Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
Tamil, our mother tongue, is one of the world’s most ancient and living classical languages. Silappathikaram holds the distinct pride of being the first epic written in the Tamil language. Authored by Ilango Adigal, Silappathikaram is composed in the ‘Asiriyappa’ poetic meter. It consists of 3 books (Kaandams) and 30 chapters (Kadhays). It is known by several special titles, such as Puratchi Kaappiyam (Revolutionary Epic), Mutthamizh Kaappiyam (The Epic of Threefold Tamil), and Kudimakkal Kaappiyam (Citizen’s Epic). On the other hand, the Ramayanam composed by Kambar is written in the ‘Viruthappa’ meter. It comprises 6 books (Kaandams), 123 chapters (Padalams), and 10,500 verses. Both of these works were written adhering to the epic traditions and grammatical rules laid down by the grammarian Dandi. To enrich the literary flavor of their epics, both poets have beautifully incorporated various figures of speech—such as Tharkurippetra Ani (intentional pathetic fallacy) and Uvamai Ani (simile)—suited to the specific place, time, and context. Many core ideas expressed in Silappathikaram are also found in Kambaramayanam. Presenting a comparison of how identical messages are expressed across both literatures is known as ‘Ilakkiya Oppumai Kaandal’ (Comparative Literary Analysis). Adhering to this methodology of comparative analysis, this essay will explore the instances where the concepts in Silappathikaram and Kambaramayanam align perfectly with one another.
Key Words:
Silappathikaram, Kamba Ramayanam, Similarities, Ideas, Identifying Literary Parallels
“சிலப்பதிகாரம் -கம்பராமாயணம் இலக்கிய ஒப்புமை காண்டல் (மூன்று)”
ஆய்வுச்சுருக்கம்
உலகின் மிகத் தொன்மையான மற்றும் உயிரோட்டமுள்ள செம்மொழிகளில் ஒன்று நம் தாய் மொழியாம் தமிழ் மொழி. தமிழ் மொழியில் எழுதப்பட்ட முதல் காப்பியம் என்ற பெருமையை உடையது சிலப்பதிகாரம். இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ஆசிரியப்பாவால் ஆனது. 3 காண்டங்களையும், 30 காதைகளையும் கொண்டுள்ளது. புரட்சிக்காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்ற பல சிறப்புப் பெயர்களைக் கொண்டது. கம்பர் இயற்றிய இராமாயணம் விருத்தப்பாவால் ஆனது. 6 காண்டங்களையும், 123 படலங்களையும், 10500 பாடல்களையும் கொண்டுள்ளது. இரு நூல்களுமே தண்டி ஆசிரியர் கூறும் காப்பிய மரபும், நெறியும் கொண்டே எழுதப்பட்டுள்ளன. இரு புலவர்களுமே காப்பியத்திற்குச் சுவையைக் கூட்ட தற்குறிப்பேற்ற அணி, உவமை அணி என பல அணிகளை இடத்திற்கும், காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப இனிதாக அமைத்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் கம்பராமாயணத்திலும் காணப்படுகின்றன. இரு இலக்கியங்களிலும் ஒரே செய்திகள் எவ்வாறு கூறப்பட்டுள்ளன என்று ஒப்புமை கூறுவதை இலக்கிய ஒப்புமைக் காண்டல் என்று கூறுவர்.இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற முறைப்படி சிலப்பதிகாரம், கம்பராமாயணம் கருத்துக்கள் ஒன்று போல் காணப்படும் இடங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
திறவுச்சொற்கள்:
சிலப்பதிகாரம், கம்பராமாயணம், ஒற்றுமைகள், கருத்துக்கள், இலக்கிய ஒப்புமைக் காண்டல்
முன்னுரை
சிலப்பதிகாரத்திற்கும், கம்பராமாயணத்திற்கும் இடையே ஒப்புமை காண்பது, இலக்கியத் திறனாய்வுக்கு ஒரு வழியாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர் தம் நூலில் மூலநூலையே மிஞ்சியிருக்கிறார். சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களைக் கம்பராமாயணத்தில் காணமுடிகிறது.சிலப்பதிகாரம், கம்பராமாயணம் ஆகிய இரு இலக்கியங்களிலும் ஒரே செய்திகள் எவ்வாறு கூறப்பட்டுள்ளன என்று ஒப்புமை கூறப்பட்டுள்ளதை இலக்கிய ஒப்புமை காண்டல் என்பர். சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் எந்தெந்த இடங்களில் எல்லாம் ஒப்புமை பெற்றுள்ளன என்பதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
இரண்டு நூல்களிலும் காணப்படும் இலக்கிய ஒப்புமைகள்
காவிரி, கள், பறவைகள், கூந்தல், தூது, தண்டனைகள், ஊர் எரிதல், விண்மீன்கள் விழுதல், புராணவரலாறு, பொய்ச்சான்று, ஊடல், ஆறுகள், ஊருக்குப் போகும் பாதை குறித்துக் கூறல், ஊரில் வீதிவீதியாக அறிமுகப்படுத்துதல், சிறைவிடுத்தல், அறிவியல் செய்தி, இரு சுடர் காட்சி, பெண்டிர் கற்பும் பெருமழையும், பாலைநிலம், கற்புக்கரசி என்பது உண்மையானால்.
1.காவிரி
சிலப்பதிகாரத்தில் காவிரி ஆறு சோழ மன்னனின் வளமான ஆட்சியையும், நாட்டின் செல்வத்தையும் குறிக்கிறது. காவிரியே சோழன் கங்கையைப் புணர்ந்தாலும் நீ புலவாய் அது கற்பு வாழி. சோழன் குமரியோடு கூடினாலும் நீ புலவாய். அது கற்பு வாழி. புதுப் புனலுடனும், இரைச்சலுடனும் பெரிய ஒலி எழுப்பி நீ செல்வது சோழனுக்கு வளமேயாகும். வாழி காவேரி. பாடல் 160
“திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோ லதுஓச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவது ஒழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி” (கானல்வரி-கட்டுரை 2)
கம்பரும் காவிரி ஆற்றை, கங்கைக்கு ஒப்பானது என்று கருதினார். கங்கை ஆற்றில் பொன்னிறமான கொன்றை மலர்கள் வீழ்ந்து, கங்கை ஆற்றையேப் பொன்னிறமாக்கி விடுகிறதாம். அவற்றினைக் காணும்போது, பொன்னிறமுடைய காவிரியைப் போன்று அது காணப்படுகிறது என்று கம்பர் குறிப்பிடுகிறார். கங்கை, காவிரிஆகாது. ஏனெனில் அதில் கொன்றைமலர்கள் கலக்க வாய்ப்பில்லை. ஆனால் காவிரி, கங்கையாகும். ஏனெனில் இதில் கொன்றை மலரும் இருக்கிறது. புனிதத் தன்மையும் இருக்கிறது.கங்கையின் பெருமையைக் காட்டி, காவிரியின் இயற்கை வளத்தைக் கம்பர் குறிப்பிடுகிறார்.
“கன்னி இளவாழை கனி ஈவ கதிர் வாலின்
செந்நெல் உளதேன் ஒழுகு போதும் உள தெய்வப்
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள, போதா
அன்னம் உள, பொன் இவளொடு அன்பின் விளையாட“
(அகத்தியப்படலம் 173)
2.கள் உண்ட மள்ளர்கள்
சிலப்பதிகாரத்தில் நாற்று நடும் கழனியில் குவளை முதலிய மலர்களைக் களைந்தெறித்து விட்டு மூடி நாற்றைப் பகிர்ந்து நட்டு, தொடிவளைத் தோளிலும், மார்பிலும் சேறு படிந்த கோலத்துடன் அழகுறத் தோன்றி, சிவந்த கயல் மீன் ஒத்த நீண்ட கண்களையும் கொச்சைச் சொற்களையும் உடைய கடைச்சியர் மிகுந்து மயக்கம் தரும் கள்ளை உண்டு தொலைத்ததால் பாடும் புத்தம் புதிய பாட்டொலியும் எங்கும் கேட்கும்.
“செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்
வெங்கள் தொலைச்சிய விருந்தின் பாணியும் ”
(நாடுகாண்காதை 130-131)
கம்பராமாயணத்தில் கள் குடித்திருக்கின்ற மள்ளர்கள் வயல்களில் களைகளாக வளர்ந்திருக்கின்ற கருங்குவளை, தாமரை, செவ்வாம்பல் மலர்கள் உழத்தியரின் கண், கை, வாய், முதலிய உறுப்புகளை ஒத்துள்ளதால் அவற்றைப் பறித்துக் களையாது உலவியிருந்தனர் என்பதை,
“பண்கள் வாய் மிழற்றும் இன் சொற் கடைசியர் பரந்து நீண்ட
கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களையலாற் களையிலாமை
உண் கள்வார் கடை வாய் மள்ளர் களைகிலாது உலாவி நிற்பர்”
(நாட்டுப்படலம்.42)
என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது. கள்ளுண்ட மயக்கத்தால் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளைச் சரியாகச் செய்ய இயலாதநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
3.பறவைகள்
சிலப்பதிகாரத்திலும், கம்பராமாயணத்திலும் பறவைகள் குறித்து கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் சம்பங்கோழி, நாரை, அன்னம், கொக்கு, கானாங்கோழி, நீர்க்காக்கை ,உள்ளான், குளுவை, கணந்துட்புள், பெருநாரை என்று பல வகையான பறவைகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.
“பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புள் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும்“ (நாடுகாண்காதை 113-115)
கம்பராமாயணத்தில் சிச்சிலிப்பறவை, கின்னரமிதுனங்கள், சக்கரவாகம், கரண்டம், அன்றில் பறவை, பாறு, அசுணம், ஆண்டலை, தூக்கணாங்குருவி, சிவல் பறவை, புறா, அன்னப்பறவை, மயில், நீர்க்காகங்கள், மகன்றில், கொக்கு, குருவி, அண்டங்காக்கை, பருந்து, நாரை, குயில், கருடன், கோழிகள், உன்னம், குணாலங்கள், சேவல், ஊறுவல்லூறு, கிளி, நாகணவாய்ப்புள், காக்கை, உள்ளான், கிலுக்கங்கள்,கௌதாரிகள், குருகு, வெண்குருகு, கருந்தகையகுருகு, பெருவலிக்குருகு, பெருநாரை, குரண்டம் அல்லது கொக்கு,புள்ளிநாரை, கொடிறுதாங்கியவாய், குருகுநாரை, உளில, கின்னரம், நீர்கோழி, ஓதிமம், சென்னம், எருவை, கங்கம், கூகை, குன்றில் வீழ்குரீஇ, தினைக்குருவி, புள்ளிஅம்புறவு, மாடப்புறா, ஊர்க்குருவி, சிவல், குறும்பூள் அல்லது காடை,கோழி, 57 பறவைகள் குறித்துக் கம்பர் தம் இராமாயணத்தில் கூறியுள்ளார்.
4.கூந்தல்
சிலப்பதிகாரத்தில் வழக்குரைகாதையில் உடலில் படிந்த புழுதியும் விரிக்கப்பட்ட கருமை நிற கூந்தலும் கையில் ஒற்றைச் சிலம்பும் கண்ணீரையும், வைகையையும் ஆண்ட மன்னன் கண்டவுடன் தன் ஆற்றல் இழந்தான். கோவலன் இறந்தபின் மாதவியும், மணிமேகலையும் திறவு கொண்டபோது தங்கள் கூந்தலைக் களைந்தனர். கம்பராமாயணத்தில் கைகேயி பரதன் நாடாளவும், இராமன் காடாளவும் தசரதனிடம் வரம் கேட்டுப் பெற எண்ணிய போது, தன்னுடைய கூந்தலில் இருந்த பூக்களை இழுத்து அறுத்து சினத்துடன் எரிந்தாள். தன் கூந்தலைத் தரையில் புரள பரப்பினாள். இலங்கையில் அனுமன் மண்டோதரியைக் கண்ட போது மலர் சூடிய கருங் கூந்தல் அவிழ்ந்து வாய்க்குழறிச் சில வார்த்தைகளைத் தூக்கத்தில் சொல்வதால் இவள் கணவன் விரைவில் இறப்பான் என்றும், இலங்கை அழியும் என்றும் அனுமன் எண்ணினான் என்பதை ஊர் தேடுபடலம் 296 கூறுகிறது.
5.தூது
சிலப்பதிகாரத்தில் மாதவியின் தோழி வயந்தமாலையும், கோசிக மாணியும் கோவலனிடம் தூது சென்றார்கள். மாதவி வரைந்த மடலை எடுத்துக்கொண்டு சென்று வழியிடையே கோவலனிடம் கொடுத்து பேசினார்கள். வயந்தமாலை கொண்டு வந்த மடலை கோவலன் வாங்கவே இல்லை. அதனால் படிக்கவும் இல்லை. (வேனிற்காதை 75) கோசிகாமாணி கொண்டுவந்த மடலை கோவலன் வாங்கிப் படித்தான். காதலியின் மேல் தான் கொண்ட தவறான கருத்தையும் மாற்றிக் கொண்டான். அந்தக் கடிதத்தைத் தன் பெற்றோரிடம் காண்பிக்கும்படி கூறினான்.
“இடுக்கண் களைதற்கு ஈண்டெனப் போக்கி
மாசில் கற்பின் மனைவியோடு இருந்த
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
ஆடியல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரில் பாங்குறச்சேர்ந்து ” (புறஞ்சேரி இறுத்த காதை 101–105)
தூது குறித்து கம்பராமாயணத்திலும் பேசப்படுகிறது அனுமன் தூது அகத்தூதாகவும், அங்கதன் தூது புறத்தூதாகவும் கொள்ளப்படுகிறது. இராமன், இராவணனிடம் அங்கதனைத் தூதாக அனுப்பினான். சீதையை விடுதலை செய் இல்லையெனில் இராமனுடன் போர்புரிந்து இறந்துபடு என்று இராமன் சொல்லி அனுப்பினான். அங்கதனும் சென்று கூறினான். முன்பு மிக்க வல்லமையுடன் போர் செய்த நீ, மறைந்து புகுந்து கொண்டு,பகைவர் வந்து போருக்கு அழைக்கவும்,உன் ஊருக்குள்ளே அடங்கிக் கிடக்கிறாய் என்றால், உனக்கு இதனால் இகழ்ச்சி உண்டாகும் என்றும்,கூறியதை,
“போரில் பட்டு வீழப் பொருத நீ்ஒளித்துப் புக்கு உன்
ஊரிலே பட்டாய் என்றால் பழி என வுளையச் சொன்னான்”
(அங்கதன் தூதுப்படலம் 952)
அறியமுடிகிறது.
6.தண்டனை
சிலப்பதிகாரத்தில் திருடிய குற்றத்திற்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. அடுத்த வீட்டின் கதவைத் தட்டிய குற்றத்திற்காக பாண்டிய மன்னன் தன் கையைத் தானே வெட்டிக் கொண்டார். சதுக்க பூதம் பொய் சொல்பவர்களையும், புறம் கூறுவரையும், பிறர் பொருளைக் கவர்பவர்களையும், நன்னெறி தவறியவர்களையும், தன் கையில் உள்ள பாசத்தால் பிடித்துக் கொள்ளும் தவம் மறைந்து ஒழுகும் தன்மை உடையது. சிறையில் அடைத்தல், அவமானப்படுத்துதல், மரண தண்டனை அளித்தல், கண்ணைக் குத்துதல், அம்பிட்டுக் கொலை செய்தல், தீயில் தள்ளுதல், பாம்பினை ஏவிக் கொத்தச் செய்தல், யானையின் காலால் இடறச் செய்தல், கடல் நீரிலே தள்ளிவிட செய்தல், மார்பைப் பிளத்தல், புல்லை வாயில் கௌவச் செய்தல் என்பன போன்ற பல தண்டனைகள் கம்பர் காலத்தில் நடைமுறையில் இருந்தது என்பதை கம்பராமாயணத்தின் வழி அறிய முடிகிறது.
நாக்கை அறுத்தல்
கூனியின் பேச்சைக் கேட்டு, அதை ஏற்க முடியாமல் வெகுண்டு எழுந்த கைகேயி, கூனியின் நாக்கை அறுத்து விடுவேன் என்று அச்சுறுத்துகிறாள்.
” போதி என் எதிர்நின்று நின் புன்பொறி நாவைச்
சேதியாது இது பொறுத்தனன் புறம் சிலர் அறிவின்”
(மந்தரைச் சூழ்ச்சிப்படலம்160)
தவறு செய்தால் நாக்கை அறுக்கும் தண்டனைப் பின்பற்றப்பட்டதை அறியமுடிகிறது. சூர்ப்பணகை, இராவணனின் கோபத்தை இராமனிடம் சுட்டிக்காட்டினாள்.
“ஆக்கு அரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்றாரை
நாக்கு அரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை”
(சூர்ப்பணகைப்படலம் 341)
சூர்ப்பணகையின் மூக்கு அரிபட்ட செய்தியைத் தன்னிடம் சொல்ல வந்தவனின் நாக்கை அறுத்து விடுவானாம் இராவணன். இதைப் பெருமையாகவே சூர்ப்பணகை சொல்கிறாள். தவறு செய்தவர்களுக்கு நாக்கை அறுக்கும் தண்டனை தரப்பட்டது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.
7.ஊர் எரிதல்
சிலப்பதிகாரத்தில் கோவலன் தவறு செய்யாமல் கொலை செய்யப்பட்டதால் தன் கணவன் தவறிழைக்கவில்லை என்பதை நிரூபித்த கண்ணகி மதுரையை எரித்து தீக்கிரையாக்கினாள். நகர மக்களிடம், தவமுடையோரிடம், தேவர்களிடமும், ஆடவர் மகளிரிடமும் கேளுங்கள், நான் விரும்பி போற்றிய என் கணவனைக் கொலை செய்த மன்னனையும், அவன் ஆட்சி செய்த இந்த நகரத்தையும் சீறினேன். ஆதலால் நான் குற்றம் ஏதும் செய்யேன் என்று கூறி, விளங்கிய அணியினையுடைய கண்ணகி மதுரை நகரை மூன்று முறை வலம் வந்து, தேன் நிறைந்த மணமுடைய தெருவில் நின்று தனது இடப்பக்கத்தில் கொங்கையை வலக்கையினால் திருகி எடுத்து சுழற்றி விட்டெறிந்தாள். அவ்வாறு அவள் எறிந்த போது தான் அக்னி தேவன் கண்ணகி முன்னர் வந்து தோன்றினான்.
“யானவர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோ நகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
நீல நிறத்துத் திரி செக்கர் வார்சடை” (வஞ்சின மாலை 43-48)
கம்பராமாயணத்தில் இலங்கையை ஏரியுண்ணுதல் கருத்த உருவத்தினரான அரக்கர் எங்கும் நெய்யைச் சொரிந்து செய்யும் வேள்விகளைச் செய்ய விடாமல் நீக்கிவிட அதனால் தன்னிடத்தேத் தோன்றிய மிகுந்த பசியை உடைய அக்கினித்தேவன் அனுமானது வாலை அன்புடன் பற்றிக்கொண்டு, அழிக்கும் கடவுளான சிவன் ஏவி உண்ணச்செய்ய, உலகங்கள் அனைத்தையும் அவியைப் போல உண்ணும் ஊழியின் இறுதி காலத்துத் தீயைப் போல இலங்கை நகர முழுவதையும் விரைவாக உண்டு அழித்தான்.
” நீல் நிற நிருதர் யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலைப்பற்றி
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அவியின் உண்ணும்
காலமே என்ன மன்னோ கனலியும் கடிதின் உண்டாம்”
(பிணி வீட்டு படலம் 1182)
8.விண்மீன்கள் விழுவது போல
சிலப்பதிகாரத்தில் வழக்குரைகாதையில் பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவி ஒரு தீய கனவு கண்டாள். அதைப் பற்றி தன் தோழியிடமும் கூறுகிறாள். இரவில் ஞாயிற்றை இருள் விழுங்க, இந்திரவில் இரவில் தோன்ற, பகலில் விண்மீன்கள் விழுந்ததாகக் கூறினாள்.
“கதிரை இருள் விழுங்கக் காண்பென் காண் எல்லா
விடுங் கொடி வில்லிர வெம் பகல் வீழும்
கடுங் கதிர் மீன் இவை காண்பென் காண் எல்லா”
(வழக்குரைக்காதை 5-7)
கம்பராமாயணத்தில் இராமனுக்கும், விராடனுக்கும் போர் கடுமையாகவே நடைபெற்றது. இராமன் திரிசிகை படை விடுத்தான். அதைத் தடுக்க அதன் மேல் வலிமையுள்ள ஓர் அம்பினை எய்தான். உடனே சூலம் அரக்கர் குலம் இன்றோடு அழிந்தது என்பதற்கான அறிகுறியாகப் பகலிலேயே வானத்திலிருந்து விண்மீன்கள் விழுவது போல இரண்டாகப் பிளந்து, திசைகளுக்கும் அப்பால் வெகு தொலைவில் போய் இரு துண்டங்களானது.
“இற்றது இன்றோடு இவ்வரக்கர் குலம் என்று பகலே
வெற்ற விண்ணினிடை நின்று நெடு மீன் விழுவபோல்
சுற்றுஅமைந்த சுடர் எஃகம் அது இரண்டு துணியா
அற்றகண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே” (விராதன் வதைப் படலம் 27)
9.புராண வரலாற்று உவமை
சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் புராண வரலாற்றுச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. வஞ்சனையால் வந்து நின்ற கன்றினையே குறுந்தடியாகக் கொண்டு அவ்வாறே நின்ற விளவின் கனியை உதிர்த்த கண்ணன், இன்று நம் வழிபாட்டால் இங்கே நமது பசுக் கூட்டத்துள் வருவானாயின் அவன் வாயினால் ஊதும் குழலின் இனிய இசையைக் கேட்போம் தோழி என்று பாடுகிறாள்.
“கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்” (ஆய்ச்சியர்குரவை பாட்டு-1)
கம்பராமாயணத்தில் கண்ணனின் பேரனாகிய அனிருத்தன். வாணன் எனும் அரக்கன். அனிருத்தன், மகளாகிய உழ்சாவைக் காதலிப்பதாக எண்ணி சிறையில் அடைத்தான். அவனை வென்று பேரனை மீட்க கண்ணனும் பலராமனும் கருடன் மேல் ஏறி வந்தார்கள். இருவரையும் சுமந்த கருடன் போல, இராம லக்ஷ்மணனை, விராடன் தோளில் சுமந்தான் என்று கம்பர் கூறுகிறார்.
“முந்து வான் முகடு உற கடிது முட்டி முடுகி
இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே”
(விராடன் வதைப்படலம் 36)
10.பொய்ச் சான்று
சிலம்பில் பொய்ச் சான்று கூறியவரை பூதம் புடைத்து உண்ணும் என்று கூறியுள்ளது. பொய் சொல்லக்கூடாது அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
“பொய்க்கரியாளர் புறங்கூற்றாளர் என்
கைக்கொள் பாசத்துக் கையகப்படுவோர் எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துண்ணும் பூத சதுக்கமும்”
(இந்திரவிழாவூரெடுத்த காதை 131 – 134)
கம்பராமாயணத்தில் பொய்ச் சான்று கூறிய கொடியவன் குலத்தோடு அழிவதுபோல வஞ்சக அரக்கர், இராமன் அம்பால் வேரோடு அழியலாயினர்.
“கைக்களிறு அன்னவன் பகழி கண்டகர்
பொய்க் கரி கூறிய கொடுஞ்சொல் போலவே” (கரன் வதைப்படலம் 483)
11.ஊடல்
காதலனைப் பிரிந்த மாதர்கள், தம் கணவனோடு தாம் ஊடியிருந்த காலத்திலே, இணை நின்ற மூக்கினைச் சிந்தியவராகக் கடைநின்ற குண்டலங்களையும் போக்கிக் கலங்காத அக்கணவரது உள்ளமும் கலங்குமாறு அவரோடு கலந்து கடைக்கண்கள் சிவந்து குறுக்கிட்டுப் பிறழ விளங்கிய அவர்கள், தம்நெடுங் கண்களினின்றும் தனிமைத் துயரத்தால் முத்து முத்தாக நீர்சோரக் கலங்கிப் புலம்பியபடி வருந்தியிருந்தனர்.
“உடைப்பெருங் கொழுநரோடு ஊடற் காலத்து
இடைக்குமிழ் எறிந்து, கடைக்குழை ஓட்டிக்
கலங்கா உள்ளம் கலங்கக் கடை சிவந்து”
(அந்திமாலை சிறப்புச் செய்காதை 67- 69)
கம்பராமாயணத்தில் ஊடல் குறித்துக் கூறப்பட்டுள்ளது.மகளிரும் ஆடவரும் கலவி காலத்தே நிகழ்ந்த ஊடலால் எடுத்து எறிந்த பொன்னாலான ஆபரணங்கள் விழுந்து கிடந்த மாளிகைகளை உடைய அரச வீதி. தலைவன் மீது தலைவி ஊடல் கொண்டு தன் ஆபரணங்களைத் தூக்கி எறிந்தாள்.
12.ஆறுகள்
சிலப்பதிகாரத்தில் காவிரி, வைகை, பேரியாறு, தன் பொருநை, பவ காரணி, இட்டசித்தி, புண்ணிய சரவணன் என்ற பெயரில் பொய்கைகள் இருந்தன என்று கூறுகிறது. கம்பராமாயணத்தில் சரயு ஆறு, கோமதி ஆறு, கௌசிகி ஆறு, சோணையாறு, சேனையாறு, யமுனை ஆறு, கங்கை ஆறு, காவிரி ஆறு, சரசுவதி ஆறு, கோதாவரி ஆறு, பம்பை ஆறு, தாமிரபரணி ஆறு, நர்மதை ஆறு, தென்பெண்ணை ஆறு,சுவணந்தி,சங்கமுக ஆறு என்று பல ஆறுகள் குறித்துக் கூறப்பட்டுள்ளன.
13.ஊருக்குப் போகும் பாதை குறித்துக் கூறல்
சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மூவரும் மாங்காட்டு மறையோனிடம் மதுரை செல்லும் வழி குறித்துக் கேட்டனர். வலப்புற வழியின் இயல்புகள், இடப்புற வழியின் இயல்புகள், இடைவழியின் இயல்புகள், இயல்புகளைக் கூறி மதுரைக்குச் செல்ல மூன்று பாதைகள் உள்ளன என்று கூறினான். கம்பராமாயணத்தில் நாடு விட்ட படலத்தில் சீதையைத் தேடிச் செல்ல இருக்கும் வீரர்களுக்கு சுக்ரீவன் வழி கூறுகிறான். முதலில் விந்திய மலை அடுத்து ஏம கூடமலை வரும். பெண்ணையாறு, பாண்டு மலை, கோதாவரி நதி, சுவர்ண நதி வரும். சந்திரகாந்த மலை, அருந்ததி மலை, மரகத மலை, திருவேங்கட மலை, காவிரி ஆறு, பொதிகை மலை என்று வரும் என்று செல்லுகின்ற பாதை குறித்துக் கூறுகிறார்.
14.ஊரில் வீதிவீதியாக அறிமுகப்படுத்துதல்
சிலப்பதிகாரத்தில் ஊர்காண்காதையில் கோவலன் மதுரையைப் பார்க்கின்றான். முதலில் பொது மகளிர் வாழும் வீதி, செல்வரோடு அரசரும் விரும்பும் வீதி, எண்ணென் கலைஞர் வீதி, அரசரும் விரும்பும் அங்காடி வீதி, நவரத்தின வீதி, பொன்மிகு கடைவீதி, துணிக்கடை வீதி, கூலம் குவித்த கூல வீதிகளைக் கோவலன் மதுரையைக் கண்டு திரும்பியதைக் குறிப்பிடுகின்றன. கம்பராமாயணத்தில் ஊர் தேடுபடலத்தில் பவளமலையில் நின்று அனுமன் இலங்கையைக் காண்கிறான். இலங்கை மாந்தரின் வாழ்வைக் கண்டு வியக்கின்றான். அதில் மதிலின் மாண்பு, கடத்தற்கரிய வாயில், இலங்காதேவியுடன் போர், இலங்கை மூதூரின் சிறப்பைக் கண்டு வியத்தல், கும்பகர்ணனைக் காணுதல், வீடணனைக் காணுதல், இந்திரஜித்தைக் காணுதல், இராவணனுக்குரிய இயக்க மகளிர், உரிமை மகளிர், அரக்க மகளிர், விஞ்சை மகளிர், மண்டோதரி, இராவணன் மனையுள் தீக்குறிக்காணல் என்று கண்ட அனுமன், சீதையைத் தேடி அலைந்தவன் அங்கு ஒரு சோலையைக் கண்டான்.
15.சிறை விடுத்தல்
சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் மாடலமறையான் கூறியபடி வேள்வி செய்வதற்குரிய அந்தணரை அழைத்து வேள்விச் சாந்தி அமைதியாகிய விழாவினைச் செய்யுமாறு அவர்களை ஏவினான். பின் ஆரிய அரசர்களான கனகவிசையரை அருஞ் சிறையினின்றும் விடுத்தான். சிறைச்சாலையைத் திறந்து குற்றவாளிகளை விடுதலை செய்யுங்கள். இனி நம் நாட்டு மக்கள் திறைபொருள் செலுத்த வேண்டாம். பகை நாட்டு வேந்தரும் செலுத்த வேண்டாம் என்று அறிவித்தான்.
“ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் “ (நடுகற்காதை 195)
“சிறையோர் கோட்டம் சீமின் யாங்கணும்
கறைகெழு நல்லூர்க் கறை விடு செய்ம்மென“ (நடுகற் காதை 203)
கம்பராமாயணத்தில் இராமன் பிறந்ததை அறிந்து மகிழ்ந்த தசரதன் வரிவிலக்கு கொடுத்ததோடு நில்லாமல், தன் நாட்டு சிறையில் வாடும் அயல் நாட்டு சிற்றரசர்களையும், மக்களையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டான்.
“படை ஒழிந்திடுக தம்பதிகளே இனி
விடை பெறுக முடி வேந்தர் வேதியர்” (திருஅவதாரப்படலம் 290)
16.அறிவியல் செய்தி
சிலப்பதிகாரத்தில் பொற்கை பாண்டியன் வரலாறு கையைத் துண்டித்தாலும் செயற்கையாக ஒரு கையைப் பொருத்த முடியும் என்ற செய்தியைத் தருகிறது. உடல் உறுப்புகளைத் துண்டித்த போதும் உயிருக்கு ஊறு ஏற்படாது என்ற செய்தியையும் சிலப்பதிகாரம் தருகிறது. கம்பராமாயணத்தில் வீடணன், கும்பகர்ணனிடம், இராமனிடம் சரணடைய கூறினான். அப்போது உடலிலே உண்டான ஒரு கட்டியை அதன் விட நீர் உடலில் பரவாதவாறு அறுத்து அதில் உள்ள அசுத்த ரத்தத்தை வெளியேற்றி, காரணம் பொருந்தி சுட்ட புண்ணை ஆற்றும் வேறொரு மருந்தினால் தான் அடைந்த துன்பத்தை உலகினர் நீக்கிக் கொள்வர் என்று கும்பகர்ணன் கூறினார்.
“உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றிச்
சுடல் உறச்சுட்டு வேறு ஒர் மருந்தினால் துயரம் தீர்வர்”
(கும்பகர்ணன் வதைபடலம் 1358)
இரு இலக்கியங்களிலும் அறிவியல் செய்திகள் கூறப்பட்டுள்ளன.
17.இரு சுடர் காட்சி
இரு சுடர் தோற்றம் என்பது பெருங்காப்பியம் படைப்பதற்குரிய உறுப்பினுள் ஒன்றாகும். சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலைக்களத்தில் இறந்துவிட்டான். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட கண்ணகி கொலைக்களம் சென்று அழுது புலம்புகிறாள். அந்தக் காட்சியைக் கண்டு சகிக்க முடியாத சூரியன் மறைந்தான்.
“கம்பலை மாக்கள் கணவனைத்தாம் காட்டச்
செம்பொன் கொடியனையாள் கண்டாளைத்தான் காணான்”
(ஊர்சூழ்வரி 29-30)
கம்பராமாயணத்தில் திருமாலானவர் இலட்சுமியுடன், பூமிதேவியுடனும் கருடன் மீது அமர்ந்து தோன்றும் காட்சியைக் கரிய மேகங்கள் இருபுறமும் சூரிய சந்திரர் சூழ்ந்து வரத் தோன்றுவதாக பாலகாண்டம் திரு அவதார படலத்தில் காட்டுகின்றார்.
“கருமுகில் தாமரைக் காடு பூத்து நீடு
‘இருசுடர்’ இருபுறத்து ஏந்தி ஏந்தலர்த்
திருவொடும் பொலிய ஓர் செம்பொன் குன்றின் மேல்
வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றினான்”
(திருஅவதாரப்படலம் 192)
பாடலில் இரு சுடர் என்ற சொல்லாட்சியைக் கம்பர் பயன்படுத்துகிறார்.
18.பெண்டிர் கற்பும் பெருமழையும்
பத்தினி பெண்டிர் உள்ள நாட்டில்
“வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது” (15அடைக்கலக்காதை 145 – 147)
என்று கூறுகிறார். கம்பராமாயணத்திலும் பெண்களின் கற்பு மாநகரின் வளத்திற்கான மழை வளம் நல்குதல் என்பது தமிழ்ச் சமுதாய மரபு செய்தியாகக் குறிப்பிடுகின்றார்.
பொற்பின் நின்றன பொலிவு, பொய்யிலா
நிற்பின் நின்றன நீதி மாதரார்
அற்பின் நின்றன அறங்கள் அன்னவர்
கற்பின் நின்றன கால மாறியே ” (நாட்டுப்படலம் 91)
என்று கூறுகிறார்.
19.பாலை நிலம்
சிலப்பதிகாரத்தில் காடுகாண்காதையில் பாலை நிலம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. அரசியலில் அமைச்சரோடு மாறுபாடு கொண்டு அரசன் தன் போக்கில் செயல்பட அதனால் ஆட்சியையே இழந்து அல்லலுறும் நாடு போல, வேனில் எனும் அமைச்சருடன் செவ்விய கதிர்களை உடைய அரசனான ஞாயிறு மாறுபட்டு நிலத்தைச் சுட்டெரிக்க முல்லையும் குறிஞ்சியும் நல்ல இயல்பு கெட்டு தன்னைச் சார்ந்தவரை நடுங்கச் செய்யும் பாலை எனப்படும் கொடும்தன்மையுறும். இத்தகைய வேனில் காலத்தேக் காரிகையுடன் கடும் பயணத்தை மேற்கொண்டீரே என்று கவுந்தியடிகள் கூறுகிறார். வானில் செல்ல ஞாயிறு செம்மை செய்ய தொடங்கிற்று. செம்மையில் வெம்மை செய்ய தொடங்கிற்று. ஆதலால் தீமை நீக்க பாலை வழி இனி வெயிலில் சென்று கடத்தற்கு அரியது என்று உணர்ந்தனர்.
“மீது செல் வெங் கதிர் வெம்மையின் தொடங்கத்
தீதியல் கானம் செலவரிது என்று” (காடுகாண்காதை 203 -204)
கம்பராமாயணத்தில் தாடகை வதைப் படலத்தில் பாலையின் தன்மை குறித்துக் கம்பர் கூறியுள்ளார். சூரிய தேவன் நிலத்திலே சிறிதளவு ஈரமும் இல்லாத படி குடித்து விடுகின்ற தன் வெற்றிக் கொடியை மேலே உயர்த்திக் கொண்டு திரிகின்ற முதுவேனிற் காலமே அன்றி, வேறொரு பருவமும் அங்கே இல்லை. அதனால் எதையும் எரிக்கும் அக்கினி தேவனும் அவ்விடத்தை நினைத்தால் அவனுடைய நெஞ்சம் வெந்து போகும். கண்டால் அவனுடைய கண்களும் வெந்து போகும். அப்பாலை நிலத்தின் வெப்பத்தைச் சொன்னால் சொல்லும் நாக்கு முற்றிலும் வெந்து போகும். முழுவதையும் மூடி பரவிய இருளும் வான் முகடும் வெந்து போகும். பொழுது புலர்ந்தால் சூரியனும் வெந்து போகும் அங்கே தோன்றும் மின்னலும் இடியும் வெந்து போகும் என்று சொன்னால் அங்கு வெந்து போகாதவை வேறு எவையுள்ளன எவையும் இல்லை என்று கூறுகிறார்.
20.கற்புக்கரசி என்பது உண்மையானால் என்று கூறல்
சிலப்பதிகாரத்தில் கண்ணகி நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் என்று கூறி மதுரையை எரித்தாள்.
“பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டேன் அரசோடொழிப்பேன் மதுரையுமென்” (வஞ்சினமாலை 36-37)
சீதை அனுமன்வாலில் தீவைக்கப்பட்டதை அறிந்து உலகம் அனைத்திற்கும் சான்றாக இருப்பவன் நீயே. அனைத்தும் உனக்கே தெரியும். நான் கற்புடைமையினால் தூயவளாக இருந்தால் அனுமனைச் சுடாதே உன்னைத் தொழுது வேண்டுகிறேன் என்று கூறினாள் சீதை.அக்னி தேவன் அனுமனை தீ சுடாதவாறு செய்யும்படி வேண்டிக் கொண்டாள்.
முடிவுரை
சிலப்பதிகாரம், கம்பராமாயணம் ஆகிய இரு நூல்களிலும் காவிரி, கள், பறவைகள், கூந்தல், தூது, தண்டனைகள், ஊர் எரிதல், விண்மீன்கள் விழுதல், புராணவரலாறு, பொய்ச்சான்று, ஊடல், ஆறுகள், ஊருக்குப் போகும் பாதை குறித்துக் கூறல், ஊரில் வீதிவீதியாக அறிமுகப்படுத்துதல், சிறைவிடுத்தல், அறிவியல் செய்தி, இரு சுடர் காட்சி, பெண்டிர் கற்பும் பெருமழையும், பாலைநிலம் கற்புக்கரசி என்பது உண்மையானால் ஆகியவை இந்த இரு நூல்களிலும் கூறப்பட்டுள்ளன என்பதை இலக்கிய ஒப்புமை காண்டல் மூலம் இக்கட்டுரையின் வழி நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8.
வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
2.ஸ்ரீ. சந்திரன். ஜெ.சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், சென்னை, 2012.
3.சிலப்பதிகாரம் கம்பராமாயணம் இலக்கிய ஒப்புமை காண்டல் – 2
Link –https://iniyavaikatral.in/silappathikaram-kamba-ramayanam-identifying-literary-parallels-part-twodr-g-mangaiyarkkarasi/
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர்
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II)
மீனம்பாக்கம், சென்னை 600061.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

