Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
Tamil epic literature imparts the four primary goals of life (Aram, Porul, Inbam, and Veedu) while captivating readers through rich poetic imagination and distinct narrative techniques. Among these, ‘Flag Waving’ (Kodiyasaiyuthal) is a prominent literary device employed by epic poets through the technique of poetic fancy (Tharkurippettra Ani) to foreshadow impending events—either as a good omen or a bad omen. This research paper presents a comparative analysis of the ‘flag waving’ technique across four major Tamil epics: Villi Bharatham, Silappadikaram, Kamba Ramayanam, and Thembavani. In Villi Bharatham (Duryodhana entering Dwaraka), Silappadikaram (Kovalan and Kannagi entering Madurai), and Thembavani (Joseph, Mary, and Infant Jesus entering Jerusalem), the waving flags function as a bad omen, symbolically warning the characters not to enter the city to avoid tragic consequences. Conversely, in Kamba Ramayanam (Rama entering Mithila), the flags wave welcomingly as a good omen, depicting the joy of righteousness itself acting as a messenger. A similar welcoming motif is also utilized in Thembavani to honor the arrival of Lord Jesus. This paper highlights how Veeramamunivar adopted this classic convention from Ilango Adigal and Kambar, demonstrating the mastery of Tamil poets in enhancing epic narrative aesthetic and emotional depth through symbolic flag imagery.
Keywords
Flag Waving, Epic Literary Technique, Poetic Fancy/Personification, Omens and Foreshadowing, Comparative Study, Silappadikaram, Kamba Ramayanam, Villi Bharatham
“தமிழ் இலக்கியங்களில் கொடியசைதல்”
ஆய்வுச் சுருக்கம்
தமிழ் இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் நல்கி, பல்வேறு உத்திமுறைகளாலும் கற்பனை நயங்களாலும் படிப்போரின் உள்ளத்தில் நிலைத்து நிற்கின்றன. அவற்றுள், காப்பியக் கதைப்போக்கில் அடுத்து நிகழவிருக்கும் நன்மைகளையோ அல்லது தீமைகளையோ முன்கூட்டியே உணர்த்தும் கருவியாகக் ‘கொடியசைதல்’ என்னும் நிகழ்வு படைப்பாளர்களால் தற்குறிப்பேற்ற அணியின் வாயிலாகக் கையாளப்பட்டுள்ளது. இக்கட்டுரை வில்லிபாரதம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தேம்பாவணி ஆகிய காப்பியங்களில் இடம்பெறும் கொடியசைதல் நிகழ்வுகளை ஒப்புநோக்கி ஆராய்கிறது.
தீநிமித்தத்தின் அடிப்படையில், வரவிருக்கும் துன்பங்களைத் தவிர்க்குமாறு கதைமாந்தர்களை ‘வராதே, திரும்பிப் போ’ எனத் தடுத்து நிறுத்துவதாக வில்லிபாரதம் (துரியோதனன் – துவாரகை), சிலப்பதிகாரம் (கோவலன், கண்ணகி – மதுரை), தேம்பாவணி (சூசை, மரியாள், இயேசு – எருசலேம்) ஆகியவற்றில் கொடியசைதல் அமைப்பைக் காணமுடிகிறது. மாறாக, நன்னிமித்தத்தின் அடிப்படையில், ‘விரைவில் வருக’ என வரவேற்பதாகவும், அறக்கடவுளே தூது செல்ல மகிழ்ச்சியால் ஆடுவதாகவும் கம்பராமாயணத்திலும் (இராமன் – மிதிலை), ஏசுபிரானின் வருகையைக் கொண்டாடிப் போற்றுவதாகத் தேம்பாவணியிலும் சித்திரிக்கப்பட்டுள்ளது. முன்னோர் வழியைப் பின்பற்றித் தேம்பாவணியில் வீரமாமுனிவர் இவ்வுத்தியைக் கையாண்டுள்ள திறத்தையும், கொடியசைதல் வாயிலாகக் காப்பியச் சுவையை மிகுவிக்கும் காப்பியக் கவிஞர்களின் உத்திமுறையையும் இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
திறவுச்சொற்கள்
கொடியசைதல், காப்பிய உத்தி, தற்குறிப்பேற்ற அணி, நன்னிமித்தம், தீநிமித்தம் ஒப்பாய்வு, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், வில்லிபாரதம், தேம்பாவணி
முன்னுரை
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தி, தன்னிகரில்லாத தலைவனைப் படைத்துக்காட்டி, இயற்கை வருணனைகளால் சுவையூட்டி, கற்பனை நயத்தாலும் உத்திமுறையாலும் படிப்போரின் உள்ளங்களில் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை புராணங்களும் காப்பியங்களும் ஆகும். காப்பிய ஆசிரியர்கள் கதைப்போக்கை சுவாரசியமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் நகர்த்திச் செல்ல பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர். அவற்றுள், இயற்கையின் நிகழ்வுகளின் மீது ஆசிரியர்கள் தம் கருத்தை ஏற்றிப் பாடும் தற்குறிப்பேற்ற அணியின் வாயிலாகவும், கதையின் அடுத்தகட்ட நகர்வை அல்லது வரவிருக்கும் நன்மை/தீமைகளை முன்கூட்டியே உணர்த்தும் நிமித்தக் குறியீடாகவும் ‘கொடியசைதல்’ உத்திமுறை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வில்லிபாரதம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தேம்பாவணி ஆகிய பெருங்காப்பியங்களில் மதில்களிலும் மாடமாளிகைகளிலும் காற்றில் இயல்பாக அசையும் கொடிகள், கதைமாந்தர்களின் வருகையைக் கண்டு எவ்வாறு வினையாற்றுகின்றன என்பதை ஒப்பிட்டு நோக்குவதும், படைப்பாளர்களின் இக்கற்பனை நயத்தினையும் உத்திமுறையையும் திறனாய்வு செய்வதையுமே இக்கட்டுரை முதன்மை நோக்காய்க் கொண்டு அமைகின்றது.
வில்லிபாரதத்தில் கொடியசைதல்
வில்லிபாரதத்தில் வாசுதேவனைப் படைத்துணைக்கு அழைத்த சருக்கத்தில், துரியோதனன் கண்ணபிரானைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ள எண்ணி அவனுடைய நகரான துவாரகாபதிக்குச் சென்றான். பெரிய மாடமாளிகைகளும், இரத்தினங்கள் பதிக்கப்பெற்றுப் பலவகைப் பொறிகளைக் கொண்ட மதில்களும் மிக அழகாகக் காட்சியளித்தன.
“ஈண்டுநீ வரினு மெங்க ளெழிலுடை யெழிலி வண்ணன்
பாண்டவர் தங்கட் கல்லாற் படைத்துணையாக மாட்டான்
மீண்டுபோ கென்றென்றந்த வியன்மதிற் குடுமி தோறும்
காண்டகு பதாகை யாடை கைகளாற்றடுப்ப போன்ற” [1]
வில்லிபாரதம் (வாசுதேவனைப் படைத்துணை அழைத்த சருக்கம், பா 6)
என்ற பாடலில் துவாரகாபதியின் மதில்களில் பறந்து கொண்டிருந்த பலவண்ணக் கொடிகள் துரியோதனனைப் பார்த்து, “நீ இங்கு வந்து நேரில் கண்டு வேண்டினாலும், எங்கள் கார்முகில் வண்ணனான கண்ணன் பாண்டவர்களுக்கன்றி உனக்குப் படைத்துணையாக மாட்டான். ஆகையால் திரும்பிச் சென்றுவிடு” என்று கூறுவன போன்று காற்றில் அசைந்தாடுவதாக வில்லிபுத்தூராழ்வார் குறிப்பிடுகின்றார். பின்னர் நிகழப்போகும் கதை நிகழ்வினை முன்னரே அறிவிப்பதாகப் படைப்பாளிகள் கையாளுகின்ற உத்திமுறையில் கொடியசைதல் கருவியாக்கப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கொடியசைதல்
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மதுரைக்காண்டம் புறஞ்சேரி இறுத்தகாதையில் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளுடன் மதுரை நோக்கிப் பயணம் மேற்கொண்டதைக் காட்டுகின்றார். கதிரவனையும் நிலவினையும் மாறிமாறிக் கண்டு வழிப்பயணம் நீண்டு வளமிகு பெருநதியாகிய வையை ஆற்றைக் கடந்தனர். அந்த வையையாகிய புனிதநதி கண்ணகிக்கு நேரப்போகும் துன்பத்தை முன்கூட்டி அறிந்தது போல வண்ணமலர்களைத் தன் மேலாடையாகப் போர்த்துக் கொண்டு, தன் கண்களில் வழியும் துன்பக் கண்ணீரை உள்ளுக்குள் மறைத்தபடி ஓடியதாகக் குறிப்பிடுகின்றார். மூவரும் தேன்நிறைந்த சோலைகள் சூழ்ந்த வையையின் தென்கரையை அடைந்து, மதுரை நகரை வலமாகக் கொண்டு செல்லுதல் சிறப்புடையதாகும் என்று எண்ணியவராக, அகழியையும் கட்டுவேலியையும் கடந்து வலமாகச் சென்று மதுரை நகரின் எல்லையை அடைந்தனர்.
“கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்து உறுதுயரம்
ஐயம் இன்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி
கண்ணீர் கொண்டு கால்உற நடுங்கப்
போர்உழந்து எடுத்த ஆர்எயில் நெடுங்கொடி
வாரல் என்பன போல மறித்துக் கைகாட்ட” [2]
சிலப்பதிகாரம் (மதுரைக் காண்டம், புறஞ்சேரி இறுத்தகாதை, வரிகள் 184-190)
என்ற வரிகளில் கரியநீண்ட குவளைமலரும், அல்லிமலரும், தாமரை மலரும் கோவல-கண்ணகியர் ஒருவரையொருவர் பிரிந்து அடையப் போகும் துன்பத்தை முன்கூட்டியே அறிந்தன போல, வண்டுகள் வாடி வருந்தி சோகப் பண்பாட, கண்ணீர் சிந்தி கால் நடுங்க நின்றன. மதுரைமாநகரின் நெடிய மதில்சுவரில் பறக்கின்ற நீண்ட கொடிகள் கோவல-கண்ணகியரைப் பார்த்து, ‘இங்கே வராதீர்கள்’ என்று தம் கையை நீட்டித் தடுப்பது போல அசைந்தாடின. இப்பாடலுக்கு உரை வழங்கிய உ.வே. சாமிநாதையர், “ஆரெயில் நெடுங்கொடி மேல்காற்றடிக்க அசைகின்றவை, வாராதேயென்பனபோல மறித்துக் கைகாட்ட கோவலனை இங்குவாராதே போவென்று கைகாட்டினாற் போன்றன” என்று விளக்கம் அளிக்கின்றார்.
கதைப்போக்கில் பின்னர் நிகழப்போகும் தீயநிகழ்வுகளை முன்னரே அறிந்தவை போல மதிற்கொடிகள் தம்முடைய கைகளை நீட்டி ‘இங்கு வரவேண்டாம் அப்படியே திரும்பிப் போய்விடுங்கள்’ என்று அறிவுறுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது ஆசிரியரின் காப்பிய உத்திமுறையாகக் கொள்வதற்கு இடமுண்டு. தீயகாரியங்களைத் தடுத்து நிறுத்துவதிலும், அநீதியைத் தடுத்து நிறுத்துவதிலும் உள்ளம் கொள்கின்ற ஆர்வ வெளிப்பாட்டினை ஆசிரியர் இவ்வுத்திமுறையின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள தன்மை அறியத்தக்கது.
கம்பராமாயணத்தில் கொடியசைதல்
பாலகாண்டத்தில் இராமனும் இலக்குவனும் விசுவாமித்திரனோடு மிதிலை நகருக்குச் செல்லும்போது இராமனது திருவடித் துகள்பட்டுத் தனது சாபம் நீங்கி அகலிகை பெண் வடிவத்தை அடைகின்றாள். அதன்பின்னர் மூவரும் மிதிலையின் புறமதிலை அடைகின்றார்கள். அழகிய நவமணிகள் இழைத்த மிதிலைநகரின் புறமதிலைக் கண்டதாகக் கம்பர் காட்டுகின்றார்.
“மைஅறு மலரின் நீங்கி, யான் செய்மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று, செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி இந்தக் கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ‘ஒல்லை வா‘ என்று அழைப்பது போன்றது அம்மா” [4]
கம்பராமாயணம் (பாலகாண்டம், மிதிலைக் காட்சிப் படலம், பாடல் 140):
என்ற பாடலில் காவல்மிக்க மிதிலை நகரமானது, குற்றமற்ற தாமரையில் வீற்றிருக்கும் திருமகள், அம்மலரை விட்டு, நான் புரிந்த மிகப் பெரிய தவத்தின் பயனாக என்னிடம் வந்து பிறந்துள்ளாள் என்று கூறிப் பெரிய அழகிய கொடிகளாகிய தன் கைகளை மேலும் கீழுமாக அசைத்துக்காட்டி, தாமரை மலர் போன்ற கண்களைக் கொண்ட இராமபிரானை ‘விரைவில் வந்து சேர்க’ என்று அழைப்பதாகக் கம்பர் காட்சிப்படுத்துகின்றார். மிதிலைநகரின் அருகில் இராமன் சென்றடையும் வேளையில் அந்நகரத்து மேலுள்ள கொடிகள் அசைவது, திருமகள் தன்னிடத்தில் சீதையாகப் பிறந்துள்ளாள் என்பதைக் குறிப்பாகச் சொல்லி, அவளுக்குக் கணவனாவதற்கு ஏற்ற இராமனை விரைவில் வந்து மணம் புரியுமாறு அகொடியசைவுகள் கைகாட்டி அழைப்பதாகக் கொள்ளும்போது இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி பயின்று வந்துள்ளதை அறியலாம். இயல்பாக வீசும் காற்றுக்கு அசைகின்ற கொடிகளின் அசைவின்மேல் கம்பர் தன் கருத்தை ஏற்றிப் பாடியுள்ள கற்பனை நயத்தினை இப்பாடல் உணர்த்துகின்றது.
“நிரம்பிய மாடத்து உம்பர், நிரைமணிக் கொடிகள் எல்லாம்
தரம் பிறர் இன்மை உன்னி, தருமமே தூது செல்ல
வரம்புஇல் பேர் அழகினாளை, மணம் செய்வான் வருகின்றான் என்று
அரம்பையர் விசும்பின் ஆடும், ஆடலின் ஆடக் கண்டார்” [5]
கம்பராமாயணம் (பாலகாண்டம், மிதிலைக் காட்சிப் படலம், பாடல் 481)
என்ற வரிகளில் மாடமாளிகைகளின் மேலுள்ள கொடிகள் அசைவதைக் கம்பர் சுட்டுகையில், அழகிய சீதையைத் திருமணம் செய்து கொள்வதற்கு வேறு எவருக்கும் தகுதி இல்லாமையை எண்ணி, அறக்கடவுளே தூதுபோய்ச் சொல்ல, சிறந்த அழகுடைய சீதையைத் திருமணம் செய்துகொள்ளும்பொருட்டு இராமன் வருகின்றான் என்று மகிழ்வுற்று, தெய்வ மகளிர் விசும்பில் ஆடுகின்ற மகிழ்ச்சி ஆடலைப்போன்று அழகிய கொடிகள் அசைகின்றன என்று காட்டுகின்றார்.
“பகல் கதிர் மறைய வானம், பாற்கடல் கடுப்ப நீண்ட
துகில் கொடி மிதிலை மாடத்து, உம்பரில் துவன்றி நின்ற
முகில் குலம் தடவும் தோறும், நனைவன முகிலின் சூழ்ந்த
அகில்புகை கதுவும்தோறும், புலர்வன ஆடக் கண்டார்” [6]
கம்பராமாயணம் (பாலகாண்டம், மிதிலைக் காட்சிப் படலம், பாடல் 482)
என்ற பாடலில் வீடுகளின் மேல் நாட்டப்பட்டுள்ள கொடிகளின் நெருக்கமும் மிகுதியும், மேகக்கூட்டத்தை அளாவும் உயர்ச்சியும், அகிற்புகையின் மிகுதியும் சுட்டப்பட்டுள்ளது. வெண்ணிறமுடைய துகிற்கொடிகள் மேகங்களால் நனைவதும், அகிற்புகையால் உலர்ந்து பழைய நிலையை அடைவதும் கற்பனை நயத்திற்குச் சான்றாக அமைகின்றது.
தேம்பாவணியில் கொடியசைதல்
வீரமாமுனிவர் படைத்த தேம்பாவணிக் காப்பியத்தில் மகன் நேர்ந்த படலத்தில், இறைமகனைப் பிள்ளையாகப் பெற்றெடுத்த சூசையும் மரியாளும் அத்திருமகனை எருசலேம் திருக்கோவிலுக்குக் கடவுளுக்கு நேர்ந்துகொடுப்பதற்காகச் கொண்டு செல்கின்றனர். எருசலேம் நகரின் மாடமாளிகைகளின் உச்சியில் அழகாக நெருங்கிய கொடிகள் அசைந்தாடிக்கொண்டிருக்கின்றன.
“வில்லுருமிழ் பசும்பொன் மாடங்கள் நெற்றி
விரித்தபூங் கொடிகள் தம் ஈட்டம்
எல்லுமிழ் மூவர் வருவ கண்டு அரசன்,
இயற்றிய வஞ்சனைக்கு அஞ்சி
நில்லுமின் நின்மின் என இடைவிடாது,
நீண்டகை காட்டுவ போன்றே‘ [7] தேம்பாவணி (மகன் நேர்ந்த படலம், பாடல் 4)
என்ற வரிகளில் மதிலின் மேலுள்ள கொடிகள் காற்றில் அங்குமிங்கும் அசைந்தாடுவது, நகருக்குள் நல்லொளி வீசியவண்ணமாக வருகின்ற சூசை, மரியாள், இறைமகன் ஆகிய மூவருக்கும், கொடிய கொடுங்கோல் மன்னன் ஏரோதன் இழைக்கப்போகும் கொடுமைகளை எண்ணி அஞ்சி அவர்களை நோக்கி, ‘அங்கேயே நில்லுங்கள் நில்லுங்கள்’ என்று இடைவிடாமல் கூறித் தன்னுடைய நீண்ட கைகளைக் காட்டி அவர்களைத் தடுப்பது போன்று தோற்றமளித்ததாகக் காட்டுகின்றார்.
“விண்புடை தீண்டி மின்மணிக் கோட்டின்,
மீது ஒளிர் பதாகைநின்று ஆடல்
ஒண்புடைக் கொடிகாள் நில்லுமின் நின்மின்.
உயிர் அடும் துயர் அற வந்த
எண்புடை காக்கும் அருள்புரி நாதன்,
இவன் என அமர்த்திடல் போன்றே” [8]
தேம்பாவணி (மகன் நேர்ந்த படலம், பாடல் 5)
என்ற பாடலின் வாயிலாக, பொன்வாயிலின் உச்சியில் கட்டப்பெற்றுள்ள அசைந்தாடும் கொடியானது, ‘மாட மாளிகைகளில் மிகப் பிரகாசமாக எல்லாப் பக்கங்களிலும் வீசும் எண்ணற்ற கொடிகளே நீங்கள் ஆடாது அசையாது அப்படியே நில்லுங்கள் நில்லுங்கள். நம் நகருக்குள் வருகைதரும் இவன் உங்களுக்கெல்லாம் நேர்ந்த அருந்துயரங்கள் அனைத்தையும் அறவே ஒழித்து, எண்திசை மக்களையும் காத்து அருள்புரியும் ஆண்டவன் ஆவான்” என்று கூறி ஏசுபிரானை வரவேற்பது போன்று கொடியசைவினைக் காட்டுகின்றார்.
கொடியசைதல் : ஒப்பாய்வு
சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயணத்திலும் வீரமாமுனிவருக்கு ஆழமான பயிற்சி இருந்தமையாலும், ‘முன்னோர் மொழி பொருளைப் பொன்னே போற் போற்றும்’ பண்புள்ளத்தாலும் கொடியசைகின்ற அதே காட்சியைத் தேம்பாவணிக் காப்பியத்தில் படம்பிடித்துக் காட்டியுள்ளார் எனலாம்.
முடிவுரை
காப்பிய ஆசிரியர்கள் தம்முடைய குறிப்பினை ஏற்றி வைத்துப் பாடும் முறையில் இவ்வுத்திமுறை அமைந்திருந்தாலும், காப்பிய ஓட்டத்தினைப் பின்னர் நிகழவிருக்கும் நிகழ்வினை முன்னரே சுட்டிக்காட்டும் உத்திமுறையாகக் ‘கொடியசைதல்’ அமைந்துள்ளது. நன்னிமித்தத்தின் அடிப்படையில் நகருக்கு வருகின்ற கதைமாந்தர்களை வரவேற்பதாகக் கம்பர் காட்ட, தீநிமித்தத்தின் அடிப்படையில், நீங்கள் இந்த நகருக்குள் வரவேண்டாம், வந்து துன்பப்படவேண்டாம் திரும்பிப் போய்விடுங்கள் என்று கதைமாந்தர்களைத் திருப்பி அனுப்புவதாக வில்லிபுத்தூராழ்வாரும், இளங்கோவடிகளும், வீரமாமுனிவரும் பதிவு செய்துள்ளனர். கம்பர் காட்டிய இராமபிரானும், வீரமாமுனிவர் காட்டிய ஏசுபிரானும் இப்பூவுலகில் அன்புநெறியைக் காட்டி உயிர்களைக் காத்த உத்தமபுருசர்கள். எனவேதான் அவர்களைக் கொடிகள் வரவேற்பன போன்று அமைத்துள்ள உத்திமுறையால் காப்பியச் சுவையை மிகுவிக்கும் திறமும் குறிப்பிடற்குரியது.
அடிக்குறிப்புகள்
1.வில்லிபுத்தூராழ்வார், வில்லிபாரதம், வாசுதேவனைப் படைத்துணை அழைத்த சருக்கம், பாடல் 6.
2.இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், புறஞ்சேரி இறுத்தகாதை, வரிகள் 184-190.
3.உ.வே. சாமிநாதையர் (உரை.), சிலப்பதிகாரம் மூலமும் உரையும், புறஞ்சேரி இறுத்தகாதை உரைவிளக்கம்.
4.கம்பர், கம்பராமாயணம், பாலகாண்டம், மிதிலைக் காட்சிப் படலம், பாடல் 140.
5.கம்பர், கம்பராமாயணம், பாலகாண்டம், மிதிலைக் காட்சிப் படலம், பாடல் 481.
6.கம்பர், கம்பராமாயணம், பாலகாண்டம், மிதிலைக் காட்சிப் படலம், பாடல் 482.
7.வீரமாமுனிவர், தேம்பாவணி, மகன் நேர்ந்த படலம், பாடல் 4.
8.வீரமாமுனிவர், தேம்பாவணி, மகன் நேர்ந்த படலம், பாடல் 5.
துணைநூல் பட்டியல்
🌻இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் (உ.வே. சாமிநாதையர் உரையுடன்), உ.வே.சா. நூல்நிலையம், சென்னை.
🌻கம்பர், கம்பராமாயணம் (பாலகாண்டம்), விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
🌻வீரமாமுனிவர், தேம்பாவணி, கழக வெளியீடு, சென்னை.
🌻வில்லிபுத்தூராழ்வார், வில்லிபாரதம், வையாபுரிப் பிள்ளை பதிப்பு, சென்னை.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ. ரஞ்சனி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரி
திருச்சிராப்பள்ளி – 620002.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

