Sangagalath Tamilarin Unavu Muraigal| D. Rajakumari

Abstract 
         
       In the early stages of human life, human society was a hunter-gatherer society. Therefore, humans spent their time hunting for food and consuming natural resources found in the forests. Initially consuming raw meat, humans eventually learned that cooking meat and tubers over a fire enhanced their taste. After discovering fire, they began to cook and boil their food. After the invention of pottery, they adopted methods such as boiling and steaming food. They understood that food not only satisfies hunger but also provides the body with the necessary knowledge and energy. Therefore, they learned to cook food in various ways and to preserve, store, and process food items during times of scarcity.


“சங்ககாலத்தமிழரின்உணவுமுறைகள்”

முன்னுரை
         
     மக்கள் உண்ணும் உணவும் பழக்கவழக்கங்களுமே அவர்களின் உடல் நலத்தைக் தீர்மானிக்கின்றன என்று பகவத்கீதையும், எவற்றை உண்ண வேண்டும், எவற்றை உண்ண கூடாது என்று இசுலாமியர்களுக்குக் குர்ஆனும், கிறித்துவர்களுக்கு வேத ஆகமும் கூறுகிறது.  இயற்கை உணவு முறையினையும் இயற்கையோடு இயைந்த பழக்கவழக்கங்களையும் கடைபிடிப்பதன் மூலம் உடல்நலத்தையும் உள நலத்தையும் பாதுகாக்க முடியும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  சங்ககாலம் தொட்டு இன்றைய காலம் வரை உணவின் முக்கியத்துவத்தை நாம் நன்கு அறிவோம்.  மக்கள் பசியோடிருப்பது ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த அவமானமாகக் கருதப்பட்டதனால்தான் ‘உண்ணாவிரதம்’ என்ற போராட்ட முறையே தோன்றியது.  ஆதிமனிதன் நாடோடியாக அலைந்ததற்கும், தற்கால மனிதன் ஓரிடத்தில் நிலைத்து வாழ்வதற்கும் உணவே காரணமாகும்.  ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பர்.  நோயின்றி வாழ உண்ணும் உணவே காரணமாக அமைகிறது.
         
      சங்ககால மக்களின் உணவு வகையானது பருவச் சூழ்நிலை, வாழும் நிலத்தின் தன்மை, விளையும் பொருள்கள், பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.  அக்கால மக்களின் உணவு வகைகள் உடல் நலத்திற்கும் ஏற்றவையாக இருந்தன.  மேலும் உணவைச் சுவையுறச் சமைப்பதிலும், உண்பதிலும் அம்மக்கள் சிறந்து விளங்கினர் என்பதை இனி இக்கட்டுரையில் காண்போம்.

சமையலுக்குதேவையானஉபகரணம்
         
    நெருப்பைக் கண்டறிந்து அதைத் தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்த பிறகே சமையல் முறை சிறப்படைந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.  நெருப்பு மூட்டி சமைக்கும் அடுப்புகள் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் கூறப்படுகிறது.
 
“முடித்தலைஅடுப்பு” 
“ஆண்டலைஅணங்கடுப்பு” 
“ஆடுநனிமறந்தகோடுயர்அடுப்பு” 
“முரியடுப்பு” 
“களிபடுக்குழிசிகல்அடுப்பு”
         
      என்று பல அடுப்புகள் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.  அடுப்பு என்ற சொல்லாட்சி அக்காலத்திலிருந்தே வழக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  அடுப்புகளை விடவும் வேட்டைக்குச் செல்வோர் தீ மூட்டி இறைச்சியை வாட்டி உண்ணும் வழக்கம் இருந்திருக்கிறது.  மறவர்கள் மண்ணாலான கலங்களில் உணவைச் சமைத்துள்ளனர்.  மண்ணால் செய்யப்பட்ட அடிசில் ஆக்கும் கரிய பாண்டங்கள் உடையும்படி முயல் ஓடியது.  இதனை,
 
“பெருங்கட்குறுமுயல்கருங்கலன்உடைய
மன்றில்பாயும்”
         
     என்ற புறநானூற்று அடிகளால் அறியலாம். உலலோக பயன்பாடு குறித்து நம் முன்னோர்கள் அறிந்திருந்தும் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களுக்கே அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.  இதற்கு காரணம் மண்பாண்டத்தில் சமைப்பதால் வெப்பம் சீராக பாத்திரம் முழுவதும் பரவுகிறது.  மேலும், நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மண்பாண்டங்களுக்கு இருப்பதால் உணவு சூடாகவே இருக்கும்.  அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது.  பாத்திரம் முழுவதும் வெப்பம் மெதுவாகப் பரவுவதால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே நிலைத்திருக்கின்றன.  இதுவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதற்கு முக்கியக் காரணம்.  இக்காரணம் கருதியே நம் முன்னோர் மட்பாண்டங்ளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள் உணவு சேமித்து வைக்கும் பொருட்களின் பெயர்களையும் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளனர்.  தயிர் கொடுத்து பொன் பெற்ற தமிழர்கள் அதனைப் பாதுகாக்கும் தயிர்பானையை “குழிசி” என்று அழைத்தனர்.  தயிர்பானையின் முடைநாற்றம் தீர அப்பானையில் விளாம்பழம் இட்டு வைத்தனர் சோறு சமைக்கும் பானைக்கும் குழிசி என்று பெயர். 

🌽 சோறு சமைக்கும் பாத்திரம் “மடா” என்றும் அழைக்கப்பட்டது.

🌽 அப்பம் சுடப் பயன்படும் பாத்திரத்திற்கு “அகல்” என்று பெயர்

🌽 கள் வைக்கும் குடம் “பைங்குடம்” என்று அழைக்கப்பட்டது.

🌽 நீருண்ணும் பாத்திரம் “தொகுவாய்க்கண்ணல்” என அழைக்கப்பட்டது.

🌽 நாழிகையை அளந்து அறிய உதவும் நீர்வைக்கும் பாத்திரம் “குறுநீர்க்கன்னல்” எனப்பட்டது.

🌽 அரிசியைக் கொண்டு கள் தயாரித்தவர்கள் பயன்படுத்திய பாத்திரம் “மலர்வாய்பிழா” என அழைக்கப்பட்டது.

🌽 இரப்போர்கள் வைத்திருந்த பாத்திரம் “மண்டை” என அழைக்கப்பட்டது.  மேற்கண்ட பாத்திரங்களை பயன்படுத்தி சங்கத் தமிழர்கள் உணவு உண்டனர்.

உணவுசமைத்துஉண்டமுறை
         
      சங்கத் தமிழர் பல்வேறு சமையல் முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.  நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், நெய்யிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் போன்ற சமையல் முறைகளை இலக்கியங்களில் காணலாம்.  இறைச்சியை வேக வைத்தும் சுட்டும் தமிழர்கள் உண்டனர்.  வேக வைக்கப்பட்ட இறைச்சி வேவிறைச்சி என்றும், தீயில் வாட்டப்பட்டது சூட்டிறைச்சி என்றும் அழைக்கப்பட்டது.
         
      இக்காலத்தில் உண்பது போலவே அக்காலத்திலும் இறைச்சியை உப்புக்கண்டம் போட்டு உண்ணும் வழக்கம் இருந்தது.  இறைச்சித் துண்டங்களை இரும்புக் கம்பியில் கோர்த்து உப்பும் கருமிளகுப் பொடியும் கடுகும் சேர்த்து வாட்டி உண்டுள்ளனர்.  இறைச்சியைக் காயவைத்துப் பதப்படுத்தி வற்றலாகவும் பயன்படுத்தினர்.  பார்ப்பன மகளிர் சமையல் செய்வதில் சமத்தர்.  அக்கலையில் தமக்குள்ள திறமையில் அவர்களுக்குப் பெருமை உண்டு.  இவர்கள் நெய், பால், தயிர், மாங்காய், கொம்மட்டி மாதுளை, கீரை முதலிய காய்வகைகளை சமைத்து உண்டனர்.  மேலும் மாதுளங்காயை மிளகுப்பொடியும் கறிவேப்பிலையும் இட்டுப் பசுவெண்யெயில் பொரித்துப் பார்ப்பார் உண்டனர்.  இதனை
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்
வளைக் கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர்க்கை பறவைப் பெயர்ப்படு வத்தம்”
என்னும் பெரும்பாணாற்றுப்படை வரிகள் சுட்டுகின்றன.

இலக்கியத்தில் கள்
         
        சங்ககாலத்தில் கள் உண்ணல் ஆண்கள், பெண்கள் அனைவரிடமும் காணப்பட்டது.  கள்ளுண்டலை அக்காலத்தோர் தவறாகக் கருதவில்லை.  இதற்கான காரணம் கள்ளின் பயன் குறித்து அக்காலத்தோர் அறிந்திருக்க வேண்டும்.  தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் முக்கியத்துவம் பெறுகிறது.  பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு எனப்படும்.  சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.  காலையில் வெறும் வயிற்றில் இந்த பாலை 100 – 200 மி.லி அருந்தி வந்தால் போதும் உடல் குளிர்ச்சி பெறும்.  உடல் ஊட்டம் பெறும்.  வயிற்றுப்புண் ஆறிவிடும்.  புளிப்பேறிய கள் மயக்கம் தரும்.  அறிவை மயக்கும் ஆனால் உடல் நலத்தைக் கொடுக்கும்.  சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும்.  இக்காரணம் கருதியே அரசர்கள் வீரர்களுக்கும் தன்னை நாடி வந்த இரவலர்களுக்கும் மழைபோல் கள்ளை வழங்கினர். கபிலர் போன்ற அந்தணப் புலவர்களும் அதனைப் பாராட்டியே பேசினர்.  ஊர்களின் வளத்தினைப் பேசும்போது கள் மிகுதியையும் இணைத்துப் பேசியுள்ளனர்.  தேறலைப் புளிக்க வைப்பதற்கு அதனை மூங்கில் குழாயினுள் ஊற்றி நிலத்தில் புதைத்து வைத்தனர்.  இதனை

“நிலம்புதைப்பழுநியமட்டின்தேறல்
புல்வேய்கரம்பைக்குழதொறம்பகர்ந்து”
         
     என்ற புறநானூற்று பாடல் வழி அறியலாம்.  தென்னை, பனை மரங்களிலிருந்து இறக்கிய கள்ளைத் தவிர வீட்டிலேயே சமைத்த ஒரு வகைக் கள் ‘தோப்பி’ எனப்பட்டது.

கனிவகைஉணவுகள்
         
      மனித ஆரோக்கியத்திற்குச் சிறந்த ஆகாரமாக விளங்குபவைகளில் கனிகளும் ஒன்று.  கனிகள் இறைவன் மக்களுக்காக வழங்கிய உயர்ந்த ஆகாரம் மட்டுமல்ல மருந்தும் ஆகும்.  பெரும்பாலான கனிகளில் ஈரப்பதம் 80 சதவீதம் உள்ளது.  கனிகளை உணவாகச் சாப்பிடச் சொல்வதற்கு இதுவே காரணம் ஆகும்.  நம்முடைய ஆன்மீக வழிபாடுகளில் கனிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு.  நம் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வதாக இருந்தாலும், ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதாயிருந்தாலும், பூசை செய்யும் போது கனிகளுக்கு முதலிடம் உண்டு. பழங்காலத்தில் காடுகளில் வசித்து வந்த முனிவர்கள், சித்தர்கள் போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் காடுகளில் கிடைக்கும் கனிகளையும் சுவைமிக்க காய்களையும், மூலிகை வகைகளையும் உட்கொண்டே வாழ்க்கை நடத்தினார்கள்.  ஒரு மனிதன் வேறெந்த வகை உணவையும் உட்கொள்ளாமல் வெறும் கனிகளை மட்டுமே உட்கொண்டு உடல் நலத்தோடு வாழ்க்கை நடத்திவிட முடியும் என்று உடலியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
         
     கனிகளைச் சங்கத்தமிழர் தனியாகவும், உணவோடு சேர்த்தும் உண்டுள்ளனர்.  ஆசினிப்பழம், களாம்பழம், காரைப்பழம், துடரிப்பழம், தெங்கம்பழம், நாவற்பழம், நெல்லிக்கனி, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், பிரம்பின்கனி, பனம்பழம், புளியம்பழம் முதலிய பழங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.  அன்னாசி, கொய்யா, பப்பாளி போன்ற பழங்கள் அக்காலத்தில் இல்லை.  அயல்நாடு சென்று வந்த வணிகர் பின்னாளிலேயே இவற்றை எடுத்து வநந்தனர்.  அன்னாசி, பப்பாளி மலேசியாவிலிருந்தும், கொய்யா பெரு நாட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. காலங்களில் சிறந்தது வசந்த காலம்.  அதுபோல் கனிகளிலே சிறந்தது நெல்லிக் கனி.  மாதங்களில் சிறந்தது மார்கழி.  அந்த மார்கழி மாதத்தில் கிடைக்கும் கனியும் இதுவே.  நெல்லியை நினைத்தாலே நாவில் நீர் ஊறும்.  நெல்லிக்காய் என்பதை விட நெல்லிக்கனி என்றே அழைக்க வேண்டும்.  நெல்லிக் கனியைக் கடித்துச் சுவைக்கும்போது, முதலில் கசப்பும் புளிப்பும் கலந்த ஒரு விதத் தனிச் சுவை இருக்கும்.  அதைக் கடித்துச் சுவைத்தபின் குழந்தைகள் நீர் அருந்தி அதன் இனிப்பை இன்புறலாம்.  இதை அடிப்படையாக வைத்துத்தான்
 
     
மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும்
முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்
      என்ற பழமொழி எழுந்தது. வடநாட்டிலும் தென்னாட்டிலும் நெல்லி மரத்தை அரசமரத்திற்கு இணையாகவும், அதன் இலைகள் துளசிச் செடிக்குச் சமமாகவும் கருதப்படுகிறது.  பத்துவகையான புனித மரங்களில் நெல்லிமரமும் ஒன்றாகும்.  இந்துக்களில் முதல்நாள் “உபவாசம்” முடித்து உணவு உண்ணத் தொடங்கும் போது நெல்லிக் கனியின் சாற்றையோ, நெல்லிப் பொடியையோ மோரில் கலந்து உண்டபின்பே மற்ற பதார்த்தங்களைச் சாப்பிடத் தொடங்குவது வழக்கம்.

புலால்வகை உணவு
         
        புலால் உண்ணாமையை நீதி இலக்கியங்கள் கூறுகின்றன.  இருப்பினும் சங்ககால மக்கள் ஊன் உணவை அதிக அளவில் உண்டுள்ளனர்.  மன்னர்கள் இரவலர்களுக்குக் கொடுத்த உணவில் ஊன் உணவே முதன்மையாக இருந்துள்ளது.  சங்ககால மக்கள் விலங்குகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, கணுக்காலிகள் போன்றவற்றை உணவில் பயன்படுத்தியுள்ளனர். ஊன், புலால், புலவு, பைந்தடி, பைந்துணி, உணங்கல் எனப் பல பெயர்களால் இறைச்சி வகைகள் அழைக்கப்படுகிறது.  வெள்ளாடு, வரையாடு, செம்மறியாடு, பன்றி, மான், ஆமான், முயல் போன்ற விலங்குகளும், உடும்பு, அணில், எலி போன்ற சிறு பிராணிகளும், கோழி, காடை, காட்டுக்கோழி, புறா போன்ற பறவையினங்களும் மழைக்காலத்து ஈசல்களும் உணவாக உண்ணப்பட்டன.   ஆட்டுக்கிடாயை வெட்டி வீழ்த்தி, அதன் இறைச்சியைக் கிழித்து சூட்டுக்கோலில் கோர்த்து, சுட்டு, சூட்டிறைச்சியாகச் சமைத்துத் தெய்வங்களுக்கு இலையில் பலி இடுவதைப் போல மன்னன் இரவலர்களுக்குக் கொடுத்ததைப் புறநானூறு
 
“அவிழ் வேண்டுநர்க்கு இடைஅருளளி
விடைவீட்த்துச் சூடுகிழிப்ப”
         
என்று குறிப்பிடுகிறது.  இன்றும் கிராமப்பறங்களில் கருப்பனார் முதலிய தெய்வங்களுக்கு ஆட்டிறைச்சியின் ஈரல் முதலியவற்றைச் சுட்டு படைத்து வழிபடுகின்றனர்.  இதனைச் ‘சுடுவான்பூசை’ என்றும் அழைக்கின்றனர். மருதநில உழவர்கள் தம் உழைப்பால் பெற்ற வெண்மையான நெற்சோற்றோடு கோழிப்பெடைப் பொரியலை உண்ணக் கொடுப்பர் என்பதை
 
“வினைஞர்தந்த வெண்ணெல் வல்சி
மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்”
         
      என்ற பெரும்பாணாற்றுப்படை அடிகள் மூலம் அறியலாம்.  கோழியை வீட்டில் வளர்த்தனர்.  விருந்தினர் வந்தால் அக்கோழி விருந்தினருக்கு உணவாகக் கொடுக்கப்பட்டது.  இன்றும் கிராமப்புறங்களில் வாழ்வோர் விருந்தினர் வந்தால் வீட்டிலிருக்கும் கோழியைச் சமைத்து உண்ணக்கொடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரவவகைஉணவுகள்         
       அக்காலத்தோர் திரவ வகை உணவுகளில் முதன்மையானது கூழும், கஞ்சியுமாகும்.  அதிக அளவில் நீர் கலந்து சோறு கரையும் அளவிற்கு வேக வைக்கப்பட்ட உணவு கஞ்சி எனப்பட்டது.  அரிசி, வரகு, கேப்பை, கம்பு போன்ற தானியங்களைக் கொண்டு கூழ் ஆக்கப்பட்டது.  சங்ககால மக்கள் தானிய வகை உணவுகள், பழங்கள், விலங்கு வகை உணவுகளோடு திவர வகை உணவுகளையும் விரும்பி உண்டனர்.  இவர்களின் உணவு முறைகளில் கள், பால், தயிர், மோர், போன்ற திரவங்கள் இடம் பெற்றன.  பால், மோர் போன்ற திரவங்கள் உடல் குளிர்ச்சிக்காகவும், கள் போதைக்காகவும் பயன்படுத்தப்பட்டது.  கள்ளை தென்னை மரங்களில் இருந்தும் பனை மரங்களில் இருந்தும் தயாரித்தனர்.
         
     பால் உணவைத் தவிர்க்கும் போது உடல் வலிமை குன்றத் தொடங்கும், உடல்நலம் கெடத் தொடங்கும்.  பால் இன்றிப் பிற உணவை மட்டும் உண்போர் பல்வகை நோய்களுக்கும் இலக்காகி விரைவில் மடிவர் என்பது உண்மை.  பால் ஒரு மிகச்சிறந்த உணவுப் பொருள்.  அன்று முதல் இன்று வரை பால் உண்ணப்பட்டு வருகிறது.  ஆட்டுப்பால், பசும்பால், எருமைப்பால் முதலியவை இன்று உண்ணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பால் குறித்த குறிப்புகள் வெளிப்படுகின்றது.  பால் என்பது சங்க காலத்தில் இருந்தே மக்களின் பயன்பாட்டில் உள்ளதாக நற்றிணைப் பாடல் ஒன்று சான்று பகர்கிறது.

“பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர் பொற்கலந்து ருகை
புடைப்பிற் கற்றும் பூந்தலைச் சிறுகோல்
முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பு தத்துற்று”
         
     என்ற பாடல் வரிகளில் “நம் ஊவலை மறுத்து பாலுணவையும் மறுத்து விளையாடும் பண்புடையவள் நம் மகள்.  அப்படிப்பட்ட நம் மகள் இன்று கணவனின் ஏவலுக்கு ஏற்ப நடப்பதற்குத் தக்க அறிவும், ஒழுக்கத்தையும் எவ்வாறு பொற்றாள்?” என்று நற்றாய் வியப்படைவதாகக் கூறப்பட்டுள்ளது.  ஆகவே, அக்காலத்தில் பிள்ளைகளுக்குப் பாலுணவு வழங்கும் வழக்கம் இருப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

முடிவுரை
         
       சங்ககால மக்கள் சமைப்பதற்கு மண்ணால் செய்யப்பட்ட அடிசில்களை பயன்படுத்தினர்.  உணவை சுட்டும், பொறித்தும், பதப்படுத்தியும் உண்டனர்.  கள், பால், மோர், தயிர், நீர் ஆகிய திரவவகை உணவுகளையும், மா, பலா, வாழை, நெல்லி போன்ற பழங்களையும் உண்டுள்ளனர்.  அவர்களின் வாழ்வில் புலால் வகை உணவு முக்கிய பங்கு வகித்திருந்தது.  மன்னர்கள் இரவலர்களுக்குக் கொடுத்த உணவில் ஊன் உணவே முதன்மையாக இருந்துள்ளது.  சங்க காலத்தில் உணவு வழக்கத்தில் அசைவ உணவும் மிக மிக இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளதை நன்கு அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்
1.அரசு. ஏ. டி, பிணிகளை வெல்லும் கனிகள், பார்வதி கண்ணதாசன் பதிப்பகம், 23 கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை – 600017.

2.அவ்வை துரைசாமிப்பிள்ளை, நற்றிணை, அய்யனார் பதிப்பகம், எண். 4/87, 6 வது தெரு, வினாயகபுரம், காரணை புதுச்சேரி, கூடுவாஞ்சேரி – 603 202.

3.நாகராசன். வி, பத்துப்பாட்டு, நியூ செஞ்சுரி புக் ஹஸ் (பி) லிட், 41 – பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600098.

4.நாகராசன் . வி,  புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹஸ் (பி) லிட், 41 – பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600098.

5.மாணிக்கம். அ, அறிஞர் அண்ணா நூற்பதிப்புக் கழகம், 48/1, தென்மேற்கு போக் சாலை, தியாகராய நகர், சென்னை – 600017.  

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

Iniyavaikatral_Article_Publishedது. ராஜகுமாரி, எம்.ஏ., எம்.ஃபில்.,
தமிழ்த்துறை

பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்

கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி

திருவண்ணாலை – 606 603.

ஆய்வுநெறியாளர்
முனைவர்ந. குப்புசாமி
தமிழ்த்துறைத்தலைவர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here