சண்டேசுர நாயனார் புராணம்

சண்டேசுர நாயனார்

சண்டேசுர நாயனார்


            சோழநாட்டிலுள்ள திருச்சேய்ஞலூரில் வேதியர் குலத்தில் எச்சதத்தர் என்பவரின் மகனாகப் பிறந்தவர் விசாரசருமர் ஆவார். இவர் தனது பால்ய பருவத்திலேயே முற்பிறவியின் தொடர்ச்சியாய் வேதங்கள் அனைத்தும் அறிந்திருந்தார். அதைக் கண்ட அவ்வூர் மக்கள் அனைவரும் அவரைப் போற்றினர்.

            எச்சதத்தர், தனது புதல்வர் விசாரசருமரை வேதபாட சாலைக்கு அனுப்பினார். ஆனால், விசாரசருமர் ஒருநாள் பாடசாலை செல்லும் வழியில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்களைக் கண்டார். தன் பஞ்ச கவ்யங்களாலும் இறைவனின் பூசைக்கு உதவும் பசுக்களின் பெருமையை நினைத்தார். தான் வேதங்களைப் படிப்பதைவிட பசுக்களை மேய்ப்பதையே அருந்தவம் என்று கருதினார்.

            உடனே அவர், அப்பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த இடையனிடம் சென்று, இனி பசுக்களைத் தானே மேய்ப்பதாகக் கூறினார். இடையனும், ஏற்கனவே விசாரசரு மரை அறிந்திருந்ததால் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. பிறகு, ஏனைய மக்களிடமும், அந்தணர்களிடமும் அனுமதி பெற்று விசாரசருமர் அப்பசுக்களை மண்ணியாற்றங்கரையில் மேய்த்து வந்தார்.

            விசாரசருமர் மேய்க்கத் தொடங்கிய பிறகு பசுக்கள் அதிகப் பாலை சுரந்தன. அவை அவ்வப்போது பாலை மண்ணில் சொரிந்தன. இதைக்கண்ட விசாரசருமர், இப்பாலை சிவபெருமானுக்கு அபிடேகம் செய்யலாமே! என்று கருதினார். அவர் பசுக்கள் சொரியும் பாலை, குடங்களில் ஏந்தினார். மண்ணியாற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் வடித்தார். ஆலயமும் எழுப்பினார். குடத்தில் நிரப்பிய பாலை அம்மண் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வணங்கி னார். நாள்தோறும் இவ்வாறு செய்வது விசாரசருமரின் வழக்கமாயிற்று.

ஒருநாள் இதை அவ்வூரிலுள்ள ஒருவன் கண்டான். அவன், ‘விசாரசருமர் பாலை மண்ணில் வீணாக்குகிறார்!’ என்று நினைத்து, பசுக்களின் உரிமையாளர்களிடமும் அவ்வூர் அந்தணர்களிடம் சென்று தெரிவித்தான். அவர்களும் எச்சதத்தரிடம் வந்து, அவரது புதல்வர், பாலை வீணாக்கு வதாகக் கூறினர்.

எச்சதத்தர், அவர்களிடம் இனி இவ்வாறு நடக்காது என்றும் தான் விசாரசருமரைக் கண்டிப்பதாகவும் கூறி அனுப்பினார். அவ்வூர் மக்கள் தன் புதல்வரைப் பற்றி குற்றம் சாட்டுவது உண்மையா? என்பதை அறிய விரும்பிய எச்ச தத்தர், மறுநாள் விசாரசருமருக்குத் தெரியாமல் அவர் பின்னே சென்று, ஒரு மரத்தின் மேலே ஏறி மறைந்திருந்தார்.

வழக்கம்போலவே விசாரசருமர் பசுக்களின் பாலை குடத்தில் ஏந்தினார். மண்ணால் லிங்கம் வடித்தார். அபிஷேகம் செய்யத் தொடங்கினார். அதைக்கண்ட எச்சதத்தார் கோபம் கொண்டார். மரத்தை விட்டுக் கீழே இறங்கினார். ஒரு கம்பை எடுத்து விசாரசருமரின் முதுகில் அடித்தார். தகாத வார்த்தைகளால் திட்டினார். அங்கிருந்த பால்குடங்களைக் காலால் எட்டி உதைத்தார்.

எச்சதத்தரின் செயலைக் கண்ட விசாரசருமருக்கும் கடுங்கோபம் வந்தது. “பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வைத்திருந்த பாலை வீணாக்கியவர் என் தந்தையானாலும் நான் மன்னிக்க மாட்டேன்!” என்றபடி ஒரு கோடரி எடுத்து எச்சதத்தரின் இரு கால்களையும் வெட்டி எறிந்தார்.

அக்கணமே சிவபெருமான் உமையன்னையுடன் விடை வாகனத்தில் அங்கே எழுந்தருளினார். ”அன்பனே! எம் மீது கொண்ட பக்தியால் தந்தை யென்றும் பாராமல் அவரது கால்களை வெட்டினாய்! இனி யாமே உனக்குத் தந்தை! உன்னைத் திருத்தொண்டர்களின் தலைவராக்கினேன். நான் உண்பது, உடுப்பது எல்லாம் உனக்கே சேரும்படி சண்டேசுர பதவி தந்தோம்!” என்று கூறியபடி, தன் திருமுடியிலுள்ள கொன்றை மலரை எடுத்து விசாரசருமருக்குச் சூடினார். விசாரசருமரும் சண்டேசுர பதவி அடைந்தார். விசாரசருமரால் கால்கள் வெட்டப்பட்டதால் எச்சதத்தரும் தூய்மை அடைந்து, சிவபதம் சேர்ந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

16.முருக நாயனார் புராணம்

17.திருநாளைப்போவார் புராணம்

18.திருக்குறிப்புத் தொண்டர்

19.திருநாவுக்கரசு சுவாமிகள்

Leave a Reply