Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
Poetry is an artistic form of expression that presents a poet’s thoughts, imagination, and emotions through creative language. The different methods used to communicate ideas effectively and create an impact on readers are known as literary techniques. Literary techniques include elements such as structure, theme, simile, simplicity, imagery, and artistic expression. These techniques enhance the aesthetic quality of poetry and help readers understand literary ideas more effectively. Nature plays an important role in poetry. It serves as a source of inspiration and is often used to express human emotions and experiences. In some poems, nature itself becomes the central subject and gains special significance. As human thoughts and emotions change with time, literary works also change according to contemporary experiences. In this context, Pa. Vijay employs various literary techniques and natural elements in his film songs. The present study focuses on the literary techniques and descriptions of nature in Pa. Vijay’s songs, examining how these elements contribute to the meaning, beauty, and emotional expression of his poetry
“பா.விஜயின் திரையிசைப் பாடல்களில் இலக்கிய உத்திகள்”
இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பர். சமுதாயத்தின் அனைத்துக் கூறுகளும் கவிஞனின் கற்பனையில் பாடலாகிறது. அப்பாடலைக் கேட்போர் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் முறையில் பல்வேறு வகைகளில் வழங்குவது உத்தி எனப்படும். பாடலின் அமைப்பு, கருத்து, உவமை, எளிமை, ஆகிய அனைத்து கூறுகளும் உத்தியாகின்றது. பாடலின் கருத்தைப் பல்வேறு முறைகளில் பாடும்போது அது கலை நுட்பம் உடையதாக மாறுகின்றது. இலக்கியப் படைப்புகளை எளிதில் புரிந்து கொள்ள உதவும் கோட்பாடுப் புதுமைகள் ‘உத்தி’ எனப்படும். மாந்தர்க்கு ஒளியும், உணர்வும், அறிவும் தரும் இயற்கை கவிஞர் தம் கவிதைக்குத் துணையாகவும், தூண்டுகோலாகவும் விளங்கும் இயல்புடையது. கவிஞர்தம் பாடு பொருளுக்குப் பின்னனியாக விளங்கும் இயற்கைப் பாடுபொருளாகவே மாறிச் சிறப்புறுதலுமுண்டாகும். காலபோக்கில் மனிதர்களின் இரசனை மாற்றமடைகிறது எனவே இரசனைக்கேற்ப இலக்கியங்கள் படைக்கப்படுகிறது. அந்தவகையில் கவிஞர் பா.விஜய் அவர்கள் தனது பாடல்களில் பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளார். அவர்தம் பாடல்களில் காணப்பெறும் உத்திகளை இவ்வியல் ஆராய்வதாக அமைகிறது.
உத்தி – பொருள் – நோக்கம்
Technique என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள் உத்தி என்பதாகும். உத்தி என்ற தமிழ்ச் சொல் ‘யுக்தி’ என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். இலக்கியம், இலக்கணம் முதலியவற்றால் திறம்பட வெளிப்படுத்தும் முறைக்கு உத்தி என்று பெயர் என்று மேலைநாட்டு இலக்கியச் சொல்லகராதி விளக்கமளிக்கிறது. பாடலைக் கேட்போர் உள்ளத்தில் கருத்தைப் பதிய வைப்பது உத்தியின் தலையாய நோக்கமாகும். காலத்திற்கேற்ப மாறுதல்கள் பல கொண்டு கவிதைகளை அழகுறச் செய்வது உத்தியின் நோக்கமாகும். சில பாடல்களில் உள்ளடக்கத்தை விட அதை வழங்கும் முறையாகிய உத்தி சிறப்புற அமைவதுண்டு. இதனையே க.ப. அறவாணன் “படைப்பின் உள்ளடக்கம் உடம்பைப் போன்றது. ஆனால் உணர்த்தும் முறை உயிரைப் போன்றது”1 என்கிறார்.
பா.விஜயின் திரையிசைப் பாடல்களில் உத்திகள்
கவிஞர் பா.விஜய் பாடல்களில் காணப்பெறும் உத்திகளை இலக்கிய மரபுசார் உத்திகள், மரபு சரா உத்திகள், பிற உத்திகள் எனப் பிரிக்க இயலும்.
எதுகைத் தொடை
“சொற்பொழிவு, பொருட்டெளிவு, இசைநலம், அணிநலம் முதலிய நல்லியல்புகள் அமையக் கருதிப் பொருள்மேல் பலச் சொற்களைத் தேர்ந்தெடுத்து அமைப்பதுவே செய்யுள் நடையாகும்”2 என்கிறார். இ.பா. வேணுகோபால் எதுகை என்பது பாடலில் ஒவ்வோர் சீரிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதாகும். இதனை,
“உன் பெயர் சொல்லவே
என் உயிர் உள்ளது
என் உயிர் உள்ளதே
உன் பெயர் சொல்லவே”3
என்று சிறப்புற அமையப்பெற்றது அறிவியல் கண்டுபிடிப்பின் அற்புதம் திரைப்படம், திரைப்படம் எந்த ஒரு கருத்தையும் மக்கள் மனதில் எளிதில் பதிய வைக்கும் ஒரு ஊடகம். ‘பேசாத கண்ணும பேசுமே’ என்கிற திரைப்படத்தில் அடியெதுகை அமைய எழுதியுள்ளார். அடிதோறும் முதற்சீரின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருது அடி எதுகை எனப்படும்.
“பூலோகம் எங்கேயும் ஊர்கோலம் போவோம்
பூலோகம் தீர்ந்தாலோ என்ன செய்வோம்
செவ்வாயில் நாம் சென்று ஊர்கோலம் போவோம்
செவ்வாயும் தீர்ந்தாலே என்ன செய்வோம்”4
மேற்கண்டப் பாடலில் வரும் கதைத் தலைவன் தன் காதலியிடம் பூலோகத்தில் ஊர்வலமாய் செல்ல நினைக்கிறான். அப்பூலோகம் தீர்ந்து விட்டால் செவ்வாய் சென்று ஊர்கோலம் போகலாம் என உரைக்கின்றான்.
மோனைத் தொடை
அடிதோறும் முதல் சீரின் முதல் எழுத்து ஒன்றாக வருமாயின் அது மோனைத் தொடை எனப்படும். “அடிதோறும் தலையெழுத் தொப்பது மோனை”5 என தொல்காப்பியர் விளக்கமளிக்கிறார். அடிதோறும் முதல் சீரின் முதல் எழுத்து இடம்பெற்று வரும் பாடலானது,
“திரும்ப திரும்பப் பார்த்து பார்த்து
திரும்ப திரும்பப் பேசிப் பேசி
திரும்ப திரும்பக் காதல் சொல்லும்
கனவுக் காதலா…………
நினைவுக் காதலா”6
என்பதனை, ‘பார்வை ஒன்றே போதுமே’ என்கிற திரைப்படத்தில் காதலியிடம் காதலை எடுத்துக் கூறும் அழகினை மேற்கண்ட பாடலின் வழி எடுத்துரைக்கின்றார். ‘திரும்ப’ என்றச்சொல் குறியீட்டுப் பொருளாக கையாளப்பட்டுள்ளது. இப்பாடல் வரிகளில் ‘தி’ என்னும் முதல் எழுத்து அடிகள் தோறும் வந்து அடி மோனையாக அமைந்துள்ளது. ஓரடியில் முதல் இரு சீர்களில் முதல் எழுத்து ஒன்றி அமைவது இணை மோனை ஆகும். இதனை,
“சுடும் எனத் தெரிந்தும் சுகம் என நெருங்கி
சுட்டப்பின் என்னை சபித்த தென்ன?
தீபத்தின் திரியில் பிறக்கின்ற ஒளியை
தீயென யாரும் வெறுப்பதுண்டோ?”7
என்பதனை, ‘ஞானப்பழம்’ என்னும் திரைப்படத்தில் வரும் கதைத் தலைவியிடம் காதலின் வலியை எடுத்துரைக்கிறான்..
முரண் : சொல் முரண்
சொல் முரண் என்பது சொற்கள் முரண்பட்டு வருதல் ஆகும். ‘எனக்கு 20 உனக்கு 18 என்னும் திரைப்படத்தில் காதலின் தத்துவத்தை விளக்கும் பாடல் ஒன்றில் சொற்கள் முரண்பட அமைந்துள்ளது. இதனை,
“உன்னைப் போலொரு பெண்ணின் அருகிலே
மௌனம் கொள்வது கஷ்டம் தான்
பேசிக் கொள்ளாத நிமிஷம் எல்லம் நஷ்டம்
சொற்கள் என்பதை மிஞ்சும் அர்த்தமும்
மௌனம் என்பதில் உள்ளது உள்ளது
மௌம் மிஞ்சினால் பேசி விடுவதே நல்லது”8
என உரைக்கின்றபோது காதலியின் அருகில் இருப்பது சுகம் எனவும் அப்போது அவள் பேசவில்லை என்றால் அது நஷ்டத்தை தரும் எனவும் மௌனம் காதலில் கூடாது என்பதனை சொல் முரண் அமைய கவிஞர் பாடலை இயற்றியுள்ளார்.
பொருள் முரண்
பொருள் முரண் என்பது கருத்து முரணால் வருதல் என்பதாகும். இதனை,
“பெண்ணை பார்த்ததும்
வழிபவன் வேண்டாம்
டைம் கேட்டதும்
குழைபவன் வேண்டாம்
பெண்ணை அடிக்கடி
ரசிப்பவன் வேண்டாம்
இரசிக்காமல் இருப்பவன்
வேண்டாம்”9
என்று “காதல் வைரஸ்” என்னும் திரைப்படத்தில் ஒரு பெண் தனக்கான கணவன் எவ்வாறு அமைய வேண்டும் என்று விருப்பத்தை தெரிவிப்பதாக மேற்கண்ட பாடல் உணர்த்துகிறது. தான் சொல்வதை செய்கின்ற தலைவன் வேண்டாம் எனவும் சொல்லாததையும் செய்பவன் வேண்டாம் எனவும் பொருள் முரண்படும்படி மேற்கண்ட பாடலின் வழி கருத்துரைக்கின்றார்.
இயைபுத்தொடை
அடிகள் தோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ ஒன்றி வருவது இயைபுத் தொடை என்பதாகும். ‘ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே” என்கிற திரைப்படத்தில் வரும் பாடல் இயைபுத்தொடை அமைய இயற்றப்பட்டுள்ள பாடலானது,
“பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
டன் டன்னாக பொய் சொல்லலாம்
பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
காசா பணமா நாம் பொய் சொல்லலாம்
பெண்ணே – நீ அழகான பெண்ணில்லையே
உன்மேல் காதல் வரவில்லையே”10
என நகைச்சுவைத் ததும்பும் விதமாக மேற்கண்ட பாடல் இயைபுத் தொடையில் புனையப்பட்டுள்ளது. எவ்வித தயக்கமும் இன்றிப் பொய் சொல்லலாம் எளவும் அப்பொய் எவ்வித பொருளாதர இழப்பையும் ஏற்படுத்தாது எனவும் அழகான பெண்களை அழகில்லை எனவும், அவ்வழகால் தனக்கு காதல் வரவில்லை எனவும் தலைவன் பொய்யுரைப்பதாக இயைபுத்தொடையில் பயின்று வரும் வண்ணம் மேற்கண்ட பாடலின் வழி கவிஞர் சுட்டுகின்றார்.
உவமையணி
ஏதேனும் பொதுவான தன்மை பெற்றுள்ள இரண்டு பொருள்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அழகுறச் செய்வது உவமையணி. இலக்கிய அணி வகைகளில் சிறந்தது. உவமை அணி. ஆதலால் இது ‘தாயணி’ என்று அழைக்கப்படுகிறது. “பண்பு, தொழில், பயன் என்பனவற்றின் அடிப்படையில் ஒன்றாகியும் பலவாகியும் பொருளோடு பொருள் இனைய ஒப்புமைப் புலப்படப்பாடுவது” என்று விளக்கமளிக்கிறார் தண்டியாசிரியர் ஒரு பொருளின் தன்மையை விளக்கி காட்ட உவமையணி பயன்படுகிறது. இப்படி விளக்கமளிக்கும் போது பாடல் இன்பம் தருவதாகவும் அமைகிறது. இதனை,
“ஒன்னால ஒன்னால
ஏம் மனசு ஒன்னால
தறியில் ஓடும் நாடா போல
ஏன் ஓடுது அது ஏன் ஓடுது”11
என்பதனை, காதலியோடு உரையாடும் காதலன் காதலியினால் தன் மனம் தறியில் ஓடும் நாடாத் துணியைப் போல ஓடுவதாகவும் அதனை கட்டுப்படுத்த வழியில்லை எனவும் பாடுவதாக மேற்கண்ட பாடலின் வழி உவமையை வெளிப்படுத்திக் காட்டுகின்றார்.
இயல்பு நவிற்சி அணி
உள்ளதை உள்ளவாறு இயல்பான முறையில் அழகுபட எடுத்துரைப்பத இயல்பு நவிற்சி அணியாகும். இதனை வலியுறுத்தும் விதமாக,
“ஏ சித்தப்பா மீசையும் பெரியப்பா மீசையும்
என்னோட ஊஞ்சலாச்சே
ஏ பாசத்துக்கு பஞ்சமில்ல… ஆனந்தமும் கொஞ்சமில்லை
ஆர்ப்பாட்டம் பண்ணலான் டோய்”12
என்ற வரிகலானது நாகரிக உலகத்தின் நவீன கலை வடிவமான திரைப்படத்தில் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில் கிராமப்புறங்களின் அழகினையும் உறவுகளின் சிறப்பினையும் இயல்பு நவிற்சி அணியாக மேற்கண்டப் பாடலின் வழி எடுத்துரைக்கின்றார்.
உயர்வு நவிற்சி அணி
ஒரு பொருள் உயர்வை மிகவும் உயர்த்திச் சிறப்பித்து அழகுபடக் கூறுவது உயர்வு நவிற்சி அணியாகும். ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்த ஊரை நேசிப்பது இயல்பு. பிறந்த ஊர் அவனுக்கு சொர்க்கத்தைவிட மேலானதாகும். ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ என்னும் திரைப்படத்தில் வரும் நாயகன் தன் ஊரின் பெருமையை மிகவும் உயர்த்திக் கூறுவதாகப் பாடும் பாடலில் உயர்வு நவிற்சி அணி அமைந்துள்ளது. இதனை,
“வையை வெள்ளம் குளிப்பாட்டும் தமிழ்பாட்டு
இந்த மும்பை தலையாட்டும் அதைக் கேட்டு
காத்துக்கில்ல கடிவாளம் கூத்துக்கில்லை மொழிபேதம்
வேத்துமைகள் இல்லாம எல்லோரும் ஒன்னாவோம்”13
என ஒவ்வொருவருக்கும் தங்கள் ஊர். தங்கள் ஊரின் சிறப்பு, மொழியின் சிறப்பு ஆகியவை மேன்மையானவை என்கிற எண்ணம் உண்டு வைகை நதியின் சிறப்பு, தமிழ் மொழியின் பழமை மற்றும் பெருமை ஆகியவற்றை மேற்கண்ட பாடல் பறை சாற்றுகின்றது. இதற்கு உயர்வு நவிற்சி அணியைக் கவிஞர் பயன்படுத்தியுள்ளார்.
சொல்பொருள் பின்வருநிலையணி
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ பலவிடத்தும் வந்து அணி செய்யின் அது சொற்பொருள் பின்வரு நிலையணியாகும். சொல்பொருள் பின்வருநிலையணியை கவிஞர் பயன்படுத்தி தான் கூற வந்த கருத்தைப் பதிவு செய்துள்ளார். இதனை விளக்கும் விதமாக,
“சாமி கருப்புத்தான்
சாமி சிலையும் கருப்புத்தான்
யானை கருப்புத்தான்
மதுரை வீரன் கையில் இருக்கும்
வீச்சறுவா கருப்புத்தான்
மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த
மழை மேகம் கருப்புத்தான்”14
என்று வருவதனை, இங்கு ‘கருப்பு’ என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை பயின்று வந்துள்ளதால் இது சொல்பொருள் பின்வருநிலையணி ஆகும். கருப்பு நிறம் தமிழக மக்களின் நிறம் எனவும் இயற்கையோடு இயைந்த கருப்புநிறம் எனவும் இக்கவிதையில் கவிஞர் பதிவு செய்துள்ளார்.
இல்பொருள் உவமையணி
உலகத்திலே இயல்பாக இல்லாத பொருளைக் கற்பனையில் உருவாக்கி அதனை உவமையாகக் கூறுவது இல்பொருள் உவமையணி ஆகும்.
“என் இசை கேட்டால் நகக்கண்ணு வெருக்கும்
என் தமிழ் கேட்டால் தண்டவாளம் துளிர்க்கும்”15
அகத்தியரின் இசை கேட்டு பாறை உருகி பாறைமேல் இருந்த இராவணன் யாழ் பாறைக்குள் சிக்கிக் கொண்டது என்பது புராண வரலாறு. கவிஞர் பல புராணங்களை படித்ததன் விளைவாகவே இவரது பாடல் வரிகள் இவ்வாறு இயல்பாக வருகிறது. இசையால் நகம் வெருப்பதும் இரும்புப் பொருளான தண்டவாளம் துளிர்த்தல் என்பதும் நடப்பியல் வாழ்வில் நடைபெறாத ஒன்றாகும். இல்பொருள் உவமையணியைப் பயன்படுத்தி தான் கூற வந்த இசையின் மேன்மையை பாடலில் பதிவு செய்துள்ளார் கவிஞர். இல்பொருள் உவமையணி பாடல் ஒன்று,
“வைரத்தில் மழைக் கேட்டேன் நான்
தங்கத்தில் குடை கேட்டேன்
பவளத்தில் பூக்கேட்டேன் நான்
வெள்ளியில் நூல் கேட்டேன்
தங்கத்தில் கேட்பேன் மாளிகை தான்
சொந்தத்தில் கேட்பேன் சூரியன்தான்
அந்த நிலை என் வீட்டில்
ஒரு நைட் லேம்ப்போல நானும் கேட்பேன்”16
என்று கவிஞர் இல்பொருள் உவமை அணியைக் கையாண்டுள்ளார்.
உருவக அணி
பொருள் முழுவதும் உவமை பின்னுமாய் வேறுபாடில்லாமல் ஒன்றுபடுத்தி உவமையின் தன்மையைப் பொருளின் மேல் ஏற்றிக் கூறுவது உருவக அணியாகும்.
“உவமையுள் பொருளும் வேற்றுமையொழிவித்
தொற்றென் மாட்டினஃதுஞவகமாகும்”17
என விளக்கமளிக்கிறது தண்டியலங்காரம். கவிஞர் பா.விஜய் அவர்களும் கருத்து செறிவுமிக்க பல உருவகங்களை தனது பாடலில் பயன்படுத்தியுள்ளார்.
“சம்பல் காட்டுக் கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரத்துக்கு வாடா வாடாடேய்
கொல்லிமலை வெட்டுப்பாற
வெய்யி ல்பட்டு சுட்டப்பாற
உச்சத்துக்கு வாடா வாடா டேய்
ஏய் பாக்தாத் பேரழகி
பட்டாக் கத்தி கண்ணழகி
பத்தவச்சு பார்க்கட்டுமா டேய்”18
தலைவியை வர்ணிக்கின்ற போது அன்பின் காரணமாக கொள்ளைக்காரி வெள்ளைக்காரியாகவும், வெட்டுப்பாறையாகவும், பாக்தாத் பேரழகியாகவும், கண்ணழகியாகவும் உருவகப்படுத்தி பாடுவதை மேற்கண்டப் பாடலின் வழி உணர்த்துகின்றார் கவிஞர்.
முற்றுருவம்
ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளை உருவகமாக்கும் போது அப்பொருளோடு தொடர்புடைய அனைத்தையும் உருவகப்படுத்துதல் முற்றுருவம் ஆகும் இதனை,
“விண்ணை விட்டுப் போகாதே
வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை விட்டுப் போகாதே
உள்ளம் ரெண்டும் இணைகிறதே”19
என்று காதலியை நினைத்துக் காதலன் பாடும் பாடல் இது. வெண்ணிலவைப் போல தன்னைவிட்டு விண்ணிற்கு சென்று விடக் கூடாது எனவும் மின் அஞ்சலைப் போல கண்களை கொண்டுள்ள காதலி லட்சம் தகவல்களை கூறுவதாகவும், காதல் என்கிற கணிப்பொறியில் இரண்டு உள்ளங்களும் இணைந்து விட்டதாக மேற்கண்டப் பாடலின் வழி முற்றுருவத்தைக் கவிஞர் விளக்குகின்றார்.
தற்குறிப்பேற்ற அணி
இயல்பாக நிகழும் ஒரு நிகழ்வின் மீது கவிஞன் தன் கருத்தை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணியாகும். இதனை,
“வானத்தில் இருந்து
பொன் மின்னல் விழுந்து
வில்லாகி போனதோ நான் உன்
புருவத்தைச் சொன்னேன்
கூந்தலைச் சொன்னேன்”20
என்பதனை, ‘ஞானப்பழம்’ என்கிறத் திரைப்படத்தில் காதலியின் புருவத்தை வான வில்லோடும், நெற்றியை நிலவின் பிறையோடு ஒப்பிட்டும், கண்களை மின்சாரத்தோடும், கருமேகத்தை கூந்தலோடும் காதலியைத் தற்குறிப்பேற்றமாக ஏற்றி கவிஞர் மேற்கண்ட பாடலில் கருத்தமைக்கின்றார்.
பிறிதுமொழிதல் அணி
கவிஞர் தான் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாக கூறாது. அதனோடு ஒத்த வேறொன்றின் மீது ஏற்றிக் கூறி கருதியப் பொருளைப் பெற வைப்பது பிறிது மொழிதல் அணியாகும். அணிக்கு ஏற்றாற்போல பாடல் ஒன்று,
“மணிமாட குயிலே நீ கொஞ்சம் நில்லு
வனவாச குயிலுக்கு சந்தம் சொல்லு
சொர்க்கம் என்ற ஊருக்கு என்னை வழி நடத்தி
கண்கள் ரெண்டை கட்டிப் போட்டால்
லாபம் என்ன?”21
என மேற்கண்டப் பாடலில் தன்னோடு காலம் முழுவதும் பயணிப்பதாகக் கூறி திருமண பந்தத்தில் இணைந்த தலைவி தற்போது இல்லற வாழ்வில் இருக்காமல் தன்னை விட்டு பிரிந்து செல்லும் நிலையினை வருந்தி தலைவன் பாடுகின்றான். கண்களை கட்டிவிட்டு சொர்க்கத்தைக் காட்டினால் அது பயனளிக்காது, அதுபோல காதலி இல்லாத வாழ்க்கை மனதிற்கு இன்பம் தராது என பிறிதொரு கருத்தினை இப்பாடலின் மூலம் பெறப்படுகிறது.
தொன்மம்
தொன்மத்தினைத் தொல்காப்பியர்,
“தொன்மை தானே சொல்லுங் காலை
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே”22
என விளக்கமளிக்கிறார். இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் உள்ள செய்திகளையும் அதன் கருத்தாக்கத்தினையும் கவிஞரின் படைப்புகளில் காண முடிகிறது. புராணக்கதை நிகழ்வுகளையும் கதை மாந்தர்களின் பெயர்களையும் வைத்து பல பாடல்களை இயற்றியுள்ளார். இதனை,
“டேய் டேய் சின்ன வயசுல நீயும் நானும் ஒன்னாகத்தான்
ஓடக்கார மேல நின்னு உண்டிவச்ச அடிச்சதுல
தொண்டித்தோப்பு மச்சான் மண்ட ஓடஞ்சதெல்லாம் நெனப்பிருக்கா
அடடே அந்த வயசுல நீயும் நானும் பேசி வச்சு
வாத்தியாரு நாற்காலியில் ஆணியத் தட்டி வச்சிருந்தோம்
காவல்காரன் முண்டாசுல ஊசியக்குத்தி வச்சிருந்தோம்
கடலக்காட்டுல அட நீயும் நானும் அள்ளிக்கிட்டு ஓட்டம் ஓடினோம்”23
என்று சிறு வயதிலே இரண்டு பிள்ளைகள் ஒன்றாக விளையாடி மகிழ்ந்த கதையைத் தொன்ம நிகழ்வாக மேற்கண்ட பாடல் படம் பிடிக்கின்றது. சிறு வயது நினைவுகள் வயதான பின்பும் அனைவருக்கும் பசு மரத்தாணி போல மனதிற்குள் நிழலாடும். எல்லா மனித உயிருக்கும் காலங்காலமாய் நினைவில் இருக்கும் இளமைப் பருவத்தினைத் தொன்ம நிகழ்வாக மேற்கண்ட பாடல் வழி காட்சிபடுத்துகின்றார்.
படிமம்
‘இமேஜ்’ என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் படிமம் என்பர். முன்னர் மனத்தால் ரசித்துப் பார்த்தக் காட்சி பதிவாகி பின்னர் ஏதேனும் ஒரு சூழலில் அது மீண்டும் மனக்கண் முன் நிறுத்தப்படுவது படிமம் ஆகும். படிமம் என்ற சொல்லுக்கு “ஒரு காட்சி சார்ந்த உணர்வுகளை நேரிடையாக மனதில் ஏற்படுத்துகின்ற மற்றொரு காட்சி”24 என்ற விளக்கம் நோக்கத்தக்கதாகும் “பண்டைய உவமை, உருவகம். உள்ளுறை, இறைச்சி ஒட்டணி இவற்றின் கூட்டுக் கலவையே படிமம்”44 என்கிறார் க.ப. அறவாணன். படிமத்திற்குச் சான்றாக,
“மரபு கவிதை உனது சிரிப்பு
சந்தம் இருக்கிறதே!
வசனக் கவிதை உனது தாளம்
அழகு தெறிக்கிறதே!
ஹைக்கூ கவிதை உனது கண்கள்
நீ வார்த்தை நான் அர்த்தம்
நாம் சேர்ந்து கவிதையானோம்”25
என மரபு கவிதைப் போல காதலியின் சிரிப்பு உள்ளது அது சந்தமாக அமைகின்றது. அவளின் நாணம் வசனக் கவிதைப் போன்ற அழகினை விரிக்கின்றது. இன்றையக் கவிஞர்கள் விரும்பும் ஹைக்கூ கவிதை போல் அவளின் கண்கள் உள்ளது. மொத்தத்தில் கவிதையாக அமைகின்றது என படிமத்தின் குறியீடாய் ‘நான் பாட நினைப்பதெல்லாம்’ என்ற திரைப்படத்தில் கவிஞர் பா.விஜய் காட்சிப்படுத்துகின்றார்.
அங்கதம்
இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உத்திகளில் ஒன்று அங்கதம் தொல்காப்பியத்தில் செய்யுளியலில் இதனை.
“வசையொடும் நசையொடும் புணர்ந்தண் றாயின்
அங்கதச் செய்யுள் என்மனார் புலவர்”26
என்று தொல்காப்பியர் அங்கதம் பற்றி குறிப்பிடுகின்றார். அங்கதச் சுவையின் அடிப்படையில் உருவான பாடல் ஒன்று,
“இந்தாடி கப்பக்கிழங்கே என்னாடி காரக்குழம்பே
ஆத்தாடி அச்சுமுறுக்கே… ஏய்
தக்காளி செக்க செவப்பே பப்பாளி சக்க இனிப்பே
சோக்காளி மச்சக் கொழுப்பே
பதுக்கி வச்ச ரேசன் கடை”27
குறிப்பிட்டுள்ளார் என தான் விரும்பும் பெண்ணின் அழகை அங்கத சுவையோடு கவிஞர் பா.விஜய் அவர்கள் ‘தூள்’ என்னும் திரைப்படத்தில்.
வினா – உத்தி
பாடல்களில் வினா எழுப்புதல் என்பது கேட்போரின் சிந்தனையைத் தூண்டும் உத்தியாகும். இன்றைய இளைஞர்கள் பலரும் இவ் உத்தியைப் பயன்படுத்துகின்றனர். வினாவிற்கு இலக்கனம் கூறும் விதமாக,
“செப்பும் வினாவும் வழா அல் ஓம்பல்”28
என்கிறார் தொல்காப்பியர். கவிஞர் பா.விஜயும் தனது பாடல்களில் வினா உத்தியைக் கையாண்டுள்ளார். இதனை,
“முதல்முறை வந்த மழை எது? என்று
நதியிடம் கேட்டால்
என்ன சொல்லும்?
முதல்முறை சேர்ந்த நதி எது? என்று
கடலிடம் கேட்டால்?
என்ன செய்யும்?”29
என இயற்கையின் ஆதியை கண்டவர்கள் யாரும் இல்லை என்பதை வினா உத்தியின் வாயிலாக மேற்கண்ட பாடலில் விளக்குகின்றார்.
தொகுப்புரை
படைப்பின் எளிமையும் அழகினையும் படிப்;போர் விரும்புவதற்காக ஒலி நயம், எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகிய உத்திகளை கவிஞர் பா.விஜய் தம் திரையிசைப் பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். கற்பனை அழகியலை கேட்போர் விரும்பும் வண்ணம் உணர்த்துவதற்காக உவம உருபுகளைப் பயன்படுத்தி உவமையணியை எடுத்தாண்டுள்ளார். மேலும் உருவகம், முற்றுருவகம் போன்ற அணிகளும் இவரது படைப்புகளை அணி செய்கின்றன. கலை வடிவமான திரைப்படத்தின் உண்மை இயல்பை எடுத்துரைக்க நவிற்சியணியையும், பிறந்த ஊரின் பெருமையை விளக்க உயர்வு நவிற்சியணியையும் இவர்தம் படைப்புகளில் பயன்படுத்தியுள்ளார். காதல் மற்றும் உலக இயல்பை எடுத்துக்காட்டும் போக்கில் படிமம், மற்றும் குறியீடு போன்ற உத்திகளைக் கவிஞர் கையாண்டுள்ளார். தான் சொல்ல கருதிய கருத்தினை மக்கள் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்த பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளார். இதுவே அவரது படைப்பாற்றல் சிறப்பதற்குரிய முதன்மை காரணமாகும். கவிஞரின் நெஞ்சம் நிறைந்த பாடல்கள் மக்கள் மனதில் நிலையான ஓரிடத்தைப் பெற்றன.
சான்றெண் விளக்கம்
1.அறவாணன், க.ப.கவிதையின் உயிர், உள்ளம், உடல் ப.379
2.வேணுகோபால், இ.பா. பைந்தமிழ் கற்பிக்கும் முறைகள் ப.104
3.பா.விஜய், திரைப்பட பாடல்கள் பாகம் 1, ப.9
4.பா.விஜய், திரைப்பட பாடல்கள் பாகம் 1, ப.20
5.புலியூர் கேசிகன் (உ.ஆ) தொல்காப்பியம் நூ.88
6.பார்வை ஒன்றே போதுமே திரைப்பாட்டு புத்தகம்
7.கே.பாக்கியராஜ் திரைப்பாடல்கள், ப.16
8.கவிஞர், பா.விஜய் திரைப்பட பாடல்கள் பாகம் 1, ப.37
9.பா.விஜய், திரைப்பட பாடல்கள் பாகம் 1, ப.29
10.அஜித் சூப்பர் ஹிட் பாடல்கள் ப – 119
11.பா. விஜய் திரைப்பட பாடல்கள் பாகம் – 1 ப – 19
12.பா.விஜய், திரைப்பட பாடல்கள் பாகம் 1, ப.34
13.பா.விஜய், திரைப்பட பாடல்கள் பாகம் 2, ப.15
14.பா.விஜய், திரைப்பட பாடல்கள பாகம் 1, ப.7
15.பா.விஜய், திரைப்பட பாடல்கள் பாகம் 1, ப.180
16.அருளேசன், (தொ.ஆ) ஏ.ஆர்.ரகுமான் ஹிட்பாடல்கள், ப.18
17.பா.விஜய், திரைப்பட பாடல்கள் பாகம் 1, ப.186
18.இராம சுப்பிரமணியன் தண்டியலங்காரம்,பொருளணி நூ.36
19.பா.விஜய், திரைப்படப் பாடல்கள் பாகம் 2, ப.90
20.பா.விஜய், திரைப்பட பாடல்கள பாகம் 1, ப.21
21.பா.விஜய், திரைப்பட பாடல்கள பாகம் 1 ப.03
22.பா.விஜய், திரைப்பட பாடல்கள பாகம் 1 ப.04
23.பா.விஜய், திரைப்பட பாடல்கள் பாகம் 2, ப.22
24.பா.விஜய், திரைப்பட பாடல்கள் பாகம் 2,
25.சுப்ரமணியன் பா.ரா.(மு.ப.ஆ),க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி ப.665
26.அறவாணன்.க.ப கவிதைகயின் உயிர், உள்ளம், உடல் ப.374
27.பா.விஜய், திரைப்பட பாடல்கள் பாகம் 2, ப.121
28.புலியூர் கேசிகன் (உ.ஆ) தொல்காப்பியம், செய்யுளியல் நூ.443
29.பா.விஜய், திரைப்படப் பாடல்கள் பாகம் 2, ப.10
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ப.செந்தில்நாதன்,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி (தன்னாட்சி),
பெரம்பலூர்-621 220.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

