Monday, July 7, 2025
Home Blog Page 11

நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்

நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்
      தமிழர்களின் இந்து சமயக் கோவில்களில் நவகிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நவகிரகங்களைத் தமிழில் கோள்கள் என்கிறோம். ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கிற ஒன்றாக நவகிரகங்கள் அமைந்துள்ளன. வாழ்க்கையில் ஏற்படும் சுக-துக்கங்கள், ஏற்ற-இறக்கங்கள், தடங்கல்கள்-தடைகள், சிக்கல்கள் -ஆபத்துகள் எனச் சகல நிகழ்வுகளையும் இந்த நவகிரகங்களே தீர்மானிக்கின்றன.  ஒருவரது முன்வினைப் பயன்களைப் பொறுத்தே நவகிரகங்கள் அவரவர் வாழ்க்கையில் பின்தொடர்கிறது. நவகிரகங்கள் ஒருவரது வாழ்வில் விதியை தீர்மானிக்கும் காரணியாக விளங்குகிறது. இந்த நவகிரகங்களே நமக்கு வருகின்ற பிரச்னைகளுக்கான தீர்வையும், வழியையும் காட்டுகிறது.

1.சூரியன் (ஞாயிறு)
காசியப முனிவரின் குமாரர்.
ஒளிப்பிழம்பானவர்.
நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.

சிம்மராசிக்கு அதிபதி.
நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.

மனைவி – சாயா, சரண்யா

திக்கு – கிழக்கு

அதிதேவதை – அக்னி
ப்ரத்யதி
தேவதை – ருத்திரன்

தலம் –  சூரியனார் கோவில்

நிறம் – சிவப்பு

வாகனம் – ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்

தானியம் – கோதுமை

மலர் – செந்தாமரை , எருக்கு

வஸ்திரம் – சிவப்பு

ரத்தினம் – மாணிக்கம்

அன்னம் – கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்
2.சந்திரன் (திங்கள்)
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர்.
வளர்பிறையில் சுபராகவும்,
தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.

மனைவி – ரோகிணி

கடக ராசிக்கு அதிபதி.

திக்கு -தென்கிழக்கு

அதிதேவதை – ஜலம்
ப்ரத்யதி
தேவதை – கௌரி

தலம் – திருப்பதி

நிறம் – வெள்ளை

வாகனம் – வெள்ளைக் குதிரை

தானியம் – நெல்

மலர் – வெள்ளை அரளி

வஸ்திரம் – வெள்ளாடை

ரத்தினம் – முத்து

அன்னம் – தயிர் சாதம்

3.அங்காரகன் (செவ்வாய்)
இவர் வீரபத்திரர் அம்சம்.
சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர்,

பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம்,
விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.

மனைவி –  சக்தி தேவி

திக்கு -தெற்கு

அதிதேவதை – நிலமகள்
ப்ரத்யதி
தேவதை – க்ஷேத்திரபாலகர்

தலம் – வைத்தீசுவரன் கோவில்

நிறம் – சிவப்பு

வாகனம் – ஆட்டுக்கிடா

தானியம் – துவரை

மலர் – செண்பகப்பூ, சிவப்பு அரளி

வஸ்திரம் – சிவப்பு ஆடை

ரத்தினம் – பவளம்

அன்னம் – துவரம் பருப்பு பொடி சாதம்
4.புதன் (அறிவன்)
இவர் சந்திரனுடைய குமாரர்.
தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.

மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி

மனைவி – இலா

திக்கு – வட கிழக்கு

அதிதேவதை – விஷ்ணு
ப்ரத்யதி
தேவதை – நாராயணன்

தலம் – மதுரை

நிறம் – வெளிர் பச்சை

வாகனம் – குதிரை

தானியம் – பச்சைப் பயறு

மலர் – வெண்காந்தள்

வஸ்திரம் – வெண்ணிற ஆடை

ரத்தினம் – மரகதம்

அன்னம் – பாசிப்பருப்பு பொடி சாதம்

5.குரு (வியாழன்)
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர்.

இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.

மனைவி – தாரா

திக்கு – வடக்கு

அதிதேவதை – பிரம்மா
ப்ரத்யதி
தேவதை – இந்திரன்

தலம் – திருச்செந்தூர்

நிறம் – மஞ்சள்

வாகனம் – மீனம்

தானியம் – கடலை

வஸ்திரம் – மஞ்சள் நிற ஆடை

ரத்தினம் – புஷ்பராகம்

அன்னம் – கடலைப் பொடி சாதம் , சுண்டல்.

6.சுக்கிரன் (வெள்ளி)
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர்.
சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.

மனைவி – சுகிர்தி மற்றும் உர்ஜஸ்வதி    

திக்கு – கிழக்கு

அதிதேவதை – இந்திராணி
ப்ரத்யதி
தேவதை – இந்திர மருத்துவன்

தலம் – ஸ்ரீரங்கம்

வாகனம் – முதலை

தானியம் – மொச்சை

மலர் – வெண் தாமரை

வஸ்திரம் – வெள்ளாடை

ரத்தினம் – வைரம்

அன்னம் – மொச்சைப் பொடி சாதம் .

7.சனி
இவர் சூரியனுடைய குமாரர்.
பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர்.

சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.

மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.

மனைவி – நீலாவதி

திக்கு – மேற்கு

அதிதேவதை – யமன்
ப்ரத்யதி
தேவதை – பிரஜாபதி

தலம் – திருநள்ளாறு

நிறம் – கருமை
வாகனம் – காகம்

தானியம் – எள்

மலர் – கருங்குவளை, வன்னி

வஸ்திரம் – கருப்பு நிற ஆடை

ரத்தினம் – நீலம்

அன்னம் – எள்ளுப்பொடி சாதம்

8.ராகு

இவர் அசுரத்தலையும், நாக உடலும் உடையவர்.

மிக்க வீரம் உடையவர்.

கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.

மனைவி – சிம்ஹி

திக்கு – தென் மேற்கு

அதிதேவதை – பசு
ப்ரத்யதி
தேவதை – பாம்பு

தலம் – காளத்தி

நிறம் – கருமை

வாகனம் – நீல சிம்மம்

தானியம் – உளுந்து

மலர் – மந்தாரை

வஸ்திரம் – கருப்பு நிற ஆடை

ரத்தினம் – கோமேதகம்

அன்னம் – உளுத்தம் பருப்புப்பொடி சாதம்

9.கேது
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர்.

சிகி என்றும், செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.

மனைவி – சித்திரலேகா

திக்கு – வட மேற்கு

அதிதேவதை – சித்திரகுப்தன்
ப்ரத்யதி
தேவதை – பிரமன்

தலம் – காளத்தி

நிறம் – செம்மை

வாகனம் – கழுகு

தானியம் – கொள்ளு

மலர் – செவ்வல்லி

வஸ்திரம் – பல நிற ஆடை

ரத்தினம் – வைடூரியம்

அன்னம் – கொள்ளுப்பொடி சாதம்

நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகள்
🎯காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்.

🎯வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.

🎯தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.

🎯கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.

🎯கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.

🎯வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

🎯தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

🎯வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

🎯பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால், வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.
🎯16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.

🎯பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.

🎯அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

🎯சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.

🎯இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.

🎯வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.

மேற்கண்ட செய்திகள் அனைத்தும் புலனக்குழுவில் வெளிவந்தவைகள்

 

அடிக்குறிப்புகள் என்றால் என்ன? நோக்கமும் பயனும் யாது?

அடிக்குறிப்புகள் என்றால் என்ன நோக்கமும் பயனும் யாது
ஆய்வுரையில் நேரடியாகச் சேர்க்க வாய்ப்பு இல்லாதனவாய் ஆய்வுரைக்குத் தொடர்புடையனவாய்ச் சில செய்திகள் ஆய்வுரையில் இடையிடையே வருவது படிப்போட்டத்தைத் தடைப்படுத்துவதாக அமையும். ஆதலால் அப்படிப்பட்ட செய்திகளை அங்கே சேர்க்காமல் தொடர்புடைய இடத்தில் எண் இட்டுவிட்டு அந்த எண்ணுக்கு உரிய விளக்கமாக வேறு ஒரு இடத்தில் தரப்படும் குறிப்புகளை அடிக்குறிப்புகள் என்கிறோம். இந்த அடிக்குறிப்பைக் குறிப்பு என்றும் சொல்லுவது உண்டு.

அடிக்குறிப்பின் வேறுபெயர்கள்
               
அடிக்குறிப்பு வழக்கமாக ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் தரப்பட்டிருக்கும். அப்படித் தரப்பட்ட காலத்தில் அதற்கு அடிக்குறிப்பு என்று பெயர் தரப்பட்டது. ஒவ்வொரு இயலுக்கும் இறுதியில் அடிக்குறிப்பை அமைப்பது உண்டு. அப்படி அடிக்குறிப்பு இயலின் இறுதியில் அமைந்த போதும் அடிக்குறிப்பு என்ற பெயரே நிலைத்துவிட்டது. நூலின் இறுதியில் ஒவ்வொரு இயலுக்கும் வரிசையாக அடிக்குறிப்புகளைத் தருவதும் உண்டு. அப்படித் தரும் பொழுது கூட அடிக்குறிப்பு என்ற பழைய பெயரே நிலைத்து விட்டது. அடிக்குறிப்பு என்ற பெயருக்குப் பதிலாக
குறிப்பு என்ற சொல்லையும் இறுதிக் குறிப்பு என்ற சொல்லையுங்கூடப் பயன் படுத்துவ துண்டு. அடிக்குறிப்பு என்ற குறியீடே எல்லோருக்கும் தெரிந்த பெரும்பான்மை வழக்காக விளங்கி வருகிறது.

அடிக்குறிப்பின் வகைகள்
               
மேலே நாம் எடுத்துப் பேசிய அடிக்குறிப்பு இரண்டு வகையில் அமையும். முதலாவது, இங்கே தரப்பட்டுள்ள இந்த மேற்கோள் அல்லது இந்தக் கருத்து இன்ன நூலில் இன்ன பக்கத்தில் அமைந்திருக்கிறது என்ற பாங்கில் தரப்படுகின்ற அடிக்குறிப்பு. இந்த அடிக்குறிப்பைப் பார்வை அடிக்குறிப்பு குறிப்பிடுவார்கள். பார்வை என்று அடிக்குறிப்பு எப்பொழுதும், ‘காண்க, இன்னாரின் இன்ன நூலில் இன்ன ‘பக்கம்’ என்ற வாய்பாட்டில் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட அடிக்குறிப்புகள் யாவும் இன்ன நூலைப் பார்க்க வேண்டும் என்ற போக்கில் அமைந்திருப்பதனால் இதனைப் பார்வை அடிக்குறிப்பு என்று குறிப்பிடுவார்கள். இப்படியில்லாமல் ஆய்வில் பேசப்படுகின்ற செய்திகளுக்கு ஒரு வகையில் தொடர்பானதாகவும் ஆனால் ஆய்வுரையில் அப்படியே தருவதற்கு வாய்ப்பளிக்காததாகவும் சில செய்திகள் அமைவது உண்டு. அப்படிப்பட்ட செய்திகளை அடிக் குறிப்பில் தரும்போது அதைச் செய்தி அடிக்குறிப்பு என்று குறிப்பிடுகிறோம். அத்தகைய செய்திகளை அடிக்குறிப்பு எண்ணிட்டு வேறு ஒரு இடத்தில் அடிக்குறிப்பாகத் தருவதே வழக்கம்.
               
ஆகவே ஆய்வுரைக்கு அமைகின்ற அடிக் குறிப்புகளில் பார்வை அடிக்குறிப்புகளும் உண்டு, செய்தி அடிக்குறிப்புகளும் உண்டு. கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியம் என்ற இலக்கணத்தில் இந்தச் செய்தி வலியுறுத்தப்படுகிறது என்று ஆய்வுரையில் ஒரு தொடர் அமைவதாக வைத்துக் கொள்வோம். அந்தத் தொடரின் இறுதியில் ஒரு அடிக்குறிப்பு எண் இட்டுத் தொல்காப்பியருடைய காலத்தைப்பற்றிய  ஒரு செய்தியைத் தருவதாக வைத்துக் கொள்வோம். அப்படிப் பட்ட அடிக்குறிப்புகளை நாம் செய்தி அடிக்குறிப்பு என்று சொல்லுகிறோம். அந்தச் செய்தி அடிக்குறிப்பில் அமைகின்ற செய்தி பின்வருமாறு அமையும். “தொல்காப்பியருடைய காலத்தைப் பல்வேறு வகையில் பலர் குறிப்பிட முற்பட்டாலும் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்பது எல்லோருக்கும் இசைவான ஒரு கால கட்டமாக அமைவதனால் தொல்காப்பியர் காலத்தை இந்த ஆய்வாளர் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்றே கொண்டு ஆய்வை நிகழ்த்துகிறார்” என்று இந்தப் போக்கில் அடிக்குறிப்பு அமையலாம். இப்படிப்பட்ட அடிக்குறிப்புகளைச் செய்தி அடிக்குறிப்பு என்று குறிப்பிடுகிறோம்.

அடிக்குறிப்பு நோக்கம்
               
அடிக்குறிப்புகளை நாம் ஏன் தருகிறோம்? இன்றியமையாத சில இடங்களில் நாம் குறிப்பிடுகின்ற செய்திக்கு மூலம் அல்லது சான்று எங்கே இருக்கிறது என்பதை வாசிப்பாளர்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டியது ஆய்வாளரின் கடமையாகும். அப்படிச் சுட்டிக்காட்டும் பொழுதுதான் பார்வை அடிக்குறிப்பு அங்கே வந்து இடம் பெறுகிறது. பார்வை அடிக்குறிப்புகளைத் தருவதன் நோக்கம் நாம் சொல்லுகின்ற செய்திகள் சான்றுகளைக் கொண்ட செய்திகள் சரியான செய்திகள் என்பதை உறுதிப்படுத்துவதுதான். இந்தச் செய்தியை ஆய்வுரையிலேயே தராமல் வேறு இடத்தில் தருவதற்குரிய காரணம் படிப்போட்டம் தடைப்படக் கூடாது என்பதே. செய்தி அடிக்குறிப்பை வேறு இடத்தில் தருவதற்குரிய காரணமும் படிப்போட்டம் தடைப்படக்கூடாது என்பதுதான். அன்றியும் ஒருவகையான இடைப்பிறவரல் போல அந்தச் செய்தி அடிக்குறிப்பு அமைந்திருப்பதனால் அதனை நாம் வேறு இடத்தில் தருகிறோம். அந்த அடிக்குறிப்பைத் தராமலேயே போயிருந்தால் வாசிப்பாளர்களுக்கு ஏற்படுகின்ற ஐயங்களுக்கு அல்லது கேள்விகளுக்கு விடையில்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட ஐயங்களுக்கும் வினாக் களுக்கும் விடை கூறுமுகத்தான் அமைவதுதான் இந்தச் செய்தி அடிக்குறிப்பு என்பது.

அடிக்குறிப்பின் பயன்
               
இப்படி அடிக்குறிப்புகளை அமைத்துக் கொள்வதனால் படிப்போட்டம் சீராக அமைகிறது: ஆய்வாளன் தன் கருத்துகளுக்குரிய சான்றுகளைத் தெளிவாகத் தர வாய்ப்பு ஏற்படுகிறது. செய்தி அடிக்குறிப்புகளைத் தருவதன் மூலம் வாசிப்பாளர்களுக்கு ஏற்படுகின்ற ஐயங்களுக்கு நாமே முன்னறிந்து ஆங்காங்கே விடை சொல்ல முடிகிறது. இத்தகைய பயன்பாடுகளை மனத்தில் கொண்டுதான் அடிக்குறிப்புக்கு நாம் இடம் தருகிறோம். இந்த அடிக் குறிப்புகள் எப்பொழுதும் ஆய்வுரையில் இடையிடையே இடம் பெறக்கூடாது. அங்கே அடிக் குறிப்புக்குரிய எண்கள் மட்டுமே தரப்படும். அடிக்குறிப்புகள் இயலின் இறுதியில் அல்லது நூலின் இறுதியில் இடம் பெறலாம். அடிக்குறிப்பை அந்தந்தப் பக்கத்தின் அடியிலும் தரலாம். எனினும் இன்று நாம் நடைமுறை வசதிக்கேற்ப இயலின் இறுதியில் அடிக் குறிப்புகளைத் தருவது நல்லது என்று கொள்ளுகிறோம். ஆய்வுரையை எழுதி முடித்த பிறகு தட்டச்சு செய்யும் பொழுதும், தட்டச்சு செய்யப்பெற்ற ஆய்வேட்டைப் பின்பு ஒரு காலத்தில் அச்சுக்குக் கொடுக்கும் பொழுதும் இந்த முறை வசதியாக இருக்கும். அந்தந்தப் பக்கத்தில் அடிக்குறிப்பிட்டால் அது தொல்லையாக முடியும். ஆகவே ஒவ்வொரு இயலின் இறுதியிலும் அந்தந்த இயலுக்குரிய அடிக்குறிப்புகளைத் தருவது வரவேற்கத் தக்கது.

அகச்சுட்டு
               
ஒரு அடிக்குறிப்புகளைத் தரும்போது சில சூழல்களில் இயலில் ஏழாவது அடிக்குறிப்பு மூன்றாவது அடிக்குறிப்பைப் போலவே இருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் ஏழாவது அடிக்குறிப்பை எழுதும்போது ‘காண்க குறிப்பு – மூன்று’ என்று குறிப்பிட வேண்டும். திரும்பவும் மூன்றாவது அடிக்குறிப்பை அங்கே எழுதத் தேவையில்லை. இப்படி ஒரு நூலில் அல்லது ஒரு இயலில் அகத்தே உள்ள பகுதியைச் சுட்டுகின்ற அடிக்குறிப்புகளை அகச்சுட்டு அடிக்குறிப்பு என்று குறிப்பிடலாம். இப்படி வரும் அகச்சுட்டு அடிக்குறிப்புகளில் நான்காவது அடிக்குறிப்பும் ஐந்தாவது அடிக்குறிப்பும் ஒன்று போல அமைய வேண்டும் என்றால் நான்காவது அடிக்குறிப்பை விளக்கமாக எழுதிவிட்டு ஐந்தாவது அடிக்குறிப்புப் பகுதியில் ‘காண்க மேலது’ என்று எழுதினால் போதும்.
அடிக்குறிப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்
             
 அடிக்குறிப்புகளை எழுதும் போது எதிர்பாராத வகையில் சில சிக்கல்கள் தோன்றக்கூடும். அந்தச் சிக்கல்களுக்கெல்லாம் ஆய்வாளர்தான் இடத்திற்கு ஏற்றபடி தீர்வுகளைக் காண வேண்டும். எடுத்துக்காட்டாக ஒன்றைச சொன்னால் பத்துப்பக்கக் கட்டுரையில் இருநூறுக்கு மேற்பட்ட அடிக்குறிப்புகள் வருகின்றன என்று வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட சூழலில் பத்துப் பக்கக் கட்டுரைக்கு இருநூறுக்கு மேற்பட்ட அடிக்குறிப்புகளை அமைப்பது எந்த விதத்திலும் வரவேற்கத்தக்கது அல்ல. அத்தகைய சூழலில் ஏதாவது ஒரு உத்தியைக் குறைத்தாக வேண்டும். அடிக் குறிப்புக்கு உரிய எண்களை கையாண்டு அந்த அடிக்குறிப்புகளின் எண்ணிக்கையைக் இடும் பொழுது ஒரு தொடர் முற்றுப் பெற்ற நிலையில் அந்த தொடரின் இறுதியில் அடிக்குறிப்பு எண்ணைத் தருதல் வேண்டும். இடையிடையே ஒரே தொடரில் இரண்டு மூன்று இடங்களில் அடிக்குறிப்பு எண்களைத் தருவது வரவேற்கத் தக்கது அல்ல. இத்தகைய சிக்கல்கள் ஏற்படும் பொழுதெல்லாம் ஆய்வாளன் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப விழிப்பாக இருந்து தீர்வுகளைக் காண வேண்டும்.  

அடிக்குறிப்பில் எண்களும் அடையாளங்களும்
               
அடிக்குறிப்பை அமைக்க வேண்டிய நேரத்தில் ஆய்வுரைப் பகுதியில் அடிக்குறிப்புக்குரிய எண்களைத் தருகிறோம். எண்களுக்குப் பதிலாகச் சிலுவைக்குறி, உடுக்குறி போலச் சில அடையாளங்களையும் ஆண்டுகளுக்கு முன்பு வழங்கி வந்தனர். எண்களுக்குப் பதில் அடையாளங்களை இடுவது ஒரு பழைய வழக்கம். இந்த வழக்கம் இப்பொழுது வரவேற்கத் தக்கதாக இல்லை. எண்கள் இடுவதே முறையானது. எளிதானது. எண்களைக் கொடுக்கும் பொழுது ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒன்று, இரண்டு, மூன்று என்று புதிது புதிதாக எண்களைத் தந்து வந்தனர். அப்படித் தருவது தான். இயலின் இறுதியில் அடிக்குறிப்பு அமையுமானால் அந்தந்தப் பக்கத்தில் அடிக்குறிப்பு அமையும் பொழுது எண் இடுதல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட இயலில் ஒரு இயலுக்குரிய எல்லா அடிக்குறிப்புகளுக்கும் தொடர் பதினைந்து அடிக்குறிப்புகள் வருவதாக வைத்துக் கொள்வோம். முதல் பதினைந்து வரை தொடர்ச்சியாக அடிக் குறிப்புக்கு எண்கள் தரவேண்டும். இயலின் இறுதியில் பதினைந்து அடிக்குறிப்புகளையும் விளக்கமாக எழுதவேண்டும்.

சில சிறப்புக் குறிப்புகள்
               
அடிக்குறிப்புகளை எழுதும்போது ஒரு அடிக்குறிப்பே ஒரு பக்கம் இரண்டு பக்கம் என்று போய்விடக் கூடாது.  அப்படி ஒரு அடிக்குறிப்பை மிக நீளமாக நீண்ட நிலையில் எழுதுவது வரவேற்கத்தக்கது அல்ல. பார்வை குறிப்புகளை எழுதும்போது ‘காண்க, இன்னாரின் இன்ன நூல், இன்ன பக்கம்’ என்று எழுதுவது மரபு. என்பதை விட்டுவிட்டு இன்னாரின் இன்ன நூல் இன்ன பக்கம் என்றே பலரும் எழுதுவர். அப்படி எழுதினாலும் அதற்குரிய பொருள் காண்க இன்னாரின் இன்ன நூல் இன்ன பக்கம் என்பதுதான். இப்படிக் காண்க காண்க என்று எழுதுவது சலிப்பூட்டுவதாகத் தோன்றுமானால் மேலும் விளக்கங்களுக்குக் காண்க இன்னாரின், இன்ன நூல், இன்ன பக்கம் என்ற வாய்ப்பாட்டில் பார்வை அடிக்குறிப்பை அமைக்கலாம். வேறு சில இடங்களில் இது பற்றிய முழு விவரங்களுக்குக் காண்க இன்னாரின் இன்ன நூல், இன்ன பக்கம்’ என்ற வாய்ப்பாட்டில் அந்த அடிக்குறிப்பை அமைக்கலாம். இப்படியெல்லாம் அழகியல் நோக்கில் ஆய்வாளன் தேவையான சீர்திருத்தங்களை ஆங்காங்கே ஆய்வுரையில் அமைத்துக் ஆய்வேட்டை உருவாக்கி வழங்கும்போது ஆய்வாளனுக்கு அழகியல் உணர்ச்சியும் வேண்டும். அடிக்குறிப்புகள் ஆய்வாளனுக்கு உதவியாக அழகுபடுத்தவும் கொள்ளலாம்.  அமைவன: ஆய்வுரையை சிறப்பிக்கவும் செம்மையாக்கவும் அடிக்குறிப்புகள் உதவுகின்றன. அடிக்குறிப்புகள் எல்லா ஆய்வுரைக்கும் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்னும் நியதி ஒன்றும் இல்லை. தேவைப்படாமல் போனால் அது ஒரு பெரிய குறையாக ஒருகால் அடிக்குறிப்பே ஆகிவிடாது. ஆனால் இயல்பாக அடிக்குறிப்புகள் ஆய்வுக்குத் தேவைப்படும்.

கட்டுரையின் ஆசிரியர்
டாக்டர் பொற்கோ
பொன்.கோதண்டராமன்
ஐந்திணைப் பதிப்பகம்
சென்னை – 600 005.

 

சாகித்திய விருது பெற்ற தமிழ்நூல்கள்

சாகித்திய விருது பெற்ற தமிழ் நூல்கள்

சாகித்திய விருது பெற்ற தமிழ் நூல்கள்

உங்கள் தேசத்தில் பிச்சைக்காரர்கள் – முனைவர் நா.சாரதாமணி

உங்கள் தேசத்தில் பிச்சைக்காரர்கள் - முனைவர் நா.சாரதாமணி

      நீங்கள் பிறந்துள்ள இந்தத் தேசத்தில் அநேகமான செல்வங்களும் கனிமங்களும் உள்ளன. இது ஒரு தன்னிறைவு பெற்ற சிறப்பான நாடு. அவ்வாறு இருக்கின்றபொழுது ஏன் பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள நாடாக விளங்குகின்றது. இந்த நிலையின்மீது கவனம் செலுத்தி மாற்றுபவர் யார்? உங்கள் வீட்டிலுள்ள நபர்களில் யாரேனும் ஒருவர் உணவு இல்லாமல் பட்டினியாக இருந்தால் உங்களால் அதனை பார்த்தும் பாராதவாறு இருக்க இயலுமா? பசியைப் போக்கும் பொறுப்பு உங்களது அல்லவா!
  
         இதனைப் போலவே இந்தத் தேசமும். இங்கு ஒருவன் பசிக்காக மற்றவரிடம் கையேந்துகின்றான் என்றால் இந்நாட்டில் உள்ள அனைவரும் வெட்கப்பட வேண்டும். அவ்வாறு கையேந்தி பிச்சை கேட்பவரின் உழைப்பை ஆக்கத்தை ஆக்கிரமித்தவர் யார்? குழந்தைகள், இளையவயது உடையவர், வயதானவர் என்று வயதில் பாரபட்சமில்லாமல் பிச்சை எடுக்கின்றனர். உறவினர் அல்லாதவர், உடல் ஊனமுற்றவர், நடக்க இயலாத நோயுற்ற முதியவர் என்று இவர்களுக்கு ஆதரவு தந்து உணவு கொடுத்துப் பாதுகாக்க நமது நாட்டில் இடம் இல்லையா? அல்லது நாடு பஞ்சத்தில் உள்ளதா? சிந்தனை செய்யுங்கள்!

       நான் கேட்ட கைபேசியில் செய்தி ஒன்று, ஒரு தாய்க்கு மூன்று பிள்ளைகள். ஏழ்மையான குடும்பம். அந்த ஏழைத்தாய் தான்பட்டினி இருந்து தன்குழந்தைகளை நன்றாக வளர்த்துத் திருமணமும் செய்து கொடுத்தார். வருடங்கள் சென்றன. பேரன் பேத்திகள் என்று வந்து விட்டனர். இந்த ஏழை தாய்க்கும் வயதாகிவிட்டது. அந்த வயதான தாயாரை யார் பார்த்துக்கொள்வது? என்னால் முடியாது. அவள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒவ்வொரு மகளும் போட்டிப்போட அந்தத்தாய் வீட்டை விட்டுத் தெருவுக்கு பிச்சை எடுப்பதற்காக வந்துவிட்டாள்.

நல்லதோர் வீணை
      
மனிதப்பிறப்பு என்பது நல்ல அழகான வீணையாகும். இந்தப் பூமியில் எத்தனையோ உயிர்கள் பிறப்பெடுத்துள்ளன.  ஆனால் நாம் மட்டுமே மனிதனாகத் தோற்றம் பெற்றுள்ளோம். இந்த மனித உடலையும் உயிரையும் கொண்டு ஆயிரமாயிரம் ஆக்கங்களை விளைவிக்கலாம் என்று பாரதியார் கூறியுள்ளார்.

“நல்லதோர் வீணை செய்தே – அதை
நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டிய படிசெல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் – சிவ
சக்தியைப் பாடும் நல்அகம் கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ”
  
      என்று சிவசக்தியைப் பார்த்துக் கேட்கின்றார் பாரதி. இந்த மனிதப்பிறப்பில் நாம் வாழும் சமூகத்தில் யாசிக்கும் நிலையில் மனிதர்களுக்காகச் செய்வன ஆயிரம் உள்ளன. அவர்களுக்காகப் பொருளைப் பெற்றுத்தருவது போன்ற பல கடமைகள் உள்ளன. அவற்றை எல்லாம் விடுத்து இந்த மனிதப்பிறவியை வீணாக்காதீர்! சிந்தனை செய்யுங்கள்!!
தன்உயிரை தானமாக்கி; வேண்டுதல் வைத்த இளைஞர் (உண்மை நிகழ்வு)
  
   இளைஞர் ஒருவர் நன்றாகப் படித்துத் தனக்கு ஒருவேலை வேண்டும் என்று அயராது பாடுபட்டார். இரவுபகல் பாராமல் படித்தார். ஆனால் அவர் படிப்பை முடித்துத் பத்து வருடங்களாக வேலை இல்லாமல் மன வேதனைக்கு உள்ளனார். பின்னர் தனது முப்பத்திரெண்டாவது வயதில் இறைவனிடம் சென்று வேண்டிக்கொண்டார். எனக்கு அரசாங்க வங்கியில் வேலை ஒன்று கிடைத்து விட்டால் என் உயிரையே உனக்கு தருகின்றேன் என்று வேண்டிக்கொண்டார். பின்னர் தேர்வுகள் எழுதி ஆறு மாதத்தில் அவருக்கு மும்பையில் ஒரு வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜர் (உதவி மேலாளர்) பதவி கிடைத்துவிட்டது. மிகவும் மகிழ்ச்சி அடைந்த அந்த இளைஞர் மும்பை சென்று வேலையில் சேர்ந்துவிட்டார். சேர்ந்து பதினைந்து நாட்கள் சென்றன. இறைவனுக்கு கொடுத்த வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நாளும் தோன்றிக்கொண்டே இருந்தது. அதனால், ஓடிவரும் ரயிலின் முன்னே பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அவர் நாகர்கோவிலைச் சார்ந்தவர். இந்தச் செய்தியை வீடியோவாகப் பார்த்தவுடன் மனம் மிகவும் சங்கடப்பட்டது.
        
ஒரு மேலாளர்  பதவி வகிக்கும்  தகுதியுடைய ஒருவர் இவ்வாறு செய்து கொள்வது சாதாரண ஒன்றாக எடுத்துக்கொள்ள இயலாது. மனிதர்களுக்கு தகுந்தவேலை கிடைக்கவில்லை என்றால் மனவேதனை இருக்கலாம். ஆனால் மனஅழுத்தம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாமோ என்னவோ! ஒரு இளைஞர் இவ்வாறு நடந்து கொள்வதற்கு அதற்கு காரணங்களாகப் பலவற்றைக் கூறலாம். அவரை வளர்த்த பெற்றோர்கள், கல்வியைக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், முரணாகப் பேசும் உறவினர்கள், சமுதாயம் இவற்றையெல்லாம் கூறலாம். இவை அந்த இளைஞர்களுக்கு வாழ்வில் சவால்களைத் தன்னம்பிக்கையை தரவில்லையா? அல்லது முன்னேறவிடாமல் இளைஞர்களைத் தடுக்கும் சக்தி ஏதேனும் செயல்படுகிறதா? மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு நம் சமுதாயத்தில் இடமில்லையா? யோசியுங்கள்!

தந்தையை தெருவில் விட்ட அவலம்
       
தான்மேலே ஏறி வருவதற்கு காரணமாக இருந்த ஏணியை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டதைப் போன்ற பல நிகழ்வுகள் சமுதாயத்தில் நடந்து கொண்டிரக்கின்றன. ஒரு குடும்பத்தில் தாய்தந்தைக்கு ஒரு பெண்குழந்தை. அந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கி வெளிநாட்டில் சென்று பணிபுரியும் அளவிற்கு வளர்த்துவிட்டனர். அங்கு சென்றதும் அவள் தானேதிருமணம் செய்துகொண்டாள். ஆண்டுகள் பல கடந்தன. பெற்றோருக்கு இளமைமாறி முதுமையும் வந்தது. அவளின் தாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பணத்தை மட்டும் அனுப்பி வைத்தாள் அந்த அருமை மகள். இறுதிக்கடன்களை முடித்தார் தந்தை. மேலும் பலஆண்டுகள் அவளிடமிருந்து பணமும் போன்கால்கள் மட்டுமே வந்தன. இவ்வாறு சிலவருடங்கள் சென்றன. அந்தத் தந்தையும் தள்ளாட தொடங்கிவிட்டார். அவரால் தனக்கான உணவைத் தானேசெய்து கொள்ள இயலவில்லை. மற்றவரின் உதவி தேவைப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் மகள் குடும்பத்துடன் தன் சொந்தஊருக்கு வந்தாள். தந்தையின் சொந்தத்திற்காக அவள் வரவில்லை. அந்த அழகான வீட்டை விற்றுப்போக வந்தாள். தன் தந்தையைத் தன்னுடன் வந்துவிடுமாறும் இந்த வீட்டை விற்று விடலாம் என்றும் வாதாடினாள். தந்தை மறுப்பு கூறவே, அவரின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாள், இந்த வீடு என் தாத்தாவின் சொத்து. எனக்கே உரிமை என்றாள். இந்த அவலமான நிலை ஏற்பட வளர்ப்பு காரணமா? அல்லது சமுதாயம் காரணமா? சிந்தியுங்கள்!

குழந்தைகளின் ஏழ்மை நிலை
        
ஆதரவற்ற குழந்தைகளைப் பிச்சைக்காரர்களாக்கும் அவலநிலை வேறு நாடுகளில் உள்ளதோ இல்லையோ? நம் நாட்டில் பல இடங்களில் உள்ளன. ஒருமுறை காலை நேரத்தில் கல்லூரிக்கு செல்லும் அவசரத்தில் இருந்தேன். அப்போது ஒரு சிறுவன் ஓடிவந்து அம்மா பசிக்கிறது ஏதேனும் கொடுங்கள் என்று கையை நீட்டினான். உடனே நான் டிக்கெட் எடுப்பதற்காக வைத்திருந்த சில்லரைகளில் ஒன்றை பார்த்துக் கொண்டே, “தம்பி நீ படிக்கச் செல்ல வில்லையா?” என்றேன். என் அருகில் இருந்த தோழி, “அவனுக்கு பணம் தரவேண்டாம்” என்று கூற, அவன் என்கையைப் பிடித்துக்கொண்டு அழுதான். “என் கையில் மிகக்குறைந்த சில்லறைகளே உள்ளன. இவ்வாறு சென்றால் என்னை அடிப்பார்கள்” என்று கூறி என்கையில் இருந்த ஒரு நாணயத்தைப் பெற்றுக்கொண்டு மின்னலாக ஓடிவிட்டான்.

இன்னொரு சிறுவன் அவ்வாறுதான் சில புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அழுதான். அவன் முகத்தில் அவ்வளவு பயம் கலந்த கவலை ரேகைகள். பின்னர்தான் தோழி கூறினார், இந்தக் குழந்தைகள் பெற்றோர்கள் இல்லாதவர். அவர்களைச் சில சமூகவிரோதிகள் பிடித்துக்கொண்டு மிரட்டி ஊனம் செய்து இவ்வாறு பிச்சை எடுக்க விடுகின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு மக்கள்தரும் சில்லரைகளைத் தலைவன் என்ற ஒருவன் எடுத்துக் கொள்வான்.  எனவே எப்போதுமே இந்தக் குழந்தைகள் பசியுடன் இருப்பார்கள். பிளாட்பாரத்தில் கொசுக்கடியில் உறங்குவார்கள். இதுதான் இவர்களின் வாழ்க்கை என்று கூறினார்.

ஒரு குழந்தை கையேந்துவது பெற்றோரிடமே!
        
ஒரு குழந்தை கை ஏந்துவது தன் பெற்றோரிடமும் கடவுளிடமும் தானே! தவிர கண்ணில் பார்த்தவரிடமெல்லாம் சென்று கையேந்துவது எவ்வகையில் நியாயம். எவனோ ஒருவன் வங்கியில் செலுத்தும் பணத்தைக் கடனாகப்பெற்றுப் பல கோடிகளை உல்லாசமாகச் செலவழித்துவிட்டு தான்பெரிய மனிதன் என்று கூறிக்கொண்டே நாடுகளைச் சுற்றும் மனிதர்களும் நமது நாட்டில்தான் வாழ்கிறார்கள். ஒருவேளை உணவுகூட உண்ணாமல் உயிர்வாழும் குழந்தைகளும் நம் நாட்டில்தான் வாழ்கின்றார்கள். என்ன ஒரு அவலநிலை பாருங்கள்! மனிதர்களின் மனதில் சுயநலம் பெருகிவிட்டது  தனது குடும்பம், குழந்தை என்ற சுயநலம். அவர்கள் எல்லா சுகங்களும் பெற்று நன்றாக வாழ்ந்தால் போதும் என்று அந்தச் சுயநலமே இதற்கு காரணம்.

சுயநலம் சாதிப்பது என்ன?
     
சமுதாயத்தில் சுயநலம் நிறைந்த இந்த உலகத்தில் ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலம் என்ன? அவர்களின் மனதில் இந்தத் துன்பத்தில் இருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையை ஊட்டி மீட்டெடுப்பவர் யார்? பசியுடன் பிச்சை எடுக்கும் குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு வீட்டில் சென்று மனதில் ஒருசலனமும் இல்லாமல் வயிறுநிறைய உணவை உண்டுவிட்டு நிம்மதியாக உறங்குகிறோமே! இதைவிட சுயநலத்திற்கு  உதாரணம் வேறு உண்டா? இந்நிலையைச் சிறிதாவது மாற்ற முயற்சி எடுத்து இருப்போமா? யோசனையாவது செய்து இருப்போமா? குழந்தைகள் என்பவர்கள் அடுத்து நம்நாட்டை காக்கபோகும் முதுகெலும்புகள். அவர்களை இந்த நிலையில் வைத்திருக்கும் நாம் எதை சாதிப்பதற்காகச் சுயநலத்துடன் வாழ்கிறோம்? வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். எதற்காக  என் வாழ்க்கையில் முன்னேற்றம் வரவேண்டும். சமுதாயத்தில் இந்த அவலத்தை நீக்கவேண்டும் என்ற ஒரு தர்மமான குறிக்கோள் இருக்க வேண்டாமா? யோசியுங்கள்!

மனித வாழ்க்கை என்பது யாருக்கும் நிரந்தரமானது அல்ல. உயர்ந்தவன்  தாழ்ந்த நிலைக்கு வந்து விடுவான். முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவலாம். எப்போதுமே உங்களின் வேலை, வீடு என்று தங்களின் நலன் கருதியே செயல்படாதீர்கள். உங்களைச் சுற்றி எவ்வளவு துயரங்கள் பசி பட்டினிகள் நிறைந்துள்ளன என்பதை சிறிது பார்வையைப் பரவவிடுங்கள். முடிந்தவரை தேசம் பசிப்பிணி இல்லாத நாடாக மாறவேண்டும் என்று யோசனை செய்து முயலுங்கள். அவ்வாறு முயன்றால் இந்த உலக ஆற்றல்கள் எல்லாம் துணையாக நிற்கும் என்பதை நம்புங்கள்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோயம்புத்தூர்

முனைவர் நா.சாரதாமணி அவர்களின் படைப்புகளை மேலும் படிக்க… கிளிக் செய்யவும்

 

மகன் தந்த பரிசு|சிறுகதை|முனைவர் க.லெனின்

மகன் தந்த பரிசு - முனைவர் க.லெனின்
சுட்ட செங்கற்களால் வரிசையாக வைத்து கட்டப்பட்ட நான்கு பக்கச்சுவர். சுவரின் மேற்பரப்பில் ஆரங்களாகப் பனைமரத்தைச் சேர்த்துக் கட்டிய விள்ளைவீட்டில்தான் ராமமூர்த்தி நெடுங்காலம் வாழ்ந்து வருகின்றார். தெருவுக்குக் கொஞ்சம் தள்ளியேதான் இவரின் வீடு அமைந்திருந்தது. கதவுகள் வெளிப்பக்கமாகத் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. யாராவது வந்து திறந்தால்தான் உண்டு. இந்த ஒருமாதமாய் அவ்வளவாக யாரும் இந்த வீட்டிற்கு வருவதாகத் தெரியவில்லை. அவ்வப்போது யாராவது ஒருவர் வந்துவிட்டுப் போவார்கள். இப்பல்லாம் ராமமூர்த்தி முன்னே மாதிரி இல்லை. எப்பவும் கத்திக்கிட்டே கிடக்கார். மணி இரவு பத்துக்கு மேல ஆவுது. இப்போதுகூட பூட்டிய வீட்டினுள்ளிருந்து ராமமூர்த்தியின் பெருங்குரல் வந்து கொண்டிருக்கிறது.
  
     “டே… யாராவது இருக்கீங்களா டா… கொஞ்சம் வாங்கடா… 

என்னால முடியல… அந்தத்  தண்ணீய எடுத்துக்கொடுங்கடா… தாகமா இருக்கு!

வயிறு முட்டிக்கிட்டு நிக்குதுடா… ஒன்னுக்குப் போவனுன்டா…

ஐயோ! இடுப்புக்குக் கீழ வலி பொறுக்க முடியலையே… ஐயோ… அம்மா…

அடியே பொட்டுக்கன்னி ! எங்கடி இருக்க நீ? சீக்கிரம் வாடி மொவளே…

சுள்ளுசுள்ளுன்னு வலிக்குதே… ஐயோ என்னால தாங்க முடியலயே…

அந்த மாத்திரை மருந்த எடுத்தாவது கொடுங்களேன்…

இருட்டு… இருட்டு… கருங் – கும்முன்னு இருட்டு!

எனக்கு கண்ணு தெரியலையா? இல்லை இந்த அறையே இருட்டா இருக்கான்னு தெரியலையே…

இப்போது நேரம் யாமத்தைத் தாண்டிய நிலையில் நிலவு நடுவானத்தைத் தொடர்ந்து கிழக்குப் பக்கமாய்க் கீழிறங்கி கொண்டிருந்தது. ராமமூர்த்தியின் அழுகையும் ஓலமும் அந்த நான்கு சுவருக்குள்ளாகவே முடங்கிப்போயிருந்தது.

காலையில் வாணிதான் கதவை திறந்தாள். பீ நாத்தமும் மூத்திர வாடையும் வாந்தியின் குமட்டலும் ஒருசேர வாணியின் நாசியின் வழியாக உடம்பினுள் புகுந்து ஒருநொடிக்குள் அவளை மயக்க நிலைக்கே கொண்டு சென்றன. சுதாகரித்துக்கொண்டு வெளியே ஓடினாள். ராமமூர்த்தியின் அண்ணன் பேத்திதான் வாணி. இங்கதான் கவர்மெண்ட் ஸ்கூல்ல பன்னிரெண்டாவது படிக்கிறாள். ராமமூர்த்தியின் மனைவி மல்லிகா ஆச்சி இருக்கின்றவரை தினமும் இங்கையேதான் பெரும்பாலும் சாப்பாடே… சில நேரங்களில தூங்கவும் செய்வா… இப்ப ஆச்சி செத்து முப்பது நாளு முடிஞ்சி போச்சி..

தன்னுடைய சுடிதாரின் ஷாலை எடுத்து முகத்திலே கட்டிக்கொண்டு விட்டாள். வீட்டிற்கு இருபது அடி தூரத்தில் இருக்கும் தண்ணீர் பம்பில் இரண்டு மூன்று குடங்களில் தண்ணீர் மொண்டு வந்து வீட்டினுள்ளே ஊற்றி நன்றாகக் கழுவிவிட்டாள். எடுத்து வந்த தண்ணீரை ராமமூர்த்தியின் மேலும் ஒரு குடம் முழுக்க ஊற்றினாள். தொடப்பத்தால் வீட்டை பெருக்கிக்கொண்டே,

“ஆச்சி இருக்கும்போது எத்தனை பேரு இந்த வூட்டுக்கு வந்துட்டு போவா… இப்பபாரு… ஒரு மனுசி போய்டுச்சின்னா அவ்வளவுதான். தொடப்பத்தைத் தரையில் தட்டிதட்டி நன்கு தேய்த்தவாறே புலம்பி தள்ளினாள்”

“என்ன சின்ன தாத்தா… இரவு முழுக்க சிவராத்தியா?”

“ஆமான்டி கழுத… என்ன இப்படி அநாதையா வுட்டுட்டு போயிட்டிங்களே.. நகரவும் முடியாம… வலியையும் பொறுக்க முடியாம… தனிமைய நினைச்சு அழுதும் கத்தினதும் உங்க யாரு காதுலேயும் விழுந்துச்சா…”

“நேத்து மாமா வரலியா சின்ன தாத்தா?”

“வந்தான் அவன். என்ன புண்ணியம் வாணி! ஒத்தையல விட்டுட்டு போயிட்டான்ல… ராத்திரில வலி பொறுக்க முடியாம கத்தினதுல ஒன்னுக்குப் போயி கூடவே ரெண்டுக்கும் போயி இருட்டுல கண்ணு தெரியாம அத தொட்டு…. கொமட்டிக்கிட்டு வாந்தி எடுத்தேன். அந்த நாத்தத்துல மூச்சும் விட முடியாம நகரவும் முடியாம தவியா தவிச்சுப்போயிட்டன் தெரியுமா?”

ராமமூர்த்தி தொணிந்த குரலில் மெதுவாய்ச் சொன்னார். இல்லை இல்லை… தன்னுடைய இயலாமையைச் சொன்னார். இல்லை இல்லை… அழுத கண்ணீருடன்…. புலம்பிய மனதுடன்… மனைவியை இழந்த துக்கத்துடன்…. எப்படி வேண்டுமானலும் வைத்துக்கொள்ளலாம்.

வாணி மூக்கை உரிந்தவாறே, ராமமூர்த்திக்குத் தலையை நன்றாகத் துவட்டிவிட்டு இடுப்புக்குக் கீழே வேட்டியைக் கட்டினாள்.

“ஆக்ஸிடெண்டுல என்னோட ரெண்டு காலும் போச்சு. எனக்கு வலியும் தெரியல. காலு போச்சுன்னு நான் கவலையும் படல. ஏன்னா? எங்கூட யா பொட்டுக்கன்னி மல்லிகா இருந்தா… எனக்காக எல்லாமே செஞ்சா… நா அவளா இருந்தேன். என்னிக்கு அவ போனாளோ அன்னிக்கு நானும் செத்துருக்கனும்”

“சின்ன தாத்தா… அப்படியெல்லாம் சொல்லாதீங்க… யாரு வந்து உங்கள கவனிக்கனாலும் நான் வந்து பாத்துக்கிறேன். போதுமா !”

“நீயும் எத்தனை நாளு பாப்ப வாணி? படுத்த படுக்கையில் இருந்தவாறே சொன்னார் ராமமூர்த்தி.

“நான் இருக்கின்ற வரையும் சின்ன தாத்தா” என்று மட்டும் சொன்னாள்.. ஊதுபத்தியும் சாம்பிராணியும் கொளுத்தி புகையோடுயிருந்த அந்த வீடு நாத்தம் மறைந்து நறுமணம் வந்தது. இரவு முழுக்க கண்விழித்து இருந்ததனால் ராமமூர்த்தி கண் அயர்ந்து தூங்கிப்போனார். சுடுதண்ணீரைப் பக்கத்தில் வைத்தவள் அசையாமல் கதவை இழுத்துச் சாத்திவிட்டு ஒரே ஓட்டமாய் தன்னுடைய வீட்டிற்கு ஓடினாள் வாணி.

அன்னிக்குச் சாயங்காலம் பூபதி, சாப்பாடும் குழம்பும் தூக்குச்சட்டியில் கொண்டு வந்திருந்தான். எடுத்து வந்த சாப்பாட்டை அப்பா ராமமூர்த்திக்கு ஒரு தட்டில் போட்டுக்கொடுத்தான். ராமமூர்த்தி மகன் பூபதியிடம் எதுவும் பேசாமல் மௌனித்து இருந்தார். மகன் கொடுத்த சாப்பாட்டுத் தட்டை வாங்கமலே எங்கையோ விட்டத்தை முறைத்தப்பார்த்துக் கொண்டிருந்தார்.

“அப்பா… இந்தாங்க சாப்பாடு…”

”இந்தச் சாப்பாடு ஒன்னுதான் கொறச்சல். போடா உன்ன தெரியும்” ராமமூர்த்தி கொஞ்சம் கோவத்துடனேயே மகனிடம் பேசினார்.

“நான் என்னப்பா பன்றது. உங்கள வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி பார்க்க முடியாத சூழல்ல இருக்கேன். அங்க அவ வேற, எப்ப பாத்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பா… ச்சீ…” உதட்டை கடித்து சுழித்து கண்ணை வலப்பக்கமாய் திருப்பி மேலேயும் கீழேயும் ஒரு பார்வை பார்த்துச் சொன்னான்.

ராமமூர்த்தியின் மனசு பெத்த மனசாச்சே… மகன்கிட்ட என்னத்த சொல்லி அழுவ முடியும். அவனையும் சொல்லி குத்தமில்ல… ஏதோ மனசில நினைத்தவராய் பூபதி கையில் பிடித்துக்கொண்டிருந்த சாப்பாட்டை வாங்கிக்கொண்டார்.

சாப்பாட்டை பிசைந்துகொண்டே, “தம்பி… எனக்கு தனியா இருக்க பயமா இருக்குடா… என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போயி எங்கையாவது முதியோர் இல்லத்துல விட்டுடுடா” என்றார் ராமமூர்த்தி.

“அப்பா அங்கெல்லாம் வேண்டாம். நீங்க இங்கையே இருங்க. இதுதான் உங்களுக்கு பாதுகாப்பு. நான் தினமும் வந்து பாத்திட்டுப்போறேன்”

“இருட்டு எனக்கு ரொம்ப பயமா இருக்குடா.. அந்த ஜன்னல் ஓரமா யாரோ நின்னு என்னை முறைச்சி பாக்குற மாதிரியே இருக்குடா..”

“தேவையில்லாத எல்லாம் யோசிச்சி மனச நோகடிச்சிகாதிங்கப்பா… அதெல்லாம் ஒன்னுமில்ல. அங்க யாரும் நிக்கல..” என்றான் பூபதி.

“காலு ரெண்டும் போனபிறகு ஒன்னுக்கு ரெண்டுக்கு போறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா”

கொஞ்சநேரம் யோசித்துவிட்டு “சரிப்பா… அதுக்கு நான் ஏற்பாடு பன்றேன். அப்பறம், வாணி வந்திட்டு போனாளா…”

“ஆமான்டா… காலையில  அவதான் எல்லாத்தையும் கழுவிட்டுப் போனா… இந்த காலு இல்லாத நொண்டிய எத்தனை நாளைக்கு நீயும் பாத்துப்ப.. உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. அவங்கள சரியா பாத்துக்கு. இங்கிட்டும் அங்கிட்டும் மாத்திமாத்தி உன்னல அலைய முடியாது. அதுக்கு…” என்று இழுத்துக்கொண்டே சொன்னார் ராமமூர்த்தி.

“அதுக்குன்னா… என்னாப்பா” என்றான் பூபதி.
      
“ஒரு பாட்டில் விஷத்தை வாங்கிட்டு வந்து குடுத்தின்னா… நானும் குடிச்சிட்டு செத்துப்போயிடுவேன்”
      
“அப்பா… என்னா சொல்றீங்க… அப்படியெல்லாம் பேசாதீங்க. உங்களுக்கு நான் இருக்கன்”
      
“இனிமே நான் இருந்து என்ன பன்ன போறேன். தண்டத்துக்கு வாழனுமேன்னு இருந்தாதான் உண்டு”
      
அப்பாவுக்கும் மகனுக்கும் ஆயிரம் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. காரசாரமான விவாதங்களும் அடங்கும். அங்கு கோபமும் அழுகையும் இயலாமையும் முடியாமையுமே அதிகம் நிறைந்திருந்தன. இறுதியில் கிளம்ப தயாரானான் பூபதி.
      
பூபதி கதவுகிட்ட சென்றபோது, “அடுத்தமுறை வரும்போது கண்டிப்பா மருந்த வாங்கிட்டு வாடா… அப்புறம் மறக்காம பேரக்குழந்தைகள கூட்டிட்டு வா..” என்றார்.
      
கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு லைட் சுவிட்சை அணைக்காமல் வீட்டைவிட்டு வெளியேறினான். அப்பாவுக்கு ஏதோ ஆச்சு. அம்மா போனபிறகு இப்படித்தான் ஏதோ பிணாத்திக்கிட்டே இருக்கார் என்று முணுமுணுத்துக்கொண்டே சென்றான்.

அன்றைய இரவு பூபதிக்குத் தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். எழுந்து நடந்தான். உலாவினான். மனதைப் போட்டு உடைத்துக்கொண்டான். காலையில் மனைவியிடமும் குழந்தையிடமும் கூட  அவ்வளவாகப் பேசவில்லை. போகும்போது பையனையும் பொண்ணையும் பள்ளிக்கூடத்துல விட்டுட்டு அலுவலகத்திற்குச் சென்றான்.

அன்றைய தினத்தில் சாயங்காலம் அப்பாவைப் பார்க்க குழந்தைகளோடு சென்றிருந்தான். குழந்தைகளைப் பார்த்த ராமமூர்த்தி பரவசமடைந்தார். குழந்தைகளை அள்ளி முத்தமிட்டார். அவர்களுக்கு மனதார வாழ்த்துச் சொன்னார். ரெண்டு பிள்ளைகளிடமும் நிறைய பேசினார்.  அவர் பேசியதில் பாதிக்கு மேல் குழந்தைகளுக்குப் புரியவேயில்லை. கடைசியில் தன்னுடைய தலையணைக்கு அடியில் இருந்து சில காகிதங்களை எடுத்துக்கொடுத்தார். பிள்ளைகளும் அது என்னவென்றுகூட தெரியாமல் வாங்கிக்கொண்டனர். நேரம் சென்றுகொண்டிருந்தது. பூபதியின் கண்கள் நிறைய கண்ணீரோடு தலையைக் குனிந்தபடியே உட்காந்திருந்தான். அப்பாவின் முகத்தைப் பார்க்க அவன் வெட்கப்பட்டான்.  தான் கொண்டு வந்திருந்த விஷ பாட்டிலை அப்பாவின் தலைமாட்டில் வைத்துவிட்டு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு சடாரென வெளியேறினான்.

மகன் சென்றபிறகு தலைமாட்டிலிருந்த விஷபாட்டிலைக் கையில் எடுத்தார். மகனை நினைத்து வாய்விட்டுச் சிரித்தார். அவன் பிறந்தபோது பொத்திபொத்தி பார்த்துக்கொண்டேன். அவனுக்குக் கை வலிக்குமோ கால் வலிக்குமோ என்று எத்தனை இரவுகள் தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தேன். என்மனைவி எவ்வளவு வற்புறுத்தியும் அவன்மேல்லுள்ள அன்பால் இன்னொரு குழுந்தை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டேன்.   இறுதியில் எனக்கு கிடைத்தது இந்த விஷபாட்டில் மட்டுமே! மென்மையாகச் சிரித்துக்கொண்டே பாட்டிலைத் திறந்து முழுவதையும் குடித்து முடித்தார்.

என் மனைவி இருந்தால் எனக்கு இப்படி நேர்ந்திருக்குமோ? இறைவா! நான் என்ன தவறு செய்தேன். வாய்விட்டே அழுதார் ராமமூர்த்தி. மனைவி இறப்பதற்கு முன்னாலே கணவன் இறந்துவிடவேண்டும். அப்போதுதான் கணவனுக்கு மரியாதையும் மற்றது எல்லாமுமே. மனைவி இல்லையென்றால் அவன் வாழ்க்கையே வெட்டியாகத்தான் போகிறது. ராமமூர்த்திக்குக் கண்கள் சொருக ஆரமித்தது. சாவை எதிர்நோக்கிய அவருக்கு, பயத்திலிருந்து விடுபட பக்கத்திலிருந்த மனைவின் சேலையை எடுத்து உடம்பிலே சுற்றிக்கொண்டார். தன்னுடைய ஆழ்மனதில் மனைவியைக் காதலுடன் நினைத்துக்கொண்டு இறப்பை எதிர்கொண்டார்.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
எம்.ஜி.ஆர் கல்லூரி, 
ஓசூர்- 635 130

 

நறும்புனல் | சிறுகதை | பழ.பாலசுந்தரம்

நறும்புனல் சிறுகதை பழ.பாலசுந்தரம்
       அனேகமாக, காளிமுத்துவிடம் கடன் வாங்காதவர்கள் யாரும் பாறைப்புதூரில் இல்லை என்றே நம்புகிறேன். ஏதாவது அவசரத் தேவை என்றால் உடனே அவர் வீட்டுக்குத்தான் போவார்கள். எப்போதும் பணப்புழக்கம் உள்ள வெற்றிகரமான விவசாயி அவர். “மாமா” என்றுதான் அவரை அழைப்பேன். முப்போகம் விளையும் அற்புத பூமி அவருடையது. வாழைத்தோப்பும், மாந்தோப்பும் நிறைய தென்னைகளுமாக அவர் தோட்டம் திகழும். அவர் வயலில் விளையும் கிச்சடி சம்பா நெல், பல மாவட்டங்களில் பிரசித்தம். குறிப்பாக சின்ன சேலம் பகுதியிலிருந்து வரும் வியாபாரிகள் முன்பணம் கொடுத்து உறுதி செய்துவிட்டுப் போவார்கள். அறுவடைக்கு ஒருநாள் முன்பே நாமக்கல்லில் தங்கி, நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டுதான் ஊர் செல்வார்கள். அந்த அரிசிக்கு அதிக விலை கிடைத்ததால் தவறவிடமாட்டார்கள்.
               
     எங்கள் வீட்டிலும் அந்த அரிசியில்தான் சாப்பாடு. வெறும் சோற்றையே கொஞ்சம் உண்பேன். அத்தனை கவையாயிருக்கும். நான் பத்தாம் வகுப்பு படித்தபோதுதான் அவருக்குத் திருமணமாயிற்று. தோட்டத்தை ஒட்டிய சாளை வீடுதான் அவர்களுடையது. கூட்டுக் குடும்பம். காலி நிலத்தில் பெரிய பந்தல் போட்டு அங்கேயே விருந்து, தரையில் விரிக்கப்பட்ட பாய்களின் மேல், வேட்டிகளைப் அப்போது பரவிய மணத்தை அனுபவித்து ரசித்தது இன்னும் பரப்பி, வெந்த சாதத்தை வடித்துக் கொட்ட கொட்ட என் நினைவில்.
               
        நான் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை அவரிடம் வாங்கிய கடனில்தான், எங்கள் வீட்டில் எல்லா காரியங்களும் நடந்தன. அக்காவின் திருமணத்திற்கு, எழுபத்தேழாம் வருடமே இருபதாயிரம் கடன் வாங்கினார் அப்பா. எங்களுக்கிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் விளைந்த காய்களும் கனிகளுமே கடனை அடைத்தன. என் படிப்புச் செலவுக்கும் கடன்தான் வழி செய்தது.

         காளிமுத்து மாமா ஒரு கொள்கை வைத்திருந்தார். நூறு, இருநூறு என அவரிடம் வாங்கும் சில்லறைக் கைமாத்துகளுக்கு வட்டி வாங்க மாட்டார். ஆயிரமோ அதற்கு அதிகமோ கடன் தந்தால் நூற்றுக்கு ஒரு ரூபாய் வட்டி கணக்கிட்டு வசூல் செய்துவிடுவார். வசதி குறைந்த சாமானியர்களுக்கு சிறு சலுகையும் தருவார். அவரிடம் நான் கற்றுக் கொண்ட நல்ல பழக்கம் கணக்கு எழுதி வைப்பதுதான். கெட்டி அட்டை போட்ட பேரேடு வைத்திருப்பார். தேதி வாரியாக, ஆள்வாரியாக வரவு செலவு எழுதி வைத்துக் கொள்வார். வட்டி கணக்கில் ஒரு ரூபாய் கூட வித்தியாசம் காண முடியாது. ஆறடி உயரமும், அதற்கேற்ற உருவமும், அடர்ந்த மீசையும், தெளிந்த பார்வையும் அவர் மேல் கூடுதல் மதிப்பை ஏற்படுத்தின.
               
      ஊரில் வேறு சிலரும் அவர் பாணியில் லேவாதேவியில் இறங்கினர். ஆனால், தொழில் தொடர்ச்சி பெரும் கேள்விக்குறியானது. கெடுபிடி செய்யவும் முடியாமல், தணிந்து போகவும் மனமில்லாமல் பணம் கடன் கொடுப்பதை நிறுத்தனர். மாமாவிற்கு விவசாய வருமானம் அபரிமிதமாக வந்ததால்தான் தொடர்ந்து வட்டித் தொழிலை லாபகரமாக நடத்த முடிந்தது. விவசாயம் செழிக்க அவர் நிலத்திலிருந்த கிணறு மிக முக்கியக்காரணம்.
               
      எங்கள் ஊரில் கிணறுகள் அளவில் பெரியவை. வெளியூர்வாசிகள் அதைப் பார்த்து மிரண்டு நிற்பார்கள். அறுபதடிக்கு முப்பதடி என்பது சாதாரண அளவு அதைவிட பெரிய கிணறுகளும் சில இருந்தன. ஊர் சிறுவர்கள் நீச்சல் பழகவும், தேர்ந்த பின்னர் விளையாடித் திளைக்கவும் அவையே நீர்க்களங்கள்.
 
              காளிமுத்து மாமாவின் கிணற்றில் இறங்க யாருக்கும் அனுமதியில்லை. படிக்கட்டுகள் துவங்கும் இடத்தில் முள்படல் ஒன்று கட்டப்பட்டிருக்கும். எளிதாக நகர்த்திவிடலாம். ஆனால் அது இரும்புக் கதவை விட வலிமையாயக் கருதப்பட்டது. குடிநீர் தரும் கிணற்றில் இறங்க, குளிக்க எப்படி அனுமதிப்பார்கள்? அந்தக் கிணற்று நீரின் சுவை, இன்று வரை வேறெங்கும் நான் அனுபவித்தறியாதது. அதுவும் கோடையில், பானையில் குளிர்ந்து கிடக்கும் அந்நீரைப் பருகினால், பழரசத்திற்கு இணையான இனிப்பை உணரலாம். அப்பா சொல்வார் “தேனூத்துடா அது… அப்பிடி அமையறது சாதாரணமில்ல. ரொம்ப அபூர்வம். மண்ணுவாகு, நீரோட்டம், ஆழம் இப்படி பலது ஒண்ணா சேரணும். அம்பது வருஷத்துக்கு முன்னாடி அந்தக் கெணத்த வெட்டுனவங்களோட நல்ல மனசும் ஒரு காரணம்.”
               
          எங்கள் ஊருக்கு ஒரே குடிநீர் ஆதாரம், அவர் தோட்டத்து நீர்த்தொட்டிதான். சுமார் பத்தடி உயரத்திற்கு இருந்த அது மேலே மூடப்பட்டிருக்கும். பதிக்கப்பட்டிருக்கும் குழாய் வழியே நீர் உள்ளே விழுவது வெளியே தெரியாது. சத்தம் மட்டும் கேட்கும். தரையிலிருந்து சுமார் இரண்டடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மூன்று குழாய்கள் நீரை வெளியே பீச்சிக்கொண்டே இருக்க, பித்தளை மற்றும் தகரக் குடங்கள் வரிசை கட்டி நின்று நிரம்பும். எல்லா வீடுகளிலிருந்தும் காலை, மாலை நேரங்களில் ஆண்களும் பெண்களுமாக அங்கு நீர் பிடித்துச் செல்ல வருவதால் அது ஒரு சந்திப்பு மையமாகவும் உருக்கொண்டது. அலசப்படாத செய்திகளே இல்லை என்னுமளவுக்கு அங்கு வருபவர்கள் அனைத்தையும் பேசித் தீர்ப்பர். நானும் என் பத்தாவது வயதிலிருந்து, கல்லூரியில் இரண்டாமாண்டு முடிக்கும் வரை நீர் எடுத்து வர தினசரி செல்வேன். தேர்வு காலங்களில் மாலை நேரங்களில் போவேன் ஆண்கள் அதிகமாகவும், பெண்கள் குறைவாகவும் நீர் பிடித்துச் செல்ல வருவதால் எப்போதும் பெண்கள் முன்னுரிமை பெறுவர். “அக்கா பாவம் விடுங்கடா பித்தள அண்டாவத் தூக்கிட்டு எவ்ளோ தூரம் போவுணும் மொதல்ல அதப் புடிக்க விடுங்கடா” என்ற கட்டளைக்கு நாங்கள் கீழ்ப்படிந்தே தீரவேண்டும்.
               
        சில திருமணங்களுக்கும் அவ்விடம் புரிந்திருக்கிறது. முத்துசாமியும், சரோஜாவும் அங்குதான் தங்கள் விழைவுகளைப் பகிர்ந்து கொண்டு தத்தமது வீடுகளில் சம்மதம் பெற்று தம்பதியானார்கள். எல்லா காலகட்டங்களிலும் இணைப்பறவைகள் உலவும் தலமாக அவ்விடம் விளங்கியிருக்கிறது.

          நான் மூன்றாமாண்டு பட்டப்படிப்பில் தீவிரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மோகனூரிலிருந்து ஊருக்கு பெரிய குழாய்கள் மூலம் காவேரி நீர் வரத்தொடங்கியது. நாமக்கல் மலையில் இடுப்பில் கட்டப்பட்டிருந்த மேல்நிலைத் தொட்டியிலிருந்து பல ஊர்களுக்கும் நீர் பகிரப்பட்டது. ஊரில் மூன்று முக்கிய இடங்களில் பொதுக் குழாய்கள் நிறுவப்பட்டன. வீடுகளுக்கும் இணைப்புகள் தரப்படவே பெரும்பாலான வீடுகளில் காவேரி பாயத் தொடங்கினாள். அப்போதும்கூட கிணற்று நீரின் சுவைக்குப் பழகிய பலரும் தொட்டிக்கு வந்தே குடிநீர் எடுத்துச் சென்றனர். எங்கள் வீட்டிற்கும் குழாய் இணைப்பு கிடைத்தது. நான் தொட்டிக்குச் சென்று வருவதைக் குறைத்துவிட்டேன்.
               
      படிப்பு முடிந்து இரண்டே மாதங்களில், அப்பாவின் நண்பர் உதவியால் சென்னையில் வேலை கிடைத்தது. கிராமத்தைப் பிரிந்து, மாநகரப் பரபரப்பில் தத்தளிக்கத் துவங்கியிருந்தேன். மாதம் ஒரு முறை ஊர் வருவதே சிரமமாயிற்று. தனியார் நிறுவனம் என்பதால் சனிக்கிழமை அலுவலகம் இயங்கியது. சில சமயம் ஞாயிறுகளில் கூட அரை நாள் சென்று பணியாற்றித் திரும்புவேன்.

                ஆற்றுநீர் எங்கள் ஊருக்கு வர ஆரம்பித்ததும், புதிதாக மக்கள் குடி வர ஆரம்பித்தார்கள். வீடு கட்டி வாடகைக்கு  விடுவது பெருமளவில் நடக்க ஆரம்பித்தது. கல்லூரியில் என்னுடன் படித்த தென்னரசு பக்கத்து வீதியில் உள்ள ஒரு புது வீட்டிற்கு குடிவந்தான் அவன் பெற்றோர் இருவருமே அரசு அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள், அவன் தேடிக் கொண்டிருந்தான்.

                சென்னையில் நான்காண்டுகள் பணி அனுபவம் பெற்றிருந்தபோது, என் ஊருக்கும் எனக்குமான பிணைப்பில் ஓர் இடைவெளியை உணர்ந்தேன். மாரியம்மன் பண்டிகையும், பொங்கல் விளையாட்டுப் போட்டிகளும் நானின்றியே நடைபெற்றன. இளைஞர் மன்றத்தினர் என்னை மெதுவாக மறக்கத் தொடங்கியிருந்தனர். எப்போதாவது ஊர் வரும்போது பழைய நண்பர்களுள் ஓரிருவரை சந்திப்பதோடு சரி. அவர்களும்  என்னை “மெட்ராஸ்காரன்” என குறிப்பிடத் துவங்கினர். அறிமுகமில்லாத புதிய இளைஞர்கள் நிறைய காணக் கிடைத்தனர். பள்ளியில் என்னோடு படித்த சிலருக்குத் திருமணம் ஆனது. சேகர் திருமணத்திற்கு மட்டும் வந்து சென்றேன். அது நடந்தது ஞாயிற்றுகிழமை என்பதால்,
               
         ஏப்ரல் மாதம், தமிழ் வருடப்பிறப்போடு வங்கி விடுமுறை நாளொன்றும் சேர்ந்து கொண்டதால் ஞாயிறோடு திங்கள் செவ்வாயும் விடுமுறை கிடைத்தது. சனி இரவே புறப்பட்டு பாறைப்புதூர் வந்தேன். காலையில் தாமதமாய் எழுந்து தயாரானேன். ஊரை ஒருமுறை வலம் வரும் ஆவல் எழுந்தது. நிதானமாய் நடக்க ஆரம்பித்தேன். நெடுநாட்களுக்குப் பின் கட்டியிருந்த வேட்டி அவ்வப்போது தடுக்கியது. பல புதிய வீடுகள் வளர்ந்து கொண்டிருந்தன. கண்ணாடிக் கதவுகளோடு, அபாயகரமான சிவப்பு நிறத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் தென்பட்டன. கருந்திரவம் நிரப்பப்பட்ட புட்டிகள் உள்ளே தெரிந்தன. தெருக்களின் நீளம் அதிகமாயிருந்தது. முதிர்ந்த மரங்கள் பலவற்றைக் காண முடியவில்லை. மழுப்பப்பட்ட கண்ணாடிச் சுவரோடு நகரின் முகம், மெல்ல மெல்ல எங்கள் ஊருக்கு வந்து தீப்தி அழகு நிலையம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. கொண்டிருந்ததை உணர்ந்தேன்.
               
          தெரு முனையில் திடீரெனத் தெரிந்த தென்னரசு வேகமாக என்னை நெருங்கினான். மகிழ்வோடு கை நீட்டினேன். “எப்பிடி இருக்க அரசு…?” “நல்லாயிருக்கேன் மணி… இப்பதான் உங்க வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன். உங்கம்மாதான் நீ வெளீல போ யிருக்கறதா சொன்னாங்க.. ரெண்டு தெரு சுத்தி உன்னப் பாத்திருக்கேன் இப்ப” மூச்சு வாங்கியது அவனுக்கு. “அப்பிடியா…நா வந்திருக்கறது, உனக்கெப்படித் தெரியும்?” “எல்லாம் தெரியும்… மணி எனக்கொரு ஹெல்ப் பண்ணுடா”

                “என்ன ஹெல்ப்டா? சொல்லு” என் கேள்விக்கு பதில் சொல்ல முனைகையிலேயே தென்னரசுவின் கண்கள் லேசாகக் கலங்கின. கடையின் நிழலுக்கு அவனை வரச் செய்தேன்.

                “என்னாச்சு அரசு? ஏன் பதட்டமா இருக்க?”
               
      “அப்பாவுக்கு வயித்துல கொஞ்சம் பிரச்சினடா… போன வாரம் கோயம்புத்தூர் ஹாஸ்பிட்டலுக்குப் போயிருந்தோம். கண்டிப்பா ஆப்பரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க… செவ்வாக்கிழம அட்மிட் பண்ணனும். ஓரளவு பணம் ரெடி பண்ணீட்டோம். இருந்தாலும் இன்னொரு இருபதா யிரம் தேத்தீட்டா தைரியமா நாலு நாளு அங்கேயே தங்கி பாத்துட்டு வந்தர்லாம்…”

                “புரியுதுடா… நா போன வாரந்தான் எப்டியில பணம் போட்டேன். இப்ப எடுக்க முடியாதே…?

              “பரவாய்லடா…நீ தருவேன்னு நா கேக்குலடா…உனக்கு காளிமுத்து நல்ல பழக்கந்தான? அவருகிட்ட கேட்டு வாங்கித் தாடா…அப்பா மறுபடி ஆபீஸ் போக ஆரம்பிச்ச உடனே வட்டியோட திருப்பிக் குடுத்தர்லாம்… பிளீஸ்”
                “சரி சரி வா…” அவன் கையைப் பற்றிக் கொண்டேன். அமைதியின்மையை அவன் உடல் சொல்லிற்று.
               
        காளிமுத்து, இரண்டாண்டுகளுக்கு முன் புதிய வீடு கட்டிக் கொண்டு வந்துவிட்டதை ஏற்கனவே அறிந்திருந்தேன். ட்டிலிருந்த அழைப்பிதழ் மூலம் அது தெரிந்தது. எங்கள் வீட்டுப் புதுமனை புகுவிழாவிற்கு அப்பா சென்று வந்ததாய் சொன்னார். புது வீடு, அடுத்த தெருவின் கடைசியில், அசத்தும் விதமாக அமைந்திருந்தது. கோடம்பாக்கத்தில் ஒரு பிரபலரின் பங்களா என் நினைவுக்கு வந்தது. நாங்கள் நுழைந்ததும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முன் முற்றத்தில் போடப்பட்டிருந்த சொகுசு இருக்கை என்னை இதமாக உள்வாங்கிக் கொண்டது. தரையின் வழுக்கலும், குளிர்ச்சியும் எங்கள் ஊருக்குப் புதிது. சுவரில் பொருத்தியிருந்த நவீன பாணி படங்களை நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். காளிமுத்து உள்ளிருந்து வந்தார். எழப்போன என்னைக் கையமர்த்தி்”வாங்க தம்பி சௌக்கியமா?” என்றார். தென்னரசுக்கு ஒரு புன்னகையும் தலையசைப்பும் வரவேற்பாய்க் கிடைத்தது.
               
         “ம்… நல்லாருக்கேன் மாமா… நீங்க எப்படி இருக்கீங்க?”
”நல்லாருக்கம்ப்பா..மெட்ராஸ்லருந்து எப்ப வந்த? அடிக்கடி பார்க்க முடியறதில்லியே… வருஷக் கணக்காவுது”

           “ஆமாங்… மாமா… லீவு கெடைக்கறதில்ல… விடியக்காலந்தான் வந்தேன்…” தொண்டையை செருமிக் கொண்டேன். கொஞ்சம் தண்ணீர் குடித்தால் பரவாயில்லை என்று நினைத்தபோதே ஒரு சிறுமி இரு குவளைகளில் நீரோடு வந்தாள். “குடிங்க தம்பி” என்ற காளிமுத்துவின் குரலில் உற்சாகம் வடிந்திருந்தது. ஆவலோடு, மழை நீரில் தேன் கலந்த சுவையை எதிர்பார்த்து நீரை வாங்கி உள்ளே சரித்தபோது ருசியில் வித்தியாசம் உணர்ந்தேன். “நம்ப கெணத்து தண்ணி மாதிரி தெரியலியே” என்று இழுத்தேன். அடப் போங்க தம்பி… அதெல்லாம் ரெண்டு வருஷத்துக்கு முந்தி… கெணத்து தண்ணி உப்பா ஆயிருச்சு… வாயில  வெக்க முடியாது இப்ப… நாங்களே கேன் தண்ணிதான் வாங்கறோம்”
 அவர் குரலில் சொட்டிய சலிப்பும், வருத்தமும் என்னை அதிர வைத்தது.
“ஏங்க மாமா… என்னாச்சு?” என்றேன். கம்மிய குரலில் ஒரு பெருமூச்சு வெளிவந்தது அவரிடமிருந்து.

    “பக்கத்து தோட்டத்துல ரெண்டு எடத்துல போர் வெல் போட்டாங்க. அதுலருந்தே எல்லாம் மாறிப்போச்சு.. நம்ப கெணத்துல தண்ணி கீழ போயிருச்சு… மோட்டரையும் எறக்கி வெச்சாச்சு… ஏதோ வெவசாயம் ஓடிக்கிட்டு இருக்குது… எல்லாம் போதும்னு விட்டுட்டேன் தம்பி…”

சில நிமிடங்களுக்கு நிசப்தம் கனத்தது. அவரே சுதாரித்துக் கொண்டு உடைத்தார்.

“ஆமா.. என்ன விஷயமா வந்திருக்கீங்க?” “இந்தத் தம்பி வேற வந்திருக்காப்ல…”

‘ஆமாங் மாமா… இவனுக்காகத்தான் வந்தேன். கொஞ்சம் பணம் வேனும்னு சொன்னான். ஒரு இருபதாயிரம்…’

       நான் இகழ்ச்சியான சிரிப்பு வெளிப்பட்டது அவரிடமிருந்து. நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். தவிப்போடு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். தென்னரசுவின் கையில் காலிக்குவளை ஆடிக் கொண்டிருந்தது தெரிந்தது. “பணமா… எங்கிட்ட ஏதுப்பா? எல்லாம் வறண்டு போச்சு… அந்த காலத்துல சம்பாதித்த வெச்சி இந்த வீட்ட கட்டி முடித்தேன்… இல்லேன்னா இதுக்கும் வழியில்லாமப் போயிருக்கும். குடுக்கல் வாங்கல் எல்லாம் நின்னு போயி ஒரு வருஷம் ஆச்சு. கொஞ்சம் வெளிய பாக்கி நிக்கறத வசூல் பண்ணிட்டன்னா போதும்”
               
       “அப்படியா…ஒரு அவசரம்.. இவங்கப்பாவுக்கு ரெண்டு நாள்ல ஆப்பரேஷன்… கோயமுத்தூர் போவணும்… அதாங் மாமா தயங்கி நிறுத்தினேன். மீண்டும் ஒரு பெருமூச்சு வந்தது அவருக்கு நேராக என் கண்களைப் பார்த்தார். “உண்மையை சொல்லட்டுமா, நானே காஞ்சு போயி கெடக்கறேன் தம்பி. நீங்க வேறெங்கியாவது முயற்சி பண்ணுங்க…” மேலே பேச எனக்கு இடமிருப்பதாகத் தோன்றவில்லை. மெதுவாக எழுந்து கொண்டேன்.
          
      “நல்லதுங் மாமா… நா கௌம்பறேன்” என்று சொல்லிவிட்டு தென்னரசு பக்கம் திரும்பினேன். தலைகுனிந்தபடி வேட்டியை சரி செய்து கொண்டிருந்தான். இருவரும் வெளியே வந்தோம். தெருவில் இறங்கி சிறிது தூரம் நடக்கும் வரை எனக்கு பேச்சு வரவில்லை. ஏதோ அடைத்துக் கொண்டது போல் உணர்வு தென்னரசு மெல்லத் தேறியவனாய்ச் சொன்னான். “அம்மாவுது தாலிக்கொடி இருக்குடா… அத அடகு வெச்சு பணம் ஏற்பாடு பண்ண வேண்டியதுதான். வேற வழியில்ல… அதுல கை வைக்க வேண்டாம்னு பாத்தேன்.. ப்ச என்ன பண்றது? இவருதான் இல்லேன்னுட்டாரே”
               
          “ஆமாடா… இருந்தா கண்டிப்பா குடுத்துருப்பாரு… வருத்தப்படாத… எல்லாம் நல்லா நடக்கும்.” மீண்டும் மௌனமே தொடர அசௌகர்யமாய் உணர்ந்தேன். கிணறு பற்றிய நினைவுகள் மனதில் ஊற்றாய்ப் பொங்கின. இருபது வயது வரை என்னை வளர்த்ததில் இரண்டாவது தாயாக விளங்கிய அது, கரிப்பு நீரை சுரப்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை. தாய்ப்பால் அருந்தி உப்பை உணரும் குழந்தை முகம் சுளிப்பது போன்ற அவல நிலை எனக்கு. நாக்கில் கசப்பு படர்ந்தது. கண்களில் தேங்கிய நீரை சுண்டிவிட்டேன். காளிமுத்து மாமாவின் தோட்டம் இருந்த திசை நோக்கித் தலை திருப்பினேன். பாதை தெளிவற்று கலங்கித் தெரிந்தது; பார்வையிலிருந்து மறைந்தது.

சிறுகதையின் ஆசிரியர்
பழ.பாலசுந்தரம்
ஓசூர் – 635 109
பழ.பாலசுந்தரம் படைப்புகளைக் காண…

 

 

இருளின் வெளிச்சம்|முனைவர் நா.சாரதாமணி| நூல் வெளியீட்டு விழா

இருளின் வெளிச்சம்-நா.சாரதாமணி-நூல் வெளியீடு

நூல் வெளியீட்டு விழா

irulin velicham - invitation

நூல் தலைப்பு

இருளின் வெளிச்சம்

நாள்
23.05.2024. வியாழக்கிழமை
ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி

உதவிப் பேராசிரியர் & எழுத்தாளர்

தமிழ்த்துறை

எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரூர் கோவை

நூல் வெளியிடுவோர்
முனைவர் கோ.பாக்கியலட்சுமி
பொறுப்பு முதல்வர்
கணிதவியல் துறை

 
நூலைப் பெற்றுக் கொள்பவர் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.பே. ஜாய்சுகன்யா அவர்கள் அருகில் நூல் ஆசிரியர்: முனைவர் நா. சாரதா மணி அவர்களும் உள்ளனர்

நூல் பெற்றுக் கொள்பவர்கள்
முனைவர் பே. ஜாய்சுகன்யா

துணை முதல்வர்

வணிகவியல் துறை
எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
பேரூர், கோவை

முனைவர் வே. சசிக்குமார்
தமிழ்த்துறைத்தலைவர்
மற்றும்
துறைத் தலைவர்கள்
எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பேரூர், கோவை

பதிப்பகம்

மின் கவி

கோபிசெட்டிபாளையம்

ஈரோடு மாவட்டம் – 638 452
ISBN : 978 – 93 – 94743 – 00 – 7
Rs.190.00
First Edition: June – 2022
Second Edition: May – 2024

அணிந்துரை

அன்பர்களுக்கு வணக்கம்.
               
இந்நூலை உருவாக்கியவர் முனைவர் நா.சாரதாமணி ஆவார்.  நான் கிங் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியபோது என்னுடன் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் வகுப்பின் கடைசி மணித்துளிவரை கற்பிக்கும் கடமை தவறாதவர். “இருளின் வெளிச்சம்” என்ற இந்நூல் ஒரு கருத்துப்பெட்டகம்.  விலைமதிப்பற்றதும் அனைவரும் அறியவேண்டிய அரியக்கருத்துகள் நிறைந்ததும் ஆகும்.
               
அப்பெட்டகத்திலிருந்து சில வைரங்களை, வைடூரியங்களை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். மனிதன் என்பவன் தவறு செய்பவன். ஆனால் அந்தத் தவறை திருத்திக் கொள்பவனே மாமனிதன். வாழ்வின் நிலைமை உயர உயர தலைகனம் கூடாது. பணிவு வேண்டும் என்ற உயரிய பண்பு, ஒரு கசப்பு மருந்து என்றாலும் நோயை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. நம்மைவிட எளிய நிலையில் உள்ளவரை எள்ளி நகையாடுதல் என்ற உணர்வு முற்றிலும் அகற்றப்பட வேண்டும். ஏனெனில் இன்றுவரை நடந்ததெல்லாம் நாளை மாறலாம். இன்றைய போட்டி நிறைந்த சமூகத்தில் வலியின்றி எதையும் பெற இயலாது. எனவே தடைக்கற்களை வெற்றிப் படிக்கற்களாக்க வேண்டும். ஏமாற்றவும் கூடாது, ஏமாறவும் கூடாது போன்ற வாழ்வியல்  தத்துவம் அனைத்து வயதினரும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு சீரிய அறிவுரை. முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அதுதான் நாம் வாழ்வதற்கு அர்த்தம் (பொருள்) என்ற எண்ணம் நம் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.
               
அனுபவம் ஒரு சிறந்த ஆசிரியர் என்ற ஆணித்தரமான கருத்து நம்மனதில் பதியப்பட வேண்டிய ஒன்று. 21 ஆம் நூற்றாண்டு வாழ்க்கைக்கு தேவையான கருத்துகளை எளிதில் புரியவைத்தமைக்கு ஆசிரியர்க்கு என் பாராட்டுகளும் நன்றிகளும் சமர்ப்பிக்கப்படுகிறது. உங்களது புதுமைப் பயணம் நீண்டகாலம் தொடர என் உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்.
P.S.முத்து  (Rtd),

முதல்வர்,

அரசினர்  ஆண்கள் கலைக் கல்லூரி,
நாமக்கல்.


வாழ்த்துரை

“இனிய உளவாக இன்னாது கூறல்
              கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”
               
என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க நல்லவையை மட்டும் எடுத்துக்கொள்வோம். தீயவையைத் தீயிலிட்டுக் கொளுத்துவோம். நாம் வாழுகின்ற சமுதாயத்தில் மனிதர்களின் எண்ண ஓட்டங்கள் என்பது விசித்திரமானது. எதை வேண்டுமானாலும் நினைக்கலாம். அதனை செயலாற்றவும் செய்யலாம். இன்றைய காலக்கட்டத்தில் குதிரைபோல் காலத்தை புறந்தள்ளிக் கொண்டு ஓடும் மக்களைப் பார்த்து வியந்து போகிறது இவ்வுலகம். அவர்களுக்காகவே கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி ஒரு நிமிடம் என்னை படித்துவிட்டுப் போ என்று சொல்லுகின்ற மாதிரி தேவாமிர்தமாய் உள்ளது இந்நூலாகிய இருளின் வெளிச்சம்.

🎯 “யானைகள் வாழும் பூமியில்தான் எறும்புகளும் வாழ்கின்றன”

🎯 “அன்பு கூட அளவுடன் இருந்தால் மட்டுமே அதற்கு  மதிப்பு”

🎯 “என் கையில் மிகக்குறைந்த சில்லறைகளே உள்ளன”

🎯 “கஷ்டங்கள் மனதையும் நம்பிக்கையையும் பலப்படுத்துகின்றன”

🎯 “ஏழைகள் வறுமையில் இருந்து மீளவில்லை”

🎯 “ஏமாற்றுவதை விட தோல்வி அடைவது மிகமிக கௌரவமானது”
   

             போன்ற வாசகங்கள் வாழ்வை வெறுத்து ஒதுக்கும் மனிதனையும் மீண்டும் வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டுவனதாக உள்ளன. இந்நூலில், ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கும் தலைப்புகளும் அவற்றின்கீழ் கொடுக்கும் உட்தலைப்புகளுமே தோற்றவனுக்கு தோள் கொடுத்த மாதிரி ஆசிரியர் அழகாய் வடித்துள்ளார்.  ஒவ்வொரு தலைப்புகளிலும் ஆங்காங்கு நிறைய கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கதைகள் மூலம் மனிதர்களின் நன்னடத்தையினைச் சுட்டிக்காட்ட தவறவில்லை ஆசிரியர்.  இந்நூல் முழுக்க முழுக்க அறத்தைப் பற்றி வலியுறுத்துவதால் ஒரு பக்கம் சோர்வாகச் சென்றாலும் உடனே அடுத்தப்பக்கம் அதனை தூக்கிச் சாாப்பிடும் அளவிற்கு ஏதாவது ஒரு புதிய நிகழ்வினை அறிமுகப்படுத்தி வாசகர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். திருக்குறள், நாலடியார் போன்று ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம்.  இந்நூலாசிரியராகிய முனைவர் நா.சாரதாமணி அவர்களுக்கு பாராட்டுகள் நிறைந்த வாழ்த்துகள்.

முனைவர் க.லெனின்
முதன்மை ஆசிரியர்,
இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.
முனைவர் நா. சாரதாமணி எழுத்தாளர் அவர்கள் தமது நூலின் தோற்றம் பற்றி முன்னுரையில் பேசினார்

முன்னுரை
               

இந்த நூலின் தோற்றத்திற்குக் காரணம் இப்புவியில் குழந்தைகளாகப் பிறக்கும் மனிதர்கள் தம் வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும். குற்றங்களின் வழியில் செல்லாமல் நல்வழியில் சென்று சாதனைகள் புரிய வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் மற்றவருடன் ஒப்பிட முடியாத ஒரு தோற்றம்தான். எனவே அவர்களின் உன்னதமான தோற்றத்தைப் பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
       மனிதர்கள் இடர்பாடுகளை மேற்கொண்டுதான் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. செல்வம் படைத்த சில இளைஞர்கள் அதிகார தோரணையில் தம் பலத்தைக் காட்ட பல ஆபத்துகளை மேற்கொண்டு அவதிப்படுகின்றனர். நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு பல தீயப் பழக்கங்களை மேற்கொண்டு அழகாக மாற்ற வேண்டிய வாழ்க்கையை அறுவறுப்பாக்கி தன்னை வெறுத்து  ஒதுக்கும் அளவிற்குச் சென்று விடுகின்றனர்.
              
நல்ல செயல்களுக்காகத் தன் கம்பீரமான வாழ்க்கைக்காகத் துணிந்து செயல்படலாம். அது எல்லோருக்கும் நன்மைகளை மட்டுமே உண்டாக்கும். தீயவற்றை செய்வதில் இருக்கும் ஆபத்துகளைவிட நேர்மையானவற்றை செய்வதற்கு உண்டாகும் இடர்பாடுகள் குறைவுதான்.
               
“இருளின் வெளிச்சம்” என்ற இந்த நூலில் பல தலைப்புகளும் அவற்றுக்கான உள்தலைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கான கல்வி,நேர்மை, மௌனம் சாதிக்க கற்றுக் கொள்ளுங்கள், உன் தேசத்தை மாற்றுவது எப்போது?, ஆளுமை தன்மை, உலகை மாற்றிய சிந்தனைகள், ஒருங்கிணைந்த மனத்தின் ஆற்றல், முழுமையான ஈடுபாடு என்பது ஒரு சேவை, தலைமைப் பண்பு, நிறைவான மனம் கலங்குவதில்லை, தன்னிடம் உள்ளவற்றை உணர வேண்டும், ஆபத்துகளைச் சந்திக்கும் துணிவு உள்ளவர்களே சுதந்திரமானவர்கள் போன்ற தலைப்புகளில் இளைஞர்களுக்கான பல அரிய அனுபவங்கள், கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இந்த நூல் செய்வதற்கு உறுதுணையாக இருந்த நண்பர் திரு சிவா, கணிதத்துறை, உதவிப் பேராசிரியர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
                 
பல மனிதர்களால் ஏற்படும் இடர்பாடுகளை தூசியைத் தட்டிவிட்டு செல்லும் காற்றைப்போல கடந்துசெல்ல என்னை தயார் செய்த என் கணவருக்கும் நல்ல சிந்தனைகளோடு விளங்கும் என் மகன் நித்திஷ் அவருக்கும் எப்போதுமே என்னை ஊக்குவிக்கும் எனது தாயாருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
 
              இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய கல்லூரியின் முதல்வர் திரு பி.எஸ் முத்து ஐயா அவர்களுக்கும் வாழ்த்துரை தந்த இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழின் முதன்மை ஆசிரியர் முனைவர் க. லெனின் அவர்களுக்கும் என்னை அறிமுகம் செய்த எனது நெறியாளர் முனைவர்.இரா. கலைச்செல்வி அம்மையார் அவர்களுக்கும் என் கரங்கள் கூப்பும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் எனது இளங்கலையில் கற்றுக்கொடுத்த தேன்மொழி அம்மையார் அவர்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன் .
               
மேலும், இந்நூலை நன்முறையில் ஆக்கித் தந்த மின் கவி பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முனைவர் நா.சாரதாமணி

பொருளடக்கம் 

1. இளைஞர்களுக்கு கல்வி தரும் இயல்பு                    
 
தற்போதைய கல்வி – கல்வி பற்றிய விவேகானந்தரின் சிந்தனைகள் – இயந்திரமான கல்வி – மாற்றப்பட வேண்டியவை.

2. நேர்மை                                                                                         

நொடிகளை வென்ற காளமேகம் நேர்மையைக் கடைப்பிடிக்க நேரத்தை செலவழியுங்கள் – பிள்ளைகளின் நேர்மை – உறவுகளால் உண்டாகும் ஆக்கமும் சரிவும்.

3. உறவுகளால் உண்டாகும் ஆக்கமும் இழப்பும்         
சூழ்ச்சி செய்யும் உறவினர்கள் – கூனியின் பேச்சு – சதா பாராட்டுபவர் அருகில் வேண்டாம் – வாழ்க்கையின் இன்னொரு பெயர் போராட்டம் – மனித வாழ்க்கை சுகமானது அல்ல

4. மௌனம் சாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்                  
பணிவு உயர்வானது – பிடிவாதமான மௌனத்தால் மாறியே அரசியல் சட்டம் – மௌனம் என்பது பலம் – மௌனமாய் இருக்கும் நேரம் – உன் தேசத்தை மாற்றுவது எப்போது

5. உன் தேசத்தை மாற்றுவது எப்போது?                       
தியாகம் செய்யுங்கள் – தலைவனின் கடமை தியாகம் செய்வதே – குருதியை உறிஞ்சும்  மரஅட்டைகள் – குடிசை அல்ல இது தேசம்

6. உங்கள் தேசத்தில் பிச்சைக்காரர்கள்            

நல்லதோர் வீணை  – தன் உயிரை தானமாக வேண்டுதல் வைத்த இளைஞர் – தந்தையை தெருவில் விட்டு அவலம் – குழந்தைகளின் ஏழ்மை நிலை – ஒரு குழந்தை கையேந்துவது பெற்றோரிடமே – சுயநலம் சாதிப்பது என்ன

7. எல்லாவற்றையும் தாங்கு                                                    
கோவிலின் கோபுரம் அதிகமாக வணங்கப்படும் – பொறுமையும் களிமண்ணும் – மற்றவரிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் – வசைபாடும் நபர்களுக்ககே அவர்களின் சொற்களும் சொந்தம்

8. வேண்டாத குணங்களின் ஆதிக்கம்                             
 
செருக்கு – கோபம்  – நான் படித்த ராமாயண நிகழ்வு – மோகம் – தேவையற்றவை

9.நமக்கென்ன என்ற மெத்தனம்                                         

மத்திஸ்ய நியாயம் – சுந்தோப சுந்த நியாயம் – அன்பு ஒரு மகத்தானது- பரிவு என்பது அடிப்படை

10. ஆளுமைத் தன்மை                                                               

திறமையும் வெற்றியும் – நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கு கொடு –  உலகத்திடம் ஒரு வேண்டுகோள்
எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரூர் கோவை
எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள்  இந்த விழாவில் கலந்து கொண்டனர்
11. சவாலும் சந்தோசமும்                                        
நேர்மையான பூதம் – வீரம் என்பது யாவருக்கும் உரித்தானது –  தியாகம் செய்பவர்கள் வீரம் மிக்கவர்கள் – மாற்ற வேண்டிய நிலை

12. உலகை மாற்றிய சிந்தனைகள்                                       
வாழ்வில் ரிஸ்க் எடுக்க தயங்க வேண்டாம் – திட்டமிடல் என்பது விதியை மாற்றும் – மாற்றி சிந்தனை செய்யுங்கள்

13. ஒருங்கிணைந்த மனமும் ஆற்றலும்                           
வரலாற்றை மாற்றிய சிந்தனைகள் – சாதனை படைக்கும் செயல்முறைகள் – நம்புங்கள் – பெறுங்கள்

14. முழுமையான ஈடுபாடு என்பது ஒரு சேவை         

தடைகளைத் தாண்டுவதற்காகவே வாழ்க்கை  – தன் புத்தி கூர்மையால் தாயை மீட்ட மகன் – யாராலும் எதையும் செய்யமுடியும் முழு ஈடுபாடு இருந்தால்

15. இயங்கிக்கொண்டே இருப்பது தான் இளமை     

தன் மனதை உற்சாகப்படுத்தி இயங்குபவனே மனிதன் – படித்தால் அறிவு வராது – ஆசிரியரை வழிகாட்டியாக வைத்துக்கொள்ளுங்கள் – கண்டிக்க தெரியாதவனுக்கு கருணை காட்டும் தெரியாது

16. குற்றங்களை சுமக்காதீர்கள்                                            

போராட தயாராகும் மனம் – பயன் கருதி பரிசுக்காக செய்யாதீர் – எதையும் நேர்மையாக சிந்தனை செய்யுங்கள்

17. தலைமைப்பண்பு                                                                  
அடங்கிய மனத்தின்   வல்லமை – விஸ்வரூபம்  எடுங்கள் – பேச்சு திறமை என்பது சிலருக்கு மட்டுமே உரித்தானது – உழைப்பு உயர்ந்தது
18. நிறைவான மனம் கலங்குவதில்லை                           
கஷ்டங்களும் சுகமானவையே – எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா – இருளான எண்ணங்களால் வாழ்க்கையை தொலைக்காதீர் – ஒரு அடி ஒரு நொடி உங்கள் வாழ்க்கையை மாற்றலாம் – சவால்கள் இல்லாத சாதனைகள் இல்லை

19. தன்னிடமுள்ளவற்றை உணர வேண்டும்                

வெற்றி கிடைப்பது எளிது அல்ல – வெற்றிபெற்ற மனிதர்களிடம் அடிப்படையான பண்புகள் உள்ளன – உங்கள் முன்னேற்றத்திற்கு உங்களை சுற்றியுள்ளவர்களும் ஒரு காரணமே – மனதில் மனிதர்களாக விளங்குபவர் உயர்வானவர்கள்

20. ஆபத்துகளைச் சந்திக்கும் துணிவு  உள்ளவர்களே சுதந்திரமானவர்கள்                                               
ஒரு மனிதனை செயல்படத் தூண்டும் விடயங்கள் – நீதியற்ற ஒப்புமைகள் செய்யாதீர்கள் – மகிழ்ச்சி தரும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்

 

முனைவர் நா.சாரதாமணி » இனியவை கற்றல் | பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (iniyavaikatral.in)

நேர்காணல் என்றால் என்ன?|நேர்காணல்-விளக்கம்|நேர்காணலின் வகைகள்

நேர்காணல் என்றால் என்ன - நேர்காணலின் வகைகள்
‘கற்றலின் கேட்டலே நன்று’! ஒரு புத்தகத்தைப் படிப்பதை விடவும் ஓர் அரைமணிநேர நேர்காணல் பலநூறு செய்திகளை நம் மனதில் பதிய வைத்துவிடும். இன்றைய தகவல் தொடர்பு சாதனங்களில் நேர்காணல் என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது. பேட்டி ஒரு கலை. அதற்கு அறிவும் அனுபவமும் வேண்டும்’ என்று ஆர். இராமச்சந்திர ஐயர் கூறுகின்றார். நேர்காணும் கலையாக விளங்குகின்ற பேட்டி என்பது ஒரு நெகிழ்வான முறையாகும்.

நேர்காணல்-விளக்கமும்
ஒருவரோடு தொடர்பு கொண்டு நேரிலோ, தொலைபேசி மூலமோ, கடிதம் வாயிலாகவோ விவரங்களைக் கேட்டு அறிவதைப் பேட்டி அல்லது நேர்காணல் என்கிறோம். இருவரோ சிலரோ பலரோ கூடி உரையாடுவது பேட்டியாகாது. பேட்டியில் கேட்கப் பெறுகின்ற, கேள்விகள் தகவல்களைப் பெறுவதற்காகக் கேட்கப் பெறுபவை, இத்தகைய நேர்காணல் இயல்பாக, இறுக்கமற்ற சூழலில் அமைய வேண்டும். கட்டுப்பாடோ, நெருக்கடியோ அச்சுறுத்தலோ நேர்காணலில் இருக்கக் கூடாது.
நோக்கம்

ஒவ்வொரு நேர்காணலும் ஏதாவது ஒரு நோக்கத்தோடு நடத்தப் பெறுகின்றது. பொதுவாக நேர்காணல் அடிப்படையாகக் கொண்டு அமையலாம். பின்வரும் நோக்கங்களை
1.நடப்பு நிகழ்ச்சிகளை அறிய
2.நிகழ்ச்சியின் விவரங்களை வெளிக்கொணர
3. பிறரது கருத்தை, கண்ணோட்டத்தை வெளிப்படுத்த
என நேர்காணல் அமையும்.

நேர்காணலின் வகைகள்
நேர்காணல் என்பது அதனை நடத்துகின்றவரின் திறமையையும் அணுகுமுறையையும் ஒட்டிப் பலவகைகளாக அமைகின்றன.

1.பேட்டி காண்பவர் கூச்சம், அச்சம் கொள்ளக் கூடாது.

2.முன்பாகவே பேட்டி தருபவரிடம் இடம், நேரம் ஆகியனவற்றை உறுதி செய்து கொண்டபின் பேட்டிக்குச் செல்ல வேண்டும்.

3.கேட்கப்பட வேண்டிய வினாக்களை முன்கூட்டியே தயாரித்து வைக்க வேண்டும்.

பேட்டி பலவகைப்படும். அவற்றுள் முக்கியமானவை:
1.ஆளுமை விளக்கப் பேட்டி
வியத்தகு சாதனைகள் செய்தவரையோ புகழ்பெற்ற ஒருவரையோ அவரது ஆளுமைத் தன்மையை வெளிக்கொணரும் வகையில் பேட்டி காண்பது இவ்வகையாகும். முதலமைச்சர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் போன்றவர்களின் பேட்டி இவ்வகையைச் சார்ந்ததாகும்.

2. செய்திப் பேட்டி
செய்தியைப் பெறும் நோக்கில், செய்தி தரும் ஒருவரைப் பேட்டி காண்பது செய்திப் பேட்டியாகும். இதில் செய்தியினைப் பெறுவது மட்டுமே நோக்கமாக இருக்கும். அதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கும் கேள்விகள் பேட்டியில் கேட்கப்படும்.

3.தொலைபேசிப் பேட்டி
இன்று ஊடகங்களில் பெருகி வரும் பேட்டியாக இம்முறை பிரபலமடைந்து வருகிறது எனலாம். செய்திகளை விரைந்து சேகரிக்க இம்முறை பயன்படுகிறது. இதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். ஆனால் நேரடிப் பேட்டியில் பேட்டியளிப்பவரின் முகபாவங்களையும் கண்களையும் பார்த்து அவர்களின் உணர்வுகளையும் உண்மைகளையும் அறிந்து கொள்ள இயலும், தொலைபேசியில் இந்த வாய்ப்பு இல்லை.

4.பேட்டி நடத்துதல் பேட்டி

நடத்துகின்றவர் சிறப்புத் திறமைகள் பெற்றிருக்க வேண்டும். பேட்டி என்பவர் பேட்டியாளரின் மனத்தில் நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டும். இனிமையாகவும் பொறுமையாகவும் பழகும் முறையின்மூலம் வேண்டிய தகவல்களைப் பேட்டியாளரிடமிருந்து பெறலாம்.

பேட்டி எடுப்பவர் கீழ்க்கண்டவற்றைக் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்.
1.முன் கூட்டியே திட்டமிடுதல்

2.கேள்விகளை முன்னரே தயாரித்தல்.

3. பேட்டிக்குரிய இடத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே தீர்மானித்தல், (சோலை (பார்க்), தனிமைப்படுத்தப்பட்ட யாருமில்லாத மரங்கள் செடிகொடிகள் நிறைந்த இடமாக இருந்தால் சிறப்பு. மேலும்,  மாலை நேரமாக இருத்தல் நலம். ஏனெனில்  சூரியன் இறங்கும் பொழுதாயின் பேட்டி கொடுப்பவர் மனதிலிருந்து நிறைய கருத்துகள் வெளிவரும். காலை – மதியம் நேரத்தில் நாம் நினைக்கின்ற அளவுக்குப் பேட்டியை அவ்வளவாகச் சிறப்பாக முடிக்க இயலாது.

4.பேட்டியாளரிடம் எதைப்பற்றிய பேட்டி என்பதைத் தெரிவித்துத் தயார்ப்படுத்துதல்

செய்ய வேண்டியவைகள்
1. பேட்டி எடுப்பவர் கேட்க வேண்டிய கேள்விகளை வரிசைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

2. பேட்டியாளரைப் பற்றியும், பேட்டிப் பொருள் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

3. ஆர்வமும் பொறுமையும் கவனமும் பேட்டியின்போது அவசியம்.

4. பேட்டியின் நோக்கத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.

செய்யக் கூடாதவைகள்

1. பேட்டி தருபவரை விடத் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கக் கூடாது.

2.இடையில் குறுக்கிடவோ, கூறும் கருத்துக்களை அலட்சியப்படுத்தவோ கூடாது.

3. கருத்து முரண்பாடுகளையோ, உணர்வுகளையோ வேறுபடுத்தக்கூடாது.

4.பேட்டியானது முடிந்தவரை பேட்டி எடுக்கும் அவரின் வீட்டில் இருக்கவே கூடாது. ஏனெனில் அவர்களது உறவினர்கள் அவ்வவ்போது இடையிடையே குறுக்கீடு செய்து கொண்டிருப்பார்கள். அதனால் பேட்டியை சரியான நேரத்திற்கோ அல்லது தெளிவான கருத்துக்கோ அங்கே இடம் இருக்காது.

இவை நேர்காணலின்போது கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும். பொதுவாக பேட்டியை எழுத்து வடிவமாகத் தர முற்படும்போது பேட்டி பற்றிய ஒரு சிறிய முன்னுரையைக் கொடுத்துவிட்டு, பேட்டி நடந்தது நடந்தபடியே கேள்விகளாகவும் பதில்களாகவும் சொற்களைக்கூட மாற்றாமல் அப்படியே எழுதுவது ஒரு முறையாகும்.

பேட்டியை எழுத்து வடிவில் தரும்போது பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்வது சிறந்தது.
1.அறிமுக உரை :பேட்டியைப் படிப்போர், எந்தச் சூழ்நிலையில் எப்படிப் பேட்டி நடந்ததென்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு தொடக்க உரை அமைதல் வேண்டும்.

2.பேட்டியின் சாரம் :
பேட்டியின் நோக்கத்தையும் பேட்டியின். சாரத்தையும் முதலிலேயே சுருக்கமாகச் சொல்வது பேட்டியை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும்.

3.விடைகளே முக்கியம் :
பேட்டியாளர் அளித்த விடைகள்தான் முதன்மையான இடத்தைப் பெற வேண்டும். கேள்விகள் துணை இடத்தைத்தான் பிடிக்க வேண்டும். கேள்விகள் பெரிதாக அமைதல் கூடாது.

4.தொடர்ச்சி :
கேள்விகளும் பதில்களும் ஒன்றற்கொன்று தொடர்ச்சியுடன் திகழ்தல் சிறந்தது. பேட்டியாளரின் பதிலிலிருந்தும் கேள்விகள் அமையலாம்.

5. பேட்டியாளர் பற்றிய விவரங்கள் :
பேட்டியின் மூலமாக பேட்டியாளர் பற்றிய விவரங்களும் அவரது சிந்தனைகளும் அவர் வழியாகவே வெளிப்படும்படி பேட்டியை அமைத்தல் வேண்டும். தற்காலத்தில் எளிதாகத் தகவல் பெறும் தன்மையால் பேட்டி முறையை ஊடகவியலாளர்கள் விரிவாகப் பயன்படுத்துகின்றனர்.

கருத்துக்களை உள்வாங்கி செய்திகளை உருவாக்க இது ஒரு சிறந்த முறையாகத் திகழ்கின்றது. நேர்காணல் நிகழ்ச்சி நிகழ்ச்சியைத் தொடங்கும்பொழுது, பார்வையாளருக்கு நேர்காணப்படுபவரைச் சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டும்.

1. நிகழ்ச்சியைத் தொடங்கும்பொழுது பார்வையாளருக்கு நேர்காணப்படுபவரைச் சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டும்.

2.நேர்காணப்படுபவர் குறைவாகப் பேசுதல் வேண்டும். அதாவது சுருக்கமான முறையில் கேள்விகளைக் கேட்க வேண்டும்.

3. நேர்காணப்படுபவரை நிறைய பேசவைக்கும் முறையில் கேள்விகள் அமைதல் வேண்டும்.

4. நேர்காணலுக்குரியவர் பேசிக் கொண்டிருக்கும்போது நேர்காண்பவர் அடிக்கடி குறுக்கிட்டுப் பேசக் கூடாது.

5. நிகழ்ச்சி தொடங்கும்போது வணக்கம் என்றும் முடியும்போது நன்றி. வணக்கம் என்றும் கூறுவதோடு, மகிழ்ச்சியையும் நிறைவையும் தெரிவித்துக் கொள்ளுதல் போற்றத்தக்கதாகும்.

6. புதுமையான முறையில் நேர்காணப்படுபவரை வரவேற்றும் நன்றி. தெரிவித்து நிகழ்ச்சியை மெருகேற்றலாம்.

7. தலைவர்கள், விடுதலை இயக்க வீரர்கள், கலைஞர்கள் இவர்களை நேர் காணும்போது புகைப்படங்கள், அவர்களின் சாதனைகள் ஆகியவற்றை இணைப்பு மொழியோடு கூறி அவர்களுடைய சிறப்பு நிலைகளைப் பார்வையாளருக்கு உணர்த்தலாம்.

8.நேர்காணப்படுபவருடைய கோபத்தைத் தூண்டுகிற முறையிலோ. குற்றஞ்சாட்டும் முறையிலோ கேள்விகள் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

9. நம் நாட்டை இழிவுபடுத்துகிற முறையிலான பதில்களை வரவழைக்கக் கூடிய வினாக்களை அறவே தவிர்க்க வேண்டும்.

10. நேர்காண்பவர் நிகழ்ச்சியை முடிப்பதற்கு முன், நேர்காணப்படுபவர் மக்களுக்கு ஆற்றிவரும் தொண்டினையும், நாட்டுக்கு அவரால் ஏற்பட்டுள்ள புகழையும் நன்மையையும் தொகுத்துச் சுருக்கமாகக் கூறுதல் நிகழ்ச்சிக்குப் பொலிவையும், நிகழ்ச்சியைக் கேட்போர். காண்போருக்கு நிறைவையும் பயனையும் உருவாக்கித்தரும்.

வினாக்கள் அமைதல்
நேர்காணப்படுகின்றவரின், அதாவது விடுதலை வீரர், எழுத்தாளர், சமூகத் தொண்டர், அறிவியல் வல்லுநர்,தொழில் வல்லுநர், கலை வல்லுநர், விளையாட்டு வீரர், தொழில் அதிபர், ஆன்மீகவாதி, அரசியல்வாதி, சிறுதொழில் செய்வோர் ஆகியோரின் ஆளுமைப் பண்பு வெளிப்படும் வண்ணம் மொழிநடை குன்றாமல் நல்ல தமிழ்நடையில் வினாக்ககள் அமைதல் வேண்டும், நேர்காணல் நிகழ்ச்சியில், விருந்தினரைப் பற்றி அறிவதில் வளர்ந்த-வளர்க்கப்பட்ட முறை கல்வித்தகுதிகள் – செய்யும் தொழில் – அதன்கண் கைக்கொண்ட முறைகள் மற்றவருடன் பழகும் முறை ஒத்துழைக்கும் பண்பு – சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு – விடுக்கும் செய்திகள் வாயிலாக முழு ஆளுமையையும் வெளிக்கொணரும் விதமாக வினாக்கள் அமைதல் நலம்.

கீழ்க்கண்டவைகள் போன்று மாதிரி நேர்காணல்கள் அமையலாம்
1.இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு சிறை சென்ற செம்மல் ஒருவரை நேர்காணல்.
2. சமூகத்தின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ள சமுதாயத் தொண்டர் ஒருவரை நேர்காணல்.
3. புகழ்பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரை நேர்காணல் செய்க. (கிரிக்கெட், வாலிபால், கூடை பந்து, கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, போன்றன…)
4. தம் ஆன்மீகச் சொற்பொழிவுகளால் பக்தி உணர்வினைப் பரப்பி வரும் ஆன்மீகவாதி ஒருவரை நேர்காணல்.
5.எழுத்தாளர் ஒருவரை நேர்காணல் செய்க.
6. ஜனாதிபதி ஒருவரோடு நேர்காணல் செய்க.
1.இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு சிறை சென்ற செம்மல் ஒருவரை நேர்காணல்.
நேர்காண்பவர் :  (அறிமுக உரை)
ஐயா! வணக்கம்! பாரதத்தாயின் அடிமைத்தளையை அறுத்தெரிந்து எங்களுக்கெல்லாம் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற உரிமைகளை வாங்கித்தந்த தியாகச் செம்மல்களுள் ஒருவராக விளங்கும் தங்களைத் தொலைக்காட்சியின் / வானொலியின் சார்பாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தமையைப் பெருமையாகக் கருதுகிறோம். தங்களின் அனுபவங்களை நேயர்களுக்கு வழங்குமாறு வேண்டுகிறோம்.

1. தாங்கள் எத்தனையாவது வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டீர்கள்?

2. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற உணர்வினை உருவாக்கிய நிகழ்ச்சியைச் சற்று விளக்குங்களேன்?

3. தங்களின் பள்ளிப்பருவ வாழ்க்கையைக் கூறுங்கள்.

4. உங்கள் பெற்றோர் இப்போராட்டத்தில் ஈடுபட அனுமதித்தார்களா? உங்கள் குடும்பத்தில் உங்களைத் தவிர வேறு யாரேனும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்களா?

5.நீங்கள் காந்தி அடிகளின் அறவழிப் போராட்ட முறையை ஆதரித்தீர்களா? அல்லது திலகர், நேதாஜி போன்றவர்களின் தீவிரவாத முறையைப் பின்பற்றினீர்களா?

6. திலகரின் வழிமுறைகளிலிருந்து மாறி எப்படி காந்தியடிகளைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்பட்டீர்கள்?

7. தாங்கள் எந்தெந்தப் போராட்டங்களில் பங்கு கொண்டீர்கள்? சிறைப்படுத்தப்பட்டீர்களா? எங்கே, எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தீர்கள்?

8. தாங்கள் சிறையிலிருந்தபோது நிகழ்ந்த மறக்கமுடியாத நிகழ்ச்சியைக் கூறுங்கள்.

9. காந்தியடிகளை முதன்முதலில் சந்தித்தபோது உங்கள் மனநிலை எங்ஙனம் இருந்தது? அவர் இறந்தபோது தங்களுடைய மனநிலை எங்ஙனம் இருந்தது?

10. இந்தியா விடுதலை அடைந்தபோது தங்களுடைய தியாகத்திற்கு நல்ல பலன் கிடைத்ததாகக் கருதினீர்களா?

11. இன்றைய இளையதலைமுறைக்குத் தாங்கள் எத்தகைய அறிவுரையை வழங்குகிறீர்கள்?

முடிவுரை
தங்களது கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறியதன் மூலம் கடந்த 75 ஆண்டு கால இந்திய வரலாற்று நிகழ்ச்சிகளை எங்களுக்குக் கூறியதோடு, எங்களுடைய கடமைகளையும் உரிமைகளையும், ஆற்ற வேண்டிய பணிகளையும் உணர்த்திய தங்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

நன்றி, வணக்கம்.
2. சமூகத்தின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ள சமுதாயத் தொண்டர் ஒருவரை நேர்காணல்.
நேர்காண்பவர் : (அறிமுக உரை)
ஐயா! வணக்கம்! கடந்த 50 ஆண்டுகளாகச் சமூக மேம்பாட்டிற்காகத் தன் இல்லற வாழ்க்கையையும் துறந்து தன்னலமற்ற தொண்டாற்றி வரும் நல்லவர் ஒருவரைத் தொலைக்காட்சி வானொலி மூலமாக அனைத்து மக்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

1.சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற நோக்கம் சிறுவயதிலிருந்தே தோன்றிவிட்டதா? அத்தகைய நோக்கம் எப்படி ஏற்பட்டது?

2. ஏழ்மை மிக்க குடும்பத்தில் பிறந்து பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாமல் போனதால், தனக்கு ஏற்பட்ட நிலைமை மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகச் சமுதாயப் பணியில் ஈடுபட்டதாகக் கூறினீர்கள். அப்படியானால் ஏழைகளுக்குக் கல்வி வாய்ப்பை அளிக்கும் பணியில் மட்டுமே ஈடுப்பட்டுள்ளீர்களா? வேறு பணிகள் உண்டா?

3. உதவி தேவைப்படுபவர்களைத் தேடிச் சென்று நீங்களே உதவுகிறீர்களா? அல்லது அவர்கள் உங்கள் உதவிவேண்டி வருகிறார்களா?

4. உங்களுடைய இத்தொண்டிற்கு மக்களிடையே எத்தகைய வரவேற்பு உள்ளது?
 
5. அரசாங்கத்தின் ஆதரவு ஏதேனும் உங்களுக்குக் கிடைத்துள்ளதா?

6. சமூக சேவையில் முழுமையாக ஈடுபடுவதற்காகவே நீங்கள் இல்வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளவில்லையா?

7. பல பணிகளுக்கிடையே பள்ளியையும் அனாதை இல்லத்தையும் நடத்துவதற்குத் தங்களுக்குத் துணையாக வேறு யாரேனும் உள்ளனரா?

8. நீங்கள் நடத்தும் ஆதரவற்றோர் பணியில் எத்தகைய பயிற்சிகளை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறீர்கள்?

9. இக்கால இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தாங்கள் ஏதேனும் அறிவுரை வழங்க இயலுமா?
நன்றி, வணக்கம்

மேலும் இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சிகளைக் காண்க..

 

அன்னை தந்த ஒளி சிறுகதைகள் காட்டும் குடும்பம்

அன்னை தந்த ஒளி சிறுகதைகள் காட்டும் குடும்பம் - சே.சீனிவாசன்
முன்னுரை
               
சமுதாயத்தில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்திலும் சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருவது குடும்பமே ஆகும். குடும்பம் தான் சமுதாயத்தின் அடையாளமாக விளங்குகிறது. குடும்பமே சமுதாயம் உருவாக காரணமாக இருந்து வருகிறது. மனிதர்கள் தங்கள் நிலையிலிருந்து தாளாமலும் அன்பு, பரிவு, பாசம், ஒற்றுமை போன்ற நிலையில் இருந்து தவறாமலும் மிருகத்தன்மையை ஒழித்தும் சரியான பாதையில் வாழச் செய்வது குடும்ப அமைப்பே ஆகும். குடும்ப அமைப்பின் மூலம் மனிதர்கள் தங்களுடைய தேவைகளைச் சரியான வழியில் பெற முடிகிறது.

குடும்பச் சமூகம்
               
குடும்பமானது தனி குடும்பம், கூட்டுக் குடும்பம் என்ற இரு நிலையில் சமுதாயத்தில் செயல்பட்டு வருகிறது. தந்தை, தாய்,மகன் என்று குறைந்த நபர்களைக் கொண்டு விளங்குவது தனி குடும்பம் ஆகும். ஒரு மரத்தில் பல கிளைகள் இருப்பது போல், ஒரு குடும்பத்தில் உறவுகளுடைய பல நபர்கள் சேர்ந்து வாழ்வது கூட்டுக் குடும்பம் ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களிலும் கடல் அலைகள் வந்து வந்து செல்வதைப் போன்று நன்மை, தீமைகள், இன்ப துன்பங்கள் வந்து வந்து செல்லும். இதனைச் சரி செய்து சீராக நடத்திச் செல்வது அந்தந்தக் குடும்பங்களின் தலைவரையே சாரும்.
               
“குடும்பமே சமூகத்தின் மிகச்சிறிய ஆனால் அதிநெருக்கமான குழுவாக உள்ளது. இங்குதான் மனித வர்க்கத்தினுடைய ஒற்றுமை, பாசம் போன்ற உன்னத  ஆசைகளும், தேவைகளும் முழுமையாக திருப்தி பெறுகிறது”1 என்று கூறுகிறார் குமாரசாமி.
     
“குடும்ப ஒற்றுமைக்குத் தலைமை பண்பும், நிர்வாக திறமையும் அவசியம் இருத்தல் வேண்டும்”2 என்று கூறுகிறார் ரவிச்சந்திரன்
               
குடும்ப அமைப்பு நிலைக்க அன்பு உணர்வும், பிணைப்பும் எல்லா நிலைகளிலும் இருக்க வேண்டும். அங்ஙனம் இல்லாது தான் சென்ற உணர்வு மேலிட்டால் குடும்பஅமைப்பு சிதையும். இம்முனைப்பு இல்லாத அன்பார்ந்த செயல்பட்டால் குடும்பம் தழைக்கும். அது மட்டுமல்லாமல் சமுதாயத்தின் நன்மதிப்பைப் மபெறும்.

“அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு”3
என்று கூறுகிறார் திருவள்ளுவர்.  குடும்பத்தில் சிக்கல்கள் என்பது இயற்கையானதே. நிலவில் களங்கம் இருப்பது போன்று குடும்பத்தில் சிக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். அதனைப் பெரிய சுமையாக கருதாமல் சாதாரணமாக எண்ணி செயல்பட வேண்டும். அப்போதுதான் குடும்பத்தில் அமைதியை நிலைநிறுத்த இயலும். அதுமட்டுமல்லாமல் குடும்பம் கட்டுக்கோப்பாக இயங்கும் நிலையில் சிக்கல் ஏற்படுவதற்கு இடமில்லை.
 “குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டியது மிகவும் விரும்பத்தக்கது தான். ஆனால் அமைதி ஒன்றே அதற்கு இறுதியான லட்சியமாகி விட முடியாது. மண வாழ்வின் நிலை என்பது கட்டுப்பாடான நிலை என்று நான் கருதுகின்றேன்”4
என்று கூறுகிறார் மகாத்மா காந்தி. மேலும் குடும்பங்கள் வழி வழியாக எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பதையும் பாசம் உறவுகள் இல்லறம் வறுமை வேதனை ஆகியன எவ்வாறு குடும்பத்தில் இருக்கின்றன என்பதையும் ஆசிரியர் தம் கதைகளில் எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும் இவ்வாய்வின் வழி ஆராயப்படுகிறது.

தந்தையின் பாசம்
               
‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்று ஒளவைக் கூற்றின்; மூலம் தந்தையின் சிறப்பினை அறியலாம். ஒரு குடும்பத்தினைச் சீரான அமைப்போடு நல்ல நிலையில் நடத்திச் செல்வது தந்தையின் கடமையாகும். குடும்பத்தைத் தாங்கும் தூணாக அவர் திகழ்கின்றார். அவர் இல்லை என்றால் குடும்பமானது பல்வேறு இன்னல்களையும் அவமானங்களையும் அடையும். தந்தை குழந்தைகளை நல்ல நெறியில் வளர்ப்பவர். குடும்பத்திற்கு உண்டான தேவைகளை அறிந்து செய்வதும் தந்தையின் கடமையாகும்.
                “அரிதொரு வகையான் அறிவின் தாய் அன்பில் நனைந்து உரிய வழி வகுத்தவன்: வித்தினை மகிழ்ந்து விதைத்தவன் எரிகின்ற மெழுகு போல் இரு என்று வாழும் நெறி காட்டியவன் பரிவையுள் வைத்து என்னை அடித்து வளர்த்தவன் என் தந்தை”5 என்று கூறுகிறார் நாகராஜன். இதன் மூலம் தந்தையின் கடைமையும், பொறுப்பையும் அறிந்து கொள்ளலாம்.
               
‘அவள் வளர்த்த கடாரி’ என்ற கதையில் வீரப்பன் தன் மகள் வள்ளியாத்தாளுக்குத் திருமணம் செய்வதற்காக ஒரு கடாரி வளர்த்து வந்தான். அதனை விற்பதற்காக சந்தைக்கு ஓட்டிச் செல்லும் வழியில் மிரண்டு காட்டுக்குள் ஓடியது. அங்கு புலியால் அடித்து கொல்லப்பட்டு கிடந்தது. அதனை கண்டு வருந்தி,  “அவளுக்குச் செய்ய வேண்டிய கடமையை விரைவில் செய்ய முடியாமல் போய்விட்டதே”6 என்று கூறுகிறான். இதன் மூலம் மகளின் திருமணம் தடைபட்டு விட்டது என்பதை எண்ணி வருந்தும் தந்தையின் பாசத்தினை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
               
“சீர்” என்ற கதையில் சொங்கப்ப கவுண்டர் தான் அனைத்தையும் இழந்து வறுமையில் இருந்தபோது அவர் மகள் குழந்தை பேற்றிற்காக வருகிறாள். குழந்தை பிறந்து செல்லும்போது சீராக கொடுப்பதற்கு ஒரு கடாரியை வளர்க்கிறார். ஆனால் அவளுக்கு கொடுக்கும் நாள் அன்று கடாரி இறந்து விடுகிறது.அதனை நினைத்து வருந்தி, “வள்ளியாத்தா என் ஆசை எல்லாம் வீணாய் போச்சு”7 என்று கூறுகிறான். இதன் மூலம் மகளுக்குச் செய்ய வேண்டிய கடமையானது தடைபட்டதை எண்ணி வருந்தும் தந்தையின் பாசநிலையை ஆசிரியர் வெளிப்படுத்தி உள்ளார்.
               
“சீதனம்” என்ற கதையில் வள்ளியாத்தாவின் கணவன் கந்தப்பன். அவன் கள்ளச்சாராயம் காய்ச்சி போலீசில் மாட்டிக் கொள்கிறான். வெளியில் கொண்டு வருவதற்குப் பணம் தேவைப்பட வள்ளியாத்தா தந்தையை நாடிச் செல்கிறாள். அப்போது அவள் தந்தை,
“வள்ளியாத்தா நான் உனக்கு பணம் கொடுக்கிறேன். நீ இப்பவே உங்கள் ஊருக்குப் போய் அவருக்கு ஆறுதல் சொல்லு”8 என்று கூறுகிறான். இதன் மூலம் மகளின் துன்பத்தைப் போக்கும் தந்தையின் பாச உணர்வினை ஆசிரியர் வெளிக்காட்டியுள்ளார்.

தாயின் பாசம்
               
உலகமானது எவ்வளவு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து வெற்றி பெற்று முன்னேற்றம் அடைந்தாலும், அதைக் காட்டிலும் சிறந்தது தாய்மையை ஆகும். தாயில்லாமல் உலகத்தில் எந்த மனிதனும் சிறப்பாக வாழ முடியாது. குழந்தைகளின் மனநிலை அறிந்து அவர்களின் துன்பத்தினைப் போக்க வல்லவள் தாயே. தாய் தன் பிள்ளைகளிடம் செலுத்தும் அன்பினை அளவிட முடியாது. சமுதாயத்தில் ஒரு பெண்ணுக்கு ஓர் இடம் கிடைப்பது தாய்மையால்தான். தாய் தெய்வத்திற்குச் சமமாவாள். “குழந்தைகளிடம் தந்தையாரை விட தாய்மார்கள்தான் அதிக வாஞ்சையுடன் இருப்பார்கள். ஏனெனில் குழந்தைகளைப் பெறுகின்ற கஷ்டம் தாய்மார்களுக்குத் தெரியும், தவிர குழந்தைகள் தங்களுடையது தான் என்று தாய்மார்களுக்கு அதிக நிச்சியமாகத் தெரியும்”9 என்று அரிஸ்டாட்டில் கூறுகிறார்.
               
“அன்னை தந்த ஒளி” என்ற கதையில் அனாதையான சொங்கப்பன் ராமாத்தாளுக்கு ஆப்பக்கூடையை ஓர்நாள் சுமக்கிறான். அன்று முதல் தினமும் சுமக்கிறான். ராமாத்தாளுக்கு மகன் என்கின்ற உணர்வு ஏற்படுகிறது. திடீரென்று அவள் நோய்வாய்ப்பட சொங்கப்பனை அழைத்து தான் சேர்த்து வைத்த பணத்தை அவனிடம் கொடுத்து, “சொங்கப்பா, நீ இந்த பணத்தை வைத்துக்கொள். நாற்பது வருஷமா ஆப்பம் சுட்டு சம்பாதிச்ச மிச்சம் எல்லாம் உனக்குத்தான். அதை வைத்து ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சுகமா பிள்ளை குட்டிகளோடு வாழ வேண்டும்”10 என்று கூறுகிறாள். இதன்மூலம் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கு சிறு வயது முதல் உழைத்த அனைத்து பணத்தையும் கொடுக்கும் தாய்மை நிலையை ஆசிரியர் வெளிக்காட்டி உள்ளார்.
           
“மாவிளக்கு” என்ற கதையில் தன்னுடைய வளர்ப்பு மகளான வள்ளியாத்தாளுக்கு சிறுவயதில் நோய் ஏற்பட, அது தீருவதற்காக முத்தம்மாள் மாரியாத்தாளுக்கு மாவிளக்கு எடுப்பதாக வேண்டி, அன்று முதல் வருடா வருடம் மாவிளக்கு எடுக்கிறாள். கண் தெரியாத வயதான நிலையிலும் அதை நிறைவேற்றுகிறாள். அதை அறிந்து வள்ளியாத்தாள், இந்த நிலையிலும் எப்படி நிறைவேற்றினாய் அம்மா என்று கேட்க அதற்கு முத்தம்மாள், “வயலிலே நெல் அறுவடை காலத்தில் எத்தனையோ பேர் வேலை செய்ய முடியாத கிழவிகள் வந்து அங்கே நிலத்தில் உதிர்ந்து விழுந்து கிடக்கிற நெல்லை எடுத்துப் போவார்கள். அதை நான் பார்த்திருக்கிறேன் அந்த விசை நானும் அப்படி பண்ணினேன்”11 என்று கூறுகிறாள். இதன்மூலம் மகளின் நலனுக்காக தன்னுடைய குறையையும் பொருட்படுத்தாமல் வேண்டுதலை நிறைவேற்றும் தாயின் பாச உணர்வை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

பிள்ளைகளின் பாசம்
               
பெற்றோர்களின் மானத்திற்கு என்றும் ஒரு அவமானமும் ஏற்படுத்தி விடாமல் அவர்களுக்கு நற்பெயரைச் சேர்ப்பது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமையாகும். முதியவர்கள் ஆனபோது பெற்றோர்களை நீக்கி விடாமல் அவர்களுக்குத் துணையாய் நின்று தேவையான பணிவிடைகளைச் செய்ய வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குறிப்பிடுவதன் மூலம் பெற்றோர்கள் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை அறியலாம். “தாயையும் தந்தையும் ஆதரித்தல் அமைதியானதொரு வாழ்க்கை நடத்துதல் இதுதான் மாபெரும் நற்பாக்கியம்”12 என்று கூறுகிறார் புத்தர்.

“அவள் வளர்த்த கடாரி” என்ற கதையில் வீரப்பன், மகள் வள்ளியாத்தா கல்யாணத்திற்காக ஒரு கடாரியை வளர்க்கிறான். அதை விற்க சந்தைக்கு அழைத்துச்  செல்கிறான். தந்தையைப் பிரிய விரும்பவில்லாத வள்ளியாத்தா அதை விற்க வேண்டாம் என்கிறாள். அவள் வார்த்தையை மீறி விற்கச் செல்லும் போது அந்தக் கடாரி புலியால் கொல்லப்படுகிறது. வீரப்பன் அதை தன் மகளிடம் கூற, அவள் மகிழ்ந்து, “ஐயா கடாரி போனால் போகிறது. அதற்காக மனதிலே உங்களுக்கு கவலை வேண்டாம். அது போனால் இன்னொன்று வாங்கி வளர்த்தால் போகிறது”13 என்று கூறுகிறாள். இதன் மூலம் தந்தையைத் தனிமையில் விட்டு விட்டு திருமணம் செய்து கொண்டு செல்ல விருப்பமில்லாத மகளின் பாச உணர்வினை ஆசிரியர் வெளிப்படுத்தி உள்ளார்.
           
“அன்னை தந்த ஒளி” என்ற கதையில் சொங்கப்பன் தனக்கு கிடைத்த வளர்ப்புத் தாய் இறக்கும் தருவாயில் தன்னிடம் கொடுத்த பணத்தைக் கொண்டு தன் தாய்க்கு மோட்சம் கிடைப்பதற்காக பல வழிகளைத் தேடுகிறான். அச்சமயம் கோயில் திருப்பணி நடக்கிறது. அப்பணத்தை அதற்கு கொடுத்துவிட்டு, “மோட்சம் எல்லாத்தையும் அம்மாளுக்கே சாமி கொடுக்கட்டும்”14 என்று கூறுகிறான். இதன் மூலம் இறந்த தாய்க்கு நல்லதொரு வகையான வீடு பேறு கிடைப்பதற்கான வழியினை அறிந்து நிறைவேற்றும் மகனின் பாசத்தை ஆசிரியர் புலப்படுத்தி உள்ளார்.
           
“பழிக்குப் பழி” என்ற கதையில் முத்துசாமி என்பவன் வேலுச்சாமி கவுண்டர் என்பவரின்  சதியின் காரணமாக சிறைக்குச் செல்கிறான். அவன் விடுதலையாகி வந்து கவுண்டரைக் கொல்வதற்காக காத்திருக்கிறான். அப்போது தன் தந்தையை நினைத்து, “நான் ஜெயிலுக்குப் போயிராவிட்டால் அவரும் இவனைப் போல் தான் தளர்ச்சியில்லாமல் இருந்திருப்பார். என் வீட்டில் அரிசி கொட்டி கிடக்காவிட்டாலும் வேலை செய்து சம்பாதித்து அவரை நான் நன்றாக வைத்திருப்பேன். இப்போ எப்படி இருக்கிறாரோ?”15 என்று வருந்தி கூறுகிறான். இதன் மூலம் தான் இல்லாத காலத்தில் தந்தை எவ்வாறெல்லாம் துன்பங்கள் அடைந்து இருப்பார் என்று என்னும் மகனின் வருத்தத்தை ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.

“மாவிளக்கு” என்ற கதையில் தன்னுடைய வளர்ப்பு தாய் முத்தம்மா கண் தெரியாத நிலையிலும் தன் நலனுக்காக மாவிளக்கு எடுத்ததை அறிந்து வள்ளியாத்தாள் கண்ணீர் விட்டு
“தாயில்லா குழந்தையான எனக்கு மாரியாத்தாள் தான் இந்த தாயை அனுப்பினாள்”16 என்று கூறுகிறாள். இதன் மூலம் தன்னுடைய மகளின் நலனே சிறந்தது என்று கருதும் தாய் கிடைத்ததை எண்ணி பெருமைப்படும் மகளின் பாசஉணர்வை ஆசிரியர் வெளிக்காட்டியுள்ளார்.
           
“சீர்” என்ற கதையில் சுங்கப்ப கவுண்டர் மகள் வள்ளியாத்தாளுக்குச் சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைக்கிறார் மகள் கற்பவதி ஆகிறாள். தாயில்லா அவளை அழைப்பதற்காக அவர் செல்ல அப்போது தந்தையின் மீது கொண்ட பாசத்தினால் அவள்  “எதற்கப்பா உங்களுக்கு வீண் தொந்தரவு. அம்மா உயிரோடு இருந்தால் வர வேண்டியதுதான் உங்களுக்குக் கஷ்டம் இருக்காது”17  என்று கூறுகிறாள். இதன் மூலம் தந்தை எந்தவிதச் சிறு துன்பத்தையும் அடையக் கூடாது என்று எண்ணும்; மகளின் உயரிய பாசநிலையை ஆசிரியர் வெளிக்காட்டியுள்ளார்.

கணவன் மனைவி பாச உறவுகள்
               
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது நலமாகும். விட்டுக் கொடுத்து வாழ்வதன் மூலம் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வது சிறப்படையது ஆகும். மனம் விட்டு பேசி எதையும் மறைக்காமல் வாழ்ந்தால் குடும்பம் சிறப்புடையதாக அமையும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் மீது அன்பு செலுத்தி வாழ வேண்டும். “கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அன்பு, பாசம், பற்று, நட்பு, ஒற்றுமை, விட்டுக் கொடுத்தல் ஆகிய இசைவு, பண்பு, குடும்பப் பணிகளைப் பகிர்ந்து செய்தல், குடும்ப நலன் அழிக்கும் செயல்களை நீக்குதல் போன்றவை மேற்கொள்ளப்படுவது இன்றியமையாதது”18 என்று கூறுகிறார் குமாரசாமி.
           
“சீதனம்” என்ற கதையில் கிழவனும் கிழவியும் அன்பானது ஒரு வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சமயம் கிழவன் இரவில் நெடுநேரம் இருமி கொண்டிருந்தான். கிழவி தூக்கம் கலைந்து எழுந்து கிழவனிடம் அன்புடன், “ரெண்டு மிளகு கொண்டு வரட்டுமா அதை வாயில் போட்டு மெல்லுங்கோ இருமல் நின்று போகும்”19 என்று கூறுகிறாள். இதன்மூலம் கணவனுக்கு மனைவி துன்பகாலத்தில் துணை நிற்பதை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

தொகுப்புரை
📍குடும்பத்தின் தூணாக தந்தை திகழ்வதையும், குழந்தைகளைக் காத்து அவர்களின் தேவையை நிறைவேற்றி பிள்ளைகளின் ஆசைக்களுக்காகவே வாழும் ஒப்புயர்வற்ற ஒருவாராக தந்தை வாழ்வதையும்; இயல்வழி அறியமுடிகிறது.

📍குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களைக் காப்பவளாகவும், குழந்தையின் எதிர்காலத்தைச் சிறப்புடையதாக செய்பவளாகவும், குழந்தைகளை அரவணைத்து அன்பு காட்டுபவளாகவும் தாய் திகழ்ந்துள்ளதை அறியமுடிகிறது.

📍பிள்ளைகள் பெற்றோர்களின் இன்னல்களைத் தீர்த்து வைப்பதையும், அவர்களுக்கு ஏற்படும் அவமானங்களைப் போக்குபவர்களாகவும், தன் பெற்றோர்களுக்கு ஊறு விளைவித்தவரைத் தண்டிக்கும் தன்மை உடையவர்களாகவும் படைத்துக் காட்டப்பட்டுள்ளனர்.

📍கணவன் மனைவி விட்டுக் கொடுத்து வாழும் தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், துன்பகாலத்தில் துணையாக இருக்க வேண்டும் என்பதையும் இயல் வெளிப்படுத்தியுள்ளது.

சான்றெண் விளக்கம்
1.சி.என்.குமாரசாமி, பெண்ணிய நோக்கில் பாரதி, ப.192.

2.எ.இரா.ரவிச்சந்திரன்(ப.ஆ), தற்கால நாவல்களில் காணலாகும் சமூக பிரச்சனைகளும் தீர்வுகளும் ப.160.

3.குறள்.75.

4.அரு.ராமநாதன்(ப.ஆ), மகாத்மா காந்தி பொன்மொழிகள், ப.16.

5. நாகராசன், இதயமே எழுக, ப.70,

6.பெ.தூரன், அன்னை தந்த ஒளி, ப.32.

7.மேலது, ப.68.

8.மேலது, ப.92.

9.அரு.ராமநாதன் (ப.ஆ), சிந்தனையாளர் அரிஸ்டாட்டில், ப.162.

10.பெ.தூரன், அன்னை தந்த ஒளி, ப.42.

11.மேலது, ப.61.

12.அரு.ராமநாதன்(ப.ஆ), புத்தரின் பொன்மொழிகள், ப.33.

13.பெ.தூரன், அன்னை தந்த ஒளி, ப.32.

14. மேலது, ப.44.

15.மேலது, ப.53.

16.மேலது, ப.61.

17.மேலது, ப.66.

18.சி.என்.குமாரசாமி, பெண்ணிய நோக்கில் பாரதி, ப.197,

19.பெ.துரன், அன்னை தந்த ஒளி, ப.91,

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

சே.சீனிவாசன்,

முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி, நாமக்கல்.

 

குறுந்தொகையில் பாலைநிலம்

குறுந்தொகையில் பாலைநிலம் - ம. அபிஷேக்

நல்ல குறுந்தொகை என்று அழைக்கப்பெறும் குறுந்தொகை சங்க நூல்களில் முதலில் தொகுக்கப்பெற்றது என்று குறுந்தொகை உரையாசிரியர்கள் கருதுகின்றனர். இந்நூலில் முதல், கரு, உரிப்பொருள்கள் அகநானூற்றைப்போல விரிவாகக் காணப்படவும் இல்லை. திருக்குறளைப்போல அறவே நீக்கப்படவும் இல்லை. விரிவும் சுருக்கமும் இன்றி அகன் ஐந்திணை ஒழுக்கங்களையும், இயற்கைச் சூழல்களையும் பண்டைக்காலச் சிறப்புகளையும் வேறு பல அரிய பொருள்களையும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் இக்குறுந்தொகை உணர்த்துகிறது.
               

இந்நூலுக்கு 1915இல் திருக்கண்ணபுரத்தலத்துத் திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கன் என்பவர் குறுந்தொகை மூலமும் புத்துரையும் என்ற பெயரில் பதிப்பொன்றை வெளியிட்டார். அப்பதிப்பே குறுந்தொகை மூலமும் உரையுமாக அமைந்த முதற்பதிப்பாகும்.
குறுந்தொகைக்குப் பல உரைகள் வந்துள்ளன. அவற்றில் சில.


1.தி.சௌ. அரங்கனாரின் குறுந்தொகை மூலமும் புத்துரையும்              -1915


2.இராமரத்தினத்தின் குறுந்தொகை உரை                                                    -1930


3.உ.வே.சா அவர்களின் குறுந்தொகை உரை                                                -1937


4.இரா.இராகவையங்காரின் குறுந்தொகை உரை                                          -1947


5.பொ.வே. சோமசுந்தரனாரின் குறுந்தொகை உரை                                      -1955


6.சாமி. சிதம்பரனாரின் குறுந்தொகைப் பெருஞ்செல்வம்                              -1983


7.மு. சண்முகம்பிள்ளையின் குறுந்தொகை மூலமும் உரையும்                     -1985
 

               மேற்கண்ட குறுந்தொகைப்பதிப்புகள் சிறப்புப் பெற்றவை. இவற்றுள் உ.வே.சாவின் குறுந்தொகை உரை அறிஞர்கள் பலரால் போற்றப்பெறுகிறது. பழுத்த அனுபவத்தின் பயனாக உ.வே.சா தம் 82ஆம் அகவையில் குறுந்தொகைக்கு உரையெழுதிப் பதிப்பித்தார்.                
                தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக ஓலைச்சுவடியியல் துறைத்தலைவராக இருந்த  மு.சண்முகம்பிள்ளையின்  குறுந்தொகையுரை அப்பல்கலைக்கழகத்தால் 1985இல் வெளியிடப்பெற்றது. பாடலின் தலைப்பில் திணையையும் கூற்றையும் சுட்டும் முறையில் இது அமைந்துள்ளது. இந்நூலின் பின்னிணைப்பில் உள்ள சொல்லடைவும் பொருளடைவும் சங்க இலக்கியச் சொற்பொருளாய்வுக்குப் பயன்படும் என்று இவர் தெரிவிக்கிறார்.


இவருடைய கருத்துப்படி திணை தோறும் பாடல்கள்


1.குறிஞ்சித்திணைப் பாடல்கள்                                 -146


2.முல்லைத்திணைப்பாடல்கள்                                 – 44


3.மருதத்திணைப்பாடல்கள்                                      – 50


4.நெய்தல்திணைப்பாடல்கள்                                   – 71


5.பாலைத்திணைப்பாடல்கள்                                   – 90
                                                                                                                                                                                                      ————
                                                                                             

                                                                                            401                                                                                           
               

மேற்கண்ட குறுந்தொகைப் பதிப்புகள் அறிஞர்களால் போற்றப்படுகின்றன. ஒவ்வொரு பதிப்பும் ஒவ்வொரு சிறப்புடன் அமைந்தாலும் உ.வே.சா வின் பதிப்பு முதன்மையானதாகக் கருதப்படுகிறது.


பாலைத்திணை


பாலைத்திணையைப்பற்றி பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம்

“அவற்றுள்

நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்

படுதிரை வையம் பாத்தியப் பண்பே”1
               

என்று கூறுகிறது. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்,என்ற ஐந்திணைகளுள் நடுவிலிருக்கும் பாலை நீங்கக் கடலால் சூழப்பெற்ற இந்நில உலகத்தைப் பகுத்துக்கொண்டனர் என்கிறார் தொல்காப்பியர். பாலை நிலம் என்று தனியாக ஒரு நிலம் இல்லாததால் அதனை நீக்கினார் என்று உணரமுடிகிறது. மேலும்


“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு

முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே”2
               

என்ற அடிகளில் பாலை நிலத்தின் சிறுபொழுது நண்பகல், பெரும்பொழுது இளவேனில், முதுவேனில் என்று அறியமுடிகிறது. பின்பனிக்காலமும் பாலை நிலத்தின் பெரும்பொழுது என்றும் தொல்காப்பியர் கூறுகிறார்.இதனை,

“பின்பனி தானும் உரித்தென மொழிப என்ப”3
               

என்ற அடி உணர்த்துகிறது. பாலை என்னும் அகத்திணைக்குப் புறத்திணையாக வாகைத்திணையைத் தொல்காப்பியம் சுட்டுகிறது.இதனை

“வாகை தானே பாலையது புறனே”4
                

 என்ற நூற்பா உணர்த்துகிறது. பாலைநிலம் பற்றி தொல்காப்பியர் மேற்கண்ட கருத்துக்களைக் கூறி இருந்தாலும் இளங்கோவடிகளே பாலை நில இலக்கணத்தைத் தெளிவாக உணர்த்துகிறார்.
               

குறிஞ்சியும் முல்லையும் வேனிலின் வெம்மையால் நல்ல தன்மைகளை இழந்து, பாலை நிலமாக மாறும் என்று பாலைநிலத்தின் இயல்பை சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதனை

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையால் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”5


என்ற அடிகள் விளக்குகின்றன. குறுந்தொகையில் 90 பாடல்கள் பாலைத்திணைப் பாடல்களாகும். அவை.


7,11,12,15,16,20,22,27,28,30,


37,39,41,43,44,48,56,59,63,67,


71,77,79,84,104,124,130,131,135,137,


140,144,147,149,151,154,168,174,180,189,


192,207,209,211,213,215,216,218,224,229,


232,235,237,250,253,254,255,256,260,


262,266,267,273,274,277,278,281,282,283,


285,307,329,331,338,343,347,348,350,352,


356,363,369,378,380,383,388.390,395.396,398
               

பாலை நிலத்தில் வெம்மை மிகுதியினால் நீர்நிலைகள் வற்றி உலர்ந்தும், மரம் முதலியன தீய்ந்தும் உலர்ந்தும் பொலிவிழந்து காணப்படும். நிழலும் நீருமின்றி வெம்மையும் தனிமையும் உடையதாய் இருத்தலின் பாலை நிலம் இன்னா வைப்பு என்று கூறப்படும்.இதனை

“இன்னா வைப்பிற் சுரன்”6


என்று குறுந்தொகை உணர்த்துகிறது. நீரில்லாத வழியும், உலர்ந்த சுனையும், அறுசுனையும் பாலை நிலத்தின் நிலையைப் புலப்படுத்துகின்றன. நிழல் அடங்கி அற்றுப்போன சிறிதும் நீரில்லாத கடத்தற்கரிய பாலைநிலம் என்பதை


“நிழல் ஆன்று அவிந்த நீரில் ஆரிடை”7
               

என்று அறியமுடிகிறது. இத்தகைய பாலை நிலத்தும் மிக அருமையாகச் சில இடங்களில் மட்டும் சிறிதளவு நீர் சிறுபள்ளங்களில் தங்கியிருக்கும். அந்நீரும் மிகவும் கலங்கியும் மிக்க வெம்மையுற்றும் இருக்கும். இதனை

“அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்தவெவ்வெங் கலுழி”8
               

என்ற குறுந்தொகை அடிகள் உணர்த்துகின்றன.பள்ளத்தின் அருகிலுள்ள செடியின் மலர்கள் விழுந்து அழுகிப்போன சிறிதளவு நீரை


“குளவி மொய்த்த அழுகல் சின்னீர்”9
               

என்றும் அறிய முடிகிறது. இத்தகைய கொடிய பாலைநிலத்தில் வழிப்போவாரது பசியை நீக்க  அறத்தைச் செய்யும் நெல்லி மரத்தின் அழகிய பசிய காய்கள் உதிர்ந்து கிடப்பதை,


“சுரந்தலைப் பட்ட நெல்லிஅம் பசுங்காய்”10
               

என்று குறுந்தொகை உணர்த்துகிது. பாலைநிலத்தில் வாழ்ந்தவர் எயினர் எனப்பட்டனர். அவர் தம் தொழில் ஆறலைத்து உண்ணலாகும். இவர்கள் வாழ்ந்த ஊர்கள் பறந்தலை, குறும்பு எனப்பெயர் பெற்றன. இவர்களுடைய தொழில் வழிப்பறி செய்வதும், பகைவருடைய கால்நடைகளைக் கவர்வதும் ஊர்களுக்குச் சென்று கொள்ளையடித்து வருவதுமாகும்.


                இவர்தம் பறை சூறைகோட்பறையும், நிரைகோட் பறையுமாகும். இந்நிலத்துக்குரிய யாழ் பாலையாழ் ஆகும். பண் பஞ்சுரம் என்பதாகும். மரா, குரா, பாதிரி மலர்கள் இங்குச் சிறந்தவை.  இருப்பை, ஓமை, உழிஞை, நெமை, பாலை, யா என்னும் மரங்கள் இங்குச் சிறந்தவை. இம்மக்கள் கொற்றவையை வழிபட்டனர்.
               

பாலை நிலத்தில் ஈந்தின் இலையால் வேய்ந்த குடிசைகளில் எயினர் வாழ்ந்தனர். பிள்ளையைப் பெற்ற எயிற்றி மான் தோலாகிய படுக்கையில் முடங்கிக் கிடந்தாள். எயிற்றியர் உளி போன்ற வாயினையுடைய கடப்பாரைகளால் கரம்பை நிலத்தைக் கிளறிப் புல்லரிசியைச் சேகரித்தனர். அவர்தம் குடிசைகளின் முன்புறத்தில் விளா மரங்கள் இருந்தன. அங்கு நிலத்தில் உரல் தோண்டப்பட்டிருந்தது. எயிற்றியர் அந்நிலவுரலில் தாம் சேர்த்துக்கொண்டு வந்த புல்லரிசியைச் சொரிந்து, குறிய உலக்கையால் குற்றினர்.


                சிறிய அளவு நீரைக்கொண்ட கிணற்றிலிருந்து உவர்நீரை முகந்து உலை வைத்தனர். புல்லரிசிச் சோற்றைச் சமைத்தனர். அச்சோற்றை உப்புக்கண்டத்தோடு உண்டனர். தம்மை நாடி வந்த விருந்தினருக்குத் தேக்கிலையில் அவற்றைப் படைத்தனர்.இதனை,

“…………………………… நெடுங்கிணற்று

வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை

முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி

வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல்

………………….

தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும்

பைதீர் கரும்பொடு பதம்மிகப் பெறுகுவீர்”11

என்ற அடிகளில் பெரும்பாணாற்றுப்படை உணர்த்துகிறது.
               

எயினரின் வறுமை தெளிவாகக் கூறப்படுகின்றது. எந்தத் தானியமும் இல்லாதநிலையில் புல்லரிசி எடுக்கப்பெறுகிறது. தண்ணீர் மிகக் குறைந்துள்ள கிணற்றில் உவரிநீர் எடுக்கப்பட்டு விளிம்பு உடைந்த பானையே பயன்படுத்தப்பெறுகிறது. இவ்வளவு வறுமையில் இருந்தாலும் விருந்தினருக்குத் தேக்கிலையில் வைத்து உணவைத்தருவர் என்பது அவர்களின் சிறந்த விருந்தோம்பலை உணர்த்துகிறது.
               

பாலை நிலத்தில் ஆறலைக்கள்வர் மறைந்து நின்று வழிப்போக்கரைத் துன்புறுத்தலும், கொலை புரிதலும், கொலை கண்டு மகிழ்தலும் வழக்கம். இதனால் தமிழ் மன்னர் எயினருள் தக்கவரைப் போர்வீரராக்கி நாடு காவல் பணியில் அமர்த்தினர். பாலை நில வழிகளில் குடிமக்களுக்குத் தீங்கு நேராமல் பார்ப்பதே அவரின் தலையாய கடமை. பாண்டி நாட்டுப் பாலை வழிகளில் காவல் செய்தவர் இளைஞர். வில்லேந்திய கையினர். குழையால் வேய்ந்த குடில்களில் வாழ்ந்தனர். தழை விரவின கண்ணியினை அணிந்தனர். கடிய சொற்களை உடையவர். வலிமை மிகுந்தவர் என்று மதுரைக்காஞ்சி உணர்த்துகிறது.இதனை,

“இலைவேய் குரம்பை உழைஅதள் பள்ளி

உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்

சிலையுடைக் கையர் கவலை காப்ப”12
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. ஆறலை கள்வர் பாலை நிலவழியே செல்லும் பாணரையோ கூத்தரையோ தாக்க முனைதலும் வழக்கம். அப்பொழுது அவர்கள் பாலை யாழை இசைத்து உருக்கமாகப் பாடுவார்கள். யாழோசையும் மிடற்றோசையும் வன்னெஞ்சராகிய ஆறலைக் கள்வர் மனத்தையும் கவரும். அவர்கள் தங்கள் கொலைக்கருவிகளையும் நெகிழ விட்டுத் தங்களை மறந்து நிற்பார்கள் என்று பொருநராற்றுப்படை உணர்த்துகிறது.இதனை,

“ஆறலை கள்வர் படைவிட வருளின்

மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை”13

என்ற அடிகள் உணர்த்துகின்றன.


பாலை நிலம்
               

வறண்ட முல்லை, குறிஞ்சி நிலங்களே பாலை நிலம் என உணர்த்தப்பட்டது. கடுமையான வெப்பக்காற்று அடித்தலால் வாகை நெற்றுக்கள் ஒலிக்கின்றன. இது போன்ற மூங்கில் நிறைந்த பாலை நிலத்தில் வாகை நெற்றுக்கள் ஒலிக்கின்றன. அவ்வொலி ஆரியக்கூத்து ஆடும்போது ஏற்படும் ஒலிபோல உள்ளது என்று குறுந்தொகை உணர்த்துவதை,

“ஆரியர் கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி

வாகை வெண்ணெற்று ஒலிக்கும்

வேய்பயில் அழுவம்”14
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. வாகை மரத்தின் கிளையில் விளைந்த நெற்றின் குலை ஆடும் கூத்தியர் அடிக்க ஒலியுண்டாக்கும் பறை போல கேட்பார் வியக்கும் வண்ணம் ஒலியுண்டாக்கும். இதனை,

“……………………….  குறுங்கால் உழிஞ்சில்

தாறுசினை விளைந்த  நெற்றம் ஆடுமகள்

அரிக்கோற் பறையின் ஐயென ஒலிக்கும்”15

என்ற அடிகள் உணர்த்துகின்றன. கடுமையான வெப்பக்காற்று அடித்தலால் வாகை நெற்றுக்கள் ஒலிப்பதை,


“வெந்திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென

நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்”16
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. மேற்கண்ட பாடல்களில் இருந்து பாலை நிலத்தில் வாகை மரத்தின் நெற்றுக்கள் ஒலிப்பதைக் கண்டு வழியில் செல்வோர் அச்சமடைவர் என்றும், உழிஞ்சில் என்று வாகை மரம் அழைக்கப்பட்டதையும் உணர முடிகிறது.
               

பாலை நிலச்சூழல் மேற்கண்ட பாடலின் மூலம் உணரப்படுகிறது. வெப்பமான நிலம், நீரற்ற சுனை மூங்கில் நெல்லும் பொரியுமளவுக்கு வெப்பமான பாறை வழிச்செல்வோர் யாரும் இல்லததால் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த கள்வர்களும் இறந்தனர் என்பதால் அங்கிருந்த வெப்பத்தின் மிகுதி புலப்படுகிறது.
               

பாலை நில வெம்மை மட்டும் கொடுமையானது அல்ல. வழியும் துன்பத்தைத் தரக்கூடியது. ஞாயிறு சுடும். பக்க மலைகளிலுள்ள கல்லொழுங்கு பட்ட பாதைகளில் பதித்து வைத்தது போன்ற கூர்மையான நுனியுடைய பருக்கைக்கற்கள் தீட்டப்பட்டது  போன்று கூர்முனையைத் தோற்றுவித்து வழிச்செல்வாரின் விரல் நுனிகளைச் சிதைக்கும் தன்மையுடையவை. இதனை

“………………..கதிர்தெறு கவாஅன்

மாய்த்த போல மழுகுநுனை தோற்றி

பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்

விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர

பரல்முரம்பு ஆகிய பயமில் கானம்”17
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. இது போன்ற மலை வழிகளில் புலியானது தனக்குரிய உணவைத் திணித்து வைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கல் முழைஞ்சுகளில் வழிச்செல்லும் மக்கள் தங்குவர். அங்கு மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று மோதி ஒலிக்கும் என்று குறுந்தொகை உணர்த்துகிறது.இதனை,

“ஒலிகழை நிவந்த ஓங்கு மலைச்சாரல்

புலிபுகா உறுத்த புலவுநாறு கல்லளை

ஆறுசெல் மாக்கள் சேக்கும்

கோடுயர் பிறங்கல் மலை”18
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. இவ்வழிகளில் விலங்குகள் உண்ண உணவில்லாமல் வருந்தும். மரங்களின் பட்டை உலர்ந்து இருக்கும். அப்பட்டையை யானை போன்ற விலங்குகள் உண்ணும். பாலை நிலத்தில் வளர்ந்துள்ள யா மரங்களின் முழு அடிமரத்தின் பொரிந்த அரைப்பட்டை உருவும்படித் தம் கொம்பினால் குத்தி வலிமை பொருந்திய பெரிய கைகளால் யானை அதனை வளைக்கும்.
               

இரைதேடி வாடிய நடையையும் சிறிய கைகளையும் உடைய தன்னுடைய பெரிய சுற்றத்தின் மிகுந்த பசியை ஆண்யானை நீக்கும். இதனை,

“பொத்துஇல் காழ அத்த யாஅத்துப்

பொரிஅரை முழுமுதல் உருவக் குத்தி

மறங்கெழு தடக்கையின் வாங்கி உயங்குநடைச்

சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்

தடமருப்பு யானை”19
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. யானைகளுக்கு உண்ண பசுமையான புற்கள் இல்லாததால் யா மரத்தின் பொரிந்த பட்டையை யானைகள் உண்ணும் வறண்ட பகுதியை இப்பாடல் உணர்த்துகிறது. யா என்பது பாலை நிலத்தில் உள்ள மர வகைகளில் ஒன்று. இம்மரத்தை,

“யா மரக்கிளவியும் பிடாவும் தளாவும்

ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே”20
               

என்கிறார் தொல்காப்பியர். யா, பிடா, தளா என்ற என்ற மரப்பெயர்கள் மெல்லெழுத்து மிகுந்து வரும். யானைகளே நீரில்லாமல் வருந்தும்போது அங்குள்ள மக்கள் எவ்வாறு நீர் வேட்கையைத் தீர்த்துக்கொள்வர் என்ற ஐயம் எழுகின்றது. இந்த ஐயத்தை நீக்குகிறார் உருத்திரன் என்னும் குறுந்தொகைப்புலவர். பாலைநில மக்கள் உகாய் மரங்களின் மீது அமர்ந்து, அம்புகளை வில்லுடன் பிடித்திருப்பர். அவர்களுக்கு நீர்வேட்கை ஏற்பட்டால் உகாய் மரத்தின் பட்டையை மென்று அவ்வேட்கையைத் தணித்துக்கொள்வர்.இதனை,


“புறவுப் புறத்தன்ன புன்கால் உகாத்து

………………………………………………………

விடுகணை வில்லொடு பற்றி கோடிவர்பு

வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்

நீர்நசை வேட்கையின் நார்மென்று தணியும்”21

என்ற அடிகள் உணர்த்துகின்றன. உகாய் மரத்தின் பட்டைக்கு நீர் வேட்கையைத் தணிக்கும் ஆற்றல் உண்டு என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. இம்மரத்தை


“புல் அரை உகாஅய்” 22

என்று குறுந்தொகை உணர்த்துகிறது. இதைப் போன்று வழிச்செல்வோருக்காகக் காத்திருக்கும் மறவர் அவர்களைக் கொல்வர். இறந்து பட்ட உடல்கள் நாற்றமடிக்கும். அவற்றை உண்பதற்காகப் பருந்துகள் காத்திருக்கும். இதனை,

“கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்

ஆற்றிருந்து அல்கி வழங்குநர்ச் செகுத்த

படுமுடைப் பருந்து பார்த்திருக்கும்”23
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. இறந்து போன உடல்கள் ஆங்காங்கே குவியல் குவியலாகத் தோன்றும். அக்குவியலின் நிழலில் யானைகள் தங்கும் என்று குறுந்தொகை உணர்த்துகிறது.
               

இறந்து பட்டோரின் குவியல் (பதுக்கை)நிழலில் யானை தங்கும் என்பது குவியலின் பரப்பை உணர்த்துகிறது. அவ்வழியில் செல்வோரை கள்வர்கள் கொன்று குவிப்பர் என்று அறியலாம்.
               

வணிகர்கள் கோடைக்காலத்தில் வணிகத்திற்காகச் செல்லும்போது இது போன்ற துன்பங்களைச் சந்தித்தனர் என அறியமுடிகிறது. காட்டுத்தீயால் விலங்குகள் வருந்துவதையும் அறியமுடிகிறது.
               

நிலமானது நீரின்றி வற்றிப் போனது. நெடிய சுனைகளும் வற்றிப்போயின. குன்றில் இருந்த மரக்கிளைகள் பற்றி எரிந்தன. கோடை நீடிய அகன்ற காட்டிடத்து ஞாயிற்றின் வெம்மை மிக்க கதிர்கள் சுடுதலால் மூங்கில்கள் வெப்பம் பொறுக்காது வெடித்துச் சிதறின. இதனை,


“நிலம்நீர் அற்று நீள்சுனை வறப்ப

குன்றுகோடு அகைய கடுங்கதிர் தெறுதலின்

என்றூழ் நீடிய வேய்படு நனந்தலை”24
               

என்ற அடிகள் உணர்த்துகின்றன. மேற்கண்டவற்றிலிருந்து பாலை நிலத்தின் தன்மையும், அங்குள்ள வெப்பமும் புலப்படுத்தப்பெறுகின்றது. ஞாயிற்றின் வெப்பம் பொறுக்காமல் வெடித்துச் சிதறின என்பதால் தீ எரிக்கும் அளவிற்கு ஞாயிற்றின் வெப்பம் இருந்தது என்பதை உணரலாம்.


தொகுப்புரை
               

சங்க நூல்களில் முதலில் தொகுக்கப்பெற்றது குறுந்தொகை. இந்நூலில் 401 பாடல்கள் உள்ளன. இந்நூலில் உள்ள 165 செய்யுள்களே பிற நூல்களில் மேற்கோளாகக் காட்டப்பெறாதவை.  

இந்நூலை முதலில் பதிப்பித்தவர் திருக்கண்ணபுரத்தலத்துத் திருமாளிகைக் சௌரிப்பெருமாள் அரங்கன் என்பவர். ஆண்டு 1915. இராமரத்தினம் ,உ.வே.சா, ரா.இராகவையங்கார், பொ.வே.சோமசுந்தரனார், மு.சண்முகம்பிள்ளை போன்றோரின் குறுந்தொகைப் பதிப்புகள் போற்றத்தக்கன.
               

உ.வே.சா குறுந்தொகை உரை என்ற பெயரில் 1937இல் இதனைப் பதிப்பித்தார். இதில் நூலாராய்ச்சி என்னும் பகுதி குறிக்கத்தக்கது. மு.சண்முகம்பிள்ளையின் குறுந்தொகைப் பதிப்பில் தொடரடைவும், சொல்லடைவும் ஆய்வாளர்களுக்குப் பயன் தரக்கூடியவை. குறுந்தொகையில் பாலைத்திணைப் பாடல்கள் 90 உள்ளன.
               

பாலைத்திணையை ஐந்திணைகளுள் நடுவில் வைத்துத் தொல்காப்பியம் கூறுகிறது. பாலை நிலம் இன்னா வைப்பு என்று கூறப்படும். பாலை நில இலக்கணத்தை சிலம்பு கூறுகிறது.
பாலை நிலத்தில் சிறிதளவு நீர் மட்டுமே இருக்கும்.சிறிதளவு நீரை மக்கள் முறையாகப் பகுத்து உண்டனர். பாலை நிலத்தில் செல்வோர் நீர் வேட்கையால் நெல்லிக்காய்களை உண்பர். தலைவன் விடலை, காளை என்றும், தலைவி எயிற்றி என்றும் ஊர் பறந்தலை, குறும்பு என்றும் பெயர் பெற்றன. தெய்வம் கொற்றவை ஆகும். பாலை, இருப்பை, ஓமை முதலியவை மரங்கள். தொழில் ஆறலைத்தல்.
               

எறும்புப்புற்றில் இருந்து புல்லரிசியை எடுத்து உணவு சமைத்து தேக்கிலையில் வைத்து வழிச்செல்வோருக்கு அளிக்கும் கொடை உள்ளம் கொண்டவர்கள். தயிருடன் கூட்டிய கூழ், உடும்பின் இறைச்சி போன்றவையும் இவர்களால் விருந்தினருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எயின வீரர்கள் நாடுகாக்கும் காவலில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வீரர்கள் தழை விரவிய கண்ணியினை அணிந்தவர். வலிமை உடையவர். ஆறலைக்கள்வர் இரங்கும்படி யாழை, இசைத்துப் பாடலைப் பாடுவர் பாணர், பொருநர் போன்றோர்.
               

பாலை நிலத்தில் வாகை நெற்றுக்கள் ஏற்படுத்தும் ஒலி வழிச்செல்வோரை அஞ்ச வைக்கும். உழிஞ்சில் என்றும் வாகை மரம் அழைக்கப்பட்டது. ஞாயிறு சுடும் மலைகளின் பாதைகளில் உள்ள பருக்கைக்கற்களும் கால்களுக்குத் துன்பத்தைத் தரும்.மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் ஒலி கேட்போரை அச்சமடையச் செய்யும். விலங்குகள் புற்கள் இல்லாததால் மரங்களின் பட்டையை உரித்து உண்ணும்.
               

ஆறலைக் கள்வர்கள் நீர்வேட்கை ஏற்பட்டால் உகாய் மரத்தின் பட்டையை மென்று நீர்வேட்கையைத் தணித்துக் கொள்வர். கள்வர்கள் கொன்ற வழிப்போக்கர்களின் உடல்கள் நாற்றமடித்துக் கிடக்கும். அவ்வுடல்களை உண்பதற்காக பருந்துகள் காத்திருக்கும். அக்குவியல்களின் நிழலில் யானை தங்கும்.
               

மூங்கில் மரங்களால் ஏற்பட்ட தீயைக்கண்டு அஞ்சிய வணிகர்கள் வழியைத் தவறவிட்டு அலறுவர். தீயைக்கண்டு விலங்குகளும் அஞ்சி ஓடும். எனவே பாலை நிலம் வாழ்வதற்கும், வழிச்செல்வதற்கும் கடுமையான நிலம் என்பதை உணர முடிகிறது.


சான்றாதாரங்கள்

1.தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பா – 3


2. மேலது அகத்திணையியல் நூற்பா- 9


3. மேலது அகத்திணையியல் நூற்பா- 10


4. மேலது புறத்திணையியல் நூற்பா- 18


5. சிலப்பதிகாரம் காதை 11 அடி – 64


6. குறுந்தொகை பா- 314


7. மேலது பா – 356


8.மேலது பா- 356


9.மேலது பா- 57


10. மேலது பா- 209


11. பெரும்பாணாற்றுப்படை- 93


12.மதுரைக்காஞ்சி- 310


13.பொருநராற்றுப்படை- 21 


14.குறுந்தொகை பா- 7


15.அகநானூறு பா- 151


16.குறுந்தொகை பா – 39


17. அகநானூறு பா- 5


18. குறுந்தொகை பா- 253


19.மேலது  பா- 255


20.தொல் எழுத்து நூ – 229


21.குறுந்தொகை பா- 274


22.மேலது  பா- 363


23.மேலது  பா- 283


24. அகநானூறு பா- 295


ம. அபிஷேக்

(22MTA1001)


முதுகலை இரண்டாம் ஆண்டு

தமிழ்இலக்கியம்
 

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)


காளிப்பட்டி, நாமக்கல் 637 501

 

இது இலக்கல்ல தனல் (நெருப்பு)|தன்னம்பிக்கை கட்டுரை|முனைவர் நா.சாரதாமணி

இது இலக்கல்ல தனல் (நெருப்பு) - முனைவர் நா.சாரதாமணி
          இலக்கை கொண்டு வாழும் உங்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை இருக்க வேண்டும். அதாவது குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று அவர்களிடம் வளைந்து கொடுக்கலாம். ஆனால் எல்லா இடங்களிலும் இது சாத்தியம் இல்லை. நீர்நிலைகளில் பார்த்திருப்பீர்கள் நாணல் புல் உயரமாக நீரில் வளரும் ஒருவகை புல். அது எவ்வளவு புயலடித்தாலும்கூட அந்தக் காற்று அடிக்கும் போது நன்றாக வளைந்து கொடுக்கும். ஆனால் உடையாது. காற்று சென்றவுடன் முன்பு போலவே எழுந்து நிற்கும். அதன் தண்டு உறுதியாக இருக்காது. அதே சமயம் மரங்கள் உறுதியான கிளைகளுடன் நன்றாக வேரூன்றி நிற்கும், பலமாகக் காற்றடித்தால் வளைந்து கொடுக்காது உடைந்து விடும். எனவே மனித வாழ்க்கையும் அப்படித்தான். உண்மையான நேர்மையானவர்களிடம் நேசத்துடன் நடந்து கொள்ளுங்கள். அநீதி, அதிகாரம், கொடுமை போன்றவை நடக்கும் இடத்தில் எதிர்த்து நில்லுங்கள். அவை ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இது உங்களின் தேசமல்லவா, இந்தத் தேசம் உங்கள் கண் முன்னே பணபலத்தாலும் பதவி அதிகாரத்தாலும் அமைதியை இழக்கலாமா! எதிர்மறையான செயல்பாடுகளைத் தேசத்தின் உள்ளே ஒருபோதும் நுழைய விடாதீர்கள்.

இது உங்கள் தேசம்
        
         இது உங்கள் தேசம். உங்கள் நாடு, உங்கள் ஊர், உங்களின் சுற்றத்தார் என்பதை நினைவில் வையுங்கள். இந்த உலகத்தில் நடக்கும் நியாய அநியாயங்களுக்கும் உங்களுக்கும் பங்கு உண்டு என்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள். அதே வேளையில் உங்களின் இலட்சியம் என்ன என்பதை மறவாதீர்கள்.
        நீங்கள் எத்தனையோ நபர்களிடம் பழகியிருப்பீர்கள். அவர்கள் வேறுமாதிரி கூட இருக்கலாம். இலட்சியமே அற்றவர்களாக தீயபழக்கங்களைக் கொண்டவர்களாக தீயன பேசுபவராகவும் இருக்கலாம். அவர்களின் பேச்சை, சிந்தனையை, செயல்பாடுகளை நீங்கள் அருகிருந்தும் பார்க்கலாம். ஆனால் அவர்களால் உங்களின் இலட்சியம் மாறக்கூடாது. நீங்கள் எடுத்துக்கொண்ட செயலில் தொடர்ந்து உழைக்க வேண்டும். உங்களின் சுவாசமும் இலட்சியத்தையே சுவாசிக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கான தனல் உடல் முழுவதும் பரவி கனன்று கொண்டே இருக்க வேண்டும்.

இடற்பாடுகள் மனதை மாற்றக்கூடாது
     
      ஒரு மலைப்பாங்கான பகுதியில் ஆறு ஒன்று அழகாகச் சலனமே இல்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் அந்த ஆற்றைக் கடந்துதான் வெளியில் செல்ல வேண்டும். ஒரு நாள் துறவி ஒருவர் அந்த ஆற்றைக் கடப்பதற்காக நீரில் இறங்கி நடக்கத் துவங்கினார். அப்போது ஒரு தேள் ஒன்று நீரில் அடித்து வரப்பட்டது. அது தன்னை காப்பாற்றுமாறு கத்தியது. துறவி சில நொடிகள் யோசித்தார், தேள் கூறியது நான் உங்களை கொட்டமாட்டேன். எனக்கு உதவுங்கள் என்று பதறியது. அந்தத் துறவி தேள்மீது அனுதாபம் கொண்டு தன் உள்ளங்கையில் அதனை ஏந்திக்கொண்டு நீரில் நடையை தொடர்ந்தார். தேளுக்கு நிம்மதி. அப்பாடா தப்பித்தோம்! பிழைத்தோம் என்று பெருமூச்சு விட்டது. சிறிது தூரம் நடந்தார் துறவி, அவரின் கையில் தேள் கொட்டிவிட்டது. துறவி தேளைப்பார்த்தார் மீண்டும் நடந்தார், மீண்டும் தேள் கொட்டியது. துறவி ஆற்றின் மறுகரையை அடைவதற்குள் மீண்டும் கொட்டி விட்டது. துறவி அமைதியாகவே சென்று சேர்ந்தார். தேளை தரையில் விட்டார். அவ்வேளை அவரின் கையில் நஞ்சு ஏறிக்கொண்டே இருந்தது. தேள் கேட்டது “நான்தான் கொட்டி விட்டேனே மீண்டும் எதற்காக என்னை காப்பாற்றினிர்? என்று கேட்டது.
துறவியானவர் பதிலுக்கு மறுகேள்வி கேட்டார். என்னை கொட்ட மாட்டேன் என்று கூறிவிட்டு நீ ஏன் கொட்டினாய்” என்றார்.  “கொட்டக்கூடாது என்றுதான் நினைத்தேன் ஆனால் அதைச் செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டது. துறவி கூறினார் “மற்றவர்களை கொட்டுவது உன்னுடைய இயல்பு. தமக்கு எது நடந்தாலும் தான்கொண்ட முடிவில் மாறாமல் இருப்பது என்னுடைய இயல்பு என்று கூறினார். எனவே தமக்கு வரும் துன்பங்களால் உங்களின் முடிவு மாறக்கூடாது.
உங்களை வித்தியாசப்படுத்துங்கள்
     
         உலகில் எல்லா வகையான மக்களும் வாழ்கிறார்கள். எல்லோரிடமும் பழகும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதர் இப்படியும் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். அவர்களில் இருந்து எந்த முறையால் செயல்பாட்டால் வித்தியாசப்படுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். எனவே உங்களின் குணத்தையோ இலக்கையோ மாற்றாமல் உறுதியாக செயல்படுங்கள்.
நீங்கள் உங்கள் செயல்பாடுகளில் சரியாகச் செய்து அதாவது, உங்கள் மனதிற்கு திருப்தி வரும் அளவிற்கு கடமை ஆற்றியும் அது உங்களின் குடும்பமாக இருந்தாலும் சரி அலுவலகமாக இருந்தாலும் சரி மற்றவர்கள் குறை கூறுகிறார்கள் என்றால் அதற்காக வேதனைபடாதீர்கள். குறை பார்ப்பவரின் பார்வையிலும் மனத்திலும் இருக்கலாம். ஒருசெயல் சரியாகச் செய்யப்பட்டு அதுகுறை கூறப்படுகிறது என்றால் அது செயலில் அல்ல. கூறுபவர் மனதில் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் எந்தவித குறையும் கூறக்கூடாது என்றும் எதிர்பார்க்காதீர்கள். நல்ல செயல்களைப் பாராட்டும் மனநிலையில் உள்ளவர்கள் இங்கு சிலரே ஆவர். கசப்பான எண்ணங்களையும் தீய சிந்தனைகளையும் மனதில் நிரப்பிக்கொண்டு உலாவரும் மனிதர்களிடம் நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியாது. குறைகூறுவதும் அவமானப்படுத்துவதும்தான் அவர்களிடம் வெளிபட முடியும்.
            மாலை வேளையில் மலரும் மல்லிகையின் நறுமணத்தை குப்பைகளை நிரப்பி வைத்துள்ள இடத்தில் எதிர்பார்க்க கூடாது. இதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
நீங்கள் செல்லும் பாதை அது அடைய வேண்டிய இலக்கு அதனால் உண்டாகும் சமூக நன்மை இவற்றில் உங்களை நிலை நிறுத்திக்கொண்டு பாடுபடுங்கள். வெற்றி உங்கள் கைகளுக்கு எட்டும் தூரம்தான்.
இந்த உலகில் நடக்கும் எந்த இயற்கை மாற்றமும் ஒரு நபரின் செயல்பாடுகளும் வசைகளும் உங்களை வந்தடைந்தாலும் நீங்கள் செல்லும் மார்க்கத்திலிருந்து மாறக்கூடாது.
யாருடையச் சொற்களும் எந்தச் செயல்பாடுகளும் உங்களின் மனநிலையை மாற்ற இயலவில்லை என்றால் நீங்கள்தான் உன்னதமானவர்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.
முனைவர் நா.சாரதாமணி அவர்களின் படைப்புகளை மேலும் படிக்க… கிளிக் செய்யவும்

 

 

மயில் ஓவியம்|சிறுகதை|முனைவர் க.லெனின்

மயில் ஓவியம் - முனைவர் க.லெனின்

ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பிற்குச் சேர்க்கைக்காக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தார்கள்  ரகுவும் அவனுடைய அப்பாவும். விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்திசெய்து கொண்டிருந்தார் அப்பா. ஆசிரியர்கள் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தனர். அந்தப் பள்ளிக்கூடமே பியூன் ஆறுமுகம் இல்லையென்றால் நடக்காது என்பதுபோல் ரொம்பவும் பரப்பரப்பாகக் காணப்பட்டது.  அவ்வவ்போது தலைமையாசிரியரின் அறைக்குள்ளே யார்யாரோ சென்று வந்து கொண்டிருந்தார்கள். ரகுவின் தலைக்கு மேலே காற்றாடி வேகமாய்ச் சுழன்று கொண்டிருந்தது. அப்படியிருந்தும் அவனுக்குக் கைக்கால்கள் வியர்த்துக் கொட்டின. உடம்பெல்லாம் சுடுகின்ற மாதிரி தோன்றிற்று. தன்னுடைய வலதுகையை எடுத்துக் கழுத்திலும் நெற்றியிலும் வைத்துப்பார்த்தான். கொஞ்சமாய்ச் சுடுவதுபோல்தான் தெரிந்தது அவனுக்கு.


ஊரிலே சின்னதாய் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தான். ஆறாம் வகுப்புக்குப்  பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்க வருகிறான். புதுத்துணி, புது நண்பர்கள், புது இடம், குறிப்பா சைக்கிளில் பள்ளிக்கூடம் போகலாம். இதெல்லாம் ரகுவை வானில் மிதக்க செய்தது. ஐஞ்சாவது படிக்கும்போதே ரகுவின் அப்பா அவனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார். ரகுவும் எங்குச் சென்றாலும் சைக்கிளில்தான் செல்வான். பள்ளியில் சேர்க்க அப்பா அழைத்தபோது காலையில் சாப்பிடகூட இல்லை. ஆசையாய் அப்பாவுடன் ஒட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்துவிட்டான். சுவரோரமாய்ப் போடப்பட்டிருந்த வரிசையான நாற்காலியில்தான் சிறுவன் ரகு அமர்ந்திருந்தான்.  அந்த இடத்தில் இருக்கும் கோப்புகளும் வானுயர விட்டங்களும் அந்த விட்டங்களின்மேல் உள்ள விள்ளைகூரைகளும் மிடுக்கான மனிதர்களின் நடமாட்டமும் ரகுவை என்னவோ செய்ததுபோல் இருந்தன. மூஞ்சை உம்மென்று வைத்திருந்தான். காற்றாடி சுற்றிய போதிலும் வியர்வைத்துளிகள்  அங்கும் இங்கும் அவனின் உடம்பில் பரவியிருந்தன. கொஞ்சநேரத்திற்குப் பிறகு வயிற்றை முட்டிக்கொண்டு ஒன்னுக்கு வந்தது. பக்கத்தில் இருந்த அப்பாவை நைசாக ஆட்காட்டி விரலைக்கொண்டு சுரண்டினான். அவர் என்ன என்பது போல் பார்த்தார். ஆட்காட்டி விரலை நேராகத் தூக்கிக்காண்பித்தான். அப்பாவும் புரிந்து கொண்டு கழிவறைக்கு அழைத்துச் சென்றார்.


ரகுவிற்கு அப்பாடா என்றிருந்தது. ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து வந்தாகிவிட்டது. அப்பா வேண்டுமானால் அலுவலகத்திற்குச் செல்லட்டும். கொஞ்சநேரம் இங்கையே இருந்துவிட்டு போக வேண்டியதுதான் என்று நினைத்தான். தன்னுடைய பேண்ட் ஜிப்பை அவிழ்த்துக்கொண்டே கழிவறையின் உள்ளே நுழைந்தான்.  உள்ளே நுழைந்தவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. வரிசையாகத் தன்னைப்போலவே சேர்க்கைக்கு வந்த மாணவர்கள் ஒவ்வொரு கழிவறை கூண்டிலும் நின்றுகொண்டிருந்தார்கள்.   


“அடப்பாவிகளா! நான்தான் பயந்துக்கிட்டு இங்க வந்தன்னா.. அத்தனைபேருமே இங்க வந்து என்னடா பன்னிட்டு இருக்கீங்க…” என்று மனதால் நினைத்துக்கொண்டு இன்னும் உள்ளே சென்றான்.


ஒரு பையலும் கூண்டைவிட்டு வெளியே வருதற்கு இல்லை. எல்லோருமே நின்ற இடத்திலேயே நின்று கொண்டு இருந்தார்கள். ரகுவிற்கு முட்டிக்கொண்டு வந்தது.


“டே அவசரம் டா… யாராவது கொஞ்சம் தள்ளி நில்லுங்கடா” என்றான் ரகு.


எவனும் திரும்பி பார்க்காமலே நின்று கொண்டிருந்தார்கள். மீண்டும் சத்தமாய், ”ஹெட்மாஸ்டர் வர்ராருடா…” என்றான் ரகு.


இப்போது அனைத்துப் பயலுகளும் ரகுவைத் திரும்பிப்பார்த்தார்கள்.


”முதல்ல ஜிப்ப போடுங்க“ என்று சொல்லிக்கொண்டே கூண்டில் ஏறி ஒன்னுக்குப் போனான்.


“எங்கடா ஹெட்மாஸ்டரு” என்றான் மூர்த்தி
”

அட்மிஷன் போட உங்க அப்பா உங்களளெல்லம் கூப்பிட்டுகிட்டு இருக்கிறாரு. நீங்களெல்லாம் இங்க என்ன பண்ணீட்டு இருங்கீங்க” என்றான் ரகு.


அனைத்து மாணவர்களும் கழிவறையை விட்டு ஓட்டம் பிடித்தார்கள். மூர்த்தி மட்டும்  ரகுவின் மூஞ்சை நின்னுப் பாத்திட்டுப் போனான்.


அந்த வருடம் ஆறாம் வகுப்பிற்கு மாணவர்களின் சேர்க்கை சென்ற வருடத்தைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ரகுவும் மூர்த்தியும் ஒரே வகுப்பில்தான் போடப்பட்டிருந்தார்கள். இவர்களோடுக் கண்ணனும் மணியும் சங்கரும் சேர்ந்து கொண்டார்கள். ஐவரும் பஞ்சபாண்டவர்கள்ன்னு கூட சொல்லலாம். எப்போதும் ஒன்றாய்த்தான் இருப்பார்கள். ஆறாம் வகுப்பு பி பிரிவுன்னாவே வாலு பசங்கதான். எப்பவுமே சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். பீரியட் முடிஞ்சாலும் கத்துவானுங்க.. ஆரமிச்சாலும் கத்துவானுங்க.. பாடம் நடத்தும்போது நடுநடுவே கேள்விகளும் அடிக்கடி கேட்டுட்டே இருப்பானுங்க.. எப்பவும் பேச்சும் சத்தமும் சிரிப்பும் கும்மாளுமாய்த்தான் இருக்கும். இதனால் வகுப்பு ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்க்கிட்ட புகார் சொல்ல ஆரமிச்சாங்க.

 
“பசங்களா அவனுங்க… எல்லாம் குரங்குங்க… வாலு பசங்க… அடக்கவே முடியல சார்” என்று தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தார் ஆசிரியர் ஒருவர்.


“சின்னப்பசங்க.. குழந்தைங்க.. இளங்கன்று பயம் அறியாது.. அப்படித்தான் இருப்பார்கள். நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று சொல்லிவிட்டு  தலைமை ஆசிரியர் அந்த வகுப்புக்கு மட்டும் கண்டிப்பான ஆசிரியராகப் பார்த்துப் போட்டார்.


ஆறாம் வகுப்பு பி பிரிவுல ரகுதான் லீடர். அந்த வகுப்பே அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது. வகுப்பு மாணவர்களை அந்தளவிற்குத் தன்னுடைய சொல்பேச்சுக்குக்கீழ் வைத்திருந்தான். லீடர் பதவிக்குச் ஒருசில மாணவர்கள் முன்வந்தார்கள். அனைவரையும் பின்னுக்குத் தள்ளி போட்டியிட்டவர்களையும் சேர்த்து கைத்தூக்கவைத்து இவனே லீடரும் ஆயிட்டான். இதற்கு காரணம் இவன் வைத்திருந்த விளையாட்டுத்தான்.


ஒரு வெள்ளைத்தாளில் சின்னசின்னதாய்க் கோடுகள் வரிசையாய்ப் போடவேண்டும். அதேபோல மூன்றுமுறை போடவேண்டும். இப்பொழுது இரண்டிரண்டாய்க் கோடுகளை அடித்துக்கொள்ள வேண்டும். மீதி கோடுகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். ஒன்றோ அல்லது பூஜ்ஜியமாகவோ வரும். இதேபோல் மற்ற இரண்டு வரிசைகளிலும் அடித்து மீதத்தைக் குறிக்க வேண்டும். உதாரணமாக பூஜ்ஜியம் ஒன்று ஒன்று என வருவதாக வைத்துக் கொள்ளலாம். ரகுவிடம் சார்ட் பேப்பர் ஒன்று இருந்தது. அவற்றில் பூஜ்ஜியம் ஒன்று ஒன்றுக்கு என்ன என்று பார்த்தால் புத்திசாலி, விளையாட்டு வீரன், டாக்டர், வக்கில் என்பது போன்ற ஏதாவது ஒன்று இருக்கும். இதை பார்த்த சிறுவர்களும் ‘ஹை’ என்று குதிப்பார்கள். இதை வைத்துத்தான் ரகு எல்லோரையும் மடக்கினான். இந்த விளையாட்டை விளையாடுவதற்கு ரகுவோடு சமரசம் பேசி மற்ற மாணவர்களும் ஒத்தும் போனார்கள்.


பள்ளி ஆரமித்து இரண்டு மாதங்களுக்குப்பின் ஆறாம் வகுப்பு பி பிரிவுக்குப் புதியதாக ஒரு மாணவன் வந்து சேர்ந்தான். பியூன் ஆறுமுகம்தான் அழைத்துக்கொண்டு வந்தார்.  அப்போது தமிழ் வகுப்பில் திருக்குறள் மனப்பாடமாகச் சொல்லவில்லை என்று ஆசிரியர் மாணவர்களை குச்சியால் அடித்துக்கொண்டிருந்தார். வந்த மாணவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.  குண்டான உடம்பு. சிரித்த முகம். வெண்மையான தோற்றம். மொத்தத்தில் அமுல்பேபி போல் இருந்தான். சரவணன் என்று தன்னுடைய பெயரை வகுப்பில் அறிமுகப்படுத்திக் கொண்டான்.


அடுத்த நாளிலிருந்து மாணவர்கள் ஒவ்வொருவராய் சரவணன் பக்கமாய்ப் போய்க்கொண்டிருந்தார்கள். சரவணன் எல்லோரிடமும் சிரித்துச்சிரித்துப் பேசினான்.  எதற்கும் மனம் கலங்கி அழாதவனாய் இருந்தான். தான் வைத்திருந்த காசில் நண்பர்களுக்கு இடைவேளையின் போது நிறைய திண்பண்டங்களை வாங்கி கொடுத்தான். தன்னுடைய மதிய உணவை பிற மாணவர்களுக்கும் கொடுத்து ஆறாம் வகுப்பு பி பிரிவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துக்கொண்டான் சரவணன்.


ரகுவிற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் சுத்தமாகச் சரவணனின் போக்குப் பிடிக்கவில்லை. ரகுவின் நண்பர்கள் வகுப்பு மாணவர்களிடம், “யாரும் சரவணனிடம் பேசக்கூடாது என்று கட்டளை போட்டார்கள். ஆனால் அவர்கள் யாரும் இவர்கள் சொல்வதை கேட்பதாக இல்லை.


அன்று கணிதப்பாடம் நடந்து கொண்டிருந்தது. பெண் ஆசிரியை ஒருவர் பின்னம் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். பாடம் நடத்தும் வேளையில் சரவணன் ஏதோ சிரித்துக்கொண்டிருப்பதை ஆசிரியர் பார்த்துவிட்டார்.


“டே சரவணா… என்னாடா அங்க சிரிப்பு. இங்க வா…” என்றுக் குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டார் ஆசிரியர். அரைக்கால் டவுசரோடு பயந்தபடியே கரும்பலகைக்கு முன்னால் வந்து நின்றான் சரவணன்.


“சிரிச்சிட்டு இருந்தல்ல… இந்தா சாக்பீஸ்… போர்டுல இருக்குற பின்ன கணக்கை போடு” என்றார்.  சாக்பீஸ கையில் வாங்கிட்டு அப்படியே நின்னிட்டு இருந்தான். சரவணனுக்கு போர்டுல இருக்குற பின்ன கணக்கைப் பார்த்தவுடனே தலைச்சுற்றுவது போல் இருந்தது.


கொஞ்சநேரத்தில் சரவணனின் முட்டிக்கால்களுக்குக் கீழ் குச்சியால் அடி விழுந்து கொண்டிருந்தது. குனிந்து கைகளால் எவ்வளவோ தடுத்துப் பார்த்தான். ஆனால் அடி மட்டும் விழுந்து கொண்டே இருந்தது. ஆசிரியரும் மாற்றிமாற்றி அடித்துக்கொண்டேயிருந்தார். இப்போது சரவணன் வகுப்பிலேயே ஓட ஆரமித்தான். போர்டுக்கு எதிர்புறம் உள்ள மூலையில் நின்று கொண்டான்.  ஆசிரியரும் அவனை அடிப்பதற்காகக் குச்சியை எடுத்துக்கொண்டு ஓடினார்.  சரவணன் அதற்குள் வலது பக்கமாய் ஓடிவந்து மீண்டும் போர்டுகிட்ட வந்து நின்னான். இப்போது ஆசிரியரும் இவனும் எதிர்புறமுமாய் நின்றார்கள்.


“டே நில்லுடா.. என்ன ஓட வைக்காதடா..” என்றார் ஆசிரியர்.


“டீச்சர் முடிஞ்சா என்ன புடிங்க” இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடியாடினான் சரவணன். ரகுவிற்குச் சரவணனைப் பிடித்துக்கொடுத்து டீச்சரிடம் அடிவாங்கி வைக்க வேண்டுமென்று பிடிக்க ஓடிவந்தான்.  சரவணனோ யாரிடமும் மாட்டாமல் சுற்றிச்சுற்றி வந்தான். சிறிது நேரத்திற்கு மேலாக அவனால் ஓட முடியவில்லை. சோர்ந்து போயிவிட்டான். வகுப்பு மாணவர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டான் சரவணன். பெல்லும் அடித்தது. பீரியடும் முடிந்தது.


ஒரு ஆங்கில வகுப்பின்போது மாணவர்கள் போர்டில் இருப்பதைப் பார்த்து எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர் ஒவ்வொரு மாணவராய்ப் பார்த்துக்கொண்டு வந்தார். சரவணனின் நோட்டையும் பார்த்தார். நோட்டை கையில் வாங்கிக்கொண்டார். கோழிக்கால் கிறுக்கினார் போன்று இருந்தது. அவனுடைய கையெழுத்தை அவனாலயே திருப்பி படிக்க முடியாது. அந்தளவிற்குக்  கையெழுத்துப் படுமோசமாக இருந்தது. சரவணனிடம் நோட்டை காண்பித்து,


“தம்பி இது என்ன கையெழுத்து” என்றார்.


“இங்கிலிஸ் எழுதறன் சார்” என்றான்.


பக்கத்தில் இருந்த ரகுவின் நோட்டை காண்பித்து, ”அப்போ இதற்கு பேர் என்ன? என்று கேட்டார்” ஆசிரியர்.


கையில் வாங்கி பார்த்தான். ரகுவின் கையெழுத்து அழகாய் முத்துக்கள் பதித்தது போன்று இருந்தது. சரவணன் வழிந்தான். ஆசிரியர் கோபமானார். சரவணனைப் பிடித்து முதுகை வளைத்து ஓங்கி ஒரு அடி போட்டார். ப்ளார் என்று சத்தம் வந்தது. சரவணனின் கையில் வைத்திருந்த ரகுவின் நோட்டு ஒருப்பக்கமாய்ப் போய் விழுந்தது. அடிவாங்கி நிமிர்ந்த சரவணன்,


“வலிக்கலையே… வலிக்கலையே எனக்கு” சிரித்துக் கொண்டே சொன்னான்.


“அடிச்ச எனக்கே கை வலிக்குது. இவன் வலிக்கலன்னு சொல்றானே!“ என்று சொல்லிவிட்டு அவரும் சிரித்து விட்டார்.


அன்று மதிய சாப்பாட்டு வேளையில்,  ”டே.. சரவண குண்டா… இங்க வாடா..” என்றான் ரகு. “சொல்லுடா லீடரு” என்று புருவத்தை மேலே தூக்கிக்கேட்டான் சரவணன்.


“வாத்தியாரு அந்த அடி அடிக்கிறாரு. உனக்கு வலிக்கவே இல்லையாடா..” என்றான் மணி.


“என்னது வலியா.. இதுக்கு முன்னால நான் படிச்ச ஸ்கூல்ல நான் நல்லா எழுதலன்னு என்னை மரத்துல கட்டி தலைகீழா தொங்க விட்டுடாங்க.. அதையே தாங்கிட்டேன். இதெல்லாம் ஒரு விஷியமா” என்று சர்வசாதாரணமாய்ச் சொன்னான் சரவணன்.


“என்னது தலைகீழா தொங்கவிட்டாங்களா” என்றான் கண்ணன்


“ஆமாம்! அதுவும் டிரஸ்ஸே இல்லாம” என்று சொல்லிவிட்டு சரவணன் தன்குண்டு உடம்பு குழுங்க தலையை ஆட்டிக்கொண்டு ஒருகையில் டிபன் பாக்ஸ்சும் இன்னொரு கையில் ரொட்டித்துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே சென்றான். ரகுவும் அவனது நண்பர்களும் வாயைப்பிளந்தார்கள்.
 

வருடாவருடம் போலவே நவம்பர் பதினான்காம் தேதி ‘குழந்தைகள் தினம்’ கொண்டாட தலைமை ஆசிரியர் முடிவு செய்திருந்தார். அதன்படி போட்டிகளும் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. வெற்றிப்பெற்றவர்கள் ‘குழந்தைகள் தினத்தன்று’ கௌரவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆறாம் வகுப்பு பி பிரிவிலும் மாணவர்கள் தங்களது பெயரினை ஒவ்வொரு போட்டியிலும் பதிவு செய்தனர். பேச்சுப்போட்டியிலும்  கவிதைப்போட்டியிலும் ரகு தன்னுடைய பெயரைப் பதிவு செய்தான். ஓவியப்போட்டியில் யாருமே பெயர்க்கொடுக்க முன்வராதபோது சரவணன் மட்டும் தன்னுடைய பெயரைக் கொடுத்தான். ஓவிய ஆசிரியர் சரவணனை ஒருமாதிரியாகப் பார்த்தார். அவனால் ஓவியம் சரியாக வரைய முடியுமா எனச் சந்தேகித்தார்.


“டே சரவணா! உனக்கு கயெழுத்தே சரியா வராது.  அப்புறம் எப்படி ஓவியம் சரியா வரைவ?” என்றான் சங்கர்.


“அதெல்லாம் எங்க அப்பா இருக்கிறாருடா.. அவரு பாத்துப்பாரு” என்றான் சரவணன்.


அன்றைய ஓவியப்பீரியடில் ஆசிரியர் வகுப்புக்கு வந்தார். ”போட்டிக்கு எல்லோரும் தயாராகிட்டீங்களா? உங்க திறமைக்கு ஒரு வாய்ப்பு. உங்களுக்கு என்ன வருமோ அதை சிறப்பா செய்யுங்க. உங்க மேலயே நீங்க முதல்ல நம்பிக்கை வையுங்க. நீங்களெல்லாம் இந்தப் பள்ளிக்குப் புதுசு. அதனால ‘குழந்தைகள் தினம்’ நிகழ்ச்சி பற்றி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. விழா ரொம்பமும் பிரமாதமாக நடக்கும். வெற்றிப்பெற்ற மாணவர்களை மேடையில் பேச சொல்லுவாங்க. பரிசும் பதக்கமும் உங்க பெற்றோர்களைக்கொண்டு கொடுக்கச்சொல்லி அசத்துவாங்க. அப்புறம், ஓவியக்கண்காட்சியும் நடக்கும். நீங்க வரைகின்ற ஓவியங்களைக் கண்காட்சியில் வைக்கப்படும். அந்த ஓவியம் பக்கத்தில் நீங்களும் நின்று பார்வையாளராகிய மாணவர்களுக்கும் பெற்றொர்களுக்கும் விளக்கம் தரலாம். கடைசியா உங்க அனைவருக்கும் சாப்பாடு போடுவாங்க” என்றார்.


ஓவியப்போட்டி நடைபெறும் நாளும் வந்தது. எல்லோரும் சார்ட்டும் பென்சிலும் இரப்பருமாக அறையினுள்ளே நுழைந்தார்கள்.  சரவணனும் ஓவியப்போட்டிக்குச் சென்றிருந்தான். போட்டியும் முடிந்தது.


அப்போது ஓவிய ஆசிரியர் சரவணனின் வகுப்பிற்கு வந்திருந்தார். சரவணனை அழைத்து,


“டே தம்பி இந்த ஓவியத்தை நீயா வரைஞ்ச?” என்றார் ஓவிய ஆசிரியர்.


“ஆமாம் சார்! நான்தான் வரைஞன்” என்றான் சரவணன்.


ஆசிரியரால் நம்ப முடியவில்லை. ஆனாலும் உன்னுடைய ஓவியம்தான் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றார். சரவணன் எப்போதும் போலவே வழிந்துகொண்டிருந்தான்.


சரவணனின் ஓவியத்தை மாணவர்களிடம் காட்டினார். ஒரு வெள்ளை சார்ட்டில் மயிலை ஓவியமாக வரைந்திருந்தான். துள்ளி ஆடும் மயிலானது ஓவியமாய் இல்லாமல் நிஜத்தில் பார்ப்பது போன்று தோகைவிரித்து ஆடுவது போல் இருந்தது. அனைவரும் ரசித்துத் சரவணனைப் பாராட்டினார்கள். ரகுவிற்கும்கூட மயில் ஓவியத்தைப் பார்த்து அசந்துதான் போனான். ஆனாலும் ரகுவிற்குச் சரவணன் வரைந்த ஓவியம் அழகாய் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த ஓவியத்தை அவனுடைய அப்பாதான் வரைந்து கொடுத்திருக்க வேணடும். அதைத்தான் எப்படியோ மாற்றி கொடுத்திருக்கிறான் என்று நினைத்தான். சரவணனை மற்ற மாணவர்கள் பாராட்ட பாராட்ட ரகுவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. எப்படியாவது சரவணனின் மயில் ஓவியத்தை ஓவியக்கண்காட்சியில் வைக்கவிடக் கூடாது என்று எண்ணினான்.


ஓவியக்கண்காட்சியில் முதல் நாளன்று மாணவர்கள் அனைவரும் தங்களது ஓவியத்தை அறையில் சரியான இடமாய்ப் பார்த்து வைத்துக்கொண்டிருந்தார்கள். சரவணனுக்கு உதவ ரகுவும் அவனின் நண்பர்களும் உடனிருந்தனர். அப்போது சரவணனின் மயில் ஓவிய சார்ட்டுக்குப் பக்கத்தில் பாட்டிலில் தண்ணீர் குடிக்கின்ற மாதிரியும் கைத்தவறி ஓவியத்தில் விழுகின்ற மாதிரியும் ரகு பார்த்துக்கொண்டான். ரகு நினைத்த மாதிரியே தண்ணீர் முழுவதுமாய் சார்ட்டில் ஊற்றியது. சார்ட் நனைந்து ஓவியம் அழிந்து கொஞ்ச நேரத்திலே நைந்தும் போனது. நடந்தது விபத்துப் போலவே அமைந்தும்விட்டது.  சரவணன் கண்கள் சிவக்க தேம்பிதேம்பி அழுதான்.


சரவணன் அழுவதை அன்றுதான் ரகுவும் மற்ற மாணவர்களும் பார்த்தார்கள். ரகுவிற்கு தான் தப்பு செய்துவிட்டோமோ என்று மனதார வருந்தினான். ஓவிய ஆசிரியர்தான் சரவணனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.


“அழுவாத… நீதான வரைஞ்ச.. இன்னும் நமக்கு காலைவரை நேரம் இருக்கு. அதுக்குள்ள அதேமாதிரி இன்னொன்னு வரைஞ்சிடு” என்றார் ஓவிய ஆசிரியர். சார்ட்டும் பென்சிலும் சரவணனிடம் கொடுக்கப்பட்டது. வெறும் சார்ட்டையையே பார்த்துக்கொண்டிருந்தான். தேம்பல் இன்னும் நிக்கவில்லை. கண்கள் நிறைய கண்ணீருடன் முகமெல்லாம் வியர்த்துக் காணப்பட்டான்.


ரகுவின் நண்பர்கள் அனைவரும், “சரவணா… உன்னால முடியும்! முடியும்! வரைடா… நாங்கெல்லாம் இருக்கோம் என்று உற்சாகப்படுத்தினார்கள். ரகு மட்டும் மனஅழுத்தத்துடன் சரவணனையே பார்த்துக்கொண்டிருந்தான்.  சரவணன் பென்சிலால் கோடிட்டான் வரைந்தான் மேலும்கீழும் இழுத்தான் வட்டமிட்டான். கொஞ்சநேரத்தில் மீண்டும் முன்னைப்போலவே அழகான மயில் ஓவியம் வந்துவிட்டது. சின்ன வயதில் இப்படியொரு திறமையா என்று ஆச்சரியப்பட்டார் ஓவிய ஆசிரியர். ரகு ஓடிச்சென்று சரவணனை இறுகக்கட்டிக்கொண்டான்.


”நண்பா… நீ நல்லவண்டா… திறமையானவண்டா.. உன்னை போல ஒருத்தன் எங்களுக்கு நண்பனா கிடைச்சது சந்தோசம்டா.. என்னை மன்னிச்சிருடா.. நான் வேணுமின்னுதான் ஓவியத்து மேல தண்ணீர் ஊற்றினேன். என்னை மன்னிசிருடா நண்பா..” என்று ரகு சரவணனின் காலில் விழுந்தான்.


”டே ரகு நீ என்னோட பிரண்டுடா… நீ போயி என் கால்ல விழுற..“ என்று ரகுவைத் தூக்கி கட்டிப்பிடித்துக்கொண்டான் சரவணன். மாணவர்களும் ஒன்றாய்க் கூடி கூச்சலிட்டனர். ஓவிய ஆசிரியர் இந்தச் சின்னப் பசங்களின் அன்பைப் பார்த்து வியந்துபோனார்.


சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

எம்.ஜி.ஆர் கல்லூரி,

ஓசூர் – 635 130.

முனைவர் க.லெனின் அவர்களின் படைப்புகளைக் காண்க…

Translate »

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds