Land Based Agriculture in Sangam Literature|Dr.S.Sathishkumar

சங்க இலக்கியத்தில் நிலம்சார் வேளாண்மை
Abstract
       In the world, Life sustaining food, Self respecting dress and Safe place to stay are essential for for human life. These are basic requirments. Among these, food is essential not only for human being but also all living organism. The profession of producing food is called agriculture. Agriculture varies, according to nature of the soil. In this essay, we analyse the agricultural systems of “ofir geographical landscapes of Sangam age”

Key Words:   Agriculture, Food, Dress, Shelter, Organisms.


“சங்க இலக்கியத்தில் நிலம்சார் வேளாண்மை”

ஆய்வுச்சுருக்கம்
      உலகில் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை உயிர்காக்கும் உணவு, மானம் காக்கும் உடை, மற்றும் பாதுகாப்புடன் வாழும் இருப்பிடமாகும். இவை அடிப்படைத் தேவைகள் என விளிக்கப்படுகின்றன. இவற்றுள், முதலாவதாக இடம்பெறும் உணவானது மனிதன் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. இந்த உணவை உற்பத்தி செய்யும் தொழிலே வேளாண்மை எனப்பட்டது. இந்த வேளாண்மை மண்ணின் தன்மைக்கேற்ப மாறுபட்டது. அவ்வகையில் சங்க காலத்தில் ஐவகை நிலங்களிலும் நடைபெற்ற வேளாண் முறைகள் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.  

குறிப்புச்சொற்கள்:  வேளாண்மை, உணவு, உடை, இருப்பிடம், உயிரினங்கள்.

முன்னுரை
        சங்க காலத்து மக்கள், தாம் வாழும் இடத்தில் சூழ்நிலைக்கு ஏற்பத் தமது வேளாண்மையை வகுத்துக்கொண்டனர். நிலத்தின் அடிப்படையிலும் அது சார்ந்து செய்யும் தொழிலின் அடிப்படையிலும் மக்கள் பகுக்கப்பட்டனர். அதற்கேற்ப அவர்களின் வாழ்வு இயற்கை சார்ந்ததாக அமைந்திருந்தது. இதன்மூலம் இடத்திற்கு ஏற்ப தொழில் செய்தால்தான் செய்யும் தொழிலைச் செம்மையாக எந்த இடர்ப்பாடுகளுமின்றிச் செய்யமுடியும்.  இடத்திற்கு ஒவ்வாத பணியை மேற்கொள்வது கடுமையான உழைப்பை ஏற்கும். மேலும் அதில் முழுமையான பயன் கிடைக்காதுஎன்பதையுணர்ந்துபழந்தமிழ் மக்கள் இடத்திற்கு ஏற்ப உழைப்பினை மேற்கொண்டனர். அவ்வகையில் சங்க இலக்கியத்தில்காணலாகும்நிலம்சார் வேளாண்மை பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

ஐவகைத்திணை
       மலைகளும் குன்றுகளும் அவை சார்ந்த நிலங்களும் குறிஞ்சிஎனப்பட்டது. மலைகளை அடுத்து நீர் நில்லாது ஓடும் காட்டுப் பகுதிகளை முல்லைஎன்று குறிப்பிடுவர். நீர் வளப்பம் நிறைந்து விளங்கி பசுமை மாறாமலிருக்கும் வயலும் அவை சார்ந்த பகுதிகளும் மருதம்எனப்பட்டன. ஆறுகள் யாவும் கலந்து நிற்கும் பெருநீர்ப் பகுதியான கடலும்; கடல் சார்ந்த பகுதியையும் நெய்தல்என்றனர். மழையின்மையால் தமது நிலையிலிருந்து மாறும் நிலப்பகுதி பாலைஎனப்பட்டது. இங்கு நீர்வளம் இன்மையால் இதை ஒரு நிலமாகப் பெருமளவில் பண்டைத்தமிழர் குறிப்பிடவில்லை. இதனை,
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”(தொல்.பொருள்.அகத்..5)              
         
        என்ற தொல்காப்பியரின் கூற்றின்வழி அறியலாம். இந்தத் திணைகள் அனைத்தும் கவிஞர்கள் தாம் வாழ்ந்த இடம் மற்றும் காலம் என்ற அடிப்படைகளில் தமது கருத்துக்களைச் சொல்லுவதற்காகப் பயன்படுத்திக்கொண்ட குறியீடுகள் ஆகும். இதனை, “மனிதனின் உணர்வு நிலைகளைக் காலத்தோடு இணைத்தற்கும் நுணுகிய காரணம் உண்டு. எந்தெந்தக் காலங்களில் எத்தகைய உணர்வுகள் பெருகுமோ அக்காலங்களைக் குறிப்பிட்ட உணர்வுக்கான காலங்களாகப் பகுத்துள்ளனர். உணர்வு நிலையில் நின்று பார்க்கும்பொழுது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகியவை குறியீடாகவே இருக்கின்றன” (திணை உணர்வும் பொருளும், ப.21) என்று வெ.பிரகாஷ் கூறும் கருத்தின்மூலம் அறியமுடிகிறது.
சங்க இலக்கியத்திலுள்ள பாடல்களை இன்னின்ன திணையைச் சார்ந்தவை என்று தொல்காப்பியம் கூறும் முதல், கரு மற்றும் உரிப்பொருள்களை அடிப்படையாகக்கொண்டு அவை பயின்று வரும் பாடல்களை திணைவாரியாக பின்வந்த ஆய்வாளர்கள் பகுத்தனர். இவ்வண்ணம், புலவர்கள் சங்கப்பாடல்களில் இயல்பாக வேளாண்மை சார்ந்த செய்திகளைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை திணைவாரியாக, முதல், கரு மற்றும் உரிப்பொருளைக்கொண்டு பிரித்துள்ளனர். அவற்றைக்கொண்டு  ஒவ்வொரு திணையிலும் நடைபெற்ற வேளாண்மை பற்றி அறிந்து கொள்ளலாம்.

குறிஞ்சி நில வேளாண்மை
      குறிஞ்சி நிலத்தில் சிலம்பன், வெற்பன் ஆகியோர் தலைமக்களாகவும் குறவர், குறத்தியர் குடிமக்களாகவும் வாழ்ந்தனர். இவர்களில் பொருப்பன், சிலம்பன், வெற்பன் உள்ளிட்ட பெயர்களே மலை என்ற பொருளில் அமைந்துள்ளது. சிலம்பு, பொருப்பு, வெற்புஆகிய சொற்கள் மலையைக் குறிக்கும் சொற்களாகும். மலையில் வாழ்வதால் இம்மக்களுக்கு மேற்கண்ட பெயர்கள் ஆகிவந்துள்ளன.நான்கு வகையான நிலங்களில் நடந்த வேளாண்மையில் குறிஞ்சி நில வேளாண்மையே தொன்மை வாய்ந்தது. இதனை, “குறிஞ்சி நில வேளாண்மை மிகவும் பழமையானது” (பழந்தமிழர் வேளாண்மை, ப.6) என்று கூறுவதால் அறியலாம். இந்நிலத்தில் தினை விதைத்தல், தினையைக் காத்தல், தினை அறுத்தல், கிழங்கு அகழ்தல், தேனெடுத்தல் போன்ற தொழில்கள் நிகழ்ந்துள்ளன. குறிஞ்சி நிலமக்கள் தம் உணவுக்காக வேட்டையாடுதலையும் மேற்கொண்டுள்ளனர். அது குறித்து,
உடும்பு கொலீஇ, வரிநுணல் அகழ்ந்து 
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கொண்டி 
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல”       (நற்.59:1-3)

     என்ற பாடல் கூறுகிறது. வேட்டையாடுதலானது வேளாண்மை வரலாற்றில் பழமையானது. குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடுதல் இருந்தமையால் குறிஞ்சிநில வேளாண்மையே தொன்மையானது என்பது தெளிவாகிறது. மேலும், குறவர்கள் மலையில் தேனெடுத்ததை,
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப”      (அகம்.322:12)
         
     என்ற அடியின்மூலம் அறியலாம். இங்கு வேட்டையாடுதல், தேனெடுத்தல் மட்டுமின்றி வேளாண்மையும் நடந்துள்ளது. குறிஞ்சிநிலம் பாறைகள் மிகுந்துள்ள பகுதி என்பதால் அங்கு கலப்பை கொண்டு உழவுசெய்யவும், நன்செய் பயிர்கள் விளைவிக்கவும் இயலாது. உழுவதற்கு இங்கு கால்நடைகளும் வளர்க்கப்படவில்லை. ஆகவே, இங்கு ஏரினைக்கொண்டு உழாமல் பயிர்செய்துள்ளனர். இதனை,
தொய்யாது வித்திய துளர்படு துடவை”      (மலைபடு.122)
         
        என்று நன்னன்சேய் நன்னனார் குறிப்பிடுகிறார். இங்கு மூங்கிலில் விளைந்த அரிசியும், ஐவன நெல்லும், தினையும் அதிகமாக விளைந்தன. மேலும் வரகு, எள், அவரை, சாமை போன்றவையும் இங்கு விளைந்தன. இதனை,
கீழு மேலு மெஞ்சாமைப் பல காய்த்து,
 
வாலிதின் விளைந்த புது வரகரிய,
 
தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக் 
கொழுங்கொடி விளர்க்காய் கோட்பதமாக”   (புறம்.120:8-11)

        என்ற பாடலின்வழி அறியலாகிறது.     இவ்வாறு குறிஞ்சி நிலத்தில் புன்செய் பயிர்களே விளைவிக்கப்பட்டுள்ளன என்பதையும் இது மலைப்பகுதியென்பதால் நிலத்தை உழாமல் பயிர் செய்தததையும் அறியமுடிகிறது.

முல்லை நில வேளாண்மை
       முல்லை நிலத்தில் அண்ணல், தோன்றல், குறும்பொறை நாடன் என்போர் தலைமக்களாகவும், ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர், கோவலர், கோவித்தியர், பொதுவர், பொதுவியர் என்போர் குடிமக்களாகவும் வாழ்ந்தனர்.இங்கு ஆடு, மாடுமற்றும் எருமை மேய்த்தலே அதிகமாக நடைபெற்றது. இதனை, இங்குள்ள ஆயர், ஆய்ச்சியர் என்ற சில காரணப்பெயர்களின்மூலம் அறியலாம். இந்த ஆயர்கள் ஆடுமேய்ப்பவர்கள் மற்றும் மாடுமேய்ப்பவர்கள் என்று இரு வகையினர் இருந்தனர். இதனை,
புல்லினத் தாயர் மகனேன், மற்றியான். 
ஒக்கும்மண்  
புல்லினத் தாயனை நீயாயிற் குடஞ்சுட்டு 
நல்லினத் தாயர் எமர்”  (கலித்.113:8-10)
         
       என்ற பாடலின்வழி தலைவன் ஆடு மேய்க்கும் ஆயராகவும், தலைவி மாடுமேய்க்கும் ஆயராகவும் இருந்தது அறியலாகிறது. இவர்களைவிட எருமை மேய்ப்போர் சிறந்தவராகக் கருதப்பட்டனர் என்பதை,
கோட்டினத்து ஆயர் மகன் அன்றே மீட்டு ஓரான்” (மேலது.103:33)
         
         என்ற அடி சுட்டுவதைக்காணலாம்.இவர்கள் வாழ்ந்த குடில்கள் வரகுக்கயிற்றால் வேயப்பட்டும் ஆட்டுக்கிடாயின் தோல் பாயலாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தன. அந்த இல்லத்தின் முற்றத்தில் முளைகள் பதிக்கப்பட்டிருந்தன. அவற்றில் நீண்ட தாம்புக் கயிறுகள் இருந்தன. அவை, ஆநிரைகளைக் கட்டிவைக்கப் பயன்பட்டன என்பதை,
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின் 
அதளோன் துஞ்சும் காப்பின் உதள,
 
நெடுதாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்,
 
கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும்” (பெரும்.150-154)
         
         என்ற அடிகள் அறிவிப்பதால் இவர்களின் வாழ்க்கை ஆநிரை சார்ந்தே இருந்தது என்பது புலப்படுகிறது. ஆகவே, இவர்கள் ஆநிரை சார்ந்த உணவுகளை உட்கொண்டதுடன் விற்பனையும் செய்தனர். இதனை, “முல்லை நிலத்தில் ஆடு, மாடு, எருமைகள் வளர்க்கப்பட்டன. இதுவே முதன்மையான தொழிலாக நடைபெற்றது. பால், தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்வதுடன் விற்பனையும் செய்தனர்.” (சங்ககால வேளாண்மை, ப.181) என்று இரா.மனோகரன் குறிப்பிடுவதால் அறியலாகிறது. எனினும் இங்கு ஆநிரைகளை மேய்த்தலுடன் நிலத்தை உழுது வேளாண்மையும் நடந்துள்ளதை,
பகடு பல பூண்ட உழவுறு செஞ்செய்”  (அகம்.262:2)
         
     என்ற அடி சுட்டுகிறது.  மேலும், இங்கு வரகு, கேழ்வரகு, அவரை போன்ற பயிர்கள் வேளாண்மைசெய்யப்பட்டுள்ளன. இங்கும் மழையை எதிர்நோக்கியே விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. இதனை,
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகள அவரையொடு
இந்நான் கல்லது உணாவு மில்லை”       (புறம்.335:4-6)
         
        என்ற பாடல் கூறுவதால் அறியலாம்.இவர்தம் வாழ்வை, “முல்லை நிலத்து மக்களின் வாழ்க்கை குறிஞ்சி நிலத்து மக்களின் வாழ்க்கையை விடச் சற்று உயர்ந்திருந்தது” (பழங்காலத் தமிழர் வாணிகம், ப.4) என்று மயிலை.சீனி வேங்கடசாமி பதிவிட்டுள்ளார். முல்லைநில மக்கள் குறிஞ்சி நிலமக்களைவிட அறத்திலும், உணவிலும் தன்னிறைவு பெறுவதிலும் உயர்ந்தநிலை அடைந்திருந்ததை அவர்கள் ஆநிரை மேய்த்தல் மற்றும் பயிர்செய்தல் என இரு தொழில்களை மேற்கொண்டதிலிருந்து அறியமுடிகிறது.இவர்கள் குறிஞ்சிநில மக்களைவிட பொருளாதார நிலையில் உயர்ந்து வாழ்ந்துள்ளனர். விருந்தோம்பல் என்பது அனைவராலும் செய்யக் கூடியதுதான். எனினும் வேளையற்ற வேளையில் விருந்து வந்தால் விருந்தினரை ஓம்ப, வளம் அதிகம் தேவைப்படும். அவ்வகையில், எதிர்நோக்கா நேரத்தில் முல்லை நிலமக்கள் விருந்தினரைப் போற்றுவதைக் கற்பாகக் கருதினர் என்பதை,
அல்லிலாயினும் விருந்துவரின் உவக்கும் 
முல்லை சான்ற கற்பு” (நற்.142:8,9)

      என்ற அடிகள் விளக்கக் காணலாம். இவ்வாறு ஆநிரை மேய்த்தலுடன் புன்செய் வேளாண்மை செய்தமையால் முல்லைநில மக்களின் வாழ்வானது குறிஞ்சிநில மக்களைவிட வளம்மிக்கதாக இருந்துள்ளது எனலாம்.

மருத நில வேளாண்மை
      மருத நிலத்தில் ஊரன், மகிழ்நன் போன்ற பெயர்களில் தலைமக்களும் களமர், உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர்என்ற குடிமக்களும் வாழ்ந்தனர். உழவர், உழத்தியர் என்ற பெயர்கள் இவர்கள் மேற்கொள்ளும் உழவுத்தொழிலின்மூலம் காரணப்பெயர்களாக அமைந்துள்ளன. உழத்தல்என்பதற்கு துன்பப்படுதல்என்று பொருள். பல துன்பங்களை அடைந்து செய்யும் தொழில் என்பதால் உழவு என்றும் அதனைச் செய்வோர் உழவர் என்றும் குறிப்பிடப்பட்டனர்.மருதநில மக்கள் வேளாண்மைத் தொழிலையே உயிர்த்தொழிலாக கொண்டுள்ளனர்.இந்நிலத்தை உழுது பண்படுத்தி வேளாண்மை செய்துள்ளமையைப் பின்வரும் பெரும்பாணாற்றுப்பாடல் அடிகள் எடுத்தியம்புகின்றன. 

கார் ஏறு பொருத கண்அகன் செறுவின் 
உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர்”    (பெரும்,210-211)
         
      கலப்பை முல்லை நிலத்தினை விட, மருத நிலத்திலேதான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. முல்லை நிலத்தில் கலப்பை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அது மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதி என்பதால் எந்த இடர்ப்பாடுமின்றி தொடர்ந்து உழ இயலாது.ஆனால், மருத நிலத்தில் நன்கு உழ இயலும். இங்கு வேளாண்மை செய்து விளைந்த செந்நெல், வெண்ணெல் ஆகியவை இன்றியமையா உணவாக இருந்தன. மேலும் இங்கு கிடைத்த மீன், நண்டு போன்றவற்றையும் இந்நில மக்கள் உணவாக உட்கொண்டுள்ளனர்.மருதநிலத்தின் சிறப்பை, “மருத நிலத்தில்தான் தமிழரின் நாகரிகமும், பண்பாடும் வளம்பெற்று வளர்ந்தன. கைத்தொழில்களும் கல்வியும் வாணிகமும் செல்வமும் அரசியலும் அமைதியான வாழ்க்கையும் மருதநிலத்தில் செம்மையாக செழித்து வளர்ந்தன” (பழங்காலத் தமிழர் வாணிகம்,ப.5) என்று மயிலை. சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார். மருதநிலம் என்பது குறிஞ்சிநிலத்தில் பெய்த மழை முல்லைவழியே ஓடிவந்து நடந்து செல்வதைப்போல் நீர்வளம் சேர்ப்பதாகும்.  இந்நிலம் குறிஞ்சி நிலத்தைப் போன்ற கடினமான நில அமைப்போ, முல்லை நிலத்தைப் போன்ற காடான பகுதியோ அல்ல. ஆகவே, பாறையை உழ முடியாத துன்பமோ, காட்டை எரித்துப் பண்படுத்தவேண்டியச் சூழலோ நிலவவில்லை. அதனால் பயிர்செய்தல் செம்மையாக நடைபெற்றுள்ளது.

நெய்தல் நில வேளாண்மை
      நெய்தல் நிலத்தில் துறைவன், சேர்ப்பன், கொண்கன், புலம்பன், மெல்லன் என்னும் பெயரையுடைய தலைமக்களும் பரதவர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர், திமிலர் மற்றும் நனையர் என்னும் பெயரையுடைய குடிமக்களும் வாழ்ந்தனர். கடலின் துறையைச் சார்ந்து இவர்தம் வாழ்க்கை அமைந்ததால் துறைவன்என்ற பெயர் காரணப்பெயராக உள்ளது.இந்நிலம் கடலும் கடல்சார்ந்த பகுதியும் ஆதலால் மக்கள் மீன்பிடிப்பதையே முதன்மைத் தொழிலாகவும், உப்பளங்களில் உப்பு விளைப்பதைத் துணைத் தொழிலாகவும் கொண்டனர். இங்கு இன்றியமையா உணவு மீன் ஆகும்.மேலும், இவர்கள் கருவாட்டோடு அரிசியை நீரில் கழுவாமல் சமைத்த உணவை உண்டுள்ளனர். இதனை,
வாராது அட்ட, வாடுஊண், புழுக்கல்” (பெரும்.100)
         
      என்ற அடி அறிவிக்கக் காணலாம். மீனானது எப்போதும் கடலில் கிடைப்பதாகவே இருந்தாலும் மழை மற்றும் புயல்கள் ஏற்படும்போது மீன்பிடித்தல் இயலாது. ஆகவே, நெய்தல் நில மக்களுக்கு மீன்கள் மிகுதியாகக் கிடைக்கும் காலத்தில் அவற்றைத் தேவைக்கு அளவாகப் பயன்படுத்திக் கொண்டு மிகுதியாகயிருக்கும் மீன்களை அங்கு கிடைக்கும் உப்பைப் பயன்படுத்திக் கருவாடாக மாற்றி எல்லாக் காலத்திலும் பயன்படும் வகையில் சேமித்துவைத்து அவற்றை உண்டு வாழ்ந்துள்ளனர். எனினும் இங்கு வேளாண்மையும் நடந்துள்ளது என்பதை,
சிலதர் காக்கும் சேணுயர் வரைப்பின்
நெல்லுழு பகட்டொடு கறவை துன்னா
மேழகத் தகரோ டெகினங் கொட்கும்” (பெரும்.324-326)
         
         என்ற அடிகளில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் நெய்தல் நிலத்தைப் பற்றிக் கூறுமிடத்து, நெல் விளைந்ததைப் பற்றியும், அதற்குப் பயன்பட்ட எருதுகள், ஆடுகள் மற்றும் நாய்கள் வீதிகளில் இருந்ததையும் குறிப்பிடுகிறார். இதன்மூலம் இந்நிலத்தில் வேளாண்மை நடந்ததை அறியமுடிகிறது.மேலும், இங்கு உப்பு அதிக அளவில் விளைவிக்கப்பட்டமையால் வேறு நிலத்திலுள்ள மக்களுக்கு உப்பைக் கொடுத்து வேறு பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். இவ்வகையில் நெய்தல் நிலத்தில் வேளாண்மையும், உப்பு விளைவித்தலும்; நிகழ்ந்துள்ளன என்பது தெளிவாகிறது.

பாலை நிலம்
     முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலையாவதைப் போல, பிற நிலங்களும் இயற்கையின் மாற்றங்களால் பாலை நிலமாக மாறுவதற்குவாய்ப்புள்ளது. இந்நிலத்தில் எயினர், எயிற்றியர் என்ற தலைமக்களும் மறவர், மறத்தியர் என்ற குடிமக்களும் வாழ்ந்தனர். இவர்தம் முதன்மைத்தொழில் வழிப்பறி செய்தலாகும். மறம் என்ற சொல்லுக்கு வீரம் என்ற பொருள் உண்டு. உடலில் வீரம் உடையவர்கள் என்பதால் அவர்களுக்கு மறவர் என்ற பெயர் காரணப் பெயராயிற்று. இவர்கள் பிறர் பொருட்களைக் கொள்ளையடித்ததால் ஆறலைக்கள்வர்என்றும் அழைக்கப்பட்டனர். ஆறு என்றால் வழி; அந்த வழியில் கொள்ளையடிப்பதால் இவர்களுக்கு இப்பெயர் வந்துள்ளது.

வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி 
செங்கணை தொடுத்த செயிர் நோக் காடவர்” (நற்.298:1,2)
         
       என்ற அடிகளில் ஆயர்களின் ஆநிரைகளை ஆறலைக்கள்வர் கவர்ந்தமை பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் மேட்டுப் பகுதியான நிலத்தில் விளைந்த ஈச்சம் விதை போன்ற பெரிய அளவிலான நெல்லரிசிச் சோற்றை உண்டதை,
களர் வளர்ஈந்தின் காழ் கண்டன்ன 
சுவல் விளை நெல்லின் செவ்விழ்ச் சொன்றி 
ஞமலி தந்த மனவுச் சூல்……..”            (பெரும்.130-132)
         
      என்ற அடிகள் எடுத்தியம்புகின்றன. இதன்மூலம் பாலை நிலத்து மேட்டுப்பகுதியில் நெல் விளைந்ததை அறிய முடிகிறது. இவ்வாறுபாலை நிலத்து மக்கள் அந்நிலத்தில் விளைந்த உணவை உண்டதை, “பாலை நில மக்களும் மற்ற நிலத்தவரைப் போல், தங்களது நிலங்களில் கிடைத்த உணவுப் பொருட்களையே உண்டு வாழ்ந்துள்ளனர்” (சங்க இலக்கியத்தில் உணவு முறைகளும் மருத்துவப்பயன்பாடுகளும், ப.24) என இர.செங்கமலச் செல்வி குறிப்பிடுவதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.இதன்மூலம் நெய்தல் நிலமக்கள் கொள்ளையடிப்பதை மட்டுமே செய்யாமல், தங்கள் நிலத்தில் கிடைத்த பொருட்களையும்பயன்படுத்தினர் என்பதை அறியவியலுகிறது. ஆகவே, பாலை நிலத்து மக்கள் விளைவித்து உண்டு வாழவே கருதியுள்ளனர் என்பதை அவர்கள் மேட்டுப்பகுதிநிலத்தில் வேளாண்மை செய்ததைக் கொண்டே அறிய முடிகிறது. ஆனால் காலநிலை, பருவமழை, நிலத்தின் இயல்பு போன்ற காரணிகளால் தமக்குத் தேவையான முழுமையான உணவைத் தயாரிக்க முடியாத காரணத்தாலேயே வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும்இங்கு புலனாகிறது.
ஐவகை நிலத்திலும் நிலத்தின் தன்மைக்கேற்பப் பயிர்கள் விளைந்துள்ளன. இந்த நிலங்களில் நடந்த வேளாண் முறைகள் தற்காலத்திலும் பல இடங்களில் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. விளைவித்தலே மனித வளர்ச்சிக்கு ஆதாரமாகும். இதனை, “உற்பத்திச் சக்திகளின் மீது ஆதிக்கம் பெறுவது தான் மனித குல முன்னேற்றத்தின் ஊற்றுக்கண்களாகும்” (சங்க இலக்கியத்தில் வேளாண்மை, ப.14) என்று மார்க்ஸ் எங்கல்ஸ் குறிப்பிடுகிறார். ஆகவே, நிலங்களில் விளையும் விளைச்சலே மானுட வளர்ச்சிக்கு அடிப்படை என்பது தெளிவாகிறது.அவ்வகையில் பாலையிலும் அந்நிலத்தின் தன்மைக்கேற்ப வேளாண்மை நடந்துள்ளமை புலப்படுகிறது.

முடிவுரை
      குறிஞ்சி நிலத்தில் புன்செய் பயிர்களே விளைவிக்கப்பட்டுள்ளன. இது மலைப்பகுதியென்பதால் நிலத்தை உழாமல் பயிர் செய்துள்ளனர். முல்லைநில மக்கள் ஆநிரை மேய்த்தலுடன் புன்செய் வேளாண்மை மேற்கொண்டதையும், மருதநிலத்தில்பயிர்செய்தல் செம்மையாக நடைபெற்றுள்ளதையும், நெய்தல் நிலத்தில் வேளாண்மையாகஉப்பு விளைவித்தல்நிகழ்ந்துள்ளதையும்பாலைநிலமக்கள்உணவைத் தயாரிக்க முடியாத காரணத்தாலேயே வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும், விளைச்சலே மானுட வளர்ச்சிக்கு அடிப்படை என்பது இங்குதெளிவாகிறது.

துணைநூல் பட்டியல்
1.கலித்தொகைவிசுவநாதன் அ.(உ.ஆ), நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, நான்காம் பதிப்பு – 2011
2.நற்றிணைபாலசுப்பிரணியன் கு.வெ.(உ.ஆ), நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, நான்காம் பதிப்பு – 2011.
3.புறநானூறுபாலசுப்பிரணியன் கு.வெ.(உ.ஆ)விசுவநாதன் அ.(உ.ஆ)நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, நான்காம் பதிப்பு – 2011.
4.அகநானூறு–  செயபால் இரா (உ.ஆ), நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, நான்காம் பதிப்பு – 2011.
5.தமிழிலக்கியத்தில் வேளாண்மை அறிவியல்செயராமன் ந.வீ,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-600 028.முதற்பதிப்பு 1998.

6.சங்ககால வேளாண்மை–  மனோகரன்.இரா, காவ்யா வெளியீடு, சென்னை-600 024.முதற்பதிப்பு 2017.

7.சங்க இலக்கியத்தில் வேளாண் சமூதாயம்மாதையன்.பெ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-600 098.முதற்பதிப்பு 2004.

8.சங்க இலக்கியத்தில் உணவு முறைகள்–  செங்கமலச் செல்வி.இர-முனைவர் பட்ட ஆய்வேடு, எம்.ஜி.எம் கல்லூரி, பொள்ளாச்சி-642 001. 2017

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் சு. சதீஸ்குமார்,

உதவிப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
மதுரவாயில், சென்னை – 600 095.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here