Abstract
Many individuals sacrificed their bodies, wealth, and very souls for India’s independence. Among them, V. O. Chidambaranar stands out as a figure worthy of the highest reverence. He made significant contributions not only to the freedom struggle but also to the realm of literature. His work, *Meiyarivu* (Knowledge of Truth), serves as a profound text offering wise counsel and philosophies for living. It is esteemed as a treatise on virtue, positing that realizing the truth and adhering to it constitutes the moral foundation of life. While numerous literary figures have articulated philosophies for living, this article aims to highlight how V. O. Chidambaranar’s work specifically serves as a guide that steers people toward a righteous path.
“வ. உ. சிதம்பரம்பிள்ளையின் மெய்யறிவு”
ஆய்வுச்சுருக்கம்
இந்திய நாட்டின் விடுதலைக்காக உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தந்தவர்கள் பலர். அவர்களுள் முதன்மையாக வைத்துப் போற்றத் தகுந்தவர் வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆவார். இவர் விடுதலைப் போராட்டத்தில் மட்டுமல்லாமல் இலக்கியத் துறையிலும் தன் முதன்மையான பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது மெய்யறிவு என்ற நூல் ஆன்ற அறிவுரைகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் தருகின்ற மெய்யுணர் நூலாக அமைகின்றது. மெய்யை உணர்தல் என்ற நிலையில் உண்மையை உணர்தலும், அதனைப் பின்பற்றுதலும் வாழ்க்கைக்கான அறமாகும் என்ற கருத்தை முன் வைக்கின்ற நூலாக அற நூலாகப் போற்றத்தகுந்த நூலாக இந்நூல் அமைந்துள்ளது. வாழ்வியலுக்கு ஏற்ற தத்துவங்களைப் பல இலக்கிய ஆசிரியர்கள் இயம்பினாலும் வ. உ. சிதம்பரத்தின் இந்நூல் மக்களை அறவழியில் ஆற்றுப்படுத்துகின்ற அற நூலாக அமைகின்றது என்பதை விளக்கும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.
திறவுச்சொற்கள்
அறநூல் – reatise on virtue, இம்மை-in this birth, மறுமை-in the next birth, அறம்புரிதல்- practicing virtue, மறங்களைதல்- eradicating vice,, மனக்குதிரை- the steed of the mind.
முன்னுரை
வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் கண்ணணூர் சிறையில் இருந்த போது அவருடன் தங்கியிருந்த குற்றவாளிகளை அறிவுரைக் கூறி திருத்தியுள்ளார். அவர் கூறிய அறிவுரைகளைத் தொகுத்து மெய்யறிவு என்ற நூலாகவும் வெளியிட்டுள்ளார். இம்மையிலும் மறுமையிலும் விளையும் கேடுகளையும், அவற்றை நீக்குதற்குரிய வழிமுறைகளையும் இந்நூலில் விளக்கியுள்ளார். வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் மெய்யறிவு என்ற நூலின் வழி அவரது ஆற்றுப்படுத்துகின்ற அற நெறிகளை எடுத்து இயம்புவது இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது.
வ.உ.சிதம்பரம் பிள்ளை
வ.உ.சிதம்பரம் பிள்ளை என்ற வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை 5/9/1892 ஒட்டப்பிடாரத்தில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். படித்து பட்டங்கள் பல பெற்ற இவர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டு பட்டம், பதவி, சொத்துக்கள் என அனைத்தையும் இழந்தார். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இவரின் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு பல நேரங்களில் சிறையில் அடைக்கப்பட்ட போது பல கொடுமைகளுக்கு ஆளான போதும் நேரத்தை வீணாக்காமல் நூல்கள் பல இயற்றியுள்ளார். அவர் இயற்றிய நூல்களுள் ஒன்றுதான் மெய்யறிவு என்ற நூலாகும்.
வ. உ. சிதம்பரம்பிள்ளையின் மெய்யறிவு
ஆங்கில ஆட்சியின் தவறுகளைச் சுட்டி காட்டி விமர்சித்ததற்குக் குற்றம் சாட்டப்பட்டு, நாடு கடத்தல் தீர்ப்புப் பெற்று கண்ணணூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் வ. உ. சிதம்பரம்பிள்ளை. சிறையில் வசித்த காலத்தில் தன்னுடன் இருந்த கொடுங் குற்றவாளிகளுக்குப் பல பாவங்கள் பற்றியும், அவற்றால் இம்மையிலும் மறுமையிலும் விளையும் கேடுகளையும், அவற்றை நீக்குதற்குரிய மார்க்கங்களையும் எடுத்துக்கூறியுள்ளார். தாம் வெளியிட்ட மெய்யறிவு என்ற நூலின் மறங்களைதல் என்னும் அதிகாரத்திலுள்ள பத்து வெண்பாக்களையும் பாடியுள்ளார். அவற்றை கேட்ட குற்றவாளிகள் மனம் திருந்தி அப்பாடல்களை மனப்பாடம் செய்துள்ளனர். பின்னர் அறம்புரிதல் என்னும் அதிகாரத்திலுள்ள பத்து வெண்பாக்களையும் பாடி காட்டியுள்ளார்.. பின்னர் இவ்விருபது வெண்பாக்களையும் இரண்டு அதிகாரங்களாக்கி, அவற்றிற்கு முன்னும் பின்னும் சில அதிகாரங்களைச் சேர்த்து, மொத்தம் நூறு வெண்பாக்களாக்கி, அவற்றை மெய்யறிவு என்னும் பெயருள்ள இந்நூலாக உருவாக்கியுள்ளார்..
மெய்யறிவு வகைமைகள்
மெய்யறிவு என்ற இந்நூல் அறங்களைச் செய்தல் வேண்டும். அடுத்து அறம் செய்தலோடு அதனைக் காத்தல் வேண்டும். அடுத்து அந்த அறத்தைப் பின்பற்ற முயற்சி செய்தல் வேண்டும் என்பதை செப்புகின்றது. அறம்,பொருள், வீடு பேறு அடைய அவாவுகின்ற ஆண்களும் பெண்களும் இந்நூலைக் கேட்பதற்கும் கற்பதற்கும் உரியர் என்கிறார் வ. உ. சிதம்பரம்பிள்ளை. கண்ணணூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனம் திருந்திய குற்றவாளிகளில் சிலர் வ. உ. சி. யிடம் அவர் இயற்றிய பாக்களைத் தொகுத்துச் சில பாக்களாகச் செய்து கொடுத்தால் அவற்றை மனப் பாடம் செய்து வைத்து கொள்வதாகக் கூறியுள்ளனர். அதன் படி பல பாக்களை இயற்றியுள்ளார். இதுவே மெய்யறிவு என்ற நூலாக உருவாகியுள்ளது. இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் தத்துவம் நான்கில் இன்பம் தவிர மற்றைய மூன்றையும் உணர்த்துகின்றது. இந்நூல் கூறும் அறநெறியையும் பொருள் நெறியையும் வீட்டு நெறியையும் நன்கு உணர்ந்து பற்றி நின்று அவற்றில் ஒழுகுதலே இந்நூலைக் கேட்கும் அல்லது கற்கும் முறையாகும். இந்நூலில் தன்னையறிதல், விதியியல் அறிதல், உடம்பை வளர்த்தல், மனத்தையாள்தல், தன்னிலையில் நிற்றல், மறங்களைதல், அறம் புரிதல், தவஞ்செய்தல், மெய்யுணர்தல், மெய்ந்நிலையடைதல் என்ற தலைப்புகளில் மெய்யறிவு கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
தன்னையறிதல்
உலகத்துப் பொருள்களின் இலக்கணங்களையெல்லாம் கற்கத் தொடங்குவதற்கு முன்னர் தனது இலக்கணங்களைக் கற்றுக் கொள்ளவேண்டும். ஒருவன் முதலில் தன்னையறிந்து தெளிதல் வேண்டும் என்று வ. உ. சிதம்பரம்பிள்ளை கூறுகின்றார்.
தன்னையறிதல் தலைப்படுத்துங் கல்வியென
முன்னையவர் நன்குமொழிந்திருந்து – மென்னை கொல்
தன்னை யறியாது சார்ந்தபல கண்டறியப்
பின்னையவ நுன்னல் பிடித்து. (மெய்யறிவு, ப.2)
தன்னை முதலில் உணர வேண்டும். தன்னையறிவதற்கு இன்றியமையாதது கல்வியறிவே என்பதை உணர்தல் வேண்டும். அடுத்துத் தன்னில் உள்ள நல்ல எண்ணங்கள் அறிந்து தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இறுதியாகத் தீய எண்ணங்கள் கண்டறிந்து களைதல் வேண்டும். மேற்கண்ட அனைத்தையும் உணர்ந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை முன் வைக்கின்றார்.
மனக்குதிரை மெய்ய த்தின் மார்க்கத்தை விட்டுத்
தனக்குவியன்மாதர் நிலஞ் சாரு – முனற்கைக்
கடிவாளத்தாலிழுத்துக் காட்டிநெறிசேர்க்கும்
பிடிவாத மாவானமா பின்பு. (மெய்யறிவு, ப.9)
மனம் அறநெறியை விட்டு மறநெறியில் செல்லும். ஆன்மா அதைப் பிடிவாதமாக இழுத்து அறநெறியில் சேர்க்கும். குதிரைக்கு கடிவாளமிட்டு நல் வழியில் செலுத்துதல் போல மனதைக் கடிவாளமிட்டுக் காத்தல் வேண்டும் என்கிறார். மனதை அதன் வழியில் செல்ல விடாமல் தடுத்து நல்வழியில் செலுத்த வேண்டும் என்கிறார்.
இம்மெய்யை நன்குணர்ந்தா ரின்றுவருந் தீயூமின்
வெம்மெய்பை துண்டுதுண்டாவெட்டிடுவர்- நம்மெய்
யறச்செயலான் முள்ளை யரிவாள்கொண் டீர்க்குந்
திறச்செயலார் போலச் சிரித்து (மெய்யறிவு, ப.17)
மறம் துன்பத்தை விளைவிக்கும். அறம் இன்பம் பயக்கும் என்ற உண்மையை அறிந்தவர், முள் கம்பிலுள்ள முட்களை அரிவாளால் செதுக்கி எறிந்து விட்டு அக்கம்பைத் தமது வேலைகளுக்கு உபயோகித்துக் கொள்ளும் புத்திசாலிகள் ஆவார். மேலும் அவர்கள் இப்பிறப்பில் வருகின்ற கெட்ட விதியினால் விளையும் துன்பங்களையெல்லாம் இன்பங்களாகக் கொண்டு மேன் மேலும் அறச் செயல்களைச் செய்து அக்கெட்ட விதியிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வர். இங்கு அறம் செய்து தன்னைக் காத்து ஓம்புதல் வேண்டும் என்ற சிந்தனையை விளம்புகின்றார்.
உடம்பைவளர்த்தல்
மனித உடம்பு பெறுதற்கரிய ஒன்றாக எண்ணி, அதனை எவ்வி வியாதியும் பொருந்தாதவாறு காத்தல் வேண்டும். இதனை திருமூலர்
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
(திருமந்திரம்,மூன்றாம் தந்திரம் 724-வது பாடல் )
வ. உ. சிதம்பரம் பிள்ளையும் இக்கருத்தையே முன்மொழிகின்றார். உடலை வலிமையுறுமாறு வளர்த்து காத்தல் வேண்டும். வலிமையான பின் உடலைத் தனக்குக் கீழ்ப்படியுமாறு அடக்கி ஆள வேண்டும் என்ற பொருளில் செய்யுளை அமைத்துள்ளார்.
மன்னுமிந்தப்பூவுலகின் மாண்புற்ற பல்பொருளு
ளுன்னுடம்பிற் கொப்பிலையா தூக்கியதைப் பன்னும்
பிணியெஃதுஞ் சாராது பேணிவளர்த் தென்றும்
பணியுமா றாள்வாய் புரிந்து. (மெய்யறிவு, ப.20)
மனிதனிடத்தில் உடம்பு மனம் ஆன்மா என்னும் மூன்று பொருள்களேயுள்ளன. மற்றைய எல்லாம் அம்மூன்றினது பாகுபாடுகளேயாகும். எனவே நோய் நீக்கி உடலைப் பாதுகாத்தல் மனிதனது கடமையாகும் என்ற கருத்தை முன் மொழிகின்றார். அடுத்து,
உன்னுமிடத் துன்பா டம் மன மன்னான்மா
என்னுமொரு மூன்றேயிருப்பன காண் மன்னும்
பிறவெல்லாமம் மூன்றுள் பேணு மவற்றின்
உறவெல்லாஞ் சொல்வே னொருங்கு (மெய்யறிவு, ப.4)
என்று மனம், மெய், ஆன்மாவை பின்பற்றி நடக்க வேண்டும் என்கிறார். மெய்யின் கண் பற்று நீக்கி, ஆன்மாவை நல்வழியில் செலுத்தி தீயவற்றிலிருந்துத் தன்னைக் காத்து ஓம்பல் வேண்டும் என்ற கருத்தையும் பதிவிடுகின்றார்.
முடிவுரை
உலகம் உய்ய பல அறிஞர்கள் பல கருத்துகளை முன் வைத்தாலும், சில கருத்துகள், செய்திகள் மட்டுமே காலம் கடந்தும் நிலைபெற்று நிற்கின்றன. அவற்றின் அடிப்படையில் நோக்கும் போது வ. உ. சிதம்பரம்பிள்ளையின் மெய்யறிவு என்ற நூல் இன்றளவும் சீரிய கருத்துக்களால் நிலைத்து நிற்கின்றது என்பதை மறுக்க இயலாது. மேலும், அறம், பொருள், இன்பம் முதலியவற்றை விரிவாக விளக்கி நேர்மையான பாதையில் செல்லுமாறு மக்களை நல்வழிப்படுத்துகின்றார்.
முதன்மை நூல்
1.மெய்யறிவு, வ. உ. சிதம்பரனார், எஸ்.வி.என். பிரஸ், சென்னை, முதற்பதிப்பு1929.
2.கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம், கலைமணி, என். வி., சாந்தி நிலையம், சென்னை, முதல் பதிப்பு 2001
3.கப்பலோட்டிய தமிழன், சிவஞானம், ம. பொ., வெளியீடு இன்பநிலையம், சென்னை, முதற்பதிப்பு 1944.
4.வ. உ. சிதம்பரம் பிள்ளை சரித்திரம், நெல்லையப்பர், பரலி சு. , சக்தி காரியாலயம், சென்னை, முதல் பதிப்பு 1944.
5.சுதேசியத்தின் வெற்றி, விசுவநாதன், சீனி, பாலாஜி புத்தக நிலையம், சென்னை, முதல் பதிப்பு, 1985
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் த. முத்துலட்சுமி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, சுயநிதிப்பிரிவு,
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட்
மகளிர் வைணவக் கல்லூரி
குரோம்பேட்டை, சென்னை-44.


இந்திய நாட்டின் விடுதலைக்காக உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தந்தவர்கள் பலர். அவர்களுள் முதன்மையாக வைத்துப் போற்றத் தகுந்தவர் வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆவார். இவர் விடுதலைப் போராட்டத்தில் மட்டுமல்லாமல் இலக்கியத் துறையிலும் தன் முதன்மையான பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது மெய்யறிவு என்ற நூல் ஆன்ற அறிவுரைகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் தருகின்ற மெய்யுணர் நூலாக அமைகின்றது. மெய்யை உணர்தல் என்ற நிலையில் உண்மையை உணர்தலும், அதனைப் பின்பற்றுதலும் வாழ்க்கைக்கான அறமாகும் என்ற கருத்தை முன் வைக்கின்ற நூலாக அற நூலாகப் போற்றத்தகுந்த நூலாக இந்நூல் அமைந்துள்ளது. வாழ்வியலுக்கு ஏற்ற தத்துவங்களைப் பல இலக்கிய ஆசிரியர்கள் இயம்பினாலும் வ. உ. சிதம்பரத்தின் இந்நூல் மக்களை அறவழியில் ஆற்றுப்படுத்துகின்ற அற நூலாக அமைகின்றது என்பதை விளக்கும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

