Saturday, November 21, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் A Study on the Social Background of Virali Vidu Thoothu Literary Works|Dr.B.Meenakshi

A Study on the Social Background of Virali Vidu Thoothu Literary Works|Dr.B.Meenakshi

Virali Viduthu Thoothu_ Tamil Literary Heritage

Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :

Abstrct
       This research paper examines the social background reflected in Virali Vidu Thoothu literary works in Tamil literature. These works provide valuable insights into the social, cultural, economic and moral conditions of Tamil society during the period in which they emerged. They portray the customs, traditions, family relationships, social hierarchy, gender roles, religious beliefs and lifestyles of the people. Particular attention is given to the position of women, the role of the Viraliyar (female performers), the social status of different communities and the prevailing values and practices of society. The study also explores how these literary works reflect the social realities, cultural practices and changing attitudes of their times. Through a historical and literary analysis, the research aims to understand the relationship between literature and society and to highlight the importance of Virali Vidu Thoothu works as sources for reconstructing the social history of Tamil Nadu.
Keywords: Virali Vidu Thoothu, Tamil Literature, Social Background, Women, Viraliyar, Cultural Traditions, Social History.

“விறலிவிடு தூது நூல்களின் சமூகப்பின்னணி”

முன்னுரை
      சமூக நிகழ்வுகளை நிழலாய்த் தொடர்ந்து நிஜமாக்குபவை இலக்கியங்கள். இவ்விலக்கியங்கள் தனிப்பட்ட மக்களின் வாழ்விற்கும், சமூகத்திற்கும், அரசியலுக்கும் பயனுள்ளாக விளங்குகின்றன. மனிதனது பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வியல் கூறுகளை வகைமையுடன் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. இவற்றைப் பேரிலக்கியமெனவும், சிற்றிலக்கியமெனவும், இரண்டாகப் பகுக்கலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வரக்கூடிய இலக்கியத்தைச் சிற்றிலக்கியம் எனலாம். இதற்குப் “பிரபந்த இலக்கியம்” என மற்றொரு பெயரும் உண்டு. காலகட்டத்திற்கேற்ப சிற்றிலக்கியம் தன் கிளையை பலவாக விரித்துப் பரப்பியுள்ளது. அக்கிளைகளுள் ஒன்றே “தூது”. இத்தூது, இலக்கியமெனத் தனித்து வளர்ச்சி அடையத் துவங்கிய பிறகு கடவுளர், ஆசிரியர், வள்ளல் இவர்களுள் யாரேனும் ஒருவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது. தூதிலக்கியங்கள் புலவர்களின் கற்பனைத்திறன், ஆளுமைத்திறன், கருத்துப் புலப்பாடு முதலானவற்றை வெளிக்கொணர்கின்றன. ஓர் இலக்கியம் செம்மையுற வேண்டுமானால் அதற்கான இலக்கண வரையறை அவசியமாகும். சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப வரன்முறையும் மாற்றங்களுக்கு உட்படுவது இயல்பென்பதை தூதிலக்கிய வளர்ச்சியின் வாயிலாக நாம் அறிந்துகொள்ளலாம்.
சிற்றிலக்கியம் – ஒரு கண்ணோட்டம்
          சங்க காலந்தொட்டு இன்று வரையிலும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப இலக்கியங்கள் “பேரிலக்கயம்” எனவும், “சிற்றிலக்கியம்” எனவும் பாகுபடுத்தப்பட்டுள்ளன. பெருங்காப்பியம், புராணம் என்பவை பேரிலக்கிய வகையைச் சார்ந்தது. இவை அல்லாத அந்தாதி, கலம்பகம், உலா. தூது இன்ன பிறவும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. மேலும் “பா” வகையாலும், சொல், பொருள் நிலையினாலும் பாகுபடுத்தப்பட்டு, அறம், பொருள், இன்பம், வீடு எனக் கூறப்பெறும் நாற்பொருள்களில் ஏதாவது ஒன்றினைச் சார்ந்து குறிப்பிட்ட அமைப்பு நிலையில் அமையும் இலக்கியம் சிற்றிலக்கியமாகும்.
தூது இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
         கி.பி.பதினான்காம் நூற்றாண்டில் தோற்றம் கொண்டதாகக் கருதப்படும் இலக்கிய வகை தூது ஆகும். தெருவில் உலா வரும் தலைவனைக் கண்ட தலைவி அவன் மீது ஏற்பட்ட காதலின் காரணமாக அஃறிணையையோ அல்லது உயர்திணையையோ தன் வேதனையைத் தலைவனிடம் எடுத்துரைக்கும்படி தூது அனுப்புகிறாள். இதிலிருந்து “உலா” என்னும் இலக்கிய வகையே “தூதிலக்கியம்” தோன்றுவதற்கு அடிப்படை என்பதை அறிந்துகொள்ளலாம். ஒருவர் தமது கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிக்கவோ அல்லது ஏதேனும் ஒரு பொருளைப் பெற்று வருவதற்காகவோ நடைமுறையில் இருந்த தூது பின்னாளில் இலக்கியமாக உருப்பெற்றுவிட்டது. நாயக்கர் காலத்திலும் ஐரோப்பியர் காலத்திலும் (கி.பி.13-20) நூற்றாண்டுகள்) தூது நூல்கள் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளன. கடவுள், அரசர், வள்ளல் ஆகியோரின் மகிமைகளை உணர்த்துவதற்காகவே கோவை – உலா – பிள்ளைத்தமிழ் – தூது போன்ற சிற்றிலக்கிய வகைகள் எழுந்துள்ளன.
தூது நூலின் இலக்கணம்
          தூது நூலின் இலக்கணத்தை மிகப் பழைமையான இலக்கண நூல்கள் பலவும் எடுத்துரைக்கின்றன.
“பயில்தரும் கலிவெண் பாவி னாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்துறு தூதெனப்
பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே”1
             தூது விடுப்போர், தூது விடுக்கப்படும் பொருள், அப்பொருளைத் தூது செல்லத் தேர்ந்தமைக்கான காரணம், தூது சென்று சேர வேண்டிய இடம் ஆகிய இக்கூறுகள் அமைந்தவையாகவே தூது இலக்கியங்கள் காணப்பெறுகின்றன.
விறலி விடு தூது இலக்கியத்தின் தனித்தன்மை
          பதினேழாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னர் தோன்றிய பிற தூது இலக்கிய நூல்களிலும் பெண் ஆணுக்குத் தூது சொல்லியனுப்பும் போக்கு காணப்படுகின்றன. ஆனால் விறலி விடு தூது நூல் மட்டும் சற்று மாறுபட்டது. அதாவது, ஆண் பெண்ணுக்குத் தூதனுப்பும் போக்கினைக் கொண்டதாக உள்ளது. “துர்த்தனாய்த் திரிந்த ஒருவன் தான் கழிந்தரற்கிரங்கிப் பின் ஓர் தலைவனையடுத்துப் பரிசில் பெற்றுத் தன் மனைவி பால் ஓர் விறலியைத் தூது அனுப்புவமதாகக் கூறும் பிரபந்தம் (A poem in which a person who led the life a profligate repents and sends a virali as a messanger do his wife to acquaint her with his good fortune in obtaining the patronage as a chiet tain and to conciliate her). “A kind of poem in kali venpa which purports to be a message of love sent through a companion, a bird etc, to effect a reconsilation”2. இத்தூது நூலகளில் தூது விடுநரின் நிலை முதலிலும் பாட்டுடைத் தலைவரின் சிறப்பு பின்னரும் உரைக்கப்படுகின்றது. ஊடற்பிணக்கைத் தீர்த்து வைப்பதற்குத் தூதாக அனுப்பப் பெறும் விறலி அனைத்து அங்க லட்சணங்களும் பொருந்தியவளாக இருத்தல் வேண்டும். சங்கீத ஞானம் மிக்கவளாகத் திகழ வேண்டும். இல்லற வாழ்க்கையின் நுட்பங்களைக் கற்றுத் தேறியவளாகவும், விவாகமாகாத கன்னிப் பெண்ணாகவும் விளங்கிடல் வேண்டும். தூதர்கள் நல்ல வாக்குத் திறனும், இனிதாகப் பழகும் தன்மையும், பொறுமையுடன் பிறர் கூறுவதைக் கேட்டுப் பதிலுரைத்து தன் சார்புக்குக் கவரக்கூடிய பண்பும், தோற்றத்தாலேயே பிறருடைய நன்மதிப்பையும், அன்பையும் பெறக்கூடிய உடல்வனப்பும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் மந்திரிக்குரிய அறிவுக் கூர்மையும் அணுகுமுறையும் உடையவராக இருக்க வேண்டுமென்பதை,
“தூய்மை துணைமை துணிவுடைமை இன்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு”3
          என்னும் வள்ளுவரின் வாக்கு எடுத்துரைக்கிறது. இத்தகைய குணம் விறலி இயல்பாகவே பெற்றுள்ளாள் என்பதாலே “விறலி விடு தூது” இலக்கியங்களில் அவள் தூதுப் பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாள்.
விறலி  விடு தூது இலக்கியத்தின் கதையமைப்பு
          சங்க இலக்கியங்கள் அறிமுகப்படுத்திய விறலியர், பிற்காலச் சூழலுக்கேற்ப தாசி கூட்டத்திற்கும், பின்னர் மனம் திருந்திய நிலையில் வரும் தலைவனைத் தலைவியிடத்து கூடல் செய்விக்கும் வாயிலாகவும் கொண்டு உருவாக்கப்பட்ட இலக்கியங்களே விறலி விடு தூது நூல்கள் எனலாம். அனைத்து விறலி விடு தூது நூல்களும் ஒரே கதையமைப்பைக் கொண்டுள்ளன. கதையமைப்பு என்றால் அது படிப்பவரது கண் முன் காட்சியாகும் படி கருத்துடன் அமைதல் வேண்டும். ஆற்றொழுக்க நரட அமையப்பெறல் வேண்டும். ஒவ்வொரு படைப்பிலும் கதையமைப்பே படைப்பாளுமையை வெளிப்படுத்தக்கூடியது. கதையைக் கொண்டு செல்லும் விதம் குதிரையோட்டம் போல் ஒரே சீராக அமையப் பெறல் வேண்டும். அவ்வகையில் விறலி விடு தூதின் கதையமைப்பு (எழுத்து, சொல், பொருள்) சிறப்பாக அமைந்துள்ளது. நன்கு கல்வியறிவு பெற்ற அந்தணன் தன் மனைவியிடம்“ ஏற்பட்ட பிணக்கின் காரணமாகத் தலப்பயணம் மேற்கொள்கிறான். பயண நாட்களில் நண்பர்களின் அறிவுரையை மீறி விலைமகள் வலைக்குள் சிக்கி விடுகிறான். தன் செல்வத்தையெல்லாம் தேவதாசிப் பெண்ணிடம் இழிந்ததோடு நோய்களின் இருப்பிடமாகின்றான். இறுதியில் விலைமகளால் வஞ்சிக்கப்பட்டு வீட்டிலிருந்து துரத்தப்படுகின்றான். மனத்தெளிவு பெற்றத் தலைவன் பெரும் பொருள் வேண்டி பாட்டுடைத் தலைவனைக் கண்டு கவி பல புனைகின்றான். ஊர் திரும்பியவன் தன் மனைவியிடம் பேசுவதற்கு அஞ்சி ஊர் மன்றில் தங்குகிறான். வழிப்போக்கனான விறலி தலைவனது வேண்டுகோளுக்கு இணங்க இருவரது ஊடலையும் தீர்த்து கூடல் கொள்ளும் படிச் செய்கின்றாள். இந்நூல்களில் பாட்டுடைத் தலைவனாக ஏதேனும் ஒரு வள்ளல் அல்லது தெய்வம் கொள்ளப்படும். சில விறலி விடு தூது நூல்கள் விறலி தூது சென்றதோடு நிறைவு பெற்றிருக்கும். மேலும் சில விறிலி விடு தூது நூல்கள் ஊடல் தணித்து கூடல் செய்வித்தமைக்காக தலைவனிடம் பரிசு பெறுவதையும், தலைவனும் தலைவியும் ஊடல் நீங்கி பிணையும் கலையும் போல இணைந்து வாழ்வதையும் எடுத்துரைக்கின்றன. “செண்டலங்காரன் விறலி விடு தூதில்” விறலி பற்றிய செய்திகள் குறிப்பாக மட்டுமே இடம்பெறுகின்றன.
          “சிதம்பரேசர் விறலி விடு தூதில் வீற்றிருக்கும் எம்பெருமானே பாட்டுடைத் தலைவனாவான். இவ்விறலி விடு தூதில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பலவும் இடம்பெற்றுள்ளன. விறிலி விடு தூது நூல்கள் சிற்றின்ப சுவையைத் தூண்டக்கூடிய வகையில் அமையப் பெற்றிருப்பதால் அதிகமாக எழுதப்பெறவும் இல்லை. தெய்வச் சிலையார் விறிலி விடு தூதில் விறலி தலைவியினது தோழியாவாள். பிற தூது நூல்களில் வழிப்போக்கனாவாள். தெய்வச்சிலையார் விறலி விடு தூதில் மட்டுமே முதலில் பாட்டுடைத் தலைவனது சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. பிற தூது நூல்களில் விறலியின் பெருமையே முதல் பகுதியாக அமையப்பெற்றுள்ளது. விறலிவிடுதூது நூல்களில் தலைவன் தூது செல்லும் விறலியின் அழகையும் திறமையையும் புகழ்ந்து பேசும் போக்கு அமையப்பெற்றுள்ளது.
சமூக நோக்கில் தூதிலக்கியப் பெண்கள்
           விறலி விடு தூது இலக்கியங்களில் பதிவு செய்யப்பெற்றுள்ள பெண்ணடிமைத்தனக் கூறுகள் பெண்ணிய நோக்கில்,
🌷வாழ்க்கைத் துணைநலம்
🌷பரத்தையர் இழிவு நிலை
🌷ஆணாதிக்கச் சிந்தனைகள்
🌷சமூகச் சீர்கேடு
எனப் பகுத்து ஆராயப்படுகின்றன.
வாழ்க்கைத் துணைநலம்
             அக வாழ்க்கையில் தலைவனும் தலைவியும் பிறரது பழிச்சொல் எதுவுமின்றி அறம்புரிவோராகவும், அன்புடையோராகவும் வாழ்தல் வேண்டும். கணவனிடம் குறை இருப்பினும் அதனை நிறையாகப் பார்க்கும் பண்பு உடையவளே மனைவி. ஆணினத்தைப் பெருமைப்படுத்த சில வரையறைகளை முன் வைத்த இலக்கியங்கள், மாறுபட்ட சில தனி வரையறைகளைப் பெண்ணினத்திற்கு மட்டுமே உரியதாக வரையறுத்துள்ளது. குலமகள் யாவரெனின்,
“கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்ப் பூசி
நற்குண நற்செய்கை பூண்டாட்டு – மக்கட்பே
றென்பதோ ரோக்கமு முண்டாயி னில்லன்றே
 கொண்டாற்குச் செய்தவம் வேறு”4
             கற்பை ஆடையாகவும், அன்பை மலராகவும், நாணத்தைச் சந்தனமாகவும், நற்குண நற்செய்கைகளை ஆபரணங்களாகவும் அணிந்திருத்தல் வேண்டும் என்பதையே இலக்கியங்கள் அறிவுறுத்துகின்றன.  பிற விறலி விடு தூது நூல்களில் சொல்லப்படாத ஒரு கருத்து “தெய்வச் சிலையார் விறலி விடு தூதில்” சொல்லப்பட்டுள்ளது. அதாவது பிற நூல்களில் பரத்தையின் பொருட்டோ அல்லது மூத்தாள், இளையாளின் பொருட்டே தலைவன் தலைவியரிடையே ஊடல் நிகழ்ந்துள்ளது. தெய்வச்சிலையார் விறலி விடு தூதில் நடலிங்க பட்டன் மாமனாருடன் ஏற்பட்ட பிணக்கால் தன் மனைவி, குழந்தையை மறந்து தலப்பயணம் மேற்கொண்டான். திருமகளும் அன்றிலைப் பிரிந்த பெடை போலே வாடித் துடித்தாள். இதனை,
“சோதிநெடு
வாலினைய கண்ணிமண வாளனையே யெண்ணியொரு
நாளொருக மாயிருக்கும் நாளிலே – நீளமழுச்
செங்கரனார் கோடித் தினகரனார் போல்விளங்குஞ்
சங்கரனார் கோவிற் நலத்தாரில் – ஐங்கரனார்
சங்கரனார் கோவிலிலே தன்கணவன் போனதுவு
மங்கொருத்தி கையிலகப் பட்டதுவுஞ் – செங்கைத்
திரவியத்தை வீணே சிந்துவதுங் கேட்டாள்
வரிசை பெற்ற கற்புடைய மங்கை”5
          தன் பதியின் மீது கொண்ட அன்பின் காரணமாக திருமகள் ஊர் ஊராக தேடிச் செல்லும் புதிய போக்கினை இவ்வரிகள் உணர்த்துகின்றன.
“வைய்யி லடிக்கில் மணங்கோணாள் – பொய்யுரையாள்”
“கூப்பிட்ட
சொல்லை மறுக்காத சுந்தரப் பெண்ணமுதாள்
தொல்லேறு போன்றாள் குதர்க்கமிட்டாள்”6
             “பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல்” என்னும் நொண்டிப் பழமொழியைக் கூறியே ஆணினம் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறது. பெண்ணென்பவளை அன்பின் உருவமாக வர்ணிக்கின்றனர். அவளது அன்பை உதாசீனப்படுத்தி மற்றொரு பெண்ணை தலைவன் நாடிச் செல்கையில் அவளே ருத்ர தேவியாகிறாள் என்பதையே கலைஞர் கருணாநிதி விறலி விடு தூது நூல் சுட்டிக் காட்டுகிறது.
“நன்றெங்கள் தஞ்சாவூர் நாயகரே – என்று
நறுக்கென்று கேட்டாள்நான் நாக்கடித்துக் கொண்டேன்
சுறுக்கென்று தைத்தது சொல்லம்பு – விருப்பவள் மேல்
காட்டியதும் பேராண்மை காட்டியதும் இல்லறத்தேர்
போராடித் தீர்த்தாள் பொறுக்க முடியாமல்
கூறாமலே துறுவு கொண்டுவிட்டேன்”7
             என்னும் வரிகள் ஆண் எத்தகையத் தவறு செய்தாலும் அதனைத் தட்டிக் கேட்கும் உரிமை பெண்ணிற்கு இல்லை. அடங்கிப் போதல் மட்டுமே பெண்ணிற்கு உரியது என்பதையே உணர்த்துகின்றன.
“-திரு அழகு
காண்பரிய மாதர்களைக் கண்டளவில் ஆசை கொள்வ(து)
ஆண்பிளைகட் கெல்லாம் அடுத்ததுகாண் – வீண்பொழுது
போக்குவதேன்? உன்தன் புருடனைச்சே ராமல்வெறுப்(பு)
ஆக்குவதேன்? கற்புக்(கு) அழகலவே – நீக்கிஅவர்
எங்கே திரிந்தாலும் ஏனென்று நம்மாலே
சங்கேதம் சொல்லத் தகாதுகாண் – மங்கையே
பாருக்குள் ஆண்பிறந்தோர் பால்அன்றிப் பெண்பிறந்த
பேருக்குள் மோடி பெரிதுகாண் – ஆருக்கும்
புத்தி சொல்ல வல்லாய்! உன் புத்தி எங்கே போச்சு(து) என்று
முத்து நகையாளை முகம் திருத்தி”8
    விறலி, குலமகள் இயல்புகள் பலவற்றையும் எடுத்துரைத்து அஷ்டாவதானியின் நிலைமையைத் தலைவிக்குப் புரிய வைக்கிறாள். “சிமோன் தெபவார் “ஒருத்தி பெண்ணாகப் பிறப்பதில்லை பெண்ணாக உருவாக்கப்படுகிறாள். (One is not born rather becomes a women)  என அழகாக வர்ணித்துள்ளார்”9. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் குடும்பம் கோவிலாகுமென எந்தத் தவறும் செய்யாத பெண்ணிற்கு மட்டும் அறிவுரைகள் கூறி திருத்த முயலும்  சமுதாயம், தவறுகள் மட்டுமே செய்கின்ற ஆணினத்தைக் கண்டு கொள்வதேயில்லை என்பதை சிதம்பரேசர் விறலி விடு தூது நூல் தெளிவுபடுத்துகிறது.
“குணக் கோடானாலும் கொழுநன் நலக்
கோடானாலும் நாயகன்
கைநிறைய பொருள் இல்லாவிட்டாலும்
கண் நிறைந்த கணவனே மேல்”10
             இவ்வரிகளை இயல்பாகப் படிக்கும் பொழுது பெண்ணினத்திற்கான இல்லற ஒழுக்கமும், ஆழ்ந்து நோக்கும் பொழுது அடிமைத்தனத்தின் குறிப்பும் வெளிப்படும்.  “கணவனின் பேச்சை மறு பேச்சின்றிப் பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும். தனக்குத் தெரிந்தாலும் தெரியாதது போல் அவள் அடங்கிவிட வேண்டும். அறிவார்ந்த பெண் தவறுகண்ட போது சுட்டிக் காட்டுவாள். அதனால் அனைத்தும் உணர்ந்தவர் ஆண் என்ற ஆண்களின் ஆனந்த மமதைக்குத் தடையேற்படலாம்.  இதுவே அந்தகக்காலச் சமுதாயம் பெண்ணைப் புலனற்ற பேதையாய்ச் செய்வதற்கான காரணமாகலாம்”11. இக்கருத்தினையே விறலி விடு தூது இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன.
பரத்தையர் இழிவு நிலை
             கற்பு – சொற்பிறழாமை, கற்பென்பது உடல் சார்ந்த ஒழுக்கமல்ல. உள்ளம் சார்ந்த ஒழுக்கமாகும். பின்னாளில் வந்த தந்தைவழிச் சமூகத்தினரால் கற்பென்பது பெண்களுக்கான உடல் சார்ந்த ஒழுக்கமாக கட்டமைக்கப்பட்டது. ஆண் மகனின் இன்ப உணர்ச்சிக்கு நுகர்ச்சிப் பொருளாக சிதைக்கப்பட்டவர்கள் பரத்தையர்கள். உடல் வன்முறையால் உருக்குலைக்கப்பட்ட பரத்தையர்களது இழிவு நிலையினை விறலி விடு தூது இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. அதற்குக் காரணமான ஆண் சமூகத்தின் ஆதிக்க வெறியை இருட்டடிப்பு செய்துள்ளன.
ஆணாதிக்கச் சிந்தனை
             “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்பது பழமொழி. ஆனால் அதனை ஆக்குவது ஆணினம் என்பதை மட்டும் சமுதாயம் ஏற்க மறுக்கிறது. விலைமகளை நாடிச் செல்வதென்பது கண்களைத் திறந்து கொண்டு கிணற்றில் விழுவதற்குச் சமமாகுமென்பதை,
“நோய்க்குழியைத்
தேடிப்புறப்பட்டாய் தேறாய் பொறுப்புற்றாய்
வாடிநலிந்து வதைப்புற்றாய் – மூடிவைத்த
ஊனும் எலும்பும் உதிரமும் கண்டுவந்து
தேனென்று கூறித் திளைக்கின்றாய் – ஏனிந்த
மேடுபள்ளம் மேடி மெலிகின்றாய் காமவல்லி
கேடறிவாய் ஓட்டிவிடின் கெட்டழிவாய் – பாடுபட்டுச்
சேர்த்த பணத்தைச் சிறுக்கிக் கழித்தவரைப்
பார்த்தபினும் ஏனிப் பலவீனம்”12
             ஒன்று சொல் புத்தி வேண்டும் அல்லது சுயபுத்தி வேண்டும். இரண்டும் இல்லாவிடில் பட்டுத் திருந்த வேண்டும் என்பார்கள். “ஆண்களின் காமத்தையும் அதன் வக்கிரத்தையும் எதிர்பார்ப்பதற்குப் பதில் பெண்ணைக் கொச்சைப்படுத்துவதன் ஊடாக ஆண்களின் ஒழுக்கம் கோரப்படுகின்றது”16. எச்சரிக்கை என்று கூறினாலும் வீணாக என்னை மீறி எதுவுமில்லை என்கிற கர்வத்தால் நோய்குழியைத் தானாக தேடிச் செல்வதே ஆண்கள் குணமென்பதை கலைஞர் கருணாநிதி விறலி விடு தூது வரிகள் இயல்பாக எடுத்துரைக்கின்றன. தன்னுடைய ஆதிக்கச் சிந்தனையால் தன்னைத் தானே அழித்துக் கொள்கின்றனர்.
“புலி பசித்தால் மீண்டு புல்லைத் தின்னுமா
பட்டும் அறியேனா? கற்பாறையிலே – நெட்டுமுளை
கைக்கடிசால் ஏறுமா? கட்டுமெழு குப்பாவை
அக்கினிப் பந்தலுக்குள் ஆடுமா ? மெய்க்குமுன்னே
நிற்குமா? பொய்யும்? நிறைகுடம்த ளும்புமா?
பிக்கில் உடம்பறியாப் பேயாட்டா?”13
             என்னும் வரிகள் அதிகாரக் குரலினையும் ஆதிக்கச் சிந்தனையையும் வெளிக் கொணர்கின்றன. வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும் வேத ஒழுக்கத்தைப் பாதுகாத்தற் தொழிலைச் செய்யும் அந்தணர், அர்த்தமற்ற பெண்ணாசையால் தன்னையும், தன் குல ஆச்சாரத்தயும் பாழ்படுத்துகின்றனர்.
“-வடித்தகள்ளைச்
சாப்பிடும் வேசிப்பெண் தனைக்கண்டால் அந்தணர்க்குக்
கூப்பிடும்தூ ரம்போகக் கூடுமே – பார்ப்பாரச்
சாதிக்கெல் லாம்ஈனம் தான் வைத்தாய்”14
             என்னும் சிதம்பரேசர் விறலி விடு தூது வரிகள் அந்தணர்களது இயல்பினை எடுத்துரைக்கின்றன. பிறருக்குக் கல்வியைப் போதிக்கும் அந்தணர் குலம் பெண் மீது கொண்ட மோகத்தால் குலப்பெருமையை இழக்கின்றனர்.
“கூசாமல்
வேசி உடைமை தின்ன வேதியனாகப் பிறந்தான்
காசு முடிந்ததுணி கண்டறியான்”15
             உலகத்தைப் படைத்த இறைவனைத் தொட்டு அபிஷேக ஆராதனை செய்து, காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் அந்தணனர்களுள் சிலர் தன் இல்லாளை மறந்து பிற பெண்கள் மீது நாட்டம் கொள்வது வேடதாரி வாழ்க்கையைக் குறிக்கிறது. நல்லவன், வல்லவன், நாளும் அறிந்தவன் என்கிற அரிதாரம் பூசி பெண்ணினத்தைச் செல்லரித்த நோட்டாய் சிதைக்கின்றனர்.
“விளக்கிற் பறந்துவிட்டில் வீழ்வதுபோல் நானே
கிழக்குமேற் காயவன்முன் கெர்ச்சித்து – உழக்கியே
நானடந்தேன்”16
             என்னும் புலம்பல் வரிகள் நிலையில்லா ஆணினது மனஇயல்பினை எடுத்துரைக்கின்றன. பரத்தையுடன் ஏற்பட்ட பிரச்சனையால் வழக்காடு மன்றம் வந்த பின்பும் அந்தணனது மனமோ பட்டும் திருந்தாமல் பாழாய்போன நோய் குழியைத் தேடும் இழிவு நிலையை,
“மைவிழியார் தம்மனையகல் என்று முந்நாள்
அவ்வை உரைத்த மொழிக் கட்டிவந்தால் – தெய்வம்
கொல்லுமன்றோர் போங்காணும் கூடிப் பிரியலென்றும்
மெல்லிநல்லாள் தோள்சேர வேணுமென்றும் – சொல்லி
இருக்குதே என்றேன் இருந்தவர்கள் எல்லாம்
சிரித்திட்டார் நானும் சிரித்தேன்”17
             “மூத்தோர் வாக்கும் முதிர் நெல்லிக்கனியும் நன்மை பயக்கும்” என்பது பழமொழி. ஆனால் அதனைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பெண்ணினத்திற்குப் பாதகங்களைப் புரிவது ஆணினம் மட்டுமே என்பதை சுப்ரதீபக் கவிராயர் தமது படைப்பின் மூலம் உணர்த்தியுள்ளார்.
முடிவுரை
🌻 கி.மு.12 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தினைச் சிற்றிலக்கியக் காலம் எனலாம். காலத்திற்கேற்ப கருப்பொருள் கொண்டு சிற்றிலக்கியம் தம் கிளையைப் பலவாக விரித்துப் பரப்பியுள்ளது. அக்கிளைகளுள் தனியொரு இலக்கியமாக உருப்பெற்றது தூதிலக்கியமாகும்.
🌻புலவரது ஆளுமைத் திறனையும், கற்பனைத் திறனையும், காலப்போக்கினையும், சமூக நிகழ்வினையும் தூதிலக்கியங்கள் வெளிக்கொணர்கின்றன.
🌻 இல்லத்தில் அறம் பல புரிந்து “நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்” என்ற மதிப்பினைப் பெற்றுத் தருபவள் குலமகள். ஆனால் அவளது உணர்வுகள் கணவனின் அதிகாரத்தால் அடையாளமின்றிச் சிதைக்கப்படுகின்றன. அக்னிமூலையின் அறை பெண்களுக்கெல்லாம் சிறை என்பன போன்ற பெண்ணடிமைத்தனக் கூறுகள் காலங்காலமாக இலக்கியங்களால் வலியுறுத்தப்படுகின்றன. இதனையே விறலி விடு தூது நூல்களும் வலியுறுத்துகின்றன.
🌻 ஒரு ஆண் தன் இன்ப வாழ்விற்கு எது தடையாக உள்ளதோ அதனைப் பெண்ணிற்கு விலங்காகப் பூட்டியுள்ளான். கற்பென்னும் தார்க்குச்சி கொண்டு பெண்ணை அடிமைப்படுத்தியுள்ளான். பெண்ணடிமைத் தனக் கூறுகளை பெண்கள் மீது திணிக்கின்ற ஆதிக்க அரசியலை விறலிவிடு தூது நூல்களும் அரங்கேற்றியுள்ளன.
சான்றெண் விளக்கம்
1.ச.வே. சுப்பிரமணியம், தொல்காப்பியம் தெளிவுரை, ப.360.
2.தமிழ் லெக்சிகன், தொகுதி-6, ப.3733
3.மு.கருணாநிதி (உ.ஆ), திருக்குறள் தெளிவுரை, ப.141.
4.எஸ்.எ.ராமசாமி, நீதி நெறி விளக்கம், பா.எ.8.
5.குமாரசாமி அவதானி, தெய்வச்சிலையார் விறலி விடு தூது, பக்.9-10.
6.இரா.பண்டரிநாதன், கலைஞர் கருணாநிதி விறலி விடு தூது, பக்.4-5.
7.மேலது, பக்.13-14.
8.என்.பி.எ.ஜப்பார் (பதி.ஆ), சிதம்பரேசர் விறலி விடு தூது, பக்.183-184.
9.துரை.பட்டாபிராமன் (பதி.ஆ), வாழ்வியல் ஊற்றுகள், ப.153.
10.சரோஜினி, மு.நூ, ப.48.
11.பொன்மணி, வைரமுத்து, வைரமுத்து கவிதைகள், ப.63.
12.இரா.பண்டரிநாதன், கலைஞர் கருணாநிதி விறலி விடு தூது, பக்.56-57.
13.இரா.பிரேமா, பெண்ணியம், ப.7.
14.சரவணப்பெருமாள் கவிராயர்,சேதுபதி விறலி விடு தூது, ப.59.
15.இரா.நாகசாமி(பதி.ஆ), மு.நூ, ப.57.
16.என்.பி.எ.ஜப்பார் (பதி.ஆ), மு.நூ, ப.73.
17.இரா.பண்டரிநாதன், கலைஞர் கருணாநிதி விறலி விடு தூது, ப.28.
Iniyavaikatral_Article_Peer Reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ப.மீனாட்சி,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.

 

விறலிவிடு தூது நூல்களின் சமூகப்பின்னணி PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

WhatsApp Link : 

https://chat.whatsapp.com/CMtyVHRCtgzHlynKIw4iW7

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »