Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
This study aims to examine the various aspects of the lifestyle of ancient Tamils as portrayed in the ethical literature of the Pathinenkilkanakku (Eighteen Lesser Texts), which emerged during the Sangam Maruviya period. In particular, it explains the lifestyle and moral values of the people of that period through the principles of charity, love, educational thoughts, family life, hospitality, and Jain ethical principles. The verses from ethical works such as Thirukkural, Naladiyar, Nanmanikadigai, Inna Narpathu, Thirikadugam, and Elathi are taken as references for analysing these aspects of life. These ethical texts emphasize noble qualities such as humanity, willingness to help others, the importance of education, family unity, respect for guests, and compassion towards all living beings. This article highlights that these ethical texts not only portray the lifestyle and moral practices of ancient Tamil society but also provide valuable ethical ideas that are essential for contemporary society.
Keywords : Pathinenkilkanakku (Eighteen Lesser Texts) – Sangam Maruviya Period – Aspects of Lifestyle – Ethical Literature – Spirit of Charity – Principles of Love – Educational Thoughts – Family Life – Hospitality – Jain Ethical Principles
“அற இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் கூறுகள்”
ஆய்வுச்சுருக்கம்
சங்கமருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கில் அறநூல்கள் எடுத்துரைக்கும் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் கூறுகளை ஆராய்வதாக அமைகிறது. குறிப்பாக, ஈகைப் பண்பு, அன்பு நெறி, கல்விச் சிந்தனைகள், இல்வாழ்க்கை, விருந்தோம்பல் மற்றும் சமண அறநெறிகள் ஆகியவற்றின் வழியாக அக்கால மக்களின் வாழ்க்கை முறைகளையும் ஒழுக்க நெறிகளையும் விளக்குகிறது. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, திரிகடுகம், ஏலாதி உள்ளிட்ட அறநூல்களின் பாடல்கள் சான்றுகளாகக் கொண்டு இவ்வாழ்வியல் கூறுகள் ஆராயப்படுகின்றன. மனிதநேயம், பிறருக்கு உதவும் மனப்பான்மை, கல்வியின் சிறப்பு, குடும்ப ஒற்றுமை, விருந்தினரைப் போற்றுதல், உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் போன்ற உயரிய பண்புகளை அறநூல்கள் வலியுறுத்துகின்றன. இவ்வறநூல்கள் அக்கால மக்களின் வாழ்வியல் முறைகளை எடுத்துரைப்பதோடு, இன்றைய சமூகத்திற்கும் தேவையான அறக்கருத்துகளை வழங்குகின்றன என்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
திறவுச் சொற்கள் : பதினெண்கீழ்க்கணக்கு– சங்கமருவிய காலம் – வாழ்வியல் கூறுகள்– அறநூல்கள் – ஈகைப் பண்பு – அன்பு நெறி – கல்விச் சிந்தனைகள் – இல்வாழ்க்கை – விருந்தோம்பல் –சமண அறநெறிகள்
முன்னுரை
சங்க காலம் அகமாகிய காதலையும் புறமாகிய போர்முறை வாழ்க்கை நிலைகளையும் அடிப்படையாக கொண்டது. அதற்கு அடுத்தக் காலக் கட்டத்தில் அயல்மொழி, பிற சமயம் சார்ந்தவர்களின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் மக்களின் வாழ்க்கை முறைகளில் குழப்பமான சூழலும் எந்த நெறியைப் பின்பற்றுவது என்பதில் ஏற்பட்ட நிலையில் தான் அறஇலக்கியங்களில் தோன்றின. இவ்வாறு தோன்றிய இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கைக்கு சிறப்பான நெறிகளையும், ஒழுக்கங்களையும் எடுத்தியம்பின. இந்த அறநூல்கள் கூறும் வாழ்வியல் கூறுகளை எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
சங்கமருவிய காலத்தில் தோன்றிய அறநூல்கள் உள்ளிட்ட பதினெட்டு நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. கீழ்க்கணக்கு என்பது நீண்ட அடிகள் இல்லாமல் குறைந்த அடிகளைக் கொண்டு வருவதாகும். இதற்கு
”அடிநிமிர்பு இல்லாச் செய்யுள்ள தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி அவ்வத்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்கு ஆகும்” (பன்னிரு பட்டியல் 248)
என்று பன்னிரு பட்டியல் இலக்கணம் கூறுகிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் யாவை என்பதை பின்வரும் தனிப்பாடல் கூறுகிறது.
‘நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
பால் கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.” (தனிப்பாடல்)
இவற்றுள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி முதலிய பதினொரு நூல்கள் அறம் சார்ந்தன. கார்நாற்பது, ஐந்திணைஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை முதலிய ஆறு நூல்கள் அகம் சார்ந்தன. களவழி நாற்பது புறம் சார்ந்த நூலாகும். இந்நூல்கள் பண்டைய தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகளை எடுத்தியம்புவதாக அமைந்துள்ளன.
ஈகை பண்பு
மனிதர்களிடம் அமைய வேண்டிய இன்றியமையாத மனிதப் பண்பு ஈகையாகும். ‘வறியார்க்கு ஒன்று ஈவது ஈகை” என்னும் உயரிய நோக்கமுடையதாக சங்கமருவிய கால வாழ்வியல் விளங்கியது. ஈவதற்கு என்று பொருளை ஈட்டுவதில் ஆர்வமும் இக்கால மக்களிடையே காணப்பட்டது. இதனாலேயே அறநூல்கள் ஈகையின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றன. ஈகை என்பது எளியவர்களுக்கு கொடுத்துதவுவது. இல்லையென்று சொல்லாமல் யாசிப்போர்க்குக் கொடுத்தலாகும். அறம் செய்ய நிறைய பொருள் வேண்டியது இல்லை. நிறைந்த மனம் வேண்டும். இதுபோன்று ஈகையின் நிலைகளை எடுத்துக் கூறும் திருக்குறள்.
”சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை” (குறள் 230)
என்பதன் மூலம் சாவை விடத் துன்பம் தருவது வேறொன்றும் இல்லை. எனவே மற்றவருக்குக் கொடுக்காமல் வாழ்வதை விடச் செத்துப் போவதே மேல் என்று அறம் செய்யாமல் இருப்பதின் நிலையினையும் எடுத்துக் காட்டுகிறது. அறம் செய்ய நிறைய பொருள் வேண்டுமென்பதில்லை. நிறைந்த மனம் மட்டுமே போதும் என்பதை,
”இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ள இடம்போல் பெரிதுஉவந்து மெல்லக்
கொடையொடு பட்டகுணனுடை மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு” (நாலடியார் – 91)
என்னும் நாலாடியார் பாடல் எடுத்துக்காட்டுகிறது. ஈகையின் சிறப்பினையும் கொடுக்காமல் வருவதானால் ஏற்படும் இழிவுகளையும் பழமொழி நானூறு எடுத்துக்காட்டுகின்றது. ஈத்து உவக்கும் இன்பத்திற்கு இணை இல்லை. மறுமையில் பெருஞ்செல்வம் பெற வழி ஈகையேயாகும். பொருளைப் புதைத்து வைக்காது அறம் செய்தல் வேண்டும். கொடுப்பதால் பொருள் வளரும் போன்ற கருத்துக்களை எடுத்துக் காட்டுவதன் மூலம் சங்கமருவிய கால மக்களின் ஈகை திறத்தினை அறிய முடிகிறது. ‘வண்மையிலாளர் வனப்பின்னா” என்னும் இன்னா நாற்பது பாடலடிகள் ஈகைக்குணம் இல்லாதவனுடைய அழகானது துன்பமாகும் என்பதை கூறுகிறது. அறங்களுள் சிறந்ததாக கருதப்படுவது வறுமையினால் துன்பப்பட்டவர்க்கு அவர் விரும்பும் பொருளை அவர்க்குத் தருதலால் உண்டாகும் புகழாகும் என்பதை,
”அலர்ந்தார்க்கொன்று ஈந்த புகழும் துளங்கினும்
தன்குடிமை குன்றாத் தகைமையும் – அன்போடி
நாள்நாளும் நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றும்
கேள்வியுள் எல்லாந் தலை” (திரிகடுகம் 41)
என்னும் திரிகடுகப் பாடல் மூலம் அறிய முடிகிறது. ஏலாதியும் ஈகையின் இயல்பினை எடுத்துக் காட்டுகிறது. இறுக்கமுடையவனாக இராமல் தளர்ந்தவர்களுக்கு அவர்கள் வேண்டியவற்றை ஈவானாயின் அவனுக்கு அறநெறியைச் சொல்லும் நூல்கள் தேவை இல்லை என்பதை,
”குறுகான் சிறியாரைக் கொள்ளான் புலால்பொய்
மறுகான் பிறர்பொருள் வெளவான் – இறுகானாய்
ஈடற் றவர்க்கீவான் ஆயின நெறிநூல்கள்
பாடிறப்ப பன்று மிடத்து” (ஏலாதி-47)
என்னும் பாடல் கூறுகிறது.
அன்பு நெறி
அன்பு நெறி என்பது மக்களுக்கு மட்டும் உரிய உணர்வன்று எல்லா உயிர்க்கும் உயிராக விளங்கக்கூடிய குணமே அன்பாகும். அன்பை வழியாகக் கொண்டு வாழ்பவனே உயிருள்ள மனிதன் ஆவான் என்பதனை
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு” (குறள் 80)
என்றும் குறள் மூலம் திருவள்ளுவர் விளக்கியுள்ளார். ‘பற்றமையா வேந்தன் கீழ் வாழாமை முன் இனிதே” என்பதை இனியவை நாற்பதும் எடுத்துக்காட்டுகிறது. மனிதனின் வாழ்க்கை அன்பினால் சிறக்கும். பிறர்மேல் கொண்டுள்ள ஈடுபாட்டை எடுத்துக்காட்டும் மிகச் சிறந்த கருவியாக விளங்குவது அன்பு. உலக மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து பழகுவதற்கும், உதவிகள் செய்வதற்கும், மனிதாபிமானம் கொள்வதற்கும் காரணமாக இருப்பது அன்பு தான். இதனை முதுமொழிக் காஞ்சி
‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்
காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்” (முதுமொழிக்காஞ்சி-1-1)
அன்பு என்ற அடிப்படையில் தான் உலகம் இயங்குகிறது. அதன் சிறப்பினையும், மேன்மையையும் அறநூல்கள் எடுத்துக் காட்டுவதன் மூலம் அக்கால மக்கள் அன்பு நெறியை வாழ்வியல் கூறாகப் போற்றியதை அறிய முடிகிறது.
கல்விச் சிந்தனைகள்
மனிதனைப் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவனுடைய சிந்தித்து செயல்படும் ஆற்றலாகும். இவ்வாற்றலுக்கு அடிப்படையானது கல்வி என்னும் அழியா அறிவுச் செல்வமாகும். சமூகத்தைப் புரிந்து கொண்டு அச்சமூகத்திற்குப் பயன்படும் வகையில் தனி மனிதன் உருவாக வேண்டுமென்ற கருத்தில் தான் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அரசன், அமைச்சன், தூதன், ஒற்றன், போர்வீரன், அந்தணன், வணிகன், வேளாளன் முதலானனோர்க்குரிய கல்வி முறைகளை கற்பிக்கின்றன. திருவள்ளுவர் பொருட்பாலில், அரசியலில் இறைமாட்சி தொடங்கி மருந்து என்ற அதிகாரம் முடிய சமுதாயக் கல்வியை எடுத்துக்காட்டுகிறார்.
‘அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன் நோய் போல்போற்றாக் கடை.” (குறள் 315)
என்னும் குறள் பிற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதாத மனிதனுடைய அறிவினால் நடக்கப் போவது ஒன்று இல்லை என்பதை சமுதாய நோக்கோடு எடுத்துக்காட்டுகிறது. கிடைத்தவற்றை பகுத்து எல்லோருக்கும் கொடுத்து வாழ்தலே நூலோர் தொகுத்த அறங்களிளெல்லாம் தலையானதாகும் என்பதையும் கூறுகிறார். கல்வி ஒருவனுக்கு அழிவே இல்லாத பெருமைக்குரிய செல்வமாகும். கல்வி அல்லாத ஏனைய மண்ணும், பொன்னும் செல்வங்கள் அல்ல என்பதன் மூலம் கல்வியின் மேன்மையை அறிய முடிகிறது.
இல்வாழ்க்கைக் கூறுகள்
சங்க கால மக்கள் வாழ்க்கை மதிப்பும், பயனும் வாய்ந்ததாக அமைய வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினர். அதற்குரிய சிறந்த கருவியாக இல்வாழ்க்கையை எண்ணிப் போற்றினர். அதன் கூறுகள் சங்கமருவிய காலத்திலும் காணப்படுகிறது. அறநூல்களும் இதனை எடுத்துக் காட்டுகின்றன. அன்பு வழிப்பட்ட இல்வாழ்க்கையின் பயனாக அறம் ஒளிர்ந்தது என்பதை,
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.” (குறள் 45)
என்னும் திருக்குறள் எடுத்துக்காட்டுகிறது. மேலும் சிறந்த அறமாகிய இல்லறம் பிறரால் குற்றம் கண்டு பழிக்கு ஆளாகாமல் இருத்தல் சிறப்புக்குரியது என்பதையும் பின்வரும் திருக்குறள் விளக்குகிறது.
“அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.” (குறள் 49)
இல்வாழ்க்கையின் சிறப்பு பெண்களையே பெரிது சார்ந்தது என்பதை,
”மனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன்
வினைக்காக்கம் செவ்வியன் ஆதல் – சினச்செவ்வேல்
நாட்டாக்கம் நல்லினவ் வேந்தென்றல் கோட்டாக்கம்
கேளிர் ஓரீஇ விடல்.” (நான்மணிக்கடிகை 20)
என்னும் பாடல் மூலம் அறிய முடிகிறது. புரிந்து கொள்ளுதல் என்பது இல்வாழ்க்கை சிறப்புற அமைய வழி வகுக்கும். புரிந்து கொள்ளாத வாழ்க்கை துன்பத்தைத் தரும் என்பதனை,
“உடம்பா டில்லா மனைவிதோள் இன்னா
இடனில் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா
இடங்கழி யாளர் தொடர்பின்னா இன்னா
கடனுடையார் காணப் புகல்” (இன்னாநாற்பது 11)
என்ற பாடல் எடுத்துக்காட்டுகிறது. சமண ஒழுக்கங்களுள் ஒன்றாகிய துறவறத்தைப் போற்றும் சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர் காரியாசான் துறவறத்தை விட மேலானது இல்லற வாழ்க்கை என்பதை தமது பாடல்கள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். இதனை,
“புல்லறத்தின் நன்று மனைவாழ்க்கை போற்றுடைத்தே
நல்லறத்தா ரோடு நடக்கலாம் – நல்லறத்தார்க்கு
அட்டிட்டுண்(டு) ஆற்றவாழ்ந் தார்களே இம்மையில்
அட்டிட்ண்(டு) ஆற்றவாழ் வார்” (சிறுபஞ்சமூலம் 93)
என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது. இதே கருத்தினை ஏலாதியின் ஆசிரியர் கணிமேதாவியாரும் எடுத்துக் காட்டியுள்ளார். பண்டைய தமிழர்கள் சிறந்த வாழ்வியல் கூறாக இல்லறம் விளங்கியமையை அறநூல்கள் மூலம் அறிய முடிகிறது.
விருந்தோம்பல்
இனிய இல்வாழ்க்கையின் சிறந்த பண்பாக விருந்தோம்பல் போற்றப்பட்டது. பெண்கள் விருந்தோம்பலையும் விருந்தினரைப் போற்றுதலையும் சிறந்த பண்பாக கருதினர் என்பதை சங்க இலக்கியம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது என்பதை,
”அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின் மெல்லியள் குறுமகளே” (நற்றிணை 142)
என்னும் பாடல் கூறுகிறது. இவ்வாறே அறநூல்களும் விருந்தோம்பலின் சிறப்பினை கூறுகிறது.
”இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள் 81)
என்பதை வள்ளுவர் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தின் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். வறுமையிலும் செம்மையாக விருந்தோம்பலை மேற்கொண்ட பெண்களின் சிறப்பினை பின்வரும் நாலடியார் பாடல் எடுத்துக்காட்டியுள்ளது.
‘குடநீர்அட்டு உண்ணும் இடுக்கண் பொழுதும்
கடல்நீர் அறஉண்ணும் கேளிர் வரினும்
கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்” (நாலடியார் 382)
விருந்தில்லாப் பகல்பொழுது அறிவுடையோர்க்கு நோய் போன்று வருத்தும் தன்மையுடையது என்பதை,
”விருந்தின்றி யுண்டபகலும் திருந்திழையார்
புல்லப் புடைபெயராக் கங்குலும் – இல்லார்க்கொன்று
ஈயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்
நோயே யுரனுடை யார்க்கு” (திரிகடுகம் 44)
என்ற திரிகடுகம் பாடல் எடுத்துக்காட்டுகிறது. மேலும் விருந்தினருக்கு உணவளிக்கும் முறை, விருந்திற்கு சிறப்பளிக்கும் உணவுகள் யாவை? விருந்தினரிடம் நடந்து கொள்ளும் சிறந்த பண்புகளையும் அறநூல்கள் எடுத்துக்காட்டுவதை அறிய முடிகிறது.
சமண நெறிகள்
நாலடியார், சிறுபஞ்சமூலம், ஏலாதி முதலியன நூல்கள் சமணர்களால் இயற்றப்பட்டவை. இந்நூல்கள் சமண நெறிகளையும், அறங்களையும் எடுத்துக் கூறுகின்றன. பிறவியை நீக்கி வீடுபேறு பெறுவதை நோக்கமாகக் கொண்;டு, உலகத்தைத் துறக்கும் சமண முனிவர்கள் தமது துறவற வாழ்க்கையில் மேற்கொண்டொழுக வேண்டிய இருபத்தெட்டு ஒழுக்கங்களைப் போற்றினர். இவற்றுள் மாவிரதங்கள் ஐந்தாகிய அகிம்சை, வாய்மை, கள்ளாமை, துறவு, அவாவுறுத்தல் என்பவற்றை தமது நூல்களில் பெரிதும் போற்றினர். இவற்றால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து அதனை மேற்கொள்ள வேண்டிய சிறப்பான நெறிகளையும் எடுத்துக்கூறி மக்களை நல்வழிப்படுத்தினர் என்பதை அறநூல்கள் மூலம் அறியமுடிகிறது.
முடிவுரை
பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்களின் மூலம் அக்கால மக்களின் வாழ்வியல் கூறுகளை அறிந்து கொள்ள முடிகிறது. இல்லாதவர்களுக்கு அளித்து அவர்களுக்கு எல்லா நிலைகளிலும் உதவும் ஈகை பண்பானது சிறப்பாக போற்றப்பட்டது. அன்பு ஒன்றே மனிதனைச் சிறந்த மனிதனாக வாழ வைக்கும் கருவி என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. கேடு இல்லாத செல்வம் என்பது ஒருவன் தான் கற்ற கல்வியாகும் என்பதையும் அதன் சிறப்புக்களையும் கல்லாமையினால் வரும் துன்பங்களையும் அறநூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. சங்ககால மக்களின் தலையாய பண்பாக விளங்கிய இல்வாழ்க்கை நெறியும், விருந்தோம்பல் பண்பும் அறநூல்கள் கால மக்களிடம் சிறந்து விளங்கிய நிலையினையும் அறிந்து கொள்ள முடிகிறது. கொல்லாமை, பொய்யாமை முதலிய அடிப்படை மனிதத் தன்மையை போற்றும் சமண நெறிகளும் அறநூல்களில் இடம் பெற்று சிறப்பானதோர் வாழ்க்கைக்கு வழிவகுக்கின்றன.
பயன்பட்ட நூல்கள்
-
இராசாராம். துரை., பதினெண்கீழ்க்கணக்கு தெளிவுரை தொகுதி (1, 2, 3) முல்லை நிலையம், சென்னை – 600 017. இரண்டாம் பதிப்பு 2007.
-
அறவாணன்.க.ப., அற இலக்கிய களஞ்சியம், தமிழ்க்கோட்;டம், சென்னை – 600 029, முதற்பதிப்பு 2008.
-
பொன்னுசாமி.மு., தமிழ் நீதி இலக்கிய வரலாறு, இந்துப் பதிப்பகம், கோயம்புத்தூர், முதற்பதிப்பு 2007.
-
வேலுப்பிள்ளை.ஆ., தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், குமரன் புத்த இல்லம், சென்னை-26, மறுபதிப்பு 2010.
-
செல்லம்.வே.தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 108, மறுபதிப்பு 2007.
-
சிதம்பரனார்.சாமி., பதினெண்கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும், அறிவுப் பதிப்பகம், சென்னை – 600 014, இரண்டாம் பதிப்பு 2007.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ப.ஈஸ்வரி
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
வேளாளர் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திண்டல்.
ஈரோடு – 638101.




