரின் அரிய பணியை அளவிடுகின்றது. இக்கட்டுரையை முடிக்கும்போது,‘சிறுதுளிகள் முளைக்கும் பேரருவிக்குக் கவனம் முழுக்க நீராவதில்தான் இருக்கும்’ என அவரது பணியின் தீவிரத்தையும் அவரிடம் பேசத் துடிக்கும் மனதை ‘உங்களிடம் பேசிவிட இப்போதே புன்னகையைச் சேமிக்க ஆரம்பித்துவிட்டேன்’ என்ற கவித்துவமான வரிகளோடு நம் கவனம் ஈர்க்கின்றார் ஆசிரியர். உக்கிரத் தூதுவன் என்ற தலைப்பிலான கட்டுரை கிம் கி டுக் என்ற சினிமாக் கலைஞனின் சிறப்பினைப் பேசுகின்றது. கிம் கி டுக் மறைந்தபிறகு அவனின் கலை புரிந்த மாயஜாலங்களைத் தன் வார்த்தை அம்புகளால் தைக்கிறார் ஆசிரியர். கடைசியாக, ‘இசைக்கத் தெரியாதபோது சத்தமிட்டு அழுதுவிடத் தோன்றும் சில நொடிப் பிதற்றல்களை கிம் கி டுக் என்ற மகாகலைஞனுக்குச் சமர்ப்பிக்கின்றேன்’ என்று முடிக்கின்றார். பல நேரங்களில் மௌனம், அழுகை, புலம்பல் பலவற்றையும் செய்யும் என்பதை உணரமுடிகின்றது.
          அடுத்த கட்டுரை ஆல்பெர் காம்யுவின் அந்நியன் என்ற முதல் நாவலைப் பற்றி ஆய்வு செய்கின்றார். அவரது நாவலில் உள்ள மனித மனத்தின் இயல்பினை மீறிய உணர்வை, “யதார்த்தத்தில் இருக்கும் அபத்தங்கள் குறித்து அவரின் தீர்மானங்களும் தொலைதூரங்களுக்கு நம்மை முதலில் அச்சத்தில் ஆழ்த்தினாலும்  பிறகு மெல்ல அறிவின் கை கொடுத்து எழுப்பிவிடுகிறது” என்று மிகச்சிறப்பாக அளவிடுகின்றார். மிர்தாதின் புத்தகம் என்ற அடுத்த கட்டுரையை வாசிக்கும்போது நமக்குமே வியப்பு மேலிடுகின்றது. கவிஜி அவர்கள் தன்னைத் தானே உணர்வதற்கு இப்புத்தகம் துணையாகவிருந்ததை எடுத்துரைக்கின்றார். ஒரு எழுத்தாளன் பிறப்பதற்குக் காரணமான அப்புத்தகத்தைக் கொண்டாடவேண்டும் என்ற வேகம் நமக்குள் எழுகின்றது. மிர்தாதின் புத்தகம் என்ற நூலில் மனம், அன்பு, பிரபஞ்சம் பற்றி இயம்புகின்ற ஆழமான கருத்துகளை அலசுகின்றார் எழுத்தாளர். சான்றாக,
          “மாபெரும் வீட்டு ஏக்கம் மூடுபனி போன்றது என்கிறது மிர்தாத் புத்தகம். அது மனதின் மூடல்களை பற்றி சிந்திக்கிறது. மனதின் ஆழம் பற்றி தோண்டுகிறது. அது…மனதின் நிறம் பற்றி செயலாற்றுகிறது. மனதின் வழிகளும் வலிகளும் பற்றி உரையாடுகிறது. மிகப்பெரிய நம்பிக்கையை அது உங்களுக்குள் ஊற்றுகிறது. உங்கள் அழுகையின் ஒவ்வாமையை உங்களிடமிருந்து வெளியேற்றுகிறது” என்று ஆசிரியர் கவிஜி அவர்கள் மனதின் ஆழத்தில் அடைபட்டுக் கிடக்கும் விசயங்களைத் தோண்டி எடுக்கிறார். அடுத்த மேல்முடி யாத்திரை கட்டுரையில் மேல்முடி மலைக்குப் போன அனுபவங்களை வாசிக்கும்போது நாமே மேல்முடி மலைக்கு ஏறியதுபோலவும் காடுகளை, மரங்களை, மனிதர்களைச் சந்தித்தது போன்ற நிம்மதி நம் மனதுக்குக் கிடைக்கிறது. இயற்கையின் பரிணாமங்கள் தரும் மகிழ்ச்சிதான் வாழ்க்கையின் உண்மையான அமைதிக்கு வித்திடுகின்றன. வாழ்க எழுத்தாளர்!
          அடுத்த கட்டுரை கருப்புப் புத்தகம் என்ற ஓரான் பாமுக்கின் நாவல் குறித்து அலசுகின்றது. காலிப் தன் மனைவி ரூயாவைத் தேடிப் போகும் போது வேறு வேறு மனிதராக மாறுவது உளவியல் சார்ந்த பதிவாகக் காணமுடிகின்றது. ஓரானின் எழுத்து வித்தையை மிக வெகுவாக ரசிப்பதை உணரமுடிகின்றது. சான்றாக, “ஒவ்வொரு மனிதனின் வழியாகவும் அவன் வேறொரு மனிதனாக மாறிக்கொண்டே இருக்கின்றான். பாலத்தில் நகரும் கூட்ட நெரிசல்களில் தனித்திருக்கும் அவனுள்தான் எத்தனை எத்தனை மனிதர்கள். ஒன்றைத் தொட்டு ஒன்று… ஒன்றைத் தொட்டு ஒன்று என ஒவ்வொரு மனிதனுக்கும்  ஒரு கதை. ஒவ்வொரு கதைக்கும் ஒரு காலிப். அத்தனை மனிதர்கள் இருந்தும் ஒற்றை ரூயாவைக் காணவில்லை. நினைத்துப் பார்க்கிறானா… நிஜத்தில் பார்க்கிறானா என்று குழம்பும் நொடிகளை பக்கத்துக்கு பக்கம் சிதறவிட்டிருக்கும் ஓரான்…ஒரு சமயம் நம்மையே கதையை சொல்லவிட்டு விலகியும் கொள்கிறார்”  என்று ஆசிரியர் குறிப்பிடுவது நாவலின் பொருண்மையை இரசிக்கவும் வாசிக்கவும் தூண்டுகின்றது. நாவலின் ஒவ்வொரு நகர்வுகளையும் அலசி ஆராய்ந்துள்ள விதம் வியப்பளிக்கிறது. இறுதியாக, ‘அகத்தேடலின் வழியாக மட்டுமல்ல…புறத்தேடலின் வழியாகவும்…தன்னை திறந்து கொண்டே செல்லும் புதிரின் தீராநதி புத்தகம் முழுக்க’ என்று ஆசிரியரின் வரிகள் புத்தகத்தின் மீதான காதலை அதிகரிக்கின்றன.
          அடுத்த கட்டுரை அன்புள்ள அரூபனாவுக்கு என்ற தலைப்பில் உருவமற்ற ஒன்றின் மீதான காதலைக் கவிதை மொழியில் ஆக்கியிருக்கிறார். படிக்கப் படிக்கத் திகட்டாத வரிகள் இவருக்கானது. தான் மிகச்சிறந்த படைப்பாளன் என்பதைச் சத்தமின்றி சமகாலத்தில் நிரூபித்திருக்கிறார். கவிதைகள் மட்டும்தான் கவிதைமொழியைத் தரமுடியுமா? கட்டுரையிலும் கவிதை மொழியில் எழுதமுடியும் என்பதற்கான உத்தரவாதம் இக்கட்டுரை. எடுத்துக்காட்டாக, “ரகசியமற்ற ஓடையில் திராட்சை ரஸம். சோலைக்காடுகளின் வழியே உன் சொல்லோட்டி போகட்டும் இந்த இரும்பு பட்டாம்பூச்சி…சிறுமழைக்கும் பூத்துக்குலுங்கும் சுவர் துளிகளின் மொட்டுகளென நீ…நான் மாற்றி யோசித்த புல்லாங்குழல் காடு” ஆகிய வரிகளில் கவிஜியின் கவிதைக்குரல் ஓங்கி ஒலித்து ஆர்ப்பரிக்கின்றது. போரும் அமைதியும் என்ற டால்ஸ்டாயின் நாவல் அடுத்த கட்டுரையின் தலைப்பாக அமைந்துள்ளது. நாவலில் போரினால் ஏற்படும் துயரமும் மானுடத்தின் மகிமையையும் சுட்டிக்காட்டுகின்ற டால்ஸ்டாயின் முழுக்கதையையும் அணுஅணுவாக வாசித்துப் பருகச் செய்துள்ளார். போருக்கு முன்னும் போருக்குப் பின் ஏற்படும் அமைதியும் போர்க்களமே மானுடத்திற்கான தோல்வியாகவும் டால்ஸ்டாயின் எண்ணங்களை மிகத் துல்லியமாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
           நூலின் இறுதிக் கட்டுரை இந்த நூல் பாரதியில் எப்படித் தொடங்குகிறதோ அது போல பாரதியின் மணிமண்டபம், அவர் வாழ்ந்த வீட்டில் முடிவடைவது ஆசிரியருக்குப் பாரதியின் மேலுள்ள பற்றினைக் காட்டுகின்றது. தனது இணையதள நண்பன் அமரின் வீட்டில் இருந்த அன்பின் பொழுதுகளையும் விழுதுகளையும் விதையாக்கித் தந்துள்ளார். உண்மையான நட்பு ஒருவரை வாழ்வின் முன்னேற்றத்துக்கு உந்தித் தள்ளும். இவரது எழுத்துகளின் உந்துதலுக்கு இப்படிப்பட்ட நட்புகளும் காரணமாகலாம். நல்ல நட்புக்களின் அன்பும் அரவணைப்பும் மனித மனங்களுக்கு மட்டுமல்ல, எழுத்துகளுக்கும் மருந்தாகலாம். வாழ்க கவிஜி! வளர்க அவரது எழுத்துக்கள்!
  நூல் திறனாய்வாளர்
முனைவர் சு.சோமசுந்தரி,
ஆய்வறிஞர்,
உலகத் தமிழ்ச் சங்கம்,
மதுரை.

எழுத்தாளர் கவிஜியின் ‘கௌசிகாவைக் காணவில்லை’ -ஒரு விமர்சனப்பார்வை PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »