Friday, September 4, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home சிறுகதைகள் குடும்பச்சிறுகதைகள் கண்கள் தாண்டிப் போகாதே!|சிறுகதை|முனைவர் சு லட்சுமி

கண்கள் தாண்டிப் போகாதே!|சிறுகதை|முனைவர் சு லட்சுமி

கண்கள் தாண்டிப் போகாதே! -முனைவர் சு லட்சுமி
       அச்ச்ச்…..சென்று  தும்மினால் அடுத்த வீட்டிற்குக் கேட்கும் மயிலாப்பூரின் ஒண்டுக்குடித்தனம் ஒன்றின் அடுத்தடுத்தக் குடியிருப்பு.  அது ஒரு முன்பகல் நேரம்…  சுமார் பதினோரு மணி இருக்கும்….. அன்று நான் சமையற்கட்டில் இருந்தபோது பக்கத்து மொட்டை மாடியில் நிழலாடியது.. யதேச்சையாகத்தான் நான் அவளைப் பார்த்தேன்.   அப்படி ஒன்றும் அவளை ரொம்ப அழகு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் வெறுத்து ஒதுக்கும் அழகின்மையும் இல்லை… சராசரிப் பெண்களை விடவும் சற்று அதிகமான உயரம்.  அந்த உயரம்தான் அவளை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றியது.  அவள் சற்றே அதிக உயரமாக இருந்தது எனக்குப் பொறாமையைத் தந்தது. நான் 5.2 தான்.  அவள் உயரத்திற்கேற்ற நல்ல உடல்வாகுடன் நெகுநெகுவென்று இருந்தாள்.
          அவளுடைய முன்பக்கத் தலைமுடி அவ்வளவு சிரத்தையாக வாரப்படாமல் இருந்தது… இல்லை.. இல்லை.. இவள் இன்னும் தலை வரவே இல்லை போல இருக்கு.  நல்ல நீளமான தலைமுடி, இடுப்பு வரை  கருகருவென்று நீண்டிருந்தது.  அதைக் கண்ட நான் ஆதங்கப்பட்டதை ஒத்துக் கொள்கிறேன். அவளது நிறத்தைப் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். மாநிறம் என்று சொல்லுவார்களே, அதிலிருந்து சற்றுக் குறைந்த dark complexion colour இல் இருந்தாள். ஆனால் ஒரு கவர்ச்சி இருந்தது.
          கண்கள் உண்மையிலேயே கருவண்டு போல பெரியதாக நீண்டதாக இருந்தது.. ஆனால் ஏதோ ஒன்று கண்களில் குறைந்தது.  நல்ல அழகான சீரான புருவங்கள். வட்டமா நீளமா என்று சொல்ல முடியாத ஒரு தினுசான முகம். ஒருவேளை கொஞ்சம் செல்வம் அதிகமாக இருந்திருந்தால் செழுமையாக வட்டமாக இருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை! சாதாரணமான ஒரு நைலக்ஸ் புடவைதான் கட்டியிருந்தாள்.  அது அவ்வளவு நேர்த்தியாக இருந்தது என்று சொல்ல முடியாது; ஆனால் அப்படி ஒன்றும் மட்டமாக இருந்தது என்றும் சொல்வதற்கில்லை. மொத்தத்தில் பாரதிராஜாவின் ஹீரோயின் போல ஒரு தோற்றம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். 
          ஆனா என்ன….  ஹீரோயினெல்லாம் ஒரு படத்துக்கப்பறம் நல்ல ஷைனிங் ஆயிடுவாங்க… ஆனா பாவம் இவளுக்கு அப்படியெல்லாம் எந்த அதிசயமும் நிகழாது போலிருக்கு.. இங்கு ஒரு விஷயத்தைக் கண்டிப்பா சொல்லணும்… நான்தான் அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தேனே தவிர, அவள் என் இருப்பை உணர்ந்ததாகக்கூடத் தெரியவில்லை.  நான் அவளை பார்வைகளால் அளந்தபடியிருக்க அவள், கொண்டு வந்த துணிமணிகளை உலர்த்துவதுதான் தன் தலையாயக் கடமை என்பது போல எங்கும் தன் பார்வையை எங்கும் திருப்பினாளில்லை… நான் இந்த வீட்டுக்கு குடித்தனம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகிறது. ஆனால் ஒருநாள் கூட நான் இங்கு அவளைப் பார்த்ததில்லை.  இது யாருன்னு பயங்கர குழப்பம் எனக்கு. யார்கிட்டக் கேக்கறதுன்னு ஒரே தயக்கம். 
          இன்னொரு அம்மா இதே மொட்டை மாடிக்குத் துணி காய வைக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவாள்.  ஆனால் அவன் இரவு11.00 மணிக்குத்தான் வருவாள்.  11.00 ங்கறது  12 மணி கூட ஆகுமே தவிர குறையாது…. நா இத மிகைப்படுத்திச் சொல்லல… உண்மையாத்தான் சொல்றேன்.  அலுவலகம் போகிறவள் போல இருக்கு அப்படின்னு முதல்ல நினைச்சேன்.   ஆனா அவளா ஒரு முறை என்கிட்ட பேசினதுல வீட்லதான் இருக்கான்னு புரிஞ்சுகிட்டேன். அவளேதான் எங்கிட்ட வந்து பேசினா. பொதுவா ஒரு நாலஞ்சு வருஷமாவே நானா யார்கிட்டயும் போய்ப் பேசறதே இல்ல.
          ஏன்னு தெரியல….  இப்பல்லாம் யார்கிட்டயும் புதுசா ஒரு சினேக பாவம் வருவதேயில்லை.. சரி கெடக்கட்டும்….. இவ, அதான் இந்த ஹீரோயின் யாருன்னு தெரியலையே? என்று மனம் குழம்பியது. ஆனா எனக்கு என்னவோ அவளப் பார்த்தப்போ, அவ கண்ணுல ஏதோ ஒரு வெறுமை இருந்த மாதிரி இருந்தது…. எதிலும் ஒட்டுதலே இல்லாத – ஒட்டிக் கொள்ளாத – ஒட்டிக்கொள்ள விரும்பாத வறட்டுத்தன்மை இருப்பதைப் போல உணர்ந்தேன்.
          என்னவா இருக்கும்?? மனசுல அதே நினைப்பு…. இன்னைக்குதான் பார்த்தேன்…. எனக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சி? ஏனோ தெரியல எனக்கு அவ மேல ஒரு இனம்புரியாத பரிதாபம் ஏற்பட்டது.. அவள் எப்போ வந்து துணி எடுப்பாள்? என்று அவ்வப்போது என்னையறியாமல் கவனிக்கத் தொடங்கியிருந்தேன். என்னமோ ஒரு சுவாரசியம் அவள் மேல் ஏற்பட்டிருந்தது.
          சில நேரம் இப்படி சில விஷயங்கள் நம்மை ஈர்க்கும்.  அதுபோலத்தான் அவளின் வரவும் எனக்கு இருந்தது. ஒரு மூணு மணி இருக்கும். நான் இப்போ ஹால் சோபாவில் இருந்தபடியே அப்பப்ப பக்கத்து மாடியப் பார்த்துக் கொண்டே இருக்கேன்.
அவள் வருவாளா? தலை வாரி பூ வச்சுண்டு இருப்பாளா? நல்லா தூங்கி கண்ணு பளிச்சென்று உயிர்ப்போடு இருக்குமா? அப்படின்னு ஒரு தவிப்பு எனக்குள்ள… ஆனால் நடந்தது வேற..
          வந்தது ஒரு ஆண். சுமாரான உயரம். ஆண்களுக்குரிய உயரத்திலிருந்து சற்றுக் குறைவு என்று தோன்றுகிறது! நல்ல சிவப்பு நிறம். கையில்லாத பனியன். இடுப்பில் வேட்டி. சற்று மேலே நெற்றியில் சின்ன(ரொம்பச் சின்ன)  வழுக்கை. நெற்றியில் இந்த நேரத்திலும் கலையாத விபூதிப்பட்டை என்று வந்தவன் காயப்போட்ட துணிகளை எடுத்துச் சென்றான். 
          அவளுடையவன் என்று கணிக்க இது ஒன்றே போதுமானதாக இருந்தது. ஏதோ ஒரு ஏமாற்றம் எனக்கு. என்னடா இது ஜோடிப்பொருத்தம் ஒண்ணுமே புரியலையே என்று கொஞ்சம் குழப்பமாயிற்று! யாரிடம் கேட்பது பெண்களுக்கே உரிய அந்த வம்பு என் மனதை ஆக்கிரமித்தது.. அன்றிரவு வழக்கம் போல அந்த 11.00 மணி அம்மா வந்தாள். அவளிடம் நானே வலியப் போய்ப் பேசினேன்.
”என்ன இன்னிக்கு வேலை சீக்கிரமே முடிஞ்சாச்சு போலிருக்கு” என்றேன்.  அவளும் ஆமாம் என்று சிரித்தாள். 
“சாப்பிட்டாச்சா?”  என்றேன்.
“ம்ம்… ஆச்சு” என்றாள். 
“நீங்க…?” என்றாள் என்னிடம். 
“சாப்பிட்டாச்சு” என்றேன்.
          அவள் துணிகளைக் காயப்போடத் தொடங்கினாள். என் கவலை எனக்கு. இந்த நெட்டை அழகியைப் பற்றி எப்படி விசாரிப்பது இவளிடம்! ஒன்றுமே புரியவில்லை….  ஒரு புது யோசனை தோன்றியது.. “ஆமா….. நீங்களும் ஹவுஸ் ஓனரும் தவிர வேற யாராவது வாடகைக்கு இருக்காங்களா?” என்று தொடங்கினேன் மெதுவாக…..
          “ம்ம்… இருக்காங்களே!  ஒரு கணவனும் மனைவியும் மட்டும் இருக்காங்க. ஒரே ஒரு ஹால் கிச்சன் அவ்வளவுதான். அவங்க ரெண்டு பேருதான்” என்று சர்வமும் கூறிக் கொண்டிருந்தாள்.
          “அவங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ்.. குழந்தையில்லை.. அஞ்சு வருஷம் ஆச்சு” என்று பட்டென்று சாதாரணமாக சொல்லிவிட்டுச் சென்று விட்டாள்.  எனக்குத்தான் அதைக் கேட்டவுடன் ஏன்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது..  அது அப்படியே தெரியாமலேயே  இருந்திருக்கலாமோ என்று மனம் குமுறியது. அவளின் வறண்ட கண்கள் நினைவில் வந்து சென்றன. காரணம் விளங்கியது போல் இருந்தது. நிற வேறுபாடு, உயர வேறுபாடு, உடற்கட்டு வேறுபாடு என எல்லாமே நினைவிலாடிற்று. ஏதோ ஒரு கருணை, பச்சாதாபம் தோன்றிற்று அவள் மீது. பாவம் என்று எண்ணிக்கொண்டேன்.
          எப்பொழுதாவது அவள் மாடிக்கு வருகிறாள் துணி உலர்த்த….  நான்தான் இப்போதெல்லாம் அவள் கண்களைப் பார்ப்பதே இல்லை….
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் சு லட்சுமி,
இணைப் பேராசிரியர்,
தமிழ்துறை,
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி,
குரோம்பேட்டை, சென்னை 600044.

கண்கள் தாண்டிப் போகாதே! PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »