Thursday, November 5, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் Theivathin Kuralil Illarakadamaikalum Vazhviyal Nerikalum|Kousalya C

Theivathin Kuralil Illarakadamaikalum Vazhviyal Nerikalum|Kousalya C

Family Values Under Divine Guidance
Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
            This study describes the essential aspects of human life, including domestic duties, leading a simple life, imparting good virtues to children, and practicing self-control. It explores the righteousness within the marital relationship, the simplicity of the bond of marriage, and the moral duties (dharmas) of both men and women. Furthermore, the research details the ethical ways of earning wealth, the importance of wearing traditional attire, and the benefits of consuming calm, simple food. Ultimately, this study is structured to provide valuable guidance and practical advice perfectly suited for modern-day living

“தெய்வத்தின் குரலில் இல்லறக்கடமைகளும் வாழ்வியல் நெறிகளும்“

முன்னுரை
            காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியான சந்திரசேகரேந்திர சுவாமிகளின் அருளுரைகளைத் தொகுத்து ரா .கணபதி தந்த ஏழு தொகுதிகள் கொண்ட நூல் தெய்வத்தின் குரல். சிறந்த வழிகாட்டி நூலாகவும் வாழ்வியல் நெறிமுறைகளை எடுத்தியம்புவதாகவும் அமைந்த இந்த நூலில் இடம்பெற்ற இல்லறக் கடமைகளும் வாழ்வியல் நெறிகளும் என்னும் தலைப்பைக் கொண்டதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது. மனிதர்கள் வாழ்வில் இல்லறக் கடமைகள் எளிய வாழ்க்கை குழந்தைகளுக்கான நற்பண்புகள் புலநடக்கம் கணவன் மனைவி உறவிலான அறம் திருமணம் என்னும் பந்தத்தின் எளிமை தன்மை ஆணுக்கும் பெண்ணுக்குமான தர்மங்கள் பொருளீட்டலில் அறம் பாரம்பரிய உடை அணிதல் சாந்தமான எளிய உணவை உட்கொள்ளுதல் அதன் மூலம் ஏற்படுகின்ற நன்மைகள் முதலானவற்றை விவரித்து இன்றைய வாழ்வியலுக்கு உகந்தவாறு நாம் அறிவுரைகளாக அமையும் தன்மையை கொண்டதாக ஆய்வு அமைகிறது.
இல்லறத்தின் முதன்மைக் கடமை
          துறவிகளாலோ அல்லது மாணவர்களாலோ உழைத்துச் சம்பாதிக்க முடியாது. எனவே, இல்லறத்தான் நேர்மையான வழியில் சம்பாதித்து,  தெய்வ வழிபாடு,  முன்னோர் வழிபாடு , விருந்தோம்பல், மனிதர்களுக்கு உதவுதல் மற்றும் காகம், பசு போன்ற சகஉயிர் களுக்கு உணவிடுதல்மூலம் உலகைக் காக்க வேண்டும். பிறருக்குத் தானம்செய்வதே இல்லறத்தின் முதன்மைக் கடமை.
கணவன் மனைவி உறவு ஓர் அறப்பயணம்
     இன்றைய தற்கால வாழ்வில் கணவன்-மனைவி இடையே சகிப்புத்தன்மை குறைந்து வரும் சூழலுக்குப் பெரியவர் மிக ஆழமான ஆன்மீகத் தீர்வு தருகிறார்.திருமணம் என்பது வெறும் உடல் சார்ந்த ஒப்பந்தம் அல்ல; அது இரண்டு ஆன்மாக்கள் இணைந்து தர்ம வழியில் பயணிக்கும் உன்னத பந்தம்.கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மாற்ற முயலாமல், குறைகளைச் சகித்துக் கொண்டு , விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். கணவனின் தர்ம காரியங்களுக்கு மனைவி உறுதுணையாக இருக்க வேண்டும்.
எளிய வாழ்வும் திருப்தியும்
            இல்லறத்தில் சண்டைகளும், நிம்மதியின்மையும் எப்போது வருகின்றன என்றால், பேராசையினால ஆடம்பரமாக வாழ நினைக்கும் போதுதான் என்கிறார் பெரியவர். இல்லறத்தில் எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் ‘அறப் பேச்சும், எளிய வாழ்வும்’  வாழப் பழக வேண்டும்.  தேவைகளுக்கு மேல் ஆசைப்படக் கூடாது. தன் வருமானத்திற்குள் குடும்பத்தை நடத்தி, “இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும்” குணமே  இல்லறத்தை நந்தவனமாக்கும்.
பெற்றோர் வழிபாடும், கடமைகளும்
            வீட்டில் வாழும் வயதான பெற்றோர்களைப் பாரமாக நினைக்காமல், கண் முன்னே வாழும் தெய்வங்களாக மதிக்க வேண்டும். பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போது அவர்களுக்கு அன்போடு பணிவிடை செய்ய வேண்டும். அவர்கள் மறைந்த பிறகும், அவர்களின் ஆன்ம சாந்திக்காகச் செய்யப்படும் திதி, தர்ப்பணக் கடமைகளை ஒருபோதும் தட்டிக்கழிக்கக் கூடாது. முன்னோர்களின் ஆசி இல்லாமல் இல்லறம் தழைக்காது.
குழந்தைகளுக்கு நற்பண்புகளைக் கற்று கொடுத்தல்
      இன்றைய பிற்கால வாழ்வில் குழந்தைகளுக்குப் படிப்பையும், பணத்தையும் மட்டுமே சேர்க்கும் பெற்றோர்களுக்குப் பெரியவர் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். குழந்தைகளுக்குப் பணத்தை விட ‘ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் ‘ கற்றுத் தருவதே பெற்றோரின் ஆகச்சிறந்த கடமை. அதற்குப் பெற்றோர்கள் முதலில் ஒழுக்கமாக வாழ்ந்து முன்மாதிரியாகத் திகழ வேண்டும். சமையலறையில் ‘ஒரு பிடி அரிசித் திட்டத்தை’ குழந்தைகளைக் கொண்டு செய்ய வைப்பதன் மூலம், அவர்களுக்குச் சிறு வயதிலேயே ஈகை குணத்தைக் கற்றுத்தரலாம்.
அறவழி பொருள் சேர்க்கை
            குடும்பத் தலைவனான ஆண், குடும்பத்தைக் காப்பாற்றப் பொருள் ஈட்டுவது அவசியமானது. ஆனால், அந்த பொருள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் பெரியவர் உறுதியாக இருக்கிறார்.ஒரு ஆண் சம்பாதிக்கும் பணம் முழுக்க முழுக்க நியாயமான, அறத்திற்கு உட்பட்ட வழியில்  மட்டுமே வந்ததாக இருக்க வேண்டும். லஞ்சம், ஏமாற்று வேலை அல்லது பிறரைத் துன்புறுத்தி ஈட்டும் பணம் குடும்பத்தில் நிம்மதியைக் குலைத்து, வம்சத்தையே பாதிக்கும்.தற்காலப் பற்றாக்குறை மற்றும் ஆடம்பர மோகத்தினால் தவறான வழிகளில் பணம் ஈட்டுவதைத் தவிர்த்து, நேர்மையாக உழைப்பதே ஒரு ஆணின் முதல் தர்மம்.இல்லறத்தில் இருக்கும் ஒரு ஆண் தினமும் செய்ய வேண்டிய ஐந்து கடமைகளைச்  சாத்திரங்கள் விதித்துள்ளன என்பதைப் பெரியவர்  நினைவூட்டுகிறார்.
    தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றல், இறைவனை வழிபடுதல்.மறைந்த முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்தல் மற்றும் வாழும் பெற்றோர்களைத் தெய்வமாக மதித்துப் பேணுதல். வேதம், ஆன்மீக நூல்கள் அல்லது நல்ல கருத்துகளைத் தினமும் ஓதுதல் மற்றும் சிந்தித்தல். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை  முகமலர்ச்சியோடு உபசரித்தல் மற்றும் ஏழைகளுக்கு உதவுதல். காகம், பசு, நாய் போன்ற வாயில்லா ஜீவராசிகளுக்குத் தினமும் உணவிடுதல்.ஒரு ஆண் சுயநலமாக வாழாமல், இந்த ஒட்டுமொத்த உலகிற்கும் கடமைப்பட்டவன் என்ற பரந்த வாழ்வியல் சிந்தனையை இது தருகிறது.
மனைவியை நடத்தும் முறை
    பெரியவர் கணவன்-மனைவி உறவைப் பற்றிக் கூறும்போது, மனைவியை வெறும் போகப் பொருளாகவோ அல்லது வீட்டு வேலைக்காரியாகவோ பார்க்கக் கூடாது என்று ஆண்களை எச்சரிக்கிறார். மனைவியானவள்  தர்ம காரியங்களில் கணவனுடன் சமமாகப் பயணிக்கும் துணைவி. அவளை அன்போடும், மரியாதையோடும் நடத்த வேண்டும்.குடும்பத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, ஆண் தன் கோபத்தையும் கர்வத்தையும் கட்டுப்படுத்தி, விட்டுக்கொடுத்துச் சகிப்புத்தன்மையுடன்  நடந்து கொள்ள வேண்டும். மனைவியின் மனதை ஆழமாகக் காயப்படுத்துவது ஒரு ஆணின் ஆன்ம பலத்தைக் குறைக்கும்.
புலனடக்கமும் ஏகபத்தினி விரதமும்
            இல்லறத்தில் இருக்கும் ஆண்களுக்குப் புலனடக்கம் மிக முக்கியம் என்று பெரியவர்  வலியுறுத்துகிறார். திருமணத்திற்குப் பிறகு பிற பெண்களைத் தன் தாய் அல்லது சகோதரியாகப் பார்க்கும் தூய்மையான மனப்பக்குவம் ஆணுக்கு இருக்க வேண்டும். நாவின் சுவைக்காகவும், உடலின் சிற்றின்பங்களுக்காகவும் மனம் போன போக்கில் ஓடாமல், சாத்விகமான உணவுகளை உண்டு, மனதைக் கட்டுப்பாட்டுக்குள்  வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்தல்
       தற்காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் பணத்தையும் வசதிகளையும் மட்டுமே தேடித்தருகிறார்கள், ஆனால் ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதில்லை என்று பெரியவர்  வருத்தப்படுகிறார். குழந்தைகள் வார்த்தைகளைக் கேட்டு வளர்வதை விட, பெற்றோர்களின் செயல்களைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள். எனவே, ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர விரும்பினால், முதலில் அவர் பொய் பேசாமல், சூதாட்டம், மது போன்ற தீய பழக்கங்கள் இல்லாமல் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும்.
தொழிலே தெய்வம் மற்றும் கடமை
          பெரியவர்  எந்தவொரு தொழிலையும் உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ பிரிக்கக் கூடாது என்கிறார். செய்யும் தொழிலே தெய்வம் என்ற சிந்தனை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். நாம் பார்க்கும் வேலை எதுவாக இருந்தாலும், அதை முழு ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டும். வேலையில் காட்டும் கவனமும், நேர்மையும் ஒரு மனிதனை ஆன்மீக ரீதியாக உயர்த்தும்.
பேராசையற்ற நியாயமான லாபம்
            வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்குப் பெரியவர்  கூறும் மிக முக்கியமான அறிவுரை இது. தொழில் செய்பவர்கள் லாபம் ஈட்டுவது தவறில்லை, ஏனெனில் அது அவர்களின் வாழ்வாதாரம். ஆனால், அந்த லாபம் நியாயமானதாக இருக்க வேண்டும். பதுக்கல், செயற்கையான தட்டுப்பாடு, அல்லது கலப்படம் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கக் கூடாது. பேராசைப்பட்டு ஈட்டும் அதர்மப் பணம், பின்னாளில் பல மடங்கு நஷ்டமாகஅல்லது உடல் உபாதைகளாக நம்மை விட்டுப் போய்விடும்.
நேர்மையும் வாக்குறுதியும்
            வியாபாரத்திலும், அலுவலகப் பணிகளிலும் ‘நாணயம்’ மற்றும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது மிக முக்கியம். வாடிக்கையாளர்களிடம் அல்லது முதலாளியிடம் பொய் பேசி ஏமாற்றக் கூடாது. பொருளின் தரம் எப்படி இருக்கிறதோ, அதை அப்படியே விவரிக்க வேண்டும். தற்கால  உலகில் கூறப்படும் “ஒப்பந்தப் புனிதம்” என்பதை அன்றே தொழில் தர்மத்தின் அடிப்படையாகக்  குறிப்பிட்டுள்ளார்.
உழைப்புக்கு ஏற்ற ஊதியம்
        தொழிலதிபர்கள் மற்றும் மேலாளர்களுக்கு பெரியவர்  ஒரு உன்னதமான தர்மத்தை வகுத்துள்ளார். நெறி: நம்மிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டக் கூடாது. அவர்களுக்கு உரிய ஊதியத்தை  உரிய நேரத்தில் வழங்க வேண்டும். ஊழியர்களின் நலனில் அக்கறை காட்டுவதே ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம். தொழிலாளியின் வியர்வை வற்றுவதற்குள் அவனது கூலியைக் கொடுப்பதே தர்மம்.
சமூகப் பொறுப்புணர்வு
            நாம் செய்யும் தொழில் சமுதாயத்திற்கு எந்த வகையிலும் தீமை விளைவிக்கக் கூடாது என்பதில் பெரியவர்  உறுதியாக இருந்தார்.சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவதோ மக்களுக்குக் கேடு விளைவிக்கும் பொருட்களை  தர்மத்திற்குப் புறம்பான சேவைகளை  உற்பத்தி செய்வதோ அதர்மம் ஆகும். நம் தொழிலால் சமுதாயத்திற்கு ஏதேனும் நன்மை விளைய வேண்டும். இதுவே இன்றைய உலகில் சமூகப் பொறுப்புணர்வு  என்று அழைக்கப்படுகிறது.
லஞ்சமும் ஊழலும் அற்ற வாழ்வு
       அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்குப் பெரியவர் எச்சரிக்கை விடுக்கிறார்: கடமையைச் செய்வதற்கு லஞ்சம்  வாங்குவது மிகப் பெரிய பாவம். நியாயமில்லாத வழியில் வரும் ஒரு பைசா கூட நம் பரம்பரையையே பாதிக்கும். நம் திறமைக்கும் உழைப்பிற்கும் அரசாங்கமோ அல்லது நிறுவனமோ தரும் ஊதியமே போதுமானது என்ற மனநிறைவு இருக்க வேண்டும்.
முதியவர்களே கண் முன்னே வாழும் தெய்வங்கள்
            பெரியவர், நாம் கடவுளைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை என்கிறார். நம் வீட்டில் இருக்கும் வயதான பெற்றோர்களே நாம் தினமும் வழிபட வேண்டிய நடமாடும் தெய்வங்கள் ஆவர்.மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் தெய்வத்திற்கு முன்னால் பெற்றோர்கள் வைக்கப்பட்டுள்ளனர். காசி, இராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்வதை விடவும், வீட்டில் உள்ள முதியவர்களுக்கு அன்போடு பணிவிடை செய்வது பல மடங்கு புண்ணியத்தைத் தரும்.
கடமைகளின் அடிப்படை
            இந்து தர்மத்தில் மறைந்த முன்னோர்களுக்குச் செய்யப்படும் சிராத்தம், தர்ப்பணம் போன்ற பித்ரு கடமைகள் மிக முக்கியமானவை. பெரியவர்  இதற்கு ஒரு நியாயமான கேள்வியை முன்வைக்கிறார்:. “உயிரோடு இருக்கும்போது பெற்றோர்களைப் மதிக்காமல், அவர்களுக்குச் சோறு போடாமல் தவிக்கவிட்டுவிட்டு, அவர்கள் மறைந்த பிறகு பித்ரு லோகத்தில் இருக்கும் அவர்களுக்குப் பசி தீர்க்கிறேன் என்று சடங்குகள் செய்வதில் என்ன பயன் இருக்க முடியும்?” என்று கேட்கிறார்.வாழும் முதியவர்களைத் திருப்தியாக வைத்திருப்பதே மறைந்த முன்னோர்களின் ஆசியைப் பெறுவதற்கான முதல் படியாகும்.
சகிப்புத்தன்மையும் அன்பும்
            வயதாகும்போது முதியவர்களுக்கு உடல் பலவீனம், மறதி, கோபம் அல்லது குழந்தை போன்ற பிடிவாதம் ஏற்படுவது இயற்கை.நாம் குழந்தையாக இருந்தபோது நம்முடைய அத்தனை குறைகளையும், அழுகையையும், மலங்களையும் நம் பெற்றோர்கள் சகித்துக் கொண்டு அன்போடு வளர்த்தார்கள். அதேபோல, அவர்கள் வயதாகிப் பலவீனப்படும்போது, அவர்களின் குணங்களைச் சகித்துக் கொண்டு , கோபப்படாமல் அன்போடு பராமரிப்பது பிள்ளைகளின் தார்மீகக் கடமையாகும். அவர்களை மனக் கஷ்டத்திற்கு ஆளாக்குவது மிகப் பெரும் பாவமாகும்.
முதியவர்களின் ஆசியே வம்சத்தின் கவசம்
        ஒரு குடும்பம் தழைப்பதற்கும், குழந்தைகள் நல்ல நிலைக்கு வருவதற்கும் வீட்டில் உள்ள பெரியவர்களின் மனமார்ந்த ஆசி மிகவும் அவசியம்.முதியவர்கள் வீட்டில் இருக்கும்போது அந்த இல்லத்தில் ஒரு தெய்வீகப் பாதுகாப்பு இருக்கும். அவர்களின் வாழ்நாள் அனுபவங்களும், அறிவுரைகளும் குடும்பத்தை நல்வழியில் நடத்தும். முதியவர்களின் கண்ணீரும் ஏக்கமும் எந்தக் குடும்பத்திலும்  அருளைத்  தங்கவிடாது. எனவே, அவர்களின் இறுதி நாட்களை நிம்மதியானதாக மாற்ற வேண்டியது குடும்பத் தலைவனின் பொறுப்பாகும்.
பிற்காலத் தலைமுறைக்கான முன்மாதிரி
            பெரியவர்  பெற்றோர்களுக்கு ஒரு எதார்த்தமான உண்மையை நினைவூட்டுகிறார். “நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களை (தாத்தா, பாட்டி) எப்படி நடத்துகிறீர்களோ, அதைப்பார்த்துத்தான் உங்கள் குழந்தைகள் வளர்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பாரமாக நினைத்து முதியோர் இல்லங்களில் சேர்த்தால், நாளை உங்கள் குழந்தைகளும் உங்களை அப்படியே நடத்துவார்கள். “எனவே, முதியவர்களை அன்போடு நடத்துவது, நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் ஆகச்சிறந்த ஒழுக்கப் பாடமாகும்.என்பது பெரியவர் வாக்கு.
பெண்களுக்கான தர்மங்கள்
            இல்லத்தின் விளக்கு: பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் இல்லத்தரசி ஆவாள். ஒரு பெண் தன் வீட்டைத் தூய்மையாகவும், தெய்வீக அலைகள் நிறைந்ததாகவும் வைத்திருக்கும் போது, அந்த இல்லத்தில் இலக்குமி கடாட்சம் எப்போதும் நிலைத்திருக்கும். அதிகாலையில் எழுந்து இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபடுவது பெண்களின் முக்கியக் கடமையாகும்.
            சகிப்புத்தன்மையும் சாமர்த்தியமும் : குடும்ப அமைப்பை உடைந்து போகாமல் காக்கும் பெரும் பொறுப்பு பெண்களுக்கு உண்டு. கணவன், மாமனார், மாமியார் அல்லது குழந்தைகளிடம் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, கோபப்படாமல் சாந்தத்துடனும், சகிப்புத்தன்மையுடனும் கையாண்டு குடும்பத்தை ஒற்றுமையாக வழிநடத்த வேண்டும். பெண்களின் பொறுமையே குடும்பத்தின்பலம்.
         சாத்விகமான சமையல் : சமையலறை என்பது வெறும் உணவு தயாரிக்கும் இடம் அல்ல; அது ஒரு யாக சாலை போன்றது. பெண்கள் சமையல் செய்யும் போது மனதில் கோபத்தையோ, கவலையையோ வைத்துக் கொள்ளாமல், இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே சமைக்க வேண்டும். அத்தகைய சாத்விகமான உணவு, குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் பெருக்கும்.
            பண்பாட்டின் பாதுகாவலர்கள்: நமது பாரம்பரிய ஆசாரங்கள், பண்டிகைகள், விரத முறைகள் அழியாமல் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதற்குக் காரணமே பெண்கள்தான். எனவே, மேலைநாட்டு நாகரிக மோகத்தில் நம்முடைய பாரம்பரிய உடைகள், ஆசாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளைத் துறந்துவிடாமல், அவற்றைப் பெருமையோடு கடைப்பிடித்துத் தங்கள் குழந்தைகளுக்கும் கற்பிக்க வேண்டும்.  ‘காமம்’ அல்ல ‘தர்மம்’        தற்கால நவீன உலகில் திருமணம் என்பது வெறும் உடல் சார்ந்த ஆசை அல்லது சொகுசு வாழ்க்கைக்கான இணையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் பெரியவா இதன் உண்மையான நோக்கத்தை மாற்றிக் காட்டுகிறார்.இல்லற ஆசிரமத்தின் மிக முக்கிய நோக்கம் ‘தர்ம விவாகம்’ ஆகும். அதாவது, ஒரு ஆண் பிரம்மச்சரியத்தை முடித்துவிட்டு, ஒரு பெண்ணின் கரம் பிடித்து, சமுதாயத்திற்குத் தேவையான நல்ல காரியங்களைச் செய்வதற்கே திருமணம் அஸ்திவாரமாக அமைகிறது. ஆடம்பரமற்ற எளிய மங்களகரமான திருமணங்களை முன்னெடுப்பது முக்கியம் :இன்றைய காலகட்டத்தில் பல கோடிகளைச் செலவழித்து, ஆடம்பர மண்டபங்கள், விலையுயர்ந்த உடைகள், ஆடம்பர உணவுகள் எனத் திருமணங்களை ஒரு கௌரவப் போட்டியாக நடத்துவது பெருகிவிட்டது. இதனால் பல நடுத்தரக் குடும்பங்கள் கடனாளிகளாக மாறுகின்றன. இதைப் பெரியவர்  கடுமையாகச் சாடுகிறார்.                                 
            வேத மந்திரங்களின் ஒலி –பண ஆடம்பரம்: திருமணம் என்பது வேத மந்திரங்களின் ஒலியிலும், அக்னி சாட்சியிலும், பெரியவர்களின் தூய்மையான, மனமார்ந்த ஆசியிலும்  தான் மங்களகரமாக மாறுமே தவிர, பண ஆடம்பரத்தில் இல்லை. பல கோடிகள் செலவழித்து ஆடம்பரமாக நடத்தப்படும் திருமணங்கள் பல முறிந்து போவதையும், எளிய முறையில் கோயில்களில் நடக்கும் திருமணங்கள் காலம் கடந்து நிலைத்து நிற்பதையும் நாம் காண்கிறோம்.                                                 
        வரதட்சணை மற்றும் கடன்படுதல் அதர்மம்: பெண்ணைப் பெற்று வளர்த்து, அவளைத் தன் வீட்டு விளக்காகத் தரும் பெண் வீட்டாரிடம் பணம் அல்லது நகை கேட்டு வற்புறுத்துவதும், திருமணச் செலவுக்காகப் பெண் வீதாரைக் கடன் வாங்க வைப்பதும் அதர்மத்தின் உச்சம் என்கிறார் பெரியவர். மாப்பிள்ளை வீட்டார் எளிய முறையிலான திருமணத்திற்குச் சம்மதிப்பதே அந்தப் பெண்ணுக்கு அவர்கள் தரும் முதல் மரியாதை.                                              
           சேமிப்பும் தான தர்மமும்: திருமணத்திற்குச் செய்யும் வீண் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, அந்தப் பணத்தை ஏழைப் பெண்களின் திருமணத்திற்கோ, ஆதரவற்றோர் இல்லங்களுக்கோ அல்லது ஆன்மீகக் காரியங்களுக்கோ தானமாக வழங்க வேண்டும். இல்லையெனில், அந்தப் பணத்தைச் சிக்கனமாகச் சேமித்து, மணமக்களின் எதிர்காலத் தேவைகளுக்கு குழந்தை வளர்ப்பு, கல்வி முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்.                                                  
        சமூகத்திற்கான நல்ல முன்மாதிரி : வசதி படைத்தவர்கள் எளிய முறையில் திருமணங்களை நடத்தத் தொடங்கினால், அது சமுதாயத்தில் உள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும். கௌரவத்திற்காக அவர்கள் கடன் வாங்கும் அவல நிலை மாறும்.
            கணவன் – மனைவி உறவு: இன்றைய தற்கால வாழ்வில் கணவன்-மனைவி இடையே ஈகோ மற்றும் சகிப்புத்தன்மை குறைபாட்டினால் வரும் விவாகரத்துகளுக்குப் பெரியவா உன்னதமான ஆன்மீகத் தீர்வு தருகிறார்.கணவனுக்கு மனைவி தர்மத்தில் சம பங்கு வகிப்பவள் மனைவிக்குக் கணவன் காப்பவன். திருமணத்தின் போது ஓதப்படும் மந்திரங்களின்படி, இருவரும் இருவேறு மனிதர்கள் அல்ல; ஒரே ஆன்மாவின் இரு பகுதிகள். எனவே, ஒருவரையொருவர் மாற்ற முயலாமல், குறைகளைச் சகித்துக் கொண்டு, விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். கணவனின் ஆன்மீக மற்றும் சமூகக் கடமைகளுக்கு மனைவி எப்போதும் பக்கபலமாக இருக்க வேண்டும்.                                                                                                            
          வரதட்சணை என்னும் அதர்மம்:           பெரியவர்திருமணத்தில் பெண் வீட்டாரிடம் பணம் அல்லது நகை கேட்டு வற்புறுத்தும் வரதட்சணைக் கலாச்சாரத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்.பெண்ணைப் பெற்று வளர்த்து, அவளைத் தன் வீட்டு விளக்காகத் தரும் பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் எப்போதும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அதை விடுத்து, பெண்ணின் தந்தையை வற்புறுத்திப் பணம் கேட்பது அதர்மத்தின் உச்சம் என்கிறார் பெரியவர். நியாயமான, ஆடம்பரமற்ற முறையில் இரு வீட்டாரும் சம்மதித்துச் செய்யும் திருமணமே தெய்வீக அலைகளைத் தரும்.
          ஆடம்பரத் திருமணங்களைத் தவிர்த்தல்: தற்கால வாழ்வில் பல கோடிகளைச் செலவழித்து, மண்டபங்கள், உடைகள், மற்றும் உணவுகளுக்காகத் திருமணங்களை ஆடம்பரமாக நடத்துவது பெருகிவிட்டது. திருமணத்திற்குச் செய்யும் வீண் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, அந்தப் பணத்தை ஏழைப் பெண்களின் திருமணத்திற்கோ அல்லது ஆன்மீகக் காரியங்களுக்கோ தானமாக வழங்க வேண்டும். திருமணம் என்பது வேத மந்திரங்களின் ஒலியிலும், பெரியவர்களின் தூய்மையான ஆசியிலும் தான் மங்களகரமாக மாறுமே தவிர, பண ஆடம்பரத்தில் இல்லை.  ஆண்கள் திருமணத்திற்குப் பிறகு பிற பெண்களைத் தன் தாய் அல்லது சகோதரியாகப் பார்க்கும் தூய்மையான மனப்பக்குவம் இருக்க வேண்டும் ராமனைப் போல ஏகபத்தினி விரதம்.பெண்கள் தன் கணவனைத் தன் வாழ்வின் பாதியாக ஏற்று, இல்லறத்தை நந்தவனமாக்கும் பொறுமை இருக்க வேண்டும். மாங்கல்யம் என்பது வெறும் கயிறல்ல; அது கணவனின் ஆயுளையும் குடும்பத்தின் நற்பெயரையும் காக்கும் ஒரு தெய்வீகக் கவசம். திருமணச் சடங்குகளில் மிக முக்கியமானது அக்னியை வலம் வந்து ஏழடி எடுத்து வைத்தல் ஆகும். இந்த ஏழடிகளும் கணவனும் மனைவியும் வாழ்வில் எடுக்கப் போகும் ஏழு உன்னத உறுதிமொழிகளைக் குறிக்கின்றன.உன்னதமான உணவு கிடைக்க இணைந்து உழைப்போம்உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் வாழ்வோம்தர்ம காரியங்களை இணைந்து செய்வோம்குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அன்பையும் பெருக்குவோம்நல்லறிவு மிக்க குழந்தைகளை வளர்த்தெடுப்போம்நாட்டின் பருவநிலையும் இயற்கையும் செழிக்கப் பிரார்த்திப்போம்எக்காலத்திலும் பிரியாத உண்மையான நண்பர்களாக வாழ்வோம்.                                                                               
கணவன்-மனைவி இடையே சகிப்புத்தன்மையை வளர்க்கும் வழிகள்
            இன்றைய அவசர உலகில்  கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதாலும், கால நேரமின்மையாலும் மன அழுத்தம் ஏற்பட்டு, சகிப்புத்தன்மை குறைந்து விவாகரத்துகள் வரை செல்கின்றனர். இதற்கு  பெரியவரின் கருத்துகளின்படி சில எளிய தீர்வுகள்:திருமணம் என்பது இரண்டு உடல்கள் சேர்வதல்ல; இரண்டு ஆன்மாக்கள் இணைந்து தர்ம வழியில் பயணிக்கும் உன்னத பந்தம். மனைவியை த் தர்மத்தில் சம பங்கு வகிப்பவள் என்றும், கணவனைக் காப்பவன்என்றும் சாத்திரங்கள் கூறுகின்றன. ஒருவரையொருவர் மாற்ற முயலாமல், அவரவர் இயல்போடு ஏற்றுக்கொள்வதே சகிப்புத்தன்மையின் முதல் படி. தற்காலப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம் “நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?” என்ற கர்வம்தான். “நான்” என்ற அகந்தை இருக்கும் இடத்தில் பக்தி இருக்காது, அமைதியும் இருக்காது. “எல்லாம் அவன் செயல்” என்ற எண்ணத்தோடு, குடும்ப அமைப்பைக் காக்க யார் ஒருவர் முதலில் விட்டுக்கொடுக்கிறாரோ, அவரே ஆன்மீக ரீதியாக உயர்ந்தவர் என்று பெரியவர்  வழிகாட்டுகிறார்.தினமும் அலுவலகம் முடிந்து வந்ததும் கைபேசி, இணையம்  போன்ற சாதனங்களை முற்றிலும் அணைத்துவிட்டு, கணவனும் மனைவியும் இணைந்து குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து இறைநாமத்தை  உச்சரிக்க வேண்டும். இந்த கூட்டுப் பிரார்த்தனை இல்லத்தில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, தம்பதிகளுக்குள் நல்ல தெய்வீக அலைகளையும்,  அன்பையும் உருவாக்கும்.நாம் உண்ணும் உணவே நம் குணத்தைத் தீர்மானிக்கிறது. சமையலறையில் பெண்கள் கோபத்துடனோ, கவலையுடனோ சமைக்கக் கூடாது. இறை சிந்தனையோடு சமைக்கப்படும் சாத்விக உணவு, கணவன் மற்றும் குடும்பத்தினரின் கோபத்தைக் குறைத்து, சாந்த குணத்தையும் சகிப்புத்தன்மையையும் இயல்பாகவே வளர்க்கும்.
பட்டுத் துணிகளைத் தவிர்த்தல்
            தெய்வத்தின் குரலில் பெரியவர்  பட்டு ஆடைகளைப் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கச் சொல்கிறார்.காரணம், பட்டு நூல் எடுப்பதற்காக லட்சக்கணக்கான பட்டுப் புழுக்கள் கொதிக்கிற நீரில் போட்டு உயிரோடு கொல்லப்படுகின்றன. இந்த முறைமூலம்உருவாகும் பட்டு ஆடைகளை உடுத்தி இறைவனை வழிபடுவது முறையல்ல என்பது பெரியவரின் தீர்க்கமான கருத்து. எனவே, தூய்மையான பருத்தி  ஆடைகளைப்பயன்படுத்த வேண்டும்.
ஆடைகளின் நிறம் மற்றும் தூய்மை
“புகை முகந்தன்ன மாசில் தூவுடை” புறநானூறு பாடல் -398
            பொதுவாக ஆண்கள் தூய்மையான வெள்ளை நிற வேட்டிகளையே  உடுத்த வேண்டும் ஆடம்பரம் இல்லாத எளிமையின் அடையாளம்.ஆசாரத் தூய்மை. வழிபாட்டிற்குப் பயன்படுத்தும் ஆடைகள் தூய்மையாகத் துவைத்து, மற்றவர்கள் தீண்டாமல் உலர வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.கோவில்களுக்குச் செல்லும் போதும், வீட்டில் வழிபாடு  செய்யும் போதும் ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற மேற்கத்திய ஆடைகளை முற்றிலும் தவிர்த்து, மேலே குறிப்பிட்டுள்ள பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும். இது கோவிலின் புனிதத்தன்மையையும் நம் மன ஒருமைப்பாட்டையும் காக்க உதவும் உடைகளில் ஆடம்பரம் இல்லாமல், பருத்தி  உடைகளை உடுத்தி, எளிமையாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். பெரியவரின் போதனைப்படி, ஒரு பெண் மகிழ்ச்சியாகவும் ஆசாரமாகவும் இருக்கும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள்.
தொகுப்புரை
            தெய்வத்தின் குரலில் இல்லறக் கடமைகளும் வாழ்வியல் நெறிகளும் என்னும் இவ்வாய்வுக் கட்டுரையின் வழி இளைய தலைமுறை உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்றி வாழ்வதற்கான வழிமுறைகளையும் ஆண்டாண்டு காலமாக சனாதன தர்மம் கூறிவரும் வாழ்வியல் கருத்துகளையும் நினைவு கூர்ந்து கடைபிடிப்பதற்காகவும் நூல் கூறும் கருத்துகளை இன்னும் பல்வேறு நோக்குகளில் ஆய்வு செய்வதாகவும் இவ்வாய்வுக் கட்டுரை நிறைவடைகிறது.
துணைநூல் பட்டியல்
1.தெய்வத்தின் குரல் -ரா கணபதி, வானதி பதிப்பகம் 22 ஆம் பதிப்பு 2019
2.திருக்குறள் திருவள்ளுவர்
3.பரிமேலழகர் உரை, ஸ்ரீ பிரக்யா பப்ளிகேஷன் தேனி முதல் பதிப்பு 2019
4.புறநானூறு – இணையம்
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
Iniyavaikatral_Article_Peer Reviewedகௌசல்யா.செ, 
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி,
 நாகர்கோவில்.
நெறியாளர்:
முனைவர்.க. நாகேஸ்வரி,
உதவிப்பேராசிரியர்,
 தமிழ்க்  கலை ஆய்வகம்,
 தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி,
நாகர்கோவில், 

தெய்வத்தின் குரலில் இல்லறக்கடமைகளும் வாழ்வியல் நெறிகளும் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »