Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
In Tamil culture, family is a social organization built on the virtues of love, virtue, morality, giving, and responsibility. Husband-wife relationship is very essential in this family system. This relationship lays the foundation for the success of domestic life, the happiness of the family and the well-being of the children. Husband should have true love and mutual understanding with wife and wife with husband. Respecting one’s feelings and thoughts by the other leads to a happy family life. Both husband and wife are equal partners in the family. Both should have equal say and decision-making rights in family decisions, financial planning, children’s education, relationships with relatives, etc. Disagreements are normal in family life. In such situations one should avoid anger, stubbornness and domineering attitude and act with patience and surrender attitude.
“பூமணி நாவல்களில் கணவன் மனைவி உறவு”
முன்னுரை
மனித சமுதாயத்தின் மிகத் தொன்மையான நிறுவனமாக விளங்குவது குடும்பம் ஆகும். இஃது எல்லாச் சமுதாயங்களிலும் எல்லாக் காலங்களிலும் நிலவி வரும் சிறந்த அமைப்பாகும். மனிதன் பல நிறுவனங்களோடு தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை இணைத்துக் கொண்டாலும் குடும்பமே அவனது தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அது மட்டுமல்லாமல் குடும்பமே சமுதாயம் உருவாக அடிப்படையாக அமைகிறது. மனிதன் குடும்பமாக வாழ்வது நாகரிகத்தின் வெளிப்பாடாகும். மனிதனை விலங்கு நிலையிலிருந்து பிரித்துக் காட்டுவது குடும்பமே ஆகும். “குடும்பமே சமுதாயத்தின் மிகச்சிறிய ஆனால் அதிநெருக்கமான குழுவாகயுள்ளது. இங்குதான் மனித வர்க்கத்தினுடைய ஒற்றுமை பாசம் போன்ற உன்னத அபலாசைகளும் தேவைகளும் முழுமையாகத் திருப்தி பெறுகிறது.”(சி.என்.குமாரசாமி, பெண்ணிய நோக்கில் பாரதி, ப.192) என்ற கருத்து குடும்பத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. இத்தகைய குடும்பத்தின் தன்மையைப் பூமணி நாவல் வழி இக்கட்டுரை ஆராய்கிறது.
திறவுச்சொற்கள் : பூமணி, கணவன், மனைவி, உறவு நிலைகள், கணவனின் அன்பு, மனைவியின் பாசம், நைவேத்தியம், பிறகு, வாய்க்கால்
கணவன் – மனைவி உறவு
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணமானப் பின்பு ஏற்படும் உறவு முறையே கணவன் – மனைவி உறவு முறை ஆகும். ஒரு குடும்பத்தின் அன்புறவுகளில் கணவன் மனைவி உறவே சிறப்புடையதாகும். குடும்ப அமைப்பில் கணவனும், மனைவியும் சம உரிமை உடையவர்களாகவும், சம மதிப்புப் பெற்றவர்களாகவும் விட்டுக் கொடுத்து வாழும் தன்மை உடையவர்களாகவும் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் புரிதலுடன் வாழும் நிலை சிறப்புடையதாகும். ஹதான்’ என்ற எண்ணமில்லாமல் வாழ்வது மிகவும் சிறப்பு. கணவன் – மனைவி இருவரிடையே எந்த ஒழிவு மறைவின்றி வாழும் போதும், ஆளுமை ஒருவர் மீது ஒருவர் செலுத்தாத போதும் சிக்கல்கள் இல்லாது இன்பமுடனும், அமைதியுடனும் குடும்ப வாழ்க்கைச் செல்லும். “திருமணமான பின் ஓர் ஆணுக்கும் பெண்ணுமிடையே ஏற்படும் உறவு முறையே கணவன் – மனைவி உறவே தலையாயது. திருமணத்தின் மூலம் இணைந்த கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் சமமதிப்புக் கொடுப்பவராக விளங்க வேண்டும். அவ்வாறு இணைந்து வாழும் குடும்ப வாழ்க்கையே வெற்றி பெற்ற வாழ்க்கையாகக் கருத இடமுண்டு. மாறாக கணவனின் ஆளுமை தலையெடுக்கும் பொழுதோ, அல்லது மனைவியின் தலைமைப் பண்பு தலைத்தூக்கும் போதோ கணவன் மனைவி உறவில் சிக்கல் எழுகின்றது’’ (ப.அன்புச்செழியன், தினமணிக்கதிர்ச் சிறுகதைகளில் சிக்கல்கள் ப.116) என்ற கருத்து கணவன் – மனைவி வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுள்ளது.
கணவனின் அன்பு
நைவேத்தியம் நாவலில் வரும் சங்கரய்யர் மனைவி கோமு. சங்கரய்யரும் மிகுந்த அன்புடைய கணவன் மனைவியாக வாழ்ந்தனர். பிராமணர்கள் சித்திரம் பட்டியிலிருந்த தங்களுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகையை விடுத்து அதன் மூலம் கிடைத்த பொறுப்பு இல்லை கொண்டு பிழைப்பு நடத்தினர். சில ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தினால் நிலத்தில் விளைச்சல் இல்லை. இதனால் அக்ரஹாரத்தில் உள்ள பிராமண குடும்பங்கள் துன்பத்தில் வறுமையில் வாழ்ந்தனர். ஒரு நாள் திடீரென்று கோமுக்கு உடல்நிலை சரியில்லாத போகவே கையில் காசு இல்லாமல் அவளுக்கு வைத்தியம் செய்ய முடியாமல் சங்கரய்யர் மிகவும் துன்பப்பட்டார். கோமுவின் நிலையைப் பார்த்த சங்கரய்யர், “கோமுவை நினைக்கும் போது சங்கரய்யருக்கு நெஞ்சுக்குள் குடைந்தது. மௌனமாக அலறினார். எப்படி இருந்தவள் முகலட்சணம் மங்கி நடமாட்டம் குறைந்து விட்டாள். சொல்லப் போனால் வீட்டுக்குள் வாழத் தொடங்கி விட்டாள். கோயிலுக்குக் நடக்கக் கஷ்டப்பட்டாள். சதா சிரித்த முகத்துடன் இருக்கும் கோமுவா இப்படி மாறிவிட்டாள். நந்தவன மயிலை போல் பிரிவாலே அந்த கோமுவா. அவருக்கு நிம்மதி இல்லை கோமுக்காக ஈஸ்வரனை வேண்டாத நாளில்லை.” (பூமணி, நைவேத்யம், ப.57) என்ற வரிகளில் மனைவியின் நிலையை எண்ணி வருந்தும் கணவனின் பாசத்தைப் பூமணி பதிவு செய்துள்ளார். வருமானம் இல்லாமல் வறுமையில் வாழும் சங்கரய்யர் தன் மனைவிக்கு மருத்துவம் செய்ய முடியாததை எண்ணி வருந்தும் நிலையை, “உடம்பு தினமும் உருகி கொண்டு போனது. அவளைப் பார்க்க பார்க்க சங்கரய்யரின் கண்கள் கசிந்தன. என்ன செய்வது கையில் பணம் இருந்தால் மருத்துவம் பார்க்கலாம். பார்த்தாகணும். படுத்திருப்பவளை எழுப்பி பழைய கோமுவாக்கணும். என்ன நோய்க்கு மருத்துவம் பார்ப்பது. அவஸ்தையைப் பற்றிக் கேட்டால் அழுதாள். அவர் புழுங்கித் தவித்து வீட்டு மூலையில் கிடந்த இரண்டு நெல் மூட்டைகளைத் தடவிப் பார்த்தார்.” (பூமணி, நைவேத்யம், ப.57) என்ற கருத்தின் வழி ஆசிரியர் படம் பிடித்துக் காட்டுகிறார்.
இதன் மூலம் மனைவியின் நோய்க்கு மருத்துவம் செய்ய முடியாமல் புலம்பும் கனவனின் பாச நிலைப் போராட்டத்தைக் காணலாம். மேலும், கடன் வாங்கியாவது தன் மனைவியின் நோயைக் குணப்படுத்த என்னும் சங்கரய்யரின் பாசத்தை, “கோயில்களில் பூஜை செய்தால் வயிறு நிறையும் ன. மருந்துக்கு பணம் வேண்டுமே ஓடி அலைந்து பார்த்தார். சாம்புவய்யரிடம் கேட்க மனசில்லை. அவரும் உடம்பு முடியாமல் இருந்தார். அவரைக் கவனிக்கவே நிறைய பணம் தேவை இருக்கும்.” (பூமணி, நைவேத்யம், ப.57) என்ற கருத்தின் வழி ஆசிரியர் பதிவு செய்துள்ளார். கடன் பட்டாவது தன்னுடைய மனைவியைக் குணப்படுத்த எண்ணும் கணவனின் அன்பை இதன் வழி அறிய முடிகிறது.
நிலத்தின் மூலம் கிடைக்கும் பொறுப்பு நெல் கிடைக்காமலும், வறுமையின் பிடியிலும் வாழும் சங்கர் ஐயர் தன் மனைவியின் நோய்க்கு மருத்துவம் செய்வதற்காக வேறு வழி இன்றி நிலத்தை விற்கின்றார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு தன் மனைவிக்கு வைத்தியம் செய்கின்றார். நிலத்தை விட தன் மனைவியை பெரிதென்று எண்ணும் கணவனின் அன்பு நிலையை, “தேவையான பணத்தை வாங்கிக் கொண்டு நஞ்சையை நேக்குவிடும். அதப் பயிர் செய்ய முடியாது. எப்படியும் குடியானவனுக்கு விடப் போகிறீர். அதுக்கு நமக்குள்ள விடலாமே. சங்கர் ஐயர் மௌனப் பட்டார். ரெண்டாவது நாள் நஞ்சை கைமாறியது. சங்கர் ஐயர் தலையாரியைப் பார்க்கவில்லை. சாம்புவய்யரின் வீடுபடியேறக் கூசியது.” (பூமணி, நைவேத்யம், ப.57) என்ற வரியில் மனைவியின் மருத்துவத்துக்காக தன் நிலத்தையே விற்கும் கணவனின் அன்பைக் காண முடிகிறது.
பிறகு நாவலில் வரும் அழகிரி என்பவன் மணலூத்துக் கிராமத்தில் செருப்பு தைக்கும் தொழிலைச் செய்பவன். அவனுடைய மனைவி உடல்நிலை சரியில்லாமல் போகிறாள். செருப்பு தொழில் மூலம் மட்டுமல்லாமல் விவசாயம் மூலம் வரும் கூலியையும் கொண்டு தன் மனைவியை பல்வேறு மருத்துவங்கள் செய்து காப்பாற்ற போராடுகிறான். கணவனின் இத்தகைய பாசத்தை, “எவ்வளவு வரவாசி வந்தாலும் பற்றவில்லை. யானைக்கு தீனி போட்டது போல் காளிக்கு மருத்துவம் பார்ப்பதிலேயே வரவு கரைந்து போனது. செய்யாத பக்குவம் இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. என்னை பச்சிலை தோலாந்துருத்தி என்று அத்தனை பக்குவமும் பார்த்து சலித்து ஆகிவிட்டது.” (பூமணி, பிறகு, ப.30) என்ற கருத்தின் வழி அதனை அறிந்து கொள்ளலாம். இதன் வழி மனைவியின் உடல்நிலை சரியாகுவதற்கு தன் பொருளாதாரத்தின் முழுவதையும் செலவு செய்யும் கணவனின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.
மேலும் அழகிரி தன்னுடைய மனைவி காளிக்குப் பல மருத்துவம் பார்த்த நிலையிலும் அவள் விரைவில் இறந்து விடுகிறாள். கைக்குழந்தை விட்டுவிட்டு இறந்து விடுகிறாள். மனைவியின் இறப்பை தாங்காத கணவன் அழுது புலம்புகின்றான். தன்னுடைய மனைவி தன்னுள் பாதி என்பதை உணர்த்தும் விதமாக அவன் புலம்புவதை, “கிட்டத்தட்ட மணலூத்துக்கு வந்து ரெண்டரை வருஷத்தில் ஒரு சுடுகாடு போய் சேர்ந்தாள். அவள் கண்ணை மூடிய போது அழகிரிக்கு சொல்ல முடியாத திகைப்பு. “அட பாதகத்தி இத்தனை நாளா உனக்கு ஓவணியம் பார்த்தும் என்னை ஏமாத்தீட்டுப் போயிட்டயே. பச்ச மண்ணக் கையில வச்சிக்கிட்டு நான் என்ன செய்யட்டும்.” கண்ணுக்குட்டி மாதிரி கனைத்தழுதான். பண்டாரி அவனை சமாதானப்படுத்த கஷ்டப்பட்டான்.” (பூமணி, பிறகு, ப.30) என்ற கருத்தானது அதனை உணர்த்துகிறது. மனைவியின் இறப்பை தாங்காத கணவனின் அன்பை அறிய முடிகிறது.
வாய்க்கால் நாவலில் வரும் வடிவேலு தன்னுடைய மனைவி மீது மிகுந்த அன்பைக் கொண்டிருந்தவன். அவள் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாது இருந்தாள். எல்லா வேலையும் தான் பார்த்துக் கொண்டு தன் மனைவியை எந்த வேலையும் செய்யாமல் கவனித்துக் கொண்டான். ஒருமுறை அவனுடைய மாப்பிள்ளையான கோபால் என்பவன் ஊருக்கு வருகிறான். அப்போது அவனுக்கு உணவு சமைத்துக் கொடுக்க தன்னுடைய மருமகள் லட்சுமியிடம் சொல்கிறான். அப்போது அவன் மனைவியைக் காணாது தன் மருமகளிடம் கேட்கிறான். அப்போது அவள் மருமகள் ஆற்றுக்கு புல்லருக்கப் போயிருப்பதாக கூறுகிறாள். அதனைக் கேட்ட வடிவேலு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் ஏன் இதெல்லாம் செய்கிறாள் என்று கூறும் அன்பு நிலையை, எந்திரிச்சு நடமாடுறதே பெரிய காரியம். அதுல வேற வரப்பு காட்ல தட்டுத் தடுமாறி அலைணுமாக்கும். சூசுவான்னு வீட்ல கெடக்கிற துக்கில்லாம.” (பூமணி, வாய்க்கால், ப.471) என்ற கருத்தின் வழி அறிந்து கொள்ள முடிகிறது. மனைவியிடமிருந்து கிடைக்கும் இன்பத்தை மட்டும் எண்ணாமல் மனைவிக்குத் துன்பம் வருகின்ற போது துணையாக இருப்பதே சிறந்த உறவாகக் கணவன் உறவு கருதப்படுவதை அறிய முடிகிறது.
பிறகு நாவலில் வரும் முத்துமாரி என்பவள் வைரவன் என்பவளை முதலில் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறாள். வைரவன் ராணுவத்தில் வேலை கிடைத்துச் சென்று மீண்டு வர அழகிரியின் தோற்றம் மற்றும் செய்கைகள் பிடிக்காமல் வேறு ஒரு திருமணத்தைச் செய்து கொள்கிறான். இந்த நாள் மனமுடைந்த முத்து மாரி வாழ வெட்டியாக தன்னுடைய தந்தை வீட்டிற்குச் செல்கிறாள். பின்னர் முனியாண்டி என்பவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறாள். முதல் திருமணத்தைப் பற்றி அறிந்து முனியாண்டி முத்துமாரிக்கு வாழ்க்கை தருகிறான். இருவரும் அன்பாக குடும்பம் நடத்துகின்றனர். முனியாண்டி முத்துமாரியின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தான். தன்னுடன் வேலைக்கு வருவதை கூட அவன் விரும்பவில்லை. தன்னுடைய மனைவி எவ்வித துன்பம் இன்றி இனிமையாக இருக்க வேண்டும் என்று எண்ணும் கணவனின் அன்பை, “தலைய எதுக்கு இப்படி காயப்போட்ருக்க. எண்ணதான் வீட்லருக்குதே.” “அதுக்கென்ன இப்ப”.முத்துமாரி பின்னால் திரும்பி அவனைப் பார்த்தாள். “பையப்பைய. வரப்பு வழிக்கீரும். வீட்ல கெடக்கச் சொன்னாலும் கெடக்கிறதில்ல.” அவள் வரப்பில் தடுமாறிய போது அவன் தாங்கி விட்டான். அவளுக்குப் பேச வார்த்தைக் கிடைக்கவில்லை. முனியாண்டியைப் பொருத்தமட்டில் அவளுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. கல்யாணம் முடித்த நாளிலிருந்து வெடுக்கென்று பேசியது கிடையாது.” (பூமணி, பிறகு, ப.180) என்ற கருத்தால் அதனை அறியலாம். இதன் வழி இரண்டாவது தாரமாக இருந்தாலும் தன் மனைவி எவ்வித துன்பமும் அடையக்கூடாது என்று எண்ணும் கணவனின் பாசத்தை அறிய முடிகிறது.
மனைவியின் பாசம்
நைவேத்யம் நாவலில் வரும் பிராமணர்களின் விவசாய நிலங்களை பராமரிக்கும் தலையாரி என்பவன் நீதி நேர்மையுடன் நடக்கும் தன்மை உடையவன். பிராமணர்கள் நிலங்களில் விளையும் பொறுப்பு நெல்லை சரியாக பிரித்துக் கொடுக்கும் தொழிலைச் செய்ய கூடியவன். இவ்வாறு ஊருக்காக உழைக்கும் தன்மை கொண்டவன் தாயார் என்பதால் அவன் மனைவி சில நேரங்களில் அவனிடம் கோபித்துக் கொள்வாள். ஆனால் யாரிடம் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வாள். கணவன் மனைவிக்குள் சிக்கல் இருந்தாலும் ஒருவரை ஒருவர் வெளியில் விட்டுக் கொடுக்காமல் வாழும்போது அவர் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதை கிருஷ்ணம்மாளின் வழி பூமணி உணர்த்துவதை,
“வியயாரி விதைப்பு இறைவே நேரங்களில் வந்து கைமாற்றுவான். அதோடு சரி. கிருஷ்ணம்மாள் ஆயிரந்தான் அவனுடன் கோபித்துக் கொண்டாலும் வெளியில் விட்டுக் கொடுக்க மாட்டாள்.” (பூமணி, நைவேத்யம், ப.122) என்ற கருத்தின் வழி அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் கணவனை விட்டுக் கொடுக்காமல் வாழும் மனைவியின் அன்பை அறிய முடிகிறது.
வரப்புகள் என்ற நாவலில் வரும் பழனி வேலாயுதம் என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிபவர். அவர் திருமணம் செய்வதற்காக பஞ்சாயத்து யூனியன் தலைவர் பால்வண்ணம் பிள்ளை என்பவரின் தங்கையைப் பெண் கேட்டார். அவர் தமிழ் வாத்தியாருக்கு பெண் கொடுக்க முடியாது என்று மறுக்கிறார். ஆனால் பால் வண்ணம் பிள்ளையின் தங்கை அதாவது தமிழ் வாத்தியாரின் மனைவி அப்போது நான் அவரை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறுகிறாள். என் மனைவி ஆவதற்கு முன்பாகவே தான் திருமணம் செய்து கொள்ள போகும் ஆடவன் மீது மிகுந்த அன்பு கொண்டவளின் நிலையை,
“எப்படி மறக்க முடியும் பாண்டியன். அன்னைக்கு நான் எனக்குப் பொண்ணுக் கேட்டுப் போகயில என்ன சொன்னாரு தெரியுமா. போயும் போயும் தரித்திரம் பிடிச்ச தமிழ் வாத்தியானுக்கா குடுக்கிறதுன்னு எளக்காரமாப் பேசினாரு. வீட்டுக்காரி மட்டும் பிடிவாதமா இல்லன்னா என் மானம் மரியாதை எல்லாம் காத்துல பறந்துருக்கும்.” (பூமணி, வரப்புகள், பக்.61-62) என்ற கருத்தின் வழி ஆசிரியர் படம் பிடித்துக் காட்டுகிறார்.
பிறகு நாவலில் வரும் அழகிரியின் மகன் முத்துமாரி. முத்துமாரி வைரவன் என்பவனை திருமணம் செய்து கொள்கிறாள். வைரவன் சிறிது காலம் தீப்பொட்டி தொழிற்சாலையில் வேலை செய்கிறான். பின்னர் ராணுவத்தில் வேலை கிடைக்கிறது. அவன் பட்டாளத்துக்குச் சென்று விடுகிறான். கணவனின் பிரிவை தாங்காது முத்துமாரி அழகின் வழி தன் பாசத்தை வெளிப்படுத்துவதை, “முத்து மாரிக்கும் ஆரம்ப கால நினைவுகள் தலை தூக்கின. அவை அழுகையை அதிகரிக்கவே செய்தன. பட்டாளத்துக்குப் போறானாம் பட்டாளத்துக்கு. இந்தப் பெயலுக்கு ஏன் இந்தத் தோரிணி. உண்டான வேலையைப் பார்த்துட்டு திரியிறதுக்கில்லாம இப்பிடிச் செஞ்சிட்டானே. வெறுங்கழுதையா போறதுக்கு.” (பூமணி, பிறகு, ப.139) என்ற வரிகளில் காண முடிகிறது. இதன் மூலம் கணவனின் பிரிவை எண்ணி வருந்தும் மனைவியின் உள்ள பாசத்தை பூமணி படம் பிடித்துக் காட்டுகிறார்.
தொகுப்புரை
🌻குடும்பமே சமுதாயத்தின் உயர்ந்த சிறந்த நிறுவனமாகத் திகழ்கின்றது.
🌻சமதாயத்தின் எல்லா விதமமன வளர்ச்சிக்கும் குடும்பம் துணை நிற்கின்றது.
🌻கணவன் மனைவியர் விட்டுக் கொடுத்து ஒழிவு மறைவின்றி துன்பத்தில்
துணைநின்று வாழக்கூடியதாக அமைய வேண்டும்.
🌻உறவுகள் எவ்வாறு அமைய வேண்டும் எவ்வாறு அமையக் கூடாது என்பதைப்
படைப்பாசிரியர் சிறப்புற நாவலில் எடுத்துரைத்துள்ளார்.
துணைநூற்பட்டியல்
1.குமாரசாமி.சி.என்., பெண்ணிய நோக்கில் பாரதி, தமிழ் புத்தகாலயம், சென்னை – 600017, முதல் பதிப்பு, நவம்பர் – 2001.
2.அன்புச்செழியன். ப, தினமணிக்கதிர்ச் சிறுகதைகளில் சிக்கல்கள், பாவை வெளியீடு, சென்னை, பதிப்பு – 1998.
3.பூமணி, பூமணியின் ஐந்து நாவல்கள், பொன்னி பதிப்பகம், சென்னை, பதிப்பு – 2014.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மு.சந்தியாராணி,
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்),
தமிழ்த்துறை,
பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் – 641018.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

