Abstract
Desires constitute a fundamental driving force behind human life and progress. At the same time, uncontrolled and excessive desires can adversely affect an individual's mental peace and the well-being of society. This article examines the nature of human desires, the factors responsible for their emergence, the ways in which desires can cloud human reasoning, and the methods of regulating them. It explains that desires commonly classified as the desire for land and property, the desire for wealth, and the desire associated with relationships and sensual pleasures are connected with natural human needs. At the same time, it clearly distinguishes between genuine needs and excessive greed. The article emphasizes the importance of examining and pursuing desires on the basis of need, eligibility, convenience, opportunity, and consequences. Desires that contribute to intellectual growth, personal development, and social welfare may be considered constructive and acceptable, whereas unnecessary desires that generate suffering and harmful consequences should be avoided. The article also highlights how excessive desires can transform into the six negative tendencies traditionally described as Kama (lust), Krodha (anger), Lobha (greed), Moha (delusion), Mada (pride), and Matsarya (jealousy). Merely suppressing desires is not an adequate solution. Instead, the most appropriate approach is to examine their causes and nature and regulate them through rational discrimination based on good and evil, necessity and convenience, and consequences and after-effects. By learning to regulate desires and live without excessive attachment, individuals can attain mental peace, personal development, social well-being, and a higher purpose in life. Thus, this article emphasizes that the proper regulation of desires is essential for achieving a balanced, meaningful, and fulfilling life.
Keywords : Desire, Need, Greed, Attachment, Mental Peace, Six Negative Tendencies, Personal
“ஆசைகளைச் சீரமைத்தல்”
முன்னுரை
ஆசைகளை சீரான முறையில் நிறைவேற்றுவது எப்படி என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியலாம். ஆசைகளை மூன்று வகைகளாக கூறுவர். அவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்பவனாகும். இவ்வாசைகளே துன்பங்கள் தோன்றுவதற்குக் காரணமாகின்றன. இவ்வாசை வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. அவை பற்று, அவா, இச்சை, வேட்கை,காமம், காமியம், வேண்டுதல் என்பவனாகும். மண்,பெண், பொன் இந்த மூன்றின் மீதும் ஆசை என்று இருத்தல் இயலாது. ஏனென்றால் நாம் வாழ ஓரளவாயினும் நிலமும், வீடும் வேண்டும். இம்மண்ணின் மீதுதான் நாம் நின்றும், நடந்தும், படுத்தும், வாழ்க்கை நடத்துகின்றோம். பலவிதமான பொருட்களை உபயோகித்து வாழ்கின்ற நிலையில் பொன், பொருள் ஆசை இன்றி வாழ்தல் இயலாது. பெண்ணை விடுத்து வாழ் வில்லை. ஏனென்றால் பெண் மனைவியாக மட்டுமல்லாமல் தாயாக, மகளாக, சகோதரிகளாகவும் இருக்கிறாள். எனவே அவளை தவிர்த்து வாழ முடியாது. ஆகவே இந்த மூன்று ஆசைகளும் இன்றி வாழ்வது என்பது இயலாதது. இந்நிலையில் நம்மில் எழும் ஆசைகளை ஆராய்ந்து, துன்பம் தரக்கூடிய முறையற்ற ஆசைகளைத் தவிர்த்தல் வேண்டும். நமக்கும் சமுதாயத்திற்கும் நன்மை தரக்கூடிய ஆசைகளை மட்டும் நிறைவேற்றி வளமாக வாழலாம் என்ற நல்லெண்ணத்துடன் நம் ஆசைகளை ஒழுங்குபடுத்துவதே ‘ஆசைகளை சீரமைத்தல்’என்பர்.
ஆசை எழக் காரணம்
மனிதன் உயிர்வாழ்வதால் பசி, தாகம், உடல் வெப்பத்தின் ஏற்றத்தாழ்வு, கழிவுப் பொருட்களை வெளியேற்று உத்வேகம் போன்ற இயற்கைத் துன்பங்கள் ஏற்படுகின்றன.இவற்றின் காரணமாகத் தேவையும், ஆசையும் ஏற்படுகின்றன.
ஆசை அறிவை மயக்க காரணம்
தேவையைக் காரணமாக் கொண்டு எழும் ஆசை, தேவை நிறைவேறியதும் மறைந்து விட வேண்டும். ஆனால் பொதுவாக அப்படியில்லை. ஏனென்றால் தேவை நிறைவேறும் போது எழும் இன்பத்தில் மனம் மயங்கி விடுகின்றது. எந்தச் செயல் இன்பத்தைத் தந்ததோ, அச்செயலை மனம் தேவையில்லாமல் மீண்டும் செய்ய விரும்புகின்றது. அதாவது உண்மையான தேவையில்லாமலே ஆசை எழுகின்றது. துன்பத்தைத் தீர்ப்பதற்காகத் தோன்றிய ஆசை இப்பொழுது அறிவை மயக்கிச் செயற்கையாக இன்பத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறது. வாழ்க்கையில் உயர்த்திட்டமிடும்போது அதற்கான தகுதியையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளாமல் வெறுமனே ஒன்றை அடைய விரும்புவது பேராசையாகும். இது துன்பத்தையே தரும்.இந்தப் பேராசை அறிவையும் மயங்கி விடும்.உயிராற்றல்,தேவை, உண்மை, உயர்வு இவை காரணமாகப் பிறக்கும். ஆசையன்றி ஏனைய ஆசைகள் எல்லாம் அறிவின் மயக்கத்தால் தோன்றுன.இத்தகு ஆசை துன்பத்தையே தரும். எனவே ஆசை எழும் காரணத்தை ஆராய வேண்டும். ஆசை தகுதியான ஆசையாக இருக்குமேயானால், அந்த ஆசையினால் யாருக்கும் பாதகம் நேரமா? என்று காண்பதுடன் அதை நிறைவேற்ற வசதி, வாய்ப்புகள் இருக்கின்றனவா? என்று ஆராய வேண்டும்.
“இச்சை எழும்போதே காரணம் கண்டிடு
இச்சை முடிந்திடச் சூழ்நிலை பார்த்திடு
இச்சை முடிந்தால் எழும் விளைவை யூகி
இச்சை முறையாய் இயங்கும் அமைதியில்”
ஆனால் நாமோ செயற்கையான ஆசைகளை உருவாக்கிக் கொண்டு துன்பத்தைச் சந்திக்கிறோம். தேவையில்லாத ஆசையே நம் அறிவை மயக்கக் காரணமாகின்றது.
மதிக்கப்பட வேண்டிய ஆசை
நம் அறிவை மேம்படுத்தும் ஆசை, நம் வாழ்வில் முன்னேற்றம் தரும் ஆசை, சமுதாயத்திற்கு நலம் சேர்க்கும் ஆசைகளே மதிக்கப்பட வேண்டிய ஆசைகள் ஆகும். முறையான,தேவையான ஆசையே யானாலும் அதை நிறைவு செய்யும் போதும், அதன் விளைவை அனுபவிக்கும் போதும் அதன் மீது தீவிரமான பற்று வைத்தலாகாது. அங்ஙனம் பற்றுவைத்தால் மனம் மாசுறும் நாம் வாங்கும் பொருட்கள் துன்பத்தைக் குறைக்கின்றன. என்பதனால் அப்பொருட்கள் மீது மனம் நாட்டம் கொள்ளுதல் இயற்கையே ஆயினும் அப்பொருளின் மீது தீவிரமான ஆசை கொள்ளுதல் கூடாது. அப்பொருட்களோடு நாம் கொள்ள வேண்டிய உறவின் அளவையும் முறையையும் வரையறுத்துக் கொள்ள வேண்டும். இதைவிடுத்து அப்பொருளின் மீது அதீதமான எண்ணம் கொள்வதையே ‘பற்று’ என்கின்றனர். இப்பற்றை விட வேண்டும். இப்பற்றை விடாதவரை உயிருக்கு விமோசனமில்லை.
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்
மற்று நிலையாமை காணப் படும். (குறள்-349)
ஆசையின் இன்றியமையாமையும் அதன் மீது நாம் வைக்க வேண்டிய உறவின் அளவு, மற்றும் தன்மைகளை எடைபோட்டுச் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத ஆசைகள் மற்றவர்களுக்கு நல் விளைவைத் தந்தாலும் நம்முடைய மனம் அதில் சிக்கிக் கொண்ட காரணத்தால் நமக்குத் தீமையை தரும்.
பிறவியின் நோக்கத்திற்கு உதவாத ஆசை
ஆசையின் பேரிலும் அனுபவத்தின் பேரிலும் மனதை சிக்கி விடுதல்தான் பற்றாகும்.இந்த பற்றுக் கூடாது. பிறவியின் நோக்கத்தையே இது பாழாக்கி விடும். பிறவியின் நோக்கத்திற்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்ள விடாமல் இந்தப் பற்று தடுத்துவிடும். வாழ்வே, பொருட்களை நுகர்வதற்கும் அப்பொருட்களைக் காப்பதுமே என்றாகிவிடும்.இப்பற்றே “லோபம்”என்னும் கடும் பற்றாகவும் மாறும். இப்பற்று நிறைவேறத் தடை வருமானால் சினம்தோன்றும். இச்சினம் ஐம்பெரும் பழிச் செயல்களையும் செய்யத் தூண்டும். கடைத்தேற முடியாத படுகுழியிலும் தள்ளிவிடும். இச்சை குறுகிடில் அறுகுணமாகிடும் இச்சையின் பூரணம் நிர்க்குணமாகிடும். தேவையைப் பெருக்கிக்கொண்டே சென்றால் அனுபவித்தலில் மனம் சென்று விடும். மனம் அதில் செல்லும் பொழுது பலபழிகள் வந்து சேரும். பழியினால் பிறவிகள் தொடரும். எனவே தேவைகளை முடிந்தவரை சுருக்கி கொண்டு வந்த வேலையை முடிக்க முயல வேண்டும். இவ்வுலகிற்கு நாம் வந்தது முறையாக வாழ்ந்து பாவ பணிகளை அளித்து, தன்னை அறிந்து,அறிவில் முழுமை அடைந்து, ஆசைகளை ஒழிந்த நிறைமனம் பெற்று முக்தியடைவதற்கே ஆகும். நாம் முக்தி பெறத் தடையாக இருக்கும் ஆசைகளை முறைப்படுத்த வேண்டும்.
ஆசைகளை வகைப்படுத்தும் முறை
ஒவ்வொருவருக்கும் முக்கியமான சில ஆசைகள் இருக்கலாம். அவ்வப்போது வந்து போகும் ஆசைகளும் இருக்கலாம். ஆசைகளை ஆராயும் போது வாசலில் தேவை அதனை செயலாக்க வழி, வசதி, அவ்வாசையினால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி ஆராய வேண்டும்.
1.தேவையில்லாத ஆசை என்றால், அமைதியாகச் சிந்திப்பது நல்லது. இந்த ஆசை சரியானதா? என்று சிந்திப்பதுடன் இதை நிறைவு செய்தால் துன்பம் வருமா? என்று எண்ணிப்பார்த்து, இவ்வாசையினால் துன்பம் வரும் என்றால், அவ்வாசையை விட்டு விட வேண்டும். இந்த ஆசை தேவையற்றது, விட்டு விட வேண்டியது என முடிவெடுத்த பின், முன்பு எடுத்த முடிவினால் மீண்டும் அவ்வாசை எழாமல் தடுக்கப்பட வேண்டும். நாளடைவில் தடுக்கப்பட்ட இந்த ஆசை மறையவும் கூடும்.
2.தேவையான ஆசையாக இருந்தால் அதனை நிறைவேற்ற வழி இல்லை என்றால் அதனையும் நீக்கி விட வேண்டும்.
3.தேவையும் வசதியும் ஒருங்கே இருக்கும் நிலையில் பின் விளைவுகள் தீமை தருமானால் அதனையும் நீக்கிவிட வேண்டும். நிறைவு செய்யாமலும், மாற்றவும் முடியாத நிலையில் ஆசைகளை மனதில் சுமந்து கொண்டிருந்தால் மன அமைதி கெடும். உடலில் வயிற்றுப்புண் முதலிய நோய்கள் உண்டாகும்.எடுத்த காரியங்களில் எல்லாம் செயல்வேகம் குன்றி திறமை மழுங்கி தோல்வியே ஏற்படும்.
ஆசை, திட்டமிடல், செயல் இம்மூன்றும் சரியாக இருந்தால் வெற்றி மேல் வெற்றி வந்து கொண்டே இருக்கும் இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். (குறள்369)
வெற்றிக்கு வழி
முதலில் எதை எடுத்துக்கொண்டு செயல்படுத்துவது என ஆராய்ந்து நிதானமாக திட்டம் தீட்ட வேண்டும். ஒரு சமயத்தில் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம் கிட்டும். தேவையற்ற ஆசைகள் பலவற்றை மனதில் தேக்கி வைத்து துன்பப்படுவதை விட, அவைகளை ஒதுக்கித் தள்ளும்போது மனம் தெளிவடைந்து, குறுகிய நிலை ஒழிந்து, விரிந்த நிலை வந்து சேரும். பொறுமை, நற்குணங்கள் மிகுந்து காணப்படும். எடுத்த காரியம் நிச்சயம் வெற்றி தரும். ஆசையை அடக்கினால் அது பதுங்கிக்கொண்டு வேறுவேறு துன்பங்களாக உருவாகும். ஆராய்ந்தால் அது பிறந்த இடத்திலேயே ஒடுங்கி விடும். நிறைவான மனம் இருக்குமானால் எல்லா நலன்களையும் பெறுவது எளிதாகும். இந்நிலையில் வாழ்வின் நோக்கமே நிறைவேறிய ஒர் உணர்வும் ஏற்படும்.
ஆசையின் ஆறு குணங்கள்
ஆசையின் மறுமலர்ச்சியே ஆறு குணங்கள்
1.முறைப்படுத்தப்படாத ஆசையே பேராசை. (காமம்)
2.ஆசைத்தடைப்படும்போது அத்தடையை நீக்கி எழும் ஆர்வமே சினம்(குரோதம்)
3.ஆசை உள்ள பொருட்களைப் பிறர் கவராமல் பாதுகாத்துக் கொள்ளும் செயலே கடும் பற்று (லோபம்)
4.ஆசை பிறபாலை நாடி எழுந்தால் அது முறையற்ற பால் கவர்ச்சி (மோகம்)
5.ஆசையானது பொருள், செல்வாக்கு, புகழ் இவற்றின் மீது அழுத்தி அதைக் கொண்டு மக்களிடையே உயர்வு, தாழ்வு கருதும் மனப்பான்மை (மதம்)
6.சினத்தை முடிக்க வலுவையும், வாய்ப்பையும் நாடி நிற்கும் ஆசைதான் வஞ்சம்(மாச்சரியம்)
ஆசையின் இயல்பறிந்து அதை நலம் விளைவிக்கும் வகையில் பயன்படுத்தி ஒழுங்குபடுத்துவிட்டால் அதை ஞானமாக வளரும்.
மூன்று விஷயம் தான்
1.தேவையா? ஆசையா? என்று பிரித்து பார்: பசிக்கு சாப்பிடுவது தேவை. ருசிக்காக மட்டும் அதிகமாக சாப்பிடுவது ஆசை. தேவையை நிறைவேற்று, ஆசையை கட்டுப்படுத்து.
2.ஆசை உன்னை ஆள்கிறதா, நீ ஆசையை ஆள்கிறாயா? கைபேசி வாங்க வேண்டும் என்பது ஆசை. அதற்காக கடன் வாங்கி தூக்கம் இழப்பது, ஆசை உன்னை ஆள்கிறது என்று அர்த்தம். ஆசை உன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
3.ஒரு ஆசை நிறைவேறினால் அடுத்த ஆசை வரும்: இதுதான் மனதின் இயல்பு. 10,000 ரூபாய் போன் வாங்கினால், அடுத்த மாதம் 20,000 ரூபாய் போன் மீது ஆசை வரும். இந்த சங்கிலியை புரிந்து கொண்டால், மனம் அமைதியாகும்.
முடிவுரை
ஆசைகளை சீர்படுத்துதல் – அடக்குவது அல்ல, அறிவது ஆசை இல்லாத மனிதன் இல்லை. ஆசை இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை.
புத்தர் ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார். ஆனால் திருவள்ளுவர் அதை கொஞ்சம் சீர்படுத்தி சொன்னார். “வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை” ஆசையை முழுவதுமாக அழிக்க முடியாது, அழிக்கவும் கூடாது. அதை சீர்படுத்த வேண்டும். ஆசைகளை சீர்படுத்துதல் என்பது துறவி ஆவது அல்ல. அது ஒரு தெளிவான வாழ்க்கை. எது நமக்கு நிம்மதியை தருமோ அதை நோக்கி ஆசைப்படுவதும், எது நிம்மதியை கெடுக்குமோ அதை விட்டுவிடுவதும் தான் உண்மையான சீர்படுத்துதல். ஆசையை குறைத்தால் வாழ்க்கை குறையாது, வாழ்க்கை இன்னும் அழகாகும்.
சான்றுக் குறிப்புகள்
1.சங்க இலக்கியங்கள் மற்றும் அறநூல்கள்: – திருக்குறள் – அறத்துப்பால், துறவறவியல் (குறிப்பாக அதிகாரம்: அவா அறுத்தல் – குறள் 361-370) – நாலடியார் – பாடல் 101, “ஆசை அறுமின்…” – ஆசையை அறுப்பதே அறம் என்று கூறும் பாடல் – புறநானூறு – பாடல் 192, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – பற்றற்ற பெரும் நோக்கு.
2.தத்துவ நூல்கள்:- பகவத் கீதை – அத்தியாயம் 2, சுலோகம் 62-63 (தியாயதோ விஷயான்…ஆசையிலிருந்து கோபம், கோபத்திலிருந்து அழிவு பிறக்கிறது) – திருமந்திரம் – திருமூலர், ஆசை குறித்த பாடல்கள் – புத்தரின் நான்கு உன்னத உண்மைகள் – “தன்ஹா” (திருஷ்ணா / ஆசை) தான் துக்கத்தின் காரணம்.
3.நவீன உளவியல் (Psychology) நூல்கள்: – Viktor Frankl – _Man’s Search for Meaning_ – ஆசைகளுக்கு அர்த்தம் கற்பித்தல் – Daniel Kahneman – _Thinking, Fast and Slow_ – ஆசை எப்படி மூளையை ஏமாற்றுகிறது (Hedonic Treadmill) – Mihaly Csikszentmihalyi -_Flow ஆசையை கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்துதல்
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
இரா.சரோஜினி
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத் துறை
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி தன்னாட்சி
பெரம்பலூர்.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

