Sunday, November 1, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் Thirukkural and ArthaShastra: Principles of Public Administration|Dr.N.Pradeepa

Thirukkural and ArthaShastra: Principles of Public Administration|Dr.N.Pradeepa

Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
       Thiruvalluvar’s Thirukkural and Kautilya’s Arthashastra are significant ancient works that explain the principles of governance and administration. Both texts highlight essential aspects of public administration, including the qualities of a ruler, ministerial responsibilities, justice, public welfare, economic management, revenue administration, and national security. While the Thirukkural emphasizes ethical governance, the Arthashastra focuses on practical administrative strategies. This study comparatively examines the principles of public administration presented in these two works and explores their relevance and contributions to contemporary governance, particularly in promoting good governance, transparency, accountability, and public welfare.
Keywords: Thirukkural, Arthashastra, Public Administration, Good Governance, Political Thought, Public Welfare, Administrative Management, Ethical Governance.

“திருக்குறள், அர்த்த சாஸ்திரம்: பொது நிர்வாகக் கொள்கைகள்”

ஆய்வுச் சுருக்கம்
      திருவள்ளுவரின் திருக்குறளும், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும் பண்டைய இந்தியாவின் ஆட்சி மற்றும் நிர்வாகச் சிந்தனைகளை எடுத்துரைக்கும் சிறப்புமிக்க நூல்களாகும். இவ்விரு நூல்களும் சிறந்த ஆட்சிக்குத் தேவையான அரசரின் பண்புகள், அமைச்சர்களின் தகுதிகள், நீதி, மக்கள் நலன், பொருளாதார மேலாண்மை, வருவாய் மற்றும் நாட்டின் பாதுகாப்பு போன்ற பொது நிர்வாகக் கொள்கைகளை விளக்குகின்றன. திருக்குறள் அறநெறி சார்ந்த ஆட்சியையும், அர்த்த சாஸ்திரம் நடைமுறை சார்ந்த நிர்வாக முறைகளையும் வலியுறுத்துகின்றன. இவ்வாய்வு, இவ்விரு நூல்களிலும் இடம்பெறும் பொது நிர்வாகக் கொள்கைகளை ஒப்பீட்டு அடிப்படையில் ஆராய்ந்து, அவை இன்றைய நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்திற்கு வழங்கும் பங்களிப்பை எடுத்துரைக்கிறது.
முக்கியச் சொற்கள் : திருக்குறள், அர்த்த சாஸ்திரம், அறநெறி, பொதுநிர்வாகம், நல்லாட்சி, அரசியல் சிந்தனை,மக்கள் நலன், நிர்வாக மேலாண்மை,
முன்னுரை
     பொது நிர்வாகம் என்பது நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலன் மற்றும் நல்லாட்சிக்கு அடிப்படையாக விளங்குகிறது. திருவள்ளுவரின் திருக்குறளும், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும் ஆட்சி நிர்வாகம் குறித்த சிறந்த சிந்தனைகளை எடுத்துரைக்கும் பண்டைய நூல்களாகும். திருக்குறள் அறம், நீதி, நேர்மை, மக்கள் நலன் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அர்த்த சாஸ்திரம் நிர்வாகத் திறன், பொருளாதார மேலாண்மை, அமைச்சரவை, வருவாய் மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை விளக்குகிறது. இவ்விரு நூல்களின் பொது நிர்வாகக் கொள்கைகளை ஒப்பீட்டு, அவற்றின் சமகாலப் பொருத்தத்தை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
திருவள்ளுவரின் பொது நிர்வாகக் கொள்கைகள்
      தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த அறநூலாக விளங்கும் திருக்குறள், மனித வாழ்வின் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று நிலைகளையும் எடுத்துரைக்கிறது. குறிப்பாக, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் இடம்பெறும் பொருட்பால், சிறந்த அரசாட்சி மற்றும் பொது நிர்வாகத்திற்குத் தேவையான அடிப்படைக் கொள்கைகளை விளக்குகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நல்லாட்சி, திறமையான நிர்வாகம், நேர்மையான அமைச்சர்கள், நீதி தவறாத ஆட்சியாளர், முறையான வரிவிதிப்பு, மக்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவை அவசியம் என்பதை வலியுறுத்துகிறார். மேலும், குடிமக்களின் நலனைப் பேணுதல், குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், தகுதியானவர்களுக்குப் பொறுப்புகளை வழங்குதல், ஆலோசனைகளைக் கேட்டு முடிவெடுத்தல் போன்ற நிர்வாகக் கூறுகளையும் எடுத்துரைக்கிறார். எனவே, திருவள்ளுவரின் பொது நிர்வாகச் சிந்தனைகள் இன்றைய நவீன அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகளுக்கும் வழிகாட்டும் காலத்தால் அழியாத கருத்துகளாகத் திகழ்கின்றன.
அறநெறி
     சமுதாய நெறி தனிமனிதனின் பண்பட்ட வாழ்வைப் பொறுத்து அமையக்கூடும். செய்கின்ற தருமமே அறமாக வெளிப்படும். அறமென்னும் வாழ்க்கை நெறிக்கு மணிமேகலை இப்பூவுலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் திறம்படக் கொடுத்து வாழ்வதேயாகும். இதனை,
“அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாத இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்” (மணிமேகலை. 228 – 231)
          என்கிறது. ஆனால் வள்ளுவர் மறுபுறமாக மனதளவில் மாசு, வெகுளி இன்றி செயல்படுத்துவதே அறமாகும் என்கிறார். வாழ்கின்ற வாழ்க்கையில் நன்மை விளைய வேண்டுமெனில் அறத்தைக் கடைபிடிக்க வேண்டும். அதுவே மனிதனுக்கு தலைக்கவசம் போன்றது. மனிதனாகிய நாம் செய்ய விரும்பும் அறமும் இதுவேயாகும்.
“அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்”(குறள் – 35)
இந்நான்கும் இல்லாத நிலையில் இருக்க வேண்டும். மேலும் ,
“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல”( குறள் – 39)
          வள்ளுவர், அக்கால வாழ்வியல் போக்கினை உண்மையில் நன்கு உணர்ந்தவராக இருத்தல் வேண்டும். ஏனெனில் அறத்தின் அடிப்படையில் வாழும் வாழ்க்கையே இன்பம் நிறைந்ததாகவும் அறமின்றி கிடைக்கும் வாழ்வியல் இன்பம் போல் தோன்றினும் அவை இன்பமாக என்பதையும் நன்கு உணர்ந்து எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் பாடி இருப்பது சமூகத்தை வழிநடத்தும் அறச்சிந்தனைகள் ஆகும்.
 நல்லாட்சி
          திருக்குறளின் பொருட்பாலில் அரசன், அமைச்சு, அரண், படை, குடி, நட்பு, நீதி, தூது போன்ற ஆட்சிக் கூறுகள் விரிவாகக் கூறப்படுகின்றன. அரசனின் முதன்மைக் கடமை மக்களைப் பாதுகாத்து அவர்களின் நலனை உறுதி செய்வதாகும்.
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.” (குறள் – 388)
         நீதி முறையுடன் மக்களைக் காப்பாற்றும் அரசன் மக்களால் உயர்வாக மதிக்கப்படுவான். இதன் மூலம் நல்லாட்சியின் மையத்தில் நீதி மற்றும் மக்கள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்ற கருத்து வெளிப்படுகிறது.
நீதி
      நீதி என்பது அரசால் அறம் என்று வரையறுத்து வைக்கப்பட்டதனை எவரேனும் மீறினால் அதற்குத் தக்க தண்டனை தரும் துறையாகும். மன்னராட்சி காலத்தில் மன்னரின் கீழே இத்துறையும் இயங்கப்பட்டது. அதனை மாற்றி அமைக்க தற்போது அரசின் மூன்றாவது பெரும் தூணாக நீதித்துறை அமைகிறது.ஆனால் உலகப் பொதுமறையில் சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்ட,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
 செய்தொழில் வேற்றுமை யான்” (குறள்  – 972)
          என்னும் குறட்பாவை பொய்யில் புலவர் அமைத்தார். திருட்டினை எதிர்க்க வேண்டும் என்பதற்கு அடுத்தவர் பொருளை திருடி எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளத்தில் எண்ணுவது கூட தீமை என்கிறது வள்ளுவம்.
“உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்” (குறள் – 282)
          வரைவின் மகளிர் போல் புறனில் விளையாமல், போன்றவையும் நீதியை நிலைநாட்ட திருக்குறள் கையாண்ட கருவிகளாகும். சமுதாயத்தில் ஊடுருவும் வன்முறைகளுக்கு மரண தண்டனை கொடுப்பதை வள்ளுவம் குற்றம் கடிதல் என்னும் அதிகாரத்தின் வழி வெளிப்படுத்துகிறது.
“குடிபுறங் காத்தோம்பி குற்றம் கடிதல்
வடுவன்று  வேந்தன் தொழில்” (குறள்  – 549)
          குற்றங்களை தண்டிக்கும் முறைமை ‘துன்பம் செய்தல் பொருள்கோல், கோறல்’ என மூவகைப்படும் என்று உரை வகுத்தார் பரிமேலழகர். துன்பம் செய்தலை சிறை தண்டனை என்றும் பொருள் கோடலை அவர்க்கு உரிய சொத்து அல்லது செல்வத்தை பறிமுதல் செய்தல் அல்லது அபராதம் விதித்தல் என்று தற்காலத்தில் ஏற்றுக்கொள்ளலாம் கோறல் என்பது மரண தண்டனைக்கு உரிய ஒரு செயல் ஆகும்.குற்றங்களுக்கு தக்கவாறு தண்டனை வழங்க வேண்டும் என்பது வள்ளுவரின் நீதி கருத்தாகும்.தண்டனை வழங்கும்போது தக்கார் தகவிலார் என்பதை அரசன் நோக்கக்கூடாது என்பதற்கு,
“ஓர்ந்துகண் ணோடது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய் வஃதே முறை” (குறள் – 541)
என்னும் குறளின் வழி கூறுகிறார்.
“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தை தேய்க்கும் படை” (குறள்  – 555)
         என்ற குறளின் கீழ் மன்னனின் ஆட்சி கொடுமையை தாங்க முடியாத குடிமக்களது அழுத கண்ணீரை அந்த ஆட்சியை அல்லது அரசினை அழிக்கும் கருவி என்கிறார்.
நிர்வாகமும் நெறிமுறையும்
       அரசன் சிறந்தவனாக இருந்தாலும் நிர்வாகப் பொறுப்பிலுள்ளோரும் சரியானவர்களாய் இருக்கும்போதுதான் அரசு சிறந்த அரசாகச் செயல்பட முடியும், நிர்வாகத்திலுள்ள அமைச்சர் போன்றோர் பொருள் தொடர்பாகப் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும் வள்ளுவர் சுட்டுகிறார். bபொருள்வரும் வாயில்களை விரியச் செய்து, அந்தப் பொருளால் செல்வங்களை வளர்த்து, அந்த வாயில்கட்கும். பொருளுக்கும் செல்வங்களுக்கும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே அரசனிடம் வினைபுரிய வேண்டும். பொருள், கருவி, காலம், வினை, இடம் எனும் ஐந்தையும் எண்ணிச் செயல்புரிய வேண்டும்.
“ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை”( குறள் – 656)
       தன் தனிப்பட்ட நலத்திற்காகத் தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள் நிறைந்துள்ள இக்காலத்தில், நிர்வாகத்தில் இருப்பவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பொருள் காரணமாகத் தீய வினைகளைச் செய்யக்கூடாது என கூறுகிறார் வள்ளுவர்.
கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் பொது நிர்வாகக் கொள்கைகள்
     அரசியல் அறிவியல், பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாகம் தொடர்பாக, கௌடில்யரால் (சாணக்கியர் அல்லது விஷ்ணுகுப்தர் என்றும் அழைக்கப்படுபவர்) இயற்றப்பட்ட அர்த்த சாஸ்திரம் ஒரு மிக முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசை நிறுவுவதில் முக்கிய பங்காற்றிய கௌடில்யர், திறமையான ஆட்சிமுறை, அரசின் ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தி இந்நூலைப் படைத்தார். அரசு கட்டமைப்பு, அமைச்சரவை, வருவாய் நிர்வாகம், நீதித்துறை, பாதுகாப்பு, உளவுத்துறை, வெளியுறவுக் கொள்கை, விவசாயம் மற்றும் வர்த்தகம் போன்ற நிர்வாகக் கூறுகள் குறித்த விரிவான விளக்கங்களை இந்நூல் வழங்குகிறது.
அரசனின் கடமைகள்
        அர்த்த சாஸ்திரத்தில் அரசனின் தனிப்பட்ட இன்பத்தைவிட மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசனின் நலன் மக்களின் நலனுடன் இணைந்ததாகக் கருதப்படுகிறது. அர்த்த சாஸ்திரம் அரசனின் பொறுப்புகளாக,  வித்யா சாஸ்திரங்களை நன்கு அறிந்தவனாகவும், சகல உயிர்களுக்கும் நன்மை செய்வதில் முயற்சி உடையவனாகவும், மக்களிடம் தக்கபடியாக தண்ட நீதியை செலுத்துபவனாகவும் உள்ள மன்னன். வேறொரு மன்னனின்றி, உலகத்தை ஆள்வான்.”ஏகசக்ராதிபதியாக உலகத்தை ஒரு குடைக்கீழ் ஆள்வான் என்பதை,
  வித்யா விநீதோ ராஜா ஹி ப்ரஜாநாம் விநயே ரத:
  அநந்யாம் ப்ருதிவீம் புங்க்தே ஸர்வபூத ஹிதேரத:                 
அர்த்த சாஸ்திரம் – பாகம் – 2 அத்தியாயம்  – 24
மேலும் மக்கள் சுகத்திலேயே மன்னன் சுகம் உள்ளது என்பதை,
ப்ரஜாஸுகே ஸுகம்ராக்ஞ: ப்ரஜாநாம் சஹிதே ஹிதம்
நாத்மப்ரியம் ஹிதம் ராக்ஞ:ப்ரஜாநாம் துப்ரியம் ஹிதம்
அர்த்த சாஸ்திரம் – பாகம் – 2 அத்தியாயம்  – 24
        மக்களுடைய நலனிலேயே மன்னனுடைய நலன் உள்ளது. மன்னன் தனக்கு விருப்பமானதைப் பற்றி எண்ணாமல், மக்களுக்கு விருப்பமானது எதுவோ, அதையே தனக்கு விருப்பமானதாகக் கொள்ள வேண்டும். கிராமத்தை உருவாக்கும்போது ஒரு குலத்தார் அல்லது ஒரு குடும்பம் வந்து ஓரிடத்தில் வசிக்கத் தொடங்கும்போது, அவர்களுக்கு பொருளைக் கொடுத்து உதவ வேண்டும். அதனால் அவர்கள் வாழ்க்கை வளம் பெற்றவுடன் உதவி செய்ய வேண்டியதில்லை, அவர்களை ஒரு தந்தையைப் போல் எப்போதும் காக்க வேண்டும். மேலும் கௌடில்யர்  அரசியல் சிந்தனையில், ஆட்சியாளர் மக்களின் பாதுகாப்பையும் பொருளாதார வளத்தையும் உறுதி செய்ய வேண்டியவர். இதனால் அரசன் தனிப்பட்ட அதிகாரத்தை அனுபவிப்பவராக மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பு கொண்ட நிர்வாகியாகவும் விளங்குகிறார்.
அமைச்சரவை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு
       ஒரு அரசின் வெற்றிக்குத் திறமையான அமைச்சரவை அடிப்படையானது என்று கௌடில்யர் கருதுகிறார். அமைச்சர்கள் அறிவு, அனுபவம், நேர்மை, விசுவாசம் மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் பல்வேறு சோதனைகளும் மதிப்பீடுகளும் அவசியமானவை என்று அவர் குறிப்பிடுகிறார். அரசின் பல்வேறு துறைகளுக்குத் தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் கடமைகளை நேர்மையுடன் ஆற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இம்முறை நவீன துறைசார் நிர்வாக அமைப்பிற்கு இணையானதாகும். கௌடில்யர் அரசாட்சி உதவியின்றி இயங்காது என்றும், அரசன் அமைச்சர்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
ஆலோசனைக்கு 5 அங்கங்கள் உண்டு. என்பதை,
🌻அந்தந்த காரியங்களை ஆரம்பிப்பதற்கான வழிமுறை.
🌻அந்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு, ஆள் பலமும், பண பலமும் எவ்வளவு தேவை என்பது.
🌻 எந்த நாட்டில், எந்தக் காலத்தில், எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்பது.
🌻காரியங்கள் தொடங்கி நடத்தும்போது, ஏற்படக்கூடிய அபாயங்களுக்கான எதிர் நடவடிக்கைகள் என்ன என்பது.
🌻காரியத்தை நிறைவேற்றுவது
இந்த 5 அங்கங்களைப் பற்றியும் நன்கு ஆலோசிக்க வேண்டும்.
                                                               அர்த்த சாஸ்திரம் – பக் – 65
   மேலும் ஒரு ஆலோசனையில் செயல்படுத்த வேண்டிய வேலை, மனிதவளம், காலம், இடம், ஆபத்துகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் இறுதி வெற்றி போன்ற கூறுகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்கிறார்.
பொருளாதார நிர்வாகம் மற்றும் வருவாய் மேலாண்மை
          அர்த்த சாஸ்திரத்தில் பொருளாதாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, வணிகம், தொழில், வரிவிதிப்பு, அரசின் வருவாய் போன்றவை விரிவாக விவாதிக்கப்படுகின்றன. அர்த்த சாஸ்திரம் பொருளாதாரத்தின் முக்கிய கூறுகளாக குறிப்பிடுவது,
க்ருஷி பாஷுபால்யே வணிஜ்யா ச வார்த்தா.
தான்ய பஷுஹிரண்ய குப்யவிஷ்டி ப்ரதாநா தெளபகாரிகீ
தயா ஸ்வபக்ஷம் பரபக்ஷம் ச வஷீரோதி தண்ட கோஷாப்யாம்.
                                       அர்த்த சாஸ்திரம் – பாகம் 1 அத்தியாயம் – 4
      விவசாயம், பசு பராமரிப்பு, வாணிகம் இவை மூன்றும் பொருளாதாரத் துறை எனப்படும்.இதுவே தானியம், கால்நடைகள், தங்கம், வனச் செல்வங்கள் (தாதுப் பொருட்கள், வனத்தில் கிடைக்கும் மூங்கில், தேக்கு முதலான மரங்கள்) முதலானவற்றை சம்பாதிக்க வைத்து, உதவுகிறது.தன்னைச் சார்ந்தவர்களையும், எதிரிகளையும் மன்னன் தன் படைகளையும், கருவூலத்தையும் கொண்டே வசத்தில் வைத்துக் கொள்கிறான் அதாவது தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறான். படைகளைப் பராமரிப்பதற்கு, கருவூலத்தில் செல்வம் நிறைந்திருந்தால் தான் முடியும். செல்வம் நிறைய பொருளாதாரத் துறையின் மேன்மை அவசியம். செல்வத்தைக் கொண்டு படைகளையும் தன்னைச் சேர்ந்தவர் களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறான் மன்னன், படைகளைக் கொண்டு எதிரிகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறான். ஒன்றோடொன்று சங்கிலித் தொடர்பாக உள்ள இந்த விஷயங்களுக்கு அடிப்படையாக உதவுவது பொருளாதார மேன்மையே.  மேலும் ஒரு நாட்டின் வலிமைக்கு அதன் பொருளாதார வளம் அடிப்படையாக அமைகிறது. எனவே கருவூலம், நிலம், நீர், விவசாயம், வணிகம் மற்றும் அரசின் வருவாய் ஆகியவற்றை முறையாக நிர்வகிப்பது அரசின் முக்கியப் பொறுப்பாகக் கருதப்படுகிறது.
நீதி மற்றும் சட்டம்
         சமூகத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சட்டமும் நீதியும் அவசியம். குற்றங்கள், தண்டனைகள், சொத்து உரிமைகள், வணிகத் தகராறுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அர்த்த சாஸ்திரத்தில் இடம்பெறுகின்றன. “சுரங்கங்களிலும், உயர்ந்த பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் உயர்ந்த பொருளையாவது ரத்தினத்தையாவது திருடுபவனுக்கு மரண தண்டனை. சிறு தொழிற்சாலைகளில், சிறு பொருள்களைத் திருடுபவனுக்கு அபராதம். ஆனால் மன்னனுக்குரிய திரவியங்கள் உற்பத்தி செய்யும் இடங்களில் திருடுபவனுக்கு அதிக தண்டனை விதிக்கப்படும். உதாரணத்துக்கு ஒரு வெள்ளி திருடினால் 40 வெள்ளிகள் அபராதம். இப்படியே  போய் 80 வெள்ளிகள் திருடினால் 1000 வெள்ளிகள் அபராதம் என்ற அளவில் அபராதக் கணக்கு நிற்கிறது. அதற்கும் மேற்பட்டு 10 வெள்ளிகள் விலையுள்ள பொருளைத் திருடுபவனுக்கு அபராதம் கிடையாது. நேராக மரண தண்டனை தான்.” அர்த்த சாஸ்திரம் – பக் – 414  தவறு இழைப்போருக்கு உரிய தண்டனைகளும் கடுமையானதாகவே இருக்கின்றது.அரசின் அதிகாரம் சட்டத்தின் வழியாகச் செயல்பட வேண்டும் என்பதே அதன் நிர்வாகக் கட்டமைப்பின் முக்கிய அம்சமாகும்.
வணிக நிர்வாகம்
          அர்த்த சாஸ்திரம் வணிகப் பொருட்களின் தேவை, விலை உயர்வு–தாழ்வு, விநியோகத்திற்கான சரியான காலம், கொள்முதல் மற்றும் விற்பனை ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
“வர்த்தகத் தலைமை அதிகாரி மண்ணில் தோன்றிய பொருட்களும், தண்ணீரில் தோன்றியவையுமான, நிலவழியாகவும், நீர் வழியாகவும் தனது காரியாலயத்துக்கு வந்த வியாபாரப் பொருட்களின் தரத்தை அறிய வேண்டும். அவற்றின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களையும், சீக்கிரமாக விற்றுப் போகிறவை எவை, நிதானமாக விற்பவை எவை என்பதையும் அறிய வேண்டும். எந்தெந்தப் பொருட்களை, எந்தெந்தக் காலங்களில், எந்தெந்த தேசங்களுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும், இறக்குமதி செய்ய வேண்டும் என்பதையும், எப்போது வாங்க வேண்டும், எப்போது விற்க வேண்டும் என்று தக்க காலத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.” அர்த்த சாஸ்திரம் – பக் –  230
     மேலும் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வெவ்வேறு சந்தைகளில் எவ்வாறு விநியோகிப்பது என்பதும் குறிப்பிடப்படுகிறது.
சமகாலப் பயன்பாடு
       திருக்குறளின் அறநெறி சார்ந்த நிர்வாகக் கொள்கைகளையும், அர்த்த சாஸ்திரத்தின் நடைமுறை சார்ந்த நிர்வாக உத்திகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் திறமையான, வெளிப்படையான, பொறுப்புணர்வுமிக்க மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட நவீன பொது நிர்வாகத்தை உருவாக்க முடியும். இவ்விரு நூல்களும் சமகால நல்லாட்சிக்கான முக்கியமான சிந்தனை வழிகாட்டிகளாகத் திகழ்கின்றன.
முடிவுரை
       திருக்குறளும் அர்த்த சாஸ்திரமும் சிறந்த ஆட்சிக்குத் தேவையான அடிப்படைக் கொள்கைகளை எடுத்துரைக்கின்றன. திருக்குறள் அறநெறி சார்ந்த நிர்வாகத்தையும், அர்த்த சாஸ்திரம் நடைமுறை நிர்வாகத் திறனையும் வலியுறுத்துகின்றன. இவ்விரு நூல்களின் கருத்துகளை ஒருங்கிணைப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, நீதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை உருவாக்க முடியும். எனவே, இந்நூல்களின் நிர்வாகச் சிந்தனைகள் இன்றைய பொது நிர்வாகத்திற்கும் பொருத்தமான வழிகாட்டுதல்களாகத் திகழ்கின்றன.
துணைநூற் பட்டியல்
1.ஔவை சு.துரைசாமிப் பிள்ளை (ஆசிரியர்), ந.மு.வேங்கடசாமி நாட்டார் (ஆசிரியர்) -மணிமேகலை (மூலமும் உரையும்), சாரதா பதிப்பகம், சென்னை – 600014.
2.கௌமாரீஸ்வரி (ப.ஆ) – திருக்குறள் பரிமேலழகர் உரை,சாரதா பதிப்பகம், சென்னை – 600014.
3.ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா – அர்த்த சாஸ்திரம் என்னும் சாணக்கியரின் நீதிநூல் மூலமும் உரையும் (முழுவதும்) ஸ்ரீ இந்து பப்ளிகேன்ஸ் – புதிய எண் 100, கெனால்பாங்க் ரோடு, தெற்கு உஸ்மான் ரோடு வழி. கிழக்கு சிஐடி நகர் சென்னை – 600 035.
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ந.பிரதீபா
உதவிப்பேராசிரியர் 
தமிழ்த்துறை – சுயநிதிப்பிரிவு
PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,
கோயம்புத்தூர்.

 

திருக்குறள், அர்த்த சாஸ்திரம்: பொது நிர்வாகக் கொள்கைகள் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »