Sivavakkiyarum Samudhaaya Vizhippunarvum|Dr.K.Nagammal

Abstract 
         
           This study explains how Sivavakkiyar expresses the true nature of God and, through that understanding, outlines the ways to attain Him, while also presenting thoughts that create social awareness for human society. It highlights the Siddhar’s view that the supreme truth lies in seeking the God within oneself rather than wandering in search of Him in the external world. The concept that the formless One should be realized not through external rituals but through inner yogic practices is brought to light. It is also affirmed that such realization unites the individual soul with the Supreme Soul, serving as a powerful means to transcend the cycle of birth and attain liberation.


“சிவவாக்கியரும்சமுதாயவிழிப்புணர்வும்”

ஆய்வுச்சுருக்கம்
       இறைவனின் உண்மை இயல்புகளை எடுத்தியம்பி அதன் வாயிலாக அவனை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறி மானுட சமூகத்திற்கான விழிப்புணர்வு சிந்தனைகளைச் சிவவாக்கியர் பாடியிருப்பதை எடுத்துரைக்கிறது. உன்னுள் இருக்கும் இறவனை உலகில் தேடித் திரியாமல் உன்னுள் தேடுவதே உன்னதமானது என்ற சித்தர் வாக்கு புலப்படுத்தப்பட்டுள்ளது. உருவமற்று ஒருவனாய் இருப்பவனைப் புறவழிபாடுகளை விலக்கி யோகத்தால் கூடி கண்டிட வேண்டுமென்ற கருத்தாக்கம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதுவே, ஆன்மாவைப் பரமான்மாவோடு  சேர்த்து பிறப்பறுக்கும் ஆயுதமாகவும் அமையவல்லது என்பதும் மெய்பிக்கப்பட்டுள்ளது.

திறவுசொற்கள் 
: சித்தர், சிவவாக்கியர், சமுதாயம், விழிப்புணர்வு, சடங்குகள், நம்பிக்கை, மூடநம்பிக்கை, இறை, ஆன்மா,ஞானநிலை.

முன்னுரை
       இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலித்ததோடு மானுட சமூகத்தை நெறிப்படுத்திடவும் தவறவில்லை. அவ்வரிசையில் சித்தர் இலக்கியங்கள் தனித்துவமிக்கது. இச்சித்தர்கள் மானுடனாய்ப் பிறந்து அம்மானுட வாழ்வியல் முறையிலிருந்து வேறுபட்டு தன் பிறப்பிற்கான பயனை உணர்ந்து அதனை அடைய போராடிய மகான்களாக வாழ்ந்து காட்டினர். தாங்கள் கண்ட வழிமுறைகளைக் கூறி மக்களைப் பண்படச் செய்தனர். இச்சமூகப் பிடிகளிலிருந்து அவர்கள் விடுபட்டு மேலான இறைநிலையை அடைய வேண்டும் என்பதனை அடிப்படை நோக்கமாகக் கொண்ட  பாடல்களை எழுதியுள்ளனர். அதன் ஊடாகச் சீர்திருத்தச் சிந்தனைகளை ஊட்டி மானுட இனத்தை விழிப்படைய செய்துள்ள பாங்கு சித்தர் இலக்கியங்களின் முக்கிய கூறாகப் போற்றத்தக்கது. அப்படியான சித்தர் பாடல்களில் சிவவாக்கியர் கூறும் சமுதாய விழிப்புணர் சிந்தனைகளை ஆராய்வது ஆய்வின் நோக்கமாக அமைகிறது.

உருவவழிபாடு 

        பண்டைய காலம் தொட்டு இன்று வரை இறை நம்பிக்கை என்பது மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. ஆதிகாலத்தில் இயற்கையைத் தெய்வமாக வணங்கத் தொடங்கிய மனிதர்கள் அதன் தொடர்ச்சியாக உருவ வழிபாட்டை மேற்கொண்டனர். இவ்வாறான நம்பிக்கையில் இறையை ஏற்றுக்கொள்ளும் சிவவாக்கியர்  இறைவன் உருவம் உள்ளவன் என்பதையும் கோவிலில் உள்ளான் என்பதையும் ஏற்கவில்லை. அதனை மற்றவர்களும் தெளிவுபட அறிய வேண்டும் என்ற நோக்கில்,
“நட்டகல்லைத்தெய்வம்என்று நாலுபுட்பம்சாத்தியே 
சுற்றிவந்துமுணுமுணென்று 
சொல்லும்மந்திரம்ஏதடா! 
நட்டகல்லும்பேசுமோநாதன்உள்இருக்கையில்! 
சுட்டசட்டிசட்டுவம்கறிச்சுவைஅறியுமோ?”         (சிவவாக்கியம்,பா.494)       
எனப் பாடி உருவ வழிபாட்டைப் புறந்தள்ளி உள்ளிருக்கும்  இறையை உலகறிய வேண்டிய  உன்னத்தை நிலைநாட்டியுள்ளார்.

உன்னுள் உள்ளான்
       உலகில் உள்ள ஒவ்வொரு ஆன்மாக்களிலும் இறைவன் உறைந்துள்ளான் என்ற பேருண்மையை அறியாத பாமர மக்களின் நிலை கண்டு வருந்திய சிவவாக்கியர்,

“ஓடிஓடிஓடிஓடிஉட்கலந்தசோதியை
நாடிநாடிநாடிநாடிநாட்களும்கழிந்துபோய் 
வாடிவாடிவாடிவாடிமாண்டுபோனமாந்தர்கள் 
கோடிகோடிகோடிகோடிஎண்ணிறந்தகோடியே”    (சிவவாக்கியம்,பா.3)
         
        என்ற அடிகளில் இறைவனின் உண்மையான இருப்பிடத்தை உணர்த்தியுள்ளார். அதேபோல, கோயிலும் குளமும் மனதின்கண்ணே இருக்கின்றது.  அதைவிடுத்து அவற்றை வெளியில இருப்பதாக எண்ணி அங்கு சென்றும் தீர்த்தமாடியும் அடையும் பயன் ஒன்றுமில்லை ஆகவே, யோகத்தைச் சாதித்து அதன் மூலம் முத்தி நிலையைப் பெற்று கொள்ளுங்கள் என்பதை,

“கோயிலாவது  ஏதடா? குளங்களாவதுஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும்குலமாரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும்அழிவதும்இல்லை இல்லைஇல்லையே”  (சிவவாக்கியம்,பா.34).       
     இப்பாடல் வாயிலாக வழிபடுத்துகிறார். இதனையே, “தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்” (திருமந்திரம்.1823) என்று திருமூலர் பாடுகிறார். மேலும், உள்ளத்தின் கண்ணே உள்ள சிவபெருமானை நன்றாய் நோக்கிப் பார்க்கும் பட்சத்தில் அவன் வேறு எங்குமில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்  (சிவவாக்கியம்.33) என்கிறார்.

 ஒன்றே தெய்வம்
      தெய்வமுண்டு என்று நம்புகின்ற மக்கள் அந்த தெய்வமானது இந்த உலகத்தைக் கடந்தும் உலகத்தின் உள்ளேயும் வியாபித்து இருக்கவல்லது என்பதை உணராது அவனைக் கோயில்கள்தோறும் தேடுவதோடு பல்வேறு உருவங்களில் தேடி திரிகின்றனர். அவ்விறைவன் ஒருவனே என்ற உன்னதம் உணரும்  நிலையே வாழ்வின் பெரும்பேறு என்ற பாங்கில்,

“நாழிஅப்பும்நாழிஉப்பும்நாழியானவாறுபோல் 
ஆழியோனும்ஈசனும் அமர்ந்துவாழ்ந்திருந்திடம் 
ஏறில்ஆறுஈசனும்இயங்குசக்ரதரனையும் 
 
வேறுவேறுபேசுவார்வீழ்வர்வீண்நரகிலே.”         (சிவவாக்கியம்,பா.54)
         
         ஒருபடி உப்பில் ஒருபடி நீரைச் சேர்த்தால் இரண்டுபடி ஆகாமல் ஒருபடி ஆவதுபோலவே அரியும் சிவனும் ஒன்றே என்ற எளிய உவமையால் விளக்கி  இதனை அறியாமல் பேதம் சொல்லுகின்றவர்கள் நரகத்தில் விழுந்து அழிவார்கள் என எச்சரிக்கிறார். சிவாக்கியர் சுட்டிய இறைவன் ஒருவனே என்ற இதே சிந்தனையைப் பக்தி இலக்கிய காலத்தில் “ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க” (திருவாசகம்.1) என மாணிக்கவாசகர் செப்புவதைக் காணலாம்.

சாதி -பேதம்
       உள்ளன்பைக் காட்டி உறவைப் பலப்படுத்தி சமத்துவம்  பேண வேண்டிய மனிதர்கள் சாதி சமயப்  பேதங்களால் பிளவுபட்டு நாளுக்குநாள் நலிந்து வரும் இழ்நிலையைப் பொறுக்கமாட்டாதவராய்,

“சாதியாவதுஏதடா? சலம்திரண்டநீரெலாம் 
பூதவாசல்  ஒன்றலோ, பூதம்ஐந்தும்ஒன்றலோ?
காதில்வாளில்,  காரை,  கம்பி, பாடகம்பொன்ஒன்றலோ?
சாதிபேதம்ஓதுகின்றதன்மைஎன்னதன்மையோ? ” (சிவவாக்கியம்,பா.46)
         
        உலகில் ஏரி, குளம், கிணறு, ஆறு என்கிற பெயர்களைப் பெற்றவையாக இருந்தாலும் நீர் ஒன்றேயாவது போலவும் ஐம்பூதம் என்கிற பகுப்பிருந்தாலும்  பூதங்களென்ற பேர் ஒன்றேயாவது போலவும் அந்த ஐந்து பூதங்களும் வாழ்வதற்கு வெவ்வேறு இடமிருந்தாலும் ஐம்பூதங்களின் வாசல் என்கிற பேர் ஒன்றேயாவது போலவும் காதிலே அணியும் ஆபரணமாகிய தோடு, கையில் அணியும் வளையல், என்கிற பேர் வெவ்வேறாக இருந்தாலும் இவைகளுக்கெல்லாம் பொன் ஒன்றேயாவது போலவும் உலகெங்கிலுமுள்ள எல்லாச் சாதிகளும் ஒன்றேயாகும். இப்படியிருக்க பல்வேறு வகையான சாதி பெயர்களைச் சொல்லி அதிலும் உயர்வு தாழ்வு கற்பித்து ஒருவரை ஒருவர் வேறுபடுத்தி கொள்ளுவது வேதனையை ஏற்படுத்தவல்லது என்ற பேருண்மையை உணர்த்தியுள்ளார். இவ்விடத்தே, “தமிழ்க்குமுகாயத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களிடையே ஒற்றுமையின்மை பெரிய தடையாயுள்ளது. ஒற்றுமையின்மைக்குக் காரணியங்களாக அவர்களிடையே உள்ள சாதிப் பிரிவினைகளும் அப்பிரிவுகளிலே அவர்களுக்கு இருக்கும் விடாப்பிடியான பற்றுமே விளங்குகின்றன .” (சாதி ஒழிப்பு,ப.4) என்ற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கருத்து ஒப்பிட்டு நோக்கத்தக்கது. அதேபோல, 

பறைச்சியாவதுஏதடா? பணத்தியாவதுஏதடா? 
இறைச்சிதோல்எலும்பினும் இலக்கமிட்டுஇக்குதோ? 
பறைச்சிபோகம்வேறதோபணத்திபோகம்வேறதோ?
பறைச்சியும்பணத்தியும்பகுத்துப்பாரும்உம்முளே!   (சிவவாக்கியம்,பா.39)
         
       எனப் பாடியும் மனித மனங்களைச் சிந்திக்க சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்குக் கண்டனக் குரல் கொடுத்த சிவவாக்கியரைப் போலவே விடுதலைக்கவி பாரதியும் “சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்” என மொழிவதைக் காணலாம். 

தீண்டாமை
      காலங்காலமாக மனிதர்கள் சக மனிதர்களை உயர்வு தாழ்வு கருதி சாதியால் தீண்டத்தகாதவன் என்று வேறுபாடு கற்பித்து அவர்களை மனரீதியான தாக்கத்திற்கு ஆட்படுத்தியது போலவே பெண்களையும் தீட்டென ஒதுக்கிவைக்கும் சமூக அவலம் நீடிப்பதையும்மறுப்பதற்கில்லை. இதனை, 

“அறையினில்கிடந்தபோது அன்றுதூய்மைஎன்றிலீர்
துறைஅறிந்துநீர்குளித்த அன்றுதூய்மைஎன்றிலீர் 
பறையறிந்துநீர்பிறந்த அன்றுதூய்மைஎன்றிலீர்
புரைஇலாதஈசரோடுபொருந்துமாறதுஎங்ஙனே.     (சிவவாக்கியம்,பா.48)
         
       பெண்கள் பூபெய்திய அந்நாட்ளும்  தாரை தப்பட்டை சப்பத்துடன் குழந்தை பிறந்த அந்நாட்களும் இறப்பு நாட்களும் தீட்டு என்று சொல்லுகிறீர்களே  உடம்பில் உயிர் உள்ள தீட்டோடுதானே ஈசன் பொருந்திருக்கின்றான் அதனை அறியாமல் தீட்டு என்று ஒதுக்குவதில் என்ன பயன் கண்டீர்கள்? எனக் கடுமையாகச் சாடி விழிப்புணர்வோடு சிந்திப்பதும் செயலாற்றலுமே உயிர்களை உய்விக்கும் உண்மையான வழியாகும் என்றப் புரிதலை ஏற்படுத்தியுள்ளார்.

சடங்குகளை விலக்கல்
     பிறப்பு முதல்  அடக்கம் வரை தொட்டதற்கெல்லாம் சடங்குகளைப் பின்பற்றி காலத்தையும் பொருளையும் செலவிட்டு பொன்னான வாழ்வின் அருமை உணராத அர்ப்பர்களாய் வாழும் மனித இனத்தின் அவல நிலையை,

“பூசைபூசைஎன்றுநீர் பூசைசெய்யும்பேதைகாள்
பூசையுள்ளதன்னிலே பூசைகொண்டதுஎவ்விடம்? 
ஆதிபூசைகொண்டதோ,அனாதிபூசைகொண்டதோ? 
ஏதுபூசைகொண்டதோ? இன்னதென்றுஇயம்புமே” (சிவவாக்கியம்,பா.36)       
        என்றவாறு வினா எழுப்பி புறத்தே செய்யும் சடங்குகளை விடுத்து அகத்தே செய்யும் பூசையே வேண்டப்படுவது என  உணர்த்துகிறார்.

அவாவை ஒழித்து திருவருள்பெறல்
       மனித மனங்களில் எழுக்கிற ஆசையினால் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனை மனம் உணர்ந்தாலும் ஆசை அவனை விடுவதில்லை. ஆனால், அப்படியான ஆசையை விட்டுவிட்டால் இறைவனுடைய திருவருளைப் பெறலாம் என்பதை, 

“வேணும்வேணும்என்றுநீர் வீண்உழன்றுதேடுவீர்
வேணும்என்றுதேடினும் உள்ளதல்லதுஇல்லையே 
வேணுஎன்றுதேடுகின்றவேட்கையைத்துறந்தபின்
வேணும்என்றஅப்பொருள்விரைந்துகாணல் ஆகுமே”      (சிவவாக்கியம்,பா.138)
       இப்பாடல்  விளக்குகிறது.
 
யோகத்தால் பிறவாமைஅடைதல்
        வாழும் வாழ்க்கையில் இன்று இருந்தயொன்று நாளையில்லை இன்றில்லாத ஒன்று நாளை இருக்கலாம் இப்படி உலகப் போக்கு அதனது இயல்பிலிருக்க நாமும் உடன்சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றோம். இந்த ஓட்டம் முடிந்தபின் பந்தயம் முடிந்து விடுகிறது. பந்தயத்தில் ஓடிய நாம் காணாமல் போகிறோம். இதுவரை  ஓடிய ஓட்டம் எதற்கு? என்ற வினாவிற்கு வீண் என்பதே சிவவாக்கியரின் விடையாக இருந்துள்ளது அதனால்தான், 

“கறந்தபால்முலைப்புகா, கடைந்தவெண்ணெய்மோர்புகா;
உடைந்துபோனசங்கின்ஓசைஉயிர்களும்உடற்புகா;
விரிந்தபூஉதிர்ந்தகாயும் மீண்டும்போய்மரம்புகா; 
இறந்தவர்பிறப்பதில்லைஇல்லைஇல்லைஇல்லையே”.  (சிவவாக்கியம்,பா.47)
         
      இவ்வுலகத்தில் ஒருமுறை பசுவின் மடியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாலானது மீண்டும் அந்தப் பசுவின் முலைக்காம்பைச் சேர்வதில்லை. மோரில் இருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் மீண்டும் மோராகுவதில்லை, சங்கிலிருந்து வெளிப்பட்ட ஓசையானது மறுபடியும் அச்சங்கில் சென்று சேர்வதில்லை, மரத்திலிருந்து உதிர்ந்த பூவும் காயும் மறுபடியும் அந்த மரத்தில்போய் ஒட்டுவதில்லை. இவைகளெல்லாம் எப்படி சாத்தியமற்றதோ அதுபோலத்தான் உடலிலிருந்து ஒருமுறை உயிர்ப்போன பிறகு மீண்டும் அவ்வுடம்பில் பிறப்பதில்லை. ஆகவே, உயிருடன் இருக்கும் பொழுதே யோகம் செய்து இறைவனை அடைந்து மீண்டும் பிறவாத நிலையை அடைய வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறான யோகத்தைச் செய்வதற்குத் துணை நிற்கவல்லது ‘சிவாயநம’ என்னும் ஐந்தெழுத்து மந்திரமாகிய பஞ்சாட்சரம் ஆகும். இதுவே கதவு இல்லாத வாசல் ஆகிய மூக்குக்கு வெளியே நின்று மனிதனின் மூச்சுக்காற்றை முறைப்படி மீண்டும் உள்ளே இழுத்து நிறுத்தும் ஆற்றல் படைத்தது (சிவவாக்கியம்,பா.47) என வலியுறுத்துகிறார். இதனினும் மேலாக, இறவாமுன்னரே  இறைவனை வணங்கவேண்டும் இல்லையே நீங்கள் அடையவிருக்கின்ற சிவபாதத்தை இழந்தவர் ஆவீர்கள் (சிவவாக்கியம்,பா.70) என  அறிவுறுத்துகிறார்.

நிறைவாக
🎯 இறைவன் உருவமற்ற ஒருவனாய் உள்ளான். அவன் உனக்குள் இருக்கின்றான் அவனை கோயில் குளங்கள் என்று தேடி அலையாமல் இருந்த இடத்திலிருந்து கொண்டே  யோகத்தின் மூலமாக மூச்சுக்காற்றை முறைப்படி நிறுத்தி  ஒன்றிணைந்திட வேண்டும். அவ்வுயர்நிலையை அடைதல்தான் இந்தப் பிறவியின் பயன் எனப் புலப்படுத்தியுள்ளார்.

🎯 அதனை எய்திட ஆன்மாக்கள் முயல வேண்டும் அந்த முயற்சியைத் தடை செய்யக்கூடிய  சமூகத்திற்கு முரணான அல்லது எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுதலை ஒழித்து விழிப்புணர்வு சிந்தனையோடு செயல்படுதல் எத்தகைய அவசியம் என்பதனை உணர்த்தியுள்ளார்.

🎯 உலகெங்கிலும் மண்டி கிடக்கின்ற சாதி, மத பேதத்தையும் தீண்டாமையையும் வேரறுப்பதன் மூலம் மனிதத்தை நிலைநாட்டிட முடியும் என்று ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.

🎯 சமுதாயத்தில் புரையோடி கிடக்கின்ற மூடநம்பிக்கைகளைக் களையும்  கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

🎯 மானுட இனத்தின் மேன்மையை நோக்கி செயல்பட உந்தும் இவரது பாடல்கள் அறியாமையால் செய்யும் அற்ப செயல்களை கைவிட வேண்டுமென்பதை அறிவுறுத்தியுள்ளது. 

🎯 உலகில் பிறந்து உலகிலேயே உழன்று இன்பமும் துன்பமும் இவ்வுலகியல்பு என்றில்லாது இதற்கும் மேலான பிறப்பறுக்கும் வழிகளை அறிந்து இறையோடு கலந்து இரண்டற வாழும் உன்னதமே உலகில் ஆனந்தம் என்ற பேருண்மையை உலகறியச் செய்துள்ளார்.

துணைநின்ற நூல்கள்
1.இராமசுப்பிரமணியம் வ.த.,(உ.ஆ.), திருவாசகம் மூலமும் உரையும், திருமகள் நிலையம், 2006

2.கோவேந்தன் த., சித்தர் பாடல்கள், (பட்டினத்தார் முதல் பாரதியார் வரை), பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை,2000.

3.சிவவாக்கியர் – சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம், (மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்), Project madurai, 2007.

4.சுப்புராசு  வீ. வீ., (ப.ஆ.), -பாரதியார் கவிதைகள், சுரா பதிப்பகம்,2011

5.மணிவாசகன் புலவர் அடியன், திருமந்திரம், சாரதா பதிப்பகம், ஜி 4 சாந்தி அடுக்ககம் 3 ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை சென்னை -14, ஏழாம் பதிப்பு, செப்டம்பர் – 2022.

6.பாவலரேறு பெருஞ்சித்திரனார், சாதி ஒழிப்பு, தென்மொழி பதிப்பகம், பாவலரேறு தமிழ்க்களம் 1, வடக்குப்பட்டுச் சாலை, மேடவாக்கம் கூட்டுச்சாலை, சென்னை-601302,, முதற்பதிப்பு,ஜீன்-2005.

7.வடிவேலு முதலியார்,மா., சிவவாக்கியர் பாடல் மூலமும் உரையும், இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது, சென்னை- 1953.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கு. நாகம்மாள், 

உதவிப்பேராசிரியர், 

மொழி பண்பாடு மற்றும் சமூகவியல் துறை (தமிழ்),

அறிவியல் மற்றும் மானிதநேயவியல் புலம்,

எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம், 

இராமாபுரம் வளாகம்,
சென்னை-89.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here